உக்ரேனில் அமெரிக்க/நேட்டோ தூண்டிய போர் ஆபிரிக்காவில் உணவு நெருக்கடியை உருவாக்குகிறது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

அமெரிக்கா மற்றும் அதன் நேட்டோ பங்காளிகளால் வேண்டுமென்றே தூண்டப்பட்ட உக்ரைன் போர், ரஷ்யாவிற்கு எதிரான பொருளாதாரத் தடைகளுடன் சேர்ந்து, 50 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட காலத்தில் உலகளாவிய பொருட்களின் விலைகளில் மிகப்பெரிய உயர்வைத் தூண்டியுள்ளது.

போர் 1.7 பில்லியன் மக்களை அல்லது உலக மக்கள் தொகையில் ஐந்தில் ஒரு பகுதியை வறுமை, துன்பம் மற்றும் பசி பட்டினிக்குள் தள்ளும் அபாயம் இருப்பதாக ஐக்கிய நாடுகள் சபை எச்சரித்துள்ளது - ஏகாதிபத்திய சக்திகள் கருங்கடலில் தங்கள் போர்வெறியைத் தீவிரப்படுத்த இந்த கொடூரமான சூழ்நிலையை பயன்படுத்துகின்றன.

இந்த அச்சுறுத்தல் ஆபிரிக்காவை விட வேறு எங்கும் இல்லை.

புர்கினா ஃபாசோவில், ஓவாகடூகோவில் உள்ள போல்மியோவ்கோவ் மருத்துவமனையின் குழந்தைகள் பிரிவில் ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகள் சிகிச்சைக்காக காத்திருக்கின்றனர். [AP Photo/Sophie Garcia] [AP Photo/Sophie Garcia]

உலகெங்கிலும் உள்ள உணவு விலைகளின் அளவீடான, ஐ.நா. உணவு மற்றும் வேளாண்மை அமைப்பின் உணவு விலைக் குறியீடு, மார்ச் மாதத்தில் முன்நிகழ்ந்திராத உயர்வை எட்டியது, தற்போது உணவு விலை 2014-2016 ஐ விட 42 சதவிகிதம் அதிகமாக உள்ளது. கோவிட்-19 தொற்றுநோயைத் தொடர்ந்து உணவுப் பாதுகாப்பின்மை ஏற்கனவே அதிகரித்து வரும் நேரத்தில் இதுவும் நடக்கிறது. இது இரண்டாம் உலகப் போருக்குப் பின்னரான உலகின் மிகப்பெரிய உணவு நெருக்கடியாகும். உலகெங்கிலும் உள்ள உணவுப் பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்து நிலையின் சமீபத்திய மதிப்பீடுகளின்படி, உணவுப் பற்றாக்குறையை எதிர்கொள்ளும் மக்களின் எண்ணிக்கை 811 மில்லியனை எட்டியுள்ளது, இது 2019 ஆம் ஆண்டில் இருந்து 161 மில்லியன் அதிகரித்துள்ளது, அதாவது உலக மக்களில் 10 பேருக்கு ஒருவர் வீதம் பசியுடன் படுக்கைக்கு செல்கின்றனர்.

மற்ற கண்டங்களை விட ஆபிரிக்கா தான் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. 2020 ஆம் ஆண்டில் மொத்தம் 282 மில்லியன் மக்கள் அல்லது 21 சதவிகித ஆபிரிக்கர்கள் பசி பட்டினிக்கு ஆளாயினர், இது முந்தைய ஆண்டை விட 46 மில்லியன் பேர் அதிகமாகும். சர்வதேச நாணய நிதியத்தின் புள்ளிவிபரங்களை அடிப்படையாகக் கொண்ட பைனான்சியல் டைம்ஸின் அறிக்கையின்படி, துணை-சஹாரா ஆபிரிக்காவில் உள்ள குடும்பங்கள் தங்கள் வருமானத்தில் 40 சதவிகிதத்தை உணவுக்காக செலவிடுகின்றன, இது 17 சதவிகிதம் செலவழிக்கும் முன்னேறிய நாடுகளில் வசிப்பவர்களை விட மிக அதிகமான விகிதமாகும். ஆபிரிக்க வளர்ச்சி வங்கி இந்த எண்ணிக்கையை 65 சதவீதமாகக் குறிப்பிடுகிறது.

தொற்றுநோய், வேலையின்மை, வருவாய் இழப்பு மற்றும் சமூகப் பாதுகாப்பின்மை ஆகியவற்றின் கூட்டு தாக்கங்கள், மக்களை நீண்டகால வறுமை மற்றும் ஏழ்மைக்குள் தள்ளியுள்ளன. இன்று, மூன்று ஆபிரிக்கர்களில் ஒருவர், அல்லது 422 மில்லியன் மக்கள், உலகளாவிய வறுமைக் கோட்டிற்குக் கீழே வாழ்கிறார்கள், அதாவது நாளொன்றுக்கு 1 டாலருக்கும் குறைவான வருமானத்தில் அவர்கள் வாழ்வதாக வரையறுக்கப்படுகிறது.

உக்ரேன் மற்றும் ரஷ்யாவில் இருந்து பொருட்கள் ஏற்றுமதி கிட்டத்தட்ட ஸ்தம்பித்துள்ளது, ஐ.நா. பொதுச் செயலர் அன்டோனியோ குட்ரெஸின் கூற்றுப்படி, “ஏற்றுமதிக்கு தயாராக அண்ணளவாக 25 மில்லியன் டன் தானியங்கள் உள்ளன, ஆனால் அவை அந்த நாட்டை [உக்ரேன்] விட்டு வெளியேற முடியாது.” கடந்த ஆண்டு, ரஷ்யாவும் உக்ரேனும் உலகின் மொத்த தானிய ஏற்றுமதியில் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கையும், அதன் சோள வணிகத்தில் ஐந்தில் ஒரு பங்கையும், சூரியகாந்தி எண்ணெய் உற்பத்தியில் கிட்டத்தட்ட 80 சதவிகிதத்தையும் கொண்டிருந்தன. அமெரிக்க வேளாண் துறையின் கூற்றுப்படி, உலக கோதுமை விநியோகம் இறுக்கப்படும், காரணம் ரஷ்யா மற்றும் உக்ரேனின் ஏற்றுமதி போருக்கு முந்தைய கணிப்புகளை விட 7 மில்லியன் டன்கள் குறைவாக இருக்கும்.

ஆபிரிக்க அபிவிருத்தி வங்கியின் கூற்றுப்படி, ரஷ்யாவுடனான ஆபிரிக்காவின் 4 பில்லியன் டாலர் வர்த்தகத்தில் 90 சதவிகிதமும், உக்ரேன் உடனான அதன் 4.5 பில்லியன் டாலர் வர்த்தகத்தில் கிட்டத்தட்ட பாதியும் கோதுமை இறக்குமதியாகும். ஆபிரிக்காவின் 54 நாடுகளில் 23 நாடுகள் தங்களின் ஒரு பிரதானப் பொருளின் பாதிக்கு மேற்பட்ட இறக்குமதிக்கு ரஷ்யா மற்றும் உக்ரேனைச் சார்ந்துள்ளன. சில நாடுகள் இன்னும் அதிகமாக சார்ந்துள்ளன: குறிப்பாக, சூடான், எகிப்து, தான்சானியா, எரித்திரியா மற்றும் பெனின் ஆகிய நாடுகள் தங்கள் கோதுமை தேவையில் 80 சதவிகிதத்தையும், அல்ஜீரியா, சூடான் மற்றும் துனிசியா ஆகிய நாடுகள், தங்களின் சூரியகாந்தி எண்ணெய் தேவையில் 95 சதவிகிதத்திற்கு அதிகமானதையும், ரஷ்யா மற்றும் உக்ரேனில் இருந்து இறக்குமதி செய்கின்றன. பெரும்பாலான ஆபிரிக்க உயரடுக்குகள் எந்த அடிப்படை சமூக உதவியையும் வழங்காத சூழ்நிலையில், அனைத்து பகுதிகளிலும் அதிக விலையை அவர்கள் எதிர்கொள்கின்றனர்.

ஹார்ன், கிழக்கு ஆபிரிக்கா மற்றும் சஹேல் ஆகிய பகுதிகளின் பல ஆண்டுகால வறட்சி, கிழக்கு ஆபிரிக்காவின் வெட்டுக்கிளி திரள்கள், போர்கள் மற்றும் மோதல்கள், காலநிலையால் தூண்டப்பட்ட வெள்ளம் மற்றும் உணவுப் பாதுகாப்புவாதம் ஆகியவற்றால் உணவு நெருக்கடி தீவிரமடைந்துள்ளது, அதேவேளை, கண்டத்தின் ஊழல்வாதிகளின் பரவலான ஊழலும் பொருளாதார துஷ்பிரயோகமும் கூட துன்பத்தை அதிகரித்துள்ளன.

ஐ.நா. வின் உலக உணவு திட்டத்தின் (WFP) நிர்வாக இயக்குநர் டேவிட் பீஸ்லி, சஹேலின் பயங்கரமான சூழ்நிலை குறித்து சமீபத்தில் எச்சரித்து, “சஹேலில் உள்ள சுமார் 11 மில்லியன் மக்களுக்கு அடுத்த வேளை உணவு எங்கிருந்து வருகிறது என்பது தெரியவில்லை. அவர்களுக்குத் தேவையான உதவிகள் இப்போது கிடைக்கவில்லை என்பதால், நாங்கள் பட்டினி, இடம்பெயர்வு மற்றும் ஸ்திரமின்மை பற்றி பேசுகிறோம்” என்று கூறுகிறார்.

அடுத்த மூன்று மாதங்களில் சஹேலில் உள்ள 18 மில்லியன் மக்கள் உணவுப் பற்றாக்குறையை எதிர்கொள்வர் என ஐ.நா. எச்சரிக்கிறது. மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள புர்கினா ஃபாசோ, சாட், மாலி மற்றும் நைஜர் பகுதிகள் ‘ஆபத்தான நிலைகளை’ எதிர்கொள்கின்றன, அதாவது கிட்டத்தட்ட 1.7 மில்லியன் மக்கள் அவசரகால உணவுப் பற்றாக்குறையை எதிர்கொள்கின்றனர். காரணம், இப்பகுதியில் உள்ள வறிய மக்களை ஒடுக்கவும், அவர்கள் ஐரோப்பாவிற்கு தப்பிச் செல்வதைத் தடுக்கவும் ஐரோப்பிய சக்திகள் துருப்புக்களை அனுப்புவதால் தான் இந்நிலை உருவாகிறது.

மத்திய ஆபிரிக்க குடியரசு, சூடான், தெற்கு சூடான், எத்தியோப்பியா, சோமாலியா மற்றும் கென்யா ஆகிய நாடுகளை மோதல்கள், போர்கள் மற்றும் காலநிலையால் தூண்டப்பட்ட வறட்சிகள் ஆகியவை தாக்கியுள்ளன. ஆபிரிக்காவின் கொம்பு பகுதி/கிழக்கு ஆபிரிக்கா 40 ஆண்டுகளில் இல்லாத கடும் வறட்சியை எதிர்கொள்கிறது, தொடர்ந்து மூன்று மழைக்காலங்களில் அங்கு சிறிதளவு மழையே பெய்கிறது. ஆனால், 2019 ஆம் ஆண்டில் அங்கு பெய்த பெருமழை சுமார் 3.4 மில்லியன் மக்களை பாதித்ததுடன், பயிர்களை விழுங்கும் வெட்டுக்கிளிகளை அங்கு கடுமையாக திரள வைத்தது. 2021 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் இருந்து தெற்கு எத்தியோப்பியாவிலும், கென்யாவின் வறண்ட மற்றும் அரை வறண்ட பகுதிகளிலும் மூன்று மில்லியன் கால்நடைகளை கொன்று குவித்த வெப்பநிலை உச்சத்தை எட்டியுள்ளது. இந்த ஆண்டு ஆபிரிக்காவின் கொம்பு பகுதியில் சுமார் 20 மில்லியன் மக்கள் பட்டினியால் வாடக்கூடும் என ஐநா எச்சரித்துள்ளது.

அக்டோபர் 24, 2021 அன்று கென்யாவின் வாஜிர் கவுண்டியில் உள்ள டெர்டுவில், ஆடு மேய்ப்பவரான யூசுப் அப்துல்லாஹி பசியால் இறந்துவிட்ட தனது நாற்பது ஆடுகளின் சடலங்களை கடந்து செல்கிறார். ஆக்ஸ்பாம் இன்டர்நேஷனல் உதவி அமைப்பு மார்ச் 22, 2022, செவ்வாய்க்கிழமை அன்று, கிழக்கு ஆபிரிக்கா முழுவதும் நிலவும் பரவலான பட்டினி நிலைமை, பிராந்தியத்தின் மிகவும் பாதிக்கப்படக்கூடிய சமூகங்களுக்கு நிதி வழங்கப்படாத காரணத்தால் ‘ஒரு பேரழிவாக’ மாறக்கூடும் என்று எச்சரித்தது. (AP Photo/Brian Inganga, File)

அடுத்த ஆண்டின் அறுவடையை அச்சுறுத்தும் வகையில், பெரும்பாலான விவசாயிகள் வாங்க முடியாத அளவுக்கு உரங்களின் விலை உயர்ந்துள்ளது. ரஷ்யா உலகின் பொட்டாஷ் சந்தையில் 18 சதவிகிதத்தையும், அமோனியா ஏற்றுமதியில் 20 சதவிகிதத்தையும், மற்றும் 15 சதவிகித யூரியாவையும் உற்பத்தி செய்கிறது. எத்தியோப்பியாவில், வடக்கு டைக்ரே பகுதியில் நவம்பர் 2020 முதல் நடந்து வரும் போருக்கு மத்தியில், உரத்தின் விலை 200 சதவிகிதம் உயர்ந்துள்ளது, மற்றும் உணவுப் பணவீக்கம் 43 சதவிகிதத்தை எட்டியுள்ளது. அண்டை நாடான கென்யாவில், உக்ரேனின் போருக்கு முன்பாக ஏற்கனவே பயிர் உற்பத்தியில் 70 சதவிகித சரிவை வறட்சி ஏற்படுத்தியிருந்தது, இது 3 மில்லியனுக்கும் அதிகமான மக்களை கடுமையான பசி பட்டினியில் வீழ்த்தியது. சோமாலியாவில், இந்த மாத இறுதிக்குள் மழை பெய்யவில்லை என்றால், சுமார் 6 மில்லியன் மக்கள் – அதாவது 38 சதவிகிதம் பேர் – அதீத உணவுப் பாதுகாப்பின்மையை எதிர்கொள்வார்கள்.

மக்களின் தேவைகள் கடுமையாக அதிகரித்து வரும் அதேவேளை, உதவி அமைப்புகளும் அதற்கான ஆதாரங்களைக் கண்டுபிடிக்க போராடுகின்றன. 2022 இல் 137 மில்லியன் மக்களுக்கு அவர்களின் தேவைகள் சென்றடைய உலக உணவு திட்டத்திற்கு 18.9 பில்லியன் அமெரிக்க டாலர்கள் தேவைப்படுகிறது, ஆனால் அதன் நிதி இடைவெளி முன்னெப்போதையும் விட அதிகமாக உள்ளது. உணவு, எரிபொருள் மற்றும் கப்பல் செலவுகள் ஆண்டுக்கு 850 மில்லியன் டாலரை எட்டுவதால், போர் அதன் செலவுகளை 71 மில்லியன் டாலராக உயர்த்துகிறது. இதன் விளைவாக, நான்கு மில்லியனுக்கு குறைவான மக்களே இந்த திட்டத்தால் பயனடைவார்கள். எனவே, அதிகமான மக்களைச் சென்றடைய WFP உணவுப் பங்கீட்டை குறைக்க வேண்டும். மனிதாபிமான விவகாரங்களின் ஒருங்கிணைப்புக்கான ஐ.நா. அலுவலகம் (Office for the Coordination of Humanitarian Affairs - OCHA), உதவிக் குழுக்கள் இந்த ஆண்டின் தொடக்கத்தில், சஹேலுக்காக 3.8 பில்லியன் டாலர் உதவிக்கான கோரிக்கைகளை முன்வைத்தன, ஆனால் அவற்றின் இலக்கில் 12 சதவிகிதத்தை மட்டுமே பெற்றன என்று கூறியது.

உலகின் மிகப்பெரிய நன்கொடையாளர்களில் பலர் உக்ரேனுக்கு வளங்களைத் திருப்பிவிட்டனர். அமெரிக்க/நேட்டோ பினாமி போருக்கு ஆதரவளிக்கும் முயற்சியின் ஒரு பாகமாக, உக்ரேனுக்கு மனிதாபிமான மற்றும் மேம்பாட்டு உதவியாக 220 மில்லியன் பவுண்டுகளை வழங்குவதாக இங்கிலாந்து அறிவித்தது. நவம்பர் 2020 இல், பிரிட்டன் ஏற்கனவே அதன் ஒட்டுமொத்த உதவி வரவு செலவுத் திட்டத்தை மொத்த உள்நாட்டு உற்பத்தியின் 0.7 சதவிகிதத்தில் இருந்து 0.5 சதவிகிதமாக குறைத்துள்ளது, இது கடந்த ஆண்டு வெளி நாடுகளுக்கான இங்கிலாந்தின் நேரடி மனிதாபிமான உதவியை பாதியாகக் குறைத்தது, அதாவது 2020 இல் 1.53 பில்லியன் பவுண்டுகளில் இருந்து வெறும் 744 மில்லியன் பவுண்டுகளாக குறைத்தது.

ஆபிரிக்காவின் உணவு நெருக்கடியை அதிகரிக்கச் செய்யும் மற்றொரு காரணி உணவுப் பாதுகாப்புவாதமாகும், அமெரிக்க சிந்தனைக் குழுவான சர்வதேச உணவுக் கொள்கை ஆராய்ச்சி நிறுவனம் (International Food Policy Research Institute - IFPRI) படி, 23 நாடுகள் பிரதான உணவுகளின் ஏற்றுமதியைக் கட்டுப்படுத்துகின்றன அல்லது வரிகள் அல்லது ஒதுக்கீடுகள் போன்ற கட்டுப்பாடுகளை விதிக்கின்றன. 2007-08 உணவு மற்றும் எரிபொருள் நெருக்கடியின் போது காணப்பட்ட அதே அளவு கலோரிகளில் அளவிடப்பட்ட மொத்த உலக உணவு வர்த்தகத்தில் 17 சதவிகிதம் குறைவதற்கு உணவுப் பாதுகாப்புவாதம் வழிவகுத்தது. அதன் பின்னர், இந்தோனேசியாவும் இந்தியாவும் முறையே பாம் எண்ணெய் (palm oil) மற்றும் கோதுமை ஏற்றுமதிக்கு தடை விதித்துள்ளன.

கண்டத்தின் அதிகரித்து வரும் கடன் நெருக்கடியானது, சர்வதேச கடன்களை திருப்பிச் செலுத்தாத 20 அல்லது அதற்கு மேற்பட்ட நாடுகளில் கானா, சாம்பியா மற்றும் துனிசியா போன்ற சில நாடுகள் மட்டுமே உணவுப் பொருட்களை விலைக்கு வாங்குவதற்கான அல்லது மானிய விலைக்கு வாங்குவதற்கான வழிகளைக் கொண்டுள்ளதைக் குறிக்கிறது.

உலக முதலாளித்துவ அரசாங்கங்கள் எடுத்த முடிவுகளின் விளைவாக உணவு நெருக்கடி, மில்லியன் கணக்கான மக்களுக்கு சொல்லொணாத் துன்பங்களை உருவாக்கி, வர்க்கப் போராட்டத்தை அதிகப்படுத்துகிறது. ஐக்கிய நாடுகளின் வளர்ச்சித் திட்டத்தின் ஆபிரிக்காவுக்கான தலைமைப் பொருளாதார நிபுணர் ரேமண்ட் கில்பின் (Raymond Gilpin), “பதட்டங்கள், குறிப்பாக நகர்ப்புறங்கள், குறைந்த வருமானம் கொண்ட சமூகங்களில் பரவி, வன்முறை எதிர்ப்புக்கள் மற்றும் வன்முறை கலவரங்களுக்கு வழிவகுக்கும்” என்று உலக நிதிய உயரடுக்குகளை எச்சரித்துள்ளார்.

Loading