சமூக நோயெதிர்ப்பு சக்தி பெருக்கும் கொள்கை ஜேர்மன் பள்ளிகளில் நான்கு இலக்க கோவிட்-19 நிகழ்வு மட்டங்களுக்கு வழிவகுக்கிறது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

ஜேர்மனியில் நாளாந்த புதிய நோய்தொற்றுக்களின் எண்ணிக்கை முன்பைவிட அதிகமாக உள்ளது, தற்போது ஒவ்வொரு 14 நாட்களுக்கும் எண்ணிக்கை இரட்டிப்பாகிறது. புதன்கிழமை ஒரே நாளில் 65,371 பேர் புதிதாக நோய்த்தொற்றுக்கு உள்ளானதன் பின்னர், 100,000 குடியிருப்பாளர்களில் ஏழு நாள் நிகழ்வு விகிதம் வெள்ளிக்கிழமை அன்று 340 ஐ தாண்டியது. நோய்தொற்று அதிகரிப்பு வீதம் அனைத்து வயதினர் மத்தியிலும் அதிகமாக இருந்தாலும், குழந்தைகள் மற்றும் இளம் பருவத்தினரிடையே மிக அதிகமாக உள்ளது. 7 நாள் நிகழ்வு மட்டம் தற்போது 15 முதல் 34 வயதுக்குட்பட்டவர்களில் 395 ஆகவும், 5 முதல் 14 வயதுக்குட்பட்டவர்களில் 819 ஆகவும் உள்ளது.

15 முதல் 34 வயதுக்குட்பட்டவர்களில் 935, மற்றும் 5 முதல் 14 வயதுக்குட்பட்டவர்களில் 2,284 என்றளவிற்கு நோய்தொற்றுக்கள் பதிவாகும் நிலையில், சாக்சோனியில் நிகழ்வு விகிதங்கள் உச்சபட்சமாக உள்ளன. இதன் பொருள் சாக்சோனியில் உள்ள அனைத்து பள்ளி மாணவர்களில் ஒன்று முதல் இரண்டு சதவீதம் பேர் ஒவ்வொரு வாரமும் நோய்தொற்றுக்கு ஆளாகிறார்கள். குறிப்பாக, பிராண்டன்பேர்க், பேர்லின், பவேரியா மற்றும் சாக்சோனி-அன்ஹால்ட் நகரங்களில் 15 முதல் 34 வயதுக்குட்பட்டவர்களில் நோய்தொற்று நிகழ்வு மட்டங்கள் நான்கு இலக்க வரம்பில் உள்ளன.

பிப்ரவரி 16, 2021, செவ்வாய்க்கிழமை, ஜேர்மனியில் உள்ள பிராங்பேர்ட்டில் உள்ள பள்ளிக்கு மாணவர்கள் செல்கிறார்கள் (AP Photo/Michael Probst)

கல்வி மற்றும் கலாச்சார விவகாரங்களின் அரசாங்க அமைச்சர்களின் மாநாட்டின் புள்ளிவிபரங்களின்படி, கடந்த வாரம் பள்ளி மாணவர்களிடையே சுமார் 45,000 கொரோனா வைரஸ் நோய்தொற்றுக்கள் இருந்தன, இது முன்னைய வார எண்ணிக்கை 23,000 ஐ விட கிட்டத்தட்ட இருமடங்காகும். தற்போது, தேசியளவில் உள்ள 10 மில்லியன் மாணவர்களில் கிட்டத்தட்ட 87,000 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். மேலும், சுமார் 2,100 ஆசிரியர்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

ராபர்ட் கோச் நிறுவனத்தின் (RKI) வாராந்திர அறிக்கையின்படி, பள்ளிகளில் வெடித்துப் பரவும் கொரோனா வைரஸ் நோய்தொற்றுக்களின் எண்ணிக்கை முன்னைய அலைகளை விட மிக அதிகமாக உள்ளது. கடந்த நான்கு வாரங்களில், 856 பள்ளிகளில் நோய்தொற்று வெடிப்புகள் பதிவு செய்யப்பட்டுள்ளன, இருப்பினும் கடந்த இரண்டு வாரங்களில் தாமதமாக கிடைத்த அறிக்கைகள் காரணமாக நோய்தொற்று எண்ணிக்கைகளை உறுதியாக மதிப்பிட முடியவில்லை.

இந்த பேரழிவுகர அதிகரிப்பு தடுப்பூசி போடப்படாததால் பாதுகாப்பற்று இருக்கும் பெரும்பாலான பள்ளிக் குழந்தைகள் மத்தியில் நிகழ்வதானது, அனைத்து கட்சிகளின் ஆதரவுடன் வேண்டுமென்றே பின்பற்றப்படும் பாரிய நோய்தொற்றுக்கு வழிவகுக்கும் குற்றவியல் கொள்கையின் விளைவாகும். கோடை விடுமுறைக்குப் பின்னர், அனைத்து கூட்டாட்சி மாநிலங்களும் முழுமையாக நேரடி வகுப்புகளை தொடங்கி, ஏற்கனவே நடைமுறையில் இருந்த பாதுகாப்பு நடவடிக்கைகளை படிப்படியாக அகற்றியுள்ளன.

எந்த மட்டத்திற்கு மேல், தொலைதூரக் கல்வி நடைபெற வேண்டும் என்பதைத் தரப்படுத்திய விதிமுறைகள் நீக்கப்பட்டன. சில மாநிலங்களில் முகக்கவச கட்டுப்பாடு கூட நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. தனிமைப்படுத்துதல் கட்டுப்பாடுகளைப் பொறுத்தவரை பெரும்பாலும் நோய்தொற்று பாதிப்பு ஏற்பட்ட நபர்களை மட்டும் தனிமைப்படுத்தும் அளவிற்கு அது குறைக்கப்பட்டுள்ளது, அதாவது மிக அருகில் தொடர்பில் இருந்தவர்களை தனிமைப்படுத்தும் கட்டுப்பாடு கூட இல்லை. பொதுவாக தடுப்பூசி போடப்படாத மாணவர்களுக்கு மட்டுமே பரிசோதனை செய்யப்படுகிறது என்பதால், நோய்தொற்று ஏற்பட்ட தடுப்பூசி போடப்பட்ட மாணவர்கள் தங்களை அறியாமல் சக மாணவர்களுக்கு அடிக்கடி நோயை பரப்புகின்றனர். மேலும், மிகச் சில பள்ளிகளில் மட்டுமே காற்று வடிகட்டிகள் பொருத்தப்பட்டுள்ளன, எனவே குளிர்காலம் நெருங்குகையில், திறந்த ஜன்னல்களுடனான காற்றோட்ட வசதி இருக்க வேண்டும்.

இந்த கொடிய கொள்கைகள் அனைத்து முதலாளித்துவக் கட்சிகளாலும் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. தற்போது, கிறிஸ்துவ ஜனநாயகக் கட்சி (CDU), பசுமைக் கட்சி மற்றும் சமூக ஜனநாயகக் கட்சி (SPD) கூட்டணி ஆட்சி செய்யும் சாக்சோனி மாநிலம், கிறிஸ்துவ ஜனநாயகக் கட்சி (CDU) மற்றும் வலதுசாரி சுதந்திர வாக்காளர் கட்சி கூட்டணி ஆட்சி செய்யும் பவேரியா மற்றும் இடது கட்சி, சமூக ஜனநாயகக் கட்சி (SPD) மற்றும் பசுமைக் கட்சி கூட்டணி ஆட்சி செய்யும் துருங்கியா ஆகிய இரண்டு மாநிலங்களை விட மிக அதிக நோய்தொற்றுக்களைக் கொண்டுள்ளது. ஓலாஃப் ஷோல்ஸின் கீழ் திட்டமிடப்பட்டதான சமூக ஜனநாயகக் கட்சி (SPD), பசுமைக் கட்சி மற்றும் தாராளவாத ஜனநாயகக் கட்சி (FDP) ஆகிய கட்சிகளை உள்ளடக்கிய “போக்குவரத்து விளக்கு” கூட்டணி அரசாங்கம், நவம்பர் 25 அன்று “தேசியளவிலான தொற்றுநோய் அவசரநிலையை” முடிவுக்குக் கொண்டுவர வியாழனன்று முடிவு செய்தது, அதனால் முக்கியமான பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கான அடிப்படை நீக்கப்பட்டது.

தொழிற்சங்கங்களும் கூட வைரஸ் பரவுவதைத் தடுக்கும் அனைத்து தடைகளும் நீக்கப்படுவதை ஆதரிக்கின்றன. GEW கல்வி தொழிற்சங்கத் தலைவர் மைக் ஃபின்னர்ன் அக்டோபர் மாத இறுதியில் பள்ளிகள் மூடப்படுவதற்கு எதிராக பேசினார்.

மறுபுறம், திட்டமிடப்பட்ட பாரிய நோய்தொற்று பரப்பும் கொள்கைக்கான எதிர்ப்பு அதிகரித்து வருகிறது. “பள்ளிகளின் நிலைமையைப் பற்றி பேசுவது உதவப்போவதில்லை என்பதில் பெற்றோர்களும், பள்ளி நிர்வாகிகளும் மற்றும் ஆசிரியர்களும் ஒருமனதாக உள்ளனர்!” என்று உயர்நிலைப் பள்ளிகளுக்கான மாநில பெற்றோர்கள் சங்கம் (LEV), பவேரியன் உயர்நிலைப் பள்ளிகளின் இயக்குநர்கள் சங்கம் (BayDV), மற்றும் பவேரியன் மொழியியல் வல்லுநர்கள் சங்கம் (bpv) ஆகியவை சமீபத்தில் ஒரு கூட்டு செய்தி வெளியீட்டில் தெரிவித்தன.

“முதல் சில வாரங்களில், வேலைப் பழக்கம் மற்றும் கட்டமைப்பை வகுப்பில் மீண்டும் பயிற்சி செய்ய வேண்டியிருந்தது, அதற்கு நிறைய நேரம் பிடித்தது. தனிமைப்படுத்தப்பட்டுள்ள மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதுடன் கூட, அவர்கள் கல்வித் தொடர்பை இழந்துவிடக் கூடாது என்பதற்காக அவர்களுக்கு தேவையான பொருட்கள் வழங்கப்பட வேண்டும்” என்று அவர்கள் எழுதினர். தனிமைப்படுத்தல் மற்றும் நோயின் முதல் அலைகள் காரணமாக, வகுப்பறைக்கு வருபவர்கள் எண்ணிக்கையில் நிறைய ஏற்றத்தாழ்வு இருந்தது, மேலும் வழமையான பாடங்களை கற்பிப்பது பெரும்பாலும் சாத்தியப்படவில்லை என்றும் அவர்கள் கூறினர். மேலும், “சாதாரண செயல்பாடுகளை பராமரிப்பதையும் மற்றும் அதே நேரத்தில் கொரோனா வைரஸ் சூழ்நிலையை நிர்வகிப்பதையும் சமநிலைப்படுத்தும் செயல் பல இடங்களில் மிகவும் அதிகமாகிவிட்டது” என்றனர்.

“பள்ளிகளில் நிலைமை தலைகீழாகி வருகிறது,” என்று LEV தலைவர் பிர்கிட் பிரெட்தாவுர் பெற்றோரின் பார்வையில் இருந்து கூறுகிறார். மேலும், “பல மாணவர்களின் மனநலம் கணிசமாகக் குறைந்துவிட்டதாகவும், மற்றும் மாணவர்களுக்கு பாடங்கள் பயிலுவதில் ஏற்பட்ட இடைவெளியும் அன்றாடப் பள்ளி வாழ்க்கையில் அதிகளவு பிரச்சினைகளை ஏற்படுத்துவதாகவும் ஒவ்வொரு நாளும் எங்களுக்கு அறிக்கைகள் வருகின்றன,” என்றும் தெரிவித்தார். பள்ளி இயக்குநர்கள் சங்கத்தின் தலைவர், வால்டர் பேயர், “வழமையான பள்ளி ஆண்டுக்கான ஆர்வம் துரதிர்ஷ்டவசமாக நிஜமாகவில்லை, மேலும் அனைவரும் இதை ஒப்புக்கொண்டு அதிலிருந்து உடனடி முடிவுகளை எடுக்க வேண்டும்” என்று கூறினார்.

சமூக நோயெதிர்ப்பு சக்தி பெருக்கும் கொள்கைக்கு மக்கள் மத்தியில் உள்ள பரந்த எதிர்ப்பு குறிப்பாக பள்ளிகள் மற்றும் பகல்நேர குழந்தைகள் பராமரிப்பு மையங்களில் பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்க அழைப்புவிடுக்கும் மனுவில் தெளிவாகத் தெரிகிறது, இதற்கு, ஒரு வாரத்திற்குள் 45,000 க்கும் மேற்பட்ட கையெழுத்துகள் கிடைத்துள்ளன. இதைத் தொடங்கியவர்கள் பெரும்பாலும் ஆசிரியர்களும் மருத்துவ வல்லுநர்களும் ஆவர்.

“தொற்றுநோய்க்கு எதிரான போராட்டத்தில்… தலைமைத்துவத்தை நிரூபிக்கும்படி” சமூக ஜனநாயகக் கட்சி (SPD) சான்சிலர் வேட்பாளர் ஓலாஃப் ஷோல்ஸூக்கு மனு அழைப்புவிடுக்கிறது. “அனைத்து எச்சரிக்கைகளும் இருந்தும், மீண்டும் ஒருமுறை முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டிய நேரம் கடந்துவிட்டது. தொற்றுநோய் இப்போது கட்டுப்பாடற்று பரவி வருகிறது. சுகாதார அமைப்பு முறிந்து போகும் அபாயத்தில் உள்ளது” என்று எச்சரித்த புகழ்பெற்ற 35 விஞ்ஞானிகளின் சமீபத்திய கடிதத்தை இந்த மனு சுட்டிக்காட்டுகிறது.

நியமிக்கப்பட்ட தொற்றுநோய் அவசரநிலையை முடிவுக்குக் கொண்டுவருவது என்பது “பல்லாயிரக்கணக்கில் கூடுதல் கொரோனா வைரஸ் இறப்புக்களுக்கு விலைகொடுக்கும் வகையிலான ஜேர்மனியின் ஒரு தீவிர அரசியல் தவறாக அது இருக்கும். புதிய நோய்தொற்றுக்களை குறைந்த அளவில் கட்டுப்படுத்துவதே மேம்போக்கான குறிக்கோளாக இருக்க வேண்டும். அதிக நிகழ்வு மட்டங்கள் சுகாதார பாதுகாப்பு அமைப்புக்கு அதிக சுமையை சுமத்துவதுடன், தடுப்பூசி போடப்பட்டவர்கள் உட்பட ஒட்டுமொத்த மக்களையும் ஆபத்தில் ஆழ்த்துகிறது.”

இந்த கோரிக்கைகளுக்கு கிடைத்துள்ள வலுவான ஆதரவு தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் உருவெடுக்கும் பெரும் எதிர்ப்பை பிரதிபலிக்கிறது. ஆனால், சமூக நோயெதிர்ப்பு சக்தி பெருக்கும் கொள்கையை நிறைவேற்றுவதற்கு பொறுப்பாளியாகவுள்ள அரசியல்வாதிகளின் பொது அறிவுக்கு முறையிடுவதன் மூலம் மனிதாபிமான தொற்றுநோய்க் கொள்கையை அடைய முடியாது. அரசாங்கங்கள் தற்போதைய நிலைமையை சரியாக அறியாத காரணத்தினாலோ அல்லது வழங்கப்படாத காரணத்தினாலோ தேவையான நடவடிக்கைகளை செயல்படுத்துவதில் தவறுவதில்லை.

ஓலாஃப் ஷோல்ஸ் போன்ற அரசியல்வாதிகள் முன்னணி விஞ்ஞானிகளால் தொடர்ந்து அறிவுறுத்தப்பட்டுள்ளனர், மற்றும் அவர்களது கொள்கைகள் விளைவிக்கும் துன்பங்களையும் அவர்கள் முழுமையாக அறிந்திருக்கிறார்கள். அவசரநிலையை முடிவுக்குக் கொண்டுவருவது தொடர்பாக ஜேர்மன் கூட்டாட்சி பாராளுமன்றத்தில் (Bundestag) நடந்த கடைசிக்கு முந்தைய விவாதத்தின்போது, “இதன் விளைவு என்னவாக இருக்கும் என்பதை நாங்கள் அறிவோம்: தடுப்பூசி போடப்படாதவர்களில் பலர் நோய்வாய்ப்படுவார்கள், மேலும் ஏற்கனவே நோய்வாய்ப்பட்டவர்களில் பலர் நோய்வாய்ப்படுவார்கள், மேலும் நோய்வாய்ப்பட்டவர்களில் சிலர் எங்கள் மருத்துவமனைகளின் தீவிர சிகிச்சைப் பிரிவுகளில் உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கிறார்கள்.”

அனைத்து ஸ்தாபகக் கட்சிகளின் அரசியல்வாதிகளும் தேவையான நடவடிக்கைகளை செயல்படுத்தவில்லை, காரணம் அனைத்திற்கும் மேலாக அவர்கள் வங்கிகள் மற்றும் பெருநிறுவனங்களின் பொருளாதார நலன்களையே பாதுகாக்கின்றனர். முதல் பூட்டுதலின் போது கூட, ஷோல்ஸ் நிதி அமைச்சராக, வங்கிகள் மற்றும் பெருநிறுவனங்களுக்கு பில்லியன் கணக்கில் யூரோக்களை வாரிவழங்க ஏற்பாடு செய்தார். எவ்வாறாயினும், பள்ளிகளையும் அத்தியாவசியமற்ற வணிகங்களையும் மூடுவது போன்ற தேவையான கொரோனா வைரஸ் பாதுகாப்பு நடவடிக்கைகள், பெருநிறுவன இலாபங்களை பெருக்குவதற்கு தடையாக இருக்கும் என்பதால் அவை எடுக்கப்படவில்லை.

இந்த காரணத்திற்காவே, ஆளும் வர்க்கத்தின் திட்டமிட்ட பாரிய தொற்றுநோய்க் கொள்கையானது வைரஸை முற்றிலும் ஒழிப்பதற்கான தொழிலாள வர்க்கத்தின் தாக்குதலுடன் பதிலளிக்கப்பட வேண்டும். எனவே, மாணவர்களும், ஆசிரியர்களும் மற்றும் பெற்றோர்களும் சுயாதீனமான சாமானிய கல்வியாளர்கள் பாதுகாப்புக் குழுக்களில் ஒன்றிணைந்து தேவையான நடவடிக்கைகளை கூட்டாகச் செயல்படுத்த வேண்டும்.

Loading