நோர்ட் ஸ்ட்ரீம் 2 தொடர்பான மோதல்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

திருடர்களிடையே மரியாதை இல்லை என்று ஒரு ஆங்கில பழமொழி கூறுகிறது. இது ரஷ்யாவிற்கு எதிராக நேட்டோவிற்கும் மற்றும் அதன் போர் தயாரிப்புகளுக்கும் பொருந்தும். அட்லாண்டிக்கின் இருபுறமும் உள்ள அரசாங்கங்கள் மாஸ்கோவை குற்றஞ்சாட்டி அச்சுறுத்துகையில், ஒரு பெரிய போர் எந்திரத்தை திரட்டி தங்களுக்கிடையிலான உடன்பாடு பற்றி ஒருவருக்கொருவர் உறுதியளித்தாலும், அவர்கள் நீண்டகாலமாக கத்திகளை தங்கள் முதுகுக்குப் பின்னால் வைத்திருக்கின்றனர்.

20 ஆம் நூற்றாண்டின் போர்களைப் போலவே, ரஷ்யாவுடனான தற்போதைய மோதலில் மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த மூலப்பொருட்களின் மீதான கட்டுப்பாடும் முக்கிய பங்கு வகிக்கிறது. முதல் உலகப் போர் ஜேர்மனியின் ரூஹர் பிரதேசத்திலிருந்த நிலக்கரி மற்றும் அல்சாஸ்-லோரெய்னின் பிராந்தியத்திலிருந்த உலோக தாதுப்பொருள் தொடர்புடையதாக இருந்ததைப் போன்று, இரண்டாம் உலகப் போரின்போதும், அதற்குப் பின்னரும் எண்ணெய் மிக முக்கியமான எரிபொருள் மூலஆதாரமாக முன்னுக்கு வந்தது.

முக்ரானில் நோர்ட் ஸ்ட்ரீம் 2 குழாய்கள் (Image: Gerd Fahrenhorst / CC BY-SA 4.0 / wikimedia)

இதற்கிடையில், இயற்கை எரிவாயுவும் அதிக முக்கியத்துவம் பெற்றுள்ளது. இது எண்ணெய் மற்றும் நிலக்கரியை விட சற்றே சுற்றுச்சூழல் மாசற்றதாக இருக்கின்றது. கடந்த 30 ஆண்டுகளில், உலகளாவிய எரிவாயு உற்பத்தி இரு மடங்காக அதிகரித்துள்ளபோது, அதேநேரத்தில் எண்ணெய் உற்பத்தி 25% மட்டுமே அதிகரித்துள்ளது. தற்போது, உலகின் எரிசக்தி தேவைகளில் சுமார் 30 சதவீதம் எண்ணெய் மூலமாகவும், 27 சதவீதம் நிலக்கரி மூலமாகவும், 24 சதவீதம் இயற்கை எரிவாயு மூலமாகவும் பூர்த்தி செய்யப்படுகின்றது. அமெரிக்காவிற்கு அடுத்ததாக உலகின் இரண்டாவது பெரிய இயற்கை எரிவாயு மற்றும் எண்ணெய் உற்பத்தியாளராக ரஷ்யா உள்ளது. இது இதுவரை மிகப்பெரிய இயற்கை எரிவாயு ஏற்றுமதியாளராகவும், சவுதி அரேபியாவுக்கு அடுத்து இரண்டாவது பெரிய எண்ணெய் ஏற்றுமதியாளராகவும் உள்ளது.

மூன்று தசாப்தங்களுக்கு முன்னர் வார்சோ ஒப்பந்தம் மற்றும் சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்டதிலிருந்து, நேட்டோ ரஷ்யாவின் எல்லைகளுக்கு மிக நெருக்கமாக நகர்ந்துள்ளது. இந்த மிகப்பெரிய ஏகாதிபத்திய இராணுவ கூட்டணி, அதன் பரந்த கனிம வளங்களுக்கு வரம்பற்ற அணுகலைப் பெற்று, நாட்டை அடிபணியச் செய்து, ஒரு இராணுவ போட்டியாளராக அது இருப்பதை அகற்றும் வரை ஓயப்போவதில்லை.

இதுவும் மற்றும் தீர்க்கமுடியாதுள்ள சிக்கலான உள்நாட்டு அரசியல் நெருக்கடியும் தான் பாதுகாப்பு உத்தரவாதங்களுக்கான ரஷ்யாவின் கோரிக்கையை பூர்த்தி செய்ய அமெரிக்காவோ அல்லது ஐரோப்பிய சக்திகளோ தயாராக இல்லாமல் இருப்பதற்கும் மற்றும் மூன்றாம் உலகப் போருக்கு இரக்கமின்றி செல்வதற்கான காரணங்களாகும். ஆனால் இம்மோதலின் சுமையை யார் தாங்குவது மற்றும் இறுதியில் யார் கொள்ளையடிக்கப்பட்டவற்றுக்கு உரிமை கோருவது என்ற கேள்வி தொடர்பாக நேட்டோவினுள் கடுமையான பதட்டங்கள் உள்ளன.

இதுதான் நோர்ட் ஸ்ட்ரீம் 2 எரிவாயு குழாய் மீதான மோதலின் பின்னணியிலும் இருக்கிறது. இதனை செயல்பாட்டுக்கு வராது தடுப்பதற்கு அமெரிக்கா நீண்ட காலமாக வலியுறுத்தி வருகிறது. அதிபர் ஓலாஃப் ஷோல்ஸின் வாஷிங்டனுக்கான முதல் விஜயத்தின் போது ஜனாதிபதி பைடென் இதனை வெளிப்படையாக அச்சுறுத்தி 'அதற்கு முற்றுப்புள்ளி வைக்க' விரும்பினார். ரஷ்யாவிற்கு எதிரான சாத்தியமான பொருளாதாரத் தடைகளின் பட்டியலில் நோர்ட் ஸ்ட்ரீம் 2 ஐ வைக்க ஷோல்ஸ் நீண்ட காலமாக தயங்கி, மேலும் தொடர்ந்து இந்தக் கேள்வியை தவிர்க்கிறார்.

10 மில்லியன் யூரோ செலவிலான நோர்ட் ஸ்ட்ரீம் 2 அமெரிக்க தடைகள் இருந்தபோதிலும் கடந்த ஆண்டு பூர்த்திசெய்யப்பட்டது. ஆனால் இறுதியாக நடவடிக்கைக்கான அனுமதிக்காக இன்னும் காத்திருக்கிறது. 1,250 கிலோமீட்டர் குழாய் பால்டிக் கடலின் கீழாக ரஷ்யாவை நேரடியாக ஜேர்மனியுடன் இணைக்கிறது. இது உக்ரேன், பெலாருஸ், போலந்து மற்றும் பிற கிழக்கு ஐரோப்பிய நாடுகளைத் தவிர்த்து விடுகிறது. ஏனெனில் அவை தமது நாடுகளின் ஊடாக அதிக போக்குவரத்து கட்டணங்களை விதிப்பதுடன் மற்றும் ஒரு மோதல் ஏற்பட்டால் எரிவாயு குழாயை மூடிவிடக்கூடும்.

நோர்ட் ஸ்ட்ரீம் 2, 2011 இல் திறக்கப்பட்ட நோர்ட் ஸ்ட்ரீம் 1 இன் இணையாக வினியோகத்திறனை ஆண்டுக்கு 110 பில்லியன் கன மீட்டராக இரட்டிப்பாக்குகிறது. இது கிட்டத்தட்ட 90 பில்லியன் கன மீட்டர் என்ற தற்போதைய ஜேர்மன் ஆண்டு நுகர்வைவிட கணிசமாக அதிகமாகும். இருப்பினும், அணு மற்றும் நிலக்கரி எரிசக்தி ஆற்றலிலிருந்து வெளியேறுதல் மற்றும் மின்சார இயக்கத்தில் இயங்கும் வாகனங்களுக்கான மின்சாரத்திற்கான தேவை அதிகரித்து வருவதால் அடுத்த பத்து ஆண்டுகளில் ஜேர்மன் எரிவாயு நுகர்வு கணிசமாக அதிகரிக்கும். விரிவான ஐரோப்பிய எரிவாயு குழாய் வலைப்பின்னல் வழியாக ஆஸ்திரியா, செக் குடியரசு மற்றும் பிரான்ஸ் போன்ற ஏனைய நாடுகளுக்கும் வழங்குகிறது. ஐரோப்பா முழுவதும் தற்போது ரஷ்யாவிலிருந்து ஆண்டுக்கு 160 பில்லியன் கன மீட்டர் எரிவாயுவைப் பெறுகிறது.

நோர்ட் ஸ்ட்ரீம் 2 இனை இயக்காதுவிடுவது ஜேர்மனியின் எரிசக்தி தேவைகளுக்கு நேரடியாக ஆபத்தை ஏற்படுத்தாது. ஜேர்மனி தற்போது அதன் எரிவாயுவில் 55 சதவீதத்தையும், அதன் எண்ணெய் தேவைகளில் 42 சதவீதத்தையும் ரஷ்யாவிலிருந்து தற்போதுள்ள குழாய்வழிகள் வழியாக பெறுகிறது. இருப்பினும், உக்ரேனிய மோதலின் விரிவாக்கமானது தற்போதுள்ள குழாய்களை மூடுவதற்கு அல்லது ரஷ்ய விநியோகங்களை முழுமையாக நிறுத்த வழிவகுத்தால் ஆபத்தை ஏற்படுத்தும். ரஷ்யா SWIFT நாணய பரிமாற்று அமைப்முறையிலிருந்து விலக்கப்பட்டால், இனி சர்வதேச கொடுப்பனவுகளை செயற்படுத்த முடியாவிட்டாலும் இதுபோன்ற விநியோக முடக்கம் ஏற்படலாம்.

இவ்வாறு நிகழ்ந்தால், நூறாயிரக்கணக்கான ஜேர்மன் குடும்பங்கள் உண்மையில் குளிரினால் பாதிக்கப்படுவது மட்டுமல்லாமல், எரிசக்தி இல்லாததால் உற்பத்தியின் சில பகுதிகளும் ஸ்தம்பிக்கும். தொழில்துறை 35 சதவீத பங்கைக் கொண்டு ஜேர்மனியில் மிகப்பெரிய எரிவாயு நுகர்வோர் ஆகும். பல தொழில்முறைகளில் இயற்கை எரிவாயுவை வேறு ஒன்றால் பிரதியீடு செய்வது கடினம். 30 சதவிகிதத்துடன் இரண்டாவது பெரிய எரிவாயு நுகர்வோர் கொண்ட தனியார் வீடுகளாகும். ஒவ்வொரு இரண்டாவது ஜேர்மன் குடியிருப்பும் இயற்கை எரிவாயுவால் சூடேற்றப்படுகின்றது.

ஜேர்மன் அரசாங்கமும் ஐரோப்பிய ஒன்றியமும் தீவிரமாக ஒரு மாற்றீட்டைத் தேடுகின்றன. தற்போதுள்ள எரிவாயு சேமிப்பு வசதிகள் மோதுமானளவு நிரப்பப்படாமல், ரஷ்யாவிற்கு அடுத்த மிகமுக்கிய வினியோகஸ்தரான நோர்வே மற்றும் நெதர்லாந்து தங்கள் திறனின் எல்லையில் இருப்பதால், திரவமாக்கப்பட்ட இயற்கை திரவ எரிவாயு (liquefied natural gas - LNG) மட்டுமே ஒரு விருப்ப தேர்வாக உள்ளது. இருப்பினும், இது குழாய் வாயுவை விட கணிசமாக அதிக விலையானது. ஏனெனில் இது -160 பாகைக்கு குளிரவைக்கப்பட்டு இதற்கான தனி முனையங்கள் மூலம் ஏற்றி இறக்கப்பட்டு சிறப்பு தாங்கிகளால் கொண்டு செல்லப்பட வேண்டும். ஜேர்மனியில் இன்னும் அதற்கான சொந்த திரவஎரிவாயு முனையம் இல்லை.

உலகின் மிகப்பெரிய திரவஎரிவாயு ஏற்றுமதியாளரான கட்டார், அங்கிருந்து வினியோகத்திற்காக நம்பியிருக்கும் ஆசிய மற்றும் வளரும் நாடுகளின் இழப்பில், ஐரோப்பாவிற்கு அதிகமாக வழங்க முன்வந்துள்ளது.

அமெரிக்காவும் உதவியளிக்க தயாராக இருப்பதாக காட்டிக்கொள்ளகின்றது. Handelsblatt இன் கூற்றுப்படி, இது குறித்து விவாதிக்க 'ஐரோப்பிய ஒன்றிய ஆணையத்தின் உயர் அதிகாரிகள் தற்போது வாஷிங்டனில் உள்ள தேசிய பாதுகாப்பு குழுவின் நிபுணர்களை கிட்டத்தட்ட ஒவ்வொரு நாளும் ஒட்டுக்கேட்கமுடியாத இணைப்புக்கள் மூலம் சந்தித்து வருகின்றனர்' என்றது.

இதில் சுயநலம் இல்லாமல் அமெரிக்கா செயல்படவில்லை. உலகின் இயற்கை எரிவாயுவில் ஐந்தில் ஒரு பகுதியை நுகரும் நாடு, Fracking தொழில்நுட்பத்தின் மூலம் ஒரு பெரிய திரவஎரிவாயு ஏற்றுமதியாளராக மாறியுள்ளது. மிகவும் இலாபகரமான வணிகமான இதனால் உக்ரேன் நெருக்கடி காரணமாக இல்லாமலே எரிவாயு விலை, சாதனை அளவை எட்டியுள்ளது. Reuters அறிக்கையின்படி, அமெரிக்காவிலிருந்து திரவஎரிவாயு கப்பல்கள் ஏற்கனவே ஐரோப்பாவிற்கு திருப்பி விடப்பட்டுள்ளன. ஏனெனில் இங்குள்ள சந்தை விலை ஆசியாவை விட மிக அதிகமாகும்.

Handelsblatt உக்ரேனில் ஒரு போர் ஏற்பட்டால் 'சந்தைகளில் அதிர்ச்சி அலைகளை' எதிர்பார்க்கின்றது: 'ஐரோப்பிய பங்குகள் பத்து சதவீதம் வரை சரிந்து விடும், கச்சா எண்ணெய் பீப்பாய்க்கு 100 டாலராக உயரும். எரிவாயு விலை ஐந்தில் ஒரு பங்கு வரை இன்னும் அதிகரிக்கும்” என்கிறது. பெரும்எரிசக்தி நிறுவனமான RWE இன் தலைவர் மார்கூஸ் கிரெப்பர் பின்வருமாறு எச்சரிக்கிறார்: 'அதிக தொழில்துறை விலைகள் படிப்படியாக தொழில்மயமாக்கலின் குறைப்பிற்கு வழிவகுக்கும் என்று நான் பயப்படுகிறேன். யாரும் அதை கவனிக்க மாட்டார்கள்” என்றார்.

அமெரிக்காவிலிருந்து அதிகளவு திரவஎரிவாயுவை வாங்குவதும் ஜேர்மனியை நீண்ட காலத்திற்கு அமெரிக்காவை அதிகம் சார்ந்திருக்க செய்யும். ரஷ்யாவிலிருந்து எண்ணைய் மற்றும் எரிவாயு இறக்குமதி முன்னாள் சான்ஸ்லர் வில்லி பிராண்டின் கிழக்கு கொள்கைகளின் போது 1970களின் ஆண்டுகளில் ஆரம்பித்தது. அந்த நேரத்தில், ஜேர்மன் எஃகு ஆலைகள் குழாய்திட்டத்திற்கான குழாய்களை ரஷ்யாவிற்கு வழங்கின. பின்னர் அவை எரிவாயு ஏற்றுமதியால் அதற்கான விலை செலுத்தப்பட்டது. இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய காலத்தின் முதல் பெரிய பொருளாதார நெருக்கடியின் மத்தியில், ஜேர்மனி இதனால் அமெரிக்காவிலிருந்து அதிக சுதந்திரமாக இயங்கக்கூடியதாக இருந்தது.

முதல் உலகப் போருக்குப் பின்னர், அமெரிக்கா முதன்முதலில் ஐரோப்பாவில் முன்னணி உலக சக்தியாக தோன்றியபோது, லியோன் ட்ரொட்ஸ்கி முதலாளித்துவ ஐரோப்பாவை 'மட்டுப்படுத்தப்பட்ட நிலையில்' வைக்கும் என எழுதினார்: 'இது விற்பனை சந்தையின் பிரதேசங்களை அனைத்து வருபவர்களுக்கும் வடிவமைக்கும். இது ஐரோப்பிய நிதியாளர்கள் மற்றும் தொழிலதிபர்களின் செயல்பாட்டை தீர்மானிக்கும்... இதன் பொருள் என்னவென்றால், அனைத்து பொருட்களிலும் எத்தனை டன், லிட்டர் அல்லது கிலோகிராம் வாங்க அல்லது விற்க அனுமதிக்கப்படுகிறது என்பதை அமெரிக்கா ஐரோப்பாவுக்கு கூறும்.' (லியோன் ட்ரொட்ஸ்கி, ஐரோப்பாவும் அமெரிக்காவும், எசென் 2001, பக்கம். 245)

இது; இப்போது மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ரஷ்யாவுக்கு எதிரான போர் முன்னணியில் சேர அனைத்து நேட்டோ அங்கத்து நாடுகளுக்கும் வாஷிங்டன் அழுத்தம் கொடுக்கிறது. மேலும் ஜேர்மனியும் ஐரோப்பிய ஒன்றியமும் மிகவும் பலம்மிக்கதாகி விடக்கூடாது என்பதில் கவனமாக உள்ளது. எவ்வாறியினும், ஜேர்மன் ஊடகங்களிலும் கட்சிகளிலும், போரின் போக்கை எதிர்க்கும் குரலேதும் இல்லை.

2003 ஆம் ஆண்டில், ஜேர்மன் மற்றும் பிரெஞ்சு அரசாங்கங்கள் ஈராக் மீதான அமெரிக்க படையெடுப்பிற்கு எதிராக தெளிவாக நின்றன. ஏனெனில் இது அப்பிராந்தியத்தில் அவர்களது சொந்த ஏகாதிபத்திய நலன்களை பாதித்தது. அந்த நேரத்தில், பழமைவாத கோலிஸ்டான பிரெஞ்சு வெளியுறவு மந்திரி டொமினிக் டு வில்ப்பன், அமெரிக்க போர் திட்டங்களுக்கு எதிராக ஐக்கிய நாடுகள் சபையில் தீப்பொறி பறக்கும் உரையை நிகழ்த்தினார். ஈராக் போருக்கு எதிராக உலகம் முழுவதும் மில்லியன் கணக்கானவர்கள் வீதிகளில் இறங்கினர்.

இன்று, அரசியல்வாதிகளும் ஊடகங்களும் அமெரிக்க அரசாங்கத்திற்கு தங்கள் ஆதரவையும் அதற்கான விலையை செலுத்துவதற்கான தமது விருப்பத்தையும் உறுதிப்படுத்துவதில் ஒருபோதும் சோர்வடையவில்லை. சமாதானத்திற்கான இயக்கம் முற்றிலும் வீழ்ச்சியடைந்துவிட்டது.

பொருளாதாரரீதியாக பின்னடைவுகளைத் தருவதாக இருந்தாலும், பொருளாதாரத் தடைகளுக்கு ஜேர்மனி தயாராக இருக்க வேண்டும் என பசுமை வெளியுறவு மந்திரி அன்னலேனா பெயபொக் நாடாளுமன்றத்திற்கு உறுதியளித்தார். இதனை கிறிஸ்தவ ஜனநாயக ஒன்றியம் (CDU) பாராட்டியது. 'எங்களை பாதிக்காமல்விட்டால் மட்டுமே நாங்கள் பொருளாதாரத் தடைகளை ஏற்றுக்கொள்வோம் என புட்டினுக்குத் தெரிந்தால், அவை அவரையும் பாதிக்காது என்பதும் அவருக்கு தெரியும்' என கிறிஸ்தவ ஜனநாயக ஒன்றியத்தின் வெளியுறவுக் கொள்கை நிபுணர் ரோட்ரிச் கீஸவெட்டர் கூறினார்.

இந்த நிலைப்பாட்டிற்கு உள்நாட்டு மற்றும் வெளியுறவுக் கொள்கை காரணங்கள் உள்ளன.

ஆளும் வர்க்கம் விரும்பாதது என்னவெனில், அதன் தொற்றுநோய் பரப்பல் கொள்கை, சமூக சமத்துவமின்மை மற்றும் சமூக சீரழிவு ஆகியவற்றிற்கு எதிராக அபிவிருத்தியடைந்து வரும் எதிர்ப்போடு ஒரு போர் எதிர்ப்பு இயக்கம் தவிர்க்க முடியாமல் இணைவதாகும். அமெரிக்க ஆளும் வர்க்கத்தைப் போலவே, ஜேர்மன் ஆளும்வர்க்கமும் உள் பதட்டங்களை வெளியே நோக்கி திருப்புவதற்காக வழிமுறையாக போரைப் பயன்படுத்துகின்றனர்.

மேலும், கிழக்கு எப்போதுமே ஜேர்மன் ஏகாதிபத்தியத்தின் பாரம்பரிய விரிவாக்கத்திற்கான திசையாக இருந்து வருகிறது. இதற்கு அவர்கள் அமைதியான மற்றும் வன்முறையான வழிமுறைகளை பயன்படுத்துகின்றனர். முதலாம் உலகப் போரில் ஜேர்மனி உக்ரேனை ஆக்கிரமித்து ரஷ்யாவையும் பின்னர் இரண்டாம் உலகப் போரில் சோவியத் ஒன்றியத்தையும் கைப்பற்ற முயன்றது. இப்போது அது அமெரிக்காவுடன் சேர்கிறது. ஏனெனில் அது போரின் பின்னரான பங்கு பிரித்தலில் தான் விலக்கப்பட்டுவிடுமோ என அஞ்சுகிறது.

எவ்வாறாயினும், இது அட்லாந்திற்கு இடையிலான பதட்டங்களைக் குறைக்காது. மில்லியன் கணக்கான மனித உயிர்கள் இலாபத்திற்காக பலிகொடுக்கப்ப்பட்ட இரண்டு வருடகால தொற்றுநோய், முன்னோடியில்லாத வகையிலான சமூக சமத்துவமின்மை மற்றும் எப்போதுமே வெடிக்கக்கூடிய நிலையில் உள்ள ஒரு நிதிய அமைப்பு ஆகியவை கடந்த நூற்றாண்டை மனித வரலாற்றில் இரத்தக்களரியாக மாற்றிய முதலாளித்துவத்தின் அனைத்து முரண்பாடுகளையும் மீண்டும் கூர்மைப்படுத்துகின்றன. சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் ஒரு சோசலிச இயக்கம் மட்டுமே காட்டுமிராண்டித்தனத்தினுள் மீண்டும் வீழ்வதிலிருந்து தடுக்க முடியும்.

Loading