மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்
ரஷ்யாவிற்கும் நேட்டோவிற்கும் இடையே உக்ரேன் மீதான போர் நெருக்கடியின் நிகழ்வுகள் திங்களன்று ஒன்றையொன்று முந்திக்கொண்டன. உக்ரேனிய இராணுவத்தின் இரண்டு உளவு-நாசவேலைப் பிரிவுகள் ரஷ்யாவின் ரோஸ்டோவ் பகுதிக்குள் நுழைந்துவிட்டன என்ற செய்தியுடன் நாள் தொடங்கியது, ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் ரஷ்ய துருப்புக்களுக்கு கிழக்கு உக்ரேனிய பிரிவினைவாத குடியரசுகளான டொனெட்ஸ்க் மற்றும் லுகான்ஸ்க் ஆகியவற்றிற்குள் நுழைய உத்தரவிட்டதோடு, அவர் அவை ‘சுதந்திரம்’ ஆனவை என அங்கீகரித்திருந்தார்.'
மேற்கத்திய ஊடகங்களில் சரமாரியான போர்ப் பிரச்சாரம் மற்றும் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடென், வெளியுறவு அமைச்சர் ஆண்டனி பிளிங்கென் ஆகியோரின் போர்வெறி பேச்சுகளுக்கு மத்தியில், கிழக்கு உக்ரேனிய டொன்பாஸில் அமெரிக்க நிதியுதவி பெறும் உக்ரேனிய இராணுவத்திற்கும், ரஷ்ய ஆதரவு பிரிவினைவாதிகளுக்கும் இடையிலான சண்டை வியாழன் முதல் தீவிரமடைந்துள்ளது. 2015 ஆம் ஆண்டு மத்தியஸ்தர்கள் மூலம் சேய்யப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்த மீறல்கள் ஆயிரக்கணக்கில் நடந்துள்ளன.
பெப்ரவரி 2014 இல் கியேவில் நடந்த ஆட்சிக்கவிழ்ப்பை அடுத்து உள்நாட்டுப் போர் வெடித்தது, இது அமெரிக்காவால் அதிக நிதியுதவி மற்றும் ஆதரவைப் பெற்ற Right Sector மற்றும் அசோவ் படை போன்ற தீவிர வலதுசாரி சக்திகளால் வெற்றிகரமாக நடத்தப்பட்டது. மோதல் ஏற்கனவே 14,000 உயிர்களைக் கொன்றுள்ளதோடு குறைந்தபட்சம் 3.5 மில்லியன் மக்களை மனிதாபிமான உதவி தேவைப்பட வைத்துள்ளது — இது உக்ரேனின் மக்கள்தொகையில் கிட்டத்தட்ட பத்தில் ஒரு பங்காகும்.
வியாழன் முதல், மழலையர் பள்ளி மற்றும் பள்ளிகள் உட்பட டொனெட்ஸ்க் முழுவதும் பொதுமக்கள் உள்கட்டமைப்பு, ஷெல் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது.
டொனெட்ஸ்கில் உள்ள பிரிவினைவாதிகளின் கூற்றுப்படி, உக்ரேனிய இராணுவத்தின் ஷெல் தாக்குதலில் ஒரு பொதுமகன் கொல்லப்பட்டுள்ளார்.
வெள்ளியன்று, டொனெட்ஸ்க் மற்றும் லுகான்ஸ்கில் உள்ள பிரிவினைவாதிகள் 18 முதல் 55 வயதுடைய ஆண்களைத் தவிர்த்து, குடிமக்களை ரஷ்யாவிற்கு பெருமளவில் வெளியேற்றும் பணியைத் தொடங்கினர். இதுவரை, குறைந்தபட்சம் 49,000 பேர் ரஷ்யாவிற்கு வந்துள்ளதாக கூறப்படுகிறது, அவர்களில் பெரும்பாலோர் ரோஸ்டோவ் (Rostov) பிராந்தியத்தில் உள்ளனர். வெள்ளிக்கிழமை முதல் எல்லையை கடக்க பல மைல்கள் நீளமான கார்கள் வரிசையில் காத்திருக்கின்றன.
டொனெட்ஸ்கில் இருந்து மட்டும் 700,000 பெண்கள், குழந்தைகள் மற்றும் முதியவர்கள் வெளியேற்றப்படலாம். இந்த மக்களில் பெரும்பாலோர் தப்பிச் செல்ல நிர்பந்திக்கப்படுவதற்கு முன்பே முற்றிலும் ஏழ்மையில் இருந்த நிலையில், அவர்கள் இப்போது தங்கள் உடமைகள் அனைத்தையும் இழந்துள்ளனர் மற்றும் ரஷ்யாவில் ஒரு பேரழிவுகரமான சமூக மற்றும் பொது சுகாதார நிலைமையை எதிர்கொள்கிறார்கள், அங்கே ஒவ்வொரு நாளும் 150,000 க்கும் மேற்பட்ட புதிய கோவிட்-தொற்றுக்கள் பதிவாகின்றன.
வார இறுதியில் சண்டைகள் தொடர்ந்து அதிகரித்ததால், பிரிவினைவாத அதிகாரிகள் ஆயுதம் ஏந்தக்கூடிய திறன் கொண்ட அனைத்து ஆண்களையும் தங்கள் கைகளில் ஆயுதங்களை எடுக்குமாறு அழைப்பு விடுத்தனர்.
திங்கள்கிழமை பிற்பகல் மாஸ்கோ நேரப்படி, ரஷ்ய இரகசிய சேவை FSB, உள்துறை அமைச்சகத்தின் துருப்புக்களுடன் சேர்ந்து துப்பாக்கிச் சூடு நடத்தி ஐந்து உக்ரேனிய துருப்புக்களைக் கொன்று, ஒருவரை சிறைபிடித்ததாகத் தெரிவித்தது. உக்ரேன் எல்லைக்கு அருகில் உள்ள ரோஸ்டோவில், உக்ரேனிய வெடிகுண்டுகள் வெடித்ததாக வெள்ளிக்கிழமை ரஷ்ய செய்திகளும் தெரிவித்திருந்தன.
திங்கட்கிழமை பிற்பகலில், புட்டின் ரஷ்யாவின் தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் அசாதாரண அமர்வைக் கூட்டி, டான்பாஸில் நிலைமை 'நெருக்கடியானதாக' மாறிவிட்டது என வாதிட்டார். கூட்டத்தில் 'மக்கள் குடியரசுகள்' என்று அழைக்கப்படும் டொனெட்ஸ்க் (DNR) மற்றும் லுகான்ஸ்க் (LNR) ஆகியவற்றின் தலைவர்களும் கலந்து கொண்டிருந்தனர். 2014 இல் கியேவில் நடந்த ஆட்சிக் கவிழ்ப்பை அடுத்து இரண்டும் ரஷ்ய சார்பு பிரிவினைவாதிகளால் உருவாக்கப்பட்டன. கூட்டத்தில், ஒருவர் பின் ஒருவராக ரஷ்ய முன்னணி அதிகாரிகள், இந்தக் குடியரசுகளை 'சுதந்திரம்' ஆனவை என ரஷ்யா அங்கீகரிப்பதற்கு ஆதரவாக வாதிட்டனர்.
திங்கள்கிழமை மாலை மாஸ்கோ நேரப்படி, புட்டின் நாட்டு மக்களுக்கு ஒரு மணி நேர நீண்ட உரை நிகழ்த்தினார். 1917 அக்டோபர் புரட்சியைக் கண்டித்து, உக்ரேன் 'போல்ஷிவிக், கம்யூனிச ரஷ்யாவின்' 'உருவாக்கம்' என்று கூறி, கம்யூனிச எதிர்ப்பு வசைப்பேச்சுடன் தொடங்கி, ஜாரின் ரஷ்ய சாம்ராஜ்யத்தையும் பல்வேறு ஜார் ஜெனரல்களையும் மகிமைப்படுத்த புட்டின் உரையின் பெரும்பகுதியை அர்ப்பணித்தார்.
நேட்டோவினால் ரஷ்யா முறையாக சுற்றி வளைக்கப்பட்டிருப்பதை அவர் சுட்டிக்காட்டினார். 2000 ஆம் ஆண்டு அமெரிக்க ஜனாதிபதி பில் கிளிண்டனிடம், நேட்டோவில் ரஷ்யா இணைவதை அமெரிக்கா ஆதரிக்குமா அல்லது இல்லையா எனக் கேட்டபோது 'மிகவும் ஆர்வமற்ற வகையில்' பதிலளித்ததாக புகார் கூறினார். ரஷ்ய ஜனாதிபதி பின்னர் 2014 ஆம் ஆண்டு அமெரிக்க ஆதரவுடன் ரஷ்யாவிற்கு ஏற்பட்டுள்ள தாக்கங்கள் பற்றி விரிவாக விவாதித்தார், இது அவரது வார்த்தைகளில் உக்ரேனை ஒரு 'காலனி' மற்றும் 'பொம்மை' ஆட்சியாக மாற்றியுள்ளது.
மார்ச் 2021 இல் உக்ரேன் ஒரு புதிய இராணுவ மூலோபாயத்தை ஏற்றுக்கொண்டு, ரஷ்யாவுடன் வெளிப்படையாக போருக்கு தயாராகி வருகிறது என புட்டின் குறிப்பிட்டார். பாதுகாப்பு உத்தரவாதங்களுக்கான ரஷ்யாவின் கோரிக்கைகளை அமெரிக்காவும் நேட்டோவும் புறக்கணித்து, உக்ரேனை நடைமுறையில் ஆயுதம் ஏந்தச்செய்த நிலையில், ரஷ்யாயின், 'தொண்டையில் கத்தியை வைத்துள்ளது' என்றார். கிழக்கு உக்ரேனில் ரஷ்யர்களுக்கு எதிரான 'இனப்படுகொலை' நடைபெற்று வருவதாகவும், 2015 இன் மின்ஸ்க் உடன்படிக்கைகளை கியேவ் அரசாங்கம் உண்மையில் புறக்கணித்துவிட்டதாகவும் புட்டின் குற்றம் சாட்டினார்.
இந்த அடிப்படையில், ரஷ்யாவின் பாதுகாப்பு நலன்களைப் பாதுகாப்பதற்கான ஒரே வழியாக, சுய பிரகடனம் செய்யப்பட்ட டொனெட்ஸ்க் மற்றும் லுகான்ஸ்க் ஆகியவற்றின் 'மக்கள் குடியரசு' பிரிவினைவாத பிரதேசங்களை அங்கீகரிப்பதாக புட்டின் கூறினார்.
பேச்சு முடிந்த உடனேயே, புட்டின் டொனெட்ஸ்க் (DNR) மற்றும் லுகான்ஸ்க் (LNR) ஐ 'சுதந்திரம்' ஆனவை என்று அங்கீகரித்து குடியரசுகளுக்கும் ரஷ்யாவிற்கும் இடையே நட்புறவு ஒப்பந்தங்களைத் தயாரிப்பதற்கு அழைப்பு விடுக்கும் இரண்டு ஆணைகளில் கையெழுத்திட்டார். அத்தகைய ஒப்பந்தம் கையெழுத்தாகும் வரை, ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் 'அமைதியைப் பாதுகாக்க' இரு குடியரசுகளுக்கும் துருப்புக்களை வழங்கும் என்றும் அந்த ஆணைகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. சிறிது நேரத்திற்குப் பின்னர், புட்டின் ரஷ்ய துருப்புக்களை டொனெட்ஸ்க் மற்றும் லுகான்ஸ்க்குக்கு அனுப்ப உத்தரவிட்டார்.
புட்டினின் பேச்சு 2008 நெருக்கடிக்குப் பின்னர் ரஷ்யப் பங்குச் சந்தையில் மிகக் கடுமையான சரிவுக்கு இட்டுச் சென்றது — 14 சதவிகிதத்திற்கும் மேல். திங்கட்கிழமை அமெரிக்காவில் விடுமுறை என்பதால், பெரும்பாலான விற்பனையானது ஐரோப்பிய மற்றும் பிராந்திய முதலீட்டாளர்கள் உட்பட ரஷ்ய முதலீட்டாளர்களால் மேற்கொள்ளப்பட்டது. அரசுக்கு சொந்தமான எண்ணெய் நிறுவனமான Rosneft மற்றும் Sberbank உட்பட ரஷ்யாவின் சில பெரிய நிறுவனங்கள் மற்றும் வங்கிகள் அவற்றின் மதிப்பில் 21 முதல் 25 சதவிகிதம் வரை இழந்தன. சர்வதேச சந்தைகளில், Brent எண்ணெய் விலை பீப்பாய் ஒன்றுக்கு 97 டாலருக்கு மேல் உயர்ந்தது, இது 2014 க்குப் பின்னர் அதிக விலையாகும்.
புட்டினின் நடவடிக்கை உக்ரேனின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டிற்கு எதிரானது என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பிடன் உடனடியாக கண்டனம் செய்தார் மற்றும் DNR மற்றும் LNR உடன் எந்த வர்த்தகத்தையும் தடைசெய்யும் ஆணையில் கையெழுத்திட்டார். ஆணையில், DNR மற்றும் LNR இன் அங்கீகாரத்தை 'அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு மற்றும் வெளியுறவுக் கொள்கைக்கு ஒரு வழக்கத்திற்கு மாறான மற்றும் அசாதாரண அச்சுறுத்தல்' என விவரித்தார். DNR மற்றும் LNR அதிகாரிகளுடன் வர்த்தகத்தில் ஈடுபடும் அல்லது நன்கொடை அளிக்கும் அனைவரும் இனி அமெரிக்காவிற்குள் நுழைய தடை விதிக்கப்படுவர்.
இதுவரை, அமெரிக்க ஆதரவு சவுதி அரேபியாவுடன் ஒரு வருடகால உள்நாட்டுப் போரில் ஈடுபட்டு வரும் யேமனில் உள்ள ஹூதி கிளர்ச்சியாளர்கள், டொனெட்ஸ்க் (DNR) மற்றும் லுகான்ஸ்க் (LNR) ஐ ரஷ்யா அங்கீகரிப்பதை ஆமோதித்துள்ளனர். நிக்கராகுவாவின் டானியல் ஒர்ட்டேகா, புட்டினின் முடிவை ஆதரிப்பதாகக் குறிப்பிட்டார், ஆனால் பிரிவினைவாத குடியரசுகளை உத்தியோகபூர்வமாக அங்கீகரிக்கவில்லை என்றும் குறிப்பிட்டார்.
செவ்வாய்க்கிழமை மேலும் பொருளாதார தடைகள் வரவுள்ளதாக அமெரிக்க அதிகாரிகள் அறிவித்தனர். ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியாவைப் போலவே ஐரோப்பிய ஒன்றியமும் இங்கிலாந்தும் கடுமையான பொருளாதாரத் தடைகளை அறிவித்தன.
தேசத்திற்கு ஒரு சுருக்கமான உரையில், ஏற்கனவே பிடனுடன் பேசிய உக்ரைனின் ஜனாதிபதி வோலோடிமிர் செலென்ஸ்கி, அவரது அரசாங்கம் அதன் இராணுவ அச்சுறுத்தல் மற்றும் உத்தியோகபூர்வ இராணுவ மூலோபாயத்தை தெளிவாக மீறி, 'அமைதியில்' மட்டுமே அக்கறை கொண்டுள்ளது என்று கூறினார். DNR மற்றும் LNR ஆகியவற்றை புட்டின் அங்கீகரிப்பது உக்ரேனின் பிராந்திய ஒருமைப்பாட்டிற்கு அச்சுறுத்தலாக உள்ளது என்றும் இந்த நிலைமைகளின் கீழ் உக்ரேனுக்கு 'தற்காப்பு' உரிமை உண்டு என்றும் அவர் வலியுறுத்தினார்.
திங்கட்கிழமையின் தீவிரநிலை; வான்வழிப் பிரிவின் 5,000 துருப்புக்களை போலந்துக்கும், 300 ஜவலின் ஏவுகணைகளை உக்ரேனுக்கும் அனுப்புதல் மற்றும் ஊடகங்களில் போர்ப் பிரச்சாரத்தை கட்டவிழ்த்து விடுவது உட்பட அமெரிக்காவும் நேட்டோவும் பொறுப்பற்ற முறையில் ரஷ்யாவுடன் பதட்டங்களைத் தூண்டிய வாரங்களுக்குப் பின்னர் வருகிறது,.
அமெரிக்க ஏகாதிபத்தியம் தனது உலகளாவிய மேலாதிக்கத்தை தக்கவைத்துக்கொள்ளும் முயற்சியின் பாகமாக, ரஷ்யாவைவும் முழு முன்னாள் சோவியத் ஒன்றியத்தையும் சுற்றி வளைத்து அடிபணிய வைக்கும் பல தசாப்த கால முயற்சியின் உச்சக்கட்டம்தான் கட்டவிழ்ந்திருக்கும் போர் நெருக்கடியாகும்.
அடிப்படையில், போருக்கான உந்துதல் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் சரிவு மற்றும் உலக முதலாளித்துவ அமைப்பின் ஆழமான நெருக்கடி ஆகியவற்றில் வேரூன்றியுள்ளது, இது COVID-19 தொற்றுநோயால் கடுமையாக துரிதப்படுத்தப்பட்டுள்ளது. ஒரு சமூக வெடிகுண்டின் மேல் அமர்ந்து கொண்டிருக்கும் அமெரிக்க ஆளும் வர்க்கம், குறிப்பாக, ஒரு போர் வெறிக்குள் தள்ளப்பட்டு, ஆளும் வர்க்கத்தினுள் இருக்கும் மகத்தான சமூக பதட்டங்களை வெளிப்புறமாகவும் நெருங்கிய அணிகளையும் திசைதிருப்ப ஒரு பாதையை தேடும் அவநம்பிக்கையில் தள்ளப்பட்டுள்ளது.
இந்த நிகழ்ச்சிப்போக்கால் கட்டவிழ்த்துவிடப்பட்ட இயக்கவியல் வேகமாக கட்டுப்பாட்டை மீறிச் சுழல்கிறது. பெப்ரவரி 14ன் அதன் அறிக்கையில், அனைத்துலகக் குழு எச்சரித்தது, “உக்ரேனில் ரஷ்யாவுடனான ஒரு போர், அது எப்படி தொடங்கினாலும் அல்லது ஆரம்ப கட்டங்களில் என்ன பாதையை எடுத்தாலும், அது கட்டுப்படுத்த முடியாததாக ஆகும். அது கட்டுப்பாடற்ற விரிவின் தர்க்கத்தின் பின்செல்லும். பிராந்தியத்திலுள்ள ஒவ்வொரு அரசும் அந்த மோதலுக்குள் இழுக்கப்படும். ஏழு நாடுகளைத் தொடும் கடற்கரைப் பரப்பைக் கொண்ட கருங்கடலானது, ககாசியா கடந்த பகுதி, காஸ்பியன் கடல் பகுதி பிராந்தியம், மத்திய ஆசியா மற்றும் அதனைத் தாண்டி விரிந்து செல்கின்ற, அதிகரித்துச் செல்லும் மோதலின் ஒரு கொதிகலனாக மாற்றப்படும்”.
தொழிலாளர்களும் இளைஞர்களும் தேவையான முடிவுகளை எடுக்க வேண்டும்: உலகப் போரின் அச்சுறுத்தலுக்கு எதிராக போராடுவதற்கான ஒரே வழி, ஒரு சோசலிச போர்-எதிர்ப்பு இயக்கத்தையும் தொழிலாள வர்க்கத்திற்குள் ஒரு புரட்சிகர தலைமையையும் கட்டமைப்பதாகும்.
பிப்ரவரி 26, சனிக்கிழமையன்று, உலக சோசலிச வலைத் தளம் ரஷ்யாவிற்கு எதிரான போருக்கான அமெரிக்க-நேட்டோ உந்துதலை எதிர்க்க ஒரு சர்வதேச இணைய கருத்தரங்கத்தை நடத்துகிறது. அனைவரையும் கலந்துகொள்ளுமாறு அழைக்கிறது. இந்த இணைப்புக்கு செல்வதன் மூலம் பதிவு செய்து கொள்ள முடியும்.
மேலும் படிக்க
- உக்ரேனை அடிபணிய வைக்கும் திட்டத்தை ரஷ்யா ஏற்கனவே தொடங்கியுள்ளதாக இங்கிலாந்து பிரதமர் ஜோன்சன் பொய் கூறுகிறார்
- டொன்பாஸில் பாரிய மக்கள் வெளியேற்றங்கள் தொடங்கும் போது உக்ரேனை ஆக்கிரமிக்க "புட்டின் முடிவெடுத்துள்ளார்" என்று பைடென் கூறுகிறார்
- டொன்பாஸில் குண்டுவெடிப்புகள் ஐரோப்பாவை போரின் விளிம்பிற்கு கொண்டு வருகின்றன