முன்னோக்கு

இங்கிலாந்து அரசாங்கம்: ஆண்டுக்கு 50,000 கோவிட்-19 மரணங்கள் "ஏற்கத்தக்கவை"

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

பிரதம மந்திரி போரிஸ் ஜோன்சன் கூடுதல் சமூக அடைப்புகள் மூலமாக 'உயிர்களைக் காப்பாற்றுவதை' 'இறப்புகள் இங்கிலாந்து பொருளாதாரத்தைப் பாதிக்கிறது' என்ற அடிப்படையில் நியாயப்படுத்த முடியுமா என்பதை தீர்மானிக்க 'ஒரு செலவு-நன்மை பகுப்பாய்வை' நடத்தியுள்ளதாக பிரிட்டனின் i பத்திரிகை வெளிப்படுத்தியுள்ளது.

மூடிய கதவுக்குப் பின்னால் நடந்த அந்த விவாதம் 'ஏற்றுக் கொள்ளக்கூடிய கோவிட்-19 உயிரிழப்பு மட்டங்களாக' வாரத்திற்கு சுமார் 1,000 இறப்புக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டதாக இரண்டு அரசாங்க ஆலோசகர்கள் i பத்திரிகைக்குத் தெரிவித்தனர்.

Britain's Prime Minister Boris Johnson pauses during a coronavirus briefing in Downing Street, in London, Monday April 5, 2021. (Stefan Rousseau/Pool via AP)

ஒரு ஆலோசகரின் கருத்துப்படி, அடுத்தாண்டு இங்கிலாந்தில் குறைந்தபட்சம் 30,000 இறப்புக்கள் இருக்கும் என்று ஜோன்சன் தனிப்பட்ட முறையில் ஏற்றுக் கொண்டிருந்தார் என்பதோடு, 'அந்த எண்ணிக்கை 50,000 க்கு மேல் அதிகரிக்கும் என்று தெரிந்தால் மட்டுமே, அவர் கூடுதல் [கோவிட்-19 பாதுகாப்பு] கட்டுப்பாடுகள் விதிப்பது குறித்து பரிசீலிப்பார்.'

ஹென்ரிச் ஹிம்லரின் சமூக மனசாட்சியைக் கொண்ட ஜோன்சன், கோவிட்-19 நோயாளியின் உயிரைக் காப்பாற்றுவதற்கான ஏற்றுக் கொள்ளக்கூடிய செலவாக 30,000 பவுண்டுகளை நிர்ணயித்தார். இருப்பினும், ஒரு நோயாளிக்கு சிகிச்சையளிப்பதற்கான இந்த முன்மொழியப்பட்ட அதிகபட்ச வரம்பு பின்னர் 'இழக்கப்படும் ஒவ்வொரு உயிரும் இங்கிலாந்து பொருளாதாரத்திற்கு எவ்வளவு செலவு வைக்கிறது' என்ற கணக்கீட்டுடன் இணைக்கப்பட்டது.

அவ்விரு ஆதார நபர்களின் தகவல்படி, 'வருடாந்திர இறப்பு விகிதத்தை 50,000 க்கும் குறைவாக வைத்திருப்பதற்கு ஆகும் செலவானது, இந்த அளவை விட உயர அனுமதிக்கும் இங்கிலாந்து பொருளாதார செலவை விட அதிகமாக இருக்கும் என்பதை பகுப்பாய்வு காட்டுகிறது.' இது 'ஒரு நாளைக்கு 137 பேர் அல்லது வாரத்திற்கு 1,000 க்கும் குறைவான இறப்புகள்' என்று அர்த்தப்படுத்துகிறது.

அரசாங்கத்தின் பெருந்தொற்று மாடலிங் குழு தலைவரும் (pandemic modelling group), அவசர கால விஞ்ஞான ஆலோசனைக் குழு (SAGE) உறுப்பினருமான பேராசிரியர் கிரஹாம் மெட்லி அதை நியாயப்படுத்தும் விதத்தில் i பத்திரிகைக்குக் கூறுகையில், 'மூளைக்காய்ச்சலுக்கு எதிராக குழந்தைகளுக்கு தடுப்பூசி போடுதல் அல்லது சாலைகளில் வேகக் கட்டுப்பாடுகளை விதித்தல் போன்ற நடவடிக்கைகள் இறப்பு மற்றும் நோயைக் குறைக்கின்றன என்றாலும் பணச் செலவுகளைக் கொண்டிருப்பதுடன் சுதந்திரங்களை மட்டுப்படுத்துகின்றன,' என்றார்.

'இது ஓர் உடனடி எதிர்வினையாக இருக்காது' என்றும் 'இரண்டு அல்லது மூன்று வாரங்களுக்கு வாரத்திற்கு சுமார் 1,000 பேர் என்ற நீடித்த இறப்பு விகிதம்' மட்டுமே 'கட்டுப்பாடுகளைத் திரும்ப விதிப்பதன் மீதான விவாதத்திற்கு இட்டுச்' செல்லும் என்றும் i இன் அந்த ஆதார நபர்கள் வலியுறுத்தினர். சமூக அடைப்புகள் பற்றி எந்த 'விவாதமும்' நடக்காது. இத்தகைய சாத்தியமான மறுபரிசீலனைக்கான முன்மொழியப்பட்ட தூண்டுதல், ஜூலை 19 இல் இருந்து எல்லா தணிப்பு நடவடிக்கைகளையும் நீக்குவது மற்றும் சமூக அடைப்பை நீக்குவது ஆகியவற்றை முற்றிலும் நியாயப்படுத்துவதை மட்டுமே அர்த்தப்படுத்தியது. அதை செயல்படுத்தப்பட ஒருபோதும் உத்தேசம் இருக்கவில்லை.

ஜோன்சனின் இக்கட்டான நிலை என்று கூறப்படுவதற்கு அனுதாபம் தெரிவிக்கும் வகையில், i இன் ஆதார நபர்கள் குறிப்பிடுகையில், “துரதிருஷ்டவசமாக, உயிர்களைக் காப்பாற்றுவதற்கான செலவு பொருளாதாரத்தின் மீது ஏற்படுத்தும் பாதிப்பை பிரதம மந்திரிகள் எடை போட வேண்டியுள்ளது. அது எவ்வாறு நடக்கிறது என்பதைக் குறித்து யாரும் பேச விரும்புவதில்லை,” என்றனர்.

ஆனால் “அது எப்படி வேலை செய்கிறது” என்பதை ஜோன்சன் முன்னரே தெளிவாக தெளிவுபடுத்தி இருந்தார். அவர் மீது அதிருப்தி கொண்ட முன்னாள் ஆலோசகர் டொமினிக் கம்மிங்ஸ் கடந்த அக்டோபரில் கோவிட் உயிரிழப்புகளை அறிவித்து ஜோன்சன் அவர் ஆலோசகர்களுக்கு அனுப்பிய வாட்ஸ்அப் செய்திகளை வெளியிட்டார், “ஆண்களுக்கு சராசரி வயது 82-81, பெண்களுக்கு 85… நாட்டில் 80 வயதுக்கு மேற்பட்டவர்கள் அதிகபட்சம் 3 மில்லியன் பேர் இருக்கிறார்கள். ஆகவே நாம் நாடுதழுவிய சமூக அடைப்புக்குச் செல்ல வேண்டியதில்லை என்பதை இது காட்டுகிறது.”

இந்த குற்றவியல் கணக்கீடுகள் செய்யப்பட்டதற்குப் பின்னர் இருந்து, சம்பவங்கள் மேலும் நகர்ந்துள்ளன. இங்கிலாந்தில் கடந்த ஏழு நாட்களின் புள்ளிவிபரங்கள் அடிப்படையில், கோவிட்-19 இறப்புகள் ஏற்கனவே ஒரு வாரத்திற்கு 800 க்கு கீழ் அல்லது நாளொன்றுக்கு 110 ஐ எட்டியுள்ளன. அதில், மூன்று நாட்களின் இறப்பு எண்ணிக்கை 137 எண்ணிக்கையை கடந்திருந்தது. அடுத்த வார வாக்கில், ஏழு நாட்களுக்கான இறப்பு எண்ணிக்கை நிச்சயமாக கிட்டத்தட்ட 1,000 ஐ தாண்டிவிடும், இது ஆண்டுக்கு 50,000 ஐ தாண்டிவிடுவதற்குச் சமமாக இருக்கும்.

இப்போதிருந்து ஒரு மாதத்தில் ஆண்டுக்கு 50,000 இறப்புகள் என்ற கணிப்புகள் பெரிதும் நம்பத்தகுந்ததாய் தெரிய வரும்.

பாரியளவில் மிகப் பெரும் நோய்தொற்று பரவலுக்கான சம்பவமாக, அடுத்த வாரம் இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் உள்ள எல்லா ஆரம்ப மற்றும் இடைநிலை பள்ளிகளும் மீண்டும் திறக்கப்படும். ஆகஸ்ட் 16 இல் ஸ்காட்லாந்தில் பள்ளிகள் திறக்கப்பட்டதில் இருந்து, நாளாந்த நோயாளிகளின் எண்ணிக்கை 1,567 இல் இருந்து 6,835 ஆக 300 சதவீதத்திற்கும் அதிகமாக அதிகரித்துள்ளது. கடந்த வாரத்தில் மட்டும், அவை 114 சதவீதம் அளவுக்கு அதிகரித்துள்ளது.

'செப்டம்பர் 2021 இறுதிக்குள்' பள்ளிகள் மீண்டும் திறக்கப்படுவதால் கோவிட்-19 நோயாளிகள் எண்ணிக்கையில் ஒரு பெரிய அதிகரிப்பு இருக்கும், அமைச்சர்கள் அதற்கு திட்டமிட வேண்டும் என்று SAGE முன்மாதிரி குழு நேற்று எச்சரித்தது.

அதனால் தான் i பத்திரிகைகளுக்கு வந்த கசிவுகளுக்கு அரசாங்கத்தின் விடையிறுப்பு பின்வருமாறு குறிப்பிடுவதாக இருந்தது: “எத்தனை கோவிட் மரணங்கள் ஏற்றுக் கொள்ளப்படுகின்றன என்று எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை,” என்றது குறிப்பிட்டது. குறிப்பிடப்படும் 50,000 எண்ணிக்கையை இது மறுப்பதாக இருக்கவில்லை, மாறாக இந்த இறப்பு எண்ணிக்கை மக்களிடையே அந்த வைரஸ் பரவுவதை அனுமதிக்கும் அரசாங்கத்தின் கொலைபாதக கொள்கையில் எந்த மாற்றதையும் ஏற்படுத்தாது என்பதைத் தெளிவுபடுத்துவதாக இருந்தது.

நன்மைகளுக்கு எதிராக செலவுகளை முன்நிறுத்துவது, “நோயை விட குணப்படுத்துதல் மோசமாக இருந்து விடக்கூடாது,” என்ற ட்ரம்ப் வலியுறுத்தலின் வெறுமனே ஒரு மாற்று வடிவமாகும். இந்த பெருந்தொற்று மீதான விவாதத்தில் “செலவு மிச்சப்படுத்தும் பகுப்பாய்வு” என்பது, முதலாளித்துவ இலாபத்தைப் பாதுகாக்க உழைக்கும் மக்கள் அவர்கள் உயிரையும் ஆரோக்கியத்தையும் விலையாக கொடுப்பார்கள் என்பதையே அர்த்தப்படுத்துகிறது.

கடந்தாண்டு இறுதியில் சில காலத்திற்கு நடைமுறைப்படுத்தப்பட்ட சமூக அடைப்புக்கு உடன்பட நிர்பந்திக்கப்பட்ட பின்னர் ஜோன்சன், “இனிமேல் இந்த அருவருக்கத்தக்க சமூக அடைப்புகள் இல்லை—சடலங்கள் வேண்டுமானால் ஆயிரக் கணக்கில் மலை போல் குவியட்டும்,” என்று பட்டவர்த்தனமாக கூறினாரே, அதுதான் பிரிட்டனிலும் சர்வதேச அளவிலும் ஆளும் வர்க்கத்தின் கொள்கையாக நீடிக்கிறது.

இந்த பேரழிவுகரமான நிலைமைக்கு முடிவு கட்ட தொழிலாள வர்க்கத்தின் சுயாதீனமான அரசியல் தலையீடு தேவைப்படுகிறது.

இந்த பெருந்தொற்று பிரிட்டனில் 155,000 க்கும் அதிகமான உயிர்களைப் பலி கொண்டுள்ளது மற்றும் உத்தியோகபூர்வமாக உலகம் முழுவதும் 4.5 மில்லியனுக்கும் அதிகமானவர்கள் இதில் உயிரிழந்துள்ளனர். உண்மையான எண்ணிக்கை 10 மில்லியனுக்கும் அதிகமாக இருக்கும். இது எதுவும் நடந்திருக்க வேண்டியதில்லை. நோயின் தடம் அறியும் மற்றும் பின்தொடரும் தொழில்நுட்பம் மற்றும் விஞ்ஞான ரீதியாக அங்கீகரிக்கப்பட்ட தனிநபர் பாதுகாப்பு உபகரணங்களைப் பயன்படுத்துதல் ஆகியவற்றுடன் சேர்ந்து, பள்ளிகளை மூடுதல் மற்றும் சமூகரீதியில் தேவையான உற்பத்தியை மட்டுமே பராமரித்தல் ஆகியவற்றை உள்ளடக்கிய சமூக அடைப்பு கொள்கை முறையாக மேற்கொள்ளப்பட்டிருந்தால், இந்த வைரஸ் உலகெங்கிலும் பரவுவதற்கு முன்னரே, மற்றும் குறிப்பாக தடுப்பூசிகளின் அபிவிருத்தியோடு சேர்ந்து, இன்னும் கொடிய வகை மாறுபாடுகள் உருவாவதற்கு முன்னரே, இதை வெற்றிகரமாக அகற்றியிருக்க முடியும்.

அதற்கு பதிலாக, அவ்வப்போதைய மற்றும் மட்டுப்படுத்தப்பட்ட சமூக அடைப்புகளுக்கு அப்பாற்பட்டு, முதலாளித்துவ வர்க்கம் மக்கள் ஆரோக்கியத்தை விட தனியார் இலாபத்திற்கு முன்னுரிமை வழங்கியதால் இந்த வைரஸ் கிட்டத்தட்ட சுதந்திரமாக கடிவாளமின்றி விடப்பட்டது.

வங்கிகள் மற்றும் பெருநிறுவனங்களின் இந்த அரசியல் கூட்டாளிகள் உத்தியோகபூர்வ அரசியல் வட்டாரம் முழுவதிலும் நிறைந்திருந்தனர், ஜோன்சன் மற்றும் தொழிற் கட்சி தலைவர் சர் கெய்ர் ஸ்டார்மர், டொனால்ட் ட்ரம்ப் மற்றும் ஜோ பைடென் மற்றும் சர்வதேச அளவில் அவர்களின் கூட்டாளிகள் அனைவரும் உழைக்கும் மக்கள் மற்றும் அவர்களது குடும்பங்களின் அடிப்படை நலன்களுக்கு எதிராக ஒன்று திரண்டிருந்தனர்.

கோவிட்-19 ஐ முற்றிலும் ஒழிப்பதற்கான ஒரு மூலோபாய ரீதியான, வாழ்வா சாவா போராட்டத்தை நடத்த உலக சோசலிச வலைத் தளம் ஒவ்வொரு நாட்டின் தொழிலாளர்களுக்கும் ஆகஸ்ட் 20 இல் அழைப்பு விடுத்தது. ஜோன்சன் மற்றும் அவரது பரிவாரங்கள் முன்னெடுத்த “சமூக நோயெதிர்ப்பு சக்தி பெருக்கும்” திட்டநிரலை நிராகரிப்பதற்கு மட்டும் நாம் அழைப்பு விடுக்கவில்லை, மாறாக தடுப்பூசி, முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளி மற்றும் அதுபோன்ற நடவடிக்கைகள் மூலமாக இந்த பெருந்தொற்றின் பாதிப்பை மட்டுப்படுத்த மட்டுமே கோரும் “தணிப்பு” நடவடிக்கைகளோடு மட்டுப்பட்ட கொள்கைகளுக்கும் நாம் அழைப்பு விடுத்தோம்.

'சமூக நோயெதிர்ப்பு சக்தி பெருக்கம்' வேண்டியதை நிறைவேற்றி விடாது என்பதோடு வெறும் தணிப்பு நடவடிக்கைகள் வைரஸ் பரவலை அனுமதித்து, அது உருமாறி இன்னும் மில்லியன் கணக்கானவர்கள் உயிரிழக்க மட்டுமே வழிவகுக்கும் என்பதை மிக வேகமாக பரவும் டெல்டா வகை வைரஸ் உலகெங்கிலும் வேகமாக தீவிரத்துடன் பரவியதில் நிரூபணமானது. உலக சோசலிச வலைத் தளம் பின்வருமாறு தீர்மானித்தது: “ஆகவே, இந்த பெருந்தொற்று காலம் நெடுகிலும் முன்னணி தொற்றுநோயியல் நிபுணர்கள், நுண்கிருமியியல் நிபுணர்கள் மற்றும் பிற விஞ்ஞானிகளால் முன்னெடுக்கப்பட்ட கொள்கைகளின் அடிப்படையில் இதை முற்றிலுமாக ஒழிப்பது மட்டுமே ஒரே நம்பகமான மூலோபாயமாகும். இந்த வைரஸை ஒரேயடியாக முற்றுலுமாக இல்லாதொழிக்க, உலகளவில் ஒருங்கிணைக்கப்பட்ட, கோவிட்-19 எதிர்ப்பு நடவடிக்கைகளின் ஒவ்வொரு ஆயுதத்தையும் உலகெங்கிலும் அனைவரும் பயன்படுத்துவதை இந்த முற்றிலுமாக ஒழிக்கும் நடவடிக்கை உள்ளடக்கி இருக்க வேண்டும்.'

கோவிட்-19 ஐ அகற்றுவதற்குக் கல்வியாளர்கள், பெற்றோர்கள், வாகனத்துறை தொழிலாளர்கள், போக்குவரத்து தொழிலாளர்கள், சரக்கு பரிவர்த்தனை தொழிலாளர்கள், சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் சர்வதேச அளவில் ஒட்டுமொத்த தொழிலாள வர்க்கத்தின் ஓர் ஒருங்கிணைந்த போராட்டம் தேவைப்படுகிறது.

இதற்காக, 'இந்த பெருந்தொற்றை நிறுத்தி உயிர்களைக் காப்பாற்றுவதற்கான ஓர் உலகளாவிய மூலோபாயத்திற்காக!' என்ற தலைப்பில், ஆகஸ்ட் 22 இல், உலக சோசலிச வலைத் தளம் ஓர் இணையவழி கலந்துரையாடலை ஒழுங்கமைத்திருந்தது. அந்த நிகழ்வு முற்றிலும் அகற்றும் ஒரு மூலோபாயத்தின் அவசியத்தை விளக்குவதற்காக நியூசிலாந்து ஒடாகோ பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் மைக்கெல் பேக்கர்; கனடா, கல்காரி பல்கலைக்கழகத்தின் டாக்டர் Malgorzata Gasperowicz; அமெரிக்காவின் நியூ இங்கிலாந்து காம்ப்லக்ஸ் சிஸ்டம்ஸ் பயிலகத்தின் டாக்டர் யனீர் பர்-யம் போன்ற பிரபல விஞ்ஞானிகளையும், ஆளும் உயரடுக்கின் குற்றகரமான கொள்கைகளுக்கு எதிராக போராட முன்களத்தில் உள்ள அமெரிக்க, பிரேசில் மற்றும் ஆஸ்திரேலிய ஆசிரியர்களையும் ஒன்று சேர்த்திருந்தது. மேலும் பாதுகாப்பற்ற பள்ளிகளுக்கு தன் குழந்தைகளை அனுப்ப எதிர்க்கும் தாயான லிசா டயாஸூம் அதில் பங்கெடுத்திருந்தார், பிரிட்டனைக் குறித்து இவர் வழங்கிய விபரங்களைக் கேட்ட பேராசிரியர் பேக்கர், ஜோன்சனின் கொள்கைகளை “பிரிட்டிஷ் மக்கள் மீதான காட்டுமிராண்டித்தனமான பரிசோதனை” என்று விவரித்தார்.

அந்த கூட்டம் இந்த பெருந்தொற்றை எதிர்த்து போராட தொழிலாளர்களுக்கும் இளைஞர்களுக்கும் ஒரு விஞ்ஞானபூர்வ அணுகுமுறையை வழங்கியது. அதுபோன்றவொரு போராட்டம் எந்த அவசியமான அரசியல் முன்னோக்கை அடித்தளத்தில் கொண்டிருக்க வேண்டும் என்பதையும் அது முன்னெடுத்தது, கோவிட்-19 ஐ முற்றிலும் ஒழிக்க செலவிடப்படும் நிதிக்கு வரம்புகள் விதிக்கப்படக்கூடாது என்றும், மனிதகுல சேவைக்குத் தேவையான ஆதாரவளங்கள், வங்கிகள், பிரதான பெருநிறுவனங்கள் மற்றும் பெரும் செல்வந்தர்கள் பதுக்கி வைத்துள்ள மிகப்பெரும் செல்வ குவியல்களில் இருந்து எடுக்கப்பட வேண்டும் என்றும் அந்த கூட்டம் வலியுறுத்தியது. உலகெங்கிலும் உள்ள மில்லியன் கணக்கான மக்களால் இப்போது இந்த முன்னோக்கை முன்னெடுக்க வேண்டும்.

Loading