பிரான்ஸ் முழுவதும் மருத்துவமனை நெருக்கடிக்கு எதிராக சுகாதாரப் பணியாளர்கள் ஒருநாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

ஜூன் 7 அன்று, பிரான்ஸ் முழுவதிலும் உள்ள மருத்துவமனைகளில் உள்ள சுகாதாரப் பணியாளர்கள், பொது மருத்துவமனைகளில் ஆதாரங்களின் பற்றாக்குறை, குறைந்த ஊதியம் மற்றும் அவசர சிகிச்சை அறைகள் மூடல் அலை ஆகியவற்றை எதிர்த்து வேலைநிறுத்தம் செய்தனர். கோவிட்-19 தொற்றுநோயின் மூன்றாம் ஆண்டில் சகிக்க முடியாத வேலை நிலைமைகளால் இந்த தொழிலாளர்கள் சோர்வடைந்து ஆத்திரமடைந்துள்ள நிலையில், ஊழியர்கள் பற்றாக்குறை இப்போது முக்கியமான விகிதாசாரத்தை எட்டியுள்ளது மற்றும் மருத்துவமனை கவனிப்பை அணுகுவதற்கு பெரும் வெட்டுக்கள் தடையாய் உள்ளது.

இந்த வேலைநிறுத்தம், மருத்துவ சேவையை தனியார் இலாபத்திற்கு அடிபணிய வைப்பதற்கும், கோவிட்-19 தொற்றுநோயை உத்தியோகபூர்வமாக சமூகப்படுகொலை ரீதியாக கையாண்டதன் பேரழிவு விளைவுகளுக்கும் எதிராக சுகாதாரப் பணியாளர்களின் சர்வதேச ரீதியாக அதிகரித்து வரும் போராட்டத்தின் ஒரு பாகமாகும். சமீபத்திய வாரங்களில், பல்லாயிரக்கணக்கான சுகாதார ஊழியர்கள் ஸ்காட்லாந்து, துருக்கி, மாட்ரிட் மற்றும் ஜேர்மன் மாநிலமான நோர்த் ரைன்-வெஸ்ட்பாலியாவில் வேலைநிறுத்தம் செய்துள்ளனர். 2017 ஆம் ஆண்டில் மருத்துவப் பிழைக்காக செவிலியர் ராடோண்டா வாட்டை குற்றவாளியாக்கும் முயற்சிக்கு சுகாதாரப் பணியாளர்கள் எதிர்ப்புத் தெரிவித்து அணிதிரண்டதால், அமெரிக்காவின் மின்னசோட்டா, கலிபோர்னியா மற்றும் நியூ ஜேர்சி மாநிலங்களில் வெகுஜன சுகாதாரப் பாதுகாப்பு வேலைநிறுத்தங்கள் வெடித்தன.

பிரான்சில், ஜனாதிபதி இமானுவேல் மக்ரோனின் சிக்கனக் கொள்கைகள் மற்றும் வெகுஜன கோவிட்-19 தொற்று மருத்துவமனைகளை மூச்சடைக்கச் செய்வதால் மருத்துவ பராமரிப்புக்கான அணுகல் ஆபத்தில் உள்ளது. பணியாளர்கள் பற்றாக்குறை காரணமாக, அவசர சிகிச்சை சேவைகள் அவ்வப்போது மூடப்பட்டிருக்கும், பெரும்பாலும் இரவில் அல்லது பல மருத்துவமனைகளில் குறைந்த அணுகலே உள்ளது. அமியான், ஆன்ஜே, போர்தோ, கான், க்ளெர்மான்ட்-ஃபெரோண்ட், டிஜோன், கிரெனோபிள், லியோன், மெற்ஸ், நீஸ், ஓர்லியோன், ரான்ஸ், ரென் மற்றும் ஸ்ட்ராஸ்பேர்க் ஆகிய இடங்களில் உள்ள பல்கலைக்கழக ஆராய்ச்சி மருத்துவமனைகளும் இதில் அடங்கும். மகப்பேறு பிரிவுகளில் முக்கியமான பணியாளர் பற்றாக்குறை உள்ளது, இது முறையான கர்ப்ப பரிசோதனைகள் மற்றும் பிரசவத்தின் போது பாதுகாப்பை குறைமதிப்பிற்கு உட்படுத்துகிறது.

பாரிய நிதி மற்றும் மனித வளங்கள் தேவைப்படும் பிரான்ஸின் பொது மருத்துவமனையின் தொடர்ச்சியான சரிவு குறித்து மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் எச்சரிக்கின்றனர். அவிசென் மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவின் தலைவரான டாக்டர். ஃப்ரெடெரிக் ஆட்னே கூறினார்: “அவசர சிகிச்சை பிரிவுகள் சிதைவின் விளிம்பில் உள்ளன. இது ஒரு அறிகுறி மற்றும் கோவிட்-19 தொற்றுநோயால் துரிதப்படுத்தப்பட்டு மருத்துவமனைகளின் ஆழ்ந்த நெருக்கடியில் உள்ளன. மருத்துவமனை ஊழியர்கள் பற்றாக்குறையால், இந்த கோடையில் ஐந்து வார்டுகளில் ஒரு வார்டு மூடப்படும் அபாயம் உள்ளது.

வேர்சாய் மருத்துவமனையில், அவசர சேவைப் பிரிவின் மருத்துவரான டாக்டர் அன்வார் பென் ஹெல்லால், 'பேரழிவுக்' கோடையை எதிர்பார்க்கிறார். 'மக்கள் அவசர சேவை பிரிவுக்கு வந்து கதவுகள் மூடப்பட்டிருப்பதைக் காண்பார்கள். ... மேற்பார்வை, ஊழியர்கள் மற்றும் படுக்கைகள் இல்லாததால் ஏற்கனவே மக்கள் இறந்து கொண்டிருக்கிறார்கள். ஆட்கள் பற்றாக்குறை காரணமாக வாரங்களில் 70 அல்லது 80 மணிநேரம் தொடர்ந்து வேலை செய்த பின்னர், பணியாளர்கள் முற்றிலும் சோர்வடைந்து தொழிலை விட்டு வெளியேறுகிறார்கள் என்று அவர் கூறினார்.

WSWS நிருபர்கள் செவ்வாயன்று பாரிஸில் சுகாதார அமைச்சகத்திற்கு வெளியே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த வேலைநிறுத்தம் செய்யும் செவிலியர்களுடன் பேசினர்.

அமெலி மற்றும் மரின்

அமெலி WSWS இடம் கூறினார்: “கடந்த பல ஆர்ப்பாட்டங்களில் இருந்து நாங்கள் எப்போதும் அதே காரணங்களுக்காக வேலைநிறுத்தம் செய்து வருகிறோம்: பொது மருத்துவமனைகளுக்கு தேவையான ஆதாரங்களை நாங்கள் பெறவில்லை. எங்களுக்கு பொருள் அல்லது பணியாளர் வளங்கள் கிடைக்கவில்லை. அதனால்தான் நாங்கள் இங்கே வந்துள்ளோம். ... இது மிகவும் வெறுப்பாக இருக்கிறது, எங்களால் நோயாளிகளை சரியாக கவனிக்க முடியவில்லை.

'கோவிட் இன் தொடக்கத்தில், எங்களை ஹீரோக்கள் என்று அவர்கள் சொன்னார்கள், ஆனால் இப்போது நாங்கள் மிகவும் தெளிவாக கைவிடப்பட்டுள்ளோம்' என்று மரின் கூறினார். பொது மருத்துவமனைகளில் உள்ள பிரெஞ்சு செவிலியர்கள் தங்கள் தொழில் வாழ்க்கையின் தொடக்கத்தில் மாதந்தோறும் 1,400 யூரோக்கள் மற்றும் அவர்களின் வாழ்க்கையின் முடிவில் 2,000 யூரோக்கள் வரை ஊதியம் வழங்கப்படுகிறது என்று அமெலி குறிப்பிட்டபோது, தொடக்க செவிலியர்கள் 'பல்பொருள் அங்காடி காசாளர்களைப் போல ஊதியம் பெறுகிறார்கள், ஆனால் நோயாளிகளின் உயிர் எங்கள் கைகளில் உள்ளது' என்று மரின் மேலும் கூறினார்.

ராஷிட்

ராஷிட் WSWS இடம், தொற்றுநோயை நிர்வகிப்பதைச் சுற்றியுள்ள பராமரிப்பாளர்களிடையே அதிகரித்து வரும் வெடிக்கும் கோபத்தைப் பற்றியும் கூறினார்.

வைரஸின் முதல் அலையின் போது குறைந்த ஊதியம் பெறும் செவிலியர்கள், உணவு பதப்படுத்தும் தொழிலாளர்கள் மற்றும் சில்லறை விற்பனை தொழிலாளர்கள் ஆற்றிய முக்கிய பங்கை ராஷிட் நினைவு கூர்ந்தார். வேலைநிறுத்தங்கள் மற்றும் பெருகிவரும் பொது அக்கறையின் காரணமாக, அவர்கள் மக்ரோனை முதல் பூட்டுதலை ஏற்கும்படி கட்டாயப்படுத்தினர். அவர் கூறினார், “கோவிட்-19 இன் முதல் அலையின் போது, 1,000 அல்லது 2,000 யூரோக்கள் ஊதியம் பெற்ற தொழிலாளர்கள் யாருக்கும் தெரியாத வைரஸை எதிர்கொண்டனர், மேலும் அவர்கள் மருத்துவமனைகள் முழுவதும் இறந்து கொண்டிருந்தனர்.”

அவர் மேலும் கூறியதாவது: “முதல் அலையில் சுகாதார ஊழியர்கள் கட்டுப்பாட்டை கொண்டிருந்தனர். ... ஆனால் பின்னர் அதிகாரத்துவம் கட்டுப்பாட்டை திரும்பப் பெற்றது, மேலும் அவர்கள் படுக்கைகளை மூடுவதைத் தொடர்ந்தனர்,' என்று ராஷிட் கூறினார், 'எந்த அரசியல்வாதியும் மருத்துவமனை நெருக்கடியின் அளவை கணக்கில் எடுக்கவில்லை.'

WSWS நிருபர்கள் சீனாவிற்கும் பிரான்சிற்கும் இடையே உள்ள பயங்கரமான வேறுபாட்டை சுட்டிக்காட்டினர்: கடுமையான பூட்டுதல் வைரஸை அகற்ற சீனாவை அனுமதித்தது, மக்ரோன் வைரஸ் பரவுவதற்கு அனுமதித்தார், தொற்றுக்களைக் கண்காணிக்கவும், கண்டறியவும் மற்றும் தனிமைப்படுத்தவும் மறுத்துவிட்டார். இறுதியில், பிரான்ஸ் மற்றும் ஐரோப்பா முழுவதும் வைரஸ் மீண்டும் பரவ முடிந்தது. சீனாவில் வைரஸால் 6,000 க்கும் குறைவானவர்கள் இறந்திருக்கையில், ஐரோப்பாவில் கிட்டத்தட்ட 2 மில்லியன் பேர் இறந்தனர், பிரான்சில் கிட்டத்தட்ட 150,000 பேர் இறந்துள்ளனர்.

ராஷிட் பதிலளித்தார்: “முதல் அலையில் சீனாவைப் பற்றி என்னைத் தாக்கும் படம் என்னவென்றால், அவர்கள் 10 நாட்களுக்குள் ஒரு மருத்துவமனையை உருவாக்க முடிந்தது. நாங்கள், ஒரு தொற்றுநோய்க்கு மத்தியில், படுக்கைகளை அகற்றியுள்ளோம். பிரான்சில் தயாரிப்பு மற்றும் தேவையான உபகரணங்களின் பற்றாக்குறை பற்றி அவர் மேலும் கூறினார்: “நாமும் ஒரு மூன்றாம் உலக நாடுகள் போல, சுகாதாரப் பணியாளர்கள் குப்பைப் பைகளைப் பாதுகாப்பிற்காக அணிந்திருந்ததை நீங்கள் பார்த்திருக்கலாம். அதனால்தான் பல சுகாதாரப் பணியாளர்கள் இந்த வேலைக்குத் திரும்ப விரும்பவில்லை, ஏன் பலர் திரும்ப மாட்டார்கள்.”

பொதுச் சுகாதாரம் மற்றும் பாதுகாப்பிற்கான அரசாங்கத்தின் வெளிப்படையான அலட்சியம் இன்னும் சில பொதுச் சுகாதார நடவடிக்கைகளுக்கான ஆதரவையும் குறைமதிப்பிற்கு உட்படுத்துகிறது என அவர் விளக்கினார். FFP2 முகக்கவசங்கள் வைரஸிலிருந்து நல்ல பாதுகாப்பிற்கான அடிப்படை நிலை என்றாலும், அவர் கூறினார், “எனது துறையில் உள்ள நானும் எனது சக ஊழியர்களும் கோவிட் அறைகளுக்குள் நுழைய அறுவை சிகிச்சை முகமூடிகளை மட்டுமே வைத்துள்ளோம். எனவே பெரும்பாலும் அரசாங்கத்தின் இணக்கமின்மை காரணமாக, நாங்கள் முகமூடிகளை அணிய வேண்டும் என்ற தத்துவத்துடன் இருப்பது கடினமாக உள்ளது.”

தடுப்பூசி போட மறுத்த சுகாதாரப் பணியாளர்களை பணிநீக்கம் செய்ததற்காக மக்ரோன் நிர்வாகத்தை அவர் விமர்சித்தார், ஆனால் அவர்கள் கோவிட்-19 க்கு எதிர்மறையான சோதனையில் இருந்தனர், அதே நேரத்தில் பாதிக்கப்படக்கூடிய நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க, நேர்மறை சோதனை செய்த ஆனால் தடுப்பூசி போடப்பட்ட செவிலியர்களை வேலைக்குத் திரும்ப உத்தரவிட்டார். மருத்துவமனைகளின் தேவைகளை 'மதிப்பீடு செய்ய' ஒரு குழுவை அமைத்து, மே 31 அன்று மக்ரோனால் இழிந்த முறையில் அறிவிக்கப்பட்ட 'flash mission' ஐ அவர் கடுமையாகக் கண்டித்தார்.

அவர் கூறினார், “பராமரிப்பவர்களுக்கும் செவிலியர்களுக்குமான பயிற்சி வகுப்புகளைப் பாருங்கள், அவை பாலைவனங்களைப் போல காலியாக உள்ளன. மேலும் அங்கு செல்லும் மாணவ்ர்கள் கைவிடப்படுவது 50 சதவீதம் வரை செல்கிறது. கடைசியாக அவர்கள் ஒரு பயிற்சிக்கு வரும்போது, அவர்களுக்குக் கிடைக்கும் மேற்பார்வை மிகவும் மோசமாக உள்ளது மற்றும் அவர்கள் வேலை நிலைமைகளைப் பார்க்கிறார்கள், அவர்கள் தங்களுக்கு தாங்களே சொல்லிக்கொள்கிறார்கள்: “எனக்கு இந்த மாதிரி ஒரு தொழில் வேண்டாம். எனவே திரு ஜனாதிபதி ஒரு “flash mission' பற்றி பேசும்போது, அது என்னவொரு பேரழிவு. இது மற்றொரு பொருத்தமற்ற விஷயமாகும்.”

முதலாளித்துவ அமைப்புமுறைக்கு எதிராக சுகாதாரப் பாதுகாப்பு மற்றும் பிற தொழில்களில் உள்ள தொழிலாளர்கள் மத்தியில் பெருகிவரும் சர்வதேச எதிர்ப்பை அணிதிரட்டி ஐக்கியப்படுத்துவதே முன்னோக்கிய வழியாகும். பிரான்ஸ் மற்றும் சர்வதேச அளவில் உள்ள மருத்துவமனைகளில் உள்ள பயங்கரமான நிலைமைகள், அனைத்து அரசியல் நிறங்களையும் கொண்ட முதலாளித்துவ அரசாங்கங்களால் பல தசாப்தங்களாக சுகாதாரப் பாதுகாப்புக்கு ஒதுக்கப்பட்ட குறைவான நிதியுதவியுடன் பிணைக்கப்பட்டுள்ளன, இப்போது உலகளாவிய கோவிட்-19 தொற்றுநோயால் பெரிதும் மோசமடைகிறது.

கோவிட்-19 தொற்றுநோயைத் தடுக்கவும் வைரஸை அகற்றவும் ஒரு விஞ்ஞானக் கொள்கை இன்றி சுகாதாரப் பாதுகாப்பு அமைப்புகளின் தற்போதைய விரைவான சரிவை மாற்றியமைக்க முடியாது. மக்ரோன் மற்றும் அனைத்து ஐரோப்பிய ஒன்றிய (EU) அரசாங்கங்களும் கோவிட்-19 தொற்றுக்கு எதிரான பொது சுகாதார நடவடிக்கைகளை கைவிட்ட பின்னர், வைரஸின் புதிய அலை உருவாகி வருகிறது. மக்ரோன் அரசாங்கத்தின் மொத்த அலட்சியத்திற்கு மத்தியில், பிரான்ஸ் ஒவ்வொரு வாரமும் 140,000 க்கும் மேற்பட்ட தொற்றுக்கள் மற்றும் 200 இறப்புகளை கோவிட்-19 இல் காண்கிறது.

இதற்கு நேர்மாறாக, ரஷ்யாவிற்கு எதிராக உக்ரேனில் உள்ள இராணுவப் பிரிவுகள் மற்றும் தீவிர வலதுசாரி தேசியவாத குழுக்களுக்கு ஆயுதம் வழங்க மக்ரோன் நூற்றுக்கணக்கான மில்லியன் யூரோக்களை செலவழித்து வருகிறார், இப்போது சீனாவை இராணுவ ரீதியாக அச்சுறுத்துகிறார்.

சுகாதாரப் பணியாளர்களின் அணிதிரட்டலுக்கும் சர்வதேச ஒருங்கிணைப்புக்கும் தேசிய தொழிற்சங்க அமைப்புகளில் இருந்து முறிவு தேவைப்படுகிறது, அவை சுகாதாரப் பணியாளர்களை தேசிய அளவில் பிரித்து, அவர்களின் போராட்டங்களை ஒடுக்குகிறது. முதலாளித்துவ அரசாங்கங்களுடன் சிக்கன பேச்சுவார்த்தை நடத்தும் தொழிற்சங்கங்களில் இருந்து சுயாதீனமாக, தொழிலாளர்களுக்கு அவர்களது சொந்த சாமானிய அமைப்புகள் தேவை.

சாமானிய தொழிலாளர் குழுக்களின் சர்வதேச தொழிலாளர் கூட்டணியை (IWARFC) கட்டியெழுப்புவது, ஏகாதிபத்தியப் போர்களை நிறுத்துவதற்கும், கொரோனா வைரஸை அகற்றுவதற்கும், மற்றும் ஒரு சோசலிச சமுதாயத்திற்கான போராட்டத்தை நடத்துவதற்கும் தொழிலாள வர்க்கத்திற்கு அதன் தொழிற்துறை வலிமையை ஒழுங்கமைக்கவும் அணிதிரட்டவும் வாய்ப்பளிக்கிறது. இது சுகாதாரப் பாதுகாப்பு போன்ற அவசர சமூகத் தேவைகளை நிவர்த்தி செய்ய சமூக செல்வத்தைப் பயன்படுத்துவதை கட்டாயப்படுத்துகிறது.

Loading