மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்
மே 23, 1947 இல், தொழிற் கட்சி பிரதம மந்திரி கிளெமென்ட் அட்லி இன் பிரிட்டிஷ் அமைச்சரவை, இந்து-முஸ்லிம் சிறுமதக்குழு-வகுப்புவாத வழிகளில் இந்தியாவைப் பிரிப்பதற்கான திட்டத்திற்கு ஒப்புதல் அளித்தது. அதனை தொடர்ந்து அந்த ஆண்டின் பிற்பகுதியில் நாட்டின் பிளவு மில்லியன் கணக்கானவர்களின் உயிரைப் பறித்தது.
இரண்டாம் உலகப் போரின் முடிவில், வீழ்ச்சியடைந்து வரும் பிரிட்டிஷ் பேரரசு, ஆசியா மற்றும் ஆபிரிக்கா உட்பட உலகம் முழுவதும் பரவிய காலனித்துவ எதிர்ப்புப் போராட்ட அலையை எதிர்கொண்டது. இந்தியாவில், பிரிட்டிஷ் மேலாதிக்கத்திற்கு எதிர்ப்பு தீவிரமடைந்தது, பிப்ரவரி 1946 இல் பம்பாயில் நடந்த கடற்படைக் கிளர்ச்சி உச்சக்கட்டத்தை அடைந்தது, இது விரைவாக பரவியது மற்றும் பொது வேலைநிறுத்தங்கள் உட்பட வெகுஜன தொழிலாள வர்க்கப் போராட்டங்களைத் தூண்டியது.
அதற்கு, பிரிட்டிஷ் ஆளும் உயரடுக்கு, சம்பிரதாயபூர்வமான சுதந்திரம் வழங்குவதை நோக்கி நகர்வதன் மூலம் பதிலளித்தது, அது இந்தியாவை ஏகாதிபத்திய ஆதிக்கத்தின் எல்லைக்குள் வைத்திருக்கும், ஆனால் அது நேரடிக் கட்டுப்பாட்டை உள்ளூர் ஆளும் உயரடுக்குகளுக்கு வழங்கும்.
ஜூலை 1946 இல் ஒரு பிரிட்டிஷ் அமைச்சரவை தூதுக்குழு, மத அடிப்படையிலான அரை-தன்னாட்சி மாகாணங்களைக் கொண்ட ஒரு கூட்டாட்சி தேசிய அரசாங்கம் அமைக்க முன்மொழிந்தது. மத வகுப்புவாதம் பிரிட்டிசாரால் ஊக்குவிக்கப்பட்டது, அது இந்து மற்றும் முஸ்லீம் தேசியவாத தலைவர்களின் கிளர்ச்சியை தீவிரப்படுத்தியது, அவர்கள் புதிய அரசினுள் தங்களது சொந்த பிரிவின் முதலாளித்துவ நலன்கள் உத்தரவாதம் செய்யப்படுவதற்கான முயற்சிகளை மேற்கொண்டனர்.
கூட்டாட்சி அரசாங்கம் இந்து உயரடுக்கின் ஆதிக்கம் மற்றும் இந்திய தேசிய காங்கிரஸில் உள்ள அதன் அரசியல் பிரதிநிதிகளால் ஆதிக்கம் செலுத்தப்படும் என்று அஞ்சிய, முஸ்லீம் லீக்கின் முகமது அலி ஜின்னா ஒரு 'தேசிய நடவடிக்கை நாளுக்கு' ஆகஸ்ட், 1946 இல் அழைப்பு விடுத்தார். இது பெரும் மோதல்கள் மற்றும் வகுப்புவாத கலவரங்களில் முடிவடைந்தது, ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டனர். வன்முறை பல்வேறு நிலைகளில், மாதக்கணக்கில் தொடர்ந்தது.
மார்ச், 1947 இல், இந்தியாவுக்கான பிரிட்டனின் கடைசி இராஜப்பிரதிநிதியாக பிரபு லூயிஸ் மவுண்ட்பேட்டனை அட்லீ நியமித்தார். ஜூன் 30, 1948 இல் முறையான சுதந்திரத்திற்கு தயாராகும் ஆணை அவருக்கு வழங்கப்பட்டது. முடிந்தால் தேசிய ஒற்றுமையை பாதுகாக்க மவுண்ட்பேட்டன் ஊக்குவிக்கப்பட்டார். அவர் இந்தியாவிற்கு வந்தவுடன், பிராந்தியத்தின் ஒடுக்கப்பட்ட மக்களை நிரந்தர அடிப்படையில் பிரிக்க வகுப்புவாத மோதல்களைக் பற்றிக் கொள்ளலாம் என்று விரைவாக முடிவு செய்தார். பிரிட்டிஷ் ஆளும் வர்க்கத்தின் மிகப்பெரிய அச்சம் என்னவென்றால், ஆழமடைந்து வரும் கொந்தளிப்பு, துணைக்கண்டத்தில் ஆளும் உயரடுக்கின் அனைத்து பிரிவுகளையும் மதிப்பிழக்கச் செய்து, மதப் பிளவுகளையும் தாண்டி தொழிலாள வர்க்க போராட்டங்களின் மீள் எழுச்சிக்கான நிலைமைகளை உண்டுபண்ணும் என்பது தான். அவர் மூத்த காங்கிரஸ் தலைவர்களிடமிருந்து பிரிவினைக்கு ஆதரவைப் பெற்றார்.
பிரிவினை பரந்தளவில் கொலைகளுக்கு வழிவகுக்கும் என்ற எச்சரிக்கைகளை மவுண்ட்பேட்டன் வெறித்தனமாக நிராகரித்தார். ஆகஸ்ட் 1947 இல் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டபோது இதுவே நிகழ்ந்தது, வகுப்புவாத வன்முறை 200,000 முதல் 2 மில்லியன் வரையிலான இறப்புகளுக்கு வழிவகுத்தது. இடப்பெயர்வுகள் 10 முதல் 20 மில்லியன் வரை என மதிப்பிடப்பட்டுள்ளது, இது உலக வரலாற்றில் மிகப் பெரிய அகதி நெருக்கடிகளில் ஒன்றாகும்.