மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்
புதன்கிழமை பிற்பகல், நூற்றுக்கணக்கான மாணவர்கள் ஒன்றுகூடி பாரிஸின் மையத்தில் உள்ள சோர்போன் பல்கலைக்கழகத்தின் கிழக்குப் பகுதியை ஆக்கிரமித்தனர். சோர்போன் நிர்வாகம் ஒரு பாசிச-எதிர்ப்புக் கூட்டத்தை நிறுத்துவதற்கான ஜனநாயக விரோத முடிவை எடுத்து மாணவர்களை வெளியேற்ற முயன்றதன் பின்னரே அவர்கள் பல்கலைக்கழகத்தை ஆக்கிரமிக்கத் தொடங்கினர்.
தற்போது, பாதுகாப்பு படைகள் கட்டிடத்தைச் சுற்றி வளைத்து, சோர்போனுக்கு வெளியே இருக்கும் ஆர்ப்பாட்டக்காரர்களை நசுக்கி, உள்ளே இருக்கும் மாணவர்களைத் தாக்கத் தயாராகின்றன.
இந்த ஆக்கிரமிப்பானது பிரெஞ்சு ஜனாதிபதி தேர்தல்களின் முட்டுச்சந்தில் இருக்கும் எதிர்ப்பின் ஆரம்ப வெளிப்பாடாகும், ஏனென்றால் இது ‘செல்வந்தர்களின் ஜனாதிபதி’ இமானுவல் மக்ரோனுக்கும் நவ-பாசிச வேட்பாளர் மரின் லு பென்னுக்கும் இடையேயான போட்டியாக மாறியுள்ளது. 1968 ஆம் ஆண்டில், அதே வரலாற்று சிறப்புமிக்க பல்கலைக்கழக கட்டிடத்தை ஆக்கிரத்திருந்த மாணவர்கள் மீதான வன்முறை மிக்க பொலிஸ் தாக்குதலால் தூண்டப்பட்ட ஒரு பொது வேலை நிறுத்தம் முதலாளித்துவ அரசை மண்டியிட வைத்தது. இப்போது, வரும் நாட்களில் என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை முடிவு செய்ய பல பிரெஞ்சு பல்கலைக்கழகங்களில் கூட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டு வருகின்றன.
புதன்கிழமை பிற்பகல் 1 மணிக்கு பல்கலைக்கழக முற்றத்தில் நடைபெறவிருந்த பாசிச-எதிர்ப்புக் கூட்டத்தின் காரணமாகத்தான் இந்த ஆக்கிரமிப்பு எழுந்தது. கூட்டத்தில் கலந்து கொள்ள மக்கள் ஒன்றுகூடிய நிலையில், நிர்வாகம் கூட்டத்தை தொடர அனுமதி இல்லை என்று அறிவித்தது என்பதாக ஆக்கிரமிப்பில் பங்கேற்ற மாணவர்கள் WSWS இடம் கூறினர். நூற்றுக்கணக்கான மாணவர்களை நுழைய விடாமல் தடுத்து, பாதுகாப்புக் காவலர்கள் பல்கலைக்கழகத்தின் அனைத்து நுழைவாயில்களையும் மூடினர்.
பதிலுக்கு, சோர்போன் கட்டிடத்திற்குள் நுழைய முடிந்த மாணவர்கள் ஒரு விரிவுரை அரங்கில் ஒன்றுகூடி ஒரு பொதுக் கூட்டத்தை நடத்தினர். அப்போது, வளாகத்தில் உள்ள பிரதான கட்டிடத்தை ஆக்கிரமிப்பு செய்ய அங்கிருந்தவர்கள் முடிவு செய்தனர். ஆக்கிரமிப்பு தொடங்கிய பின்னர், கட்டிடத்திற்கு வெளியே நின்ற ஏராளமான மாணவர்கள் பிற்பகல் முழுவதும் அங்கு நுழைவதற்கு முயற்சித்தனர், ஆனால் பாதுகாப்புக் காவலர்களால் தொடர்ந்து தடுக்கப்பட்டனர். மாலையில், சுமார் 300 மாணவர்கள் கிழக்குப் பிரிவில் தொடர்ந்து தங்கி, வெளியே இருந்த இளைஞர்களிடமிருந்து உணவுப் பொருட்களைப் பெறத் தொடங்கினர்.
ஒரு பேச்சாளர் கூட்டத்தில் இவ்வாறு கூறினார்: “பிரான்ஸ் முழுவதிலும் உள்ள மாவட்ட வாரியான செயல் வலையமைப்புகளாக நாம் நம்மை ஒழுங்கமைத்துக் கொள்ள வேண்டும்.” வரும் நாட்களில் நாடு முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்களில் இதுபோன்ற பொதுக் கூடுதல் கூட்டங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
மக்ரோன் மற்றும் லு பென், அத்துடன் காவல்துறையையும் விமர்சிக்கும் ஒரு பெரியளவிலான சுவர் படங்கள், பல அராஜக அடையாளங்களுடன் பல்கலைக்கழகத்தின் சுவர்களில் வரையப்பட்டிருந்தது.
ஆரம்பக் கூட்டம் Coordination Antifascite Inter-Universitaire (CAIU) அமைப்பால் அழைக்கப்பட்டது, பின்னர் அவர்கள் புதன்கிழமை மாலை நடந்த பொதுக் கூட்டத்தில் முடிவு செய்து, சோர்போன் தலைவரிடம் விடுக்கப்பட்ட ஆக்கிரமிப்பாளர்களின் ‘பேச்சுவார்த்தைக்கு வராத கோரிக்கைகளை’ ட்வீட் செய்தனர். இந்த கோரிக்கைகளில், திங்கட்கிழமை வரை வகுப்புகள் இரத்து செய்யப்படுவது, பல்கலைக்கழக நுழைவாயில்கள் மாணவர்கள் கட்டுப்பாட்டில் இருப்பது, மாணவர்களை தளத்தில் தூங்க அனுமதிப்பது, மற்றும் ஜனாதிபதி தேர்தலின் இரண்டாம் சுற்று வரை ஆக்கிரமிப்பு உரிமை தொடர்வது ஆகியவை அடங்கும்.
சோர்போனில் நடந்த ஆக்கிரமிப்பும் எதிர்ப்புகளும், நவ-பாசிச லு பென்னுக்கும், தனது ஜனாதிபதி பதவிக் காலம் முழுவதும் பாசிச கொள்கைகளை கடைப்பிடித்த மக்ரோனுக்கும் இடையேயான ‘தேர்வை’ எதிர்ப்பதற்காக மாணவர்களும் இளைஞர்களும் எடுத்த தொடர்ச்சியான நடவடிக்கைகளின் ஒரு பகுதியாகும். மேலும், பாரிஸில் உள்ள ENS Jourdan, மற்றும் Science Po Nancy மாணவர்களும் பல்கலைக்கழக கட்டிடங்களை ஆக்கிரமித்துள்ளனர்.
திங்கட்கிழமை முதல் ENS Jourdan இல் உள்ள Logos கட்டிடத்தை ஆக்கிரமித்துள்ள மாணவர்கள், “இரண்டாவது சுற்றில் தீவிர தாராளமயம் மற்றும் பாசிசத்தின் சாத்தியத்தை நாங்கள் மறுக்கிறோம்” என்று கூறும் ஒரு கட்டுரையை வெளியிட்டனர்.
இதுவரை காவல்துறையும், காவலர்களும் போராட்டத்தில் தலையிடாத நிலையில், போராட்டத்தின் வளர்ச்சியை அரசு உன்னிப்பாக கவனிக்கும். WSWS இடம் பேசிய மாணவர்கள், பல்கலைக்கழகத்துடன் தொடர்பில்லாத தனிநபர்கள் காதில் பொருத்தப்பட்ட தொடர்பு கருவியுடன் சாதாரண உடைகளை அணிந்திருப்பதை சுட்டிக்காட்டினர். கட்டிடத்தின் நுழைவாயில்களைக் காக்கும் டஜன் கணக்கான பாதுகாப்புக் காவலர்களை விட இது கூடுதலாக இருந்தது.
“இந்த ஆக்கிரமிப்பு மக்ரோன் மற்றும் லு பென்னுக்கு எதிரான போராட்டமாகும்; பிரான்சின் பெரும்பகுதியினர் மிகுந்த இடதுசாரிகளாக இருக்கையில், இவர்கள் இருவரும் மிகுந்த வலதுசாரி வேட்பாளர்களாக இருக்கின்றனர். இது தேர்தலில் பிரதிபலிக்காததால், நாங்கள் நடவடிக்கை எடுத்தாக வேண்டும்” என்று ஒரு ஆக்கிரமிப்பாளர் WSWS இடம் கூறினார்.
ஆர்ப்பாட்டத்திற்கு வெளியே இருந்த இரு மாணவர்கள், சோர்போன் போராட்டத்தில் கலந்து கொள்ள வந்ததாகக் கூறினர், ஏனெனில் அவர்கள் “லு பென்னுக்கும் மக்ரோனுக்கும் இடையேயான தேர்வை நிராகரித்துள்ளனர்”, மேலும் இரு வேட்பாளர்களின் இஸ்லாமிய வெறுப்பு கொள்கைகளால் அவர்கள் குறிப்பாக கவலை கொண்டுள்ளனர்.
ஜனாதிபதித் தேர்தலின் முதல் சுற்று முடிவுகளால் ஆக்கிரமிப்பு தூண்டப்பட்டது என்றாலும், பல ஆண்டுகளாக மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் பெருகிவரும் கோபத்தையே இது பிரதிபலிக்கிறது. தொற்றுநோய் காலத்தில், மாணவர்கள் வருமான இழப்பை எதிர்கொண்டுள்ளனர், ஏராளமான குடும்ப உறுப்பினர்களையும் அன்புக்குரியவர்களையும் இழந்துள்ளனர், மேலும் மக்ரோனின் சமூக நோயெதிர்ப்பு சக்தி பெருக்கும் கொள்கையினால் மிகவும் ஆபத்தான வைரஸால் பாரிய பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். மேலும், வேலை பாதுகாப்பின்மையும், மற்றும் அதிகப்படியான கல்விக் கட்டணங்களை அறிமுகப்படுத்துவதன் மூலம் பல்கலைக்கழகங்களை ‘அமெரிக்கமயமாக்கும்’ மக்ரோனின் நோக்கமும் சீற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
கூட்டத்தை நடத்துவதற்கான மாணவர்களின் ஜனநாயக உரிமைக்கு பல்கலைக்கழகத்தின் கடுமையான பதிலிறுப்பு, தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களின் எதிர்ப்பு குறித்த ஆளும் உயரடுக்கின் பெரும் அச்சத்தை பிரதிபலிக்கிறது. பிரான்ஸ் மற்றும் ஐரோப்பா முழுவதுமான வர்க்க பதட்டங்களின் நிலை அசாதாரணமானதாகும். பரவலாக வெறுக்கப்படும் மக்ரோனுக்கும், பிரான்சின் முதன்மை நவ-பாசிசவாதிக்கும் இடையேயான தேர்வு குறித்து தொழிலாள வர்க்கத்தின் பெரும்பகுதியினரும் இளைஞர்களும் கோபம் அல்லது எரிச்சல் அடைந்துள்ள நிலையில், பிரெஞ்சு சமூகம் சிதறிப் போயுள்ளது.
ஆளும் வர்க்கத்தால் நிர்ப்பந்திக்கப்பட்ட ‘தேர்வுக்கு’ எதிராகப் போராடுவதற்கான பெரும்பாலான மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் உள்ளார்ந்த விருப்பம், பிரெஞ்சு தேர்தலின் இரண்டாம் சுற்றுப் போட்டியை தீவிரமாக புறக்கணிக்குமாறு சோசலிச சமத்துவக் கட்சி (PES) விடுத்த அழைப்பின் வலுவான உறுதிப்படுத்தல் ஆகும். கடந்த 20 ஆண்டுகளில் ஒரு பாசிஸ்ட் இரண்டாவது சுற்றுக்கு முன்னேறுவது மூன்றாவது முறையாக நிகழ்கிறது.
ஞாயிறன்று மில்லியன் கணக்கான இளைஞர்களும் மாணவர்களும் மெலோன்சோனுக்கு வாக்களித்தனர், அதாவது ஒட்டுமொத்த பிரெஞ்சு முதலாளித்துவத்தின் தொடர்ச்சியான வலதுசாரி இயக்கத்திற்கு ஒரு இடதுசாரி மாற்றாக அவர் செயலாற்றுவார் என்ற நம்பிக்கையில் அவ்வாறு செய்தனர். ஞாயிற்றுக்கிழமை மாலை, இறுதி முடிவுகள் உறுதிப்படுத்தப்படுவதற்கு முன்னரான அவரது திடீர் ஓய்வு, அவர் வர்க்கப் போராட்டத்தில் இளைஞர்கள் மற்றும் தொழிலாளர்களுக்கு துணை நிற்கும் கூட்டாளி அல்ல என்பதையே காட்டுகிறது. மில்லியன் கணக்கான தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களின் ஆதரவை வென்றுள்ள போதிலும், மெலோன்சோன் தேர்தல் களத்தை மக்ரோனுக்கும் லு பென்னுக்கும் விட்டுக்கொடுத்தார்.
தற்போது ஆக்கிரமிப்புகளில் ஈடுபட்டுள்ள அல்லது அதற்கு அனுதாபம் கொண்ட மாணவர்கள் தங்கள் போராட்டத்தை இன்னும் விரிவுபடுத்த வேண்டும். பிரான்ஸ் மற்றும் சர்வதேச அளவிலான தொழிலாளர்களும் இளைஞர்களும், விரைவான பணவீக்கத்தின் காரணமாக, போர், தொற்றுநோய் மற்றும் மோசமான வறுமை போன்ற பிரச்சினைகளை எதிர்கொள்கின்றனர். இந்நிலையில், முக்கியமான பிரச்சினை என்னவென்றால், இளைஞர்கள் தொழிலாள வர்க்கத்தின் பரந்த பிரிவுகளை நோக்கித் திரும்பி, தேர்தல்களில் முன்வைக்கப்படும் அழுகிப்போன தேர்வுக்கு எதிராக தொழிலாளர்களை அணிதிரட்ட அவர்கள் போராடுவதாகும்.