உக்ரேனுக்கு மேலும் 1 பில்லியன் டாலர் மதிப்பிலான ஆயுதங்களை அனுப்ப அமெரிக்கா முடிவு செய்துள்ளது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடென் புதன்கிழமை, உக்ரேனுக்கு கூடுதலாக 1 பில்லியன் டாலர் மதிப்பிலான ஆயுதங்களை ஏற்றுமதி செய்யவுள்ளார், இது, 20 நாட்களுக்கு முன்பு ரஷ்யா-உக்ரேன் போர் தொடங்கியதிலிருந்து உக்ரேனுக்கு அமெரிக்கா அனுப்பிய இராணுவ தளவாடங்களின் மதிப்பை விட இரண்டு மடங்கு அதிகமாகும்.

வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல் பத்திரிகையால் முதலில் அறிவிக்கப்பட்டதான இந்த ஆயுத தொகுப்பு விநியோகம், அமெரிக்க காங்கிரஸில் உக்ரேனிய ஜனாதிபதி வோலோடிமிர் செலென்ஸ்கியின் உரையைத் தொடர்ந்து, புதன்கிழமை பைடெனின் உரையில் அறிவிக்கப்படவுள்ளது.

இந்த புதிய ஆயுத தொகுப்பு விநியோகத்தில் விமான எதிர்ப்பு மற்றும் டாங்கி எதிர்ப்பு ஆயுதங்கள் அடங்கும். இதற்கு செவ்வாயன்று பைடெனால் கையொப்பமிடப்பட்ட அனைத்துக்குமான வரவு-செலவுத் திட்ட மசோதாவில் இருந்து உக்ரேனுக்காக ஒதுக்கப்பட்ட 13.6 பில்லியன் டாலரிலிருந்து நிதி வழங்கப்படும்.

வார இறுதியில், வெள்ளை மாளிகையின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சுல்லிவன், உக்ரேனுக்கு விமான ஏவுகணை எதிர்ப்பு ஆயுதங்களை அனுப்பவும் அமெரிக்கா பரிசீலிக்கும் என்றார்.

உக்ரேனுக்கான அமெரிக்காவின் ஆயுத ஏற்றுமதியின் ஒரு பகுதியாக வழங்கப்பட்ட ஜவெலின் டாங்கி எதிர்ப்பு ஏவுகணைகளை, பெப்ரவரி 11, 2022, வெள்ளிக்கிழமை உக்ரேனின் கியேவ் நகருக்கு வெளியே, போரிஸ்பில் விமான நிலையத்தில் இருந்து இராணுவ டிரக்குகளில் உக்ரேனியப் படையினர் ஏற்றினர். (AP Photo/Efrem Lukatsky) [AP Photo/Efrem Lukatsky]

2014 க்கும் இந்த ஆண்டின் ஆரம்பத்திற்கும் இடையில், அமெரிக்கா உக்ரேனுக்கு 2.5 பில்லியன் டாலர் மதிப்பிலான ஆயுதங்களை வழங்கியுள்ளது.

நெருக்கடி தொடங்கியதிலிருந்து கிழக்கு ஐரோப்பாவில் நிலைநிறுத்தப்பட்டுள்ள 15,000 துருப்புக்களுக்கும் மேலாக கூடுதல் துருப்புக்களை அனுப்பவும் வெள்ளை மாளிகை பரிசீலித்து வருவதாக வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல் தெரிவித்துள்ளது.

அமெரிக்க காங்கிரஸில் செலென்ஸ்கி தனது உரையில், உக்ரேனில் ‘பறக்கத் தடை’ மண்டலத்தை அமைக்க அமெரிக்காவிற்கு மீண்டும் அழைப்பு விடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது, இது அமெரிக்காவும் நேட்டோவும் ரஷ்ய விமானங்களை சுட்டு வீழ்த்துவதற்கு நிச்சயமாக வழி ஏற்படுத்தும். செலென்ஸ்கியின் உரைக்கு முன்னதாகவே, நேட்டோ உறுப்பினரான எஸ்தோனிய பாராளுமன்றம், உக்ரேன் மீது பறக்கத் தடை மண்டலம் அமைக்க கோரியது.

ஜெலென்ஸ்கியின் தலையீடு, போருக்குச் சமமானதாக ரஷ்யா கருதும் நடவடிக்கையை அமெரிக்கா எடுக்க வேண்டும் என குடியரசுக் கட்சியினரும் ஜனநாயகக் கட்சியினரும் இணைந்த காங்கிரஸ் உறுப்பினர்களின் அழைப்புகளுடன் நெருக்கமாக இணைக்கப்பட்டுள்ளது.

செவ்வாயன்று கனடாவின் பாராளுமன்றத்தில் செலென்ஸ்கி பேசுகையில், “தயவுசெய்து வான் பகுதியை மூடுங்கள், வான்வெளியை மூடுங்கள்… இது ரஷ்ய ஏவுகணைகளும் மற்றும் ரஷ்ய விமானங்களும் எங்கள் வான் பகுதியை தாக்காமல் தடுப்பது எங்களுக்கு எவ்வளவு முக்கியம் என்பதை தயவுசெய்து புரிந்து கொள்ளுங்கள்” என்று கோரினார்.

பெப்ரவரி 22, 2022, செவ்வாயன்று, உக்ரேனின் கியேவ் நகரில் நடந்த பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து, எஸ்தோனிய ஜனாதிபதி அலார் காரிஸ் உடனான கூட்டு செய்தியாளர்கள் மாநாட்டின் போது உக்ரேனிய ஜனாதிபதி வோலோடிமிர் செலென்ஸ்கி சைகை செய்கிறார். (Ukrainian Presidential Press Office via AP)

செலென்ஸ்கியின் கருத்துக்களுக்கு முன்னெச்சரிக்கையுடன் பதிலளிக்கும் விதமாக, வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் ஜென் சாகி நேற்று, பைடென் “பறக்கத் தடை மண்டலம் அமைப்பதானது மோதலை அதிகரித்து, ரஷ்யா உடனான போரைத் தூண்டும் என்று தொடர்ந்து நம்புகிறார்” எனக் கூறினார்.

செவ்வாயன்று, ரஷ்யா-உக்ரேன் போருக்கு பதிலிறுக்கும் விதமாக மார்ச் 24 நேட்டோ உச்சிமாநாட்டில் பங்கேற்க பெல்ஜியத்தின் புரூஸெல்ஸ்ஸூக்கு பைடென் செல்வார் என வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது.

செலென்ஸ்கியின் உரைக்கு முன்னதாகவே, காங்கிரஸ் உறுப்பினர்கள் மோதலை விஸ்தரிப்பதற்கான புதிய வழிகளை முன்வைக்க துடிக்கின்றனர்.

அமெரிக்க செனட் சபை செவ்வாயன்று ஒருமனதாக புட்டினை ஒரு போர்க்குற்றவாளி என்று கண்டிக்கும் தீர்மானத்தை நிறைவேற்றியது. ஜனநாயகக் கட்சியின் செனட் பெரும்பான்மைத் தலைவர் சக் ஷூமர் வாக்கெடுப்புக்குப் பின்னர், “உக்ரேனிய மக்களுக்கு இழைக்கப்பட்ட அட்டூழியங்களுக்கு விளாடிமிர் புட்டின் பொறுப்புக்கூறுவதிலிருந்து தப்ப முடியாது என்று கூற, இந்த அவையில் ஜனநாயகக் கட்சியினரும் குடியரசுக் கட்சியினருமாக நாம் அனைவரும் ஒன்றுகூடியுள்ளோம்” என்று அறிவித்தார்.

ஜனநாயகக் கட்சி செனட்டர் ரிச்சர்ட் புளூமென்தாலும் குடியரசுக் கட்சி செனட்டர் மார்ஷா பிளாக்பர்னும் அனைத்து ரஷ்ய வங்கிகளுக்கும் தடை விதிக்கும் ஒரு தீர்மானத்தை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளனர், அதாவது இதன் பொருள் “புட்டின், நாட்டின் உயிர்நாடியான எண்ணெய் மற்றும் எரிவாயு விற்பனையின் மூலம் வருமானத்தை ஈட்ட முடியாது,” என்பதுடன், மற்ற நாடுகள் ரஷ்யாவுடன் வர்த்தகம் செய்வதையும் அது தடுக்கும் என்று புளூமென்தால் கூறினார்.

புளூமென்தால் தனது நடவடிக்கைகள் எடுக்கப்பட்டால், அவை சீனாவுக்கான ரஷ்யாவின் எரிபொருள் ஏற்றுமதியை சீர்குலைக்கும் என்று பெருமைபீற்றி, “சீனா எண்ணெயை வாங்க முடியும், ஆனால் அவர்களால் அதற்கான பணத்தைச் செலுத்த முடியாது” என்று அறிவித்தார்.

இந்த நடவடிக்கைகளுக்கு கூடுதலாக, பாரம்பரியமாக ஒரு போர்க்கால நடவடிக்கையாக பார்க்கப்பட்ட வகையில், ரஷ்யா மீது ஒரு கடும் முற்றுகையை செயல்படுத்த அந்நாட்டின் கப்பல்களுக்கு சர்வதேச கடல்வழிகளை மூடுவதற்கு அமெரிக்காவுக்கும் நேட்டோவுக்கும் செலென்ஸ்கி அழைப்பு விடுத்துள்ளார்.

ரஷ்யாவின் எல்லைகளுக்கு அருகே முக்கிய நேட்டோ இராணுவ பயிற்சிகள் நடைபெறுவதன் பின்னணியில் இருந்தே இந்த முன்னேற்றங்கள் நடக்கின்றன. இந்த வாரம், நோர்வேயில் 40,000 நேட்டோ துருப்புக்களை உள்ளடக்கி ஒரு தொடர் இராணுவ பயிற்சிகளை நடத்தும் Cold Response 2022 பயிற்சியை நேட்டோ தொடங்கியுள்ளது.

இதற்கிடையில், பறக்கத் தடை மண்டலத்திற்கான கோரிக்கைகள் ஊடகங்களிலும் அரசியல் ஸ்தாபகத்திலும் அதிகரித்து வருகின்றன. செவ்வாயன்று, Airbus இன் முன்னாள் தலைமை நிறைவேற்று அதிகாரியும், வெளிநாட்டு உறவுகளுக்கான ஜேர்மன் கவுன்சிலின் தலைவருமான டாம் எண்டர்ஸ், உக்ரேன் மீது பறக்கும் விமானங்களை அமெரிக்கா சுட்டு வீழ்த்த வேண்டும் என்று கோரினார்.

எண்டர்ஸ் அணுசக்தி விரிவாக்கத்திற்கான அச்சுறுத்தலை நிராகரித்தார், “புட்டின் மேலும் சென்று கிழக்கில் அல்லது பால்டிக்கில் உள்ள நேட்டோ நாடுகளை தாக்குவாரா அல்லது அணு ஆயுதங்களை பயன்படுத்துவாரா? உக்ரேனிய வான் பகுதியில் ரஷ்ய விமானங்கள், கப்பல் ஏவுகணைகள் மற்றும் ஏவுகணைகளை மட்டுமே மேற்கத்திய நாடுகள் எதிர்த்து தாக்குமே தவிர, ரஷ்ய பிராந்தியத்தின் மீது அது தாக்குதல் நடத்தாது என்பதால் இதற்கு இன்னும் சாத்தியமில்லை” என்று அறிவித்தார்.

மேலும் அவர், “மேற்கு உக்ரேன் மீது இதுபோன்ற பறக்கத் தடை மண்டலம் அமைப்பது என்பது சாத்தியமானது மட்டுமல்ல, அது அவசியமானதாகும். புட்டினின் அணு ஆயுத அச்சுறுத்தல்களின் யதார்த்தம் என்ன என்பதை மேற்குலகிற்கு அம்பலப்படுத்த வேண்டிய நேரம் இதுவே, இராணுவத் தலையீடு செய்ய விடாமல் மேற்கத்திய அரசாங்கங்களைத் தடுப்பது ஒரு முட்டாள்தனமாகும்” என்று கூறி நிறைவுசெய்தார்.

‘பறக்கத் தடை மண்டலம்,’ ‘மனிதாபிமான நடைகூடம்,’ மற்றும் ‘மனிதாபிமான விமானப் பாலம்,’ போன்ற ஊடக தலைப்புக்களிலான தொகுப்புக்களுடன், ரஷ்யா உடனான போருக்கான இத்தகைய கோரிக்கைகளால் பத்திரிகைகள் நிரம்பியுள்ளன. வாஷிங்டன் போஸ்டில் எழுதுகையில், அமெரிக்க இராணுவ மூலோபாயவாதி Zbigniew Brzezinski இன் மருமகன் ஜோ ஸ்கார்பரோ, “போர் நடவடிக்கை பற்றிய புட்டினின் எப்போதும் மாறிவரும் வரையறைக்கு எதிர்வினையாற்றுவதை நேட்டோ நிறுத்த வேண்டிய நேரம் இதுவாகும்… பைடென் தனது சொந்த சீர்குலைக்கும் தந்திரங்களைப் பயன்படுத்தி இந்தப் போக்கை மாற்ற வேண்டும்” என்று அறிவித்தார்.

மேலும், அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் ரஷ்ய விமானங்களை சுட்டு வீழ்த்தும் வகையில், ‘மனிதாபிமான பாதுகாப்பு மண்டலங்களை’ அமெரிக்கா உருவாக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து ஸ்கார்பரோ தனது குறிப்பை நிறைவு செய்தார்.

Loading