முன்னோக்கு

கியேவில் ஷோல்ஸ், மக்ரோன் மற்றும் திராஹி: ஐரோப்பிய ஏகாதிபத்தியம் ரஷ்யாவுக்கு எதிரான போர் விரிவாக்கத்தை ஆதரிக்கிறது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

முன்னணி ஐரோப்பிய சக்திகள், அமெரிக்காவை விட ரஷ்யாவுக்கு எதிராக மிகவும் அமைதியான போக்கைக் கடைப்பிடிக்கின்றன என்று யாரேனும் நம்பி இருந்தால், அது தவறு என்பது வியாழக்கிழமை நிரூபணமானது.

பிரெஞ்சு ஜனாதிபதி இமானுவல் மக்ரோன், ஜேர்மன் சான்சிலர் ஓலாஃப் ஷோல்ஸ் மற்றும் இத்தாலிய பிரதம மந்திரி மரியோ திராஹி ஆகியோர் ஒன்றாக உக்ரேனிய ஜனாதிபதி வொலோடிமிர் செலென்ஸ்கியைச் சந்திக்க சிறப்பு இரயிலில் கியேவ் சென்றனர். கியேவில், ருமேனிய ஜனாதிபதி கிளாஸ் ஜோஹானிஸூம் அந்த அணியில் இணைந்தார்.

Scholz, Macron und Selensky in Kiew (Bild: AP Photo/Natacha Pisarenko)

அவர்கள் நால்வரும் வெளியிட்ட சேதி சிறிதும் ஐயத்திற்கிடமின்றி இருந்தது. ரஷ்யா உடனான போர் ஒவ்வொரு நாளும் நூற்றுக் கணக்கான உயிர்களைப் பலி வாங்கும் முடிவில்லா ஒரு நாசகரமான போராக மாற்றப்பட்டு வரும் அதேவேளையில், அவர்கள் அதை விரிவாக்கவும் நீடிக்க செய்யவும் அவர்களால் ஆன அனைத்தையும் செய்து வருகிறார்கள். உக்ரேனுக்கு அதிக கனரக ஆயுதங்கள் வழங்குவதற்கும், ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைப்பதற்கான வாய்ப்பை அதிகரிக்கவும் அவர்கள் உறுதியளித்தனர். அவ்வாறு செய்வதன் மூலம், ஓர் அணு ஆயுத மூன்றாம் உலகப் போர் ஆபத்தை அவர்கள் நனவுபூர்வமாக ஏற்கிறார்கள்.

கியேவுக்கு இந்த தலைவர்களின் அடையாள கூட்டுப் பயணத்தின் முக்கியத்துவத்தைச் சான்சிலர் ஷோல்ஸ் வலியுறுத்தினார். 'மூன்று பெரிய நாடுகளின் அரசாங்கத் தலைவர்கள், மிகவும் தனித்துவமான இந்த போர் சூழலில் உக்ரேனுக்கு தங்கள் ஆதரவைக் காட்ட, இப்போது கியேவுக்குச் செல்கிறார்கள் என்பது முக்கியத்துவம் வாய்ந்ததாகும்,” என்றார். ஒற்றுமையை எடுத்துக் காட்டுவது மட்டுமல்ல, 'உக்ரேனின் சுதந்திர போராட்டத்திற்குத் தேவைப்படும் வரையில்' அதற்கு நிதி உதவி, மனிதாபிமான உதவிகள் மற்றும் இராணுவ உதவிகளைத் தொடர்வதும் இதன் நோக்கமாகும் என்றார்.

பின்னர் செலென்ஸ்கி, மக்ரோன், திராஹி மற்றும் ஜொஹன்னிஸ் உடனான ஒரு கூட்டு பத்திரிகையாளர் கூட்டத்தில் ஷோல்ஸ் பின்வருமாறு உறுதியளித்தார்: “நாங்கள் ஆயுதங்கள் வழங்குவதன் மூலமும் உக்ரேனை ஆதரிக்கிறோம், உக்ரேனுக்கு எங்கள் ஆதரவு தேவைப்படும் வரையில் நாங்கள் இதைத் தொடர்வோம்,” என்றார். குறிப்பாக, விமானம்-தகர்ப்பு சீத்தாஹ் பீரங்கி, ஹோவிட்சர் 2000 ரக சிறு பீரங்கிகள், நவீன விமானத் தகர்ப்பு அமைப்புமுறை Iris-T மற்றும் சிறப்பு ராடார் Cobra ஆகியவற்றுக்குக் கூடுதலாக, பிரிட்டன் மற்றும் அமெரிக்காவுடன் ஆலோசித்து ஒரே நேரத்தில் பல ராக்கெட்கள் ஏவும் ஏவுகளங்களை வழங்கவும் ஷோல்ஸ் உறுதியளித்தார்.

கூடுதல் ஹோவிட்சர்களை வழங்க மக்ரோனும் உறுதியளித்தார். 'ஏற்கனவே வழங்கப்பட்டுள்ள பன்னிரெண்டு Caesar ரக [தானியக்கி ஹோவிட்சர்களுக்குக்] கூடுதலாக, வரும் வாரங்களில் இன்னும் ஆறு சேர்க்கப்பட உள்ளன,' என்றார்.

செலென்ஸ்கி உற்சாகமாக இருந்தார். உக்ரேன் விரும்பும் ஆயுதங்கள் உள்ளடங்கலாக ஆயுதங்கள் கிடைக்கும் என்றார். 'இதில் ஜேர்மனி நிறைய உதவுகிறது,' என்றவர் தொடர்ந்து கூறினார். ஐரோப்பிய ஒன்றிய அந்தஸ்து பெறுவதற்கான சாத்தியக்கூறை 'ஐரோப்பாவுக்கான வரலாற்றுத் தேர்வாக' அவர் விவரித்தார்.

அதற்கு முந்தைய நாள், 30 நேட்டோ உறுப்பு நாடுகளையும், அத்துடன் சுவீடன், ஃபின்லாந்து, ஜோர்ஜியா, மால்டோவா, ஆஸ்திரேலியா மற்றும் ஒரு டஜன் பிற நாடுகளையும் உள்ளடக்கிய உக்ரைன்-பாதுகாப்பு தொடர்புக் குழு என்றழைக்கப்படுவதன் பாதுகாப்பு அமைச்சர்கள் ஆயுத வினியோகங்களைப் பாரியளவில் அதிகரிப்பதென புரூசெல்ஸ் கூட்டம் ஒன்றில் முடிவெடுத்திருந்தனர்.

பீரங்கி குண்டுகள், ஒரே நேரத்தில் பல ராக்கெட்கள் ஏவும் ஏவுகளங்கள், எதிர்த்து தாக்கும் டிரோன்கள், குண்டு துளைக்காத கவச வாகனங்கள், கப்பல் தகர்ப்பு ஏவுகணைகள் மற்றும் இன்னும் பிற ஆயுதங்கள் சாத்தியமானளவு விரைவாக உக்ரேனுக்கு அனுப்பப்பட உள்ளன. தற்போது உக்ரேனிய நிலத்தில் ஐந்தில் ஒரு பகுதியை ரஷ்யா கட்டுப்பாட்டில் கொண்டுள்ள நிலையில், இந்த கூடுதல் ஆயுதங்கள் போரின் போக்கை உக்ரேனுக்குச் சாதகமாக திருப்பும் என்று அமெரிக்காவும் அதன் கூட்டாளிகளும் நம்புகின்றன.

இன்னும் 1 பில்லியன் டாலர் அளவுக்கு அமெரிக்கா அதன் ஆயுத வினியோகங்களை அதிகரித்துள்ள நிலையில், பெரும் பங்கு அமெரிக்காவிடம் இருந்து வரும். ஆனால், சில விமர்சகர்கள் கூறுவதைப் போல, ஐரோப்பிய சக்திகள் அப்படியே அமெரிக்காவைப் பின்தொடரவில்லை. அவை அவற்றின் சொந்த ஏகாதிபத்திய நலன்களைப் பின்தொடர்கின்றன.

உக்ரேனைப் பாரியளவில் மீளஆயுதமயப்படுத்துவதும், ரஷ்யா உடனான கிழக்கு ஐரோப்பிய எல்லையில் எப்போதும் இல்லாதளவில் நேட்டோ துருப்புக்களை நிலைநிறுத்துவதும், மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைவதற்கான உக்ரேனின் விருப்பமும் ஐரோப்பிய ஒன்றியத்தின் தன்மையை மாற்றுகின்றன. அது அதன் தோற்றுவாயில் ஒரு பொருளாதார ஒன்றியமாக இருந்ததில் இருந்து, இன்னும் அதிகளவில் பகிரங்கமாக ரஷ்யா, சீனாவுக்கு எதிராகவும் இறுதியில் அமெரிக்காவுக்கு எதிராகவும், அத்துடன் ஐரோப்பிய தொழிலாள வர்க்கத்திற்கு எதிராகவும் ஓர் ஏகாதிபத்திய இராணுவக் கூட்டணியாக பரிணமித்து வருகிறது.

உக்ரேனிய தன்னலக் குழுக்களும் அந்நாட்டின் வலதுசாரி மற்றும் ஊழல் பீடித்த உயரடுக்குகளும் புரூசெல்ஸ் விருந்து மேசையில் ஓர் இடத்தைப் பெறும் கனவில் மிதக்கின்ற நிலையில், ஐரோப்பிய ஒன்றிய உறுப்பினர் அந்தஸ்து என்பது உக்ரேனிய தொழிலாளர்களுக்கு ஒரு பேராபத்தாக இருக்கும். உள்ளீர்க்கும் நிகழ்வு போக்கின் போதே கூட, இது வழமையாக ஆண்டுக் கணக்கில் அல்லது தசாப்தங்களுக்கு நீளும் என்கின்ற நிலையில், அரசாங்கம் எல்லா வித 'மிதமிஞ்சிய' சமூக செலவுகளையும் குறைக்க வேண்டும்.

இத்தாலி அரசாங்க தலைவராக இருந்து ஐரோப்பிய ஒன்றியத்திற்குள் உக்ரேனை அனுமதிப்பதற்கு இப்போது வக்காலத்து வாங்கும் மரியோ திராஹி, 2011 இல் இருந்து ஐரோப்பிய மத்திய வங்கியின் தலைவராக இருந்தார், அப்போது அது முக்கூட்டு (Troika) என்றழைக்கப்பட்டதன் பாகமாக கிரேக்க தொழிலாள வர்க்கத்தின் மீது சிக்கன நடவடிக்கையைத் திணித்தது, இது மில்லியன் கணக்கானவர்களைக் கடுமையான வறுமையிலும் ஆயிரக் கணக்கானவர்களை மரணத்திலும் தள்ளியது.

15 ஆண்டுகளுக்கும் மேலாக ஐரோப்பிய ஒன்றியத்தில் அங்கம் வகிக்கும் கிழக்கு ஐரோப்பிய நாடுகளில், தொழிலாளர்கள் சர்வதேச பெருநிறுவனங்களுக்காக தொடர்ந்து பட்டினிச் சம்பளத்தில் உழைத்து வருகிறார்கள், அதேவேளையில் அங்கே சமூக உள்கட்டமைப்பு சீரழிக்கப்பட்டுள்ளதுடன், ஒரு ஊழல் ஆட்சி மாற்றி ஓர் ஆட்சி அதிகாரத்திற்கு வருகின்றன.

இருபதாம் நூற்றாண்டில், ஜேர்மனி இரண்டு முறை உக்ரேனை அதன் செல்வாக்கின் கீழ் கொண்டு வர முயன்றது. முதலில் பிரெஸ்ட்-லிட்டோவ்ஸ்க் (Brest-Litovsk) கட்டளையிட்ட சமாதானம் நிலவிய 1918 இல் நடந்தது, அப்போது உக்ரேனைக் கைவிடுமாறு மாஸ்கோவின் புரட்சிகர அரசாங்கத்தை அது நிர்பந்தித்தது மற்றும் அங்கே ஒரு கைப்பாவை ஆட்சியை நிறுவியது, இந்த ஆட்சி கடைசியாக கொடூர ஜாரிச அதிகாரியும் சர்வாதிகாரியுமான Pavlo Skoropadskyi தலைமையில் இருந்தது. பின்னர், 1941 இல், சோவியத் ஒன்றியத்திற்கு எதிரான நிர்மூலமாக்கல் போரின் போது, அது ஜேர்மனியர்கள் 'வாழ்வதற்கான இடத்தை' உருவாக்க இன்றைய உக்ரேனின் நிலத்தில் தான் மில்லியன் கணக்கானவர்களைப் படுகொலை செய்தது.

கியேவ் புறநகர் பகுதியான இர்பினுக்கு விஜயம் செய்த ஸ்கோல்ஜ், அங்கே அவர் புலம்பிய ரஷ்யாவின் 'கற்பனை செய்யவியலாத குரூரம்' பாசாங்குத்தனத்தின் உச்சக் கட்டமாக இருந்தது. அவர் பாபி யர் நகர மையத்திலிருந்து செல்லும் வழியில் இறங்கி இருக்கலாம், அங்கே தான் ஜேர்மன் ஆயுதப் படை செப்டம்பர் 29 மற்றும் 30, 1941 இல் 36 மணி நேரத்தில் கியேவில் இருந்த 34,000 யூதர்களைப் படுகொலை செய்தது. ஆனால் இதை கியேவ் ஆட்சி கண்டு கொள்ளாது, அது ஸ்டீபன் பண்டேரா மற்றும் அவர் அமைப்பின் உக்ரேனிய தேசியவாதிகள் போன்ற நாஜி ஒத்துழைப்பாளர்களை 'மாவீரர்களாக' புகழ்ந்து பாடிக் கொண்டிருக்கிறது.

அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் பாக்தாத், மொசூல், ஃபல்லூஜா, திரிபோலி, பெல்கிரேட் மற்றும் காசா உட்பட ஒட்டுமொத்த நகரங்களையும் அழித்த போது, வியாழக்கிழமை நடந்ததைப் போன்ற எந்த யாத்திரைகளும் நடக்க வில்லை. ஷோல்ஸ், மக்ரோன் மற்றும் திராஹியின் தார்மீக ஒழுக்கநெறிகள் பிரத்யேகமாக உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் ஏகாதிபத்திய நலன்களால் கட்டளை இடப்படுகின்றன.

ஜேர்மனியையும் ஒட்டுமொத்தமாக ஐரோப்பாவையும் மீளஆயுதமயமாக்குவதற்கான தீர்க்கமான நோக்கம், வர்க்க போராட்டம் தீவிரமடைந்து வருவதனால் ஆகும், ஜேர்மனியின் இந்த நோக்கம் இந்தாண்டு அதன் பாதுகாப்புத்துறை வரவு-செலவு திட்டக் கணக்கை மூன்று மடங்காக்கும். இந்த பெருந்தொற்றின் உயிராபத்தான விளைவுகளுக்கு எதிராகவும், பணவீக்க தாக்கங்களுக்கு எதிராகவும் அதிகரித்து வரும் கிளர்ச்சிக்கு, ஐரோப்பா மற்றும் அமெரிக்காவின் ஆளும் வர்க்கங்கள், வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு எதிரிகளுக்கு எதிராக மீளஆயுதமேந்துவதன் மூலம் விடையிறுத்து வருகின்றன.

வேலைநிறுத்த அலையை முகங்கொடுத்து வருவதுடன், ஞாயிற்றுக்கிழமை அவரின் நாடாளுமன்ற பெரும்பான்மையை இழக்கும் ஆபத்தில் உள்ள ஜனாதிபதி மக்ரோன் அவரின் கியேவ் விஜயத்திற்கு நான்கு நாட்களுக்கு முன்னர் ஓர் இராணுவ வர்த்தக கண்காட்சியில் பேசுகையில், பிரான்சும் ஐரோப்பிய ஒன்றியமும் 'ஒரு போர் பொருளாதாரத்தில் வாழ்கின்றன இதில் நாம் நிரந்தரமாக ஒழுங்கமைத்துக் கொண்டவர்களாக இருக்க வேண்டும்,” என்று அறிவித்தார்.

ஜேர்மன் பாதுகாப்புத்துறை மந்திரி கிறிஸ்டின் லாம்ப்ரெக்ட் கூறுகையில், ஜேர்மனியில் உள்ள நேட்டோவின் பாதுகாப்பு மற்றும் தளவாடங்களுக்கும் 'உள்நாட்டுப் பாதுகாப்புக்கும்' பொறுப்பான ஒரு புதிய 'பிராந்திய தலைமைக் கட்டளையகத்தை' உருவாக்க இருப்பதாக அறிவித்தார், இது பெரிதும் பொதுப் பார்வைக்குக் கொண்டு வரப்படவில்லை. ஜேர்மன் ஆயுதப் படைகளின் (Bundeswehr) உள்நாட்டு செயல்பாடுகள், இவை சொல்லப் போனால் கைவிடப்பட்டு விட்டன, இதன் மூலம் ரஷ்யாவுக்கு எதிரான போர் தாக்குதல் போலவே அதே கட்டளையகத்தின் கீழ் கொண்டு வரப்படுகின்றன.

'இந்த புதிய கட்டளையகத்தின் மூலம், முற்றிலும் இராணுவப் பணிகளுக்குக் கூடுதலாக, தேசிய நெருக்கடி குழுவுக்கு, அவசியப்பட்டால், நம்மால் அவசியமான படைகளை மிகவும் விரைவாக வழங்க முடியும்,” என்று லாம்ப்ரெக்ட் விளக்கினார். அவர் சான்சிலர் அலுவலகத்தின் கோவிட்-19 நெருக்கடி பிரிவை மேற்கோளிட்டு காட்டினார், அது ஒரு முன்மாதிரியாக ஜேர்மன் இராணுவத் தளபதியின் தலைமையில் செயல்படுகிறது.

போர் மற்றும் சர்வாதிகார ஆபத்தைத் தொழிலாள வர்க்கத்தின் ஒரு சுயாதீனமான இயக்கத்தால் மட்டுமே நிறுத்த முடியும். தொழிலாள வர்க்கத்தின் அதிகரித்து வரும் இயக்கமும் போர் எதிர்ப்பும் அதற்குக் காரணமான முதலாளித்துவத்தை எதிர்த்து ஒரு நனவுபூர்வமான சர்வதேச இயக்கத்திற்குள் ஒன்றிணைக்கப்பட வேண்டும். நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவும், அதன் பிரிவுகளான சோசலிச சமத்துவக் கட்சிகளும் இதற்காக தான் போராடி வருகின்றன.

Loading