எலிசபெத் போர்ன் பிரெஞ்சு பிரதம மந்திரியாக நியமிக்கப்பட்டார்: மக்ரோன் தொழிலாளர்கள் மீது தாக்குதல் நடத்த தொடங்குகிறார்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

மே 16 அன்று, ஜனாதிபதி இமானுவல் மக்ரோன், எலிசபெத் போர்னை பிரதமராக நியமித்தார். வெள்ளிக்கிழமை மாலை, மக்ரோனின் முதல் பதவிக் காலத்தின் தொடர்ச்சியாக, போர்ன் தனது அரசாங்கத்தின் அமைப்பை அறிவித்தார். முதலாளித்துவ ஊடகங்கள் கணிக்கத்தக்க வகையில் அந்தப் பதவிக்கு ஒரு பெண் பரிந்துரைக்கப்படுவதைப் பாராட்டிக்கொண்டிருக்கும் அதே வேளையில், மக்ரோன் தனது இரண்டாவது பதவிக்காலத்தில் தொழிலாள வர்க்கத்திற்கு எதிராக ஒரு முழுமையான தாக்குதலைத் திட்டமிடுகிறார் என்பதற்கான அறிகுறியாகும்.

எலிசபெத் போர்ன் [Photo by Jacques Parquier] [Photo by Jacques Parquier / CC BY 2.0]

மக்ரோனின் கீழ், பிரெஞ்சு தேசிய இரயில்வேயின் (SNCF) மூலோபாய இயக்குநராக இருந்த அவர், மாதம் 25,000 யூரோக்களுக்கு மேல் சம்பாதித்ததில், அவர் இரயில் தொழிலாளர்களின் ஒழுங்குமுறை சட்டங்களை கிழித்தெறிந்தார். தன் ஊதியத்தை விட பத்து மடங்கு குறைவான ஊதியம் பெற்ற இரயில் தொழிலாளர்களின் ஊதியத்தை அவர் இவ்வாறு நாசமாக்கினார். எல்லாவற்றிற்கும் மேலாக, COVID-19 தொற்றுநோய்களின் போது தொழில் அமைச்சராக இருந்த அவர் ஜூலை 2020 இல் பிரான்சின் முதல் பூட்டுதலுக்குப் பின்னர் நடைமுறைப்படுத்தப்பட்ட சுகாதார நெறிமுறைகளை விரிவுபடுத்தினார்.

இந்த அரசியல் குற்றவியல் நெறிமுறைகள் ஒரு பேரழிவை ஏற்படுத்தியுள்ளன. பூட்டுதலின் முடிவில் சில நூறு தினசரி தொற்றுக்களுடன் தொற்றுநோய் பெரும்பாலும் கட்டுப்பாட்டில் இருந்தபோதிலும், புதிய நெறிமுறைகள் வைரஸின் மிகப்பெரிய மீள் எழுச்சியை அனுமதித்தன. ஐரோப்பிய ஒன்றியம் முழுவதிலும் பிரதிபலிக்கப்பட்ட இந்தக் கொள்கையின் வாழ்க்கை அழிவு மிகப்பெரியது. பிரான்சில் கோவிட்-19 இலிருந்து 148,000 இறப்புகளில் 117,000 க்கும் அதிகமானோர் மற்றும் ஐரோப்பாவில் 1.8 மில்லியனில் 1.6 மில்லியன் பேர் போர்னின் வழிகாட்டுதலின் கீழ் வரையப்பட்ட நெறிமுறைகளை ஏற்றுக்கொண்ட பின்னர் நடந்தது.

போர்னின் நியமனம், ரஷ்யாவிற்கு எதிராக உக்ரேனில் நேட்டோவின் போர்க் கொள்கையின் பின்னால் அணிவகுத்து, மூன்றாம் உலகப் போராக விரிவடையும் என்று அச்சுறுத்தும் நிலையில், மக்ரோனின் சமூகப் பிற்போக்குக் கொள்கைகளைத் தொடர நிதியப் பிரபுத்துவத்திற்கு மக்ரோனின் உறுதிமொழியாக அமைகிறது. ஆச்சரியப்படத்தக்க வகையில், ஆளும் வர்க்கம் இந்த பிற்போக்குத்தனமான கொள்கையை பின்பற்றுவதற்கான அரசியல் மறைப்பாக போர்னின் பெண் அடையாளத்தின் மீது பொது கவனத்தை செலுத்துகிறது.

அவரது முன்னோடியான ஜோன் காஸ்டெக்ஸிடம் இருந்து அதிகாரத்தை ஒப்படைக்கும் விழாவின் போது, நடுத்தர வர்க்க பெண்ணிய சூழலில் இருந்து ஆதரவை ஈர்க்க போர்ன் முயன்றார். 'நான் இந்த நியமனத்தை அனைத்து சிறுமிகளுக்கும் அர்ப்பணிக்கிறேன்' என்று அவர் அறிவித்தார். 'சமூகத்தில் பெண்களுக்கான இடத்திற்கான போராட்டத்தை எதுவும் நிறுத்தக்கூடாது.' அவர் 'மிகவும் உணர்ச்சிவசப்பட்டவர்' என்றும், பிரான்சில் பிரதம மந்திரியாக இருந்த ஒரே பெண்மணியான எடித் கிரெஸனைப் பற்றி தனக்கு ஒரு எண்ணம் இருப்பதாகவும் போர்ன் மேலும் கூறினார்.

அப்போதிருந்து, போர்ன் சுற்றுச்சூழல் மற்றும் நவீனமயமாக்கல் கொள்கையைத் தொடர விரும்புவதாகக் கூறினார். அவர் பெரும்பாலான மூத்த வலதுசாரி மந்திரிகளை புதுப்பித்துள்ளார், நிதி அமைச்சகத்தில் புருனோ லு மேர் (மந்திரிகளில் முன்னுரிமை வரிசையில் 2வது உயர்ந்தவர்) மற்றும் உள்துறை அமைச்சகத்தில் ஜெரார் டார்மானன் மூன்றாவது இடம். முன்னாள் வெளியுறவு மந்திரி ஜோன்-ஈவ் லு திரியோன் க்கு பதிலாக, 2003 இல் ஈராக் மீதான அமெரிக்க படையெடுப்பு மற்றும் பிரெக்சிட் நெருக்கடியை நிர்வகிப்பதில் பங்குபற்றிய ஒரு வலதுசாரி இராஜதந்திரியான காத்தரின் கொலோனா நியமிக்கப்பட்டுள்ளார்.

போர்ன் கல்வி அமைச்சுக்காக பாப் என்டியாய் (Pap Ndiaye) என்பவரை நியமித்துள்ளார். இவர் அமெரிக்காவின் கறுப்பின மக்களைப் பற்றிய பிராங்கோ-செனகல் வரலாற்றாசிரியராவர். சமூக அறிவியலில் மேம்பட்ட ஆய்வுகள் பள்ளியில் (École des Hautes Etudes en Sciences Sociales - EHESS) கற்பிப்பவரும் அமெரிக்க பெருநிறுவனங்களால் நிதியளிக்கப்படும் பிளாக் லைவ்ஸ் மேட்டர் இயக்கத்தின் ஆதரவாளருமாவர்.

இரண்டாவது சுற்று ஜனாதிபதித் தேர்தல்களில், சோசலிச சமத்துவக் கட்சி (PES) தொழிலாளர்களுக்கு மக்ரோனுக்கும் லு பென்னுக்கும் இடையிலான வாக்கெடுப்பை புறக்கணித்து இரு வேட்பாளர்களையும் நிராகரிக்குமாறு அழைப்பு விடுத்தது. மக்ரோனால் உருவாக்கப்படும் அரசாங்கம் லு பென்னுக்கு ஜனநாயக மாற்றாக இருக்காது என்று PES அறிவித்தது. அடுத்த அரசாங்கத்திற்கு எதிராக அவர்கள் தலைமை தாங்க வேண்டிய போராட்டங்களுக்கு தொழிலாளர்களை தயார்படுத்துவதற்காக, இரு வேட்பாளர்களுக்கும் சமரசம் செய்ய முடியாத எதிர்ப்பை அடிப்படையாகக் கொண்டு தொழிலாளர்களை ஆயுதபாணியாக்குவதுதான் கேள்வியாக இருந்தது.

மக்ரோன் மற்றும் நேட்டோ தலைமையிலான இராணுவ வெளியுறவுக் கொள்கையின் கட்டமைப்பிற்குள் போர்னை நியமித்ததன் மூலம் அறிவிக்கப்பட்ட பிற்போக்குத்தனமான சமூக மற்றும் சுகாதாரக் கொள்கை, PES இன் நிலைப்பாட்டை உறுதிப்படுத்துகின்றன. மேலும், வெளிப்படைத்தன்மையின் அடையாளமாக ஊடகங்களால் போற்றப்படும் போர்ன் மற்றும் என்டியேயின் நியமனம், மக்ரோனின் தீவிர வலதுசாரிப் போக்கை நிறுத்தாது அல்லது கணிசமாக மெதுவாக்காது என்பது தெளிவாகிறது.

மக்ரோன், போர்னை பிரதம மந்திரியாக நியமிக்கையில், டார்மனன் தனது அடக்குமுறை முஸ்லிம் எதிர்ப்பு பிரச்சாரத்தை தொடர்கிறார். முஸ்லீம் சங்கங்களை குறிவைத்து 'பிரிவினை எதிர்ப்புச் சட்டத்தை' முன்னெடுத்த தீவிர வலதுசாரி Action française இன் அனுதாபி, பெண்கள் புர்க்கினி நீச்சலுடைகளை அணிய அனுமதிக்கும் கிரெனோபிள் நகராட்சி நடவடிக்கையை சட்டபூர்வமாக செல்லாததாக்க விரும்புகிறார்.

பெண்ணியத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு அனுதாப ஆளுமையாக போர்னை முன்வைக்கும் ஊடகங்களின் திட்டமிட்ட முயற்சிகள், இன மற்றும் பாலின அரசியல் எவ்வாறு ஜனநாயக விரோத மற்றும் எதேச்சாதிகாரக் கொள்கைகளுக்கு ஒரு மறைப்பாக செயல்படுகிறது என்பதை அம்பலப்படுத்துகிறது.

11 வயதில் தனது தந்தையின் தற்கொலைக்குப் பின்னர் அரசு ஆதரவைப் பெற்ற பாரிஸில் மருந்தாளுநர்கள் தம்பதியினரின் மகள் போர்னின் கடினமான குழந்தைப் பருவத்தை ஊடகங்கள் விளம்பரப்படுத்துகின்றன. இளம் எலிசபெத் போர்னின் வாழ்க்கையில் ஏற்பட்ட இந்த சோகமான அனுபவம், அந்த நிகழ்விலிருந்து அவர் எடுத்த முடிவுகளை விட அதிக அனுதாபத்தைத் தூண்டுகிறது.

உண்மையில், அவர் Ecole Polytechnique மற்றும் சோசலிஸ்ட் கட்சி (PS) ஆகியவற்றை தொழிலாளர்களின் செலவில் சமூக உயர்வை அடைவதற்கான வழிமுறைகளாகப் பயன்படுத்தினார். 1987 இல் PS இல் சேர்ந்த அவர், SNCF மற்றும் Eiffage உட்பட பெரிய நிறுவனங்களின் நிர்வாகத்தில் ஒரு தொழிலை செய்தார். 2021 இல் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியின் போது, அவரது தந்தையின் மரணத்திற்குப் பின்னர் தனது 'நிதி சுதந்திரம்' பற்றி கவலைப்பட்டதாக அவர் விளக்கினார்: 'நான் தொடந்து நம்பிக்கொண்டிருந்தேன், நான் அரசால் பணம் செலுத்தும் ஒரு பொறியியல் பள்ளியில் சேர முடிந்தது. அதுதான் உண்மையான நிவாரணமாக இருந்தது.'

இவ்வாறு போர்னின் பெண்ணிய ஊடக ஊக்குவிப்பு எல்லாவற்றிற்கும் மேலாக, போர்ன் போன்ற பணக்கார தொழில்நுட்ப வல்லுநர்களால் வழிநடத்தப்படும் போராட்டத்தைப் பற்றிய மாயைகளை விற்பதன் மூலம், தொழிலாளர்களின் சமூக கோபத்தை அடக்கி வர்க்கப் போராட்டத்தை நசுக்குவதற்கான முயற்சியைச் சுற்றியே உள்ளது.

1991-1992ல் ஸ்ராலினிச அதிகாரத்துவத்தால் சோவியத் ஒன்றியத்தை கலைத்த போது பிரான்சுவா மித்திரோன் தலைமையில் PS இன் பிரதம மந்திரியாக இருந்த எடித் கிரேசோன், BFM-TV இல் மற்றொரு பெண்ணை இந்த பதவியில் நியமிக்க இது 'அதிக நேரம்' என்று அறிவித்தார். தன்னைப் பற்றி குறிப்பிட்டதற்கு அவர் போர்னுக்கு நன்றி தெரிவித்தார், 'மிகவும் குறுகிய பேச்சில், என்னை மிகவும் கவர்ந்த ஒன்றை வெளிப்படுத்தும் வழியை அப்பெண்மணி கண்டுபிடித்தார்' என்றார்.

உண்மையில், கிரேசோனின் பாத்திரம் PS இன் பிற்போக்குத்தனமான தன்மையை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது மற்றும் அதை 'பெண்ணியவாத' மறைப்பின் கீழ் ஒரு முற்போக்கான கட்சியாக விற்க முயற்சிக்கிறது, இதில் ஜோன்-லூக் மெலோன்சோன் மற்றும் PS உடனான அவரது 'புதிய மக்கள் முன்னணி' முயற்சிகள் உட்பட.

1960களில் முன்னாள் விச்சி ஒத்துழைப்பாளர்களான பிரான்சுவா மித்திரோன் மற்றும் சார்ல் ஏர்னு (Charles Hernu) ஆகியோரால் வழிநடத்தப்பட்ட Convention des institutions républicaines (CIR) கட்சியின் செயல்பாட்டாளராக கிரேசோன் இருந்தார், 1971 இல் PS ஐ நிறுவுவதில் முக்கியப் பங்கு வகித்தார். ஈராக்கிற்கு எதிரான முதல் வளைகுடாப் போர் மற்றும் மாஸ்ட்ரிச் உடன்படிக்கையுடன் ஐரோப்பிய ஒன்றியம் தொடங்கப்பட்ட போது அவர் பதவியில் இருந்தார். கிரேசோன் தனது ஊதிய முடக்கக் கொள்கையால் தொழிலாளர்களால் வெறுக்கப்பட்டார். ஓரினச்சேர்க்கையை 'வேறுபட்ட மற்றும் விளிம்புநிலை' என்று கண்டனம் செய்ததற்காகவும், ஜப்பானிய மக்களை 'எறும்புகள்' என்று நிராகரித்ததற்காகவும் அவர் விமர்சிக்கப்பட்டார்.

இன்று, தொழிலாளர்கள் மீது கடுமையான சிக்கன நடவடிக்கைகளை திணித்த வலதுசாரி பெண் அரசியல்வாதிகளான மார்கரெட் தாட்சர் மற்றும் அங்கேலா மேர்க்கெல் ஆகியோருக்கு கிரேசோன் பாராட்டினார். போர்னின் நியமனம், கிரேசோன் கூறினார், 'பிரான்ஸ் என்றால் பிரான்ஸ், அரசியல் ஸ்தாபகம் என்பது ஒரு நிகழ்வு, ஆனால் மற்றொரு நாட்டில் இது ஒரு நிகழ்வு அல்ல. திருமதி தாட்சரைப் பற்றியோ அல்லது திருமதி மேர்க்கலைப் பற்றியோ அல்லது போர்ச்சுகலில் எனக்கு நீண்ட காலத்திற்கு முன்பே ஒரு பெண் பிரதமராக நியமிக்கப்பட்டார், இது அசாதாரணமான ஒன்று என்று யாரும் அழவில்லை.

உண்மையில், பிரதம மந்திரியாக போர்னை நியமிப்பது அசாதாரணமானது அல்ல, அடிப்படையில் எதையும் மாற்றப்போவதில்லை. உக்ரேனில் ரஷ்யாவிற்கு எதிரான தனது போரை நேட்டோ தீவிரப்படுத்துகையில், மக்ரோன் தொழிலாள வர்க்கத்திற்கு எதிராக உள்நாட்டில் தாக்குதலைத் தொடங்குகிறார், ஓய்வூதியங்கள் மற்றும் வேலையின்மை நலன்களைக் குறைக்கவும் மற்றும் பொது நிதியுதவி பெறும் பல்கலைக்கழகங்களைக் குறைமதிப்பிற்கு உட்படுத்தவும், அதே நேரத்தில் தொழிலாளர்கள் தொடர்ந்து COVID-19 க்கு ஆளாகிறார்கள். இது மக்ரோனுக்கும் தொழிலாள வர்க்கத்திற்கும் இடையே புதிய மற்றும் இன்னும் கூடுதலான வெடிக்கும் தன்மையான மோதல்களுக்கு தயாராகி வருகிறது.

Loading