மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்
செவ்வாயன்று, அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடென் வழங்கிய வருடாந்திர உரை, கோவிட்-19 முடிந்துவிட்டதாக சித்தரிப்பதற்கு நோக்கம் கொண்ட ஒரு அரங்கேற்ற நிகழ்ச்சியாக இருந்தது. இது, அமெரிக்க மக்களை ‘வைரஸூடன் வாழவும்’ மற்றும் முடிவில்லாத வெகுஜன தொற்று, பலவீனம் மற்றும் இறப்பை ஒரு ‘புதிய வழமையாக’ ஏற்றுக்கொள்ளவும் வற்புறுத்த, ஜனநாயகக் கட்சியின் தலைமையில் முழு அரசியல் ஸ்தாபகமும் பெருநிறுவன ஊடகங்களும் மேற்கொண்ட பல வார கால முயற்சியின் உச்சக்கட்டத்தையே இது குறித்தது.
பைடென் உரையின் முக்கிய அம்சமாக உக்ரேன் போர் இருந்தது, அதாவது அவர் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினை நன்மை மற்றும் தீமைக்கு இடையேயான மனிச்சியன் போராட்டத்தில் வில்லனாக சித்தரித்தார். பைடென் நிர்வாகம் மற்றும் ஜனநாயகக் கட்சியைப் பொறுத்தவரை, போரானது நாட்டை ‘ஒருங்கிணைத்து’ பெருந்தொற்றால் தூண்டிவிடப்பட்ட ஆழ்ந்த உள்நாட்டு நெருக்கடியில் இருந்து மக்களின் அனைத்து கவனத்தையும் திசைதிருப்புவதற்கான ஒரு வழிமுறையாகப் பார்க்கப்படுகிறது.
அமெரிக்காவில் கோவிட்-19 இறப்பு எண்ணிக்கை 1 மில்லியனை நெருங்குகிறது மற்றும் புத்தாண்டு தொடக்கத்தில் இருந்து 125,000 க்கும் மேற்பட்ட அமெரிக்கர்கள் இறந்துள்ளனர் என்ற உண்மை ஒருபுறமிருக்க, பெருநிறுவன ஊடகங்கள் நோய்தொற்று செய்திகள் வெளியிடுவதை நிறுத்திவிட்டு, கிட்டத்தட்ட பிரத்தியேகமாக போர் பிரச்சாரத்தில் தீவிரப்பட்டுள்ளன. இதேபோன்ற ஒரு போக்கு தான் ஐரோப்பா முழுவதும் பரவியுள்ளது, அதன் முதலாளித்துவ அரசாங்கங்களும் கோவிட்-19 காரணமான பாரிய நோய்தொற்றுக்களையும் இறப்புக்களையும் மூடிமறைக்கின்றன.
ஆனால், தொற்றுநோய் முடிந்துவிட்டதாக பொதுமக்களை நம்பவைப்பதற்கான அரசியல் ஸ்தாபகம் மற்றும் ஊடகங்களின் முயற்சிகள் யதார்த்தத்திற்கு முற்றிலும் அப்பாற்பட்டதாக உள்ளன. பைடென் உரையாற்றிய செவ்வாயன்று, 1,763 பேர் கோவிட்-19 நோயால் இறந்துள்ளதாக BNO News தெரிவித்தது. மேலும் அடுத்த நாளில், இறப்பு எண்ணிக்கை 2,236 ஆக அதிகரித்திருந்தது.
செப்டம்பரில் கோவிட்-19 இன் டெல்டா மாறுபாட்டினால் ஏற்பட்ட எழுச்சியின் உச்சத்தைப் போல இப்போதும் அமெரிக்காவில் ஒவ்வொரு நாளும் ஏராளமானோர் இறக்கின்றனர். உலகெங்கிலும் BA-2 மாறுபாடு தீவிரமாக பரவி வருவதால், வியட்நாம், தென் கொரியா மற்றும் பிற நாடுகள் உச்சபட்ச நோய்தொற்று விகிதங்களை பதிவு செய்கின்றன.
தொற்றுநோயை இயல்பாக்குவதற்கான முயற்சியின் ஒரு பகுதியாக, கடந்த வெள்ளியன்று நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள் (CDC), கோவிட்-19 நோய்தொற்று பரவல் விகிதங்களுக்கு பதிலாக மருத்துவமனை கொள்ளளவை அடிப்படையாக வைத்து முகக்கவச பயன்பாட்டிற்கான புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டது. முகக்கவச பயன்பாட்டை தேவையான பொது சுகாதார நடவடிக்கையாக கருதாமல் தனிப்பட்ட விருப்பமாக மாற்றியுள்ளதால் இந்த வழிகாட்டுதல்கள் விஞ்ஞானிகளால் பரவலாகக் கண்டிக்கப்பட்டுள்ளன. மேலும், புதன்கிழமை, CDC அதன் தொடர்புத் தடமறிதல் பரிந்துரைகளை இரத்து செய்தது, இது அமெரிக்காவில் அனைத்து கோவிட்-19 தணிப்பு நடவடிக்கைகளையும் அகற்றுவதில் மற்றொரு குறிப்பிடத்தக்க மைல்கல்லாக உள்ளது.
முகக்கவச பயன்பாடு மற்றும் தொடர்புத் தடமறிதல் ஆகியவற்றின் முடிவு பற்றிய ஒருங்கிணைந்த அறிவிப்பு, தொற்றுநோய் தொடங்கியதிலிருந்து அமெரிக்க அரசியல் ஸ்தாபகம் கனவு கண்ட ஒரு கொள்கையின் இறுதிக்கட்ட செயலாக்கத்தைக் குறிக்கிறது: அதாவது ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கான மக்கள் தேவையில்லாமல் இறக்கின்ற நிலையிலும், நோய் பரவுவதைத் தடுக்கும் அனைத்து நடவடிக்கைகளையும் முடிவுக்குக் கொண்டு வந்தாக வேண்டும் என்பதே.
CDC இன் முகக்கவச வழிகாட்டுதல்கள் வருடாந்திர உரையில் அமல்படுத்தப்பட்டபோது, கிட்டத்தட்ட ஒவ்வொரு பங்கேற்பாளரும் முகக்கவசம் அணியவில்லை. இந்த இயல்புநிலைக்கு பின்னால் மறைந்திருப்பது, அங்கிருந்த அனைவரும் அன்றைய தினம் கோவிட்-19க்கு எதிர்மறை சோதனை செய்திருக்க வேண்டும், அமெரிக்காவில் உள்ள ஒவ்வொரு பள்ளி மற்றும் பணியிடத்திலும் உள்ள தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களுக்கு ஒரு சலுகை மறுக்கப்பட்டுள்ளது.
கடந்த இரண்டு ஆண்டுகளாக ஒவ்வொரு அமெரிக்கரையும் ஆழமாக பாதித்துள்ள இந்த தொற்றுநோய்க்கு, பைடெனின் மணிநேரங்கள் நீடித்த உரையின் இரண்டாவது பாதியில் தோராயமாக ஏழு நிமிடங்கள் மட்டுமே ஒதுக்கப்பட்டிருந்தது. ‘ஓமிக்ரோன்’, ‘நெடுங்கோவிட்’, ‘காற்றுவழி பரவல்’ மற்றும் 'N95/FFP2' போன்ற தொற்றுநோய் தொடர்புபட்ட வார்த்தைகளை அவர் ஒருமுறை கூட உச்சரிக்கவில்லை.
பைடெனின் ஒட்டுமொத்த உரையைப் போலவே, கோவிட்-19 பற்றிய அவரது கருத்துக்களும் ஏராளமான முரண்பாடுகள் மற்றும் பொய்களால் நிறைந்திருந்ததுடன், தொற்றுநோயின் தற்போதைய யதார்த்தத்தை ஆழமாக சிதைத்தது.
அவர், “இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக, கோவிட் நம் வாழ்வின் மற்றும் இந்த தேசத்தின் வாழ்வின் ஒவ்வொரு முடிவையும் பாதித்துள்ளது. மேலும், நீங்கள் சோர்வடைந்துள்ளீர்கள், விரக்தியடைந்துள்ளீர்கள் மற்றும் நம்பிக்கையிழந்துள்ளீர்கள் என்பதை நான் அறிவேன். சாப்பாட்டு அறை மேசையிலோ அல்லது சமையலறை மேசையிலோ உட்கார்ந்து, ஒருவரை இழந்ததால் காலியான காலியான நாற்காலியைப் பார்க்கும் ஒரு மில்லியனுக்கு நெருக்கமாக மக்களை அது கணக்கிடவில்லை.
இந்த மாதத்தின் பிற்பகுதியில் 1 மில்லியனைத் தாண்டவுள்ள அமெரிக்காவின் அதிர்ச்சியூட்டும் கோவிட் இறப்பு எண்ணிக்கை பற்றிய அவரது பெயரளவிலான குறிப்பானது, இந்த பெரும் சோகத்தை அவர் வெறுமனே ஒப்புக்கொள்வதாக மட்டும் இருந்தது. ஜனவரி 20, 2021 அன்று அவர் பதவியேற்றதில் இருந்து, கோவிட்-19 நோயால் 535,000 அமெரிக்கர்கள் இறந்துள்ளனர், இது முதல் மற்றும் இரண்டாம் உலகப் போர்களில் கொல்லப்பட்ட மொத்த அமெரிக்க படையினரின் எண்ணிக்கையை விட அதிகம் என்ற உண்மையை அவர் தவிர்த்தார். மேலும், கடந்த ஒரு மாதமாக ஒவ்வொரு வாரமும் சுமார் 15,000 அமெரிக்கர்கள் இறக்கின்றனர், அது முடிவதாகத் தெரியவில்லை.
ஒரு முயற்சித்த மற்றும் உண்மையான அமெரிக்க நடைமுறைவாதியாக, பைடென் கடந்த காலத்தை திரும்பிப் பார்க்க மறுத்து விரைவாக முன்னோக்கி நகர்ந்தார், “இன்றிரவு நாம் பாதுகாப்பாக முன்னோக்கி நகர்கிறோம், மேலும் பொதுவான வழமைகளுக்குத் திரும்புகிறோம் என்று என்னால் சொல்ல முடியும்” என்று கூறினார். மேலும், “கோவிட்-19 இனி நம் வாழ்க்கையைக் கட்டுப்படுத்தப் போவதில்லை” என்றும் கூறினார்.
CDC இன் புதிய முகக்கவச வழிகாட்டுதல்களை அவர் பாராட்டி, “நாட்டின் பெரும்பகுதியில் பெரும்பாலான அமெரிக்கர்கள் இப்போது முகக்கவசம் அணியாமல் எங்கும் செல்லலாம்” என்று கூறினார். பின்னர், தனக்குத்தானே நேரடியாக முரண்பட்ட வகையில், அவர், “இந்த வைரஸ் தொடர்ந்து பிறழ்வு கண்டு பரவுவதால், நாம் கவனமாக இருக்க வேண்டும்” என்றும் கூறினார்.
பைடென் தொற்றுநோயின் எதிர்காலத்தைப் பற்றி ஒரு விசித்திரக் கதை விளக்கத்தை முன்வைத்தார், “நாம் பாதுகாப்பாக முன்னேறிச் செல்ல பின்பற்ற வேண்டிய நான்கு இயல்பறிவு நடவடிக்கைகள்” பற்றி அடிக்கோடிட்டுக் காட்டினார். அதில் முதல் நடவடிக்கை “தடுப்பூசிகள் மற்றும் சிகிச்சைகளைப் பெறுவதாகும்”.
ஓமிக்ரோன் மாறுபாட்டின் முன்நிகழ்ந்திராத பரவல் பாதிப்பிலிருந்து எதையும் கற்றுக் கொள்ளாத பைடென், “தடுப்பூசி இந்த நோய்களின் பரவலைத் தடுக்கும்” என்று கூறினார். உண்மையில், தடுப்பூசிகள் கோவிட்-19 தொற்றுக்கு எதிராக முழுமையாக பாதுகாப்பளிப்பதில்லை, மாறாக முதன்மையாக மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவது மற்றும் இறப்பு ஆகியவற்றில் இருந்து பாதுகாக்கின்றன என்பது ஒரு வருடத்திற்கும் மேலான அனுபவத்தில் இருந்து அறியப்படுகிறது. உச்சங்களைத் தொட்ட நோய்தொற்றுக்கள் மற்றும் இறப்புக்கள் பற்றிய முக்கியமான தரவுகளை CDC கணக்கில் கொள்ளவில்லை, ஆனால் அவை அசாதாரணமானவை என்பதுடன், இறப்புக்கு அல்லது பலவீனப்படுத்தும் நெடுங்கோவிட் பாதிப்புக்கு வழிவகுக்கும் என்பது அறியப்பட்டதாகும்.
மேலும், 65 சதவீத அமெரிக்கர்கள் மட்டுமே இரண்டு அளவு தடுப்பூசிகளைப் பெற்றுள்ளனர். 29 சதவீதத்திற்கு குறைவானவர்களே பூஸ்டர் தடுப்பூசி பெற்றுள்ளனர், இந்நிலையில் தடுப்பூசி விகிதங்கள் ஒரு நாளைக்கு 350,000 ஆக நீடிக்கிறது. உறுதியளிக்கப்பட்டாலும், வைரஸ் எதிர்ப்பிகள் (antivirals) மிகவும் மட்டுப்பட்டத்தப்பட்ட விநியோகத்தில் உள்ளன. தடுப்பூசிகளையும் சிகிச்சைகளையும் மட்டும் நம்பியிருப்பதானது, அடுத்தடுத்த மாறுபாடுகள் தவிர்க்க முடியாமல் உருவெடுக்கும் போதெல்லாம், மேலதிக பாரிய நோய்தொற்றுக்களுக்கும் இறப்புக்களுக்கும் களம் அமைக்கிறது என்பதே உண்மை.
CDC இன் புதிய முகக்கவச பரிந்துரைப்புக்கள் சுமார் 7 மில்லியன் நோயெதிர்ப்பு குறைபாடுள்ள அமெரிக்கர்களை ஆபத்தில் ஆழ்த்தியுள்ள நிலையில், அவை பெரும் பின்னடைவை எதிர்கொள்கின்றன, இது குறித்து பைடென், “உங்களுக்கு நோயெதிர்ப்பு குறைபாடு இருந்தாலோ அல்லது வேறு ஏதேனும் நோய் பாதிப்பு இருந்தாலோ, நம்மிடம் சிகிச்சைகளும் இலவச உயர்தர முகக்கவசங்களும் உள்ளன. நாம் முன்னோக்கிச் செல்கையில் எவரையும் கைவிடவோ அல்லது எவருடைய தேவைகளையும் புறக்கணிக்கவோ போவதில்லை” என்று கூறினார். இருப்பினும், ஒவ்வொரு உட்புற பொது இடமும் மில்லியன் கணக்கான மக்களை ஆபத்தில் ஆழ்த்தும் என்ற உண்மையை சரிசெய்ய அவர் தவறிவிட்டார்.
பைடென் நிர்வாகத்தின் இரண்டாவது நடவடிக்கை “புதிய மாறுபாடுகளுக்குத் தயாராவதாகும்.”
“தேவைப்பட்டால், பல மாதங்கள் அல்லது ஆண்டுகளுக்குப் பதிலாக 100 நாட்களுக்குள் புதிய தடுப்பூசிகளை நாம் வழங்க முடியும்,” என்று பைடென் உறுதியளித்ததுடன், “புதிய மாறுபாடு வராது என்று என்னால் உறுதியளிக்க முடியாது, ஆனால் அது வந்தால் தயாராக இருக்க எங்களால் முடிந்த அனைத்தையும் செய்வோம் என்று நான் உங்களுக்கு உறுதியளிக்கிறேன்” என்று கூறினார்.
ஓமிக்ரோனுக்காக குறிப்பிட்ட தடுப்பூசிகள் தயாரிப்பதற்கான முயற்சிகள் தோல்வியடைந்ததையும், அத்துடன் BA-2 ஓமிக்ரோன் துணை மாறுபாடு அமெரிக்காவில் அதிவேகமாக பரவி வரும் உண்மையையும் அவர் குறிப்பிடத் தவறிவிட்டார், அதேவேளை ஹாங்காங், தென் கொரியா, டென்மார்க் மற்றும் ஐலாந்து நாடுகளிலும் நோய்தொற்றுக்கள், மருத்துவமனை அனுமதிப்புக்கள் மற்றும் இறப்புக்களுக்கான பதிவுகள் கடுமையாக உள்ளன, இவை அனைத்தும் அமெரிக்காவை விட அதிக தடுப்பூசி விகிதங்களைக் கொண்டுள்ளன.
ஒவ்வொரு முறையும் ஒரு புதிய மாறுபாடு எழும்போது, உலக மக்களுக்கு முழுமையாக தடுப்பூசி போடும் செயல்முறையை மீளத் தொடங்குவது சரியான பதிலாகும் என்பது அபத்தமாகும். வைரஸ் பரிணாமத்தின் விதிகளின்படி, இந்த சிசிபியன் போராட்டம் பல ஆண்டுகள் தொடரும், அதாவது, புதிய தடுப்பூசிகள் உலகளவில் மெதுவாகவே விநியோகிக்கப்படுவதால், பில்லியன் கணக்கானவர்கள் தேவையில்லாமல் நோய்தொற்று பாதிப்புக்குள்ளாகின்றனர், மேலும் இறக்கின்றனர்.
பைடெனின் தொற்றுநோய் எதிர்காலத்தின் மூன்றாவது மற்றும் மிக முக்கிய கூறு என்னவென்றால், “பள்ளிகளையும் வணிகங்களையும் மூடுவதை முடிவுக்குக் கொண்டு வருவதாகும்.” ‘புதிய வழமையின்’ சாராம்சம் இது தான், ஏனென்றால் பெருநிறுவனங்கள் மற்றும் நிதிய உயரடுக்கின் நலன்களுக்கு அது முன்னுரிமை அளிக்கிறது.
பைடென், “அமெரிக்கா மீண்டும் வேலைக்குத் திரும்பி, நமது பெரும் நகரங்களை மக்களால் நிரப்புவதற்கான சரியான நேரம் இதுவே. வீட்டிலிருந்து வேலை செய்வதை பாதுகாப்பாக உணர்பவர்கள் தங்கள் அலுவலகங்களுக்கு திரும்பத் தொடங்கலாம்” என்று கூறினார். மேலும், “நமது பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. அவை அப்படியே தொடரட்டும். நமது குழந்தைகள் பள்ளிகளில் இருக்க வேண்டும்” என்றும் கூறினார். இதற்கு இரு தரப்பில் இருந்தும் கரகோஷம் எழுந்தது.
பைடென், “பெரும்பாலான அமெரிக்கர்கள் முகக்கவசம் அணியாமல் வகுப்பறைகளில் தங்கி பாதுகாப்பாக முன்னேறலாம்” என்று கூறினார்.
இது முக்கியமான விகிதாசாரங்களின் பொய்யாகும். பெரும்பாலான குழந்தைகளுக்கு இன்னும் தடுப்பூசி போடப்படவில்லை, மேலும் சமீபத்திய ஆய்வுகள் குழந்தைகளுக்கான தடுப்பூசி குறைவான செயல்திறன் கொண்டுள்ளதைக் காட்டுகின்றன. தற்போதைய ஓமிக்ரோன் எழுச்சியின் போது, குழந்தைகள் உச்சபட்ச விகிதங்களில் நோய்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர், மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர், மேலும் இறந்துள்ளனர், பெப்ரவரி மாதத்தில் 212 குழந்தைகள் கோவிட்-19 ஆல் இறந்துள்ளனர் என்பதுடன், கடந்த வாரத்தில் மட்டும் 84 குழந்தைகள் அதனால் இறந்துள்ளனர் என்று CDC பதிவு செய்துள்ளது.
தனது நான்கு-புள்ளி திட்டத்தை முடித்த பின்னர், பைடென், “நாம் தொடர்ந்து உலகிற்கு தடுப்பூசி வழங்குவோம். ஏற்கனவே 112 நாடுகளுக்கு 475 மில்லியன் தடுப்பூசி அளவுகளை நாம் அனுப்பியிருக்கிறோம், இது பூமியில் உள்ள எந்த நாட்டையும் விட அதிகமானதாகும்” என்று கூறினார். மேலும் அவர், தேசிய ஒவ்வாமை மற்றும் தொற்றுநோய் நிறுவனத்துடன் (National Institute of Allergy and Infectious Diseases) இணைந்து உருவாக்கப்பட்ட மொடேர்னா தடுப்பூசிக்கான அறிவுசார் சொத்துரிமையை கைவிட அமெரிக்கா மறுத்துவிட்ட உண்மையை நிராகரித்தார்.
பைடென் புதன்கிழமை வெளியிடப்பட்ட புதிய “தேசிய கோவிட்-19 தயார்நிலைத் திட்டத்தின்” உள்ளடக்கத்தை சுருக்கமாக விவரித்தார். பைடென் பதவியேற்ற மறுநாளே வெளியிடப்பட்ட முதல் ‘தயார்நிலைத் திட்டம்’ போலவே, இந்த திட்டமும் சூடாக பரப்பப்பட்டதைத் தவிர வேறில்லை. திட்டத்தின் ஏறக்குறைய ஒவ்வொரு அம்சமும் காங்கிரஸிடம் இருந்து நிதி பெறுவதை வாரங்கள் அல்லது மாதங்கள் நீடிக்கச் செய்தது, இது ஒருபோதும் பலனளிக்காத செயல்முறையாகும்.
நெடுங்கோவிட் நோயாளிகளுக்கு ஆதரவளிப்பதற்கும் மற்றும் பள்ளிகளிலும் பொது இடங்களிலும் காற்று வடிகட்டி அமைப்புகளை மேம்படுத்துவதற்கும் உதட்டளவில் உறுதியளிக்கும் அதேவேளை, திட்டத்தின் மைய நோக்கம் புதிய மாறுபாடுகளின் எதிர்கால எழுச்சிகளின் போது பள்ளிகளும் பணியிடங்களும் தொடர்ந்து திறந்திருக்கும் என்பதை உறுதி செய்வதாகும். இது, “பொருளாதார மற்றும் கல்வி பணிநிறுத்தங்களைத் தடுக்க பள்ளிகளுக்கும் வணிகங்களுக்கும் தேவையான கருவிகளை வழங்குவதைத் தான் நமது முன்னோக்கிய பாதை நம்பியுள்ளது, எனவே நமது மாணவர்கள் தொடர்ந்து பள்ளிக்குச் செல்லலாம், நமது தொழிலாளர்கள் வேலையில் பாதுகாப்பாக இருக்கலாம் மேலும் அதனால் நமது பொருளாதாரமும் தொடர்ந்து வளர்ச்சி காண முடியும்” என்று கூறுகிறது.
உட்புற காற்றோட்டம் தொடர்பான அனைத்தும் ‘பரிந்துரைகள்’, ‘வழிகாட்டுதல்’, ‘சரிபார்ப்பு பட்டியல்’ மற்றும் ‘தொழில்நுட்ப வளங்களால்’ மட்டுமே நிர்ணயிக்கப்படும். இந்த முக்கிய விவகாரம் தொடர்புபட்ட சட்டத் தேவை அல்லது நிதியுதவி பற்றி எங்கும் குறிப்பிடப்படவில்லை.
பைடென் மற்றும் ஜனநாயகக் கட்சியினரால் கோரப்படும் ‘புதிய வழமை’ என்பது, ட்ரம்பின் ‘சமூக நோயெதிர்ப்பு சக்தி பெருக்கும்’ கொள்கைகளின் அடிச்சுவடுகளைப் பின்பற்றி, கடந்த இரண்டு ஆண்டுகளாக விளைவித்த சமூக குற்றங்களை இன்னும் ஆழமாக்க மட்டுமே செய்யும். தடுக்கக்கூடிய நோயினால் ஏற்படும் வெகுஜன மரணத்தை மக்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று கோரி, அமெரிக்க ஆளும் வர்க்கம் ரஷ்யாவுடனான போரில் இன்னும் கூட சொல்ல முடியாத குற்றங்களுக்கும் பாரிய உயிரிழப்புக்களுக்கும் இட்டுச் செல்ல மக்களை நிர்ப்பந்திக்கிறது.
அமெரிக்கா முழுவதும் உள்ள நூற்றுக்கணக்கான மில்லியன் தொழிலாளர்களும், உலகெங்கிலும் உள்ள பில்லியன் கணக்கான தொழிலாளர்களும் எதிர்கொள்ளும் புறநிலை யதார்த்தம், தொற்றுநோய் முடிந்துவிட்டது என்ற பிரச்சாரத்தை பொய்யாக்குகிறது. இந்நிலையில், சர்வதேச தொழிலாள வர்க்கம் எதிர்கொள்ளும் முக்கிய பணி என்னவென்றால், தொற்றுநோயையும், உலகப் போருக்கான தீவிரமடைந்து வரும் உந்துதலையும் தடுக்கப் போராடும் ஒரு பாரிய இயக்கத்தை கட்டியெழுப்புவதாகும்.