மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்
உக்ரேனிய ஜனாதிபதி வொலோடிமிர் செலென்ஸ்கி வியாழக்கிழமை காணொளி இணைப்பு மூலம் ஜேர்மன் நாடாளுமன்ற கீழ் அவையில் (Bundestag) உரையாற்றினார். அவர் பேச்சு ஜேர்மன் வரலாற்றின் மிக மோசமான மரபுகளுக்கு ஒரு முறையீடாக இருந்தது.
சோவியத் ஒன்றியத்திற்கு எதிரான ஜேர்மன் நிர்மூலமாக்கல் போர் அங்கே வசித்தவர்களில் 27 மில்லியன் பேர் உயிர்களைப் பலிகொண்ட நிலையில், அது நடந்து 80 ஆண்டுகளுக்குப் பின்னர், அவர் ரஷ்யாவுக்கு எதிராக ஜேர்மனி போதுமானளவுக்கு ஆக்ரோஷமாக செயல்படவில்லை என்று குற்றஞ்சாட்டினார், அங்கே ஹிட்லர் இராணுவப் படை வேர்மாக்டின் (Wehrmacht) பயங்கரம் பற்றிய நினைவுகள் இன்னும் நிறைந்துள்ளன.
நோர்ட் ஸ்ட்ரீம் 2 (Nord Stream 2) பால்டிக் கடல்வழி எரிவாயு குழாய் இணைப்பு திட்டத்தில் நீண்டகாலமாக ஒட்டிக் கொண்டிருந்ததன் மூலம், ரஷ்யாவுக்கு எதிரான தடையாணைகள் விதிக்க மறுப்பதன் மூலம் மற்றும் உக்ரேனை நேட்டோவில் இணைக்க அனுமதிக்க மறுத்ததன் மூலம், ஜேர்மனி அவரது நாட்டைத் தனிமைப்படுத்தி ரஷ்யாவின் கரங்களில் ஒப்படைக்க உதவியதாக செலென்ஸ்கி அங்கே கூடியிருந்த நாடாளுமன்ற உறுப்பினர்களைக் குற்றஞ்சாட்டினார், அவர்களுக்கு 'பலமோ' “தலைமையோ' இல்லை என்றவர் தெரிவித்தார்.
அவர் பேச்சைக் கேட்டுக் கொண்டிருப்பவர்கள் ஒரு சுவருக்குப் பின்னால் —'சுதந்திரம் மற்றும் சுதந்திரமின்மைக்கு இடையே ஐரோப்பாவுக்கு மத்தியில் உள்ள சுவருக்கு' பின்னால்— ஒளிந்து கொண்டிருப்பதாக குற்றஞ்சாட்டி, அவர் பனிப்போர் காலத்திய கம்யூனிச எதிர்ப்பைக் கையிலெடுத்தார். பேர்லின் சுவருக்கு முன்னால் 'இந்த சுவரை இடித்துத் தள்ளுங்கள்' என்று சத்தமிட்ட அமெரிக்க ஜனாதிபதி ரொனால்ட் ரீகனை அவர் மேற்கோள் காட்டினார். “இந்த சுவரை இடியுங்கள். ஜேர்மனிக்குத் தகுதியான தலைமையைக் கொடுங்கள்,” என்றவர் சான்சிலர் ஓலஃப் ஷோல்சி ற்கு அழைப்பு விடுத்தார்.
ரஷ்யா மீது முழுமையாக வர்த்தகத் தடை விதிக்குமாறு கோரிய செலென்ஸ்கி, மூன்றாம் உலகப் போர் அபாயத்தை அர்த்தப்படுத்தினாலும் கூட, போர் முயற்சியில் இன்னும் நேரடியான நேட்டோ ஈடுபாட்டைக் கோரினார்.
இதற்கு முந்தைய நாள், அவர் ஏற்கனவே அமெரிக்க காங்கிரஸ் சபைக்கு ஆற்றிய ஒரு காணொளி உரையில் உக்ரைன் மீது விமானங்கள் பறக்க தடை விதிக்கப்பட்ட மண்டலத்தை நிறுவ வேண்டும் என்று கோரி இருந்தார். இந்தக் கோரிக்கையை அவர் ஜேர்மன் நாடாளுமன்ற அவையில் மீண்டும் முன்வைத்தார். உக்ரைன் வான் பரப்பை பாதுகாப்பானதாக ஆக்கவும், ரஷ்ய வான் தாக்குதல்களைத் தடுக்கவும் ஜேர்மனி உதவ வேண்டும் என்றார்.
விமானம் பறக்க தடை விதிக்கப்பட்ட மண்டலம் அமைப்பது உத்தியோகபூர்வமாக நேட்டோ போருக்குள் நுழைவதற்கு சமமாக இருக்கும் என்பதை இராணுவ வல்லுனர்களே ஒப்புக் கொள்கிறார்கள். ஜேர்மன் இராணுவப் படையின் முன்னாள் இன்ஸ்பெக்டர் ஜெனரலும் நேட்டோ இராணுவக் கமிட்டியின் தலைவருமான ஹரால்ட் குஜாட் இந்தக் கோரிக்கையைப் பொறுப்பற்றதென கூறினார்.
'விமானம் பறக்கத் தடை விதிக்கப்பட்ட மண்டலங்கள் அமைப்பதற்கு ஐ.நா. ஆணை இருக்க வேண்டும் என்பதில்லை என்ற உண்மைக்கு அப்பாற்பட்டு, விமானம் பறக்கத் தடை விதிக்கப்பட்ட மண்டலம் அமைப்பது ரஷ்யா மீது ஒரு போர் பிரகடனத்திற்கு நிகரானது,” என்றார். “நேட்டோ போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்படாமல் இருக்க, ரஷ்யாவின் வான் பாதுகாப்பு அமைப்புகள் முதலில் அகற்றப்பட வேண்டும். இது வெற்றி அடைந்தாலும் கூட, விமானப் போர்கள் தொடரும். நேட்டோவும் ரஷ்யாவும் ஒன்றுக்கொன்று போரில் ஈடுபட்டு அணு ஆயுதப் போரின் விளிம்பில் இருக்கும்.”
இருப்பினும் இந்த கோரிக்கை அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் ஆதரவைப் பெற்று வருகிறது.
ஜேர்மன் நாடாளுமன்றத்தில், செலென்ஸ்கி நாஜி பயங்கரங்களை நியாயப்படுத்த அதனால் பாதிக்கப்பட்டவர்களைச் சாதகமாக்கிக் கொள்ளவும் கூட வெட்கப்படவில்லை. 'இரண்டாம் உலகப் போரில் உயிர் பிழைத்த பலர், 80 ஆண்டுகளுக்கு முன்னர் அந்த ஆக்கிரமிப்பின் போது தங்களைக் காப்பாற்றிக் கொண்ட, வயதான உக்ரேனியர்கள் சார்பாக நான் பேசுகிறேன். சொல்லப் போனால், இவர்கள் Babi Yar தாக்குதலில் உயிர் பிழைத்தவர்கள்,” என்றவர் தெரிவித்தார்.
செப்டம்பர் 29 மற்றும் 30, 1941 இல் Babi Yar மலையிடுக்கில், ஹிட்லர் இராணுவம்—ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட—கியேவின் 34,000 யூதர்களை 36 மணி நேரத்தில் சுட்டுக் கொன்றது. காயமடைந்தவர்கள் தங்களைத் தாங்களே கொன்று சாவதற்கு முன்னர் அவர்கள் ஏற்கனவே கொல்லப்பட்டவர்களின் சடலங்களின் வயிற்றில் மண்டியிட்டு இருக்க வைக்கப்பட்டார்கள். கிழக்கில் ஜேர்மன் குடியேற்றவாசிகளுக்கான 'வாழ்விடத்தை' (Lebensraum) உருவாக்கும் ஒரு மூலோபாயத்தின் பாகமாக இருந்தது. இது மில்லியன்கணக்கான யூதர்கள், கம்யூனிஸ்டுகள் மற்றும் செம்படையின் சிப்பாய்களை நாஜிக்கள் திட்டமிட்டு கொலை செய்வதற்கு வெள்ளோட்டமாக இருந்தது.
உடனடியாக ஒரு போர்நிறுத்தத்திற்காக செயல்படுமாறு ஜேர்மன் அரசாங்கத்தைக் கோர செலென்ஸ்கி மனிதகுலத்திற்கு எதிரான இத்தகைய குற்றங்களை நினைவுகூர்ந்திருந்தால், அது ஏற்றுக் கொள்ளக்கூடியதாக இருந்திருக்கும். அதற்கு பதிலாக, எரியும் நெருப்பில் எண்ணெயை ஊற்றி “தலைமையை” காட்டுமாறு அவர் கேட்டுக் கொள்கிறார்.
ஜேர்மன் நாடாளுமன்றம் அவருக்கு எழுந்து நின்று கைத்தட்டி நன்றி கூறியது. இடது கட்சி முதல் எண்ணற்ற நவ-நாஜிக்கள் தென்படும் அதிவலது கட்சியான ஜேர்மனிக்கான மாற்றீடு (AfD) வரை, எல்லா நாடாளுமன்ற பிரதிநிதிகளும் எழுந்து நின்றனர். ஆயிரம் ஆண்டுகால புகழ்மிக்க ஜேர்மன் வரலாற்றில் ஹிட்லரும் நாஜிகளும் 'பறவை எச்சில்' (bird shit) போன்ற களங்கம் என்று கூறும் நீண்ட கால AfD தலைவர் அலெக்சாண்டர் கௌலாண்ட் கூட பாராட்டினார்.
ஜேர்மனியின் ஆளும் உயரடுக்குகளைப் பொறுத்த வரையில், அவர்கள் நீண்ட காலமாக தயாரித்து வரும் மீள்ஆயுதமயப்படல் மற்றும் வல்லரசு திட்டங்களைக் கைவரப் பெற ஒரு வரவேற்கத்தக்க சந்தர்ப்பமாக சேவையாற்றுகிறது. பெப்ரவரி 2014 இல், அப்போதைய வெளியுறவுத்துறை அமைச்சரும் இப்போதைய ஜேர்மன் ஜனாதிபதியுமான ஃபிராங்க்-வால்டர் ஸ்ரைன்மையர், தற்போதைய இந்த போருக்கு விதைகளை விதைத்த வலதுசாரி ஆட்சிக் கவிழ்ப்பு சதியில் நேரடியாக சம்பந்தப்பட்டிருந்தார். அவர் கியேவில் அதிவலது ஸ்வோபோடா கட்சியின் தலைவரான ஓலேஹ் தியாஹ்னெபொக்கைச் சந்தித்தார். அதே மாதம், ஜேர்மன் அரசாங்கம் 'இராணுவக் கட்டுப்பாடு முடிவுக்குக் கொண்டு வரப்படுவதாக' அறிவித்ததுடன், ஜேர்மனியின் பொருளாதார பலத்திற்கு ஏற்றவாறு உலக அரசியலில் மீண்டும் ஒரு பாத்திரத்தை வகிக்கும் அதன் நோக்கத்தை அறிவித்தது.
இந்த இராணுவவாதத்திற்கு திரும்பியமை ஜேர்மன் வரலாற்றைத் திருத்தி எழுதுவதுடன் சேர்ந்திருந்தது. 'குற்றம் பற்றிய கேள்வி இன்று வரலாற்றாசிரியர்களை பிளவுபடுத்துகிறது' என்ற கட்டுரையை Der Spiegel வெளியிட்டது. அதில் ஹம்போல்ட் பல்கலைக்கழகத்தின் வரலாற்றாசிரியர் ஜோர்க் பார்பெரோவ்ஸ்கி, ஹிட்லர் 'கொடுமையாக இருக்கவில்லை' என்று சான்றளித்தார். மேலும் நாசிசத்தைப் போல்ஷிவிசத்திற்கு எதிரான புரிந்து கொள்ளத்தக்க எதிர்வினை என்று விவரித்துள்ள நாஜி அனுதாபி எர்ன்ஸ்ட் நோல்டெ ஐ பாதுகாத்தார்.
'ஜேர்மன் இராணுவவாதத்திற்குப் புத்துயிரூட்ட நாஜி காலத்திய குற்றங்களைக் குறைத்துக் காட்டும் ஒரு புதிய வரலாற்றுப் பொருள்விளக்கம் தேவைப்படுகிறது,” என்று ஜேர்மன் சோசலிச சமத்துவக் கட்சி (Sozialistische Gleichheitspartei - SGP) மற்றும் அதன் இளைஞர் அமைப்பான IYSSE அப்போதே எழுதியது. அவை இத்தகைய அறிக்கைகளையும் மற்றும் பார்பெரோவ்ஸ்கியின் இதுபோன்ற அறிக்கைகளையும் விமர்சித்து, ஜேர்மன் இராணுவவாதம் மற்றும் பாசிசத்தை நோக்கி திரும்புவதை எதிர்த்ததால், அப்பல்கலைக்கழக நிர்வாகமும், ஊடகங்களும் மற்றும் எல்லா கட்சிகளும் அவற்றைக் கடுமையாக தாக்கியதுடன், அரசியலமைப்பு பாதுகாப்பு அலுவலகம் இந்த அமைப்புகளை 'அரசியலமைப்புக்கு விரோதமான' அமைப்புகள் பட்டியலில் நிறுத்தியது.
ஜேர்மனியை அதன் இராணுவ மரபுகளுக்குத் திரும்பி 'முன்னணிப் பாத்திரம்' வகிக்குமாறும் செலென்ஸ்கி இப்போது அழைப்பு விடுக்கிறார் என்றால், இது ஒரு தவறான புரிதல் அல்ல. இரண்டாம் உலகப் போரில் ஹிட்லரின் இராணுவத்திற்கு ஒத்துழைத்த மற்றும் அதன் வெகுஜன கொலைகளில் பங்குபற்றிய ஸ்டீபன் பண்டேரா போன்ற உக்ரேனிய தேசியவாதிகள், உக்ரேனில் மிகவும் மதிக்கப்படுகிறார்கள். அவர்கள் நினைவுச்சின்னங்கள் மற்றும் நினைவுவிழாக்கள் மூலம் பகிரங்கமாக கௌரவிக்கப்படுகிறார்கள்.
செலென்ஸ்கி உரையின் போது ஜேர்மன் நாடாளுமன்றத்தின் பொது மாடத்தில் அமர்ந்திருந்த உக்ரேனிய தூதர் Andriy Melnyk, இதற்கு ஒரு நாள் முன்னதாக தான், வலதுசாரி தீவிரவாதிகளை உள்ளடக்கி மற்றும் அதன் சீருடையில் நாஜி சின்னங்களை அணிந்துள்ள அசோவ் படைப்பிரிவைப் (Azov Batallion) பகிரங்கமாக பாதுகாத்தார். 'தயவு செய்து அசோவ் படைப்பிரிவை பூதாகரமாக சித்தரிப்பதை நிறுத்துங்கள், அது பிரச்சாரத்திற்குச் சாதகமாகி விடுகிறது — இப்போது அது ரஷ்யாவின் நிர்மூலமாக்கல் போரின் மத்தியிலும் உள்ளது' என்றவர் ட்விட்டரில் எழுதினார். 'இந்த துணிச்சலான போராளிகள் அவர்களின் தாயகத்தை, குறிப்பாக முற்றுகையிடப்பட்ட மரியுபோல் நகரத்தைப் பாதுகாக்கிறார்கள். அவர்களை விட்டு விடுங்கள்,” என்றார்.
மெலினிஸ்கியின் எதிர்ப்பு டைம்ஸ் இதழின் ஒரு கட்டுரைக்கு எதிராக திரும்பி இருந்தது, அது அந்த அதிவலது துருப்புகளை 'சிறிய ரக கையேந்தி டாங்கி தகர்ப்பு ஆயுதம் (bazookas) மற்றும் துப்பாக்கிகளைக் கொண்டிருக்கும், போர்ப்படை அனுபவமுள்ள இராணுவரீதியில் பயிற்றுவிக்கப்பட்ட நவ-நாஜிக்கள்,” இவர்கள் இந்த மோதல் முடிந்ததும் 'ஜனநாயகரீதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு ஜனாதிபதியை மீண்டும் சர்வசாதாரணமாக சரணடைய விட வாய்ப்பில்லை,” என்று விவரித்தது.
பாசிச குழுக்களுக்கு கியேவ் அரசாங்கம் உதவுவது ரஷ்யாவின் பிற்போக்குத்தனமான இராணுவ தாக்குதலை நியாயப்படுத்தி விடாது. ஆனால் இந்த போர், ஜனநாயகம் மற்றும் சுதந்திரம் பற்றியது என்ற பொய்யை இது அம்பலப்படுத்துகிறது, மேலும் போருக்கும் உக்ரேனிய மக்களின் துன்பங்களுக்கும் முக்கிய பொறுப்பு நேட்டோ சக்திகளே என்பதைக் காட்டுகிறது.
1991 இல் சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்டதில் இருந்து, இந்த சக்திகள் ரஷ்யாவை ஒரு புவிசார் மூலோபாய போட்டியாளர் என்பதிலிருந்து நீக்கி, அதன் பாரிய மூலப் பொருட்கள் மற்றும் நிலத்தைக் கைப்பற்றும் இலக்கைப் பின்பற்றின. அவற்றின் நிலைப்பாட்டை பாதுகாக்க, அவை யூகோஸ்லாவியா, ஆப்கானிஸ்தான், ஈராக், லிபியா மற்றும் சிரியாவில் சர்வதேச சட்டத்தை மீறி போர்களை நடத்தின மற்றும் நேட்டோவை இன்னும் கூடுதலாக கிழக்கு நோக்கி விரிவுபடுத்தின.
ரஷ்யாவுடன் பொருளாதார ரீதியாகவும் கலாச்சார ரீதியாகவும் நெருக்கமாக இணைந்துள்ள உக்ரைனில், அவை வேண்டுமென்றே வலதுசாரி தேசியவாதிகளையும் நவ நாஜிக்களையும் ஊக்குவித்தன. 2014 இல் அவை ஆதரித்து ஊக்குவித்த வலதுசாரி ஆட்சிக் கவிழ்ப்பு சதிக்குப் பின்னர், அவை திட்டமிட்டு அந்நாட்டை மீள்ஆயுதமயப்படுத்தியதுடன், பில்லியன் கணக்கான மதிப்புள்ள ஆயுதங்களை அங்கே குவித்து, அதன் ஆயுதப்படைக்கும் பயிற்சி அளித்தன.
தற்போதைய மோதல் ரஷ்யாவுக்கும் நேட்டோவுக்கும் இடையிலான ஒரு பினாமி போராகும், இது உக்ரேனிய மக்களின் முதுகுக்குப் பின்னால் சண்டையிடப்பட்டு வருகிறது, நேட்டோ இதற்கு நிதி வழங்குகிறது. புதிதாக தாக்கல் செய்யப்பட்ட அமெரிக்க வரவு செலவு திட்டக்கணக்கில், உக்ரைனுக்கு 14 பில்லியன் டாலர்கள் ஒதுக்கப்பட்டுள்ளது, இது அதன் சொந்த இராணுவ வரவுசெலவு திட்டக்கணக்கை விட இரண்டு மடங்கு அதிகமாகும். போர் தொடங்கியதற்குப் பின்னர், இதில் 550 மில்லியன் டாலர்கள் இப்போது செலவிடப்பட்டுள்ளது, ஜனாதிபதி பைடென் ஏற்கனவே கூடுதலாக 800 மில்லியன் டாலர்களை விடுவித்துள்ளார். ஏனைய நேட்டோ உறுப்பு நாடுகளும் அந்நாட்டுக்கு இராணுவ உதவி மற்றும் ஆயுதங்களைப் பாய்ச்சி வருகின்றன.
ஜேர்மன் அரசாங்கத்தைப் பொறுத்தவரை, ஹிட்லருக்குப் பின்னர் மிகப்பெரிய ஆயுத முனைவைத் தொடங்க ஒரு வரவேற்கத்தக்க வாய்ப்பாக அதற்கு இந்தப் போர் சேவையாற்றுகிறது. இந்த போர், கட்டுப்பாட்டை மீறி மூன்றாம் உலகப் போருக்கு வழிவகுக்கும் என்ற ஆபத்து நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. முதலாளித்துவத்திற்கு எதிரான போராட்டத்தில் அனைத்து நாடுகளின் தொழிலாளர்களையும் ஒருங்கிணைத்த, தொழிலாள வர்க்கத் தாக்குதலால் மட்டுமே இதை நிறுத்த முடியும்.