மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்
நேட்டோ பொதுச் செயலாளர் ஜென்ஸ் ஸ்டோல்டன்பேர்க் 'பனிப்போருக்குப் பின்னர் நமது கூட்டுத் தடுப்பு மற்றும் பாதுகாப்பின் மிகப்பெரிய மறுசீரமைப்பு' என அழைத்ததில், அமெரிக்கா தலைமையிலான நேட்டோ கூட்டணி ஐரோப்பாவில் நூறாயிரக்கணக்கான எண்ணிக்கையில் ஒரு பாரிய தரைப்படையை உருவாக்கும் திட்டங்களை அறிவித்துள்ளது.
நேட்டோ தனது 'அதிகூடிய தயார்நிலை படைகளை' 40,000 இலிருந்து 300,000 ஆக ஏழு மடங்கு அதிகரித்து, பல்லாயிரக்கணக்கான கூடுதல் துருப்புக்கள் மற்றும் எண்ணற்ற டாங்கிகள் மற்றும் விமானங்களை நேரடியாக ரஷ்யாவின் எல்லைக்கு அனுப்பும் என ஸ்டோல்டன்பேர்க் கூறினார்.
இந்நடவடிக்கையானது, ரஷ்யாவுடனான நேட்டோவின் தற்போதைய போருக்கும் சீனாவுடன் திட்டமிடப்பட்டுள்ள போருக்கும், சமூக வளங்களை பாரியளவில் திசைதிருப்புவதை ஏற்படுத்தும். இதனால் அரச கருவூலங்கள் வற்றச்செய்யப்பட்டு சமூக சேவைகள், ஊதியங்களை வெட்டுதல் மற்றும் தொழிலாளர்களின் ஓய்வூதியத்தை இல்லாமல் செய்வதற்கான கோரிக்கைகள் அதிகரிக்கும்.
இந்த பாரிய சண்டைப் படையின் உருவாக்கம், ரஷ்யா மற்றும் சீனாவுடனான 'மூலோபாய போட்டியின் புதிய சகாப்தத்திற்கான' பிரதிபலிப்பாகும் என ஸ்டோல்டன்பேர்க் கூறினார்.
ரஷ்யாவுடனான போரை தழுவிக்கொண்டது மட்டுமல்லாது, 'நமது பாதுகாப்பு, நலன்கள் மற்றும் மதிப்புகளுக்கு பெய்ஜிங் முன்வைக்கும் சவால்களால்' அவர் இத்திட்டத்தை 'நேட்டோவின் தடுப்பு மற்றும் பாதுகாப்பில் ஒரு அடிப்படை மாற்றம்' என அழைத்தார்.
அதன் சண்டைப் படையின் இந்த பாரிய விரிவாக்கத்தின் ஒரு பகுதியாக, நேட்டோ லாத்வியா, லித்துவேனியா மற்றும் எஸ்தோனியாவில் நிலைகொண்டுள்ள துருப்புக்களின் எண்ணிக்கையை 'பிரிகேட்' நிலைக்கு உயர்த்தும். அதாவது அண்ணளவாக 3,000 முதல் 5,000 துருப்புக்களை கொண்டிருக்கும்.
ஸ்டோல்டன்பேர்க்கின் நேர்காணலின் அடிப்படையில் பைனான்ஸியல் டைம்ஸ், கூட்டணியின் கிழக்குப் பகுதியில் உள்ள குறிப்பிட்ட பிரதேசங்களில் எந்தவொரு தாக்குதலின் தொடக்க நேரத்திலிருந்தும் உடனடியான பதில்தாக்குதலுக்காக அமெரிக்கா, பிரித்தானியா மற்றும் பிரான்ஸின் 300,000 மேற்பட்ட துருப்புக்களுடன் அவற்றின் கப்பல்கள் மற்றும் போர் விமானங்களை தயார்நிலையில் வைத்திருக்கும் கட்டமைப்புகளும் இந்த திட்டத்தில் உள்ளடங்கும் எனக் குறிப்பிட்டது.
பால்கன் நாடுகளுக்கு அனுப்பப்பட்ட துருப்புக்கள் 'தடுப்புவேலியாக' செயல்படுவதற்குப் பதிலாக, நேட்டோவின் கிழக்குப் போர்முனையில் இந்த நாடுகளின் எல்லைகளில் நேரடியாக ரஷ்யாவிற்கு எதிராக நேட்டோ போரை நடத்துவதை புதிய திட்டம் முன்வைக்கும்.
'2022 ஆனது ஐரோப்பிய நட்பு நாடுகள் மற்றும் கனடா முழுவதும் தொடர்ந்து அதிகரிக்கும் எட்டாவது ஆண்டாகும்' என ஸ்டோல்டன்பேர்க் பெருமிதம் கொண்டார். மேலும் நேட்டோவின் இலக்கான பொருளாதார உற்பத்தியில் இரண்டு சதவிகிதம் இராணுவ செலவினங்களுக்கு செல்லும் இலக்கு என்பது 'ஒரு கீழ்மட்டமாக கருதப்படுமே தவிர அது உச்சவரம்பு அல்ல' என்று கூறினார்.
அதே நாளில், அமெரிக்க அதிகாரிகள் உக்ரேனுக்கான மற்றொரு பாரிய ஆயுத அனுப்புதலை மேற்பார்வையிட்டனர். இதில் Raytheon இனால் உருவாக்கப்பட்ட NASAMS நடுத்தர முதல் நீண்ட தூரம் தரையிலிருந்து வான்வழி ஏவுகணை பாதுகாப்பு அமைப்பும் உள்ளடங்கும்.
'உக்ரேனியர்களுக்கான மேம்பட்ட நடுத்தர மற்றும் நெடுந்தூர வான் பாதுகாப்பு திறன்களுக்கு' கூடுதலாக, 'பீரங்கி வெடிமருந்துகளையும் மற்றும் பலகுழல் ஏவுகணைக்கு எதிரான ராடார் அமைப்புகளையும் அமெரிக்கா வழங்கும்' என தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சுல்லிவன் கூறினார்.
இதற்கிடையில், நேட்டோ கூட்டணி உறுப்பினர்கள் வெளிப்படையாக போர் வார்த்தைகளை பயன்படுத்துகின்றனர். டெலிகிராப் இன் படி, பொதுப் படைகளுக்கான அதியுயர் தலைவரான ஜெனரல் சேர் பாட்ரிக் சான்டர்ஸ் தனது முதல் பொது உரையில், இங்கிலாந்து இராணுவம் ரஷ்யாவிற்கு எதிராக 'போரிட்டு வெற்றி பெற' தயாராக இருக்க வேண்டும் என அறிவித்தார்.
அதே நேரத்தில், அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் ரஷ்யாவிற்கு எதிரான பொருளாதாரத் தடையை தீவிரப்படுத்துகின்றன. வார இறுதியில், G7 உச்சிமாநாட்டில் பங்கேற்பாளர்கள் ரஷ்யாவில் இருந்து தங்கம் இறக்குமதி செய்வதைத் தடை செய்யும் திட்டங்களை அறிவித்தனர். மேலும் ரஷ்யாவால் விற்கப்படும் எண்ணெய் மற்றும் எரிவாயு மீதான விலை வரம்புகளை விதிக்க முயற்சிக்கும் திட்டங்களை பற்றி முடிவெடுக்க முனைகின்றனர்.
திங்களன்று, ரஷ்யா தனது வெளிநாட்டு கடன் கொடுப்பனவுகளை உத்தியோகபூர்வமாக செலுத்தத் தவறிவிட்டது, ஐரோப்பிய நிதிய கொடுக்கல்வாங்கல் நிலையங்கள் நாட்டிலிருந்து கொடுப்பனவுகளை செயலாக்க மறுத்துவிட்டன. ரஷ்ய அதிகாரிகள் பணம் செலுத்துவதற்கு கிடைக்கக்கூடிய நிதி தங்களிடம் இருப்பதாக வலியுறுத்துகின்றனர், ஆனால் அது ஐரோப்பிய நிதி அமைப்பிலிருந்து முற்றாக வெட்டப்பட்டுள்ளது, அதனால் ஒரு செயற்கையான செலுத்துமதி நிலுவையை மேற்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.
எவ்வாறிருப்பினும், 1917 புரட்சியை அடுத்து போல்ஷிவிக் அரசாங்கம் ஜார் ஆட்சியின் வெளிநாட்டுக் கடன்களை நிராகரித்த 1918 க்குப் பின்னர், ரஷ்யா தனது கடனை திருப்பிச் செலுத்தாதது இதுவே முதல் முறையாகும்.
நேட்டோவின் பாரிய இராணுவ விரிவாக்கம், அமெரிக்கா மற்றும் நேட்டோவின் உத்தியோகபூர்வ நிலைப்பாடாக வருவதுடன் அவை ரஷ்யாவுடன் போரில் ஈடுபடவில்லை எனக் கூறுவது பெருகிய முறையில் ஏற்றுக்கொள்ள முடியாததாகி வருகிறது.
இந்த வார இறுதியில், பைடென் மற்றும் பிற நேட்டோ தலைவர்கள் மறுத்தாலும், அமெரிக்கப் படைகளும், மேலும் பல நேட்டோ நாடுகளின் படைகளும் உக்ரேனில் இரகசியமாக செயல்படுவதாகவும் நியூ யோர்க் டைம்ஸ் தெரிவித்துள்ளது.
'ஆனால் பைடென் நிர்வாகம் அமெரிக்க துருப்புக்களை உக்ரேனுக்கு அனுப்பப் போவதில்லை என்று அறிவித்தாலும், உக்ரேனியப் படைகளுடன் அமெரிக்கா பகிர்ந்து கொள்ளும் உளவுத்துறையின் பெரும்பகுதியை இயக்கும் சில சி.ஐ.ஏ இன் பணியாளர்கள் நாட்டில் தொடர்ந்து செயல்பட்டு வருகின்றனர்' என டைம்ஸ் எழுதியது.
இங்கிலாந்து, கனடா, பிரான்ஸ் மற்றும் லித்துவேனியா ஆகிய நாடுகளின் டஜன் கணக்கான சிறப்புப் படைகள் நாட்டிற்குள் செயல்பட்டு வருவதாக செய்தித்தாள் தெரிவித்துள்ளது.
'உக்ரேனுக்கு உதவுவதற்கான இரகசிய முயற்சியின் அளவையும் வாஷிங்டனும் அதன் கூட்டாளிகளும் எடுத்துக்கொண்டிருக்கும் அபாயங்களையும் இந்த தகவல்கள் சுட்டிக்காட்டுகிறது' என அறிக்கை தொடர்ந்தது.
டைம்ஸ் அறிக்கை என்பது போரில் அமெரிக்காவின் ஈடுபாட்டின் அளவை ஆவணப்படுத்தும் சமீபத்திய ஆதாரம் மட்டுமே. இந்த ஆண்டின் தொடக்கத்தில், NBC மற்றும் பிற ஊடகங்கள், ரஷ்ய ஜெனரல்களை இலக்குவைத்த உக்ரேனிய கொலைகளிலும், ரஷ்யாவின் கருங்கடல் கப்பற்படையின் முதன்மையான Moskva போர்க்கப்பல் மூழ்கியதிலும் அமெரிக்கா நேரடியாக ஈடுபட்டதாக தெரிவித்தன.
இந்த அறிக்கைகளின்படி, உக்ரேனிய தளபதிகளுக்கு செயற்கைக்கோள்களில் இருந்து எடுக்கப்பட்ட உளவுத்தகவல்கள் வழங்கப்படுகிறது. 'இந்த தவல்கள் கூட்டினரால் வழங்கப்படும், மடிக்கணினிகளில் அவர்கள் பெற்றுக்கொள்ளலாம். மடிக்கணினிகள் போர்க்கள படவரைபு செயலியை இயக்குகின்றன. இதனை உக்ரேனியர்கள் ரஷ்ய துருப்புக்களை குறிவைத்து தாக்க பயன்படுத்துகின்றனர்.
போரில் அமெரிக்க ஈடுபாட்டின் பாரிய அளவு இருந்தபோதிலும், உக்ரேனிய இழப்புகள் அதிகரித்து வருகின்றன. இது வியட்நாம் போரின் கொடிய கட்டத்தில் அமெரிக்க போர் இறப்புகளின் எண்ணிக்கைக்கு இணையாக உள்ளது. சில நாட்களில், உக்ரேனியப் படைகள் 500 முதல் 1,000 பேர் வரை இழந்துள்ளனர்.
ரஷ்யா இப்போது கிழக்கு உக்ரேனில் உள்ள டொன்பாஸில் 90 சதவீதத்திற்கும் மேலாகவும், உக்ரேனின் மொத்த நிலப்பரப்பில் ஐந்தில் ஒரு பகுதியையும் கட்டுப்படுத்துகிறது. ஆனால் பேரழிவுகரமான தொடர் போர்க்கள பின்னடைவுகள் இருந்தபோதிலும், உக்ரேனிய உயிர்களின் இழப்பு எவ்வாறிருப்பினும் அல்லது டிரில்லியன் கணக்கான டாலர்கள் முக்கிய சமூகத் திட்டங்களில் இருந்து திசை திருப்பப்பட்டாலும் அமெரிக்காவும் அதன் நேட்டோ நட்பு நாடுகளும் போரில் தங்கள் ஈடுபாட்டை பாரியளவில் தீவிரப்படுத்தி வருகின்றன.
நேட்டோவிற்கும் ரஷ்யாவிற்கும் இடையே வெளிப்படையான போர் தவிர்க்க முடியாதது என்ற முடிவுக்கு ரஷ்ய அதிகாரிகள் வருகிறார்கள். கடந்த வாரம் ரஷ்ய வெளியுறவு மந்திரி சேர்ஜி லாவ்ரோவ்: “ஹிட்லர் சோவியத் ஒன்றியத்திற்கு எதிரான ஒரு போருக்காக ஐரோப்பிய நாடுகளை முற்றாக இல்லாவிடினும் கணிசமான பகுதியை ஒன்று திரட்டினார். இன்று ஐரோப்பிய ஒன்றியமும் நேட்டோவின் உடன்பாட்டுடன் ரஷ்ய கூட்டமைப்புடன் போருக்காக ஒரு புதிய கூட்டணியை உருவாக்குகிறது' எனக் கூறினார்.
அதிகரிக்கும் மோதலின் கொடிய தர்க்கம், இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் மிக மோசமான உலகளாவிய இராணுவ மோதலைத் தூண்டி, உக்ரேனிலான பினாமிப் போர் வேகமாக ஐரோப்பிய கண்டம் முழுவதும் பரவும் என்ற சாத்தியத்தை எழுப்புகிறது. இந்த யதார்த்தம், அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவுகள் மற்றும் ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதல்களுக்கு எதிரான போராட்டங்களை போருக்கு எதிரான போராட்டத்துடன் ஐக்கியப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு தொழிலாள வர்க்கம் இந்த நெருக்கடியில் தலையிட வேண்டிய அவசர தேவையை தெளிவுபடுத்துகிறது.