உக்ரேனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையில் மத்தியஸ்தம் செய்ய துருக்கி அழைப்பு விடுத்துள்ளது, சிரியாவுடனான ஒப்பந்தத்தை சமிக்ஞை செய்கிறது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

உக்ரேனில் ரஷ்யாவிற்கு எதிரான போரை நேட்டோ தீவரப்படுத்தும் நிலையில், துருக்கிய ஜனாதிபதி ரெசெப் தயிப் எர்டோகன், உக்ரேனிய ஜனாதிபதி வோலோடிமிர் செலென்ஸ்கியையும் ஐ.நா. பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டரெஸையும் மேற்கு உக்ரேனிய நகரமான எல்வோவில் வியாழன் அன்று சந்தித்தார்.

ஆகஸ்ட் 18, 2022, வியாழக்கிழமை, உக்ரேனின் எல்விவ் நகரில் தங்கள் சந்திப்புக்குப் பின்னர், உக்ரேனிய ஜனாதிபதி வோலோடிமிர் செலென்ஸ்கி, (மத்தியில்), துருக்கிய ஜனாதிபதி ரெசெப் தயிப் எர்டோகன், (இடது), மற்றும் ஐக்கிய நாடுகள் சபை பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் ஆகியோர் கைக்குலுக்கிக் கொள்கின்றனர். [AP Photo/Evgeniy Maloletka] [AP Photo/Evgeniy Maloletka]

சோச்சியில் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் உடனான ஆகஸ்ட் 5 சந்திப்புக்கு இரண்டு வாரங்களுக்கு பின்னர் நடைபெற்ற இந்த உச்சிமாநாட்டின் போது, எர்டோகன், போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான இராஜதந்திர முயற்சிகள், போர்க் கைதிகளை பரிமாறிக்கொள்வது, உக்ரேனில் இருந்து தானியக் கப்பல் விநியோகத்தை தொடர்வது, மற்றும் Zaporizhzhia அணுசக்தி நிலையத்தை பார்வையிட சர்வதேச அணுசக்தி முகமை அதிகாரிகள் மூலம் ஏற்பாடு செய்வது ஆகியவை குறித்து விவாதித்ததாகக் கூறப்படுகிறது.

எர்டோகன், “எங்கள் சந்திப்பின் முக்கிய தலைப்பாக, நிச்சயமாக கிட்டத்தட்ட ஆறு மாதங்களாக நடந்து வரும் போர் தான் இருந்தது” என்று கூறினார். ‘உக்ரேனின் பிராந்திய ஒருமைப்பாடு மற்றும் இறையாண்மைக்கு’ தனது அரசாங்கத்தின் ஆதரவை அவர் மீண்டும் வலியுறுத்தினார்.

தற்போது ரஷ்யாவால் கைப்பற்றப்பட்ட ஐரோப்பாவின் மிகப்பெரிய அணுமின் நிலையம் குறித்து எர்டோகன் இவ்வாறு தெரிவித்தார்: “Zaporizhzhia அணுசக்தி நிலையத்தை சுற்றி நடக்கும் மோதல்கள் குறித்தும் நாங்கள் எங்கள் கவலைகளை தெரிவித்துள்ளோம். இன்னுமொரு செர்னோபில் பேரழிவை எதிர்கொள்ள நாங்கள் விரும்பவில்லை.”

“இந்தப் பகுதியில் இருந்து இராணுவம் அகற்றப்பட வேண்டும், மற்றும் நாங்கள் உண்மை நிலைமையை வெளிப்படையாகச் சொல்ல வேண்டும்: Zaporizhzhia இல் ஏதேனும் சாத்தியமான சேதம் நிகழ்ந்தால் அது தற்கொலைக்கு சமமாகும்” என்று குட்டரெஸ் ஒரு செய்தி மாநாட்டில் கூறினார். வெள்ளியன்று, புட்டினும் பிரெஞ்சு ஜனாதிபதி இமானுவல் மக்ரோனும் அணுசக்தி ஆலையைப் பார்வையிட சர்வதேச அணுசக்தி முகமையின் அதிகாரிகளின் மூலம் ஏற்பாடு செய்ய ஒப்புக்கொண்டனர்.

ஒரு டெலிகிராம் பதிவில், செலென்ஸ்கி, “தானிய முன்முயற்சி செயல்பாட்டை ஒருங்கிணைப்பதைத் தொடர நாங்கள் ஒப்புக்கொள்கிறோம்” என்று கூறியுள்ளார். ரஷ்யாவிற்கும் உக்ரேனுக்கும் இடையிலான ஜூலை 22 இஸ்தான்புல் தானிய ஏற்றுமதி ஒப்பந்தத்தின் கீழ் மேலும் நான்கு கப்பல்கள் உக்ரேனிய துறைமுகங்களை விட்டு வெளியேறின, இது துருக்கி மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் தரகு ஏற்பாட்டில் நடந்தது, என்று துருக்கிய பாதுகாப்பு அமைச்சகம் ஞாயிறன்று தெரிவித்துள்ளது.

துருக்கியில் உக்ரேனிய மற்றும் ரஷ்ய தலைவர்களின் சந்திப்பிற்கு மீண்டும் அழைப்பு விடுத்த எர்டோகன், போரை முடிவுக்குக் கொண்டுவருவதுதான் எல்வோவில் நடந்த முத்தரப்பு கூட்டத்தின் மையமாக இருந்தது என்று கூறினார். ஜூலை மாதம் நிகழ்ந்த இஸ்தான்புல் ஒப்பந்தத்தை ‘வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த முன்மாதிரியான வேலை’ என்று அவர் பாராட்டினார்.

எர்டோகன் ‘இராஜதந்திர தீர்வுக்கு’ அழைப்பு விடுத்தாலும், மோதலில் உக்ரேனுக்கான அங்காராவின் ஆதரவை அவர் வலியுறுத்தினார்: “துருக்கி நாடாக, இராஜதந்திர வழிமுறைகள் மூலம் மோதல்களை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான முயற்சிகளை நாங்கள் மேற்கொள்கிறோம், அதே நேரத்தில் எங்கள் உக்ரேனிய நண்பர்களுக்கு தொடர்ந்து தோள் கொடுப்போம்.”

அங்காரா ரஷ்ய படையெடுப்பை கண்டித்து, உக்ரேனுக்கு பைரக்டர் (Bayraktar) ட்ரோன்களை வழங்கியுள்ளது. எவ்வாறாயினும், மாஸ்கோவிற்கு எதிரான அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் கடுமையான பொருளாதாரத் தடைகளுடன் அது கூட்டுசேரவில்லை என்பதுடன், போர் தொடங்கியதிலிருந்து ரஷ்யாவுடனான அதன் வர்த்தகத்தை கணிசமாக அதிகரித்துள்ளது. தங்கள் பொருளாதாரத் தடைகளை தவிர்க்க ரஷ்யா துருக்கியை பயன்படுத்துகிறது என்ற மேற்கத்திய தலைநகரங்களின் கவலையை இது தூண்டியுள்ளது.

‘ரஷ்யாவுக்கான துருக்கிய ஏற்றுமதியில் ஏற்பட்டுள்ள அதிகரிப்பால் அவர்களின் நெருக்கமான உறவுகள் குறித்து மேற்கத்திய அச்சத்தை எழுப்புகிறது’ என்ற தலைப்பிலான ஒரு கட்டுரையில் பைனான்சியல் டைம்ஸ் இவ்வாறு குறிப்பிட்டது: “மேற்கத்திய வணிகங்களின் வெளியேற்றத்தால் உருவாக்கப்பட்ட இடைவெளியில் தனது நிறுவனங்களை ரஷ்யாவில் அடியெடுத்து வைக்க அங்காரா அனுமதித்ததால், ரஷ்யாவிற்கான துருக்கியின் ஏற்றுமதிகளானது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில் கடந்த மூன்று மாதங்களில் மதிப்பு ரீதியாக 46 சதவிகிதம் வளர்ச்சியடைந்துள்ளது.”

இரண்டு ஐரோப்பிய ஒன்றிய அதிகாரிகளை மேற்கோள் காட்டி, அது இவ்வாறு கூறியது: “ரஷ்யாவுடனான துருக்கியின் வளர்ந்து வரும் வர்த்தகம் மற்றும் பிற ஐரோப்பிய இறக்குமதி மற்றும் ஏற்றுமதிகளுக்கு மாற்றாக மாஸ்கோவிற்கு அது உதவுவதற்கான சாத்தியக்கூறுகள் ஆகியவை குறித்து ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகள் அதிகரித்தளவில் கவலையடைகின்றன.” ஒரு அதிகாரி, “இது எங்கள் ரேடாரில் உள்ளது. … இது நல்லதல்ல மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தால் நன்கு உணரப்படவில்லை. இது ஒரு எரிச்சலூட்டும் செயலாகும்” என்று பைனான்சியல் டைம்ஸிடம் கூறினார்.

ரஷ்யாவிற்கு எதிரான நேட்டோவின் போர் தீவிரமடைவதால் சாத்தியமுள்ள பேரழிவுகர விளைவுகளுக்கு அஞ்சி, அங்காரா ரஷ்யாவுடன் எரிசக்தி உட்பட வலுவான வணிக மற்றும் இராணுவ உறவுகளை கொண்டுள்ளது, மேலும் அது உள்நாட்டில் தீவிரமடைந்து வரும் பொருளாதார நெருக்கடியையும் மற்றும் வளர்ந்து வரும் தொழிலாள வர்க்க எதிர்ப்பையும் எதிர்கொண்டுள்ளது. அடுத்த ஆண்டு தேர்தல்கள் நடைபெறவுள்ள நிலையில், எர்டோகன் அரசாங்கத்தின் கருத்துக் கணிப்புகள் கடும் சரிவைச் சந்தித்துள்ளன. இந்நிலையில், ரஷ்யாவுடனான மேம்பட்ட வர்த்தகமும் மாஸ்கோவின் சாத்தியமான நிதியுதவியும் உள்நாட்டு நெருக்கடியைக் கட்டுப்படுத்த உதவும் என அது நம்புகிறது.

எல்வோவில், எர்டோகன் இவ்வாறு அறிவித்தார்: “தனிப்பட்ட முறையில், போர் இறுதியில் பேச்சுவார்த்தை மேசையில் முடிவடையும் என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன். திரு. செலென்ஸ்கியும், திரு. குட்டரெஸூம் இந்த பிரச்சினை குறித்து உண்மையில் ஒத்த கருத்தைக் கொண்டுள்ளனர். … மார்ச் மாதம் இஸ்தான்புல்லில் உருவான அளவுருக்களின் அடிப்படையில் பேச்சுவார்த்தைகளை புதுப்பிக்க முடியும் என்று நான் நம்புகிறேன். இது சம்பந்தமாக அனைத்து வகையான ஆதரவுகளை வழங்கவும், மீண்டும் ஒருமுறை எளிதாக்கும் அல்லது மத்தியஸ்தம் செய்யும் பாத்திரம் வகிக்கவும் நாங்கள் தயாராக இருக்கிறோம்.”

எவ்வாறாயினும், வாஷிங்டனும் அதன் ஐரோப்பிய நேட்டோ நட்பு நாடுகளும் அவர்களின் முன் ரஷ்யா மண்டியிடும் வரை போர் முடிவுக்கு வருவதை அவர்கள் விரும்பவில்லை. ஏப்ரலில், துருக்கிய வெளியுறவு மந்திரி Mevlut Cavusoglu, அதன் நேட்டோ நட்பு நாடுகளுடனான அங்காராவின் ஆழமான விரிசலை சுட்டிக்காட்டி, இவ்வாறு அறிவித்தார்: “நேட்டோ கூட்டம் வரை, போர் நீண்டகாலம் நீடிக்காது என்று நாங்கள் நினைத்தோம். இருப்பினும், நேட்டோ கூட்டத்திற்குப் பின்னர், ஒரு கருத்து வெளிப்பட்டுள்ளது. அது, இந்தப் போர் தொடர வேண்டும் என விரும்பும் நாடுகள் உள்ளன என்பதுதான். ரஷ்யா பலவீனமடைய வேண்டும், பின்வாங்க வேண்டும், ஒருவேளை முடிந்தால் புட்டினை வீழ்த்த வேண்டும் என்று அவர்கள் விரும்புகிறார்கள்.”

திரைக்குப் பின்னால் மோதல்கள் அதிகரித்து வருகின்றன. குர்திஷ்-தேசியவாத குழுக்களுக்கு பின்லாந்து மற்றும் சுவீடன் நாடுகளின் ஆதரவைக் கண்டித்து, ரஷ்யாவை எதிர்த்துப் போராடுவதற்காக, பின்லாந்தும் சுவீடனும் நேட்டோவில் இணைவது குறித்து அங்காரா கொண்டிருந்த ஆட்சேபனைகளை இறுதியில் நீக்கியது. எவ்வறாயினும், சனிக்கிழமையன்று, துருக்கிய நீதித்துறை மந்திரி பெகிர் போஸ்டாக், ‘பயங்கரவாத அமைப்புக்களின் உறுப்பினர்களை’ துருக்கியிடம் ஒப்படைக்கும் வரை சுவீடனும் பின்லாந்தும் நேட்டோவில் சேர முடியாது என்று கூறினார்.

2011 இல் இருந்து வெளியேற்ற முயற்சித்து வரும் ரஷ்ய ஆதரவு பெற்ற சிரிய ஜனாதிபதி பஷார் அல்-அசாத் குறித்த அங்காராவின் கருத்துக்களானது, துருக்கியின் நேட்டோ நட்பு நாடுகளுடன் புதிய மோதல்களைத் தூண்டும் அபாயம் உள்ளது. சோச்சியில் புட்டின் உடனான எர்டோகனின் சந்திப்பிற்குப் பின்னர், கடந்த அக்டோபரில் புரூஸ்ஸெல்ஸில் சிரிய வெளியுறவு மந்திரி பைசல் மெக்தாத்தை ‘on the hoof’ இல் சந்தித்ததாக Cavusoglu கூறினார். டமாஸ்கஸ் மற்றும் ‘எதிர்க்கட்சி’ என்று அழைக்கப்படுபவர்களுக்கு இடையே ‘அரசியல் நல்லிணக்கத்திற்கு’ அவர் அழைப்பு விடுத்தார். அசாத்-எர்டோகன் சந்திப்பிற்கு ஏற்பாடு செய்ய கிரெம்ளின் விரும்புவதாகவும் அவர் கூறினார்.

“சிரியாவின் பிரதேசத்தின் மீது நாங்கள் குறிவைக்கவில்லை. அசாத்தை தோற்கடிப்பதிலோ அல்லது தோற்கடிக்காமல் இருப்பதிலோ எங்களுக்கு எந்த விருப்பமும் இல்லை,” என்று எர்டோகன் எல்வோவில் இருந்து திரும்புகையில் கூறினார்.

உண்மையில், 2016 முதல், வடக்கு சிரியாவில் அமெரிக்க ஆதரவு, குர்திஷ்-தேசியவாத மக்கள் பாதுகாப்பு பிரிவுகளுக்கு (YPG) எதிராக துருக்கி பல இராணுவ நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளது, YPG தனி குர்திஷ் அரசை உருவாக்குவதைத் தடுக்க இந்த பிராந்தியத்தின் பெரும்பகுதியை துருக்கி ஆக்கிரமித்து வைத்துள்ளது. துருக்கி, அதன் சிரிய இஸ்லாமிய ஆதரவாளர்களுடன் சேர்ந்து, நிர்வாக அலகுகளை உருவாக்கி, அங்காராவின் கட்டுப்பாட்டில் உள்ள சிரியாவின் பகுதிகளில் பல்கலைக்கழகங்களைத் திறந்துள்ளது.

மே முதல், எர்டோகன், 1 மில்லியன் சிரிய அகதிகளின் மீள்குடியேற்றத்திற்கு அங்காராவால் ஏற்பாடு செய்ய முடியக்கூடிய, சிரிய எல்லையில் 30 கிலோமீட்டர் தொலைவில் ஆழமான மண்டலத்தை YPG உருவாக்குவதற்கு எதிரான புதிய தாக்குதல்களுக்கு அச்சுறுத்தியுள்ளார். அங்காரா பயங்கரவாத அமைப்புகளாகக் கருதும் YPG ஆயுதக் குழுக்களைக் குறிப்பிட்டு, எர்டோகன், “அமெரிக்காவும் அதன் கூட்டணிப் படைகளும் தான் சிரியாவில் பயங்கரவாதத்தை முதன்மையாக வளர்ப்பவர்கள்” என்று அறிவித்தார். அவர் சமீபத்தில் சிரியாவில் உள்ள அமெரிக்கப் படைகள் திரும்பப் பெறப்பட வேண்டும் என்று கோரினார், உக்ரேனில் நேட்டோ போருக்கு மத்தியில் இந்த கோரிக்கைக்கு ரஷ்யா ஆதரவளித்தது.

சிரியாவில் ரஷ்யாவுடனான துருக்கியின் ‘ஒற்றுமையை’ அறிவிப்பதற்கு முன்னர், “சிரியாவில் தற்போது நாங்கள் எடுத்து வரும் ஒவ்வொரு அடியெடுப்பிலும், நாங்கள் எங்கள் பாதுகாப்புப் படைகள், எங்கள் உளவுத்துறை மற்றும் எங்கள் பாதுகாப்பு அமைச்சகம் மூலம் ரஷ்யாவுடன் தொடர்பில் இருக்கிறோம்” என்று அவர் கூறினார்.

எர்டோகனின் சீன சார்பு, தேசியவாத கூட்டாளியான ஹோம்லேண்ட் கட்சி, ‘உயர்மட்ட பேச்சுவார்த்தைகளுக்காக’ ஒருகட்சி பிரதிநிதிகள் ’10-15 நாட்களில் டமாஸ்கஸூக்கு வருகை தருவார்கள்’ என்று அறிவித்தது. ஒரு கட்சி அறிக்கையில், அது இவ்வாறு அறிவித்தது: “இந்த சூழ்நிலையில், சிரியாவுடனான துருக்கியின் ஒத்துழைப்பு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாகும். [Cavusoglu இன்] கூற்றுக்கள் மிகவும் சரியானவை. நாங்கள் அவர்களை வாழ்த்துகிறோம்.”

வடகிழக்கு சிரியாவில் நடைமுறையில் YPG கட்டுப்பாட்டில் உள்ள நிர்வாகத்தை முடிவுக்குக் கொண்டுவருவதற்கும், சிரியாவிற்கு அகதிகளை திருப்பியனுப்புவதற்கும் டமாஸ்கஸ் ஆதரவளிக்க வேண்டும் என்று அங்காரா விரும்புவதாகக் கூறப்படுகிறது. டாமஸ்கஸ், மறுபுறம், தற்போது துருக்கி மற்றும் அதன் இஸ்லாமிய ஆதரவாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ள அதன் பிரதேசத்தின் சில பகுதிகளை திரும்பப் பெற கோருகிறது.

‘உலக அமைதிக்காக’ உழைக்கும் ஒரு ‘அமைதிவாதி’யாக தான் இருக்கப்போவதாக எர்டோகன் கூறுவது ஒரு பாசாங்குத்தனமான பொய்யாகும். 2011 இல் இருந்து சிரியாவில் ஆட்சி மாற்றத்திற்கான அமெரிக்க-நேட்டோ போரின் முக்கிய ஆதரவாளராக இருந்து வரும் அங்காரா, நவம்பர் 2015 இல் அதன் தெற்கு எல்லையில் ஒரு ரஷ்ய போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியதன் மூலம் ரஷ்யாவுடனான நேட்டோ போரை கிட்டத்தட்ட அது தூண்டியது.

அங்காராவின் உக்கிரமான இராஜதந்திர நடவடிக்கை உண்மையில், ரஷ்யா மற்றும் சீனாவிற்கு எதிரான அமெரிக்க-நேட்டோ அச்சுறுத்தல்களால் தூண்டப்பட்ட அணுசக்தி போரின் வளர்ந்து வரும் ஆபத்தை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. ஒரு சோசலிச வேலைத்திட்டத்தின் அடிப்படையில், ஏகாதிபத்திய போருக்கு எதிராக சர்வதேச தொழிலாள வர்க்கத்தை பாரியளவில் அணிதிரட்டினால் மட்டுமே மூன்றாம் உலகப் போரை நோக்கிய இந்தப் போக்கைத் தடுக்க முடியும்.