மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்
ஆப்கானிஸ்தானில் ஆறுக்கும் அதிகமான மாகாண தலைநகரங்களைத் தாலிபான் கைப்பற்றி, கிளர்ச்சிக்கு வீழ்ந்த மொத்தம் மாகாணங்கள் 18 ஆகியுள்ள நிலையில், ஆப்கானிஸ்தானுக்குத் திரும்புமாறு பைடென் நிர்வாகம் உத்தரவிட்ட சுமார் 3,000 அமெரிக்க சிப்பாய்கள் மற்றும் கடற்படைகளின் முதல் தொகுப்பு வெள்ளிக்கிழமை காபூல் சர்வதேச விமான நிலையத்தை வந்தடைய தொடங்கியது.
ஆப்கானிஸ்தானில் தேவைப்பட்டால் வேகமாக நிலைநிறுத்துவதற்காக இன்னும் கூடுதலாக 4,000 அமெரிக்க துருப்புகளும் குவைத்திற்கு அனுப்பப்படுகின்றன. இதற்கிடையே, பிரிட்டன் அதன் சொந்த சிப்பாய்களில் 600 பேரை அனுப்பி வருகிறது.
வெளிப்பார்வைக்கு இந்த நடவடிக்கைகளின் நோக்கம், ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க மற்றும் பிரிட்டிஷ் அதிகாரிகளைத் திரும்பப் பெறுவதற்காக என்று கூறப்படுகிறது, இதை பென்டகன் 'மோதலின்றி திரும்பப்பெறும் நடவடிக்கை' அல்லது NOE (Noncombatant Evacuation Operation) என்று வரையறுக்கிறது. போரால் சீரழிக்கப்பட்ட அந்நாட்டில் அவர்கள் எவ்வளவு காலம் நிலைநிறுத்தப்பட்டிருப்பார்கள் என்பது வெளியிடப்படவில்லை. ஆனால் சந்தேகத்திற்கிடமின்றி அவர்களின் பணி, குறைந்தபட்சம் தற்காலிகமாகமாவது, காபூலைத் தாலிபான் கைப்பற்றுவதைத் தடுத்து நிறுத்தும் பெரும்பிரயத்தன முயற்சியின் பாகமாக உள்ளது.
நிச்சயமாக, 1980 களில் கிரெனடா மற்றும் பனாமா விஷயங்களைப் போலவே, அச்சுறுத்தல்கள் என்று கூறப்படுவதிலிருந்து அமெரிக்க சிப்பாய்களை மீட்பதற்காக என்பது நிச்சயமாக போர்கள் மற்றும் ஆட்சி மாற்ற நடவடிக்கைகளைத் தொடங்குவதற்கான சாக்குபோக்காக முன்னர் பயன்படுத்தப்பட்டுள்ளது. மேலும் இந்த நிலைநிறுத்தல், போராளிகள் மற்றும் அப்பாவி மக்கள் இருவரையுமே ஒரேபோல பலமாக காயப்படுத்தும் பி-52 மூலோபாய குண்டுவீசிகள், டிரோன்கள், ஏசி-130 துப்பாக்கிதாங்கிய கப்பல்கள் மற்றும் விமானந்தாங்கி போர்க்கப்பல்களில் நிலைநிறுத்தப்பட்ட போர் விமானங்கள் ஆகியவற்றைப் பயன்படுத்தி, தாலிபானின் முன்னேற்றத்திற்கு எதிராக அமெரிக்கா தொடங்கி உள்ள விமானத் தாக்குதல்களுக்கு மேலதிகமாக வருகிறது.
இதற்கிடையில், அமெரிக்க அதிகாரிகள், எந்தவித 'பலத்தைக் கொண்டு திணிக்கப்படும் எந்த அரசாங்கமும் ஓர் அன்னியப்பட்ட அரசாகவே இருக்கும்' என்று மீண்டும் மீண்டும் எச்சரித்து வருகின்றனர். பெரும் அமெரிக்க இராணுவப் படை மூலமாக காபூலில் கைப்பாவை ஆட்சி திணிக்கப்பட்டதில்லை என்பதைப் போல, என்னவொரு பாசாங்குத்தனம்!
அமெரிக்க இராணுவம் மற்றும் உளவுத்துறை எந்திரத்தால் என்னென்ன தந்திரோபாயங்கள் முன்வைக்கப்பட்டாலும், அமெரிக்க ஏகாதிபத்தியம் ஆப்கானிஸ்தானை மீண்டும் கைப்பற்றுவதற்கு ஒரு சில ஆயிரத்திற்கும் அதிகமான துருப்புக்கள் தேவைப்படும் என்பதோடு, அது கடந்த 20 ஆண்டு கால பாரிய படுகொலைகளையே விஞ்சும் அளவிற்கு ஓர் இரத்த ஆறைக் கொண்டிருக்கும்.
வியட்நாமில் அமெரிக்க தூதரக மேல்தளத்திலிருந்து கடைசி அமெரிக்கரையும் ஹெலிகாப்டர் மூலமாக ஏற்றி அனுப்பிய 1975 சைகான் வீழ்ச்சிக்குப் பின்னர் காணப்படாத அளவுக்கு வாஷிங்டன் ஓர் அதிர்ச்சியூட்டும் வரலாற்று தோல்வியை நேருக்கு நேர் சந்திக்கிறது. காபூல் அமெரிக்க தூதரகத்திலிருந்து வரும் தகவல்கள், அங்கிருக்கும் பணியாளர்கள் ஆவணங்களை வீசியெறிந்து கணினிகளை அழித்து வருவதைச் சுட்டிக்காட்டுகின்றன.
அமெரிக்க ஆளும் ஸ்தாபகத்திற்குள் அதிகரித்தளவில் வியட்நாமுடன் ஒப்பீடு செய்யப்படுகிறது. அமெரிக்க செனட் குடியரசுக் கட்சித் தலைவர் மிட்ச் மெக்கோனெல் வியாழனன்று அறிவிக்கையில், 'பைடெனின் தீர்மானங்கள் அவமானகரமான 1975 சைகோன் தோல்வியை விட இன்னும் மோசமான தோல்வியை நோக்கி நம்மை நகர்த்தி வருகின்றன,” என்றார்.
ஊடகங்களில் அமெரிக்க தலையீட்டை புதுப்பிப்பதற்கான அதிகரித்த முரசொலியும் ஒலிக்கிறது. வெள்ளிக்கிழமை வாஷிங்டன் போஸ்ட் தலையங்கம் குறிப்பிட்டது: 'பைடென் படைகளை முன்கூட்டியே திரும்பப் பெற்றது, அத்துடன் ஆப்கானிஸ்தான் அரசுக்கு இன்னும் அதிக அர்த்தமுள்ள உதவியை வழங்க அவர் மறுத்தது ஆகியவை பேரழிவைகரமான ஆபத்திற்குட்படுத்துகிறது.'
இதைத் தொடர்ந்து, ஒவ்வொரு இடத்திலும் அமெரிக்க ஏகாதிபத்திய வெறியரான, போஸ்டின் மேக்ஸ் பூட் இன் கட்டுரை வந்தது, அது 'பைடென் அவரின் மோசமான முடிவின் மீது மறுபரிசீலனை செய்ய விரும்புவதும் மற்றும் காபூல் வீழ்வதற்கு முன்னதாக அரசு படைகளுக்கு வலுசேர்க்க அமெரிக்க போர் விமானங்களையும் ஆலோசகர்களையும் மீண்டும் அங்கே அனுப்புவதுமே இன்னும் பெரிய பேரழிவைத் தவிர்ப்பதற்கான ஒரே விசயமாகும்,” என்று வலியுறுத்தினார்.
இதற்கிடையே, Foreign Policy ஒரு கட்டுரை வெளியிட்டது, 'ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கா விலகுவது தொடர வேண்டும். ஆனால் ஒரு புதிய இராணுவ தலையீடு தொடங்க வேண்டும்,' என்று குறிப்பிட்டது. “இராணுவ நடவடிக்கைக்கான நோக்கம் மீது அதன் சொல்லாடலை' அப்பாவி மக்களைக் காப்பாற்ற கிளர்ச்சி தடுப்பு என்பதிலிருந்து 'மனிதாபிமான' தலையீடு என்று 'மாற்றுவதன்' மூலம் வாஷிங்டனால் இதை எட்ட முடியும் என்று அது வாதிடுகிறது.
வலதுசாரி குடியரசுக் கட்சியினர், போர் ஆதரவு ஜனநாயகக் கட்சியினர் மற்றும் பெருநிறுவன ஊடகங்கள் அனைத்தும், பரந்த பெரும்பாலான பெண்கள் ஒவ்வொரு நாளும் தங்களுக்கும் தங்கள் குழந்தைகளுக்கும் போதுமான உணவைக் காண்பதற்கே போராடி வரும் ஒரு நாட்டில், அங்கே பெண்கள் உரிமைகளே மிக முக்கிய கேள்வி என்பதாக சித்தரிக்க ஒன்றிணைந்துள்ளன.
இருப்பினும் மற்ற இராணுவ 'அதிகரிப்புக்கான' பரிந்துரைகளாலும் மற்றும் 'ஆப்கானிஸ்தானை யார் இழந்தது' பிரச்சாரத்தைத் தொடங்க வாஷிங்டனில் நடந்து வரும் எரிச்சலூட்டும் முயற்சிகளாலும் அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு ஏற்பட்ட அவமானகரமான தோல்வியின் அளவை மூடிமறைக்க முடியவில்லை.
ஆகஸ்ட் 31 இல் உத்தியோகபூர்வமாக அமெரிக்க படைகள் திரும்பப் பெறப்பட்டதற்குப் பின்னர் தசாப்தங்கள் பழைய எதிர்-கிளர்ச்சியைத் தொடங்கும் என்று கருதப்படும் மற்றும் கடந்த 20 ஆண்டுகளாக அண்மித்து 90 பில்லியன் டாலர் செலவிட்டு பென்டகன் ஒழுங்கமைத்த, பயிற்சி அளித்த மற்றும் ஆயுத உதவிகள் செய்த ஆப்கான் ஆட்சியின் பாதுகாப்புப் படைகள் கடந்த வாரங்களில் பெரும் தோல்வியைக் கண்டுள்ளன.
ஆப்கானிய துருப்புக்கள் சீருடைகளை கழற்றி எறிந்துவிட்டு சரணடைந்து விடுகின்றன அல்லது பொது மக்களிடையே கலந்து விடுகின்றன அல்லது, சிலர் விஷயங்களில், கிளர்ச்சியாளர்களுடன் சேர்ந்து விடுகின்றனர் என்கின்ற நிலையில், பாதுகாப்புப் படைகள் சண்டையிடாமலேயே ஒரு நகரம் மாற்றி ஒரு நகரத்தை ஒப்படைத்து கொண்டிருக்கின்றன.
ஆப்கானிய பாதுகாப்புப் படைகள் மற்றும் அவற்றின் தலைவர்களுக்கு 'விருப்பமில்லை' என்று பிரச்சினையை அமெரிக்க அதிகாரிகள் வேறுவிதமாக சித்தரிக்கின்றனர். 'அவர்கள் தங்களுக்காக போராட வேண்டும், தங்கள் தேசத்திற்காக போராட வேண்டும்,' என்று பைடென் இந்த வார தொடக்கத்தில் அறிவித்தார்.
அரசியல்வாதிகளும் மற்றும் அவர்களின் தளபதிகளும் தங்கள் சம்பளங்கள் மற்றும் பொருட்களைத் திருடிக் கொள்வதால், சம்பளம் கொடுக்கப்படாமல், உணவளிக்கப்படாமல் மற்றும் தளவாடங்களின்றி உள்ள சிப்பாய்கள் மற்றும் பொலிஸ் உட்பட, பெருந்திரளான ஆப்கான் மக்கள் அமெரிக்க ஆக்கிரமிப்பால் தங்களுக்கு ஒப்படைக்கப்பட்டது 'அவர்கள் தேசம்' இல்லை என்ற முடிவுக்கு வந்துள்ளனர்.
இருபது ஆண்டுகால ஆக்கிரமிப்பும், ஒரு ட்ரில்லியன் டாலருக்கும் அதிகமாக செய்யப்பட்ட செலவுகளும் ஆப்கானிஸ்தானை வறிய, வளர்ச்சியடையாத மற்றும் அதீத சமூக சமத்துவமின்மை மட்டங்களால் சீரழிக்கப்பட்ட ஒரு நாடாக அதை விட்டு வைத்துள்ளது. மக்களில் குறைந்தப்பட்சம் 70 சதவிகிதத்தினர் ஒரு நாளைக்கு ஒரு டாலர் அல்லது அதற்கும் குறைவான வருமானத்தில் வாழ்கின்றனர், அதேவேளையில் அரசாங்கத்துடன் தொடர்புடைய ஒரு சில நூறு குடும்பங்கள் கையாடல் செய்யப்பட்ட உதவிப் பணம் மற்றும் இலாபகரமான இராணுவ ஒப்பந்தங்களில் இருந்து பெரும் செல்வந்தர்களாக வளர்ந்துள்ளனர். இந்த மக்களில் முக்கால்வாசிப் பேர் கிராமப்புறமக்கள் இருப்பதுடன், வாழ்வாதார விவசாயத்திலிருந்து உயிர் வாழ்வதற்கே போராடி வருகின்றனர். அமெரிக்க ஆக்கிரமிப்பின் குற்றங்கள் மீதும், மில்லியனர்கள் மீதும் மற்றும் காபூலில் உள்ள அமெரிக்க கைப்பாவைகள் மீதும் இருக்கும் வெறுப்பு, அமெரிக்க இராணுவத்தால் எத்தனை பேர் கொல்லப்பட்டாலும் பரவாயில்லை என்று, தாலிபான்கள் இளைஞர்கள் நியமிப்பதற்கு அடி ஆதாரத்தை வழங்குகின்றன.
காபூல் ஆட்சி, தங்கள் பைகளில் ஒன்றுக்கு மேற்பட்ட கடவுச்சீட்டைக் கொண்டுள்ள ஊழல்பீடித்த வெளிநாட்டுவாழ் அரசியல்வாதிகளால் வழி நடத்தப்படுகிறது, இவர்களில் சிலரால் அந்நாட்டின் முக்கிய மொழிகளான பாஸ்டோ அல்லது டாரி மொழியில் கூட பேச தெரியாதவர்கள். ஜனாதிபதி அஷ்ரப் கானி மற்றும் அவர் பரிவாரங்களும் மக்கள்தொகையில் வெகு சிலரே பங்கெடுத்த மோசடி தேர்தல்கள் மூலமாகவும், வாஷிங்டனின் ஆதரவினாலும் அவர்கள் பதவிகளைத் தக்க வைத்தவர்கள்.
வியட்நாமை போலவே ஆப்கானிஸ்தானும் குறைந்தபட்ம்ச ஒரு கால் மில்லியன் பேரை பலிக் கொண்ட ஒரு போரில் அமெரிக்க ஏகாதிபத்தியத்தால் வெற்றிக்கு வழி காண முடியாது என்பதை நிரூபித்துள்ளது. 1980 களில் சிஐஏ உதவியுடன் பிராங்கென்ஸ்டைன் அசுரனைப் போல தோற்றுவிக்கப்பட்ட அல் கொய்தா மீதான வேட்டையிலிருந்து, அமெரிக்க தலையீடு, அமெரிக்க ஆக்கிரமிப்புக்கு ஓர் அச்சுறுத்தலாக கருதப்படும் எவரொருவரும் ஒரு 'பயங்கரவாதியாக' சிறையில் அடைக்கப்பட்டு, சித்திரவதை செய்யப்பட்டு, விசாரணையின்றி கொல்லப்படும் வகையில் கையாளப்படும் மக்களுக்கு எதிரான ஒரு போராக மாற்றப்பட்டு ஒரு சில மாதங்களுக்குள், நியூ யோர்க் மற்றும் வாஷிங்டன் மீது செப்டம்பர் 11, 2001 இல் நடத்தப்பட்ட தாக்குதல்களுக்குப் பின்னர், “பயங்கரவாதத்திற்கு எதிரான போர்' என்ற சாக்குபோக்கின் கீழ் அந்த போர் தொடங்கப்பட்டது.
ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட தோல்வி வாஷிங்டனின் இந்த நீண்ட காலப் போரின் தோல்வியை மட்டுமல்ல, மாறாக மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக அமெரிக்க ஏகாதிபத்தியத்தால் பின்பற்றப்படும் ஒரு முழு உலகளாவிய கொள்கையின் தோல்வியையும் எடுத்துக் காட்டுகிறது.
1991 இல் சோவியத் ஒன்றியம் மாஸ்கோவின் ஸ்ராலினிச அதிகாரத்துவத்தால் கலைக்கப்பட்டதை அடுத்து, உலகெங்கிலுமான மூலோபாய பிரதேசங்களில், முதல் படியாக காஸ்பியன் பேசினின் வாசலில் அதன் மிகப்பெரிய எரிசக்தி ஆதாரவளத்துடன் யுரேஷியா கண்டத்தின் மையத்தில் அமைந்துள்ள ஆப்கானிஸ்தானில் இருந்து உலகின் ஐந்தாவது மிகப்பெரிய எண்ணெய் வயல்களைக் கொண்டுள்ள ஈராக் வரையில் தனது மேலாதிக்கத்தை வலியுறுத்த வாஷிங்டன் மிகப்பெரும் இராணுவ மேலாதிக்கத்தை பயன்படுத்துவதற்கு எதுவும் குறிக்கே நிற்காது என்று அமெரிக்க ஆளும் உயரடுக்கு தீர்மானித்தது.
முன்கூட்டிய போர் மற்றும் கட்டுப்பாடற்ற இராணுவவாதம் என்ற கொள்கையின் மூலம், அமெரிக்க முதலாளித்துவம் அதன் உலகளாவிய பொருளாதார மேலாதிக்கத்தின் நீண்டகால வீழ்ச்சியைத் தலைகீழாக மாற்ற முடியும் என்பதே அதன் அடியிலிருந்த கருத்துருவாக இருந்தது. ஆப்கானிஸ்தான் மற்றும் ஈராக்கில் அதன் ஆரம்ப இராணுவ வெற்றிகள் பெரும் விலைகொடுத்துப் பெற்ற சிறிய வெற்றிகளாக நிரூபிக்கப்பட்டுள்ளன. ட்ரில்லியன் கணக்கான டாலர்கள் செலவழித்து, 7,000 க்கும் அதிகமான அமெரிக்க துருப்புக்களின் உயிர்களைத் தியாகம் செய்தும், ஒரு மில்லியனுக்கும் அதிகமான ஆப்கானியர்கள் மற்றும் ஈராக்கியர்களைப் படுகொலை செய்தும், வாஷிங்டன் அதன் நலன்களைப் பாதுகாக்கக்கூடிய ஒரு ஆட்சியை திணிப்பதில் அவ்விரு நாட்டிலுமே வெற்றி அடையவில்லை.
1989 இல், 15,000 செம்படை சிப்பாய்களின் உயிர்களைப் பறித்த ஒரு தசாப்த கால போருக்குப் பின்னர் சோவியத் படைகள் ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறிய போது, வாஷிங்டன் அதையொரு வெற்றியாகக் கணக்கில் கொண்டு, அது சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சிக்கு பங்களித்ததாக பின்னர் அதை கொண்டாடியது.
ஜனாதிபதி ஜிம்மி கார்ட்டரின் தேசிய பாதுகாப்பு ஆலோசகரான வெறித்தனமான கம்யூனிச-விரோத ஸ்பீகினியேவ் பிரெசின்ஸ்கி (Zbigniew Brzezinski), 1978 இல் அவர் எதை மாஸ்கோவின் 'சொந்த வியட்நாம்' என்று விவரித்தாரோ மாஸ்கோ மீது அதை திணிப்பதற்காக காபூலில் சோவியத் ஆதரவு ஆட்சிக்கு எதிராக ஓர் இஸ்லாமிய எழுச்சியை தூண்டிவிடும் கொள்கையைத் தொடக்கி இருந்தார்.
1998 இல், ஆப்கானிஸ்தானில் 2 மில்லியன் பேர் வரை உள்நாட்டுப் போரில் உயிர் நீத்த பின்னர், பிரெசின்ஸ்கி ஒரு பேட்டியில் அவருக்கு எந்த வருத்தமும் இல்லை என்று கூறினார்: 'உலக வரலாற்றில் இதை விட முக்கியமானது என்ன இருக்க முடியும்? தலிபானா அல்லது சோவியத் பேரரசின் சரிவா? கிளர்ந்தெழுந்த சில முஸ்லிம்களா அல்லது மத்திய ஐரோப்பாவின் விடுதலையா மற்றும் பனிப்போரின் முடிவா?'
'பேரரசுகளின் கல்லறை” என்றறியப்படும் ஆப்கானிஸ்தானில் செம்படை சந்தித்த தோல்வியை, வாஷிங்டன், சோவியத் ஒன்றியத்தின் அழிவுக்குப் பங்களித்ததாக கொண்டாடியது. ஆனால் அதே நாட்டில் அதேபோன்ற நிலைப்பாட்டில் இருந்து அமெரிக்க ஏகாதிபத்தியம் அடைந்த தோல்வியைப் பகுப்பாய்வு செய்ய அமெரிக்க ஊடகங்கள் எந்த முயற்சியும் எடுக்கவில்லை.
இது காபூலில் உள்ள ஆட்சியின் திவால்நிலையை மட்டுமல்ல, வாஷிங்டனின் திவால்நிலையையும் அம்பலப்படுத்தியுள்ளது. இரண்டு தசாப்த கால ஆப்கானிஸ்தான் படுயெடுப்புக்குப் பின்னர், 600,000 அமெரிக்கர்களுக்கு அதிகமானவர்கள் உயிரிழந்துள்ள கோவிட்-19 பெருந்தொற்றுக்கு அமெரிக்க ஆளும் உயரடுக்கு விடையிறுப்பாக காட்டிய மனிதப்படுகொலை கொள்கையிலும் மற்றும் ஜனவரி 6 ஆட்சிக்கவிழ்ப்பு முயற்சியிலும் வெளிப்பட்ட ஜனநாயக ஆட்சி வடிவங்களின் முன்னேறிய சீரழிவு மற்றும் அமெரிக்க சமூகத்தின் அதிர்ச்சியூட்டும் சமூக சமத்துவமின்மை மட்டங்கள் ஆகியவற்றால் அமெரிக்க சமூகம் குணாம்சப்பட்டுள்ளது. பல தசாப்தங்களாக தடையற்ற போர் மற்றும் 'பயங்கரவாதத்தின் மீதான போர்' என்ற சாக்குப்போக்கில் திணிக்கப்பட்ட ஜனநாயக விரோத நடவடிக்கைகள் ஒரு பொலிஸ் அரசு சர்வாதிகாரத்திற்கான மேல்கட்டுமானங்களை உருவாக்கியுள்ளன.
போரில் ஓர் ஏகாதிபத்திய சக்தியின் தோல்வி சமூக புரட்சிக்கான கதவுகளைத் திறந்துவிடுகிறது என்பதை வரலாறு காட்டுகிறது. ஆப்கானிஸ்தான் சம்பவங்களுக்கு அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் விடையிறுப்பானது அணுஆயுதமேந்திய சீனா மற்றும் ரஷ்யாவுக்கு எதிராக உட்பட, மிகவும் அபாயகரமான போர்களுக்கான அதன் தயாரிப்புக்களைத் தீவிரப்படுத்துவதில் ஒன்றாக இருக்கும் என்றாலும், ஆப்கான் தோல்வியும் ஜனநாயகக் கட்சி மற்றும் குடியரசுக் கட்சி இரண்டினது கொள்கையை அது மதிப்பிழக்கச் செய்வதும் அமெரிக்க தொழிலாள வர்க்கத்தின் வளர்ந்து வரும் இயக்கத்தை வலுப்படுத்த மட்டுமே செய்யும்.
போர் மற்றும் அதன் மூலாதாரமான இந்த முதலாளித்துவ அமைப்புமுறைக்கு எதிரான ஒரு புரட்சிகர போராட்டத்தில் அமெரிக்காவிலும் சர்வதேச அளவிலும் தொழிலாள வர்க்கத்தை அணித்திரட்டும் ஒரு புதிய புரட்சிகர தலைமையைக் கட்டமைப்பதே தீர்க்கமான பிரச்சினையாகும்.