மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்
மார்ச் 11, வெள்ளிக்கிழமையானது, கோவிட்-19 வெடிப்பை ஒரு ‘பெருந்தொற்று’ என உலக சுகாதார அமைப்பு உத்தியோகபூர்வமாக அறிவித்து இரண்டு ஆண்டுகள் பூர்த்தி அடைந்துள்ளதைக் குறிக்கிறது. இந்த உலகளாவிய பேரழிவின் இரண்டு ஆண்டுகளின் முடிவில், உலகம் முழுவதும் சமூகப் பரவலின் விகிதங்கள் நிலைப்பெற்று உச்சத்தில் உள்ளபோதிலும், முதலாளித்துவ அரசாங்கங்கள் தொற்றுநோய் முடிந்துவிட்டதாக திறம்பட அறிவித்து, ‘வழமைக்கு’ திரும்புவதாக அறிவித்துள்ளது.
பல அரசாங்கங்கள் அனைத்து கட்டுப்பாடுகளையும் நீக்கி, பரிசோதனைகள் மற்றும் தடுப்பூசி முயற்சிகளை குறைத்து வருகின்றன. உலகளாவிய தடுப்பூசி விகிதங்கள், மே 2021 இல் மக்களுக்கு தடுப்பூசி போடுவதற்கான பிரச்சாரங்கள் நடந்து கொண்டிருந்த சமயத்தில் கடைசியாக இருந்த அளவை விட இப்போது குறைந்துள்ளது. தடுப்பூசி ஏற்றத்தாழ்வு, குறைந்த வருமான நாடுகளை தொடர்ந்து பாதிக்கிறது. போருக்கான முன்னேற்பாடுகளுக்கு நிதியளிக்க ஒரு பாரிய நிதி மாற்றப்படும் நிலையில், தொற்றுநோய் தடுப்பு நடவடிக்கைகளுக்கான வரவு செலவுத் திட்டங்கள் குறைக்கப்பட்டு வருகின்றன.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர், உலகளாவிய இறப்பு எண்ணிக்கை 5,000 க்கும் குறைவாக இருந்தபோது, WHO பொது இயக்குநர் டாக்டர். டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ், தேசிய அரசாங்கங்களின் “செயலற்ற தன்மையின் எச்சரிக்கை மட்டங்களை” பற்றி குறிப்பிட்டார். ஆனால் இன்று, இறப்பு எண்ணிக்கை ஆறு மில்லியனுக்கும் அதிகமாக உள்ள நிலையில், ஆளும் வர்க்கத்தின் பதிலிறுப்பை சமூகப் படுகொலைக்குக் குறைவாகக் கூற முடியாது, இது ஒரு தொடரும் குற்றமாகும்.
கோவிட் தொற்றுநோயை சர்வதேச அக்கறைக்கான ஒரு பொது சுகாதார அவசரநிலையாக (Public Health Emergency of International Concern-PHEIC) தொடர்ந்து கருதும் சர்வதேச சுகாதார விதிமுறைகளின் கீழ் தான் உலகம் இன்னும் உள்ளது. இந்த தேவைகளில், தொடர் கண்காணிப்பும் நோய்தொற்றுக்கள் பற்றிய கட்டாயப் பதிவும் அடங்கும்.
பொருளாதாரத்திற்கான இலண்டன் பள்ளியில் உலகளாவிய சுகாதாரக் கொள்கையின் ஆராய்ச்சியாளராகவுள்ள கிளேர் வென்ஹாம் இன் கருத்துப்படி, WHO மூன்று மாதங்களுக்கு ஒருமுறை கூடி உலக நிலைமையை மூன்று அளவுகோல்களின் அடிப்படையில் மறுமதிப்பீடு செய்கிறது. அவர், “குழு முடிவு செய்தால், நோய்தொற்று வெடிப்பானது இனி வழமைக்கு மாறான மற்றும் எதிர்பாராத நிகழ்வாக இருக்காது, சர்வதேச பரவலுக்கான ஆபத்தாகவும் இருக்காது, மேலும் ஒருங்கிணைந்த சர்வதேச முயற்சியும் அதற்கு தேவைப்படாது என்று PHEIC முடிக்கிறது” என்று பைனான்சியல் டைம்ஸூக்கு தெரிவித்தார்.
தொற்றுநோயின் தாக்கம் அதிர்ச்சியடைய வைக்கிறது. அமெரிக்காவில் அண்ணளவாக ஒரு மில்லியன் மக்கள் கோவிட் நோயால் இறந்துள்ளனர், மேலும், ஐரோப்பாவில் 1.7 மில்லியன் பேர், ஆசியாவில் 1.3 மில்லியன் பேர், தென் அமெரிக்காவில் 1.2 மில்லியன் பேர், ஆபிரிக்காவில் 250,000 க்கும் அதிகமானோர் அதனால் இறந்துள்ளனர். ஆனால் இந்த உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்கள் அனைத்தும் யதார்த்தத்தை குறைத்துக் காட்டுகின்றன. எக்னாமிஸ்ட் பத்திரிகையின் மாதிரி மதிப்பீட்டின்படி, தொற்றுநோயால் ஏற்பட்ட அதிகப்படியான இறப்புக்களின் எண்ணிக்கை 20 மில்லியனுக்கு நெருக்கமாகும். இந்த எண்ணிக்கை லான்செட் இதழில் வெளியான சக மதிப்பாய்விலும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது, இது டிசம்பர் 31, 2021 வரை தொற்றுநோயால் ஏற்பட்ட அதிகப்படியான இறப்புக்களின் உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களை விட மூன்று மடங்கு அதிகம் என கண்டறிந்தது.
2022 புத்தாண்டு தினத்தில் இருந்து, உலகளவில் மேலும் 600,000 பேர் இறந்துள்ளனர், இது முக்கியமாக ‘இலேசானது’ என கூறப்படும் ஓமிக்ரோன் மாறுபாட்டால் ஏற்பட்டுள்ளது. உலகளாவிய இறப்புக்களின் நாளாந்த ஏழு நாள் போக்கு சராசரி 6,600 க்கு நெருக்கமாக உள்ளது. எவ்வாறாயினும், WHO இன் ஐரோப்பாவிற்கான பிராந்திய இயக்குநர் டாக்டர். ஹான்ஸ் க்ளூக் செய்த கணிப்பு, ஓமிக்ரோன் அலை கடந்த பின்னர் “ஐரோப்பிய நாடுகள் விரைவில் ஒரு நீண்டகால அமைதிக்குள் நுழையக்கூடும்” என்று கூறுவது பேரழிவை நிரூபித்துள்ளது. லான்செட் இதழின் தலைமை ஆசிரியர் பெப்ரவரி நடுப்பகுதியில் கூறியது போல், “அவரது [ஹான்ஸ் க்ளூக்கின்] வார்த்தைகள், மனநிறைவை வளர்க்கக்கூடிய, ஏன் ஏமாற்றவும் கூடிய தவறான மீளுறுதியை ஊக்குவிக்கின்றன.”
கோவிட்-19 தொடர்பான WHO இன் தொழில்நுட்ப ஆலோசனைக் குழு, மார்ச் 8, 2022, செவ்வாயன்று, ஒரு இடைக்கால அறிக்கையை வெளியிட்டது, இது மோசமான விளக்கத்தை அளிக்கிறது. உலகளாவிய நோய்தொற்றுக்கள் குறைந்து வந்தாலும், பல பிராந்தியங்களும் நாடுகளும் திடீர் அதிகரிப்புக்களை அறிவித்துள்ளதால், நிலைமை தொடர்ந்து பலவீனமாகவும் ஸ்திரமற்றதாகவும் உள்ளது என்று அது எச்சரித்தது. மேலும், பரிசோதனைகள் மற்றும் ஆதாரங்களை குறைப்பதானது தொற்றுநோய்க்கான நடவடிக்கைகளை கடுமையாகத் தடுக்கும் என்றும் அது எச்சரித்தது.
நிலைமை இன்னும் ஸ்திரமற்றதாகவே உள்ளது. இடைக்கால அறிக்கை வெளியானதில் இருந்து, உலகளவில் புதிய நோய்தொற்றுக்களின் எண்ணிக்கை திடீரென ஏற்றம் கண்டுள்ளன. பெப்ரவரி 28 அன்று 1.15 மில்லியனாக இருந்த நாளாந்த நோய்தொற்றுக்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து மார்ச் 10 அன்று 1.82 மில்லியனாக உயர்ந்திருந்தது. உலகளவில் புதிய நோய்தொற்றுக்களின் ஏழு நாள் சராசரி ஒரு நாளைக்கு 1.56 மில்லியனாக அதிகரித்து, மீண்டும் உயர்ந்து வருகிறது.
மேலும், ஐரோப்பாவில் உள்ள பல முக்கிய நாடுகள் இப்போது புதிய நோய்தொற்று எழுச்சிகளை காண்கின்றன, அங்கு “ஓமிக்ரோனின் BA.1 துணை மாறுபாட்டினால் ஏற்பட்ட நோய்தொற்றுக்களின் அலையிலிருந்து BA.2 துணை மாறுபாட்டின் அலை இப்போது தான் எழுச்சியடைந்துள்ளது.”
WHO அதன் இடைக்கால அறிக்கையில், “உலகளவில், BA.1 துணை மாறுபாடானது ஓமிக்ரோனின் முதன்மை பரம்பரையாக உள்ளது. இருப்பினும், சமீபத்திய வாரங்களில் BA.1 உடன் ஒப்பிடுகையில் BA.2 என அறிவிக்கப்பட்ட வரிசைகளின் விகிதம் அதிகரித்து வருகிறது, மேலும் பல நாடுகளில் ஓமிக்ரோன் பரம்பரையின் ஆதிக்க வகையாகவும் உள்ளது” என்றும் கூறியுள்ளது.
ஜேர்மனியில் நேற்று 300,000 க்கும் மேற்பட்ட புதிய நோய்தொற்றுக்கள் பதிவாகியுள்ளன, இது அந்நாட்டில் பதிவான உச்சபட்ச நாளாந்த எண்ணிக்கையாகும். மேலும், கோவிட் இறப்புக்களின் ஏழு நாள் சராசரியானது, நாளொன்றுக்கு 200 ஐ தாண்டிச் செல்கிறது. இந்த அபிவிருத்திகளுக்கு பதிலளிக்கும் வகையில், ஜேர்மனியின் சுகாதார அமைச்சர் கார்ல் லாட்டர்பேக், நேற்று ஒரு கொரோனா வைரஸ் செய்தியாளர் சுருக்கக் கூட்டத்தில் பேசுகையில், “நெருக்கடியானது என்று விவரிக்கக்கூடிய ஒரு சூழ்நிலையில் தான் நாம் இருக்கிறோம். மீண்டும் கடுமையாக அதிகரித்து வரும் நோய்தொற்றுக்களின் புள்ளிவிபரங்களை நாம் கொண்டுள்ளோம்… ஓமிக்ரோன் மாறுபாடு இலேசானது என்பதை நான் தொடர்ந்து படித்து வருகிறேன், என்றாலும் அது ஒரு குறிப்பிட்ட அளவிற்கு மட்டுமே உண்மையானது” என்று கூறினார்.
ஜேர்மனி, அதன் முக்கிய ஐரோப்பிய சக நாடுகளைப் போலவே, அதன் முக்கால்வாசி மக்கள் தொகைக்கு தடுப்பூசி வழங்க முடிந்துள்ளது. பாதிக்கும் மேற்பட்டவர்கள் பூஸ்டர், அல்லது மூன்றாவது அளவு தடுப்பூசியைப் பெற்றுள்ளனர். என்றாலும், வைரஸின் தொடர்ச்சியான பரவல் புதிய, தடுப்பூசி-எதிர்ப்பு வகைகளின் பரிணாமத்திற்கு வழிவகுக்கும் நிலையில், தடுப்பூசி தொற்றுநோயைத் தீர்க்கும் என்ற ஆளும் வர்க்கத்தின் கூற்றுக்கள் திவாலாகிவிட்டன.
BA.2 துணை மாறுபாடு குறித்த டோக்கியோ பல்கலைக்கழகம் மற்றும் மிச்சிகன் மாநில பல்கலைக்கழகத்தின் சமீபத்திய ஆய்வுகள், அதன் முன்னோடியான BA.1 துணை மாறுபாட்டை விட அது 40 சதவிகிதம் மட்டும் அதிகம் பரவக்கூடியது அல்ல என்பதை உறுதிப்படுத்தியுள்ளன. அது சுமார் 30 சதவிகிதம் அதிகமான நோயெதிர்ப்பு-தவிர்ப்பு திறனுள்ளது என்பதுடன், BA.1 பாதிப்பாளர்களை மீண்டும் பாதிக்கலாம். மாதிரி ஆய்வுகள், BA.2 உலகளவில் ஆதிக்கம் செலுத்தும் என்று கணித்துள்ளன, மேலும் BA.2 க்கு ஒரு தனித்துவமான கிரேக்க எழுத்தை வழங்கக் கோரி அழைப்புக்கள் வந்துள்ளதாக தெரிவிக்கின்றன.
ஒரு மாதிரி ஆய்விற்குட்படுத்தப்பட்ட டென்மார்க், BA.2 இன் அச்சுறுத்தலைத் தவிர்ப்பதால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. இந்நாடு, 82 சதவிகித மக்களுக்கு முழுமையாக தடுப்பூசி வழங்கியுள்ளது குறித்து பெருமிதம் கொள்கிறது, மேலும் 60 சதவீதத்திற்கும் மேற்பட்ட மக்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது. இந்த குளிர்காலத்தில் தொற்றுநோய்களின் அதிகரிப்பின் போது BA.2 ஆதிக்கம் செலுத்திய முதன்மை ஐரோப்பிய நாடுகளில் இதுவும் ஒன்றாகும்.
தொற்றுநோய் காலத்தில் எந்த நேரத்திலும் மிக உயர்ந்த மட்டங்களில் நோய்தொற்றுக்களையும் இறப்புக்களையும் டென்மார்க் எதிர்கொண்டது. பல நாடுகளைப் போலவே, இந்நாட்டின் உத்தியோகபூர்வ மந்திரம் என்னவென்றால், இந்த நோய் இலேசானது, மற்றும் மக்கள்தொகையில் கணிசமான பெரும்பகுதியினருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளதால் தணிப்பு நடவடிக்கைகள் இனி தேவையில்லை என்பதே. இது பேரழிவை நிரூபித்தது. தினசரி இறப்பு விகிதம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது, ஒரு நாளைக்கு அது 45 ஐ எட்டுகிறது. இதன் 5.83 மில்லியன் மக்கள்தொகையை வைத்துப் பார்த்தால், இது அமெரிக்காவின் தினசரி இறப்பு விகிதம் 2,554 க்கு சமமாகும்.
கிட்டத்தட்ட 7.5 மில்லியன் அளவிற்கு அடர்த்தியான மக்கள்தொகை கொண்டதான சீனாவின் தன்னாட்சி பிராந்தியமான ஹாங்காங், கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளாக வைரஸைக் கட்டுக்குள் வைத்திருந்தது. ஆனால், இப்போது அங்கு உருவெடுத்துள்ள தொற்றுநோய்களின் பாரிய, கொடிய பிரளயத்தால் மருத்துவமனைகள் மூழ்கடிக்கப்பட்டு, சுகாதார அமைப்பு முற்றிலும் சீர்குலைந்து வரும் நிலையை அது எதிர்கொண்டுள்ளது.
தினசரி இறப்புக்களின் ஏழு நாள் சராசரி தொடர்ந்து அதிகரித்து, ஒரு நாளைக்கு 255 ஐ எட்டுகிறது, மேலும் தனிநபர் அடிப்படையில் பெரு உட்பட, மற்ற அனைத்து நாடுகளையும் இது விஞ்சியுள்ளது. அமெரிக்காவில் தனிநபர் அடிப்படைக்கு நிகரான இறப்பு எண்ணிக்கை, ஒரு நாளைக்கு 11,000 க்கும் அதிகமாக இருக்கும், இது 2021 குளிர்காலத்தின் உச்சத்தை விட கிட்டத்தட்ட மூன்று மடங்கு அதிகமாகும்.
தென் கொரியாவில் நோய்தொற்றுக்களின் எண்ணிக்கை தொடர்ந்து மேல்நோக்கி உயர்கின்றன, நேற்று அங்கு 325,000 க்கும் மேற்பட்ட நோய்தொற்றுக்கள் பதிவாகியுள்ளன. இறப்புக்களும் அதிவேகமாக அதிகரித்து வருகின்றன. வியட்நாமிலும் இதேபோன்ற நிலை தான் உள்ளது, அங்கு நாளாந்த நோய்தொற்றுக்கள் ஒரு நாளைக்கு 150,000 க்கும் அதிகமாக அதிகரித்துள்ளது, மேலும் இறப்புக்களும் அதிகரித்து வருகின்றன.
இந்த அபிவிருத்திகள் அமெரிக்காவில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும். ஓமிக்ரோன் உச்சத்திற்குப் பின்னர் தொற்றுக்களின் வீழ்ச்சியைப் பயன்படுத்தி கொள்கைகளை விரைவுபடுத்தியது, அது அடிப்படையில் அனைத்து தணிப்பு நடவடிக்கைகளையும் முடிவுக்குக் கொண்டு வந்தது. பள்ளிகளில் கட்டாயம் முகக்கவசம் அணிவதும் இதில் அடங்கும். மேலும், போர் எந்திரத்திற்கு நூற்றுக்கணக்கான பில்லியன்கள் ஒதுக்க முடிந்தாலும் தொற்றுநோய் நடவடிக்கைகளுக்கான அனைத்து நிதிகளும் விரைவாக வறண்டுவிட்டன.
இதற்கிடையில், BA.2 துணை மாறுபாடுகளின் தொடர் அலைகள் கடந்த மாதத்தில் நான்கு மடங்கு உயர்ந்து சுமார் 12 சதவீதமாக உள்ளது, இது நியூ யோர்க் நகரத்தில், கோவிட் தொற்றுநோயின் முதல் அலையின் போது எதிர்கொள்ளப்பட்ட பேரழிவுகர தாக்கத்தின் அளவிற்கு மிக அதிகமாக இருந்தது.
இந்த கடுமையான அதிகரிப்புக்களின் மீது கவனம் செலுத்துவதற்குப் பதிலாக, நியூ யோர்க் நகர மேயர் எரிக் ஆடம்ஸ், கோவிட் தொடர்புபட்ட கடுமையான அனைத்து கட்டுப்பாடுகளும் நெறிமுறைகளும் நீக்கப்பட்டதை ‘கொண்டாட வேண்டிய நேரம்’ இது என்று கூறினார். அவர் மேலும், “கோவிட் நம்மை வரையறுக்க நாம் அனுமதிக்கப் போவதில்லை. நாம் ஆபத்திற்கு வெகுதொலைவில் இருக்கிறோம். கோவிட் இங்கு இன்னும் தொடர்ந்து உள்ளது. ஆனால் நாம் அதைத் திருப்பியடித்துக் கொண்டிருக்கிறோம்” என்றும் கூறினார்.
இந்நிலையில், தொற்றுநோயை தோற்கடிப்பதற்கான ஒரே வழி, புதிய தொற்றுநோய்களை பூஜ்ஜியமாகக் குறைக்க ஒரு நீக்குதல் உத்தியைக் கடைப்பிடிப்பதாகும். அதற்கு மாறாக வைரஸ் நிலையாக பிறழ்வு காணும் வகையில் சமூகத்தில் நோய்தொற்று வெடித்து பரவ அனுமதிப்பதான ஒரு ஆபத்தான விளையாட்டை நாம் தொடர்ந்து விளையாடக் கூடாது.