முன்னோக்கு

கொரோனா தோற்றுவாய்கள் மீதான "வூஹான் ஆய்வக" சதிக் கோட்பாட்டை விஞ்ஞானிகள் தகர்க்கின்றனர்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

கோவிட்-19 மனிதர்களால் உருவாக்கப்பட்ட ஒரு வைரஸ் என்று பைடென் நிர்வாகமும் அமெரிக்க பத்திரிகைகளும் ஊக்குவித்த சதிக் கோட்பாட்டை நிராகரித்து, உலகின் 21 முன்னணி நிபுணர்கள் அந்த தொற்றுநோயின் தோற்றுவாய்களைப் பற்றி புதன்கிழமை ஓர் ஆய்வறிக்கை பிரசுரித்தனர்.

Virologist Edward Holmes, known for his work on the evolution and emergence of infectious diseases at the University of Sydney, is one of the scientists who led an international team of biologists who helped clarify the origins of the virus that causes COVID-19 in humans. (Photo: Wikipedia)

சிட்னி பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் எட்வார்ட் ஹோம்ஸ் மற்றும் ஈடன்பர்க் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ஆண்ட்ரூ ரம்பாட் தலைமையில் உயிரியலாளர்கள் மற்றும் நுண்கிருமியியல் வல்லுனர்களின் ஒரு சர்வதேச குழு அந்த ஆய்வறிக்கையை எழுதியிருந்தது. ஜார்ஜ்டவுன் பல்கலைக்கழக நுண்கிருமியியல் வல்லுனர் டாக்டர். அங்கேலா ராஸ்முசென் மற்றும் ஸ்க்ரிப்ஸ் ஆராய்ச்சி நடைமுறை மாற்ற பயிலகத்தின் தொற்றுநோயியல் மரபணுத்துறை இயக்குனர் கிறிஸ்டியான் ஜி. ஆண்டர்சன் ஆகியோரும் அதன் இணை-ஆசிரியர்களில் உள்ளடங்குவர்.

கோவிட்-19 ஐ ஏற்படுத்தும் SARS-CoV-2 வைரஸின் தோற்றுவாய் குறித்து இப்போதிருக்கும் விஞ்ஞானபூர்வ ஆதாரத்தை அந்த ஆவணம் தொகுத்தளித்து, அது விலங்கின் ஆதாரத்திலிருந்து மனிதர்களுக்கு மாறிய சூனோடிக் வகை (zoonotic) என்று தீர்மானிக்கிறது. “SARS-CoV-2 இன் தோற்றுவாய்கள்: ஒரு முக்கிய மீளாய்வு' என்று தலைப்பிட்ட அந்த ஆய்வறிக்கை Zenodo தளத்தில் பிரசுரிப்புக்கு முந்தைய பதிப்பாக வெளியிடப்பட்டது.

'தற்போதிருக்கும் தரவுகள் மீதான எங்களின் கவனமான மற்றும் விமர்சனபூர்வ பகுப்பாய்வு, SARS-CoV-2 ஓர் ஆய்வகத்தில் தோன்றியது என்ற கருத்துக்கு எந்த ஆதாரத்தையும் வழங்கவில்லை,' என்று ஹோம்ஸ் கூறினார்.

'வூஹான் இறைச்சி சந்தைகளுடனான தெளிவான தொற்றுநோயியல் தொடர்புகளுக்கு மாறாக, எந்தவொரு முந்தைய நோயாளிகளுக்கும் வூஹான் நுண்கிருமியியல் ஆய்வகத்துடன் [WIV] எந்தவொரு தொடர்பும் இருந்ததற்கான ஆதாரம் இல்லை, மேலும் இந்த பெருந்தொற்றுக்கு முன்னதாக SARS-CoV-2 க்கு முந்தைய வைரஸை WIV வைத்திருந்ததற்கான அல்லது அதன் மீது பணியாற்றியதற்கான ஆதாரமும் இல்லை,” என்று அந்த விஞ்ஞானிகள் எழுதினர்.

அதற்கு மாறாக, 'SARS-CoV-2 விலங்கிடமிருந்து மனிதருக்குப் பரவியதை ஆதரிக்க அங்கே போதிய விஞ்ஞானபூர்வ ஆதாரம் உள்ளது,” என்றவர்கள் வாதிடுகிறார்கள்.

இந்த 'வூஹான் ஆய்வக' சதிக் கோட்பாடு ஜனவரி 2020 இல் பாசிச ஸ்டீவ் பானனினாலும் மற்றும் மைல்ஸ் குவோ போன்ற வலதுசாரி சீன வெளிநாட்டவர்கள் மத்தியிலுள்ள அவரின் கூட்டாளிகளாலும் உருவாக்கப்பட்டது, ட்ரம்ப்பின் ஆலோசகர் பீட்டர் நவரோவின் வார்த்தைகளில் கூறுவதானால் கோவிட்-19 ஓர் 'ஆயுதமயப்படுத்தப்பட்ட' வைரஸ் என்று குவோ கூறியிருந்தார்.

இந்தாண்டு, அந்த கோட்பாடு திருத்தப்பட்டு, நிக்கோலஸ் வேட் மூலமாக அதற்கு ஒரு போலி-விஞ்ஞான விளக்கம் வழங்கப்பட்டது, இவர் அணுசக்தி விஞ்ஞானிகள் ஆய்விதழில் பிரசுரித்த ஒரு கட்டுரையில், அமெரிக்க மற்றும் சீன விஞ்ஞானிகள் வூஹான் நுண்கிருமியியல் ஆய்வகத்தில் 'நுண்மரபணு பரவல்-சார் ஆராய்ச்சி' (gain of function research) மூலமாக SARS-COV-2 வைரஸை உருவாக்கியதாக ஒரு சொல்லாடலை முன்வைத்தார். 2014 இல் பிரசுரித்த இனவாத மற்றும் போலி-விஞ்ஞான புத்தகத்திற்காக வேட் அவபெயரெடுத்தவராவர்.

நியூ யோர்க் டைம்ஸ், வாஷிங்டன் போஸ்ட் மற்றும் வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல் ஆகியவை வேட் இன் விவரிப்பைத் தழுவியதுடன், இவை அனைத்தும் வேட் இன் பின்னணியை விவரிக்காமல் அவரை மேற்கோளிட்டு தலையங்கங்களையும் அல்லது பிரதான வாசகர்-தலையங்கங்களையும் பிரசுரித்தன. வேட் கருத்துப்படி, முன்னணி அமெரிக்க, சீன மற்றும் ஏனைய சர்வதேச விஞ்ஞானிகள் இரகசியமாக 'நுண்மரபணு பரவல்-சார் ஆராய்ச்சி' இல் (gain of function research) ஒத்துழைத்து வந்ததாகவும், தற்செயலாக அந்த வைரஸ் வெளிப்பட்டுவிட்டதாகவும், பின்னர் இன்று வரையில் கண்டுபிடிக்க முடியாதபடி அந்த சதியின் எந்த ஆதாரமும் இல்லாமல் மிகவும் சாமர்த்தியமாக அந்த சம்பவத்தை மறைத்துவிட்டதாகவும் கூறுகிறார்.

'வூஹான் ஆய்வக' சதிக் கோட்பாடு, ஒன்றுக்கு மேல் ஒன்றாக அனுமானங்களை அடுக்கி வைத்து, ஓர் ஏற்றுக்கொள்ளத்தக்க வாதமாக அவை அமைவதாக வாதிடுகிறது. இந்த அனுமானங்களைக் கொண்டு தொடங்குவதற்கு அங்கே எந்த ஆதாரமும் இல்லை என்றாலும் விஞ்ஞானிகளின் விடையிறுப்பு இத்தகைய அனுமானங்களைக் கையிலெடுத்து அவை சாத்தியமில்லை என்பதை விவரிக்கிறது.

அந்த ஆய்வறிக்கை, முன்னர் தோன்றிய எல்லா தொற்றுநோய்களிலும் விலங்கிடமிருந்தே நோய்கள் மனிதர்களுக்குப் பரவியது என்பது உறுதியாக எடுத்துக்காட்டப்பட்டிருப்பதாக குறிப்பிட்டு தொடங்குகிறது. “ SARS-CoV-2, மனிதர்களுக்குப் பரவும் ஆவணப்படுத்தப்பட்ட ஒன்பதாவது கொரோனா வைரஸ் என்பதோடு, கடந்த 20 ஆண்டுகளில் அடையாளம் காணப்பட்ட ஏழாவது வைரஸ் ஆகும்,” என்றது குறிப்பிடுகிறது. 'மனிதர்களைத் தாக்கும் பரந்த பெரும்பான்மை வைரஸ்களைப் போலவே, மனிதர்களைத் தாக்கிய முந்தைய அனைத்து கொரோனா வைரஸ்களும் சூனோடிக் தோற்றுவாய்கள் (zoonotic) எனப்படும் விலங்கிலிருந்து மனிதர்களுக்குப் பரவியவை ஆகும்,” என்று குறிப்பிடுகிறது.

அந்த ஆய்வறிக்கைத் தொடர்ந்து குறிப்பிடுகையில், 'SARS-CoV-2 இன் தோற்றம் இத்தகைய முந்தைய சூனோடிக் பரவல் நிகழ்வுகளைக் குறித்த பல அறிகுறிகளைக் கொண்டுள்ளது. இது நவம்பர் 2002 இல் சீனாவின் குவாங்டோங் மாகாணத்தின் போஷானிலும் மற்றும் 2003 இல் குவாங்டோங் மாகாணத்தின் குவாங்ஜோவிலும் மனிதர்களுக்குத் தாவிய SARS-CoV வைரஸூடன் ஒத்திருப்பதைத் தெளிவாக காட்டுகிறது,” என்று குறிப்பிட்டது.

SARS-CoV-2 வைரஸ் கோட்பாட்டளவில் புதிய வைரஸை உருவாக்குவதற்கான 'முதுகெலும்பாக' பயன்படுத்தக்கூடிய எந்தவொரு வைரஸூடனும் ஒத்திருக்கவில்லை என்றும் அந்த ஆசிரியர்கள் மேற்கொண்டு குறிப்பிடுகிறார்கள். “ஏதோவொரு சூழலில் ஆய்வகத்திலிருந்து தப்பித்து இருந்தால், SARS-CoV-2 இந்த பெருந்தொற்றுக்கு முன்னரே ஓர் ஆய்வகத்தில் இருந்திருக்க வேண்டும், ஆனால் அதுபோன்றவொரு கருத்தை ஆதரிக்க எந்த ஆதாரமும் இல்லை என்பதுடன், முன்னோடி நிகழ்வுகளாக சேவையாற்றக்கூடிய எந்தவொரு தொடர் நிகழ்வுகளும் அடையாளம் காணப்படவில்லை,” என்றும் அந்த ஆய்வறிக்கை தொடர்ந்து குறிப்பிட்டது.

'நுண்மரபணு பரவல்-சார் ஆராய்ச்சி' பொதுவாக ஆய்வக எலிகளைக் கொண்டு மேற்கொள்ளப்படுகின்றன என்றாலும், அந்த வைரஸ் கொறித்து உண்ணும் பிராணிகளுக்கு ஏற்புடையதாக இல்லை, ஆகவே நோய்கிருமிகள் மீதான ஆய்வு நிகழ்வுபோக்கிலோ அல்லது நுண்மரபணு பரவல்-சார் ஆராய்ச்சிகளின் போதோ ஆய்வக தொழிலாளர்களுக்கு SARS-CoV-2 தொற்று பெரிதும் ஏற்பட்டிருக்க வாய்ப்பில்லை' என்பதை அது சுட்டிக்காட்டுகிறது என்று விஞ்ஞானிகள் குறிப்பிடுகின்றனர்.

'SARS-CoV-2 தோன்றியதில் இருந்தே, மீண்டும் மீண்டும் அது, அந்த வைரஸின் உயிர்வாழ்வுத் திறனை அதிகரித்து பலமான உருமாற்றங்களை அடைந்துள்ளது,” என்பதையும் அந்த ஆய்வறிக்கை சேர்த்துக் கொள்கிறது, இது கோவிட்-19 நிஜமாகவே எப்படியோ மனிதர்களுக்குத் தொற்றும் விதத்தில் சீரமைக்கப்பட்டதாக கூறப்படும் வாதத்தை மறுத்தளிக்கிறது. “ஒட்டுமொத்தமாக, இந்த கண்டுபிடிப்புகள் என்ன காட்டுகின்றன என்றால் SARS-CoV-2 இன் வெளிப்பாடு அல்லது முந்தைய பரவலுக்கு எந்தவொரு குறிப்பிட்ட மனிதருக்கேற்ற 'முன்' தகவமைப்பும் தேவைப்படவில்லை என்பதாகும், அந்த வைரஸ் முன்னரே மனித உடலுக்கு ஏற்ப தகவமைக்கப் பட்டிருந்தது என்ற கூற்று … செல்லுபடி ஆகவில்லை.”

'மிகப் பெரும்பாலான மனித வைரஸ்களைக் கொண்டு பார்த்தால், ஒரு சூனோடிக் நிகழ்வு தான் SARS-CoV-2 இன் தோற்றுவாய்க்கான மிகவும் இரத்தினச் சுருக்கமான விளக்கமாக உள்ளது... இந்த வைரஸ் மனிதர்களுக்கு சர்வசாதாரணமாக பரவும் வழியைக் கொண்டு பார்த்தால், இதன் ஆவணப்படுத்தப்பட்ட தொற்றுநோயியல் வரலாற்றை இறைச்சி சந்தையுடன் தொடர்புடைய முந்தைய கொரோனா வைரஸ்களின் வெடிப்புடன் ஒப்பிடக் கூடியதாக உள்ளது,” என்று அந்த விஞ்ஞானிகள் முடிக்கிறார்கள்.

உலகின் முன்னணி விஞ்ஞானிகள் சிலரால் வெளியிடப்பட்ட ஆய்வறிக்கையின் முடிவுகள், கொரோனா வைரஸிற்கு ஆதாரமாக வூஹான் ‘ஆய்வக கசிவின்’ வலதுசாரி கட்டுக்கதையை விஞ்ஞானம் எவ்வாறு முறிக்கிறது' என்ற தலைப்பில் கடந்த மாதம் WSWS இல் பிரசுரிக்கப்பட்ட மூன்று பாக கட்டுரை தொடர் உட்பட, உலக சோசலிச வலைத் தளம் மேற்கொண்ட பகுப்பாய்வை உறுதிப்படுத்துகிறது.

கோவிட்-19 பெருந்தொற்றுக்குச் சீனா மீது பழி சாட்டுவதற்கான பின்னணியில் அமெரிக்க ஊடகங்களின் பிரச்சாரம் பெரியளவில் தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில், இந்த ஆய்வறிக்கை பிரசுரிக்கப்பட்டுள்ளது.

புதன்கிழமை வாஷிங்டன் போஸ்ட் ஒரு தலையங்கம் வெளியிட்டு, இந்த பெருந்தொற்று மீது ஓர் உத்தியோகபூர்வ அமெரிக்க அரசு விசாரணை மேற்கொள்வதை ஆமோதித்தது. அமெரிக்க ஆளும் வர்க்கத்தின் மேலாதிக்க பிரிவுகளுக்காக பேசும் அந்த பத்திரிகை, அந்த விசாரணையின் கவனம் நூறாயிரக்கணக்கான தேவையற்ற உயிரிழப்புகளுக்கு வழிவகுத்த அமெரிக்க அரசாங்கத்தின் குற்றகரமான விடையிறுப்பின் மீதல்ல, மாறாக அந்த பெருந்தொற்றுக்காக சீனா மீது பழி சுமத்தும் ஒரு முயற்சியாக இருக்க வேண்டும் என்பதைத் தெளிவுபடுத்தியது.

'சீனாவின் எதிர்ப்பு ஒரு நிலையான தடையாக உள்ளது,' என்று போஸ்ட் குறை கூறியது. சீன அரசாங்கம் 'மறுப்பு, மூடிமறைப்பு, திசைதிருப்பல்கள், தாமதப்படுத்தல்கள் மற்றும் தவறான தகவல்கள் வழங்கும் பாரியளவிலான ஒரு பிரச்சாரத்தை தொடங்கி' இருப்பதாக அது குற்றஞ்சாட்டுகிறது.

இல்லை, வாஷிங்டன் தான் அந்த பெருந்தொற்றை மறுத்து, மூடிமறைத்து, தாமதப்படுத்தி, தவறான தகவல்களைப் பரப்பியது. அமெரிக்க முதலாளித்துவத்தினது நடவடிக்கைகளின் விளைவாக, சுமார் 600,000 க்கும் ஒரு மில்லியனுக்கும் இடைப்பட்ட அமெரிக்கர்கள் இறந்துள்ளனர். வாஷிங்டன் “ஓர் உலகளாவிய பேரழிவிலிருந்து படிப்பினைகளைப் பெற' விரும்பினால், அது தன்னைத்தானே பார்த்துக் கொள்ள வேண்டும்.

கடந்தாண்டில், ஆவணப்படங்கள், விசாரணைகள் மற்றும் சாட்சிகளின் சாட்சியங்கள் எல்லாம் அமெரிக்க அரசாங்கம் வேண்டுமென்றே அந்த பெருந்தொற்று பரவலை மூடிமறைத்து, அது நாடெங்கிலும் வேகமாக பரவ அனுமதித்ததால், அபாயங்களைக் குறித்து பொதுமக்கள் தெரிந்து கொள்வதற்குள் அது பாரியளவில் பலமாக பரவி விட்டிருந்ததைத் தெளிவுபடுத்தி உள்ளன.

2020 ஏப்ரலில் தொடங்கி, அப்போதும் பெருந்தொற்று அதிகரித்துக் கொண்டிருந்த போதும் கூட, பள்ளிகள் மற்றும் வணிகங்களை மீண்டும் திறந்துவிட ட்ரம்ப் நிர்வாகம் அதன் சொந்த பொது மருத்துவ நல வல்லுநர்களின் பரிந்துரைகளை மீறியது, இதே கொள்கை பைடெனின் கீழ் தொடரப்பட்டு தீவிரப்படுத்தப்பட்டது.

டெல்டா வகை வைரஸ் பெருந்தொற்று மீண்டும் எழுச்சி அடைந்துள்ள போதும், உலகெங்கிலுமான அரசாங்கங்களோ மக்கள் கோவிட்-19 பெருந்தொற்றுடன் 'வாழப் பழகி' கொள்ள வேண்டுமென்ற முறையீட்டை இரட்டிப்பாக்கி வருகின்றன. இங்கிலாந்தில், ஜோன்சன் அரசாங்கம், அது பகிரங்கமாக ஏற்றிருக்கும் கொள்கை கோவிட்-19 நோயாளிகளின், மருத்துவமனை சேர்க்கைகள் மற்றும் உயிரிழப்புகளின் அதிகரிப்புக்கு இட்டுச் செல்லும் என்பதை ஒப்புக் கொள்கிறது. ஆனால் பெருநிறுவன இலாபங்களைப் பாதுகாப்பதற்காக மனித உயிர்களைத் தியாகம் செய்ய நோக்கம் கொண்ட, ஒவ்வொரு முதலாளித்துவ அரசாங்கத்தினது கொள்கையின் மிகவும் முன்னேறிய வடிவத்தை மட்டுமே ஜோன்சன் அரசாங்கம் வெளிப்படுத்துகிறது.

அனுபவ ஆதாரங்களில் வேரூன்றிய ஒரு விஞ்ஞானபூர்வ விளக்கத்தின் அர்த்தத்தில் பார்த்தால், வூஹான் ஆய்வகக் கோட்பாடு ஒருபோதும் ஓர் உண்மையான 'கோட்பாடாக' இருக்கவில்லை. அது, அதற்குப் பொறுப்பானவர்களிடமிருந்து கவனத்தைத் திசைதிருப்பவும், மில்லியன் கணக்கானவர்கள் உயிரிழக்க இட்டுச் சென்றுள்ள ஒரு கொள்கையை தொடர்வதை நியாயப்படுத்தவும் மற்றும் சீனாவுடனான புவிசார் அரசியல் மோதலில் ஆயுதத்தளவாடமாக சேவையாற்றவும் முற்றிலும் அரசியல் பரிசீலனைகளால் உந்தப்பட்ட ஒரு 'கோட்பாடாக' உள்ளது.

ஆனால் அமெரிக்க முதலாளித்துவத்தின் தணியாத பேராசை மற்றும் சமூக-விரோத போக்குகளால் ஏற்படுத்தப்பட்ட இறப்புகளுக்கு சீனா மீது பழிசுமத்துவதற்கான முயற்சிகள் உலகெங்கிலுமான உழைக்கும் மக்களால் ஏளனமாக பார்க்கப்படும். அமெரிக்காவிலும் சர்வதேச அளவிலும் தொழிலாளர்கள் தங்கள் உயிரையும் வாழ்வாதாரங்களையும் பாதுகாக்க போராட்டத்திற்குள் நுழைந்து வருகின்ற நிலையில், அவர்கள் பழியை அதற்குரிய சரியான இடத்தில் நிறுத்துவார்கள்: அதாவது ஆளும் வர்க்கத்தின் மீதும் மற்றும் அது பாதுகாக்கும் இந்த முதலாளித்துவ அமைப்புமுறை மீதும் நிறுத்துவார்கள்.

Loading