மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்
தற்காலத்திற்கு கணிசமான தாக்கங்களைக் கொண்ட ஒரு அதிர்ச்சியூட்டும் திருப்புமுனையாக, விஞ்ஞானிகள் ஒரு கொரோனா வைரஸ் தொற்றுநோய் 25,000 ஆண்டுகளுக்கு முன்பு கிழக்கு ஆசியாவை அழித்ததாக காட்டியுள்ளனர். ஜூன் மாதத்தில் Current Biology இல் வெளியிடப்பட்ட ஆய்வு, 'கிழக்கு ஆசியாவில் 20,000 ஆண்டுகளுக்கு முன்னர் புரவலன் கொரோனா வைரஸ் தொடர்புடைய மரபணுக்களை உள்ளடக்கிய ஒரு பண்டைய வைரஸ் தொற்றுநோய்' என தலையங்கமிடப்பட்டுள்ளது.
அடிலெய்ட் பல்கலைக்கழக ஆஸ்திரேலிய பண்டைய மரபணு மையத்தைச் (Adelaide Australian Centre of Ancient DNA) சேர்ந்த யாசின் சொயில்மி, அமெரிக்காவை தளமாகக் கொண்ட விஞ்ஞானிகளுடன் இந்த ஆய்வுக் குழுவுக்கு தலைமை தாங்கினார். 191 மில்லியன் மக்களுக்கு தொற்றி மற்றும் 4.1 மில்லியனுக்கும் அதிகமான உயிர்களைக் கொன்ற தற்போது உலகத்தை அழிக்கின்ற SARS-CoV-2 ஐப் போன்ற ஒரு கொரோனா வைரஸ் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு மனிதகுலத்தை பாதித்தது என்று ஆய்வு எடுத்துக்காட்டுகிறது.
கிழக்கு ஆசிய மக்கள்தொகையில் 42 கொரோனா வைரஸுடன் தொடர்புகொண்ட புரதங்கள் (CoV-VIP கள்) சுமார் 900 தலைமுறைகளுக்கு முன்பு, அதாவது சுமார் 25,000 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு பண்டைய கொரோனா வைரஸுடன் தொடர்பு கொண்டன என்று ஆராய்ச்சியாளர்கள் வலுவான பரிந்துரையைக் கண்டறிந்தனர். கிழக்கு ஆசிய மக்களில் இந்த வடிவமானது தனித்துவமானது.
பண்டைய கொரோனா வைரஸ் மரபணு மாற்றங்கள் (credit: University of Adelaide)
விஞ்ஞானிகள் பண்டைய தொற்றுநோய் 5,000 ஆண்டுகளுக்கு முன்பு வரை நீடித்ததாக மதிப்பிட்டனர். ஒரு மரபணுவில் உள்ள பிறழ்வுகளின் எண்ணிக்கையைப் பார்த்து காலவரிசையை அவர்கள் தீர்மானித்தனர். பிறழ்வுகள் வழக்கமான விகிதத்தில் நிகழ்வதால் அவை காலவரிசையை தீர்மானிக்கப் பயன்படும்.
கொரோனா வைரஸ் என்பது நுரையீரலைத் தாக்கும் ஒரு காவி RNA வைரஸ் ஆகும். அதன் வெளிக்கோள அமைப்பு ஏராளமான புரத கூர்முனைகளால் சூழப்பட்டுள்ளது. இது வைரஸ் தன்னை மனித உயிர்க்கலன்களுடன் இணைத்துக்கொள்ள உதவுகிறது. கொரோனா வைரஸ்கள் தனித்துவமானவை. அவை ஒரு தாக்கும் கலத்தை ஆக்கிரமிப்பதன் மூலமும், மேலும் வைரஸை உருவாக்கும் பொருட்டு அதன் மரபணு கட்டமைப்பைக் கடத்திச் செல்வதன் மூலமும் இனப்பெருக்கம் செய்கின்றன. வைரஸ் தொற்று ஒரு உயிரினத்தின் மரபணு கட்டமைப்பில் தன் அடையாளங்களுக்கான அறிகுறிகளை விட்டுச்செல்கிறது.
உலகெங்கிலும் உள்ள 26 மக்கள் தொகைகளில் உள்ள 1000 மரபணு திட்ட தரவுத் தளத்தில் ஆயிரக்கணக்கான மரபணுக்களை விஞ்ஞானிகள் ஆய்வு செய்தனர். 2008 இல் நிறுவப்பட்ட 1000 மரபணு திட்டம், மனித மரபணு மாறுபாடுகளின் விரிவான சர்வதேச தரவுத் தளமாகும். சீனா, ஜப்பான் மற்றும் வியட்நாமில் முன்னர் அறியப்படாத பண்டைய கொரோனா வைரஸ் மக்கள் பாதிக்கப்பட்டதற்கான சான்றுகள் இந்த ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளன.
இந்த ஆய்வில் ஒத்துழைக்கும் விஞ்ஞானியான அரிசோனா பல்கலைக்கழக சுற்றுச்சூழல் மற்றும் பரிணாம உயிரியல் துறையின் டேவிட் எனார்ட், “மனிதர்களை எப்போதும் பாதிக்கும் வைரஸ்கள் உள்ளன. 'வைரஸ்கள் உண்மையில் மனித மரபணுக்களில் இயற்கை தேர்வின் முக்கிய இயக்கிகளில் ஒன்றாகும்.'
கொரோனா வைரஸுடன் தொடர்புள்ளதாக அவர்களால் அறியப்பட்ட பல நூறு மரபணுக்களை விஞ்ஞானிகள் ஆய்வு செய்தனர். கொரோனா வைரஸுடன் தொடர்புள்ளதாக பரிந்துரைக்கும் பிறழ்வுகளுடன் 42 மரபணுக்களைக் கொண்ட ஐந்து மக்கள் குழுக்களை அவர்கள் அடையாளம் கண்டனர். அவர்களில் மாற்றியமைக்கப்பட்ட மரபணுக்கள் வைரஸிலிருந்து ஒருவித பாதுகாப்பைக் கொடுத்திருக்கலாம்.
'எனவே பல தலைமுறைகளில் என்ன நடக்கிறது என்றால், பயனளிக்கும் மரபணு மாறுபாடுகள் குறைந்தகாலகட்டத்தில் அதிகரித்து, மேலும் இது பல தலைமுறைகளுக்கு பின்னர் மிகவும் தனித்துவமான அடையாளத்தை விட்டுச்செல்கிறது' என்று ஆஸ்திரேலிய ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்திற்கு (ABC) சொயில்மி கூறினார்.
இந்த மாற்றங்கள் மரபணுவில் பொதுவான அடையாளமாக வெளிவர 500 முதல் 1,000 ஆண்டுகள் ஆகும் என்று விஞ்ஞானிகள் கருதுகின்றனர். வைரஸ் RNA மற்றும் / அல்லது வைரஸ் DNA போன்ற வைரஸுடன் தொடர்புடைய வைரஸ் புரதங்களான வைரஸ் இன்டராக்டிவ் புரதங்களை (VIPs) சொயில்மியும் அவரது குழுவும் ஆய்வு செய்தனர். கொரோனா வைரஸ்கள் (CoV-VIPS) உடன் தொடர்புடையதாக அறியப்பட்ட 420 VIPs களை அவர்கள் குறிவைத்தனர்.
ஆய்வின்படி, “எங்கள் மனிதஇனத்தின் பரிணாம வரலாறு முழுவதும், நேர்மறையான இயற்கை தேர்வு பெரும்பாலும் வைரஸ்களுடன் உடல் ரீதியாக தொடர்பு கொள்ளும் புரதங்களை குறிவைக்கிறது…” VIPகள் முக்கியம், ஏனெனில் அவை குடியேறும் கலத்தை தாக்க வைரஸ் பயன்படுத்தும் மைய வழிமுறையாகும்.
'VIP கள் மீதான எங்கள் கவனம் இந்த புரத இடைத்தொடர்புகள் அவை குடியேறும் கலங்களின் இயங்குமுறையை கடத்த வைரஸ்கள் பயன்படுத்தும் மைய வழிமுறையாகும் என்பதைக் குறிக்கும் சான்றுகளால் தூண்டப்படுகிறது. … அதன்படி, VIP கள் மற்ற புரதங்களை விட வைரஸ்களில் செயல்பாட்டு தாக்கங்களை ஏற்படுத்த அதிக வாய்ப்புள்ளது” என்று ஆய்வு கூறியுள்ளது.
“இது ஒவ்வொரு குளிர்காலத்திலும் காய்ச்சல் போன்ற ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் அல்லது ஒவ்வொரு ஐந்து முதல் 10 வருடங்களுக்கு ஒருமுறை கடந்த 20 வருடங்களில் கண்ட சற்றே வித்தியாசமான வைரஸ்கள் SARS, MERS, மற்றும் SARS-CoV-2 போன்றவை விலங்குகளிடமிருந்து மனிதர்களிடம் குதித்தது என்று கூறமுடியாது. … ஒரே நேரத்தில் பல மரபணுக்களின் தழுவல் மற்றும் அதே விகிதத்தில் கொரோனா வைரஸ்களை மீண்டும் வெளிப்படுத்துதலை கடந்தகாலத்தை கொண்டே மட்டும் விளக்க முடியும்,” என்று சொயில்மி கூறினார்.
சில விஞ்ஞானிகள் தொற்றுநோய் வெளிப்படும் நேரத்தை மதிப்பிடுவதில் வேறுபாடுகளை வெளிப்படுத்தியுள்ளனர். ஆராய்ச்சியில் ஈடுபடாத லண்டன் பல்கலைக்கழக கல்லூரியின் பரிணாம மரபியலாளர் ஐடா ஆண்ட்ரஸ் கருத்துத் தெரிவிக்கையில்: “நேரம் என்பது ஒரு சிக்கலான விஷயம். … அது சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்போ அல்லது அதற்கு பின்னரோ நடந்ததா - இது தனிப்பட்ட முறையில் நாம் நம்பக்கூடிய ஒன்று அல்ல என்று நினைக்கிறேன்.”
கொரோனா வைரஸின் பரிணாம வரலாற்றைப் பற்றிய ஆழமான புரிதலின் ஒரு பகுதியாக இந்த ஆராய்ச்சி உள்ளது. விஞ்ஞானிகளால் உண்மையான வைரஸ்களை அடையாளம் காணமுடியவில்லை மற்றும் மனித மரபணு கட்டமைப்பில் வைரஸ்களின் தாக்கத்தின் மறைமுக வெளிப்பாட்டை மட்டுமே கண்டறிந்தாலும், அவற்றின் ஆராய்ச்சி இன்னும் பண்டைய வைரஸ்களின் இருப்பைக் குறிக்கிறது.
2013 இல் Journal of Virology இல் வெளியிடப்பட்ட “கொரோனா வைரஸ்களின் பண்டைய தோற்றத்திற்கான ஒரு விளக்கம்” என்ற தலைப்பில் ஒரு முக்கியமான ஆய்வு, கொரோனா வைரஸின் பரிணாமத்தைப் பற்றி விவாதிக்கிறது. வைரஸ் ஆல்பா, பீட்டா, டெல்டா மற்றும் காமா கொரோனா வைரஸ்கள் எனப்படும் நான்கு அடிப்படை குழுக்களில் உள்ளது. ஆல்பா மற்றும் பீட்டா குழுக்கள் பாலூட்டிகளைப் பாதிக்கின்றன, மற்றவை பறவைகளை பாதிக்கின்றன.
சான் டியாகோவின் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் நோயியல் துறையின் ஜோயல் ஓ. வெர்த்ஹெய்ம் தலைமையிலான ஆய்வுக் குழு, “கொரோனா வைரஸ் மரபுவழியியல் ஆயிரக்கணக்கான அல்லது மில்லியன் ஆண்டுகள் பரிணாம வளர்ச்சியின் சான்றுகளை” கண்டறிந்தது.
300 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் நிலக்கரிகாலகட்ட காலத்தில் பரிணாம வளர்ச்சியடைந்ததிலிருந்து கொரோனா வைரஸ்கள் பறவைகள் மற்றும் வெளவால்களைப் பாதிக்கின்றன என்று வெர்த்ஹெய்ம் ஊகிக்கிறார்.
ஒரு கொரோனா வைரஸ் வெடிப்பு ஏறக்குறைய 20,000 ஆண்டுகளாக நீடித்தது என்பது தற்போதைய தொற்றுநோய்க்கு மிக முக்கியமான தாக்கங்களைக் கொண்டுள்ளது. நவீன விஞ்ஞானம், வைரஸ்களைப் புரிந்துகொள்ளவும் எந்தவொரு தொற்றுநோயையும் கணிக்கவும் கட்டுப்படுத்தவும் மனிதகுலத்திற்கு இயலுமானதாகவுள்ளது. ஆனால் இந்த விஞ்ஞான அறிவு அரசியல் உயரடுக்கினரால் புறக்கணிக்கப்பட்டுள்ளது, ஏனெனில் அவர்கள் ஒரு சமூக நோய் எதிர்ப்பு சக்தி பெருக்கும் திட்டத்தை திணிக்கிறார்கள். இது வைரஸை கிட்டத்தட்ட தடையின்றி பெருக்க அனுமதித்தது. முக்கிய நிறுவனங்களின் இலாப நலன்களைப் பாதுகாக்க அரசாங்கங்கள் செயல்படுவதால் விஞ்ஞான அறிவு ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளது.
'இது எங்களை கவலையடையச் செய்ய வேண்டும் ... இப்போது என்ன நடக்கிறது என்பது தலைமுறைகள் மற்றும் தலைமுறைகளாக நடந்து கொண்டிருக்கக்கூடும்' என்று எனார்ட் நியூ ஜோர்க் டைம்ஸிடம் கூறினார்.
தொற்றுநோயின் மிகமுக்கிய அம்சங்களில் ஒன்று, சமூகத்தின் ஏழ்மையான அடுக்குகள் பொருத்தமற்றவிகிதத்தில் திட்டமிட்டமுறையில் வைரஸின் தாக்கதலுக்கு இலக்காகியுள்ளனர். அதே நேரத்தில் செல்வந்தர்கள் தங்களை எளிதில் தனிமைப்படுத்திக் கொள்ள முடிந்தது.
“SARS-CoV-2 தொற்றுநோயியல் பற்றிய ஆராய்ச்சி, சமூகப் பொருளாதாரம் (உதாரணமாக சுகாதாரப் பாதுகாப்பு, பரிசோதனை மற்றும் பணியில் தொற்றுக்கு இலக்காகுதல்), மக்கள்தொகை மற்றும் தனிப்பட்ட சுகாதார காரணிகள் அனைத்திலும் SARS-CoV-2 தொற்றுநோயில் முக்கிய பங்கு வகிக்கிறது” என்பதை ஆய்வு கண்டறிந்துள்ளது.
வூஹான் வைராஸ் ஆய்வகத்தில் இருந்து கோவிட்-19 ஐ ஏற்படுத்தும் வைரஸ் வேண்டுமென்றே அல்லது தற்செயலாக கசிந்ததன் விளைவாக தற்போதைய தொற்றுநோய் ஏற்பட்டதாக தற்போதைய சர்ச்சை குறித்து சொயில்மியும் அவரது குழுவும் கருத்து தெரிவிக்கவில்லை என்றாலும், அவர்களின் ஆராய்ச்சி வெளவால்களிலிருந்து மனிதருக்கு பண்டைய காலத்தில் தொற்றியது, கடந்த காலங்களிலும் தற்போதும் பல சந்தர்ப்பங்களில் நிகழ்ந்துள்ளது என்பதையும் மற்றும் பெரும்பாலும் தற்போதைய தொற்றுநோயின் தோற்றத்திற்கு காரணமாக இருக்கலாம் என்பதையும் எடுத்துக்காட்டுகின்றன.
வூஹான் ஆய்வக ஏமாற்று முதலில் ட்ரம்ப் நிர்வாகத்தின் தீவிர வலதுசாரி ஆதரவாளர்களால் முன்மொழியப்பட்டது. மேலும் இது அமெரிக்காவில் கொரோனா வைரஸுக்கு அரசாங்கத்தின் பேரழிவுகரமான பதிலில் இருந்து திசைதிருப்பவும், சீனாவிற்கு எதிரான வாஷிங்டனின் புவிசார் மூலோபாய நோக்கங்களை முன்னெடுப்பதற்காகவும் பின்னர் ஜனாதிபதி ஜோ பைடெனால் உயிர்த்தெழுப்பப்பட்டது.
ஆய்வின் ஒரு முக்கிய அம்சம் என்னவென்றால், பண்டைய தொற்றுநோய்க்கு விடையிறுக்கும் 42 மரபணுக்களை குறிவைத்து, கொரோனா வைரஸ் தொற்றுநோய்களுக்கு எவ்வாறு சிகிச்சையளிப்பது என்பது குறித்த எதிர்கால ஆய்வுக்கான துறைகளை இது காட்டுகிறது.
'வைரஸிற்கான நோயெதிர்ப்பு பிரதிபலிப்பை சரிசெய்வதற்கான மூலக்கூற்றியல் குமிழ்களை உண்மையில் சுட்டிக்காட்டுகிறது' என்று சொயில்மி கூறினார்.