மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்
கொன்டினென்டலின் துணை நிறுவனமான விரெஸ்கோவின் பேப்ரா-மூல்ஹவுசன் ஆலையில் ஒப்பந்தம் தொடர்பான வாக்குப்பதிவு ஆரம்பிக்கப்பட்டுள்ளது. ஜேர்மனியின் மற்ற பகுதிகளில் உள்ள கொன்டி ஆலைகளைப் போலவே, IG Metall தொழிற்சங்கம் நிர்வாகத்துடன் 'சமூக ஒப்பந்தம்' என்று அழைக்கப்பட்டதற்கு உடன்பட்டுள்ளது. இது மற்றொரு கொன்டி உற்பத்தித்தளத்தின் தலைவிதியை மூடி, மேலும் 400 வேலைகளை இல்லாதொழிக்கிறது.
சோசலிச சமத்துவக் கட்சி (Sozialistische Gleichheitspartei,SGP) மற்றும் உலக சோசலிச வலைத் தளம் பேப்ரா மற்றும் மூல்ஹவுசன் அனைத்து தொழிலாளர்களையும் 'இல்லை' என்று வாக்களிக்கவும் மற்றும் IG Metall மற்றும் அதன் தொழிற்சாலை தொழிலாளர் குழுவின் புதிய காட்டுக்கொடுப்பை நிராகரிக்கவும் அழைப்பு விடுக்கிறது. அதே நேரத்தில், தொழிலாளர்கள் ஏற்கெனவே ஒப்புதல் அளித்து வேலைநிறுத்தத்தை ஏற்பாடு செய்ய ஒரு சாமானிய தொழிலாளர் குழுவை உருவாக்க உதவுவதோடு, அனைத்து தளங்களிலும் கொன்டி தொழிலாளர்களின் பரந்த அணிதிரட்டலுக்கான தொடக்கப் புள்ளியாக மாற்றவும் நாங்கள் முன்வருகிறோம்.
இரண்டு வாரங்களுக்கு முன்பு, காலவரையற்ற வேலைநிறுத்தத்திற்கு ஆதரவாக பேப்ரா மற்றும் மூல்ஹவுசனில் உள்ள தொழிலாளர்களில் கிட்டத்தட்ட 92 சதவிகிதம் வாக்களித்தனர். வேலைநிறுத்தத்திற்கான இந்த முடிவு தொழிலாளர்களின் போராட்ட விருப்பத்தையும் அனைத்து வேலைகளையும் பாதுகாக்கும் அவர்களின் உறுதியையும் காட்டியது. மூல்ஹவுசனில், வேலைகளைப் பாதுகாப்பதில் சில தொழிலாளர்களின் தைரியமான நடவடிக்கைகள் ஏற்கனவே ஜனவரி மாதம் நிர்வாகத்தால் இயந்திரங்களை அகற்றப்படுவதைத் தடுத்தன.
ஆனால் IG Metall ஒரு வேலைநிறுத்தத்தை ஏற்பாடு செய்ய மறுத்து பேச்சுவார்த்தைகளை தொடர்ந்தது. இப்போது, அது ஒரு பேச்சுவார்த்தை முடிவை முன்வைக்கிறது. அதில் தொழிலாளர்களின் ஆரம்ப கோரிக்கைகளுக்கு முற்றிலும் எதிராக வேலைகள் படிப்படியாக அழிக்கப்படுவது மற்றும் மூல்ஹவுசனில் உள்ள ஆலையை மூடுவது ஆகியவை அடங்கும்.
எப்போதும் போல், IG Metall அதன் பழக்கமான தந்திரங்களைப் பயன்படுத்துகிறது. இது நிர்வாகத்துடனான உடன்பாட்டுடன் சிறிய பகுதிகளை மட்டுமே வெளியிட்டு, ஒப்பந்தத்தின் சரியான உள்ளடக்கத்தை இரகசியமாக வைத்திருக்கிறது. இது ஒப்பந்தத்தின் முடிவை நன்மையுள்ளதாக விளக்குவதற்கு முயற்சித்து மற்றும் நீண்ட கால ஊழியர்களுக்காக அதிக வேலையிழப்பு நஷ்ட ஈட்டுத்தொகை வழங்கப்படுவதாகக் கூறி தொழிலாளர்களைப் பிரிக்க முயற்சிக்கிறது. அதே சமயம், இந்த விற்றுத்தள்ளலை நிராகரிப்பது, வேலையிழப்பு நஷ்ட ஈட்டுத்தொகை இல்லாமல் பாரிய பணிநீக்கங்கள் மற்றும் ஆலை மூடல்களுக்கு வழிவகுக்கும் என்று அப்பட்டமாக அச்சுறுத்துகிறது.
இந்த அச்சுறுத்தல் மூலம், IG Metall மற்றும் அதன் தொழிற்சாலை தொழிலாளர் குழுவின் பிரதிநிதிகள், நிறுவன நிர்வாகம், மற்றும் அழுக்கு-பணக்கார உரிமையாளர்களான ஷெஃப்லர் குடும்பத்தின் முடிவை திணித்து உலகெங்கிலும் 30,000 வேலைகளை குறைத்து, தொழிலாளர்களின் எதிர்ப்பிற்கு எதிராக பல ஆலைகளை மூடுவதற்கு முயற்சி செய்கின்றனர். ஆஹென், றேஹென்ஸ்பேர்க், பாபென்ஹவுசன், ரைன்போலென், கார்பென் மற்றும் பல நகரங்களில் உள்ள கொன்டி ஆலைகளில் பாரிய வேலை வெட்டுக்கள் மற்றும் மூடுதல்களை ஒழுங்கமைக்க ஏற்கனவே பயன்படுத்தப்பட்ட முறை இதுதான்.
ஆகஸ்ட் 5 வரை நடைபெறும் வாக்களிப்பில் இந்த தொடர்ச்சியான மூடல்கள் மற்றும் வேலைப் அழிப்புகளின் சங்கிலியை உடைத்து தெளிவாக 'இல்லை' என வாக்களிக்க வேண்டிய நேரம் இதுவாகும்!
அவ்வாறு செய்யும்போது, சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினருக்கும் பேச்சுவார்த்தை முடிவு சிறந்தது மற்றும் அதற்கு மேல் எதையும் சாதிக்க முடியாது என்று கூறும் IG Metall இன் பொய்களை எதிர்கொள்வது அவசியம். இத்தொழிற்சங்கங்கம் வேலை வெட்டுக்களை 200 ஆக குறைப்பதிலும், மூல்ஹவுசன் ஆலையை மூடுவதை 2024 ஆம் ஆண்டின் இறுதி வரை ஒத்திவைப்பதிலும் வெற்றி பெற்றுள்ளது என பெருமை கொள்கிறது.
உண்மை என்னவென்றால், மூல்ஹவுசன் ஆலை அதன் 150 ஊழியர்களுடன் பராமரிக்கப்படாது. ஆனால் ஆகக்குறைந்தது மூன்று வருடங்களில் முழுமையாக மூடப்படும். இந்த மூடல் இப்போது தொடங்கப்படுகிறது. அடுத்த ஆண்டின் இறுதியில், 88 தொழிலாளர்கள் மட்டுமே மூல்ஹவுசனில் இருப்பார்கள். எனவே அவர்கள் முக்கிய ஆலை செயல்பாடுகளை மேற்கொள்ளவேண்டும்.
பேப்ராவில், தொழிலாளர்கள் தாமாகவே 'உருமாற்றம்' (transformation) என்று அழைக்கப்படுபவதை உருவாக்க அழைப்புவிடப்பட்டுள்ளனர். இதில் இன்னும் பல நூறு வேலைகள் அழிக்கப்படும். ஒரு கொன்டி பத்திரிகை அறிக்கை, பேப்ராவில், 'எரிப்பு இயந்திர தொழில்நுட்பங்களின் பகுதியில் விற்பனை எதிர்பார்ப்புக்கு ஏற்ப பணியாளர்கள் தொகை ஒழுங்கமைக்கப்பட வேண்டும்' என்று கூறுகிறது. IG Metall புள்ளிவிவரங்களின்படி, 2025 க்குள் 800 வேலைகளில் 550 வேலைகள் இங்கே இருக்கமுடியும். இதனால், பேப்ரா மற்றும் மூல்ஹவுசனில் 400 வேலைகள் அழிக்கப்படும், IG Metall கூறுவது போல் 200 அல்ல.
'ஆம்' என்று வாக்களிப்பதன் மூலம் எதையும் சாதிக்க முடியாது. வேலைகள் அழிக்கப்படுவது சமூக வீழ்ச்சியைத் தொடர்ந்து மேலும் மேலும் குடும்பங்களை வறுமையிலும் கஷ்டத்திலும் தள்ளும். கடந்த ஆண்டு மட்டும் 40 சதவீத தொழிலாளர்கள் வருமான இழப்பை சந்தித்தனர். பதின்மூன்று மில்லியன் மக்கள் வறுமையில் வாடுகின்றனர். இது 1990 இல் ஜேர்மன் மறுஇணைப்பிற்கு பின்னர் அதிக எண்ணிக்கையாகும். மறுபுறம், கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஒரு வேலையிழப்பு நஷ்ட ஈட்டுத்தொகை ஒரு தீர்வு அல்ல. இது விரைவாக செலவுகளுக்காக பயன்படுத்தப்பட்டு வேலையிழப்பிற்கு பின்னர் கிடைக்கும் எந்த சமூகநலத்திட்ட உதவிகளை வழங்குவதற்கும் கணக்கிடுவதில் சேர்க்கப்பட்டுள்ளது. இளம்தலைமுறையினர்களுக்கு வேலைகளும் இல்லை மற்றும் எதிர்காலமும் இல்லை.
'இல்லை' என்ற வாக்களிப்பு தொழிற்சங்க விற்றுத்தள்ளலுக்கு எதிரான எதிர்ப்பைத் தொடங்குகிறது.
இரண்டு வாரங்களுக்கு முன்பு வேலைநிறுத்தம் செய்ய எடுத்த முடிவு தொழிலாளர்கள் போராட விரும்புவதை தெளிவுபடுத்தியுள்ளது. ஆனால் தொழிற்சங்கங்களுடன் முறித்துக் கொள்ளாமல் பெருநிறுவன தாக்குதல்களை முறியடிக்க முடியாது என்பதை நிகழ்வுகள் காட்டுகின்றன. கடந்த தசாப்தங்களில், தொழிற்சங்கங்கள் நிர்வாகத்தின் சார்பாக இருக்கும் இணை மேலாளர்களாக மாறிவிட்டன. அவர்கள் தொழிலாளர்களை பிரதிநிதித்துவப்படுத்தவில்லை ஆனால் முதலாளிகளை பிரதிநிதித்துவப்படுத்துகிறார்கள். பெரும் பணக்காரர்களுக்கு சார்பாக இருப்பது தொழிலாளர்களின் இழப்பில் தங்கள் பைகளை நிரப்ப உதவுவதால் அவர்கள் வர்க்கப் போராட்டத்தை அடக்குகிறார்கள்.
அவர்களின் சேவைகளுக்கு ஈடாக, தொழிற்சங்க அதிகாரிகளுக்கு நல்ல சம்பளம் வழங்கப்படுகிறது. கொன்டினென்டல் மேற்பார்வை குழுவில் பாரிய சம்பளத்தை சேகரிக்கும் 'தொழிலாளர் பிரதிநிதிகள்' என்று அழைக்கப்படுபவர்களின் பட்டியல் நீண்டது. கிறிஸ்டியன் பென்னர் ( IG Metall துணைத் தலைவர்) தவிர, அவர்களில் ஹசன் அல்லாக் (பொது தொழிற்சாலை குழுவின் தலைவர்), ஃபிரான்செஸ்கோ கிரியோலி (IG BCE தொழிற்சங்க நிர்வாகக் குழு உறுப்பினர்), மைக்கேல் இக்ல்ஹவுட் (கொன்டி/டேவ்ஸ் தொழிற்சாலை குழுவின் தலைவர்- பிராங்ஃபேர்ட்), டிர்க் நோர்ட்மான் (கொன்டி-வஹ்ரென்வால்ட் தொழிற்சாலை குழுவின் தலைவர்), லோரன்ஸ் பிஃபாவ் (கொன்டி-வாகனத்துறை பொது தொழிற்சாலை குழுவின் தலைவர்), ஜோர்க் ஷோன்ஃபெல்டர் (ஐரோப்பிய தொழிற்சாலை குழுவின் தலைவர்) மற்றும் கிர்ஸ்டன் வோர்கெல் (வைடெஸ்கோ டோர்ட்முண்ட் நகர தொழிற்சாலை குழுவின் தலைவர்). இந்த இணை மேலாளர்களுக்கு எதிராக மட்டுமே தொழிலாளர்களின் நலன்களை பாதுகாக்க முடியும்.
ஒரு 'இல்லை' வாக்கு என்பது ஒரு புதிய மூலோபாயம் மற்றும் அனைத்து வேலைகளையும் பாதுகாக்க ஒரு புதிய திட்டத்திற்கான போராட்டத்தில் ஒரு முக்கியமான படியாகும். அனைத்து கொன்டினென்டல் தளங்களிலும், மற்ற கார் ஆலைகளுக்கு அப்பாலும் உள்ள பல தொழிலாளர்கள் அத்தகைய முடிவை ஆர்வத்துடன் வரவேற்பார்கள். எல்லா இடங்களிலும் தொழிலாளர்கள் ஒரே மாதிரியான தாக்குதல்களையும் பிரச்சினைகளையும் எதிர்கொள்கின்றனர்.
கொன்டினென்டலில் வேலைகள் அழிப்பு என்பது கொரோனா வைரஸ் தொற்றுநோயுடன் தீவிரமடைந்துள்ள சர்வதேச நிறுவன தாக்குதலின் ஒரு பகுதியாகும். ஜேர்மன் வாகனத்துறை மற்றும் வினியோக தொழில்களில் மட்டும், பல இலட்சம் வேலைகள் ஆபத்தில் உள்ளன.
இதற்கு எதிர்ப்பு அதிகரித்து வருகிறது. கொன்டி தொழிலாளர்கள் தனியாக இல்லை. IG Metall உடனான அவர்களின் மோதல் சர்வதேச வளர்ச்சியின் ஒரு பகுதியாகும். எங்கெல்லாம் தொழிலாளர்கள் எதிர்த்து போராடுகின்றார்களோ அங்கு அவர்கள் நிறுவனங்களை மட்டுமல்லாது, தங்கள் போராட்டத்தை நாசமாக்கி, அவர்களை தனிமைப்படுத்தி, பெருநிறுவனங்களுடன் ஒரு பொது முன்னணியை உருவாக்கும் தொழிற்சங்கங்களையும் எதிர்கொள்கின்றனர்.
பெல்ஜியத்தில், வோல்வோ வாகன தொழிலாளர்கள் நிறுவனத்திற்கும் தொழிற்சங்கத்திற்கும் இடையேயான வேலை வாரத்தை நீட்டிப்பதற்கான ஒரு ஒப்பந்தத்தை எதிர்த்துப் போராடுகிறார்கள். கனடாவின் சட்பரியில், 2,450 சுரங்கத் தொழிலாளர்கள் தொழிற்சங்க ஆதரவு ஒப்பந்தத்தை நிராகரித்து இரண்டு மாதங்களாக வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். துருக்கியில், ஆயிரக்கணக்கான மின் ஊழியர்கள் தன்னிச்சையான வேலைநிறுத்தங்களுடன் தொழிற்சங்கம் ஒப்புக்கொண்ட விற்பனை ஒப்பந்தங்களுக்கு எதிராக போராடுகின்றனர்.
உலகின் நான்காவது பெரிய கனரகவாகன உற்பத்தியாளரான வேர்ஜீனியாவின் டப்ளினில் உள்ள வோல்வோ ட்ரக்குகளில் தொழில்துறை நடவடிக்கை குறிப்பாக குறிப்பிடத்தக்கதாகும். 3,000 தொழிலாளர்கள் தங்கள் மோசமான வேலை நிலைமைகளுக்கு எதிராகவும் மற்றும் நியாயமான ஊதியங்களுக்கும் எதிராக செய்யப்பட்ட ஒப்பந்தத்திற்கு எதிராக ஐந்து வாரங்களுக்கு வேலைநிறுத்தம் செய்தனர். IG Metall இன் அமெரிக்க சகோதர அமைப்பான UAW ஒப்புக்கொண்ட ஒப்பந்தத்தை எதிர்த்து நான்கு முறை அதிக பெரும்பான்மையுடன் அவர்கள் வாக்களித்தனர்.
தொழிலாளர்கள் தங்கள் போராட்டத்தை நடத்த முடிந்தது, ஏனென்றால் அவர்கள் தொழிற்சங்க காட்டிக்கொடுப்பை எதிர்த்து ஒரு சுயாதீன சாமானிய தொழிலாளர் குழுவான வொல்வோ சாமானிய தொழிலாளர் குழுவை (VWRFC) உருவாக்கினர். இது தொழிலாளர்களுக்கு தகவல் அளித்து ஆதரவு திரட்டியது. இதற்கிடையில், UAW இனால் மீண்டும் வேலைக்குத் தள்ளப்பட்டபோது வொல்வோ சாமானிய தொழிலாளர் குழு போராட்டம் எவ்வாறு நடத்தப்பட வேண்டும் என்பதைக் காட்டியது. இது அமெரிக்கா மற்றும் உலகெங்கிலும் உள்ள பிற ஆலைகளுடன் இணைப்புகளை ஏற்படுத்தி, நிறுவனம் மற்றும் தொழிற்சங்கங்களின் ஐக்கிய முன்னணிக்கு எதிராக ஒரு தெளிவான மூலோபாய மாற்றீட்டை வழங்குகியது.
பேப்ரா மற்றும் மூல்ஹவுசனில் உள்ள தொழிலாளர்கள் தங்கள் வேலைகளைப் பாதுகாக்க விரும்பும் ஒரு சாமானிய தொழிலாளர் குழுவை உருவாக்க வேண்டும்.
அத்தகைய குழு 'இல்லை' என்ற பிரச்சாரத்தை வழிநடத்தும், ஏற்கனவே முடிவு செய்யப்பட்ட வேலைநிறுத்தத்தை ஒழுங்கமைப்பதுடன், ஏனைய அனைத்து கொன்டி தொழிற்சாலைகளையும் தொடர்பு கொண்டு வேலைநிறுத்தத்தை நீட்டித்து, உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் உள்ள தொழிலாள வர்க்கத்தின் மத்தியில் ஆதரவை திரட்டும்.
சோசலிச சமத்துவக் கட்சி நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின், ஜேர்மன் பிரிவாகும். அது மே 1 அன்று சர்வதேச தொழிலாளர்களின் சாமானிய தொழிலாளர் குழு கூட்டணியை உருவாக்கி, சர்வதேச அளவில் தொழிற்சாலைகள், பள்ளிகள் மற்றும் பணியிடங்களில் உள்ள தொழிலாளர்களின் புதிய சுயாதீன மற்றும் ஜனநாயக போராட்ட வடிவங்களுக்கு ஒரு கட்டமைப்பை வழங்கியது.
அனைத்து கொன்டி தொழிலாளர்களையும் WSWS மூலம் சர்வதேச தொழிலாளர் கூட்டணியை தொடர்புகொள்ள அழைக்கிறோம். ஒரு சாமானிய தொழிலாளர்களின் குழுவை உருவாக்குவதற்கும் சர்வதேச தொடர்புகளை நிறுவுவதற்கும் நாங்கள் அவர்களுக்கு தீவிரமாக ஆதரவளிப்போம்.
மேலும் படிக்க
- JDE இல் தொழிற்சங்கத்தின் சரணடைதல் ஒப்பந்தத்தை நிராகரிக்கவும்: எழுந்தமானமாக வேலையிலிருந்து நீக்கி மீண்டும் வேலையில் இருத்தும் முறையை முடிவுக்குக் கொண்டுவர ஒரு சாமானிய தொழிலாளர் குழுவை அமைக்கவும்!
- வேலைநிறுத்தம் செய்யும் வொல்வோ தொழிலாளர்கள் ஐக்கியப்பட்ட நடவடிக்கைக்காக மாக் கனரக வாகனத் தொழிலாளர்களிடம் கோரிக்கை விடுக்கின்றனர்
- இந்திய மாருதி சுசுகி, டொயோட்டா, ரெனால்ட்-நிசான் தொழிலாளர்கள் வொல்வோ வேலைநிறுத்தத்தை ஆதரிக்கின்றனர்