முன்னோக்கு

நேட்டோவிற்கும் ரஷ்யாவிற்கும் இடையிலான மோதல் கட்டுப்பாட்டை மீறிச் செல்கிறது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

ரஷ்யாவிற்கும் உக்ரேனுக்கும் இடையேயான போர், இப்போது மூன்றாவது வாரத்தில், வேகமாகவும் அபாயகரமாகவும் கட்டுப்பாட்டை மீறிச் செல்கிறது. இரு தரப்பும் 'மூன்றாம் உலகப் போர்' மற்றும் அணு ஆயுதப் போருக்கு அச்சுறுத்துகின்றனர்.

போர்கள் எங்கு செல்கிறது என்பதை போரில் ஈடுபட்டுள்ளவர்கள் புரிந்து கொள்ளாமலேயே பெரும்பாலும் போர்கள் தொடங்கப்படுகின்றன என வரலாறு கற்பிக்கிறது. இப்போது, இரு தரப்பினரும் பெரும் இராணுவ இழப்புகளைச் சந்திக்கும் நிலைமைகளின் கீழ், மோதலின் இராணுவத் தர்க்கமானது ஒரு ஆபத்தான சொந்தப் பாதையை எடுக்கத் தொடங்குகிறது.

விளாடிமிர் புட்டினின் ரஷ்ய அரசாங்கம், உக்ரேனைப் போர்க்களமாகக் கொண்டு, பெயரைக் குறிப்பிடாது மற்ற எல்லாவற்றிலும் நேட்டோவிற்கு எதிராகப் போரை நடத்துவதைக் காண்கிறது. நேட்டோவையே நேரடியாக குறிவைப்பதன் மூலம் அது பதிலளிக்கிறது.

ஞாயிற்றுக்கிழமை, ஒரு ரஷ்ய ஏவுகணைத் தாக்குதல் நேட்டோ நட்பு நாடான போலந்தின் எல்லையில் இருந்து வெறும் 15 மைல் தொலைவில் ஒரு இராணுவப் பயிற்சித் தளத்தை தரைமட்டமாக்கியது. உக்ரேனியப் படைகளுக்குப் பயிற்சி அளிக்க நேட்டோ பணியாளர்களால் இந்த தளம் பயன்படுத்தப்பட்டதுடன் மற்றும் இதற்கு முன்பு சர்வதேச நேட்டோ பயிற்சிகளை நடத்தியது. அதே நாளில், தலைநகர் கியேவிற்கு வெளியே உள்ள இர்பின் நகரில் ஒரு அமெரிக்க பத்திரிகையாளர் பிரென்ட் ரெனாட் கொல்லப்பட்டதை அமெரிக்க வெளியுறவுத்துறை உறுதிப்படுத்தியது. கியேவின் பிராந்திய காவல்துறையின் தலைவர், ரெனாட் ரஷ்யப் படைகளால் சுட்டுக் கொல்லப்பட்டதாகக் கூறினார்.

மார்ச் 13, 2022, ஞாயிற்றுக்கிழமை, உக்ரேன், உக்ரேனின் புறநகரில், அதிகாலையில் வான்வழித் தாக்குதலால் அழிக்கப்பட்ட ஒரு பெரிய உணவுப் பொருட்கள் சேமிப்புக் கிடங்குக்குள் ஒரு குழாய் ஒன்றை உக்ரேனிய தீயணைப்பு வீரர் இழுத்துச் செல்கிறார் (AP Photo/Vadim Ghirda)

ரஷ்ய துணை வெளியுறவு மந்திரி சேர்ஜி ரியாப்கோவ் நேட்டோ ஆயுதத் தொடரணிகளை குறிவைக்கப்போவதாக அச்சுறுத்திய ஒரு நாளுக்குப் பின்னர் இந்த இராணுவத் தளத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. 'பல நாடுகளில் இருந்து அவர்களால் உக்ரேனுக்குள் ஆயுதங்களைக் பாய்ச்சுவது ஒரு அபாயகரமான நடவடிக்கை மட்டுமல்ல, இதனுடன் தொடர்புடைய தொடரணிகளை முறைப்படியான இலக்குகளாக மாற்றும் ஒரு நடவடிக்கையாகும் என அமெரிக்காவை நாங்கள் எச்சரித்ததாக' அவர் கூறினார்.

நேட்டோவின் இடைவிடாத விரிவாக்கத்தால் அச்சுறுத்தலுக்கு உள்ளான புட்டின் அரசாங்கம், ரஷ்யாவிற்கு எதிரான தாக்குதல் கூட்டணியில் உக்ரேனை வெளிப்படையாக இணைத்துக்கொள்வதை நிறுத்தும் பாதுகாப்பு உடன்படிக்கைக்கான பேச்சுவார்த்தைக்கு வாஷிங்டன் மீது இது அழுத்தத்தை கொண்டு வரலாம் என்று எதிர்பார்த்தது.

உக்ரேனின் நேட்டோ அல்லாத அந்தஸ்துக்கு உத்தரவாதம் அளிக்க பைடென் நிர்வாகத்தின் ஆத்திரமூட்டும் மறுப்பு மற்றும் கிழக்கு உக்ரேனில் பெரும்பான்மையான ரஷ்ய மொழி பேசும் மக்கள் மீது தாக்குதல்கள் அதிகரித்து வருவதை எதிர்கொண்ட புட்டின் தாக்குதலுக்கு உத்தரவிட்டார். புட்டினின் ஆட்சியானது நேட்டோ ஆதரவுடன் உக்ரேனின் போருக்கான தயாரிப்பின் அளவை தெளிவாகக் குறைத்து மதிப்பிட்டுள்ளது. மேலும் இப்படையெடுப்பு ஒரு பேரழிவுகரமான தவறான கணக்கீடு என நிரூபிக்கப்பட்டுள்ளது. கிரெம்ளின் இப்போது அதன் இராணுவ நடவடிக்கைகளின் அளவை அதிகரிப்பதன் மூலம் ஆரம்ப பின்னடைவுகளை ஈடுசெய்ய முயல்கிறது.

மோதல் உருவாகிக்கொண்டிருக்கும்போது, அமெரிக்காவும் நேட்டோவும் ரஷ்யாவிற்கு எதிரான பினாமிப் போரில் இன்னும் நேரடியாக தங்களை ஈடுபடுத்திக் கொள்கின்றன. ஏகாதிபத்திய சக்திகள், ரஷ்யாவிற்கும் நேட்டோவிற்கும் இடையே நேரடி மோதலைத் தூண்டாமல் போரைத் தொடர, உக்ரேன் உத்தியோகபூர்வமாக நேட்டோவின் ஒரு பகுதியாக இல்லை என்ற உண்மையைப் பயன்படுத்தி, ஆப்கானிஸ்தான் போன்ற ஒரு மோதலில் ரஷ்யாவை வீழ்த்தலாம் என்ற எண்ணத்துடன் மோதலை தூண்டின.

எவ்வாறாயினும், போர் வளர்ச்சியடைந்துள்ள நிலையில், நேட்டோ நேரடியாக ஈடுபடவில்லை என்ற புனைகதையை பராமரிக்க இயலாதுள்ளது. நேட்டோவின் பெரும்பாலான உறுப்பினர்கள் உட்பட 20 க்கும் மேற்பட்ட நாடுகள், ஏவுகணைகள், விமான எதிர்ப்பு கருவிகள், விமானங்கள், வாகனங்கள் மற்றும் பிற ஆயுதங்களை உக்ரேனுள் செலுத்தியுள்ளன. இரண்டு வாரங்களுக்குள் 350 மில்லியன் டாலர்களுக்கும் அதிகமான ஆயுதங்களை உக்ரேனுக்கு மாற்றிய அமெரிக்கா, வார இறுதியில் மேலும் 200 மில்லியன் டாலர்கள் பெறுமதியான இராணுவ உபகரணங்களை அனுப்ப அனுமதித்தது.

ரஷ்யாவிற்கு எதிராக 20,000 வெளிநாட்டு ஆயுத்தாரிகள் தம்முடன் இணைந்து போராடியுள்ளதாக உக்ரேன் தெரிவிக்கிறது. அதே நேரத்தில் 3,000 அமெரிக்கர்கள் உக்ரேனுக்கு தன்னார்வத்துடன் பயணிக்க முன்வந்துள்ளதாக Voice of America தெரிவித்துள்ளது.

ரஷ்ய தாக்குதலுக்குப் பதிலளிக்கும் விதமாக, அமெரிக்கா தனது ஏவுகணை பாதுகாப்பு கட்டமைப்புகளை மேலும் கிழக்கு நோக்கி மாற்றுவதாக கூறியது. போலந்தில் இரண்டு கூடுதல் Patriot ஏவுகணை உந்திகளை நிலைநிறுத்துவதாக பென்டகன் அறிவித்தது.

அமெரிக்க செய்தி ஊடகத்தில், முழுமையான போர் வெறியின் சூழல் நிலவுவதுடன், அதன் பின்விளைவுகளைப் பற்றி சிறிதும் கவலைப்படாமல் மேலும் தீவிரப்படுத்துவதற்கான கோரிக்கைகள் காணப்படுகின்றன. பல தசாப்தங்களாக மனித நாகரிகத்தை முடிவுக்குக் கொண்டுவரும் பேரழிவாகக் கருதப்படும் அணுவாயுத மூன்றாம் உலகப் போருக்கான சாத்தியமானது இப்போது ஞாயிறு உரையாடல் நிகழ்ச்சிகளில் விவாதிக்கப்படுகிறது.

பைடென் நிர்வாகத்தின் மிகவும் ஆத்திரமூட்டும் நடவடிக்கைகள் அமெரிக்க அரசியல் ஸ்தாபகத்தின் இரு கட்சிகளின் பிரிவுகளால் போதுமானதாக இல்லை என்று கண்டிக்கப்படுகின்றன.

கடந்த வாரம், 40 அமெரிக்க குடியரசுக் கட்சி அமெரிக்க செனட்டர்கள், போலந்தின் மிக்-29 (MiG-29) விமானங்களை பைடென் நிர்வாகம் கையேற்று ஜேர்மனியில் உள்ள அமெரிக்க விமானப்படை தளத்தில் இருந்து உக்ரேனுக்கு அனுப்பவேண்டும் என்று கோரி கடிதம் ஒன்றை வெளியிட்டனர். இவ்வாறான நடவடிக்கை நேட்டோ மீதான ரஷ்ய பதிலடியை தூண்டலாம் என பைடென் நிர்வாகத்தால் கூறப்பட்டது.

இரு அரசியல் கட்சிகளின் கணிசமான பிரிவுகளும் அமெரிக்க இராணுவம் ரஷ்ய விமானங்களை சுட்டு வீழ்த்துவதற்கு உக்ரேனின் சில பகுதிகளில் பறப்பதை தடுக்கும் மண்டலத்தை விதிக்க வேண்டும் என்று கோருகின்றன. இது ஒரு மூன்றாம் உலகப் போருக்கு வழிவகுக்கும் என்று வெள்ளை மாளிகை எச்சரித்துள்ளது.

இந்த இராணுவ தர்க்கத்திற்கு மேலதிகமாக, ஊடகங்களில் போர் வெறியானது வானிலையை அறிவிப்பை தவிர்த்து மற்ற அனைத்தையும் ஒதுக்கிவிட பயன்படுத்தப்படுகிறது. ஒவ்வொரு நாளும் அமெரிக்காவில் 1,200 க்கும் அதிகமான மக்களைக் கொன்றுவரும் கோவிட்-19 தொற்றுநோய் முற்றிலும் புறக்கணிக்கப்படுகிறது. எல்லையில்லா போலித்தனம் என்பது வழக்கமான ஒன்றாகியுள்ளது. ரஷ்ய நடவடிக்கைகளை மூச்சுவிடாமல் கண்டிக்கும் அதே வேளையில், ஞாயிற்றுக்கிழமை ஊடகங்கள் அமெரிக்காவின் நெருங்கிய நட்பு நாடான சவூதி அரேபியாவில் 81 பேரின் கொடூரமான பாரிய மரணதண்டனையை பற்றி குறிப்பிடுவதை புறக்கணித்தன.

உக்ரேன் தொடர்பாக அமெரிக்கா-நேட்டோவிற்கும் மற்றும் ரஷ்யாவிற்கு இடையே அதிகரித்து வரும் போர், அதே நேரத்தில் முழு தொழிலாள வர்க்கத்திற்கும் எதிரான போராகும். விலைவாசி உயர்வினால் உண்மையான ஊதியங்கள் வீழ்ச்சியடைந்து வருவதால், தொழிலாளர்கள் 'சுதந்திரத்தை', அதாவது நேட்டோ இராணுவக் கூட்டணியில் சேர உக்ரேனின் உரிமையை காப்பது என்ற பெயரால் பல்லைக் கடித்துக் கொள்ளச் சொல்லப்படுகிறார்கள். 'நேட்டோவுக்கு அதிக துப்பாக்கிகள் மற்றும் குறைந்த வெண்ணெய் தேவை' என்று வோல் ஸ்ட்ரீட் ஜேர்னலில் மார்ச் 7-ம் தேதி வெளியிடப்பட்ட தலையங்க பதிப்பு கோரியது. சமூகப் பாதுகாப்பு மற்றும் மருத்துவக் காப்பீடு ஆகியவை அழிக்கப்பட வேண்டும் என்றும் அது கோரியது.

ஒரு சில வாரங்களில், உலகெங்கிலும் உள்ள அரசாங்க செலவினங்களின் பாரிய மறுசீரமைப்பிற்கு போர் களம் அமைத்துள்ளது. கடந்த வாரம், அமெரிக்கா வரலாற்றில் மிகப்பெரிய இராணுவ வரவு-செலவுத் திட்டத்தை நிறைவேற்றியது. அதே நேரத்தில் கோவிட்-19 தொற்றுநோய்க்கான மீதமுள்ள நிதியைக் குறைத்தது. ஜேர்மனி தனது இராணுவ வரவு-செலவுத் திட்டத்தை மும்மடங்காக உயர்த்த இந்த நெருக்கடியைப் பயன்படுத்தியுள்ளது.

வேறு வார்த்தைகளில் கூறுவதானால், இந்தப் போரானது தொழிலாள வர்க்கத்தின் வாழ்க்கைத் தரத்தை பாரியளவில் குறைப்பதற்கான சந்தர்ப்பமாக மாறும். இதில் பணவீக்கத்தின் அதிகரிப்பால் ஏற்படும் உண்மையான ஊதியச் சரிவுகள், சமூக சிக்கன நடவடிக்கை மற்றும் 'தேசிய பாதுகாப்பு' என்ற பெயரில் வேலைநிறுத்தங்களுக்கு எதிராக நீதிமன்ற மத்தியஸ்தின் ஊடான தடை உத்தரவுகளுடன் இணைந்து இருக்கும்.

மொத்த பொருளாதார சரிவு, பாரிய வேலையின்மை மற்றும் வெகுஜன பட்டினிக்கான சாத்தியத்தை எதிர்கொள்ளும் முன்னாள் சோவியத் ஒன்றிய தொழிலாள வர்க்கத்திற்கு போரின் விளைவுகள், இன்னும் பேரழிவை ஏற்படுத்தும். ரஷ்யா மற்றும் கிழக்கு ஐரோப்பாவில் உள்ள தொழிலாளர்கள், சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்டதன் முழு பின்விளைவுகளையும் எதிர்கொண்டுள்ளனர். முதலாளித்துவத்தின் மறுசீரமைப்பு செழுமையையும் மற்றும் ரஷ்யாவிற்கும் உலக ஏகாதிபத்தியத்திற்கும் இடையே ஒருவித சமாதான சகவாழ்வையும் உருவாக்கும் என்ற கூற்று ஒரு கற்பனைக் கனவாக அம்பலப்படுத்தப்படுகிறது.

போருக்கு அதன் சொந்த தர்க்கம் ஒன்று உள்ளது. தனது படையெடுப்பிற்கு நேட்டோவின் பிரதிபலிப்பை ரஷ்யா குறைத்து மதிப்பிட்டிருக்கலாம், மற்றும் நேட்டோ அதன் ஆத்திரமூட்டல்களுக்கு ரஷ்யாவின் பிரதிபலிப்பையும் குறைத்து மதிப்பிட்டிருக்கலாம் ஆனால், தொழிலாள வர்க்கம் அதன் பங்கிற்கு, அணு ஆயுதங்களின் பயன்பாட்டுடன் தொடர்புபட்ட ஒரு உலகப் போரினுள் செல்லும் நெருக்கடியின் ஆபத்தை குறைத்து மதிப்பிட முடியாது.

குறுகியகால நிகழ்வுகள் என்னவாக இருந்தாலும், முதலாளித்துவ அரசியலின் கட்டமைப்பிற்குள் இந்த நெருக்கடியிலிருந்து வெளியேற வழியேதும் இல்லை. ஏகாதிபத்தியம், இராணுவவாதம், வரலாற்று ரீதியாக காலாவதியான தேசிய-அரசு அமைப்புமுறை மற்றும் முதலாளித்துவ சமூக ஒழுங்கு ஆகியவற்றிற்கு எதிரான போராட்டத்தில் ஐக்கியப்பட்ட ஒரே ஒரு சக்தியான சர்வதேச தொழிலாள வர்க்கத்தால் மட்டுமே இந்த பேரழிவை நிறுத்த முடியும்.

Loading