முன்னோக்கு

பணவீக்கத்தை எதிர்த்துப் போராடுவதற்கான ஒரு தொழிலாள வர்க்க வேலைத்திட்டம்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

உணவு, எரிபொருள், இருப்பிடம் மற்றும் பிற அடிப்படைத் தேவைகளின் கூர்மையான விலை உயர்வானது, அமெரிக்காவிலும் மற்றும் உலகெங்கிலும் உள்ள தொழிலாளர்கள் மீது மிகப்பெரிய வரிச்சுமையை திணிக்கிறது, இது மில்லியன் கணக்கானவர்களை வறுமையில் ஆழ்த்த அச்சுறுத்துகிறது.

செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட அமெரிக்க தொழில்துறை புள்ளிவிபர அமைப்பின் (US Bureau of Labor Statistice) அறிக்கையின்படி, அமெரிக்காவில், மார்ச் 31 ஆம் தேதியுடன் முடிவடைந்த 12 மாதங்களில் நுகர்வோர் விலைகள் 8.5 சதவீதம் உயர்ந்துள்ளன. இது, 1981 ஆம் ஆண்டுக்குப் பின்னர் நுகர்வோர் விலைக் குறியீட்டில் நிகழ்ந்துள்ள மிகப்பெரிய அதிகரிப்பாகும்.

எரிபொருளின் விலை பாதிக்கு மேல் அதிகரித்துள்ளது. மில்லியன் கணக்கான மக்கள் வேலைக்காக 50 அல்லது அதற்கு அதிக மைல்கள் பயணிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ள நாட்டில் எரிவாயு விலை கடந்த மாதம் 18.3 சதவீதம் உயர்ந்துள்ளது. கடந்த 12 மாதங்களில், எரிவாயு விலைகள் 48 சதவீதம் உயர்ந்துள்ளது. கார் ஒன்றுக்கு எரிவாயு நிரப்புவதற்கான சராசரி செலவு மார்ச் 2021 இல் 51.48 டாலரில் இருந்து கடந்த மாதம் 76.14 டாலராக உயர்ந்துள்ளது, அதேவேளை ஒரு SUV அல்லது சரக்கு வண்டியின் (pickup truck) எரிவாயு கலனை நிரப்புவதற்கான செலவு 74.36 டாலரில் இருந்து 110 டாலராக அதிகரித்துள்ளது.

மற்ற எரிசக்தி பொருட்களின் விலைகளும் உயர்ந்துள்ளன. டீசல் எரிபொருளின் விலை 62 சதவீதம் வரை உயர்ந்துள்ளது; அதேபோல் வீட்டில் சூடுபடுத்தும் எண்ணெயின் விலை 58 சதவீதம்; இயற்கை எரிவாயுவின் விலை 21.6 சதவீதம்; மற்றும் மின்சாரத்தின் விலை 11.1 சதவீதம்; என்றளவிற்கு உயர்ந்துள்ளன.

லாஸ் ஏஞ்சல்ஸில், பெப்ரவரி 28, 2022 அன்று, ஒரு கேலன் எரிவாயுவின் விலை ஐந்து டாலர்களுக்கும் அதிகமாக நிர்ணயிக்கப்பட்டு விளம்பரப்படுத்தப்படுகின்றன. (AP Photo/Marcio Jose Sanchez)

மளிகைக் கடையில், பொருள் வாங்குபவர்கள் அதிக பணம் செலுத்தி, குறைவான பொருட்களையே தங்கள் கூடைகளில் வாங்கிச் செல்கின்றனர். உணவுப் பொருட்களின் விலை மார்ச் மாதத்தில் மேலும் 1.5 சதவீதம் உயர்ந்துள்ளது, அதாவது கடந்த ஆண்டை விட 10 சதவீதம் அதிகரித்துள்ளது. இறைச்சி, கோழி, மீன் மற்றும் முட்டைக்கான விலைக் குறியீடு கடந்த ஆண்டை விட 1.37 சதவீதம் அதிகரித்துள்ளது, மேலும் மாட்டிறைச்சியின் விலை 16 சதவீதமும், மற்றும் பால் மற்றும் அதனுடன் தொடர்புடைய பொருட்களின் விலைகள் 7 சதவீதமும் உயர்ந்துள்ளன. மேலும், வீட்டு வாடகை, மருத்துவச் செலவுகள், வாகன காப்பீடு மற்றும் இதர வாழ்க்கைச் செலவினங்களும் உயர்ந்துள்ளன.

“எரிவாயு மற்றும் உணவின் விலை தலைசுற்ற வைக்கிறது,” என டெட்ராய்ட்டின் ஒரு இளம் வாகனத் தொழிலாளி WSWS இடம் கூறினார். “நீங்கள் செய்யக்கூடியது வேலைக்குச் சென்று பின்னர் வீட்டிற்குத் திரும்புவதுதான்” என்று அவர் கூறினார், தனது தொழிற்சாலையில் பணிபுரியும் புதிய தொழிலாளர்கள் வாரச் சம்பளமாக 600 டாலரை மட்டுமே பெறுவதாகக் கூறினார். இதன் பொருள் அதிக விலைகள் என்பது —கடந்த மாதம், ஒரு தொழிலாளிக்கு கூடுதலாக 327 டாலர் அல்லது வருடத்திற்கு அண்ணளவாக 4,000 டாலர் செலவாகிறது என மதிப்பிடப்பட்டது— புதிய வாகனத் தொழிலாளர்களின் வருமானத்தில் ஒரு அதிர்ச்சியூட்டும் 14 சதவிகிதக் குறைப்புக்கு சமமானதாகும்.

உக்ரேன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பால் அதிகரித்து வரும் பணவீக்கத்தை ஜனாதிபதி பைடென் குற்றம் சாட்டினார், அதை ‘புட்டினின் விலைவுயர்வு’ என்று அழைத்தார். ஆனால் போருக்கு நீண்ட காலத்திற்கு முன்பே விலைகள் அதிகரித்து வருகின்றன, மேலும் 95 சதவீத மக்கள் பைடெனின் கூற்றுக்களை நிராகரிப்பதாக கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன.

இந்த கடுமையான விலைவாசி உயர்வுக்கு, ஜனநாயக மற்றும் குடியரசுக் கட்சிகள் இரண்டும் பின்பற்றும் கொள்கைகளின் விளைவுதான் காரணமாகும், அதிலும் குறிப்பாக 2008 நிதிச் சரிவுக்குப் பின்னர், நிதிச் சந்தைகளுக்கு முட்டுக் கொடுப்பதற்கும், மற்றும் பெரும் பணக்காரர்களின் அதிர்ஷ்டத்தை அதிகரிப்பதற்கும் என பாரியளவு பணத்தை அது அச்சடிக்க வைத்தது. நியூயோர்க் பங்குச் சந்தையில் நிகழ்ந்த பங்கு மதிப்புகளின் பாரிய பணவீக்கம் —இது 2009 முதல் 300 சதவீதம் அதிகரித்துள்ளது— இப்போது பொருளாதாரம் முழுவதும் வெடித்து வருகிறது.

ரஷ்யாவிற்கு எதிரான அமெரிக்க-நேட்டோ பினாமிப் போர் மற்றும் மாஸ்கோவிற்கு எதிரான பொருளாதாரத் தடைகள் ஆகியவை உலகெங்கிலும் பணவீக்கம் மற்றும் உணவு மற்றும் எரிசக்தி பற்றாக்குறையை மேலும் கடுமையாகத் தூண்டியுள்ளன. பணக்காரர்களுக்கான பிணையெடுப்பு மற்றும் அவர்கள் இடைவிடாது அதிகரித்து வரும் பாரிய விலைமதிப்புள்ள போர் ஆகியவற்றிற்கான செலவினங்களை தொழிலாள வர்க்கத்தின் மீது சுமத்துவதில் ஆளும் வர்க்கம் உறுதியாக உள்ளது.

வாழ்க்கைத் தரத்தைப் பாதுகாக்க தொழிலாள வர்க்கத்தின் அவசர நடவடிக்கை தேவை. அதற்கு சோசலிச சமத்துவக் கட்சி, தொழிலாளர்கள் ஒவ்வொரு பணியிடத்திலும் சுற்றுப்புறத்திலும் சாமானிய தொழிலாளர் பாதுகாப்புக் குழுக்கள் போன்ற தொழிலாள வர்க்கப் போராட்டத்திற்கான சுயாதீன அமைப்புக்களை உருவாக்க அவர்களுக்கு அழைப்பு விடுக்கிறது. இந்தக் குழுக்கள் பின்வரும் அவசரகால கோரிக்கைகளை வென்றெடுப்பதற்கு வேலைநிறுத்தங்கள், பாரிய ஆர்ப்பாட்டங்கள் மற்றும் பிற வர்க்க நடவடிக்கைகளை ஏற்பாடு செய்ய வேண்டும்:

  • கடந்த ஐந்து ஆண்டுகளாக சரிந்து வரும் உண்மையான வருமானத்தை ஈடுகட்டும் வகையில் அடிப்படை மணிநேர ஊதியத்தை 40 சதவீதம் உயர்த்த வேண்டும். மூன்றில் இரண்டு பகுதி அமெரிக்கத் தொழிலாளர்கள் ஊதியத்தை மட்டுமே நம்பி வாழ்கின்றனர். 1979 ஆம் ஆண்டில் இருந்து சராசரியாக 0.7 சதவீத வருடாந்திர உண்மையான ஊதிய உயர்வுடன், நான்கு தசாப்தங்களுக்கும் மேலாக தேக்கநிலையில் உள்ள உண்மையான வருமானத்தால் தொழிலாளர்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
  • அனைத்து ஊதியங்களையும் தற்போதைய பணவீக்க மட்டத்திற்கு ஏற்ப உடனடியாகக் குறியிட வேண்டும் மற்றும் அதிகரித்து வரும் செலவினங்களை ஈடுசெய்ய தானியங்கி மாதாந்திர வாழ்க்கைச் செலவின சரிகட்டுதல் (Cost-of-Living Adjustment - COLA) இயந்திரத்தை அறிமுகப்படுத்த வேண்டும். உண்மையான சராசரி மணிநேர வருவாய் மார்ச் 2021 முதல் மார்ச் 2022 வரையிலான காலகட்டத்தில் மேலும் 2.7 சதவிகிதம் குறைந்துள்ளது. தொழிலாளர்களின் தொடர்ச்சியான உச்சபட்ச தேவையின் காரணமாக, இந்த ஆண்டு எதிர்பார்க்கப்படும் 3.4 சதவிகித ஊதிய உயர்வானது, அமெரிக்க பெடரல் வங்கி வட்டி விகிதங்களை உயர்த்துவதற்கும், ‘ஊதிய பணவீக்கத்தை’ முறியடிக்க பாரிய வேலையின்மையை பயன்படுத்துவதற்கும் அழைப்பு விடுக்க வழிவகுத்துள்ளது.
  • பணவீக்கத்திற்கு ஏற்ப அனைத்து முதலாளிகள் செலுத்தும் மருத்துவ மற்றும் ஓய்வூதிய நலன்களை அதிகரிக்க வேண்டும். உயர்ந்து வரும் சுகாதாரச் செலவுகளும் உண்மையான ஊதியங்கள் குறைவதற்கான மற்றொரு முக்கிய காரணியாகும். ஒரு உதாரணத்தை மேற்கோள் காட்டுவதானால், கலிஃபோர்னியாவில் வேலைநிறுத்தம் செய்யும் செவ்ரோன் எண்ணெய் தொழிலாளர்கள் கடந்த ஆண்டு கூடுதல் 23 சதவீத மருத்துவச் செலவுகளை எதிர்கொண்டனர், மேலும் ஓய்வு பெற்றவர்கள் வழமையாக உணவு அல்லது மருந்துகளுக்கு எதற்கு செலவு செய்ய வேண்டும் என்று தேர்வு செய்கிறார்கள்.
  • ஓய்வுபெற்ற தொழிலாளர்கள் மற்றும் அவர்களின் வாழ்க்கைத் துணைவர்களைப் பாதுகாக்க, அரசு நிதியுதவி பெறும் மருத்துவ உதவி, மருத்துவப் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு நலன்கள் ஆகியவற்றை உயர்த்த வேண்டும்.வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல் சமீபத்தில், பைடெனும் நேட்டோ நாடுகளின் தலைவர்களும் துப்பாக்கிகளுக்கு அதிகமாகவும் உணவுக்கு குறைவாகவும் பணத்தைச் செலவிட வேண்டும் என்று கோரியது, குறிப்பாக, முதியோருக்கான அரசாங்கத் திட்டங்களில் ஆழமான வெட்டுக்களைத் திணிக்க அழைப்பு விடுத்தது.
  • எரிசக்தி ஏகபோக நிறுவனங்கள் விலைவாசியை உயர்த்துவதை நிறுத்திவிட்டு, நவம்பர் 2020 இன் விலை மட்டமான கேலனுக்கு 1.5 டாலர் அளவிற்கு விலையை மீண்டும் குறைக்க வேண்டும். Chevron, ExxonMobil, Marathon மற்றும் பிற இராட்சத எண்ணெய் நிறுவனங்களும், 2021 இல் 205 பில்லியன் டாலர் அளவிற்கு இலாபம் ஈட்டியுள்ளன, மேலும் போர் நெருக்கடி மற்றும் உலக சந்தையில் இருந்து ரஷ்ய எண்ணெய் மற்றும் எரிவாயு விற்பனையை அகற்றுவதற்கான நகர்வுகள் காரணமாக அவை இன்னும் அதிக இலாபத்தை ஈட்டுகின்றன.

இந்த நடவடிக்கைகளை நனவாக்க முதலாளித்துவ ஆளும் உயரடுக்கின் செல்வத்தின் மீதான ஒரு முன்னணித் தாக்குதல் தேவைப்படுகிறது. பெருநிறுவன மற்றும் நிதிய தன்னலக்குழுவின் பரந்த செழுமையடைதலின் மறுபக்கமாக ஏராளமான தொழிலாளர்களின் வறிய நிலை உள்ளது.

கடந்த வாரம் வெளியிடப்பட்ட ஃபோர்ப்ஸின் 36 வது ‘பில்லியனர்கள் பட்டியல்’, உலகின் 2,668 பெரும் பணக்காரர்கள் தற்போது 12.7 டிரில்லியன் டாலர் மதிப்புடையவர்கள் என்பதைக் காட்டுகிறது, இது மார்ச் 2020 இல் இருந்து 58 சதவீத அதிகரிப்பாகும். குறிப்பாக, எலோன் மஸ்க், ஜெஃப் பெசோஸ், பில் கேட்ஸ், வாரன் பஃபெட் மற்றும் அவர்களின் சக அமெரிக்க பில்லியனர்கள், தொற்றுநோய் தொடங்கியதிலிருந்து தங்களது நிகர சொத்து மதிப்பை 62 சதவிகிதம் அதிகரித்துள்ளனர்.

பணக்காரர்களின் வரிசுமையை அதிகரிக்கும் அதேவேளை பெரும்பான்மை மக்களுக்கான வரிகளை குறைக்கக்கூடிய ஒரு முற்போக்கான வருமான வரி நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். அமெரிக்காவின் பில்லியனர்களின் பிரம்மாண்ட சொத்துக்கள் தொழிலாளர்களின் ஊதியங்களின் கூர்மையான அதிகரிப்புக்கு நிதியளிப்பதற்காகவும், மற்றும் பொதுக் கல்வி, சுகாதாரம் மற்றும் தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களை கோவிட்-19 நோயிலிருந்து பாதுகாப்பது உட்பட, முக்கிய சமூகத் திட்டங்களுக்கு நிதியளிப்பதற்காகவும் அபகரிக்கப்பட வேண்டும்.

தொழிலாள வர்க்கத்தின் மத்தியிலான ஒரு எதிர்த்தாக்குதல் வளர்ச்சியானது மூன்று அடிப்படை பிரச்சினைகளை எழுப்புகிறது.

முதலாவதாக, பெரு வணிகத்தின் ஆணைகளை திணிக்க ஒரு தொழிலாளர் போலிஸ் படையாக செயல்படும் பெருநிறுவன சார்பு தொழிற்சங்கங்களில் இருந்து தொழிலாளர்கள் முற்றிலும் சுயாதீனமாக இருக்க வேண்டும். இதற்குத் தொழிலாள வர்க்கத்தின் அனைத்துப் பிரிவுகளையும் ஒரு பொதுவான போராட்டத்தில் ஐக்கியப்படுத்தும் சாமானிய தொழிலாளர்கள் பாதுகாப்புக் குழுக்கள் உருவாக்கப்பட வேண்டும்.

கடந்த இரண்டு ஆண்டுகளில், AFL-CIO அதிகாரத்துவமானது, வொல்வோ ட்ரக்ஸ், டானா, ஜோன் டீரே, கைசர் பெர்மனென்ட், திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி தயாரிப்புகள், எண்ணெய் தொழில், பள்ளி மாவட்டங்கள் மற்றும் ஏராளமான பிற பணியிடங்களில் நான்கு மற்றும் ஐந்தாண்டுக்கான தொழிலாளர் ஒப்பந்தங்களை திணித்தது, இதில் 2-3 சதவீத வருடாந்திர ஊதிய உயர்வுகள் அடங்கும், இது தொழிலாளர்களை பணவீக்கத்தின் அழிவுகளை எதிர்கொள்ள வைக்கும் என்பது நன்கு அறியப்பட்டதே. உண்மையில், தொழிற்சங்கத் தொழிலாளர்கள் 2.6 சதவீத அளவிற்கே சராசரி ஆண்டு ஊதிய உயர்வைப் பெற்றனர், அதாவது தொழிற்சங்கத்தில் சேராத தொழிலாளர்கள் பெற்ற 3.1 சதவீத ஊதிய உயர்வை விட அது குறைவானதாகும்.

இரண்டாவதாக, அதே நிலைமைகள் மற்றும் அதே முதலாளித்துவ நெருக்கடியை எதிர்கொள்ளும் உலகெங்கிலும் உள்ள தொழிலாளர்களை ஐக்கியப்படுத்தும் ஒரு சர்வதேச இயக்கமாக அது வளர்த்தெடுக்கப்பட வேண்டும். இங்கிலாந்தில், தற்போது 6.7 சதவீதமாக இருக்கும் பணவீக்கம், இந்த ஆண்டின் இறுதிக்குள் கிட்டத்தட்ட 9 சதவீதத்தை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது, மேலும் அரசாங்க முன்னறிவிப்பாளர்கள் வாழ்க்கைத் தரம் 1950 களுக்குப் பின்னரான மிகப்பெரிய வீழ்ச்சியைக் காணும் என்று முன்கணித்துள்ளனர். விலைவாசி உயர்வு மற்றும் உணவு மற்றும் எரிசக்தி தட்டுப்பாடானது, இலங்கை, இந்தியா மற்றும் கிரீஸ் முதல், லெபனான், துனிசியா மற்றும் பெரு வரை பாரிய ஆர்ப்பாட்டங்கள் மற்றும் வேலைநிறுத்தங்களின் அலையைத் தூண்டியுள்ளது.

கடந்த ஆண்டு, நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு (ICFI), பெருநிறுவன கட்டுப்பாட்டிற்குட்பட்ட தொழிற்சங்கங்களில் இருந்து சுயாதீனமாக, தொற்றுநோய் மற்றும் அதற்கு தொழிலாளர்களின் உயிர்கள் தியாகம் செய்யப்படுவதற்கு எதிராக சர்வதேச அளவில் தொழிலாளர்களை ஒன்றிணைக்க, சாமானிய தொழிலாளர் குழுக்களின் சர்வதேச தொழிலாளர் கூட்டணியை (International Workers Alliance of Rank-and-File Committees-IWA-RFC) கட்டமைக்கத் தொடங்கியுள்ளது.

மூன்றாவதாக, தொழிலாளர்களின் போராட்டங்களின் தர்க்கம், பைடென் நிர்வாகம், இரு பெருவணிகக் கட்சிகள் மற்றும் உலகில் உள்ள ஒவ்வொரு முதலாளித்துவ அரசாங்கத்திற்கும் எதிரான தொழிலாள வர்க்கத்தின் அரசியல் தாக்குதலின் அவசியத்தை எழுப்புகிறது. பாரிய வறுமை, கோவிட்-19 நோயால் விளைந்த பாரிய மரணம் மற்றும் மூன்றாம் உலகப் போரின் அதிகரித்து வரும் ஆபத்து ஆகிய அனைத்தும், சமூகத் தேவையை தனியார் இலாபத்திற்கும் ஆளும் வர்க்கத்தின் செல்வ குவிப்புக்கும் கீழ்ப்படுத்திய முதலாளித்துவ அமைப்பின் தயாரிப்புகள் ஆகும்.

அதனால்தான் இன்று வாழ்க்கைத் தரங்களை பாதுகாப்பதற்கான போராட்டம் ஒரு அரசியல் ரீதியான போராட்டமாக மாறியுள்ளது, இதை தொழிலாளர்களின் அதிகாரத்தை ஸ்தாபித்து, உலகப் பொருளாதாரத்தை சோசலிச மறுசீரமைப்பு செய்வதன் மூலம் மட்டுமே தீர்க்க முடியும்.

இந்த போராட்டத்திற்கு தேவையான தலைமையை கட்டியெழுப்ப, சர்வதேச மே தின இணையவழி பேரணியில் கலந்து கொள்ளுமாறும், சோசலிச சமத்துவக் கட்சியில் சேருமாறும் தொழிலாளர்களை நாங்கள் கேட்டுக் கொள்கிறோம்.

Loading