மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்
கோவிட்-19 நோய்தொற்றின் ஒரு புதிய உலகளாவிய எழுச்சியை ஐரோப்பா தூண்டுகிறது. உலகளவில் மொத்த நோய்தொற்றுக்களின் எண்ணிக்கை கடந்த இரண்டு வாரங்களாக கடுமையாக அதிகரித்து, நாளொன்றுக்கு சராசரியாக 430,000 க்கு அதிகமான நோய்தொற்றுக்கள் பதிவாகின்றன. ஏனைய பிராந்தியங்களில் நோய்தொற்றுக்கள் குறைந்து வரும் அல்லது நிலையாகவுள்ள நிலையில், ஐரோப்பிய கண்டத்தில் வைரஸின் பாரிய பரவல் சற்றும் குறையாமல் தொடர்கிறது.
இங்கிலாந்தால் அதிகளவில் தூண்டப்படும் நோய்தொற்றுக்கள் ஜூன் நடுப்பகுதி முதல் ஜூலை கடைசி வரை கட்டுப்பாட்டை மீறி பரவியது. பின்னர் செப்டம்பர் நடுப்பகுதி வரை சற்று குறைந்து, நோய் பொதுவாக அதிகம் பரவும் காலத்தின் ஒரு பகுதியாக அவை மீண்டும் அதிகரித்துள்ளன, குறிப்பாக கிழக்கு ஐரோப்பா மற்றும் இங்கிலாந்தில் கடுமையாக பரவுகிறது.
கடந்த ஞாயிறு வரையிலான காலத்தில், தினசரி புதிய நோய்தொற்றுக்களின் ஏழு நாள் ஐரோப்பிய சராசரி கிட்டத்தட்ட 11 சதவீதம் அதிகரித்துள்ளது. ஒவ்வொரு நாளும் 220,000 க்கும் மேற்பட்ட மக்கள் இப்போது பாதிக்கப்படுகிறார்கள். ஜோன்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் தரவுகளின்படி, ஒரு மில்லியன் மக்களில் ஏற்படும் தினசரி நோய்தொற்றுக்களின் எண்ணிக்கையில் அடுத்த உச்சபட்ச நிலையிலுள்ள பிராந்தியமான வட அமெரிக்காவை விட (139) ஐரோப்பாவில் இரண்டு மடங்கு அதிகமாக நோய்தொற்றுக்கள் (299) பதிவாகின்றன. ஐரோப்பாவில் ஒவ்வொரு நாளும் 3,000 க்கும் மேற்பட்ட மக்கள் கோவிட்-19 ஆல் கொல்லப்படுகிறார்கள், இது கடந்த ஆண்டின் இதே நேரத்தை விட 34 சதவீதம் அதிகமாகும்.
உலக சுகாதார அமைப்பின் (WHO) பொது இயக்குநர் டாக்டர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயசஸ் (Dr Tedros Adhanom Ghebreyesus) கடந்த வாரம், “உலகளவில் பதிவான கோவிட்-19 நோய்தொற்றுக்கள் மற்றும் இறப்புக்களின் எண்ணிக்கை இரண்டு மாதங்களில் முதன்முறையாக அதிகரித்து வருகிறது, மற்ற பிராந்தியங்களில் நோய்தொற்றுக்கள் குறைந்து கொண்டிருக்கையில், ஐரோப்பாவில் அதிகரித்து வரும் நோய்தொற்று எழுச்சி உலகளவிலான அதிகரிப்புக்கு இட்டுச் செல்கிறது. இது கோவிட்19 தொற்றுநோய் முடிவுக்கு வர இன்னும் நீண்ட காலம் பிடிக்கும் என்பதை நினைவூட்டுகிறது” என்று கருத்து தெரிவித்தார்.
இருப்பினும், முழு ஆளும் வர்க்கத்தின் கொலைகாரக் கொள்கைகளைப் பற்றி வெளிப்படுத்துவது ஒருபுறமிருக்க, ஐரோப்பாவுக்கான WHO இன் பிராந்திய இயக்குனர் டாக்டர் ஹான்ஸ் க்ளூக், (போதாத) பல தணிப்பு நடவடிக்கைகளை செயல்படுத்தி, இந்த குளிர்காலத்தில் பள்ளிகளைத் திறந்து வைக்குமாறு கண்டத்தின் அரசாங்கங்களை வலியுறுத்தினார். மேலும், “கடந்த ஆண்டின் பரவலான பள்ளி மூடல்களால், மில்லியன் கணக்கான குழந்தைகள் மற்றும் இளம் பருவத்தினரின் கல்வியை சீர்குலைத்தமை, நல்லதை விட அதிக தீங்கையே விளைவித்து, குறிப்பாக குழந்தைகளின் மன மற்றும் சமூக நலனை அது பாதித்தது. அதே தவறுகளை நம்மால் மீண்டும் செய்ய முடியாது” என்று கூறினார்.
தொற்றுநோய் வேகமெடுத்து பரவிக் கொண்டிருக்கையில், பெரும் செல்வந்தர்களினது இலாப நோக்கங்களால் இயக்கப்படும் கொள்கையால் பள்ளிகளையும் பொருளாதாரத்தையும் தொடர்ந்து திறந்து வைத்திருப்பதன் விளைவு, குளிர்கால பாதிப்புகளுக்கு முன்னதாகவே கண்டம் முழுவதும் நோய்தொற்று தீவிர பாதிப்பை ஏற்படுத்துகிறது.
பல மத்திய மற்றும் கிழக்கு ஐரோப்பிய மற்றும் பால்கன் நாடுகளில் நோய்தொற்றுக்களின் வளர்ச்சி வானியல் ரீதியாக உள்ளது. உத்தியோகபூர்வ நாளாந்த நோய்தொற்று வீதம் முன்நிகழ்ந்திராத வகையில் உச்சபட்சமாக, எஸ்தோனியாவில் ஒரு மில்லியன் பேருக்கு 1,286 நோய்தொற்றுக்கள் உள்ளன, இந்த எண்ணிக்கை லாத்வியாவில் 1,268, சுலோவேனியாவில் 1,095, சுலோவாக்கியாவில் 715, பல்கேரியாவில் 685, உக்ரேனில் 526, கிரீஸில் 355 மற்றும் ரஷ்யாவில் 259 என்ற விகிதங்களில் உள்ளன, மேலும் லித்துவேனியாவில் 1,090 மற்றும் குரோஷியாவில் 876 என்ற எண்ணிக்கைகளில் உச்சபட்ச எண்ணிக்கையை நோக்கி நோய்தொற்றுக்கள் விரைந்து அதிகரித்துக் கொண்டிருக்கின்றன.
ஒரு வாரத்தில் சராசரி நாளாந்த நோய்தொற்றுக்களின் கூர்மையான அதிகரிப்பு ஹங்கேரியில் 82 சதவீதம், செக் குடியரசில் 63 சதவீதம், போலந்தில் 57 சதவீதம் மற்றும் ஆஸ்திரியாவில் 42 சதவீதம் வரை நிகழ்கிறது. பிராந்தியம் முழுவதும், தற்போதுள்ள போதாத பரிசோதனை உள்கட்டமைப்புக்கள் நோய்தொற்றுக்களின் கட்டுப்பாடற்ற அதிகரிப்பால் மூழ்கிப்போன நிலையில், நோய்தொற்றின் உண்மையான விகிதங்கள் மிக அதிகமாக இருக்கும். கடந்த வாரம் குரோஷிய தலைநகரில் பரிசோதனையில் உறுதிசெய்யப்பட்ட நோய்தொற்றுக்கான நேர்மறை விகிதம் மீண்டும் 50 சதவீதமாக உயர்ந்தது.
பல நாடுகளில், குறைந்த தடுப்பூசி விகிதங்களால் நிலைமை படுமோசமடைகிறது. பாதி மக்கள் தொகைக்கும் குறைவாக சேர்பியாவில் 43 சதவீதம், ருமேனியா மற்றும் ரஷ்யாவில் 33 சதவீதம், பல்கேரியாவில் 22 மற்றும் உக்ரேனில் 17 சதவீதம் என்ற விகிதங்களில் முழுமையாக தடுப்பூசி போடப்பட்டுள்ளது. அரசாங்கம் மற்றும் சுகாதார அமைப்பு முறை மீதான பொதுவான அவநம்பிக்கை, தொற்றுநோய் முடிந்துவிட்டது என்ற அல்லது சிறிதும் கவலைப்படாத அரசாங்க பிரச்சாரத்தின் தாக்கம், மற்றும் தீவிர வலதுசாரி மற்றும் மதவாத சக்திகளின் கிளர்ச்சி என அனைத்தும் இந்த நிலைமைக்கு பங்களித்துள்ளன.
தடுப்பூசி பாதுகாப்பும் இல்லாத நிலையில், நோய்தொற்றுக்களின் அலை முன்நிகழ்ந்திராத வகையில் இறப்பு எண்ணிக்கையாக மாறிவிட்டுள்ளது. தொற்றுநோயின் ஆரம்பித்ததிலிருந்து உத்தியோகபூர்வ நாளாந்த கோவிட்-19 இறப்பு விகிதங்களும் கூட, ரஷ்யாவில் நாளொன்றுக்கு 1,104, ருமேனியாவில் 439, உக்ரேனில் 581 மற்றும் சேர்பியாவில் 64, பல்கேரியாவில் 132 என்ற எண்ணிக்கைகளில் மிக உயர்ந்த மட்டங்களில் உள்ளன. ருமேனியாவின் சராசரி இறப்பு எண்ணிக்கை அதன் முந்தைய உச்சத்தை விட இரண்டரை மடங்கு அதிகமாகும், அதுவே உக்ரேனில் 44 சதவீதம் அதிகமாகவும், ரஷ்யாவில் 28 சதவீதம் அதிகமாகவும் உள்ளன.
கடுமையான நோயின் சுமை மிகவும் மோசமான போதுமான நிதி ஒதுக்கீடு பெறாத சுகாதார உள்கட்டமைப்பை முறிந்து போகும் நிலைக்குத் தள்ளியது. ருமேனிய மருத்துவமனைகளிலுள்ள தீவிர சிகிச்சைப் பிரிவுகள் வரம்பு மீறிய சுமையில் உள்ளன. போலந்தும் டென்மார்க்கும் மருத்துவக் குழுக்களை உதவிக்கு அனுப்பியுள்ளன, மற்றும் ஏனைய ஐரோப்பிய நாடுகள் ஆக்ஸிஜன் செறிவூட்டிகளையும் மோனோக்ளோனல் ஆன்டிபாடிகளின் போத்தல்களையும் நன்கொடையாக வழங்கியுள்ளன. பல்கேரியாவின் ஒரு முக்கிய மருத்துவ ஆக்ஸிஜன் விநியோகஸ்தர், “மருத்துவமனைகளில் நோயாளிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிக்குமானால், அடுத்த வாரம் ஆக்ஸிஜன் கிடைக்காத நிலையை உருவாகும்” என கடந்த வாரம் எச்சரித்தார்.
அதிகளவு தடுப்பூசி போடப்பட்ட நாடுகள் கூட கடுமையான இறப்பு எண்ணிக்கைகளை சந்திக்கின்றன. 54 சதவீத மக்களுக்கு முழுமையாக தடுப்பூசி போடப்பட்டுள்ள லாத்வியா, தொற்றுநோயின் காரணமான உச்சபட்ச சராசரி தினசரி இறப்பு எண்ணிக்கையை பதிவு செய்கிறது. இதேபோல அதிக தடுப்பூசி விகிதம் கொண்ட பால்டிக் நாடுகளான எஸ்தோனியாவும் லித்துவேனியாவும் இதில் பின்தங்கவில்லை.
லாத்வியாவின் கட்டுப்படுத்த முடியாத பேரழிவுகர நிலைமையால், ஒரு மாத கால பூட்டுதல், சில பள்ளிகளை இணையவழி கற்றலுக்கும் மற்றும் சில தொழில்களை வீட்டிலிருந்து செய்யவும் மாற்றுதல், உட்புற மற்றும் வெளிப்புற கூட்டங்களை தடை செய்தல், பெரும்பாலான கடைகள், மற்றும் அனைத்து உணவகங்கள், சலூன்கள், திரையரங்குகள், நாடக அரங்குகள், கலை மற்றும் விளையாட்டு அரங்குகள் ஆகியவற்றை முடுதல் போன்ற கட்டுப்பாடுகளை அரசாங்கம் அறிவிக்கும் நிலை உருவானது.
நோய்தொற்றுக்கள் மற்றும் இறப்புக்களின் அலைகளைத் தடுக்க இது போதுமானதல்ல. என்றாலும், ஏனைய அரசாங்கங்கள் இந்த அளவிற்கு கட்டுப்பாடுகளை விதிக்கக் கூட மறுத்துவிட்டன, மாறாக தடுப்பூசி மற்றும் முகக்கவச பயன்பாடு, கோவிட் அனுமதிகள், ஊரடங்கு உத்தரவுகள் மற்றும் பெரியளவிலான கூட்டங்களுக்கு மட்டுப்படுத்தப்பட்ட கட்டுப்பாடுகளை விதித்தல் என்ற வகையில் பகுதியளவு நடவடிக்கைகளை மட்டுமே செயல்படுத்துகின்றன.
மேற்கு மற்றும் வடக்கு ஐரோப்பாவில், பெல்ஜியம், நெதர்லாந்து, டென்மார்க், நோர்வே மற்றும் ஜேர்மனி ஆகிய நாடுகளில் நோய்தொற்றுக்கள் கடுமையாக அதிகரித்துள்ளன. கடந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை வரை, நோர்வேயில் நாளாந்த புதிய நோய்தொற்றுக்களின் ஏழு நாள் சராசரி 62 சதவீதமாக அதிகரித்தது, இதுவே பெல்ஜியத்தில் 49, டென்மார்க்கில் 48, நெதர்லாந்தில் 42 மற்றும் ஜேர்மனியில் 40 என்ற சதவீதங்களில் அதிகரித்துள்ளது.
கடந்த வாரத்தில் பிரிட்டனில் பதிவான நோய்தொற்றுக்களின் எண்ணிக்கை சற்று குறையத் தொடங்கியதன் பின்னர், தனிநபர் புள்ளிவிபரங்களில் பெல்ஜியம் இங்கிலாந்தை விஞ்சும் போக்கில் உள்ளது. என்றாலும் அதன் அரசாங்கம், பொது இடங்கள் மற்றும் மதுபான அருந்தகங்கள் மற்றும் உணவகங்களிலும், மற்றும் உடற்பயிற்சி ஊழியர்களும் முகக்கவசம் அணியவும், மற்றும் பொது இடங்களில் நுழைய கோவிட் நுழைவு அனுமதிச் சீட்டுக்களை வைத்திருக்கவும் உத்தரவிட்டு மிகக் குறைந்த நடவடிக்கைகளையே அறிமுகப்படுத்தியுள்ளது. நெதர்லாந்திலும் இவ்வாறே திட்டமிடப்பட்டுள்ளது.
டேனிஷ் அரசாங்கம் வெள்ளிக்கிழமை அதன் நடவடிக்கைகளை மதிப்பாய்வு செய்யும், என்றாலும் ஏற்கனவே கோவிட்-19 இன் அச்சுறுத்தல் நிலையை குறைத்துமதிப்பிட்டுள்ளது, மேலும் அதற்கான வாய்ப்புக்களை மட்டுப்படுத்துகிறது. எதிர்க் கட்சிகளான ரெட் கிரீன் அலையன்ஸ், டேனிஷ் மக்கள் கட்சி மற்றும் கன்சர்வேடிவ் கட்சி ஆகியவை கட்டுப்பாடுகள் திரும்பக் கொண்டுவரப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
ஜேர்மன் பாராளுமன்றம் நவம்பரில் “தேசியளவில் தொற்றுநோயின் நிலைமையை” முடிவுக்குக் கொண்டுவர திட்டமிட்டுள்ளது, அதாவது, பொது இடங்களில் முகக்கவச கட்டுப்பாட்டையும் மற்றும் குறிப்பிட்ட இடங்களுக்குள் நுழைவதற்கு தடுப்பூசி கட்டுப்பாட்டையும் மட்டும் கடைப்பிடிக்கும் அளவிற்கு பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்கின்றன. சமூக ஜனநாயகக் கட்சியின் நாடாளுமன்றக் குழுவின் துணைத் தலைவரான டிர்க் வைஸ், “இனி மீண்டும், பள்ளி மூடல்கள், பூட்டுதல்கள் மற்றும் ஊரடங்கு உத்தரவுகள் இருக்காது” என்று கூறியுள்ளார்.
பிரான்சிலும் இத்தாலியிலும் கூட நோய்தொற்றுக்களின் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. இத்தாலியில் மருத்துவமனைகளில் கோவிட் நோயாளிகள் சேர்க்கப்படும் வீதம் 7.5 சதவீதம் அதிகரித்துள்ளது, மற்றும் பிரான்சில் தீவிர சிகிச்சைப் பிரிவுகளில் அனுமதிக்கப்படும் கோவிட் நோயாளிகள் வீதம் 12 சதவீதம் உயர்ந்துள்ளது.
இங்கிலாந்தில், நோய்தொற்றுக்கள் பரவும் வீதம் சற்று குறைந்தாலும், நாளாந்த நோய்தொற்றுக்களின் வீதம் தொடர்ந்து உச்சபட்சமாக உள்ளது, மேலும் சராசரியாக ஒவ்வொரு நாளும் 150 பேர் வைரஸூக்கு பலியாகின்றனர். கடந்த சில மாதங்களாக கிட்டத்தட்ட சரிபார்க்கப்படாத வைரஸ் பரவல் வீதம், 10 முதல் 15 சதவீதம் அதிகமாக பரவும் தன்மை கொண்டதாக கருத்தப்படும் டெல்டா மாறுபாட்டின் துணை மாறுபாடான AY.4.2 பெரிதும் பரவ வழிவகுத்தது, இது இப்போது 42 நாடுகளுக்கு பரவியுள்ளதாக WHO அக்டோபர் 26 அன்று அறிவித்துள்ளது.
வடக்கு அரைக்கோளப் பகுதி குளிர்காலத்திற்குள் நுழைகையில், ஐரோப்பாவில் நிலவும் தொற்றுநோயின் ஆரம்ப மீளெழுச்சி, கோவிட்-19 உடன் “வாழ்வது” பற்றிய ஆபத்துக்கள் குறித்த அவசர எச்சரிக்கையாகும். சமூக நோயெதிர்ப்பு சக்தி பெருக்கும் கொள்கை என்ற கொலைகாரக் கொள்கையைத் தடுத்து நிறுத்தவும், வைரஸை ஒழிப்பதற்கான கொள்கைகளை நடைமுறைப்படுத்தவும் தொழிலாள வர்க்கம் நடவடிக்கை எடுக்கவில்லையானால், இன்னும் துயரம் மற்றும் இறப்பு அலைகளின் பாதிப்பு உலக மக்களை மூழ்கடிக்கும்.