இந்திய மாருதி சுசுகி, டொயோட்டா, ரெனால்ட்-நிசான் தொழிலாளர்கள் வொல்வோ வேலைநிறுத்தத்தை ஆதரிக்கின்றனர்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

பெரு நிறுவன சார்பு ஐக்கிய வாகன தொழிலாளர்கள் (UAW) சங்கத்தினால் காட்டிக்கொடுக்கப்பட்ட இரண்டாவது ஒப்பந்த பேச்சுவார்த்தையை எதிர்த்து வேர்ஜினியா டப்ளின் நகரில் நியூ ரிவர் வலியில் உள்ள அமெரிக்க வொல்வோ கனரக தொழிலாளர்கள் 3000 பேர் ஞாயிற்றுக்கிழமை எடுத்த முடிவையும் அவர்கள் மீண்டும் திங்கள் கிழமை மறியல் போராட்டத்திற்கு திரும்பியதையும் இந்தியா முழுவதும் உள்ள தொழிற்சாலைகளிலுள்ள தொழிலாளர்கள் பாராட்டினர்.

உலக சோசலிச வலைத்தளம் (WSWS) மாருதி-சுசுகி, டொயோட்டா இந்தியா, மற்றும் ரெனால்ட்-நிசான் உள்ளிட்ட வாகனத் தொழிலாளர்களுடன் வொல்வோ வேலைநிறுத்தத்தின் சர்வதேச முக்கியத்துவம் குறித்து பேசியது. வொல்வோ தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் செய்ய எடுத்த முடிவையும் மற்றும் ஒரு காட்டிக்கொடுப்பை திணிக்க யூனியன் எடுத்த முயற்சியையும் எதிர்க்க எடுத்த முடிவு குறித்து வொல்வோ தொழிலாளர்கள் மிகுந்த ஆர்வத்துடன் பேசியதுடன் வொல்வோ தொழிலாளர்களுடன் அவர்களது வலுவான வர்க்க ஒற்றுமையையும் வெளிப்படுத்தினர்.

ரெனால்ட் நிசான் தானியங்கி இந்தியா தொழிலாளர்கள் (நன்றி: global.nissannews.com)

சுயாதீனமான மாருதி சுசுகி தொழிலாளர் சங்கத்தின் (MSWU) தலைவர்கள் ஜோடிக்கப்பட்டு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டு சிறைக்கு அனுப்பப்பட்டபோது தற்காலிக செயற்குழு 2012 இல் அமைக்கப்பட்டது, அதன் தலைவர்கள் அறிக்கை ஒன்று வெளியிட்டனர், அவர்கள் இவ்வாறு அறிவித்தனர், "நாம் வொல்வோ தொழிலாளர்களுக்கு எங்கள் வலுவான ஒற்றுமையையும் ஆதரவையும் வழங்குகிறோம், அவர்கள் அமெரிக்காவின் வேர்ஜீனியா, டப்ளினில் உள்ள வொல்வோ கனரக நியூ ரிவர் வலி ஆலையில் நியாயமான கோரிக்கைகளுக்காக வேலைநிறுத்தம் செய்கின்றனர். "

வொல்வோ கனரக தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தின் முக்கியத்துவத்தை பற்றி பேசுகையில் அவர்கள், “உலக அளவில் தொழிலாள வர்க்கத்தின் மீது முதலாளித்துவ வர்க்கத்தின் தொடர்ச்சியான தாக்குதல்களுக்கு மத்தியில், வொல்வோ தொழிலாளர்களின் போர்க்குணமிக்க போராட்டம் ஒரு முக்கியமான நிகழ்வாக இருக்கிறது. கணிசமான ஊதிய உயர்வுகள் மற்றும் அதிக மருத்துவ செலவுகள், 10 மணி நேர வேலை நாள் மற்றும் ஓய்வு பெறுபவர்களுக்கான நல சேவைகளை வெட்டுதல் ஆகியவற்றுக்கு எதிரான அவர்களின் போராட்டத்தில் நாங்கள் அவர்களுடன் இருக்கிறோம். ”

நிறுவனம், காவல்துறை மற்றும் அரசாங்கத்தின் கூட்டு சதித்திட்டங்களுக்கு மத்தியில் மாருதி சுசுகி மானேசர் ஆலை தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் மிருகத்தனமான நிலைமைகளை அவர்களின் அறிக்கை சுருக்கமாகக் கூறியது, தற்காலிக குழு உறுப்பினர்கள் வொல்வோ தொழிலாளர்களின் தைரியமான நடவடிக்கைக்கு நன்றி தெரிவித்தனர்.

அவர்கள் இவ்வாறு கூறினார்கள், “மாருதி சுசுகி தொழிலாளர்களான நாங்கள் கடந்த தசாப்தத்தில் பல வேலைநிறுத்தங்கள், ஆர்ப்பாட்டங்கள் மற்றும் பிரச்சாரங்களுடன் இதே மாதிரியான போராட்டப் பாதையில் சென்றுள்ளோம். எங்கள் போராட்டத்திற்கு பதிலடி கொடுக்கும் முகமாக முதலாளித்துவ வர்க்கம் மற்றும் இந்திய அரசினால் எங்கள் தோழர்கள் 13 பேர் வர்க்கப் போராட்டத்தின் அரசியல் கைதிகளாக ஆக்கப்பட்டனர் மற்றும் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டனர். இப்போது ஒன்பது ஆண்டுகளாக சிறையில் உள்ளனர். அமெரிக்காவின் வேர்ஜீனியாவில் வொல்வோ தொழிலாளர்களின் போராட்டம் எங்கள் போராட்டங்களை பலப்படுத்துகிறது. அவர்களின் குரல்களை வலுப்படுத்த நாங்கள் அவர்களுடன் நிற்கிறோம்.

கார்ல் மார்க்சின் கம்யூனிஸ்ட் அறிக்கையின் இறுதி வாக்கியத்துடன் அவர்கள் முடித்தனர்: “உலகத் தொழிலாளர்கள், ஒன்று சேருங்கள்!”

COVID-19 பெரும் தொற்றுநோய்க்கு மத்தியில் பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் வீட்டில் தங்குவது குறித்த உத்தரவுகளை கோரி வேலைநிறுத்தங்களை நடத்திய பல இந்திய வாகன ஆலைகளின் தொழிலாளர்களிடமும் WSWS பேசியது. வொல்வோ கனரக தொழிலாளர்களுக்கு ஆதரவாக ரெனால்ட்-நிசான் தொழிலாளர்களும் பேசினர், அவர்களின் கோரிக்கைகள் முறையானவை என்றும் ஊழல் நிறைந்த UAW அதிகாரத்துவத்தை எதிர்ப்பது முக்கியம் என்றும் கூறினார்கள்.

அமெரிக்காவில் UAW அதிகாரத்துவத்தின் பாத்திரம் இந்தியாவில் தொழிற்சங்க அதிகாரத்துவங்கள் வகித்த பங்கை நினைவூட்டுவதாக ஒருவர் கூறினார், அவர் WSWS இடம் இவ்வாறு கூறினார்: “ஆரம்பத்தில் அவர்கள் எங்களுக்காக போராடுவதாக நடித்துள்ளனர். ஆனால் இப்போது நாம் ஏதாவது கேள்வி கேட்கும்போது, அவர்கள் எங்களுக்கு பதில் சொல்ல மாட்டார்கள், எங்களை புறக்கணிக்கின்றனர். கடந்த மூன்று ஆண்டுகளாக, எங்களுக்கு ஊக்கத்தொகையோ அல்லது ஊதிய உயர்வோ எதுவுமே கிடையாது. இதற்கு முன்பு, நிர்வாகமும் அரசாங்கமும் மட்டுமே எங்களுக்கு எதிரானவை என்று நான் நினைத்தேன், ஆனால் இப்போது எங்கள் தொழிற்சங்கம் அவர்களுடன் நீண்ட காலத்திற்கு முன்னரே இணைந்து விட்டதாக நான் உணர்கிறேன். ”

பிரசன்னா மற்றும் சதீஷ் உட்பட பல டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார்ஸ் (டி.கே.எம்) தொழிலாளர்கள் அமெரிக்காவின் வொல்வோ தொழிலாளர்களுக்கும் தங்கள் வலுவான ஒற்றுமையை தெரிவித்தனர்.

பிரசன்னா இவ்வாறு கூறினார், “அசெம்பிளி வரிசையில் வேகத்தை அதிகரிப்பதற்கு எதிராக நாங்கள் மூன்று மாதங்கள் வேலை நிறுத்தம் செய்தபோது, நிர்வாகம் குறைந்த ஊதியம் பெறும் ஒப்பந்தத் தொழிலாளர்கள் மற்றும் நிர்வாக ஊழியர்களை பயன்படுத்தி உற்பத்தியை நடத்த முயற்சித்தது. இது தொழிலாளர் சட்டங்களை மீறுவதாக இருந்தாலும், நிறுவனம், மாநில அரசாங்கத்தின் ஆதரவுடன், வேலைநிறுத்தத்தை முறியடிக்க தேர்ச்சி பெறாத ஒப்பந்தத் தொழிலாளர்களைப் பயன்படுத்தியது. ”

சதீஷ் கூறினார், “வேலைநிறுத்தத்தில் பெரும்பான்மையான தொழிலாளர்கள் ஈடுபடும்போது உற்பத்தி முற்றிலுமாக நிறுத்தப்படும். இது அவர்களின் கோரிக்கைகளுக்காக போராடுவதற்கும் வெற்றி பெறுவதற்கும் தொழிலாளர்களுக்கு அதிக சக்தியை அளிக்கிறது. COVID-19 இன் தாக்கத்தின் கீழ், தொழிலாளர்கள் அதிக நேரம் வேலை செய்ய வேண்டும் என்று நிறுவனங்கள் கோருகின்றன. அசெம்பிளி வரிசையில் பணியாற்றுவது என்பது தொழிலாளர்கள் மீது பெரும் அழுத்தம் கொடுப்பதாகும். ஒவ்வொரு நிமிடமும் ஒவ்வொரு நொடியும் கூட கணக்கிடப்படுகிறது. டொயோட்டா கிர்லோஸ்கர் மற்றும் மாருதி சுசுகி இந்தியா உள்ளிட்ட பல ஆட்டோ அசெம்பிளி ஆலைகளில் தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் இத்தகைய மிருகத்தனமான வேலை நிலைமைகளை எதிர் கொள்கின்றனர்.” .

தொழிற்சாலைக்குள் நிலவும் அடிமை தொழிலாளர் நிலைமைகளை சுட்டிக்காட்டி, டொயோட்டா தொழிலாளி மேலும் கூறினார்: “நிர்வாகத்தின் அறிவுறுத்தலின் படி, பணித்தள மேற்பார்வையாளர்கள் தொழிலாளர்களை கழிவறைக்கு செல்லவோ அல்லது தண்ணீர் குடிக்கவோ அனுமதிக்க மறுத்துவிட்டனர். இந்த மனிதாபிமானமற்ற செயலை நியாயப்படுத்த, நிர்வாகம், 'அவர்கள் ஒவ்வொரு இரண்டு மணி நேரத்திற்கும் ஒரு முறை 10 நிமிடங்களுக்கு செல்ல முடியும், அவர்கள் அந்த நேரத்தில் மட்டுமே செல்ல வேண்டும்' என்று கூறினார். முறை தவறி வெளியே செல்வோரை கவனிக்கும்படியும் அதற்காக அவர்களின் சம்பளத்தில் வெட்டப்பட வேண்டும் என்றும் குழுத் தலைவர்களுக்கு நிர்வாகம் அறிவுறுத்தியது.

”TKM இல் உள்ள அடிமைத் தொழிலாளர் நிலைமைகளைச் சுருக்கமாக சதீஷ் கூறினார், “மூன்று முக்கிய பிரச்சினைகள் உள்ளன: (உற்பத்தியை) விரைவு படுத்தல், ஓய்வறைக்கு அனுமதி மறுப்பது மற்றும் சம்பள வெட்டுக்கள்.” இவை சர்வதேச பிரச்சினைகள் என்பதையும் அதற்கு எதிராக தொழிலாளர்கள் தொழிற்சங்க அதிகாரத்துவங்களிலிருந்து சுயாதீனமாகவும், சர்வதேச அளவிலும் அணிதிரட்டப்பட வேண்டும் என்பதுடனும் அவர் உடன்பட்டார்.

இந்திய மத்திய அரசுக்கு சொந்தமான லிக்னைட் (மென்மையான நிலக்கரி) சுரங்க மற்றும் மின் உற்பத்தி நிறுவனமான நெய்வெலி லிக்னைட் கார்ப்பரேஷனின் (NLC) சுரங்கத் தொழிலாளியான எஸ்.ஜோதியுடன் WSWS பேசியது. அவர் வேலைநிறுத்தம் செய்யும் அமெரிக்க வோல்வோ தொழிலாளர்களுடன் தனது வலுவான ஒற்றுமையை வெளிப்படுத்தினார்.

“வோல்வோ தொழிலாளர்களின் கோரிக்கையை நான் நிச்சயமாக ஆதரிக்கிறேன், அவர்களின் நியாயமான கோரிக்கைகளை அனைத்து தொழிலாளர்களும் ஆதரிக்க வேண்டும். உலகெங்கிலும் உள்ள தொழிலாளர்கள் ஏறத்தாழ ஒரே மாதிரியான பிரச்சினைகளை எதிர்கொள்கின்றனர்.” அவர் கூறினார்.

“இங்கே என்.எல்.சி.யில், நான் 20 ஆண்டுகள் ஒப்பந்தத் தொழிலாளியாகப் பணியாற்றினேன். உண்மையில், பல ஆயிரக்கணக்கான என்.எல்.சி தொழிலாளர்களில் கிட்டத்தட்ட பாதி பேர் ஒப்பந்தத் தொழிலாளர்கள்.அவர்கள் இரண்டு அல்லது மூன்று தசாப்தங்களாக ஒரே நிலையில் தான் இருக்கிறார்கள், நிரந்தரத் தொழிலாளர்களுக்கு கிடைக்கும் சலுகைகள் அவர்களுக்கு கிடையாது. மேலும் நிரந்தரத் தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் ஊதியத்தில் ஒரு சிறிய பகுதியை தான் அவர்கள் பெற்றுக்கொள்கின்றனர். ” சராசரியாக, ஒரு என்.எல்.சி ஒப்பந்த ஊழியருக்கு மாதந்தோறும் 18,000 ரூபாய் (246 அமெரிக்க டாலர்) வழங்கப்படுகிறது, அதே நேரத்தில் ஒரு நிரந்தர தொழிலாளி மாதத்திற்கு 100,000 ரூபாய்க்கு (1370 அமெரிக்க டாலர்) மேல் சம்பாதிக்கிறார்.

மொத்த என்.எல்.சி பணியாளர்களில் பாதி பேராக இருக்கும் ஒப்பந்தத் தொழிலாளர்கள் பல நீட்டித்த ஆண்டு ஒப்பந்தங்கள் மற்றும் சிறந்த மருத்துவ சிகிச்சையை கோருகின்றனர், அவர் அதை விளக்கினார்: “பெரும் தொற்றுநோய் சமயத்தின் போது ஒன்று விட்டு ஒரு நாள் நிரந்தரத் தொழிலாளர்களுக்கு விடுமுறை வழங்கப்படுகிறது, ஆனால் ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு அது மறுக்கப்படுகிறது. COVID-19 பாதிப்பினால் கிட்டத்தட்ட நூற்றுக்கணக்கான என்.எல்.சி தொழிலாளர்கள் இறந்தனர், ஆனால் அவர்களின் நெருக்கமான உறவினர்களுக்கு உயிர் இழப்புக்கான எந்த இழப்பீடும் வழங்கப்படவில்லை. என்.எல்.சி ஒரு அதிக லாபம் ஈட்டும் நிறுவனம் மற்றும் அதன் மேலாளர்களுக்கு கற்பனை செய்து பார்க்க முடியாத அளவு சம்பளம் வழங்கப்படுகிறது. ”

வோல்வோ சாமானிய தொழிலாளர் குழு அமைப்பதற்கு ஆதரவாக ஜோதி பேசினார்: “இங்கேயும் கூட தொழிற்சங்கங்கள் தொழிலாளர்களின் நலன்களுக்காக செயல்படவில்லை. அவை நிச்சயமாக தொழிலாளர்களுக்காக அல்ல.

”கொல்கத்தாவில் உள்ள கல்யாணி பல்கலைக்கழக மாணவர் சோமக் பானர்ஜி கூறுகையில், “வோல்வோ தொழிலாளர்களின் இந்த வேலைநிறுத்தத்தை நான் ஆதரிக்கிறேன். COVID-19 பெரும் தொற்றுநோயின் பேரழிவு தாக்கத்தின் மத்தியிலும், தொழில்துறை துறைகள் முழுமையாக மீண்டும் திறக்கப்பட்டு, நிறுவனங்கள் பெரும் லாபம் ஈட்ட அதிக நேரம் வேலை செய்யும்படி தொழிலாளர்கள் உத்தரவிடப்பட்டனர். நிறுவனங்கள், அரசாங்க ஆதரவுடன், அவர்களது உரிமைகளையும் பறித்தெடுக்கின்றன. "

வோல்வோ நடவடிக்கையின் எடுத்துக்காட்டு இந்தியாவிலும் உலகெங்கிலும் உள்ள தொழிலாளர்களின் பரந்த போராட்டத்தை ஊக்குவிக்கும் என்று தான் நம்புவதாக பானர்ஜி கூறினார்: “இந்த பெரும் தொற்றுநோய் சமயத்தில் உலகளவில் மில்லியன் கணக்கான தொழிலாளர்கள் வேலைகள் மற்றும் உயிர்களை இழந்துள்ளனர், ஆனால் பெருமளவில் நிறுவனங்களும் அரசாங்கங்களும் எந்த இழப்பீடும் வழங்க மறுத்துவிட்டன … எனவே தங்களின் உரிமைகளுக்காக போராடும் இந்த தொழிலாளர்களுக்கு எனது வலுவான ஒற்றுமையை வழங்க விரும்புகிறேன்.”

Loading