ரஷ்யாவிற்கு எதிரான போருக்காக உக்ரேனுக்கு ஜேர்மனி சுயமாக இயக்கப்படும் ஹோவிட்சர்களை வழங்குகிறது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

உக்ரேனுக்கு 'கனரக ஆயுதங்களை' வழங்குவதற்கான ஜேர்மன் அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ முடிவிற்கு சில நாட்களுக்குப் பின்னர், ஜேர்மனி போருக்கான தனது ஆதரவை பாரியளவில் விரிவுபடுத்துகிறது.

வெள்ளிக்கிழமை, பாதுகாப்பு அமைச்சகம் ட்விட்டர் மூலம் ஜேர்மனி கியேவுக்கு ஏழு சுயமாக இயக்கப்படும் 2000-மாதிரி ஹோவிட்சர்களை வழங்கும் என்று அறிவித்தது. இது பாதுகாப்பு மந்திரி கிறிஸ் ரீன் லம்பிரெக்ட் (சமூக ஜனநாயகக் கட்சி) ஆல் 'தீர்மானிக்கப்பட்டது'. ஐந்து டச்சு சுய-இயக்க ஹோவிட்சர்களைச் சேர்த்தால், மொத்த விநியோகம் ஒரு டஜனாக இருக்கும். ஜேர்மனியில் ஹோவிட்சர்களைப் பயன்படுத்துவதற்கான பயிற்சி ஏற்கெனவே 'தயார்'நிலையிலிருப்பதாகவும் மற்றும் 'அடுத்த வாரம்' அது தொடங்கும் என்று அமைச்சகம் உறுதிப்படுத்தியது.

சுயமாக இயக்கப்படும் ஹோவிட்சர் மிகவும் அழிவுகரமான ஆயுதமாகும். அதன் ஷெல்களின் தாக்கப் புள்ளியில் இருந்து “50 மீட்டருக்குள் யாரும் உயிர்தப்ப மாட்டார்கள்” என Süddeutsche Zeitung இதழின் “தாக்கும் கைமுட்டி” என்ற இராணுவவாத தலைப்புக் கட்டுரையில் எழுதுகிறது.

பல ஆயிரம் வெடிதுண்டுகள் 'எல்லாவற்றையும் அழித்துவிடும்' மற்றும் படையினர் 'எதிரிகளின் தலைக்கு மேல் வெடிக்கும்படி எறிகணைகளின் உயரத்தை ஒழுங்கமைக்கலாம்.'

எதிரி டாங்கிகளுக்கு எதிராக 'சிறப்பு வெடிமருந்துகளை குழுக்கள் பயன்படுத்தலாம், இது வாகனங்களை அதன் சென்சார்கள் மூலம் தானாகவே கண்டறிந்து அவற்றின் எஃகு ஊடாக உடைக்க முடியும்.'

ஜேர்மனியில் ஹோவிட்சர்கள் விநியோகம் மற்றும் உக்ரேனிய படையினர்களுக்கு பயிற்சி அளித்ததன் மூலம், பேர்லின் இப்போது ரஷ்யாவிற்கு எதிரான அமெரிக்க-நேட்டோ போரில் ஒரு ஆக்கிரமிப்பு கட்சியாக உள்ளது.

மார்ச் 16 அன்று ஜேர்மன் பாராளுமன்றத்தின் விஞ்ஞான சேவை வெளியிட்ட கருத்தின்படி, ஜேர்மன் மண்ணில் உக்ரேனிய படையினருக்கு பயிற்சி அளிப்பது சர்வதேச சட்டத்தின் கீழ் போரில் பங்கேற்பதாகும். 'ஆயுதங்களை வழங்குவதோடு, முரண்படும் தரப்பினரில் அத்தகைய ஆயுதங்களில் பயிற்சியும் வழங்கப்பட்டால் அது போரில் ஈடுபடாத தரப்பு என்ற தளத்தை விட்டுவிலகுவதாக கருதப்படும்' என்று அது கூறியது.

வேறு வார்த்தைகளில் கூறுவதானால், சோவியத் ஒன்றியத்திற்கு எதிரான ஜேர்மன் அழிப்புப் போரில் கிட்டத்தட்ட 30 மில்லியன் மக்கள் இறந்த 81 ஆண்டுகளுக்கு பின்னர், ஆளும் வர்க்கம் மீண்டும் ரஷ்யாவிற்கு எதிராக போரை நடத்துகிறது. உக்ரேனில் புட்டினின் பிற்போக்குத்தனமான படையெடுப்பு மற்றும் உத்தியோகபூர்வ பிரச்சாரம் ஜேர்மன் வெளியுறவுக் கொள்கை மீண்டும் 1941 இல் இருந்ததைப் போலவே மாறிவருகிறது என்ற உண்மையை மாற்றவில்லை.

குறிப்பிடத்தக்க வகையில், ஆளும் வர்க்கம் 1945 மே 8-9 அன்று வெயர்மாஹ்ட் சரணடைந்ததன் ஆண்டு நிறைவை அதன் கொடூரமான குற்றங்களை நினைவுகூர பயன்படுத்தவில்லை, மாறாக மீண்டும் கிழக்கிற்கு டாங்கிகள் மற்றும் பிற கனரக ஆயுதங்களை அனுப்பியது. இதன் மூலம், ரஷ்ய இராணுவத்தை இராணுவ ரீதியாக தோற்கடிக்கும் என்ற அறிவிக்கப்பட்ட இலக்கை அது தொடர்கிறது.

புதனன்று ஓலாஃப் ஷோல்ஸ் (SPD), மெஸ்ஸபேர்க் இல் நடந்த ஆளும் கட்சிகளுக்கு இடையிலான அரசாங்க மாநாட்டிற்குப் பின்னர், டொன்பாஸில் ரஷ்ய தாக்குதலை முறியடித்து அதற்கேற்ப உக்ரேனிய இராணுவத்தை ஆயுதமயப்படுத்துவதே இப்போது விடயமாக இருக்க வேண்டும் என அறிவித்தார். 'அதனால்தான் நாங்கள் 50 பொருத்தமான Cheetah டாங்கிகளை வழங்குவோம் என்று கூறப்பட்டது. நாங்கள் எங்கள் நட்பு நாடுகளுடன் சேர்ந்து பீரங்கிகளைப் பயன்படுத்துவதற்கு ஆதரவை வழங்க விரும்புகிறோம் என்றும் கூறியுள்ளோம்” என்றார்.

அதன் பின்னர், ஒரு அறிவிப்பைத் தொடர்ந்து மற்றொரு அறிவிப்பு வந்துள்ளது. வியாழன் அன்று, செக் பிரதம மந்திரி பேற்றர் பியாளா உடன் ஒரு கூட்டு செய்தியாளர் கூட்டத்தில், ஷோல்ஸ் கனரக ஆயுதங்களின் 'மோதிர பரிமாற்றம்' என்று அழைக்கப்படுவதை அறிவித்தார். குறிப்பாக, செக் குடியரசு உக்ரேனுக்கு டாங்கிகள் உட்பட சோவியத் வடிவமைப்பின் ஆயுதங்களை வழங்குகிறது. அதற்குப்பதிலுக்கு, செக் இராணுவத்தின் ஆயுத அமைப்புகளை நவீன மேற்கத்திய ஆயுத அமைப்புகளுடன் மாற்றுவதை ஜேர்மனி மேற்கொள்கிறது.

ஆயுதங்களுடன் ஆதரவு வழங்குவதை பொறுத்த வரையில், 'நாங்கள் நெருக்கமாக இணைந்து பணியாற்றுவோம், ஒத்துழைப்போம்' என்று ஷோல்ஸ் கூறினார். அவர் மேலும் “செக் குடியரசு ரஷ்ய தயாரிப்பு ஆயுதங்களை வழங்குவது உக்ரேனுக்கு நேரடியாக பயனுள்ளதாக இருக்கும். செக் இராணுவம் அதற்குத் தேவையான பலத்தை தக்கவைத்துக் கொள்வதை உறுதிப்படுத்த நாங்கள் உதவ முடியும்” என்று கூறினார்.

ஜேர்மனிக்கும் ஸ்லோவாக்கியாவுக்கும் இடையே இதேபோன்ற 'மோதிர பரிமாற்றம்' தயாராகி வருகிறது. வெள்ளிக்கிழமை ஸ்லோவாக்கிய விமானப்படை தளமான ஸ்லியாக்கிற்கு விஜயம் செய்த பாதுகாப்பு அமைச்சர் கிறிஸ்டின் லம்பிரெக்ட் இதை உறுதிப்படுத்தினார். இந்த தளம் உக்ரேனிய எல்லையில் இருந்து 300 கிலோமீட்டருக்கும் குறைவான தொலைவில் உள்ளது மற்றும் தற்போது ஜேர்மன் இராணுவத்தால் பாரிய மேம்படுத்தல்களுக்கும் உட்பட்டுள்ளது.

பாதுகாப்பு அமைச்சகத்தின் உத்தியோகபூர்வ வலைத் தளத்தின் அறிக்கையின்படி, ஜேர்மனி Patriot விமான எதிர்ப்பு அமைப்புகளை ஹுசும் நகரில் இருந்து 'மிகக் குறுகிய காலத்திற்குள்' FlaRak குரூப் 1 உடன் தளத்திற்கு மாற்றியுள்ளது.

'அமெரிக்கா மற்றும் நெதர்லாந்துடன் சேர்ந்து, நேட்டோவின் ஒருங்கிணைந்த வான் பாதுகாப்பு கட்டமைப்பிற்குள் ஸ்லோவாக்கியாவின் அழைப்பின் பேரில் ஜேர்மனி இப்போது ஸ்லோவாக்கிய வான்வெளியின் பாதுகாப்பை எடுத்துக்கொள்கிறது' என்று அறிக்கை கூறியது. இந்த நடவடிக்கையில் ஜேர்மனி 'முன்னணியில் உள்ள நாடாகும்'.

தற்போது ஸ்லோவாக்கியாவில் 240 ஜேர்மன் படையினர் நிறுத்தப்பட்டுள்ளனர். ஆனால் இது ஆரம்பம்தான். 'மே 4 அன்று, ஸ்லோவாக் பாராளுமன்றம் நேட்டோ துருப்புக்களை 2,100 லிருந்து 3,000 ஆக தற்காலிகமாக அதிகரிக்க ஒப்புதல் அளித்தது' என்று பாதுகாப்பு அமைச்சகத்தின் அறிக்கை கூறுகிறது. 'மொத்தம் 1,200 ஜேர்மன் துருப்புக்கள் இப்போது ஸ்லோவாக்கியாவிற்கு மாற்றப்படலாம். இது ஜேர்மனியை இந்நாட்டிற்கான மிகப்பெரிய துருப்புக்களை அனுப்பும் நாடாக மாற்றுகிறது.

ஜேர்மன் தலைமையிலான நேட்டோ போர்க் குழுவை பயன்படுத்துவதற்காக, பிப்ரவரி 24, 2017 அன்று, லித்துவேனியாவில் உள்ள செஸ்டோகாய் நிலையத்திற்கு வந்த ஜேர்மன் டாங்கிகள் (AP Photo/Mindaugas Kulbis)

ஜேர்மனி 2017 முதல் லித்துவேனியாவில் நேட்டோ போர்க்குழுவை வழிநடத்துகிறது. இது முதலில் 1,000 படையினரைக் கொண்டிருந்தது. மார்ச் மாதத்தில், 350 கூடுதல் ஜேர்மன் துருப்புக்கள் கனரக இராணுவ உபகரணங்களுடன் லித்துவேனியாவுக்கு அனுப்பப்பட்டனர். ஸ்லோவாக்கியாவில் அதிகமான படையினரை இடமாற்றம் செய்து புதிய நேட்டோ போர்க்குழுவை உருவாக்கினால், கிழக்கு ஐரோப்பாவில் அமெரிக்காவிற்கு பின்னர் மிகப்பெரிய நேட்டோ துருப்புக்களை அனுப்பும் நாடுகளில் ஒன்றாக ஜேர்மனி மாறும்.

கிழக்கு ஐரோப்பாவில் ஜேர்மன் துருப்புக்கள் பெருமளவில் குவிக்கப்பட்டு, கனரக ஆயுதங்கள் மற்றும் ஜேர்மனியில் உக்ரேனிய படையினருக்கு பயிற்சி அளிப்பதன் மூலம், அது அணுவாயுத மூன்றாம் உலகப் போரின் அபாயத்தை அதிகரிக்கிறது என்பதை மத்திய அரசாங்கம் நன்கு அறிந்திருக்கிறது. ஏப்ரல் 22 இன் பிற்பகுதியில், ஷோல்ஸ் Der Spiegel க்கான ஒரு நேர்காணலில் “நேட்டோவுக்கும் அணு ஆயுத வல்லரசான ரஷ்யா போன்ற உயர் ஆயுதமேந்திய வல்லரசுக்கும் இடையே நேரடி இராணுவ மோதலைத் தவிர்க்க” அனைத்தையும் செய்ய வேண்டும் என்று கூறினார். “ஒரு மூன்றாம் உலகப் போருக்கு இட்டுசெல்லக்கூடிய மோதலைத் தடுப்பதே பிரச்சினையாகும்” எனக் குறிப்பிட்டார்.

இந்த எச்சரிக்கைகள் இப்போது அரசாங்கத்தால் புறக்கணிக்கப்படுகின்றன. Die Zeit உடனான சமீபத்திய நேர்காணலில், பொருளாதார விவகாரங்களுக்கான பசுமை அமைச்சர் ரோபேர்ட் ஹாபெக், 'உண்மையில் மூன்றாம் உலகப் போருக்கு பயப்படவில்லையா' என்ற கேள்விக்கு நிராகரிப்புடன் பதிலளித்தார்.

'இல்லை, நான் பயப்படவில்லை,' என்று அவர் கூறினார். “உங்களுக்கு நிறைய கவலைகள் இருக்கும் நேரத்தில் நாங்கள் இருக்கிறோம். ஆனால் சிலரை ஆட்டிப்படைக்கும் மூன்றாம் உலகப் போரின் பயம், ஜேர்மனி ஒரு போரில் ஈடுபடும் தரப்பாக மாறிவிடும் என்ற அச்சத்தால் தூண்டப்படுகிறது” என்றார்.

உண்மையில், ஜேர்மனி ஒரு போரில் ஈடுபடும் தரப்பாகவும் மற்றும் ஹாபெக் மற்றும் பசுமைக் கட்சியினர் போர்வெறியர்களில் முன்னணியில் உள்ளனர். ஜேர்மன் அரசாங்கத்தால் கொடிய ஆயுதங்கள் வழங்கப்படுவதை அவர் ஆதரித்து: 'நான், ரோபேர்ட் ஹாபெக் உக்ரேனுக்கு அனுப்பிய ஆயுதங்களுடன் ... மக்கள் பெரும்பாலும் கொல்லப்படுவார்கள். இருப்பினும் இந்த முடிவு வேறுமாற்றுகளுடன் ஒப்பிடும்போது அவசியமானது' என்றார்.

அடுத்த ஆயுத விநியோகம் ஏற்கனவே மக்களின் முதுகுக்குப் பின்னால் தயாராகி வருகிறது. ஐரோப்பிய ஒன்றியத்தின் விவகாரங்களுக்கான நாடாளுமன்றக் குழுவின் தலைவர், அன்டன் கோவ்ரைட்டர் (பசுமைக் கட்சி), ஹோவிட்சர்களுக்கு பின்னர் ஜேர்மனி 'Leopard 1 மற்றும் Marder டாங்கிகளையும் வழங்க வேண்டும்' என Welt தொலைக்காட்சிக்கு கூறினார். இதற்கான தொழில்துறை விண்ணப்பங்கள் 'விரைவாக அங்கீகரிக்கப்பட வேண்டும்' என்றும் அவர் குறிப்பிட்டார்.

Loading