டாக்டர் தீப்தி குர்தாசினி டெல்டா வகை குறித்தும், “வைரஸூடன் வாழும்" கொள்கைக்கு எதிராகவும் பேசுகிறார்

இரண்டாம் பாகம்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

இது இரண்டு பாக நேர்காணலின் இரண்டாம் பாகமாகும். பாகம் ஒன்றை இங்கே வாசிக்கலாம்.

தீப்தி குர்தாசினி கோவிட்-19 சம்பந்தமான உலகின் முன்னணி நிபுணர்களில் ஒருவராவார். ”பாரிய நோய்தொற்று மூலமாக நோயெதிர்ப்பு சக்தி பெருக்கும்' இங்கிலாந்து அரசாங்கத்தின் நடவடிக்கையை ஓர் 'அபாயகரமான மற்றும் நெறியற்ற பரிசோதனை' என்று குறிப்பிட்டு இங்கிலாந்து அரசாங்கம் அதை ஊக்குவிப்பதைக் கண்டித்த பிரித்தானிய மருத்துவ இதழின் கட்டுரையின் முன்னணி ஆசிரியர்களில் அவரும் ஒருவராவார்.

மருத்துவத் தொற்றுநோயியல் மற்றும் புள்ளிவிபரவியல் மரபணுத்துறை (clinical epidemiology and statistical genetics) பின்னணியுடன், டாக்டர் குர்தாசனி இந்தியாவின் வேலூர் கிறிஸ்துவ மருத்துவக் கல்லூரியில் அவரின் உடலியல் மருந்துவதுறைக்கான மருத்துவ பட்டம் பெற்றார். 2013 இல் நிறைவடைந்த அவரது முனைவர் பணி மரபணு ரீதியாக வேறுபட்ட மக்களது நோயுடன் சம்பந்தப்பட்ட மரபணு காரணிகளை ஆய்வுக்குட்படுத்தியது. குறிப்பாக, அவர் மிகப் பெரியளவிலான மருத்துவ தரவு தொகுப்புகள் மீது இயந்திரவழி-கற்றல் வழிமுறைகளை உருவாக்கினார்.

கோவிட்-19 பெருந்தொற்றின் போது, டாக்டர் குர்தாசனி அந்த பெருந்தொற்று குறித்து இன்றியமையா தகவல்களையும் பொது கருத்துரைகளையும் வழங்கி, அரசாங்கத்தின் மீதும் பொது சுகாதார நெருக்கடிக்கு அவர்கள் காட்டிய குற்றகரமான விடையிறுப்பு மீதும் ஒரு கடுமையான விமர்சகராக இருந்துள்ளார். அவர் தனது ட்விட்டர் கணக்கையும் ஊடகங்களையும் பயன்படுத்தி அபிவிருத்தி அடைந்து வந்த நிலைமைகள் மீது தகவல்களைப் பகிர்ந்து கொண்டார். சமூக பரவலுக்கும் பள்ளி வயது குழந்தைகளுக்கும் இடையிலான தொடர்பை அம்பலப்படுத்துவதிலும் மற்றும் நீண்டகால கோவிட் அதிகரிப்பு சம்பவம் மீதான ஆராய்ச்சியிலும் அவரின் பணி மகத்தான பொதுச் சேவையாக இருந்துள்ளது. கோவிட்-19 ஐ அகற்றுவதற்காகவே அமைக்கப்பட்ட திட்டக்குழுவினது உலகளாவிய பல்துறை வல்லுனர்களின் வலையமைப்பான கோவிட் நடவடிக்கை குழுவுடனும் அவர் இணைந்து செயல்பட்டு வருகிறார்.

சமீபத்தில், டாக்டர் குர்தாசனி நமது அழைப்பை ஏற்று இந்த பெருந்தொற்று நிலை பற்றி கலந்துரையாட ஒரு நேர்காணலில் கலந்து கொண்டார். அந்த கலந்துரையாடலின் இரண்டு பாக அறிக்கையில் இது இரண்டாம் பாகமாகும்.

டாக்டர் தீப்தி குர்தாசினி. ஆதாரம் WSWS

பென்சமின் மாத்தேயுஸ்: இஸ்ரேலில் ஏற்பட்டு வரும் புதிய நோய்தொற்றுகள் மற்றும் ஃபைசர் தடுப்பூசி பற்றிய தரவுகள் மீது உங்கள் கருத்துக்கள் என்ன? பரிசோதிக்கப்பட்டவர்கள் வயதானவர்கள் என்றும், இது மொத்த பொதுமக்களையும் பிரதிநிதித்துவம் செய்யவில்லையென்றும் அங்கே விமர்சனங்கள் இருந்தன.

தீப்தி குர்தாசினி: இஸ்ரேலிய தரவுகள் குறித்து நான் முழுமையாக கருத்து தெரிவிக்க முடியாது. ஏனென்றால் நிச்சயமாக ஆய்வறிக்கை வெளியிடப்படவில்லை. ஆரம்பத்தில் தடுப்பூசி செலுத்தப்பட்டவர்கள் —அதாவது, சான்றாக, ஜனவரி மற்றும் பெப்ரவரியில்— பின்னர் தடுப்பூசி செலுத்தப்பட்டவர்களை விட அதிகமாக நோய்தொற்றுக்கு உள்ளாகி இருக்கலாமென்ற ஆதாரங்கள் இருப்பதாக நினைக்கிறேன். ஆனால் இது எப்படி நாம் பரிசோதனை கூட ஆய்வுகளில் பார்த்திருக்கும், ஆனால் இதுவரையில் நிஜ-வாழ்வின் ஆய்வுகளில் பார்த்திராத நோயெதிர்ப்பு சக்தி குறைவை கண்டுகொள்கின்றது என்பதையும் மற்றும் கண்கூடாகவே வயதானவர்களுக்கும் ஆரம்பத்தில் தடுப்பூசி இடப்பட்டது என்ற உண்மையிலிருந்து அது எவ்வாறு வேறுபடுகின்றது என்பது இதுவரையில் எனக்குத் தெளிவாகவில்லை.

நிச்சயமாக இந்த விளைவுகள் திருத்தப்பட்டு, வயதுவேறுபாடுகள் கணக்கில் எடுக்கப்படுமானால் அல்லது முன்னரோ அல்லது பிந்தியோ தடுப்பூசி இடப்பட்ட வேறு காரணிகளில் வித்தியாசமற்ற ஒரே வயதுடையவர்களை கருத்தில்கொள்ளப்பட்டு இது ஆரம்பத்தில் தடுப்பூசி இடப்பட்டவர்கள் அதிக அபாயத்தில் இருப்பதை எடுத்துக்காட்டுமானால், இது நிஜமாகவே என்னைக் கவலைப்படுத்துகிறது. குறிப்பாக வயதானர்களுக்கு, ஆறு மாதங்கள் அல்லது அதற்கு அதிகமான காலத்தில் உடலில் நோயெதிர்ப்பு அமைப்பு நிலைபெறாமல் குறைந்து வருவதை நாம் பார்த்திருக்கிறோம், குறிப்பாக டெல்டா வைரஸில் இதை பரிசோதனை கூட ஆய்வுகளில் கண்டிருக்கிறோம் என்பதால் இதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை. இது குறித்து சமீபத்தில் ஒரு லான்செட் ஆய்வும் பிரசுரிக்கப்பட்டது. குறிப்பாக வயதானவர்களிடையே நோயெதிர்ப்பு சக்தி மட்டம் நிலைபெறாமல் குறையத் தொடங்குவதன் மீது அது நிஜமாகவே கவலைகளை வெளியிடுகிறது. ஆகவே தாமதமின்றி விரைவிலேயே நமக்கு ஊக்க தடுப்பூசி மருந்துகள் தேவைப்படுகின்றன என்பதை இது அறிவுறுத்துகிறது.

இதுவரையில் வெளியிடப்படவில்லை என்றாலும் சமீபத்திய தரவு குறித்து நிஜமாகவே எனக்கு கவலையாக உள்ளது, ஆனால் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கு அதிக சுதந்திரம் வழங்கும் தங்கள் கொள்கையை நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பதற்கான மையம் [CDC] மாற்றிக் கொண்டதாக சமீபத்தில் அறிவுறுத்தல் வந்ததாக நினைக்கிறேன். இரண்டு தவணை [முழுமையாக] தடுப்பூசி செலுத்தியவர்கள் முகக்கவசம் அணிய தேவையில்லை என்று மூன்று மாதங்களுக்கு முன்னர் ஒரு கொள்கை இருந்ததாக நினைக்கிறேன்.

இப்போது அவர்கள் பள்ளிகளில் இளம் பருவத்தினக்கு மீண்டும் முகக்கவசங்கள் அணிவதை கொண்டு வந்துள்ளனர். தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கு நோய்தொற்று ஏற்படுவதில்லை என்பது மட்டுமல்ல, அப்படியே ஏற்பட்டாலும் தீவிர அபாயம் இருப்பதில்லை, என்றாலும் ஒரு சிலருக்கு அதிக வைரஸ் பாதிப்புகள் உள்ளதோடு, மற்றவர்களுக்கும் நோய்தொற்றை இவர்கள் ஏற்படுத்துவதுண்டு. தென் கொரியா மற்றும் வியட்நாமில் டெல்டா வகை இறங்கியதில் இருந்து சமீபத்தில் நாம் பாரியளவிலான நோய்தொற்று அதிகரிப்பைக் கண்டுள்ளோம், அங்கே போலவே, உலகின் ஏனைய பகுதிகளிலும் இதே போன்ற அனுபவம் உள்ளது. மேலும் இந்த வகை வைரஸ் அங்கே இறங்கிய அந்த நேரத்தில், அவ்விரு நாடுகளுமே தடுப்பூசி செலுத்தியவர்கள் அவசியமானால் கட்டாய தனிமைப்படுத்தலுக்கான அவசியமின்றி அந்நாடுகளுக்குள் நுழைய அனுமதிக்கும் கொள்கைகளைக் கொண்டிருந்தன. அவ்விரு நாடுகளுமே அந்த கொள்கையைத் திரும்ப பெற வேண்டியிருந்தது. எனக்கு இந்த உலகளாவிய அனுபவங்கள் அனைத்துமே, தடுப்பூசி செலுத்தியவர்கள் நோய்தொற்றுக்கு அதிகமாக ஆளாவதில்லை என்பதையும், குறிப்பாக டெல்டா வகையுடன் சேர்ந்து முன்னர் சிந்தித்ததை விடவும் நோய்தொற்றைக் கடந்து சென்று கொண்டிருக்கிறோம் என்பதையும் அறிவுறுத்துகின்றன.

அதிகளவில் பரவக்கூடிய மற்றும் தடுப்பூசிகளில் இருந்து அதிகளவில் தப்பித்துக் கொள்ளக்கூடிய வகை இருப்பதால், தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு விலக்குரிமைகளை வழங்குவதற்கு முன்னதாக நாம் விஞ்ஞானத்தை மிகவும் கவனமாக பார்க்க வேண்டும். ஏனென்றால் தடுப்பூசிகளால் கடுமையான நோய்க்கு எதிராக நல்ல பாதுகாப்பை வழங்க முடியும் என்றாலும், நோய்தொற்று பரவலுக்கு எதிரான பாதுகாப்பு குறைவாக இருக்கலாம் என்று தெரிகிறது.

மாத்தேயுஸ்: முகக்கவசங்களை அணியுமாறு CDC வேண்டுமானால் மீண்டும் வலியுறுத்தி இருக்கலாம், ஆனால் எத்தனை நாடுகள் இந்த நடவடிக்கைகளை மீண்டும் நடைமுறைப்படுத்தும் என்பது தெளிவாக இல்லை. ஆனால் என்னைப் பொறுத்த வரையில், இந்த பரவலை நிறுத்த முகக்கவசங்கள் மட்டுமே போதுமானதில்லை என்று தெரிகிறது. குறிப்பாக அமெரிக்காவில், இங்கே நாம் மீண்டும் அதிகளவிலான பரவலைக் கண்டு வருகிறோம். வேறென்ன செய்ய வேண்டும், அல்லது கட்டாய முகக்கவசம் அணிய செய்வதற்கு அப்பாற்பட்டு நீங்கள் என்ன அறிவுறுத்துவீர்கள்?

தீப்தி: எப்போதுமே தீவிரத்தை அடுக்கடுக்காக குறைக்க வேண்டும். முகக்கவசம் அணிவது முக்கியம் என்றே நினைக்கிறேன், என்றாலும் அதேயளவுக்கு காற்றோட்டம் இருப்பதும் முக்கியம் என்று நினைக்கிறேன். வெறுமனே கதவுகளையும் ஜன்னல்களையும் திறந்து வைப்பதை விட காற்று வடிகட்டும் சாதனங்கள் மற்றும் துணைநிலை காற்றோட்ட வசதி போன்ற வடிவில் உண்மையில் காற்றோட்டத்தில் முதலீடு செய்ய வேண்டியிருப்பதாக நினைக்கிறேன். இதை பள்ளிகளிலும், பொதுவாக வணிகங்கள், கடைகள் மற்றும் வேலையிடங்கள் போன்ற ஏனைய மூடிய சூழல்களிலும் செய்ய வேண்டும். சான்றாக, பெல்ஜியத்தில், நீங்கள் கடைக்குள் நுழைவதற்கு முன்னரே கார்பன் டை ஆக்சைடு அபாய மட்டத்தை அறிந்து கொள்வதற்காக அதன் அளவைக் காட்டும் பலகைகளை வணிகங்கள் வைத்திருக்க வேண்டும். ஜப்பானில், நீங்கள் திரையரங்கிற்குச் செல்ல விரும்பினால், அதற்கு வெளியிலேயே நீங்கள் பார்க்கவிருக்கும் திரைப்படத்திற்கான கார்பன் டை ஆக்சைடின் அளவு காட்டப்பட்டிருக்கும், அந்த அபாயத்தை நீங்கள் ஏற்றுக்கொள்ள விரும்புகிறீர்களா என்று தீர்மானித்துக் கொள்ளலாம். மேலும் பொதுமக்களைக் காப்பாற்றுவதற்காக அது வணிகங்களை ஊக்கப்படுத்தும் என நான் நினைக்கிறேன். இது மிகவும் முக்கியம் ஏனென்றால் இது விரைவில் முடிந்து போகப் போவதில்லை என்பதோடு, இதில் நாம் நீண்ட காலத்திற்கு முதலீடு செய்ய வேண்டியிருக்கும்.

தொடர்ந்து நீண்ட காலத்திற்கு தீவிரத்தைக் குறைக்கும் நடவடிக்கையில் ஈடுபடுவதும், அத்துடன் தடுப்பூசி செலுத்துவதும் தேவை என்பதால் அது தொடர்பாக மக்கள் மத்தியில் தகவல்களை மிகவும் தீவிரமாக பரப்புவதும் தேவைப்படுகிறது. சான்றாக, அமெரிக்காவின் முன்னெடுப்பு, குறிப்பாக இளைஞர்களிடையே, எதிர்பார்த்ததை விட குறைவாக இருப்பதாக நினைக்கிறேன். இதன் அர்த்தம், நீண்டகால கோவிட் மற்றும் இளைஞர்களின் நாள்பட்ட நோய்கள் பற்றிய விவாதங்களைக் கொண்டு வர வேண்டும், இது பல அரசாங்கங்களாலும் விஞ்ஞானிகளாலும் கூட கைவிடப்பட்டுள்ளதாக நினைக்கிறேன்.

நோய்தொற்று ஏற்பட்டால் மிகவும் நிஜமான அபாயம் இருப்பதை இளவயதினர்கள் புரிந்து கொள்ளாவிட்டால், அவர்கள் ஏன் தடுப்பூசி செலுத்த விரும்புவார்கள்? அவர்கள் கடுமையாக நோய்வாய்ப்படக் கூடாது என்பதை தொடர்ந்து அவர்களுக்குக் கூற வேண்டும். அது ஏதோ சாதாரண சளிக்காய்ச்சல் போன்று கடந்து சென்றுவிடுமென அவர்கள் நினைக்கிறார்கள், அதனால் தான் அதை தட்டிக்கழித்து விடலாமென முடிவெடுக்கிறார்கள். இந்த விஷயத்திலும் கூட, பொதுமக்களுக்கான தகவல் தெளிவின்றி உள்ளதுடன், அது ஏன் இந்தளவுக்கு முக்கியம் என்பதையும் தடுப்பூசி இடுவதால் அவர்களுக்கு கிடைக்கும் ஆதாயங்களையும் விளக்குவதில் இளவயதினர்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவில்லை.

பொது சுகாதார செய்திகள், தீவிரத்தைக் குறைப்பதற்கான நல்ல மூலோபாயங்கள், தடுப்பூசிகளைக் குறித்த கல்வியூட்டல் மற்றும் தடுப்பூசி மீதான தயக்கத்தைப் போக்குவதற்கான நடவடிக்கைகளுக்கு அப்பாற்பட்டு, நமக்கு திறம்பட்ட கண்காணிப்பு அமைப்புகளும், மாறுபாடுகள் தொடர்பான சிறந்த வகை கண்காணிப்புகளும் மற்றும் அடையாளம் காணும் முறைகளும் நமக்கு தேவைப்படுகின்றன. இவை இந்த தருணத்தில் மிகவும் முக்கியமாக உள்ளன.

மாத்தேயுஸ்: தடுப்பூசிகள் நீண்டகால கோவிட்டுக்கு எதிராக பாதுகாப்பதாக தோன்றுகிறதா?

தீப்தி: இதன் மீதான புள்ளிவிபரங்கள் இப்போதைக்கு இன்னமும் முற்றிலும் தெளிவாக இல்லை. முறையாக தரவு பகுப்பாய்வு செய்யப்படவில்லை. நோய்தொற்று ஏற்படும் போது தான் நீண்டகால கோவிட் தாக்கம் ஏற்படுகிறது என்பதை நினைவில் கொள்ள வேண்டும். நோய்தொற்றிலிருந்து தடுப்பூசிகள் எந்தளவுக்குப் பாதுகாக்கின்றன என்பதைப் பொறுத்த வரையில், நிச்சயமாக அவை நோய்தொற்றுக்கு எதிராக சற்று பாதுகாப்பு வழங்குகின்றன என்பதால், அவை நீண்டகால கோவிட் தாக்கத்திற்கு எதிராகவும் பாதுகாக்கும்.

ஆனால் 'தடுப்பூசி போடாமல் நோய்தொற்று ஏற்படுத்தும் அபாயங்களுக்கு அப்பாற்பட்டு, கூடுதலான அல்லது மேலான பாதுகாப்பு உங்களுக்கு இருக்கிறதா?' என்பது தான் கேள்வி என்று நினைக்கிறேன். நீண்ட கோவிட் கொண்டவர்களுக்கான ஓர் ஆலோசனை குழுவான சர்வேவர் கார்ப்ஸின், இணையவழி ஆய்வுகளின் அடிப்படையிலான, சமீபத்திய புள்ளிவிபரங்கள், தடுப்பூசி செலுத்திய பின்னரும் நோய்தொற்றுக்கு உள்ளான 50 சதவீதத்தினர் திடீரென நீண்ட கோவிட் தாக்கத்தின் மட்டத்திற்கான நிலைமையை உண்டாக்கி இருப்பதைக் காட்டுகிறது. ஆனால் இது வெளிப்படையாகவே ஒரு தலைபட்சமான ஆய்வு ஏனென்றால் அது பொது மக்களிடையே செய்யப்படவில்லை, இந்த ஆய்வில் கலந்து கொண்டவர்கள் பொது மக்களின் பிரதிநிதிகளாக இல்லாமல் இருக்கலாம். ஆனால் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கும் நீண்டகால கோவிட் ஏற்படக்கூடும் என்பதற்கு அதுவொரு அறிகுறியைக் காட்டுகிறது. தடுப்பூசிகள் எந்த பாதுகாப்பை வழங்கினாலும் அது முழுமையாக போதாது, ஆனால் நோய்தொற்றுக்கு எதிராக அது பாதுகாக்கிறது என்பதால் சற்று பாதுகாப்பு இருக்கும்.

துரதிருஷ்டவசமாக, கடுமையான நோய் மற்றும் நோய்த்தொற்றுக்கு தடுப்பூசி அடிப்படையில் பாதுகாப்பு கிடைக்கிறது என்பதற்குப் பல ஆய்வுகள் இருந்தாலும், தடுப்பூசிகள் என்ன பாதுகாப்பை வழங்க முடியும் என்பதைப் புரிந்து கொள்ள நமக்கு அவசியப்படும் ஒரு முக்கிய பகுதியான நீண்டகால கோவிட் தாக்கம் மீதான ஆய்வில் வெகு சிலரே ஈடுபடுகின்றனர் என்பதன் மீது நான் மிகவும் ஏமாற்றமடைந்துள்ளேன்.

மாத்தேயுஸ்: “பாரிய நோய்தொற்று என்பது ஒரு விருப்பத்தெரிவு இல்லை. நம் இளைஞர்களைப் பாதுகாக்க நாம் இன்னும் நிறைய செய்ய வேண்டும்,” என்று நீங்கள் லான்செட்டில் சமீபத்தில் ஒரு கட்டுரை எழுதியிருந்தீர்கள். “கல்வி தடைபடுவதற்கான மூல காரணம் பரவல் தானே தவிர, தனிமைப்படுத்தல் அல்ல,” என்றும் எழுதினீர்கள். நாம் இந்த விவாதத்தின் நிறைவு பகுதிக்கு நெருங்கிக் கொண்டிருப்பதால், நீங்கள் கோவிட்-19 பிரச்சினை, குழந்தைகள் மற்றும் கல்வி குறித்து பேச முடியுமா?

தீப்தி: நோய்தொற்று [பரவுவதில்] குழந்தைகள் பெரும் பங்கு வகித்துள்ளனர் என்பது கடந்தாண்டு மிகவும் வெளிப்படையாக இருந்துள்ளது. நான் என்ன சொல்கிறேன் என்றால், இது சம்பந்தமாகவும் நோய்தொற்றில் குழந்தைகள் வகிக்கும் பங்கைக் குறைத்துக் காட்டுவதிலும் நிறைய தவறான தகவல்களும் திரித்தல்களும் உள்ளன. குழந்தைகளுக்குக் குறைவாகவே நோய்தொற்று ஏற்படுகிறது, அல்லது அவர்கள் மூலமாக குறைவாகவே பரவுகிறது, அல்லது சமூக பரவலில் அவர்கள் முக்கிய பங்கு வகிக்கவில்லை என்றெல்லாம் கேள்விப்படுகிறோம். இது முற்றிலும் உண்மையில்லை!

நோய் ஏற்புத்தன்மை மற்றும் பரப்பும் தன்மை என்னவாக இருந்தாலும், குழந்தைகள் நேரடி வகுப்புகளுக்கு வருகிறார்கள் என்பதை வைத்துப் பார்த்தால், பருவ வயதுடையவர்களைக் காட்டிலும் குழந்தைகளே அதிக நபர்களுடன் தொடர்பில் வருகிறார்கள் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும் என்று நினைக்கிறேன். குழந்தைகளுக்கு ஏற்படும் பெரும்பாலான நோய்தொற்றுக்கள் அல்லது பல நோய்தொற்றுக்கள் அறிகுறியின்றி உள்ளன என்ற உண்மை சரியாக இருக்கும் போது, அவை கண்டறியப்படுவதில்லை ஏனென்றால் குழந்தைகள் பரிசோதனை செய்து கொள்வதில்லை ஏனென்றால் அவர்கள் சுகவீனத்தை உணர்வதில்லை, இத்தகைய ஆய்வுகள் சரியானவை என்றால், பருவ வயதுடையவர்களுக்கு நிகராக குழந்தைகளும் பரிசோதனைக்குரியவர்களே என்றும் சம அளவில் அவர்களும் நோயைப் பரப்பக்கூடியவர்களே என்பதை காண்பீர்கள் என்பதை CDC இன் ஆய்வுகள் உட்பட சமீபத்திய ஆய்வுகள் எடுத்துக்காட்டுகின்றன. அவர்களுக்கு நிறைய தொடர்புகள் உள்ளன என்ற உண்மை சமூகத்தில் நோய் பரவலுக்கு அவர்களும் ஒரு முக்கிய பாதையாக இருக்கிறார்கள் என்றாக்குகிறது. பெற்றோர்களும் அதிக நோய்தொற்று அபாயத்தில் இருக்கிறார்கள் என்பதோடு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட வேண்டியவர்களாக இருக்கிறார்கள் என்பதையும் இந்த ஆய்வுகள் எடுத்துக்காட்டுகின்றன.

இந்த ஆய்வுகள் உலகம் முழுவதும் நடத்தப்பட்டுள்ளன என்பதோடு, அவை அனைத்துமே ஒரே விஷயத்தையே எடுத்துக்காட்டுகின்றன. ஆனால் இதே ஆய்வுகள், நீங்கள் வகுப்பறைகளில் தீவிரத்தைக் குறைக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டால், பல அடுக்கு நடவடிக்கைகளை மேற்கொண்டால், உங்களால் உண்மையில் குழந்தைகளுக்கு மட்டுமல்ல, மாறாக அவர்களின் பெற்றோர்களுக்கும் ஆபத்தைக் குறைக்க முடியும் என்பதையும் காட்டுகின்றன. இது உலகின் வெவ்வேறு பகுதிகளில் நிலவும் ஒரு பிரச்சினை என்பதும், இதைத் தீர்க்க முடியும் என்பதும் நமக்குத் தெரியும். சில காலமாக கிடைத்துள்ள இந்த எல்லா புரிதல்களுக்கு மத்தியிலும், மேற்கின் பல நாடுகள் இந்த பிரச்சினையைத் தீர்க்க மிகவும் குறைவாகவே செயல்பட்டுள்ளன என்பதே மிகப்பெரும் கேள்வியாக நினைக்கிறேன். ஏன்? கல்வி தடைப்படுவதைக் குறைக்க அவர்கள் முன்னுரிமை கொடுப்பதாக கூறினாலும், உண்மையில் அதைக் குறைக்க அவர்கள் மிகக் குறைவாகவே செயல்பட்டுள்ளார்கள். கல்வி தடைபடுதல் என்பது துயரகரமாக உலகெங்கிலும் பல குழந்தைகளைப் பாதித்துள்ள நிலையில், ஒரு வெளிப்படை உண்மையான, நோய்தொற்று பரவலில் குழந்தைகள் பங்குபற்றுகிறார்கள் என்பதை மறுப்பது கல்வி தடைபடுவதைக் குறைப்பதற்கான வழியல்ல. மாறாக ஆக்கபூர்வமாக தீவிரத்தைக் குறைக்கும் நடவடிக்கைகளுடன் பள்ளிகளைப் பாதுகாப்பாக ஆக்குவதன் மூலமாகவே அதைச் செய்ய முடியும்.

துயரகரமாக, இதே விஞ்ஞானிகளும் அரசியல்வாதிகளும் தான் நோய்தொற்று பரவலில் குழந்தைகள் வகிக்கும் பாத்திரத்தைக் குறைத்துள்ளனர். அவர்கள் கல்விக்கு முன்னுரிமை அளிக்க விரும்புவதாக கூறுகிறார்கள், ஆனால் பின்னர் தீவிரத்தைக் குறைப்பதற்கான எந்த நடவடிக்கைகளும் எடுக்காமலேயே குழந்தைகள் பள்ளிகளுக்குச் செல்ல வேண்டுமென எதிர்பார்க்கிறார்கள். இது கிட்டத்தட்ட எப்போதுமே அதிகளவில் பரவல் ஏற்படுவதற்கும் பின்னர் பள்ளிகளை மூடுவதற்குமே இட்டுச் செல்கிறது.

புதிய வைரஸ்களின் விஷயத்தில் இது இன்னும் அதிகமாகவே இருக்கிறது. பள்ளிக் குழந்தைகளில் பரவலைத் தொடங்கி சமூகங்களுக்குள் பரவிய ஆல்ஃபா மற்றும் டெல்டா வகை வைரஸ்களில் இதை நாம் கண்டோம். மிகவும் வேகமாக பரவக்கூடிய வைரஸ் வகைகள் பள்ளிகள் மூலமாக வேகமாக பரவி சமூகங்களுக்குள் நுழைந்துவிடுகின்றன. பள்ளிகளில் தீவிர தொற்றைக் குறைப்பதற்கான நடவடிக்கைகள் மற்றும் குழந்தைகளுக்கான தடுப்பூசி ஆகியவற்றுடன் இதை நாம் எதிர்கொண்டால் ஒழிய, துரதிருஷ்டவசமாக, நம்மால் இந்த பெருந்தொற்றை ஒருபோதும் நிறுத்த முடியாது. இதைத் தான் அரசாங்கங்கள் புரிந்து கொள்ள வேண்டியுள்ளது, விஞ்ஞானிகள் புரிந்து கொள்ள வேண்டியுள்ளது.

மாத்தேயுஸ்: முந்தைய வகை வைரஸ் திரிபுகளை விட இந்த டெல்டா வகை இளம் குழந்தைகளுக்கு மிகவும் ஆபத்தானது என்பதற்கான ஏதாவது புள்ளிவிபரங்கள் உள்ளதா? இந்தோனேஷியா, பிரேசில் மற்றும் அமெரிக்கா மற்றும் பிரிட்டனில் இருந்தும் கூட புள்ளிவிபரங்கள் வந்து கொண்டிருக்கின்றன, அவை அதிக விகிதத்தில் மருத்துவமனை அனுமதிப்புகளையும் மரணங்களையும் கண்டு வருகின்றன.

தீப்தி: ஆம். மொத்தத்தில், டெல்டா வகை மிகவும் கடுமையானது போல் தெரிகிறது. டெல்டா வகையுடன் இரண்டு மடங்குக்கும் அதிகமான [நோயாளிகள்] மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கலாமென இங்கிலாந்து மற்றும் ஸ்காட்லாந்து புள்ளிவிபரங்களில் இருந்து தெரிய வருகிறது. கனடாவின் சமீபத்திய புள்ளிவிபரங்களும் உள்ளன, அவை மிகவும் கொடியதாக இருக்கலாமென குறிப்பிடுகின்றன. ஆனால் சில குறிப்பிட்ட வயதுடையவர்களுக்கு தான் இது கடுமையாக இருக்கிறதா என்பது தெளிவாக இல்லை. ஆனால் இவ்வாறு இருக்கலாம் என்பதையே முன்கள அனுபவம் அறிவுறுத்துவதாக தெரிகிறது. இந்த குறிப்பிட்ட அலையில் நோய்வாய்ப்படும் இளம் வயதினருக்கு அதிகமாக தீவிர சிகிச்சை தேவைப்படுவதுடன், முந்தைய அலைகளில் பார்த்ததை விட அதிக காற்றோட்டம் தேவைப்படலாம் என்ற அறிவுறுத்தல்களை, அமெரிக்கா உட்பட உலகின் வெவ்வேறு பாகங்களிலிருந்தும் மருத்துவச் சிகிச்சையாளர்கள் மற்றும் தீவிர சிகிச்சை மருத்துவர்களிடம் இருந்து கேட்க முடிகிறது. நிறைய ஆதாரங்கள் குவிந்து வருவதால் அந்த முன்கள அனுபவங்களை நாம் கேட்க வேண்டுமென நினைக்கிறேன். சிங்கப்பூர் மற்றும் இந்தியாவில் டெல்டா பரவிக் கொண்டிருந்த போது, அங்கிருந்தும் இதே போன்றதைக் நாம் கேள்விப்பட்டோம். இங்கிலாந்தில் முந்தைய அலைகளை விட மிகவும் வேகமாக மருத்துவமனை அனுமதிப்புகள் அதிகரித்தது வருவதை நாம் பார்த்து வருகிறோம். தற்போது நாளொன்றுக்கு சுமார் 50 இல் இருந்து 60 குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகின்றனர், இது மிகவும் குறிப்பிடத்தக்கது.

மாத்தேயுஸ்: கட்டாய தடுப்பூசி பற்றி உங்கள் கருத்து என்ன? கட்டாய தடுப்பூசிக்கு ஆதரவாக அல்லது எதிராக உங்களின் அரசியல் கவலைகள் என்ன?

தீப்தி: ஒருவேளை கட்டாய தடுப்பூசி குறித்து எனக்கு வேறுபட்ட கருத்துக்கள் இருக்கலாம். சுகாதாரப் பராமரிப்பு அமைப்புகள் மற்றும் மருத்துவமனை அமைப்புகளில் கட்டாய தடுப்பூசியின் தேவை எனக்குப் புரிகிறது. நானே ஒரு மருத்துவர் தான், நான் மருத்துவமனைக்கு செல்வதற்கு முன்னர், ஹெபடைடிஸ் பி (hepatitis B) தடுப்பூசி பெற வேண்டியிருந்தது, அது அவசியம். பலவீனமாக இருக்கும் எங்கள் நோயாளிகள் பலரை அபாயத்திற்கு உட்படுத்தும் என்பதால் நாங்கள் எடுக்கும் முடிவுகளுக்கான காரணங்களை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. அவர்களுக்கு நோய்தொற்று ஏற்பட்டால், அவர்கள் இன்னும் அதிகமாக பாதிக்கப்படலாம். ஆகவே அந்த அமைப்பில் கட்டாயங்கள் இருப்பதை நான் புரிந்து கொண்டிருப்பதாக நினைக்கிறேன். மக்கள் அளவில் கட்டாயப்படுத்துவது குறித்து எனக்கு திருப்தி இல்லை, அதற்கான காரணங்களை விவரிக்கிறேன்.

தடுப்பூசி மீதான தயக்கம் மிகவும் பன்முகத்தன்மை கொண்ட விஷயமாக நான் நினைக்கிறேன், அது மொத்தமும் தடுப்பூசி-எதிர்ப்பு சதி கோட்பாடு அல்ல. தடுப்பூசி எடுத்துக் கொள்ள தயக்கம் காட்டுபவர்களுக்கு மிகவும் நியாயமான காரணங்களும் உள்ளன. அவர்கள் நம் அரசாங்கத்தை நம்பவில்லை ஏனென்றால் நம் அரசாங்கம் அவர்களைக் கைவிட்டுவிட்டது. அவர்கள் சுகாதார சேவைகளை நம்பவில்லை ஏனென்றால் அவை அவர்களைக் கைவிட்டு விட்டன. இங்கே நான் குறிப்பாக இனச் சிறுப்பான்மையினரைக் குறித்து பேசுகிறேன் ஏனென்றால் இங்கே அதற்கான வரலாற்று சூழல் உள்ளது. முன்னதாக இந்த பிரிவினர் நமது விஞ்ஞான சமூகத்தாலும் நெறிமுறையற்ற பரிசோதனைகளுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர், அவர்கள் மீண்டும் மீண்டும் அரசாங்கத்தால் கைவிடப்பட்டனர், புலம்பெயர்ந்தவர்களும் கூட சுகாதார கவனிப்பு முறையில் பாரபட்சமாக நடத்தப்பட்டுள்ளனர். சான்றாக சுகாதார கவனிப்பு முறையில் சிறுபான்மையினர் மிகவும் மோசமான அனுபவங்களைப் பெற்றிருப்பது நமக்கு தெரியும், பெரும்பாலும் அவர்களின் அறிகுறிகள் கூட நம்பப்படுவதில்லை, அவர்கள் படுமோசமான விளைவுகளைக் கண்டுள்ளனர். ஆகவே கட்டாயப்படுத்துவதன் மூலமாக அவற்றைச் சரி செய்ய முயல்வது பொருத்தமானதில்லை என்று நினைக்கிறேன், மேலும் அது அநீதியும் கூட ஏனென்றால் ஏற்கனவே மிகவும் சரியான காரணங்களுக்காக அமைப்புகள் மீது நம்பிக்கையின்றி இருக்கும் குழுக்களை அது இன்னும் கூடுதலாக ஓரம்கட்டுகின்றது.

சமூக ஈடுபாடுகள் மூலமாகவும் மற்றும் அந்த தோல்விகளை ஒப்புக்கொள்வதன் மூலமாகவும் மற்றும் ஏன தயங்குகிறார்கள் என்று புரிந்து கொள்வதன் மூலமாகவும் மற்றும் உண்மையில் புரிந்து கொள்ள முயலாமலேயே தங்களுக்கு அசௌகரியமானதில் ஈடுபடுவதில் ஏற்கனவே அரசாங்கத்தின் மீது அவநம்பிக்கை கொண்டிருக்கும் அந்த பிரிவினரைப் பலவந்தப்படுத்துவதற்குப் பதிலாக நேரடியாக அதைத் தீர்க்க முயல்வதன் மூலமாக இதை சரி செய்யலாமென நான் நினைக்கிறேன்.

மாத்தேயுஸ்: என் கடைசி சில கேள்விகள்: ஆகவே, என்ன செய்ய வேண்டும்? தொற்றுநோயிலிருந்து நாம் எவ்வாறு வெளியேற வேண்டும், எதிர்கால பெருந்தொற்றுகளுக்கு எதிராக என்ன செய்யப்பட வேண்டும்? அத்தகைய தயாரிப்புகளைச் செய்ய அரசியல் விருப்பம் இருக்குமா?

தீப்தி: 'வைரஸுடன் வாழும்' மூலோபாயம் இந்த தொற்றுநோயிலிருந்து வெளியேறுவதற்கான ஒரே வழி அல்ல என்று நினைக்கிறேன், ஆனால் இதை தான் பல நாடுகள் இப்போது பின்பற்றுகின்றன. குறிப்பிட்ட தருணத்தில் அது சாத்தியமில்லை என்பதை அவர்கள் கற்றுக் கொள்வார்கள் என்று நம்புகிறேன். நாடுகள் ஒன்றையொன்று ஆதரிப்பது, தடுப்பூசிகளைப் பகிர்ந்து கொள்வது, ஆதார வளங்களைப் பகிர்ந்து கொள்வது, தகவல்களைப் பகிர்ந்து கொள்வது மற்றும் அதை அடைவதற்காக ஒன்றையொன்று ஆதரிப்பது என உலகளவில் ஒருங்கிணைந்த இல்லாதொழிக்கும் மூலோபாயமே பொது சுகாதாரம், சமூகத்தின் கல்வி மற்றும் பொருளாதாரத்தைப் பாதுகாப்பதற்கான ஒரே பகுத்தறிவார்ந்த வழியாகும்.

அது போன்ற ஒன்றை நாம் பார்ப்போமா என்பது பற்றி எனக்கு மிகவும் சந்தேகமாக தான் இருக்கிறது. இப்போது நிலவும் தடுப்பூசி சமத்துவமின்மையின் அளவு மற்றும் 'வைரஸுடன் வாழும்' மூலோபாயத்தை நாம் பின்பற்றும் விதம் இவற்றை வைத்துப் பார்க்கையில், இன்னும் புதிய வகைகளின் பரிணாமம் குறித்து உண்மையாகவே கவலையாக உள்ளது. புதிய வகைகள் உருவாகி வருவது குறித்து உண்மையிலேயே எனக்கு கவலையாக உள்ளது. ஒரு கட்டத்தில் வைரஸை நீக்குவது சாத்தியமில்லாமல் போகுமோ என்று உண்மையிலேயே கவலைப்படுகிறேன், ஏனென்றால் இப்போது நாம் பார்த்து வருவது முன்னர் விஷயங்களைச் சரியாக செய்து, பொது சுகாதாரத்தைப் பாதுகாத்து, பொருளாதாரத்தைப் பாதுகாத்து, வைரஸை நீக்கிய மண்டலங்களையே அச்சுறுத்தும் அதிகளவில் பரவக்கூடிய வகைகள் இப்போது உருவெடுத்து வருகின்றன. டெல்டா வைரஸால் தென் கொரியா, வியட்நாம், தாய்வான் மற்றும் ஆஸ்திரேலியா போன்ற இடங்களில் அதிக அதிகரிப்புகள் ஏற்பட்டுள்ளன. மேலும் அதிகமாக பரவக்கூடிய வகைகள் ஏற்படும் போது, அதை நீக்குவதும் அதிக கடினமாக ஆகிவிடும் ஏனென்றால் வைரஸை இல்லாதொழிப்பது என்பது வகைகள் உருவாகாமல் செய்வதையும் மற்றும் சமூகத்திற்குள் ஆங்காங்கே வெடிப்பதைத் தடுப்பதையும் சார்ந்துள்ளது. ஆனால் அதிகமாக பரவும் வகைகள் நாட்டுக்குள் நுழையும் போது, உங்களால் அவற்றின் மீது வெறுமனே கண்காணிப்பை மட்டுமே வைத்திருக்க முடியாது ஏனென்றால் அவை சமூகத்திற்குள் இருப்பதை நீங்கள் தெரிந்து கொள்வதற்கு முன்னரே கூட மிகவும் வேகமாக நுழைந்து, மிக மிக வேகமாக பரவத் தொடங்குகின்றன.

தென் கொரியா, வியட்நாம், தைவான் மற்றும் ஆஸ்திரேலியா போன்ற இடங்கள் அனைத்தும் டெல்டா காரணமாக பெரும் எழுச்சிகளை சந்தித்துள்ளன. மேலும் பரிமாற்றக்கூடிய மாறுபாடுகள் கிடைக்கும், அவற்றை அகற்றுவது கடினமாக உள்ளது. ஏனென்றால் நீக்குதல் மாறுபாடுகளை வெளியே வைத்திருப்பது மற்றும் சிறிய கொத்து வெடிப்புகள் சமூகத்தில் நுழைவதைத் தடுப்பதைப் பொறுத்தது. ஆனால் மிகவும் பரிமாற்றக்கூடிய வகைகள் நாட்டிற்குள் நுழையும் போது, நீங்கள் இனி அவற்றை வெறும் கண்காணிப்புடன் வைத்திருக்க முடியாது, ஏனென்றால் அவை சமூகத்தில் விரைவாக நுழைகின்றன. அவை அங்கு இருப்பதை நீங்கள் அறிவதற்கு முன்பே, விரைவாக பரவத் தொடங்குகின்றன.

பல நாடுகளில் இருக்கும் அதிரடி நடவடிக்கை முறைகளுமே கூட அதை மிஞ்சுவதற்குப் போதுமானதாக இல்லை. இதை தான் நாம் பல இல்லாதொழிக்கும் மண்டலங்களில் பார்த்து வருகிறோம். இது ஏதோ காத்திருக்க வேண்டிய ஆடம்பரமான ஒன்றல்ல. இதை நீக்குவதற்கு நமக்கு ஒரு முறையான, ஒருங்கிணைந்த உலகளாவிய மூலோபாயம் தேவைப்படுவதாக நினைக்கிறேன். அதில் தடுப்பூசிகளும் பங்கு வகிக்கின்றன, ஆனால் ஒட்டுமொத்தமாக அவை பங்கு வகிக்கவில்லை. ஏனென்றால் தடுப்பூசி செலுத்தும் அதேவேளையில் பரவலைச் செயலூக்கத்துடன் குறைத்து வைக்க வேண்டியுள்ளது. அதை செய்யாவிட்டால், தடுப்பூசிகள் எப்போதும் புதிய வகை வைரஸ்களுக்கு எதிர்தாக்கம் உள்ளதாக இருக்காது. அழிவார்ந்த விளைவுகளுடன் பாரியளவிலான அதிகரிப்புகளோடு நாம் சென்று கொண்டிருப்போம். இதை செய்யும் போது காற்றோட்ட வசதி ஏற்படுத்துவது போன்ற விஷயங்களில் நீண்டகால முதலீடு தேவைப்படுவதாக நினைக்கிறேன், ஏனென்றால் அது இந்த பெருந்தொற்றுக்கு மட்டுமல்ல, நமது எதிர்காலத்திற்கும் கூட ஆதாயமாக இருக்கும்.

மக்களையும் வேலையிடங்களையும் நமது குழந்தைகளையும் பாதுகாக்க, நம் வாழ்க்கை முறையை மாற்றுவது நல்லது. இது மக்களுக்கு இன்னும் நிறைய சுதந்திரங்களை அனுமதிக்கிறது. இந்த விஷயங்களை நாம் கட்டுப்பாடுகளாக பார்ப்பதை நிறுத்த வேண்டுமென நினைக்கிறேன், மாறாக இவை ஒரு சமூகமாக உண்மையில் நம்மை சுதந்திரமாக இருக்க அனுமதிக்கிறது, பரவல் மட்டங்களைக் குறைத்து வைப்பதன் மூலமாக நாம் விரும்புபவர்களை நாம் வெளியில் சென்று சந்திக்க முடியும். ஏனென்றால் அவ்விதத்தில் மட்டுந்தான் இதை செய்ய முடியும். 70 பேரில் ஒருவருக்கு நோய்தொற்று ஏற்பட்டிருக்கும் ஒரு சமூகத்திற்குள் நீங்கள் செல்ல முடியாது, ஆனால் இதை தான் பிரிட்டன் செய்ய முயன்று வருகிறது.

மாத்தேயுஸ்: ஏதேனும் கடைசி கருத்துக்கள் அல்லது சிந்தனைகள்?

தீப்தி: தலைவர்கள் அவர்களின் சித்தாந்தங்களை விட்டு விட்டு, சான்றுகள் அடிப்படையிலான கொள்கைகளைக் கொண்டு வர இதனுடன் சம்பந்தப்பட்டவர்களுடன் இணைந்து செயல்பட வேண்டும் என்று நினைக்கிறேன். ஆனால் மாற்றத்தை ஏற்படுத்த முனைபவர்களுடன் சேர்ந்து ஆதாரங்களைப் பின்தொடருங்கள். அரசாங்கங்கள் சிந்திப்பதை விட உண்மையில் பொதுமக்கள் மிக அதிக எச்சரிக்கையாகவும் அதிக தகவல் பெற்றவர்களாகவும் இருக்கும்போது, தலைவர்கள் அவ்வபோது மக்கள் இதைத்தான் விரும்புகிறார்கள் என்று நினைத்து அவர்களுக்குச் சார்பாக விஷயங்களைச் செய்திருக்கிறார்கள்.

அரசாங்கங்கள், ஒரு விஷயத்திற்குப் பதிலாக மற்றொரு விஷயத்திற்கு முன்னுரிமை கொடுக்காமல், ஒவ்வொருவரும் பயனடையும் விதத்தில், வணிகக் குழுக்கள் போன்ற குழுக்களுடனும், ஆசிரியர்கள், தொழிற்சங்கங்கள், ஆலோசனை வழங்கும் குழுக்கள், விஞ்ஞானிகள், பெற்றோர்கள், மாணவர்கள் என இவர்களுடனும் இணைந்து செயல்படுவதைப் பார்க்க விரும்புகிறேன்.

அரசாங்கங்கள் ஒரு சமூகத்தை விட மற்றொன்றின் ஒரு அம்சத்திற்கு முன்னுரிமை வழங்குவதை நிறுத்தி விட்டு, தவறான தகவல்கள் அல்லது சித்தாந்தங்களின் அடிப்படையில் இல்லாமல் விஞ்ஞான ஆதாரங்களின் அடிப்படையில் செயல்படுவதைப் பார்க்க விரும்புகிறேன். ஏனென்றால் எல்லா அம்சங்களும் இந்த நெருக்கடியைக் கடந்து செல்வதையே சார்ந்துள்ளன. இதன் அர்த்தம் பொதுமக்களுக்கு நேர்மையாக இருப்பதும், இந்த நெருக்கடியை அலட்சியப்படுத்தி நிராகரிக்காமல் மாறாக அதை எதிர்கொண்டு கட்டுப்படுத்துவதுமாகும். இது ஒருபோதும் செயல்படவில்லை ஏனென்றால் அதிலிருந்து வெளிவர நமக்கு ஒரு வழியையும் இது காட்டவில்லை. நம் முன்னால் இருக்கும் பிரச்சினைக்கு நாம் முகம்கொடுக்கவேண்டும்.

மாத்தேயுஸ்: டாக்டர் குர்தாசனி, உங்கள் நேரத்தைப் பகிர்ந்து கொண்டமைக்காக, மீண்டும் நன்றி கூறிக் கொள்கிறேன்.

தீப்தி குர்தாசனி: எனக்கும் மகிழ்ச்சியே. என்னை அழைத்தமைக்கு நன்றி.

Loading