மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்
ஒமிக்ரோன் மாறுபாட்டின் விரைவான பரவல் காரணமாக கோவிட்-19 நோய்த்தொற்றுக்கள் மற்றும் மருத்துவமனைகளில் அதிகளவானோர் சேர்க்கப்பட்ட எழுச்சிக்கு மத்தியில், தொற்றுநோயைத் தடுக்கவும் உயிர்களைக் காப்பாற்றவும் தொழிலாள வர்க்கத்தின் வளர்ந்து வரும் இயக்கம் சர்வதேச அளவில் உருவாகி வருகிறது. இன்று, பிரான்ஸ் முழுவதிலும் உள்ள அனைத்து ஆரம்பப் பள்ளி ஆசிரியர்களில் 75 சதவீதம் பேர் நாடு தழுவிய வேலைநிறுத்தத்தில் பங்கேற்கின்றனர். இதனால் அனைத்து பிரெஞ்சு பள்ளிகளிலும் அரைவாசி மூடப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
புதன்கிழமை, உலகளவில் 3,145,916 பேர் உத்தியோகபூர்வமாக கோவிட்-19 நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் அமெரிக்காவில் 814,494, பிரான்சில் 363,719 மற்றும் இந்தியாவில் 241,976 பேர் உட்பட, ஏனைய ஐந்து நாடுகளில் 100,000 க்கும் மேற்பட்ட உத்தியோகபூர்வ புதிய தொற்றுக்குகள் பதிவாகியுள்ளன.
உலகளவில் மருத்துவமனைகளில் அனுமதிப்பது அதிகரித்து வருகின்றது. அமெரிக்காவில் இப்போது 140,000 க்கும் அதிகமானோரும், பிரான்சில் 23,000க்கும் அதிகமானோரும் ஐக்கிய இராச்சியத்தில் கிட்டத்தட்ட 20,000 பேரும் கோவிட்-19 க்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பிரான்சில் வேலைநிறுத்தத்திற்கு முன்பு, கடந்த வாரம் 25,000 சிகாகோ ஆசிரியர்கள் உள்ளூர், மாநில மற்றும் தேசிய மட்டங்களில் அனைத்து ஆசிரியர் சங்கங்களின் ஆதரவுடன் ஜனநாயகக் கட்சியால் பின்பற்றப்பட்ட பள்ளிகளை மீண்டும் திறக்கும் கொள்கைகளை மீறி, நேரடியான கற்றலை நிறுத்துவதற்கான சக்திவாய்ந்த கூட்டு நடவடிக்கையில் பங்கேற்றனர்.
திங்களன்று, சிகாகோ ஆசிரியர் தொழிற்சங்கங்கம் (CTU) ஜனநாயகக் கட்சி நகரசபை தலைவர் லோரி லைட்ஃபூட்டுடன் நகரின் பள்ளிகளை மீண்டும் திறக்க திடீரென ஒரு உடன்பாட்டை எட்டியது. சாமானிய ஆசிரியர்களிடையே பரவலான வெறுப்பை எதிர்கொண்டதால், தொழிற்சங்கம் ஆசிரியர்களுக்கு வாக்களிக்க ஒரு நாள் மட்டுமே அளித்து ஒப்பந்தத்தை நிறைவேற்றியது. அனைத்து சிகாகோ ஆசிரியர் தொழிற்சங்க உறுப்பினர்களில் 41 சதவீதம் பேர் மட்டுமே ஒப்பந்தத்திற்கு ஆதரவாக வாக்களித்தனர் மற்றும் 20 சதவீத உறுப்பினர்கள் வாக்களிக்கவில்லை.
சிகாகோ ஆசிரியர்களின் போராட்டத்தால் ஈர்க்கப்பட்டு, சான் பிரான்சிஸ்கோ மற்றும் ஓக்லாண்ட், கலிபோர்னியாவில் உள்ள ஆசிரியர்கள், கடந்த வாரம் முன்னறிவித்தலின்றி வேலைநிறுத்தங்களை நோய்வாய்ப்பட்ட இடங்களில் நேரில் கற்றலை நிறுத்துவதற்கு ஏற்பாடு செய்தனர். நியூ யோர்க் நகரம், மிச்சிகன், பென்சில்வேனியா, தெற்கு மற்றும் மேற்குக்கரைப் பகுதிகள் உட்பட, அமெரிக்கா முழுவதிலும் உள்ள ஆசிரியர்களால் தொழிற்சங்கங்களைச் சாராமல் கட்டமைக்கப்பட்ட சாமானிய குழுக்கள், கடந்த இரண்டு வாரங்களாக பரவலாகக் கலந்துகொண்ட இணையவழி சந்திப்புகளை ஏற்பாடு செய்துள்ளன. இது நாட்டின் ஒவ்வொரு பிராந்தியத்திலும் விரிவடைந்து வருகிறது.
இந்த வாரம் முழுவதும், நியூ யோர்க் நகரம், சிகாகோ, பாஸ்டன், ஓக்லாண்ட், போர்ட்லண்ட் மற்றும் பிற அமெரிக்க நகரங்களில் உள்ள உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் இணையவழி கற்றல் விருப்பத்திற்கு அழைப்பு விடுத்து ஆயிரக்கணக்கான கையொப்பங்களைப் பெற்றனர். செவ்வாயன்று, நியூ யோர்க் நகரத்தில் உள்ள 30 K-12 பள்ளிகளில் கிட்டத்தட்ட 1,000 மாணவர்கள் இணையவழி கற்றலுக்கு மாற்றக் கோரி வகுப்பை விட்டு வெளியேறினர். மேலும் வரும் நாட்களில் சிகாகோ மற்றும் ஓக்லாண்டிலும் இதேபோன்ற ஆர்ப்பாட்டங்கள் திட்டமிடப்பட்டுள்ளன.
கடந்த வார இறுதியில் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பின்படி, பெரும்பாலான அமெரிக்க வயது முதிர்ந்தவர்கள் இணையவழிக் கற்றலை ஆதரிக்கின்றனர். இதில் 63 சதவீதம் பேர் 50,000 டாலருக்கும் குறைவான வருமானம் கொண்டவர்கள்.
பிரித்தானியாவில், கோவிட்-19 நோய்த்தொற்றுகள் மற்றும் குழந்தைகளை மருத்துவமனையில் சேர்க்கப்படுவது சாதனை அளவை எட்டியுள்ளது. ஆசிரியர்களும் பெற்றோர்களும் பாதுகாப்பற்ற பள்ளிகளை மீண்டும் திறப்பதை நிறுத்துவதற்கான தங்கள் போராட்டத்தை தீவிரப்படுத்தி வருகின்றனர். கல்வியாளர் சாமானிய பாதுகாப்புக் குழு (UK) செவ்வாயன்று பரவலாகக் கலந்துகொண்ட ஒரு கூட்டத்தை நடத்தியது, இது முழு இணையவழி கற்றலுக்கு மாறுவதை கட்டாயப்படுத்தும் செயல் திட்டத்தை முன்வைத்தது.
புதன்கிழமை வெளியிடப்பட்ட ஒரு ஒளிப்பதிவில், அக்டோபர் முதல் தொடர்ச்சியான பள்ளி வேலைநிறுத்தங்களுக்கு தலைமை தாங்கிய பிரிட்டிஷ் தாயாரான லீசா டியஸ், சிகாகோ ஆசிரியர்களுக்கு தனது ஆதரவை தெரிவித்தார். 'நீங்கள் உங்களுக்காக மட்டுமல்ல, குழந்தைகளுக்காகவும் ஒரு நிலைப்பாட்டை எடுக்கிறீர்கள்' என்று அறிவித்தார். அவர் 'நான் இங்கிலாந்தில் இருந்து எனது அனைத்து ஒற்றுமையையும் அனுப்ப விரும்புகிறேன் மற்றும் ஒரு நிலைப்பாட்டை எடுத்ததற்கு நன்றி கூற விரும்புகிறேன். நான் இங்கு இருக்கும் போது, பிரான்சில் இருந்து அதையே செய்யும் அனைத்து ஆசிரியர்களுக்கும், வெளிநடப்பு செய்யும் அமெரிக்காவில் உள்ள குழந்தைகளுக்கும் என் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்” என்று முடித்தார்.
மெக்சிகோவின் ஹிடால்கோ மற்றும் பாஜாவில் பல்லாயிரக்கணக்கான ஆசிரியர்களை உள்ளடக்கிய வேலைநிறுத்தங்கள் தொடங்கியுள்ளன. ஊதியம் தொடர்பான ஒப்பந்தப் பிரச்சினைகளில் முதன்மை கவனம் செலுத்தப்பட்டாலும், இந்த வேலைநிறுத்தங்கள் கோவிட்-19 நோய்த்தொற்றுகள் விண்ணளவில் அதிகரித்து வரும் நிலையில் பள்ளிகள் கட்டாயமாக மீண்டும் திறக்கப்படுவதுடன் தொடர்புபட்டே நடந்துள்ளது.
பள்ளிகள் மீண்டும் திறப்பதற்கு எதிராக ஆசிரியர்கள் மற்றும் இளைஞர்களின் வளர்ந்து வரும் சர்வதேசப் போராட்டம், பெருநிறுவன மற்றும் நிதிய உயரடுக்கின் சார்பாக உலக அரசாங்கங்களால் இந்த கொடிய கொள்கையை உலகளாவிய முறையில் செயல்படுத்துவதற்கு விடையிறுப்பாக வருகிறது.
உலகம் முழுவதிலும், குறிப்பாக அமெரிக்காவிலும் ஐரோப்பா முழுவதிலும், முதலாளித்துவ அரசாங்கங்கள் ஒமிக்ரோன் மாறுபாட்டின் தோற்றத்திற்கு பதிலளிப்பதன் மூலம், தொற்றுநோயைத் தடுப்பதை நோக்கமாகக் கொண்ட அனைத்து பாசாங்குகளையும் கைவிட்டன. 'தணிப்புகள்' மற்றும் 'தொற்றுநோயை முடிவுக்கு கொண்டுவருதல்' பற்றிய அனைத்து பேச்சுகளும் மறைந்துவிட்டன. அதற்கு பதிலாக, அவர்கள் இப்போது மிகவும் வலதுசாரி அரசாங்கங்களால் முன்பு பின்பற்றப்பட்ட 'சமூகநோய் எதிர்ப்பு சக்தி பெருக்கும்' மூலோபாயத்தை வெளிப்படையாக ஆதரிக்கின்றனர். இது விரைவில் காவிகள் இல்லாமல் போய் மற்றும் நிரந்ததரமானதாக மாறும் என்ற விஞ்ஞானபூர்வமற்ற நம்பிக்கையின் அடிப்படையில் வைரஸின் கட்டுப்பாடற்ற பரவலை அனுமதிப்பதில் அவர்கள் உறுதியாக உள்ளனர்.
அமெரிக்காவில், பைடென் நிர்வாகமும் அதன் பிரதிநிதிகளும் இன்னும் வெளிப்படையாக முழு மக்களையும் நோய்த்தொற்றுக்கு அனுமதிக்க விரும்புவதாகக் கூறுகின்றனர். செவ்வாயன்று, அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் முன்னணி சிந்தனைக் குழுக்களில் ஒன்றான மூலோபாய மற்றும் சர்வதேச ஆய்வுகளுக்கான மையம், 'டாக்டர். அந்தோனி பௌசியுடன் ஒரு கலந்துரையாடலை' வெளியிட்டது. அந்த நேர்காணலில், பைடெனின் தலைமை மருத்துவ ஆலோசகர், ஓமிக்ரோன் 'இறுதியில், எல்லோரையும் பிடிக்கும்' என்று கடுமையான அலட்சியத்துடன் அறிவித்தார்.
தடுப்பூசி போடப்பட்ட நபர்களைப் பற்றி பௌசி பின்வருமாறு கூறினார். 'சிலரோ அல்லது ஒருவேளை அவர்களில் பலர் நோய்த்தொற்றுக்கு ஆளாவார்கள்' மற்றும் 'சாதாரணமாக நலமடைவார்கள்' என்றார். பௌசி மேலும் கூறினார், 'இன்னும் தடுப்பூசி போடப்படாதவர்கள் நோயின் கடுமையான வடிவத்தில் பாதிப்பைப் பெறுவார்கள்,' மேலும் சில பகுதியினர் 'தீவிரமாக நோய்வாய்ப்பட்டு இறக்கப் போகிறார்கள்.' இது 'எங்கள் சுகாதார அமைப்புக்கு சவால் விடும்' என்ற உண்மையை மட்டுமே பௌசி புலம்பினார்.
பள்ளிகளை மீண்டும் திறப்பது இரண்டு காரணங்களுக்காக 'சமூக நோய் எதிர்ப்பு சக்தி பெருக்கும்' மூலோபாயத்தின் மையமாக உள்ளது. முதலில், பெற்றோரை வேலைக்குத் திரும்ப கட்டாயப்படுத்த மாணவர்களை வகுப்பிற்குத் திரும்பச் செய்வது அவசியம். இரண்டாவதாக, நெரிசலான மற்றும் மோசமான காற்றோட்டம் கொண்ட பள்ளிக் கட்டிடங்கள் வைரஸ் பரவுதலின் மையங்களாக இருக்கின்றன. இதனால் கோவிட்-19 முடிந்தவரை விரைவாக பரவி, மாணவர்கள், ஆசிரியர்கள், அவர்களது குடும்பங்கள் மற்றும் அவர்களது சமூகங்களை விரைவாகப் பாதிக்கிறது.
பிரெஞ்சு ஆசிரியர்களின் இன்றைய வேலைநிறுத்தத்தைத் தூண்டியது என்னவென்றால், கோவிட்-19 தொற்றுக்கள் வெடித்ததால் பள்ளிகளைத் திறந்து வைக்கும் வகையில் மீண்டும் திறக்கும் வழிமுறைகளை மக்ரோன் அரசாங்கம் மாற்ற முயற்சித்தமையாகும். ஒரு வாரத்திற்குள், இந்த நெறிமுறைகள் தெளிவாக பேரழிவை ஏற்படுத்தியதால், சாமானிய ஆசிரியர்களை தீடீரென வேலைநிறுத்தம் செய்யுமாறு உந்தியது.
சிகாகோவில், சிகாகோ ஆசிரியர் தொழிற்சங்கங்கம் இப்போது ஒரு கொள்கையை செயல்படுத்துகிறது. இதன் மூலம் 30 சதவீதத்திற்கும் அதிகமான ஊழியர்கள் அல்லது 40 சதவீத குழந்தைகள் கோவிட்-19 நோயால் பாதிக்கப்பட்டிருந்தால் அல்லது அதை எதிர்கொண்டதன் காரணமாக தனிமைப்படுத்தப்பட்டால் மட்டுமே தனிப்பட்ட பள்ளிகள் மூடப்படும். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், அவர்களின் ஒப்பந்தம் பள்ளிகள் மற்றும் சமூகங்களில் பாரிய நோய்த்தொற்றுகளை ஏற்றுக்கொள்வதை முன்னறிவிக்கிறது.
'சமூக நோய் எதிர்ப்பு சக்தி பெருக்கத்திற்கு' எதிரான போராட்டம் என்பது ஒரு பொதுவான உலகளாவிய போராட்டமாகும். இது முதலாளித்துவ அமைப்புமுறைக்கு நேர் எதிராக, சர்வதேச தொழிலாள வர்க்கத்தால் பெருகிய முறையில் முன்னெடுக்கப்படுகிறது. அதன் இயல்பிலேயே, தொற்றுநோயை ஒரு தேசிய அடிப்படையிலோ அல்லது அங்கு அதிகாரத்திலிருப்பவர்களிடம் முறையீடு செய்வதன் மூலமோ எதிர்த்துப் போராட முடியாது. தற்காலிக பூட்டுதல்களை விதிக்கவும், பள்ளிகள் மற்றும் அத்தியாவசிய உற்பத்திகளை மூடவும் மற்றும் கிடைக்கக்கூடிய அனைத்து பொது சுகாதார நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்தவும் ஒரு உலகளாவிய ஒருங்கிணைக்கப்பட்ட வெகுஜன இயக்கத்தின் ஊடாக மட்டுமே கோவிட்-19 அகற்றப்பட முடியும்.
ஒவ்வொரு நாட்டிலும் தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பெரும் சவால்களில் ஒன்று, அவர்களின் போராட்டங்களை தனிமைப்படுத்தப்பட்ட நிகழ்வுகளாகப் பார்க்காமல், உலகளாவிய செயல்முறையின் ஒரு பகுதியாகப் பார்ப்பதுதான். அவர்களது அனுபவங்களைப் பொதுமைப்படுத்தவும், உலகளவில் தங்கள் போராட்டங்களை ஒருங்கிணைக்கவும், தொழிலாளர்களுக்கு புதிய அமைப்பு வடிவங்கள் தேவைப்படுகின்றன. அவை ஜனநாயக ரீதியாக இயங்கும் மற்றும் தொழிலாளர்களுக்குப் பதிலளிக்கக்கூடிய குழுக்களாக இருக்கவேண்டும்.
ஆசிரியர்கள், வாகனத் தொழிலாளர்கள், சுகாதாரப் பணியாளர்கள், போக்குவரத்துத் தொழிலாளர்கள் மற்றும் தொழிலாள வர்க்கத்தின் பிற பிரிவுகள் மத்தியில் இத்தகைய பல குழுக்கள் நிறுவப்பட்டுள்ளன. அவை இப்போது சர்வதேச தொழிலாளர்களின் சாமானிய தொழிலாளர் குழுக்களின் (IWA-RFC) ஆதரவின் கீழ் ஒன்றுபட்டுள்ளன. இந்தக் குழுக்களின் வலையமைப்புடன் நெருங்கிய தொடர்புகளை உருவாக்கி, தொற்றுநோயைத் தடுக்கவும் உயிர்களைக் காப்பாற்றவும் தொழிலாள வர்க்கத்தின் வளர்ந்து வரும் இயக்கத்தை ஐக்கியப்படுத்தவும் வழிநடத்தவும் தீவிரமாகப் போராட வேண்டும்.
அதில் தீவிரமாக ஈடுபட விரும்புவோர், உங்கள் பள்ளி, குடியிருப்பு அல்லது பணியிடத்தில் சாமானிய தொழிலாளர் குழுவை உருவாக்க கீழே உள்ள படிவத்தை நிரப்புங்கள். உலக சோசலிச வலைத் தளம் இன்றே உங்களைத் தொடர்புகொள்ளும்.