மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்
மே 1 அன்று நடைபெற்ற 2022 சர்வதேச மேதின இணையவழி பேரணிக்கு எம்.தேவராஜா வழங்கிய அறிக்கை இதுவாகும். தேவராஜா இலங்கை சோசலிச சமத்துவக் கட்சியின் அரசியல் குழு உறுப்பினராவர். அனைத்து உரைகளையும் படிக்க கேட்க, wsws.org/mayday ஐ பார்வையிடவும்.
தோழர்களே நண்பர்களே,
2020 ஆம் ஆண்டின் தொடக்கத்தில், நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு (ICFI), உலக சோசலிச வலைத் தளத்தில் ஜனவரி 3, 2020 அன்று வெளியிட்ட புத்தாண்டு அறிக்கையின் மூலம், இந்த தசாப்தத்தை 'தீவிரமடைந்து வரும் வர்க்கப் போராட்டத்தினதும் உலக சோசலிசப் புரட்சியினதும் தசாப்தம்' என்று வகைப்படுத்தியது. அதற்குப் பின்னரான நிகழ்வுகள், இந்த முன்கணிப்பை சக்திவாய்ந்த முறையில் நிரூபித்துள்ளன. உலகளாவிய அரசியல், பொருளாதாரம் மற்றும் சமூகப் பிரச்சினைகளை ஒரு வரலாற்று மற்றும் சர்வதேச சூழலில் வைத்து மேற்கொண்ட மார்க்சிச புறநிலை பகுப்பாய்வு மூலம் இந்த முன்கணிப்பை எங்களால் செய்ய முடிந்தது.
உலகளவில் வர்க்கப் போராட்டத்தின் வளர்ச்சியானது கோவிட்-19 தொற்றுநோயால் 2020 ஆம் ஆண்டின் மத்தியில் தற்காலிக பின்னடைவைச் சந்தித்தது. ஆனாலும், வாகனம், சுகாதாரம், கல்வி, மின்சாரம், போக்குவரத்து, சுரங்கத் தொழில், வங்கி போன்ற பல்வேறு துறைகளைச் சேர்ந்த தொழிலாளர்கள், தெற்காசியா உட்பட, அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் ஆசிய-பசிபிக் நாடுகளில், 2020 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் தொடங்கி, வேலைநிறுத்தங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்கள் உட்பட போராட்டங்களில் ஈடுபட்டனர். அவர்கள் ஊதிய அதிகரிப்பு, சிறந்த வேலை நிலைமைகள், வேலை பாதுகாப்பு, தொற்றுநோய்களின் கீழ் ஆபத்தான நிலைமைகளில் இருந்து பாதுகாப்பு உட்பட தொடர் கோரிக்கைகள் முன்வைத்து போராடினர்.
உலக முதலாளித்துவத்தின் பிரமாண்டமான பொருளாதார, அரசியல் மற்றும் சமூக நெருக்கடியானது, கோவிட்-19 தொற்றுநோயினாலும் ரஷ்யாவிற்கு எதிரான அமெரிக்க-நேட்டோ பினாமி போரினாலும் மிகவும் தீவிரமடைந்துள்ளது. இது தொழிலாளர்கள், இளைஞர்கள் மற்றும் ஒடுக்கப்பட்ட வெகுஜனங்களை சர்வதேச அளவில் வேலைநிறுத்தங்கள் மற்றும் எதிர்ப்புகள் உட்பட தொடர் போராட்டங்களில் இறங்க நிர்ப்பந்தித்துள்ளது. இந்த உலகளாவிய வளர்ச்சியின் வெளிப்பாட்டை தெற்காசியாவில் வர்க்க மற்றும் சமூகப் போராட்டங்களிலும் நாம் காண்கின்றோம். குறிப்பாக, இலங்கையில் ஜனாதிபதி கோட்டாபய இராஜபக்ஷவின் அரசாங்கத்திற்கு எதிரான தற்போதைய மக்கள் எழுச்சியிலும் இதை நாம் காண்கின்றோம்.
இப்போது, இந்த அரசாங்க எதிர்ப்பு வெகுஜன இயக்கத்தின் வளர்ச்சியில் ஒரு முக்கியமான திருப்புமுனையைக் குறிக்கும் வகையில், தொழிலாள வர்க்கம் ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட வர்க்கமாக போராட்டங்களில் நுழையத் தொடங்கியுள்ளது. ஏப்ரல் 28 பொது வேலைநிறுத்தத்தில் அரசாங்க ஊழியர்கள், தனியார் மற்றும் அரை அரசு ஊழியர்கள் மற்றும் மிக முக்கியமாக பெருந் தோட்டத் தொழிலாளர்களுமாக அனைத்து துறைகளைச் சேர்ந்த மில்லியன் கணக்கான தொழிலாளர்கள் பங்குபற்றியமை அதற்கான தெளிவான அறிகுறியாகும். பிரமாண்டமான எண்ணிக்கையின் காரணமாக மட்டுமன்றி, தொழிலாள வர்க்கம் ஒரு வர்க்கமாக, அரசாங்கம் இராஜினாமா செய்ய வேண்டும் என்ற ஒரு வெளிப்படையான அரசியல் கோரிக்கையின் அடிப்படையில், வீதிகளில் இறங்கி இருப்பதால், இது முன்னெப்போதும் இல்லாத நிலைமை ஆகும்.
ஜனாதிபதியையும் அவரது அரசாங்கத்தையும் இராஜினாமா செய்யக் கோரி வளர்ந்து வரும் வெகுஜனப் போராட்டங்களில் தொழிலாள வர்க்கத்தின் எந்தவொரு சுயாதீனமான தலையீட்டையும் தடுத்து வைத்துள்ள தொழிற்சங்கங்கள், இந்த இயக்கத்தில் சேருவதற்கு தங்கள் உறுப்பினர்கள் மத்தியில் எழுந்த பெரும் அழுத்தம் காரணமாக, வேலைநிறுத்தத்திற்கு அழைப்பு விடுக்க நிர்ப்பந்திக்கப்பட்டன. எவ்வாறாயினும், தொழிற்சங்கங்களின் நோக்கம் தொழிலாள வர்க்கத்தினுள் வளர்ந்து வரும் எதிர்ப்பைக் கட்டுப்படுத்தி, அதை இடைக்கால அரசாங்கம் என்ற பொறிக்குள் அரசியல் ரீதியாக முடிச்சுப் போட்டு வெகுஜன இயக்கத்தை முதலாளித்துவ ஆட்சிக்குள்ளேயே வைத்திருப்பதாகும். முதலாளித்துவ பாராளுமன்ற எதிர்க்கட்சிகளான ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஜேவிபியுமே இந்த இடைக்கால அரசாங்கம் என்பதை முன்னிலைப்படுத்தி வருகின்றன.
சோசலிச சமத்துவக் கட்சியானது தற்போதை வெகுஜன இயக்கத்தில் தொடர்ச்சியாக அரசியல் ரீதியாக தலையிட்டு வருகின்றது. அதன் ஒரு முக்கியமான படியாக, ஏப்ரல் 28 பொது வேலைநிறுத்தத்தில் அது ஒரு தொழிலாள வர்க்க சுயாதீன புரட்சிகர சோசலிச வேலைத்திட்டம் மற்றும் முன்னோக்கை பரிந்துரை செய்து சக்திவாய்ந்த முறையில் தலையிட்டது. சோசலிச சமத்துவக் கட்சி, தீவின் பல பகுதிகளிலும் வேலைநிறுத்தம் செய்யும் தொழிலாளர்கள் மத்தியில் கட்சியின் அறிக்கையின் ஆயிரக்கணக்கான பிரதிகளை விநியோகித்தது. அந்த அறிக்கை தொழிலாள வர்க்கத்திற்கான அதன் சோசலிச செயல் திட்டத்தை தெளிவுபடுத்திக் காட்டுகின்றது. எதேச்சதிகார நிறைவேற்று ஜனாதிபதி முறை ஒழிக்கப்பட வேண்டும் மற்றும் அனைத்து அடக்குமுறைச் சட்டங்களும் நீக்கப்பட வேண்டும் என்று எங்களது அறிக்கை அழைப்பு விடுத்துள்ளது. 'இராஜபக்ஷ அரசாங்கமும் எதிர்க் கட்சிகளும் முன்னெடுத்துச் செல்ல முயலும் சர்வதேச நாணய நிதியத்தின் சிக்கன திட்டத்திற்கு எதிராக, பெரும் வணிகத்தின் இலாபங்களை விட உழைக்கும் மக்களின் அடிப்படை சமூகத் தேவைகளுக்கு முன்னுரிமை கொடுக்கின்ற ஒரு சோசலிச வேலைத் திட்டத்தை நாங்கள் முன்வைக்கிறோம்.” என்ற அந்த அறிக்கை விளக்குகின்றது.
வெகுஜன எதிர்ப்புக்களுக்கு எதிராக இராஜபக்ஷ அரசாங்கத்திற்கு முட்டுக் கொடுப்பதில் தமிழ் முதலாளித்துவக் கட்சிகள் குறிப்பாக பிற்போக்கு பாத்திரம் ஆற்றுகின்றன. பிரதான பாராளுமன்றக் கட்சியான தமிழ் தேசியக் கூட்டமைப்பு மற்றும் அதனுடன் இணைந்த தமிழ் தேசியவாத குழுக்களும், பல வாரங்களாக வளர்ந்து வரும் வெகுஜன எதிர்ப்பு குறித்து காது கேளாதோர் போல் மௌனத்தைக் கடைப்பிடித்தன.
இறுதியாக, ஏப்ரல் 13 அன்று, கூட்டமைப்பின் தலைவர் எம்.ஏ .சுமந்திரன் மௌனத்தை கலைத்தார். இராஜபக்ஷ அரசாங்கத்தின் தலைவர்களுடனும், முன்னாள் ஜனாதிபதிகளான மைதிபால சிறிசேன, சந்திரிகா குமாரதுங்க, பிரதமர் மஹிந்த இராஜபக்ஷ உட்பட கொழும்பு முதலாளித்துவ ஸ்தாபகத்தில் உள்ள வேறு சில அரசியல்வாதிகளுடனும், தொழிலாளர்கள் மற்றும் தமிழ் மக்களின் முதுகுக்குப் பின்னால் பேச்சுவார்தை நடத்தியதாக அவர் பெருமையடித்துக் கொண்டார். 'அரசியல் சூழ்நிலையில் ஸ்திரத்தன்மையைக் கொண்டுவர முயற்சிக்கும் பல பேச்சுவார்த்தைகளில் நான் ஈடுபட்டுள்ளேன்,' என அவர் ஒப்புக்கொண்டார். கூட்டமைப்பின் தலைவர் அரசாங்கத்துடனும் மற்ற முதலாளித்துவத் தலைவர்களுடனும் முதலாளித்துவ ஆட்சிக்கு அரசியல் 'ஸ்திரத்தன்மையை' கொண்டு வந்து, எதிர்ப்புகளை முடிவுக்கு கொண்டு வர சதி செய்து வருகிறார். அப்போது ஏதாவதொரு 'இடைக்கால' அரசாங்கமும் சர்வதேச நாணய நிதியம் ஆணையிட்டுள்ள சிக்கன நடவடிக்கைகளை அமுல்படுத்த முடியும்.
இராஜபக்ஷ அரசாங்கத்துடனான தமிழ் கூட்டமைப்பின் இந்த துரோக ஒத்துழைப்பு, ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது கொடூரமான அடக்குமுறைகளை தயாரிக்க அதன் கரங்களை பலப்படுத்தியுள்ளது. சுமந்திரனின் கருத்து தெரிவித்த பின்னர் ஆறு நாட்களுக்குள், ரம்புக்கனையில் எரிபொருள் விலை உயர்வைக் கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஆயிரக்கணக்கான மக்கள் மீது பொலிசார் நடத்திய கொடூரமான துப்பாக்கிச் சூட்டில் சமிந்த லக்ஷான் என்ற தொழிலாளி கொல்லப்பட்டதோடு டசின் கணக்கானவர்கள் காயமடைந்தனர்.
தற்போது நடந்து வரும் மக்கள் எழுச்சியில் பெருந்தோட்டத் தொழிலாளர்கள் அதிகளவில் தலையிட்டு வருகின்றனர். ஏப்ரல் 28 பொது வேலைநிறுத்தத்தின் போது, மலையக பெருந்தோட்ட மாவட்டங்களில் உற்பத்தி முற்றாக மூடப்பட்டது. தொழிலாளர்களின் நடவடிக்கைக்கு ஆதரவாக ஹட்டன் மற்றும் கொட்டகலை போன்ற பல நகரங்களில் கடைகள் அடைக்கப்பட்டதுடன் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டங்களை நடத்தி நகரங்களை மக்கள் வெள்ளத்தில் மூழ்கடித்தனர்.
ஒரு அரசியல் கட்சியாகவும் செயற்படும் பிரதான தோட்டத் தொழிற்சங்கங்களான இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், அரசாங்கத்தின் பங்காளியாக இருந்துகொண்டு, தொழிலாள வர்க்கத்தின் சமூக மற்றும் ஜனநாயக உரிமைகள் மீதான அரசாங்கத்தின் தாக்குதலுக்கு தீவிரமாக ஆதரவளித்து வருகிறது. பல வாரங்களாக அரசாங்கத்திற்கு எதிரான மக்கள் போராட்டங்களை நடத்துவதைப் பற்றி 'ஒரு பக்கம் நிற்க' மறுத்த இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், இப்போது அதிகரித்து வரும் தொழிலாளர்களின் எதிர்ப்பை முகங்கொடுத்து, பாராளுமன்றத்தில் 'சுயாதீனமான' குழுவாக செயல்படப்போவதாக அறிவித்துள்ளதுடன், பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி தயாரித்த நம்பிக்கை பிரேரணையை ஆதரிக்கவுள்ளது. இதன் மூலம், இலங்கை தொழிலாளர் காங்கிரசின் நடவடிக்கைக்கும், தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் தாங்க முடியாத நிலைமைகள் பற்றிய கவலைகளுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. மாறாக, அவர்கள் வளர்ந்து வரும் எதிர்ப்பை, ஒரு மாற்று முதலாளித்துவ அரசாங்கத்தை அமைப்பதற்கு முதலாளித்துவ எதிர்க்கட்சிகள் மேற்கொள்ளும் முயற்சிகளுக்குள் கரைத்து விடுவதை இலக்காகக் கொண்டுள்ளது. இது அதே சர்வதேச நாணய நிதிய சிக்கன கொள்கைகளை மட்டுமே அமுல்படுத்த உதவும்.
ஐக்கிய மக்கள் சக்தி, ஜேவிபி, தமிழ் கூட்டமைப்பு மற்றும் அவர்களின் போலி-இடது கைத்தேங்காய்கள் மற்றும் தொழிற்சங்கங்கள் உட்பட முதலாளித்துவ அரசியல் ஸ்தாபனத்தின் அனைத்துக் கட்சிகளுக்கும் எதிராக, சோசலிச சமத்துவக் கட்சி, ஏழை விவசாயிகள் மற்றும் பிற ஒடுக்கப்பட்ட மக்களைத் ஒன்றிணைக்கும், ஒரு சுயாதீன அரசியல் இயக்கத்தில் தொழிலாள வர்க்கத்தை அணிதிரட்ட போராடுகிறது. அதன் மூலம் இராஜபக்ஷ அரசாங்கத்தை தூக்கி எறிந்து, இடைக்கால அரசாங்கத்தை அனுமதிக்காமல், சோசலிச கொள்கைகளுக்கு அர்ப்பணிப்பு கொண்ட தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் அரசாங்கத்தை ஸ்தாபிக்க சோசலிச சமத்துவக் கட்சி போராடுகிறது. அதற்காக, அரசாங்கம் மற்றும் முதலாளிகளுக்கு தொழில்துறையின் பொலிஸ் படைகளாக செயல்படும் தொழிற்சங்கங்கள் அனைத்தில் இருந்தும் பிரிந்து, தொழிலாளர்கள் தங்கள் சொந்த நடவடிக்கை குழுக்களை உருவாக்க வேண்டும். பெருந்தோட்டம், சுகாதாரம், கல்வி மற்றும் கலை போன்ற பல்வேறு துறைகளில் இத்தகைய நடவடிக்கை குழுக்களை அமைப்பதில் முன்முயற்சி எடுத்துள்ள சோசலிச சமத்துவக் கட்சி, அத்தகைய குழுக்களை அமைப்பதற்கு தொழிலாளர்களுக்கு அனைத்து அரசியல் உதவிகளையும் வழங்க தயாராக உள்ளது. எமது நடவடிக்கைக் குழுக்களின் ஊடாக, தோட்டத் தொழிலாளர்களுக்கு அவர்களின் வரலாற்றுப் பணிகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும், அபிவிருத்தியடைந்து வரும் போராட்டங்களில் அவர்களின் முன்னணிப் பாத்திரத்தை அவர்களுக்கு உணர்த்தவும் நாங்கள் போராடி வருகிறோம்.
தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் அரசாங்கத்தை ஸ்தாபிப்பதற்கான அதன் போராட்டத்தில், இலங்கைத் தொழிலாள வர்க்கமானது, குறிப்பாக இந்தியா உட்பட தெற்காசியாவிலும் மற்றும் உலகம் முழுதும், உலக சோசலிசப் புரட்சிக்கான சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் ஐக்கியப்பட்ட இயக்கத்தில், உலகெங்கிலும் உள்ள தங்கள் வர்க்க சகோதர சகோதரிகளுடன் ஐக்கியத்தை கட்டியெழுப்ப வேண்டும்.
தோழர்களுக்கு நன்றி