ரஷ்யாவின் எல்லைகளில் நேட்டோ இராணுவ பிரசன்னத்தை அதிகரித்துள்ள நிலையில், "எங்களுக்கு மேலும் பின்வாங்குவதற்கு வேறு வழி இல்லை" என்று புட்டின் கூறுகிறார்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

செவ்வாயன்று ரஷ்யாவின் அதிகாரிகள் பிரிவினர், முழு பாதுகாப்பு அமைச்சகம் மற்றும் இராணுவ பள்ளிகளின் பயிற்சியாளர்கள் முன்பு ஒரு அசாதாரண உரையில், ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் ரஷ்ய அரசாங்கம் நேட்டோவுடன் ஒரு சாத்தியமான போருக்கு தயாராகி வருகிறது என்பதை தெளிவுபடுத்தினார்.

டிசம்பர் 23, 2021 வியாழன், ரஷ்யாவின் மாஸ்கோவில் தனது வருடாந்திர செய்தி மாநாட்டின் போது ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் சைகைகளில் பேசுகிறார் (AP Photo/Alexander Zemlianichenko)

உரையின் பெரும்பகுதிக்கு, சர்வதேச சட்டம் மற்றும் முந்தைய ஒப்பந்தங்களை முற்றிலும் புறக்கணித்து, அமெரிக்கா கடந்த மூன்று தசாப்தங்களில் நாடுகளை குண்டுவீசித் தாக்கிய சம்பவங்களை புட்டின் எடுத்துக்காட்டினார். அவர் ஈராக், லிபியா மற்றும் சிரியா மற்றும் குறிப்பாக, 1990களில் யூகோஸ்லாவியா மீதான குண்டுவீச்சை சுட்டிக்காட்டினார். ரஷ்யாவின் வடக்கு காகசஸில் உள்ள பிரிவினைவாத இஸ்லாமிய இயக்கங்கள் உட்பட ISIS மற்றும் பிற இஸ்லாமிய பயங்கரவாத அமைப்புகளுக்கு அமெரிக்கா ஆதரவளிப்பதாகவும் புட்டின் குற்றம் சாட்டினார்.

சமீபத்திய வாரங்களில், புட்டின் பல முக்கிய பகிரங்க அறிக்கைகளை வெளியிட்டு, 'யூகோஸ்லாவிய சூழ்நிலை' அதாவது, இன மோதல்கள், உள்நாட்டுப் போர்கள் மற்றும் ஏகாதிபத்திய குண்டுவீச்சுகள் ஆகியவற்றின் மூலம் மிகப் பெரிய அளவில், ரஷ்யாவில் நாடு உடைந்துபோகும் அபாயத்தை தூண்டுகிறது எனக் குறிப்பிட்டார்.

கியேவில் அரசாங்கத்துடன் இணைந்து பணியாற்றும் அமெரிக்கா, இரசாயன ஆயுதங்கள் உடன் இராணுவ ஆத்திரமூட்டலுக்கு தயாராகி வருவதாக கிரெம்ளின் அஞ்சுவதாக புட்டின் சுட்டிக்காட்டினார். 2014ல் அமெரிக்க மற்றும் ஐரோப்பிய ஒன்றிய ஆதரவு பெற்ற ஆட்சி கவிழ்ப்பு ரஷ்ய சார்பு அரசாங்கத்தை கவிழ்த்து, நடந்துகொண்டிருக்கும் உள்நாட்டுப் போரைத் தூண்டி, ரஷ்யாவின் எல்லைகளில் நேட்டோவை பெருமளவில் கட்டியெழுப்பிய உக்ரேனின் நிலைமையைச் சுட்டிக்காட்டிய புட்டின், இது 'எங்கள் வீட்டு வாசலுக்கு முன்பே' இவை நிகழ்வதால் நாங்கள் இதைப் புரிந்து கொள்ள வேண்டும், 'மேலும் பின்வாங்க வேறு வழி இல்லை' என்றார்.

புட்டின் மேலும், 'எங்கள் மேற்கத்திய சக கூட்டாளிகள் ஆக்கிரோஷமான பாதையை தொடர்ந்தால், நாங்கள் போதுமான இராணுவ-தொழில்நுட்ப நடவடிக்கைகளுடன் பதிலளிப்போம், [நாங்கள்] நட்புமுறையற்ற நடவடிக்கைகளுக்கு கடுமையாக பதிலளிப்போம்' என எச்சரித்தார்.

அமெரிக்கா மற்றும் நேட்டோவுடனான எந்தவொரு எழுத்துபூர்வ ஒப்பந்தங்கள் அல்லது உடன்படிக்கைகள் பயனற்றவை என்று கூறும்போது, அவர் சில 'சிவப்புக் கோடுகளை' ஒப்புக்கொள்ளும் வகையில் ரஷ்யாவிற்கான 'உத்தரவாதங்களுடன்' அத்தகைய ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதற்கான நேட்டோவின் தேவையை இரட்டிப்பாக்கினார். கிரெம்ளின் தன்னலக்குழு எவ்வளவு அவநம்பிக்கையான சூழ்நிலையில் தன்னைப் பார்க்கிறது என்பதை அடிக்கோடிட்டு, நேட்டோ சக்திகள் 'ஏதாவது, குறைந்தபட்சம்' கொடுக்க வேண்டும் என்று புட்டின் அழுதார்.

புட்டினின் உரைக்கு சில நாட்களுக்கு முன்பு, கிழக்கு உக்ரேனில் ரஷ்ய ஆதரவு பிரிவினைவாதிகளுடனான இராணுவ பலப்படுத்தல் நிலைப்பாட்டில் உக்ரேனை மேலும் ஆயுதபாணியாக்குவதை நிறுத்துவது மற்றும் கிழக்கு ஐரோப்பாவிற்கு அதன் துருப்புக்களை அதிகரிப்பதை நிறுத்துவது உட்பட நேட்டோ வழங்கவேண்டும் என்ற உத்தரவாதங்களின் பட்டியலை கிரெம்ளின் வெளியிட்டது. உக்ரேனை அங்கத்துவ நாடாக ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டோம் என்று நேட்டோ எழுத்துபூர்வ உத்தரவாதத்தை வழங்க வேண்டும் என்றும் ரஷ்ய அரசாங்கம் கோருகிறது.

அமெரிக்க மற்றும் ஐரோப்பிய ஒன்றிய அதிகாரிகள் ஏற்கனவே இந்தக் கோரிக்கைகளில் பலவற்றை 'ஏற்றுக்கொள்ள முடியாதவை' எனக் கருதுவதாகக் குறிப்பிட்டுள்ளனர். அமெரிக்காவும் ரஷ்யாவும் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் உக்ரேன் விவகாரம் தொடர்பான பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்க உள்ளன.

புட்டின் தனது உரையை வழங்கிய அதே நாளில், பைடென் நிர்வாகம் ரஷ்யாவிற்கும் உக்ரேனுக்கும் இடையே ஒரு போர் ஏற்பட்டால் புதிய பொருளாதாரத் தடைகள் பற்றி விவாதிக்க ஒன்று கூடியது. இது ரஷ்ய பொருளாதாரத்தை இதுவரை முன்னோடியில்லாத அளவில் தாக்கும். இப்போது விவாதிக்கப்படும் பொருளாதாரத் தடைகளில் ஆப்பிள் தயாரிப்புகளின் ஏற்றுமதியைத் தடை செய்வதும், ரஷ்யாவின் விமானம் மற்றும் வாகனத்துறைக்கு தேவையான முக்கியமான தொழில்நுட்பமும் அடங்கும்.

CNN மற்றும் BBCயின் முந்தைய அறிக்கைகள் உலகப் பொருளாதாரத்தில் ரஷ்ய வங்கிகள் மற்றும் நிறுவனங்களின் செயல்பாடுகளுக்கு முக்கியமான சர்வதேச நிதி பரிமாற்றங்களுக்கான அடிப்படையான SWIFT உடன்படிக்கையில் இருந்து ரஷ்யாவைத் துண்டிக்க அமெரிக்காவும் ஐரோப்பிய ஒன்றியமும் பரிசீலித்து வருகின்றன. இத்தகைய நடவடிக்கை ஏகாதிபத்திய சக்திகளால் பொருளாதாரப் போரில் 'அணுசக்தி' விருப்பம் என்று பரவலாக விவரிக்கப்படுவதுடன் மற்றும் ஏற்கெனவே உடையும் நிலையிலும், நெருக்கடியால் பீடித்துள்ள ரஷ்ய பொருளாதாரத்தின் ஒரு முற்றுமுழுதான உடைவினையும் அச்சுறுத்துகின்றது.

ஒரு சில நாட்களுக்கு முன்பு, சீனா மற்றும் ரஷ்யாவிற்கு எதிரான போருக்குத் தயாராவதை மைப்படுத்தி அமெரிக்க காங்கிரஸ் 770 பில்லியன் டாலர்கள் மதிப்பிலான போர் வரவு-செலவுத் திட்டத்தை நிறைவேற்றியது.

சமீப வாரங்களில் ரஷ்யாவின் எல்லைகளில் நேட்டோ தனது ஆத்திரமூட்டல்களையும் போர் தயாரிப்புகளையும் தொடர்ந்து முடுக்கிவிட்டுள்ளது. ஜேர்மன் Sueddeutsche Zeitung பத்திரிகையின் அறிக்கையின்படி, அமெரிக்க தளபதி டோட் வோல்டர்ஸ் டிசம்பர் 7 அன்று நேட்டோவின் 'தாக்குதல்முனை' பிரிவில் இருந்து 6,000 துருப்புக்கள் அணிதிரட்டப்பட வேண்டும் என்று முன்மொழிந்தார். இதனால் போர் ஏற்பட்டால், அவர்கள் ஐந்து நாட்களுக்குள் 'நெருக்கடி பிரதேசத்திற்கு' நகர்த்தப்படுவார்கள். வழக்கமாக, அத்தகைய தயாரிப்புகளுக்கு எதிர்பார்க்கப்படும் நேரம் குறைந்தது ஏழு நாட்கள் ஆகும். 'தாக்குதல்முனை' பிரிவு தற்போது துருக்கியில் நிலைநிறுத்தப்பட்டுள்ளது. ஆனால் 2023 இல் இது ஜேர்மனியை தளமாகக் கொண்டு செயல்படும். மற்ற சிறப்பு மற்றும் தளவாட பிரிவுகளும் உயர் எச்சரிக்கை நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

ஏகாதிபத்தியத்தின் அதிகரித்து வரும் அழுத்தத்திற்கு எவ்வாறு பதிலளிப்பது என்பதில் ரஷ்ய தன்னலக்குழுவிற்குள் திரைக்குப் பின்னால் உள்ள கசப்பான மோதல்களின் அறிகுறியாக, பிரிட்டிஷ் பைனான்சியல் டைம்ஸ் அல்லது அமெரிக்க வோல் ஸ்ட்ரீட் ஜேர்னலுக்கு சமமான ரஷ்ய வணிக நாளிதழான கொம்மர்சன்ட், புட்டினின் உரையை தலையங்கக் கட்டுரையாக வெளியிட்டது. அது சிடுமூஞ்சித்தனமான கருத்துக்களால் மூழ்கியிருந்தது. மேலும் உக்ரேனில் அமெரிக்காவின் இரசாயன ஆயுதங்களுடன் ஆத்திரமூட்டல் பற்றிய புட்டினின் எச்சரிக்கைகளை, ஈராக்கில் பேரழிவுகரமான ஆயுதங்கள் பற்றிய கொலின் பௌலின் இழிவான பொய்யுடன் ஒப்பிட்டது.

'இது ஏற்கனவே பனிப்போர் அல்ல, எல்லாமே மிகவும் சூடாகிவிட்டது' என்று எச்சரித்த கட்டுரை, மேலும் 'ஒரு புதிய ஆண்டு இருக்கும் என்ற ஒரு உறுதி கிடைப்பது நன்றாக இருக்கும்' என்று கேலிக்குரிய கருத்துடன் முடித்தது.

முன்னாள் சோவியத் ஒன்றியத்தில் மிகப் பெரிய அளவில் யூகோஸ்லாவியப் பேரழிவு மீண்டும் நிகழும் என்று நியாயமாகவே புட்டின் எச்சரித்தாலும், உண்மை என்னவென்றால், ரஷ்ய தன்னலக்குழு எப்போதும் வளர்ந்து வரும் போரின் ஆபத்துக்கு எந்த முற்போக்கான பதிலையும் கொண்டிருக்கவில்லை. டிசம்பர் 26 அன்று சோவியத் ஒன்றியம் ஸ்ராலினிசத்தால் கலைக்கப்பட்ட 30 ஆண்டு நிறைவை ரஷ்ய செய்தி ஊடகம் மௌனமாக கடந்து சென்றதையும், புட்டின் அதுபற்றி முற்றிலும் குறிப்பிடப்படாமல் போனதில் இது வெளிப்படுத்தப்படுகின்றது.

புட்டின் ஆட்சியும் ஒட்டுமொத்த ஆளும் தன்னலக்குழுவும் பல தசாப்தங்களாக அக்டோபர் புரட்சிக்கு துரோகம் செய்த மற்றும் 1991இல் சோவியத் ஒன்றியத்தை கலைத்த சோவியத் அதிகாரத்துவத்தில் இருந்து வெளிவந்தவையாகும். 1991 ஜனவரியில் அமெரிக்கா ஈராக்கைத் தாக்கி மூன்று தசாப்த காலம் நீடித்த ஏகாதிபத்திய கொள்ளையடிக்கும் போர்களில் அவர்கள் மாஸ்கோ அதிகாரத்துவத்தின் ஒப்புதலுடன் அவ்வாறு செய்தனர்.

சோவியத் அரசின் அழிவு மற்றும் அதன் சமூக வளங்களை சூறையாடுதல், அமெரிக்க முதலாளித்துவத்துடன் கைகோர்த்து நடத்தப்பட்ட கொள்ளை ஆகியவற்றில் கவனம் செலுத்தி, ரஷ்யாவில் புதிதாக உருவான தன்னலக்குழு ஏகாதிபத்தியத்துடனான சமாதான ஒத்துழைப்பின் சாத்தியக்கூறுகள் பற்றிய அவநம்பிக்கையில் சிக்கிக்கொண்டது. ஆயினும்கூட, ரஷ்யாவின் எல்லைகளுக்கு அருகில் செல்லாது என்பது உட்பட நேட்டோவுனான அனைத்து ஒப்பந்தங்களும் உத்தரவாதங்களும் ஒரு சில ஆண்டுகளுக்குள் துண்டு துண்டாக வெடித்தது.

இப்போது, ஏகாதிபத்திய சக்திகள் ரஷ்யாவிற்கு எதிரான போருக்கு வெளிப்படையாகத் தயாராகி வருவதால், புட்டின் ஆட்சியில் இருந்து வரும் ஒரே பதில், ஒருபுறம் பயனற்ற உறுதிமொழிகள் என புட்டின் தானே அங்கீகரிக்கும் ஒருதொடர் கெஞ்சுதல்கள் மறுபுறம் தேசியவாதத்தை முன்னெடுத்தல் மற்றும் இராணுவத் தயாரிப்பை மேம்படுத்துதல் ஆகியவையே.

ஏகாதிபத்திய தாக்குதல் அச்சுறுத்தலுக்கு தன்னலக்குழுவின் பிரதிபலிப்பின் முழு திவால்தன்மை அதன் வர்க்க நலன்களால் தீர்மானிக்கப்படுகிறது. அது தன்னை எதிர்கொள்ளும் மிகப்பெரிய எதிரி, ரஷ்ய மற்றும் சர்வதேச தொழிலாள வர்க்கமே தவிர ஏகாதிபத்தியம் அல்ல. வர்க்கக் கொள்கையின் அனைத்து முக்கியமான விஷயங்களிலும், அனைத்திற்கும் மேலாக சமீபத்திய தசாப்தங்களின் சமூக எதிர்ப்புரட்சி மற்றும் கோவிட்-19 தொற்றுநோய்க்கான கொலைகார பதிலில், ரஷ்ய தன்னலக்குழு உண்மையில் அமெரிக்க மற்றும் ஐரோப்பிய ஆளும்வர்க்கத்தின் கொள்கைகளையே பிரதிபலிக்கிறது.

ஏகாதிபத்திய போருக்கு எதிரான போராட்டத்திற்கான ஒரே சமூக மற்றும் அரசியல் சக்தி தொழிலாள வர்க்கம் மட்டுமே. இந்த போராட்டமானது, கோவிட்-19 தொற்றுநோயை ஒழிப்பதற்கான உறுதியான போராட்டத்துடனும் மற்றும் போர் மற்றும் வெகுஜன மரணத்திற்கான அடிப்படைக் காரணமான முதலாளித்துவ அமைப்பிற்கு எதிரான போராட்டத்துடன் இணைக்கப்பட வேண்டும். இந்த போராட்டத்திற்கு, எல்லாவற்றிற்கும் மேலாக, ஸ்ராலினிசத்திற்கு எதிரான ட்ரொட்ஸ்கிச இயக்கத்தின் போராட்டத்தின் முக்கிய வரலாற்று அனுபவங்களில் வேரூன்றிய தொழிலாள வர்க்கத்தில் ஒரு புரட்சிகர தலைமையை கட்டியெழுப்ப வேண்டும்.

Loading