மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்
காபூலில் ஒரு பாடசாலைக்கு வெளியே சனிக்கிழமையன்று நடந்த பயங்கர பயங்கரவாத குண்டுவெடிப்பை அடுத்து, ஆப்கானிஸ்தானில் இரண்டு தசாப்தங்களாக நடந்த கொலைகாரப் போரினை தொடர்வதற்கு ஆதரவாக அமெரிக்க ஆளும் வர்க்கத்திற்குள் ஒரு பிரச்சாரம் கணிசமானளவு அதிகரித்துள்ளது.
ஒரு பெரிய கார் குண்டுவெடிப்பை தொடர்ந்த இரண்டு குண்டு வெடிப்புகளில் 85 பேர் உயிரிழந்தனர். அதே நேரத்தில் ஷியா சிறுபான்மை மக்களான ஹசாரா பெரும்பாலும் வாழும் மேற்கு காபூலின் ஏழ்மையான பகுதியில் கிட்டத்தட்ட 200 பேர் காயமடைந்தனர். பலியானவர்களில் பெரும்பாலோர் 13 முதல் 18 வயதுக்குட்பட்ட பள்ளி மாணவிகளாவர்.
செப்டம்பர் 11 ஆம் தேதிக்குள் அனைத்து அமெரிக்க துருப்புக்களும் ஆப்கானிஸ்தானில் இருந்து விலகுவதாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடெனின் கடந்த மாதம் அறிவிப்பின் மீது தாக்குவதற்கு இந்த அட்டூழியத்தை கைப்பற்றி வாஷிங்டன் போஸ்ட் மற்றும் வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல் ஆகிய இரண்டும் செவ்வாயன்று தலையங்கங்களை வெளியிட்டன. துருப்புக்களை விலக்குவதற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட திகதி அக்டோபர் 7, 2001 ஆப்கானிஸ்தான் மீதான அமெரிக்க படையெடுப்பிற்கு சாக்குப்போக்காக பயன்படுத்தப்பட்ட நியூ யோர்க் மற்றும் வாஷிங்டன் டி.சி மீதான தாக்குதல்களின் 20 வது ஆண்டு நிறைவு நாளாகும்.
“ஆப்கானிஸ்தானின் பயங்கரவாத எதிர்காலம்” என்ற தலைப்பில் வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல் தலையங்கம் பின்வருமாறு கூறுகிறது, “ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கா விலகுவது அமெரிக்க பாதுகாப்பு நலன்களைக் குறைமதிப்பிற்கு உட்படுத்துகிறது. ஆனால் இதனால் உடனடியாக கூடுதலான மனிதாபிமான பேரழிவு ஏற்படக்கூடும். வார இறுதியில் காபூலில் ஒரு பள்ளி மீதான தாக்குதல் இதற்கு ஒரு முன்னோட்டமாகும்.” "ஒரு அமெரிக்க பிரசன்னம் ஒவ்வொரு கொடூரமான தாக்குதலையும் தடுக்க முடியாது, ஆனால் வெளியேறுவது என்பது அவற்றை அதிகரிக்க செய்வதை ஏற்றுக்கொள்ளவதாகும்" என்று அது முடிக்கின்றது.
வாஷிங்டன் போஸ்ட், "ஒரு கடுமையான முன்னோட்டம்" என்ற தலைப்பில் இதே மாதிரி தலையங்கத்தில்: "காபூலில் சனிக்கிழமையன்று ஒரு பள்ளிக்கூடத்தின் மீது பயங்கர குண்டுவெடிப்பு ஆப்கானிஸ்தான் பேரழிவை முன்கூட்டி கூறுவதாக இருந்தது. குறிப்பாக, அமெரிக்கா மற்றும் பிற சர்வதேச நாடுகளின் படைகளை திரும்பப் பெறுவதால் அதன் பெண்கள் பாதிக்கப்படலாம்". "அமெரிக்கா ஏன் ஆப்கானிஸ்தானில் ஒப்பீட்டளவில் சிறியவாக தனது பிரசன்னத்தை வைத்திருக்கவில்லை. இது சமீபத்திய ஆண்டுகளில் பென்டகனின் வரவு-செலவுத் திட்டத்தில் 10 சதவிகிதத்திற்கும் குறைவாகவே பயன்படுத்தியுள்ளதுடன் மற்றும் சில அமெரிக்க இழப்புகளையே ஏற்படுத்தியுள்ளது” என எழுதியது.
ஆப்கானிஸ்தான் திரும்பப் பெறுவது தொடர்பாக அமெரிக்க அரசுக்குள் ஏற்பட்ட கசப்பான பிளவுகளின் பின்னணியில், காபூலில் குண்டுவெடிப்பு தாக்குதல் குறிப்பாக வஞ்சகமான தன்மையை எடுக்கின்றது.
அமெரிக்க ஊடகங்களுடன் காபூலில் உள்ள அமெரிக்க கைப்பாவை அரசாங்கமும் வெகுஜனக் கொலைக்கு தலிபான்களை குறைகூற முயன்றாலும், தலிபான்கள் குண்டுவெடிப்பைக் கண்டித்துள்ளதுடன் மேலும் வாக்குறுதியளிக்கப்பட்ட திரும்பபெறுவதற்கு முன்னர் வாஷிங்டனைத் தூண்டிவிட வேண்டாம் என்று பொதுவாக முயற்சி செய்துள்ளது. இதுவரை, குண்டுவெடிப்புக்கு யாரும் பொறுப்பேற்கவில்லை.
இந்த கொலைகளிலிருந்து யார் பயனடைகிறார்கள் என்ற நிலைப்பாட்டில் இருந்து பார்த்தால், அமெரிக்க இராணுவ-உளவுத்துறை எந்திரத்திற்குள் அல்லது தொடர்ச்சியான அமெரிக்க ஆக்கிரமிப்பில் தமது எதிர்காலத்திற்கு நேரடியாக நம்பியுள்ள ஆப்கானிஸ்தான் ஆளும் வட்டாரங்களில் உள்ள பிரிவுகளா இதற்கு காரணம் என்று கேள்வி எழுப்ப ஏராளமான காரணங்கள் உள்ளன. அதன் நேரம் மற்றும் இலக்கு இரண்டையும் பொறுத்தவரை, அமெரிக்க துருப்புக்கள் இல்லாமல் "கடந்த 20 ஆண்டுகளின் வெற்றிகள்" மற்றும் குறிப்பாக "பெண்களினது உரிமைகள் இல்லாதுபோய்விடும் என்ற போலியான கதையை கூறி பின்வாங்கலை எதிர்ப்போருக்கு ஏற்றவாறு அது வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த இழிந்த பிரச்சாரம் "பெரிய பொய்" என்ற வகைக்குள் வருகிறது. இது அமெரிக்க படையெடுப்பு மற்றும் ஆப்கானிஸ்தானை ஆக்கிரமிப்பது என்பது பயங்கரவாதத்திற்கு எதிரான சிலுவைப் போராக மட்டுமல்லாமல், ஜனநாயகம் மற்றும் பாலின சமத்துவத்தை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட "மனிதாபிமான" தலையீட்டிற்கான ஒரு முயற்சியாகவும் உள்ளது என்ற வரையறைக்குள் வருகின்றது.
அமெரிக்க ஏகாதிபத்தியத்துடன் ஆப்கானிஸ்தானின் துன்பகரமான எதிர்கொள்ளல் 2001 இல் தொடங்கவில்லை. மாறாக இரண்டு தசாப்தங்களுக்கு முன்னர் சிஐஏ, சவுதி அரேபியா மற்றும் பாக்கிஸ்தானுடன் இணைந்து, முஸ்லீம் உலகம் முழுவதிலுமிருந்து இஸ்லாமிய ஆயுதக்குழுக்களை அணிதிரட்டி, காபூலில் ஒரு மதச்சார்பற்ற அரசாங்கத்தை ஆதரித்த சோவியத் படைகளுக்கு எதிரான ஒரு பினாமி போரில் இருந்த ஆரம்பித்தது என்பதை இந்த பெரிய பொய் மறைக்கின்றது. சிஐஏ இன் ஒத்துழைப்பாளர்களில் முக்கியமானவர் ஒசாமா பின்லேடன் ஆவார். அவர் சிஐஏ இன் உதவியுடன் அல்கொய்தாவை நிறுவினார். தலிபான்கள் இந்த தசாப்த கால யுத்தத்தால் ஏற்பட்ட குழப்பம் மற்றும் அழிவின் விளைவாகும். இது 2 மில்லியன் ஆப்கானியர்களின் உயிர்களைக் கொன்றது. இது ஆரம்பத்தில் நாட்டில் ஒழுங்கை மீட்டெடுக்கும் திறன் கொண்ட சக்தியாக வாஷிங்டனால் ஆதரிக்கப்பட்டு, மற்றும் அமெரிக்க ஏகாதிபத்தியம் எண்ணெய்குழாய் மற்றும் பிற நலன்களுக்காக அதனுடன் "வணிகம்" செய்ய முடியும் என்று கருதப்பட்டது.
இரண்டு தசாப்த கால அமெரிக்க குண்டுவெடிப்பு மற்றும் படுகொலைகளின் "ஆதாயங்கள்" என்ன? ஒரு குறைத்துக்கூறப்பட்ட மதிப்பீடு என்னவென்றால், 175,000 ஆப்கானியர்கள் தங்கள் உயிர்களை இழந்துவிட்டனர். இருப்பினும் போரினால் மறைமுகமாக இறப்புகள் உட்பட உண்மையான எண்ணிக்கை ஒரு மில்லியனுக்கும் அதிகமாக உள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் மனித மேம்பாட்டு குறியீட்டின்படி, ஆப்கானிஸ்தான் 169 வது இடத்தில் துணை சஹாரா ஆப்பிரிக்காவின் பெரும்பாலான நாடுகளுக்கு பின்னால் உள்ளது. மக்கள்தொகையில் பெரும்பான்மையானவர்கள், பெண்களும் ஆண்களும் மோசமான வறுமை மற்றும் அடக்குமுறையை நிலைமைகளின் கீழ் வாழ்கின்றனர். ஆப்கானிஸ்தானின் "புனரமைப்புக்கு" வாஷிங்டன் 143 பில்லியன் டாலர் செலவழித்த பின்னர், இது ஊழல் அரசியல்வாதிகள் மற்றும் போர்பிரபுக்களின் குறுகிய அடுக்கை செல்வந்தர்களாக்கி உள்ளது.
பைடென் நிர்வாகம் அதன் செப்டம்பர் 11 திரும்ப்பெறுதல் உறுதிமொழியை பூர்த்தி செய்யுமா என்பதைப் பொறுத்திருந்து பார்க்க வேண்டும். டொனால்ட் டிரம்ப் 2019 ல் சிரியாவிலிருந்து முழுமையாக விலகுவதாக அறிவித்ததையும் நினைவு கூர வேண்டும். இராணுவ மற்றும் உளவுத்துறை பிரிவின் எதிர்ப்பின் ஒரு புயலை எதிர்கொண்டபோது, அவர் "எண்ணெயை கட்டுப்ப்பாட்டில் வைத்திருக்க" மட்டுமே துருப்புக்களை அங்கு விட்டுச் செல்வதாகக் கூறினார். பைடென் இதேபோன்ற தாக்குதலை எதிர்கொண்டால், அவர் "பெண்களைக் காப்பாற்றுவதற்காக" மட்டுமே துருப்புக்களை விட்டு செல்வதாகக் கூறுவார் என்பதில் சந்தேகமில்லை.
ஆப்கானிஸ்தான் திரும்பப் பெறுவது தொடர்பான பிளவுகளுக்கு அடித்தளமாக இருப்பது பயங்கரவாதம் குறித்த கவலைகளோ அல்லது பெண்களின் உரிமைகள் பற்றியதோ இல்லை. அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு எரிசக்தி நிறைந்த மத்திய ஆசியாவில் ஒரு இறங்குதுறை மற்றும் சீனா, ஈரான் அல்லது ரஷ்யாவிற்கு எதிரான சாத்தியமான போர்களுக்கான ஏவுதளத்தை வழங்கிய ஒரு நாட்டில் புவிசார் மூலோபாய நலன்கள் ஆபத்தில் உள்ளன.
ஆப்கானிஸ்தானில் அமெரிக்க தலையீட்டிற்கான உண்மையான காரணங்கள் பற்றிய ஒரு பார்வை 2018 அக்டோபரில் ஓய்வுபெற்ற அமெரிக்க இராணுவ தளபதி லோரன்ஸ் வில்கர்சன் ஆற்றிய உரையில் வழங்கப்பட்டது. அவர் அக்டோபர் 2001 அமெரிக்க படையெடுப்பின் போது அப்போதைய வெளியுறவு செயலாளராக கொலின் பௌல் இருந்தபோது படைகளின் தலைவராக இருந்தார்.
மத்திய ஆசியா வழியாக போகும் சீனாவின் பாதை மற்றும் சாலை முன்முயற்சியின் மீதான இராணுவ தாக்குதலுக்கான தூரத்திற்குள் “கடின சக்தியை” பயன்படுத்துவதே இதன் நோக்கங்களில் ஒன்று என்று வில்கர்சன் கூறினார். சீனாவின் மேற்கு சின்ஜியாங் மாகாணத்துடனான ஆப்கானிஸ்தானின் குறுகிய எல்லையை சுட்டிக்காட்டிய அவர், பெரும்பான்மையான முஸ்லீம் வீகர் மக்களிடையே "அமைதியின்மையைத் தூண்டுவதற்கும்" "சீனாவை ஸ்திரமின்மைக்கு உட்படுத்துவதற்கும்" சிஐஏ இற்கு ஒரு தளத்தை வழங்கும் என்று கூறினார். சிரியாவில் ஆட்சி மாற்றத்திற்கான போரில் சிஐஏவின் பினாமி தரைப்படைகளாக பணியாற்றிய அல்கொய்தா படைகளில் ஆயிரக்கணக்கான வீகர் இனத்தவர் பங்கேற்றிருந்ததை அவர் குறிப்பிட்டார்.
அதே நோக்கங்களுக்காக செயல்படும் புதிய தளங்களைத் தேடுவதற்கு ஆப்கானிஸ்தானில் இருந்து திரும்பப் பெற்றதை பயன்படுத்த பென்டகன் தயாராகி வருகிறது. மூத்த அமெரிக்க ஆப்கானிஸ்தான் தூதர் ஸல்மே கலீல்சாத் முன்னாள் சோவியத் குடியரசுகளான உஸ்பெகிஸ்தான் மற்றும் தஜிகிஸ்தானுக்கு அனுப்பப்பட்டார். தஜிகிஸ்தான் ஆப்கானிஸ்தானின் எல்லையாக இருப்பதுடன் மற்றும் சீனா, ஈரான் மற்றும் ரஷ்யாவினதும் எல்லைகளுக்கும் அருகாமையில் உள்ளது. ஒரு விமான தளத்தை வழங்க பாகிஸ்தானுக்கு வாஷிங்டன் அழுத்தம் கொடுக்கிறது.
ஆப்கானிஸ்தான் போரை காலவரையின்றி தொடரக்கூடிய மற்றும் குண்டுவெடிப்புத் தாக்குதல்கள், ட்ரோன் தாக்குதல்கள் மற்றும் தேவை ஏற்படின் தரைவழி நடவடிக்கைகளுடனான "அதன் பிராந்தியத்திற்கு மேலான" படைகளை பராமரிப்பது பற்றி இராணுவ மேல்தட்டு பேசுகிறது. இதற்கிடையில், அனைத்து அமெரிக்க இராணுவமும், சிஐஏ உம் ஆப்கானிஸ்தானில் இருந்து திரும்பப் பெறப்படுமா என்பது தெளிவாகத் தெரியவில்லை. அமெரிக்க ஆயுதப்படைகளில் சுமார் 3,300 உறுப்பினர்கள் அதிகாரப்பூர்வமாக நாட்டில் பணியில் அமர்த்தப்பட்டாலும், "பயங்கரவாத எதிர்ப்பு" நடவடிக்கைகளில் நேரடியாக ஈடுபட்டுள்ளவர்கள் உட்பட அமெரிக்க "ஒப்பந்தக்காரர்களை" பொறுத்தவரை அந்த எண்ணிக்கையை விட இது மூன்று முதல் நான்கு மடங்கு அதிகமாகும்.
இதற்கிடையில், எந்தவொரு துருப்புக்களும் போரினால் பாதிக்கப்பட்ட நாட்டை விட்டு வெளியேறவில்லை எனக் கூறப்படுவதால், பென்டகன் B-52 குண்டுவீச்சு, F-18 போர் விமானங்கள் மற்றும் ஒரு விமானம் தாங்கி தாக்குதல் குழுவை பிராந்தியத்திற்கு துருப்புக்களை பின்வாங்க அனுப்பியுள்ளது.
அமெரிக்க வரலாற்றில் மிக நீண்ட போரை முடிவுக்கு கொண்டுவருவதற்கான எண்ணம் வாஷிங்டனுக்கு இல்லை. அதை வேறு வழிகளில் தொடர மட்டுமே திட்டமிட்டுள்ளது. மேலும், ஆப்கானிஸ்தானில் அதன் மூலோபாயம் அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆவணங்களில் கூறப்பட்டுள்ள அணு ஆயுத சீனா மற்றும் ரஷ்யாவிற்கு எதிரான உலகப் போருக்கான தயாரிப்புகளுடன் “பெரும் சக்தி” மோதலின் மூலோபாயத்துடன் பிரிக்கமுடியாத வகையில் பிணைக்கப்பட்டுள்ளது.
ஆப்கானிஸ்தானில் "மனித உரிமைகள்" மற்றும் "பெண்களின் உரிமைகள்" என்ற பெயரில் தொடர்ச்சியான போரை நியாயப்படுத்தும் பிரச்சாரம் வாஷிங்டனும் அதன் கூட்டாளிகளும் வீகர்களுக்கு எதிரான சீன "இனப்படுகொலை" பற்றி பரப்பிய பொய்களில் பிரதிபலிக்கிறது. பைடெனின் கீழ் "மனித உரிமைகள்" ஏகாதிபத்தியத்தின் மீள் எழுச்சி உலகளாவிய மோதலுக்கு வழிவகுக்கிறது.
ஆப்கானிஸ்தானில் 20 ஆண்டுகால யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவருவதற்கும், புதிய மற்றும் இன்னும் பேரழிவுகரமான போர்கள் வெடிப்பதைத் தடுப்பதற்கும் ஒரே வழி ஆசியா, மத்திய கிழக்கு மற்றும் சர்வதேச அளவில் தொழிலாள வர்க்கத்தை அணிதிரட்டுவதன் மூலம், அவர்களின் போராட்டங்களை அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் உலகின் பிற பகுதிகளில் வளர்ந்து வரும் தொழிலாளர்களின் போராட்டங்களுடன் ஒரு சோசலிச போர் எதிர்ப்பு இயக்கத்தில் ஒன்றிணைப்பதேயாகும். தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகர தலையீடு இல்லாவிட்டால், மூன்றாம் உலகப் போரின் அச்சுறுத்தல் தீவிரமடையவே செய்யும்.