மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்
கடந்த வாரம் முழுவதும், அமெரிக்க செய்தி ஊடகமும் பைடென் நிர்வாகமும் கோவிட்-19 வைரஸ் சீனாவின் வூஹான் நுண்கிருமியியல் ஆய்வகத்திலிருந்து வெளிப்பட்டது என்ற சதிக் கோட்பாட்டை சட்டபூர்வமாக்க முயன்றன.
2019 நவம்பரில் வூஹான் நுண்கிருமியியல் ஆய்வகத்தின் தொழிலாளர்கள் நோய்வாய்ப்பட்டதாக அமெரிக்க "அதிகாரிகள்" கூறியதாக வாதிட்ட மைக்கல் ஆர் கோர்டனின் ஒரு கட்டுரையை மே 23 இல் வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல் பிரசுரித்தது. இந்தக் கட்டுரை நடைமுறையளவில் ஒட்டுமொத்த அமெரிக்க செய்தி ஊடகமும் அந்த சதிக் கோட்பாடு "நம்பகமானதென" அறிவிக்க வழி வகுத்தது.
ஒரு கடினமான விசாரணைக்குப் பின்னர் அந்த சதிக் கோட்பாட்டை ஒருமித்து நிராகரித்த உலகெங்கிலுமான முன்னணி தொற்றுநோய் வல்லுனர்கள் அனைவரும் ஒரு பாரிய மூடிமறைப்பில் ஈடுபட்டுள்ளனர் என்பதே வூஹான் ஆய்வக சதிக் கோட்பாடு "நம்பகமானது" என்ற அந்த அறிக்கையின் இறுதி தீர்மானமாக உள்ளது.
ஈராக்கிய ஜனாதிபதி சதாம் ஹுசைன் அணு ஆயுதங்களை உருவாக்க "அலுமினிய குழாய்களை" வாங்க முற்பட்டதாக பொய்யுரைத்து 2002 இல் நியூ யோர்க் டைம்ஸில் மதிப்புக்கேடான ஒரு கட்டுரை எழுதிய ஆசிரியர் இதே கோர்டன் தான் என்ற உண்மையை ஜேர்னலோ அல்லது அதன் அறிக்கையை ஊக்குவிக்கும் வேறெந்த செய்தி நிறுவனமோ குறிப்பிடவில்லை.
ஜேர்னல் அறிக்கைக்கு விடையிறுத்து, வாஷிங்டன் போஸ்ட் அறிவிக்கையில், ஆய்வக கசிவு கோட்பாட்டை "நம்பகமானது" என்று அறிவித்ததுடன், "அந்த வைரஸின் இயற்கை மூலாதாரத்தைக் கண்டறிவதற்கான முயற்சிகள் தோல்வியடைந்து விட்டதாக" அப்பட்டமாக வலியுறுத்தியது.
இதற்கிடையே, பைடென் வெள்ளை மாளிகை, கோவிட்-19 மனிதரால் உருவாக்கப்பட்டிருக்கும் சாத்தியக்கூறு மீது ஒரு விசாரணை மேற்கொள்ளுமாறு அமெரிக்க உளவுத்துறை முகமைகளுக்கு உத்தரவிட்டது, அதேவேளையில் ஐக்கிய நாடுகள் சபையின் உலக சுகாதார அவையில் பேசிய சுகாதார மற்றும் மனித சேவைகள் செயலாளர் சேவியர் பெக்கர், நோயின் தோற்றுவாய்கள் குறித்து ஒரு "வெளிப்படையான" விசாரணை கோரினார்.
ஜனநாயகக் கட்சி பிரச்சாரத்துடன் சேர்ந்து, பத்திரிகையாளர் கிளென் கிரீன்வால்ட் மற்றும் ஜாகோபின் சஞ்சிகையில் பங்களிப்பு வழங்கும் Branko Marcetic உட்பட இடதுசாரி அரசியலுடன் தொடர்பு இருப்பதாகக் கூறும் பிரபலங்களும் "வூஹான் ஆய்வக" கோட்பாட்டை சட்டபூர்வமாக்க குதித்துள்ளனர்.
"வூஹான் ஆய்வக" பொய்யை ஊக்குவிப்பதற்கான அவர்களின் ஒருங்கிணைந்த பிரச்சாரத்துடன் சேர்ந்து, ஸ்தாபக செய்தி ஊடகங்களும் பைடென் நிர்வாகமும், பாசிசவாத மற்றும் அதிவலது அரசியலின் அருவருக்கத்தக்க திரைக்குப் பின்னால் எஞ்சியிருப்பதையும் பிரதான ஓட்டத்திற்குள் கொண்டு வருகின்றன.
அமெரிக்க தேசிய சுகாதார அமைப்புகள் நிதியுதவி பெறும் வூஹான் நுண்கிருமியியல் ஆய்வகத்தில் சீன இராணுவத்தின் ஆராய்ச்சி தான், இந்த கோவிட்-19 ஐ மரபணுரீதியில் வடிவமைத்து பின்னர் தற்செயலாகவோ அல்லது வேண்டுமென்றோ வெளியிட்டது என்பதாக "வூஹான் ஆய்வக" சதிக் கோட்பாட்டு ஆதரவாளர்கள் கூறுகின்றனர். “கொரோனா வைரஸ்களை உருவாக்க, அமெரிக்கா, சீன மக்கள் விடுதலை இராணுத்திற்கு நிதி வழங்கியது," என்று இது சம்பந்தமாக வரும் எண்ணற்ற விபரங்களில் ஒன்றாக, ரூபர்ட் முர்டோக்கின் ஆஸ்திரேலியன் பத்திரிகை அறிவித்தது.
இந்த சதி கோட்பாட்டின் ஆதரவாளர்கள், ஒவ்வாமை மற்றும் தொற்றுநோய்களுக்கான தேசிய நிறுவன இயக்குனர் அந்தோனி பௌசி மற்றும் முன்னணி நோய் நிபுணர்கள் —ஸ்கிரிப்ஸ் ஆராய்ச்சி பன்னாட்டு அமைப்பில் தொற்றுநோய் மரபணுவியல் துறை இயக்குனர் கிறிஸ்டியான் ஜி ஆண்டர்சன் மற்றும் Ecohealth Alliance இன் தலைவர் பீட்டர் தாஸ்ஜாக் உட்பட— பலரும் இந்த நோய் மனிதர்களால் உருவாக்கப்பட்டிருக்கலாம் என்ற கருத்தை மூடிமறைக்கவோ, அல்லது அதை உருவாக்குவதில் அவர்களே நேரடியாக ஈடுபட்டிருக்கலாம் என்றோ குற்றஞ்சாட்டுகின்றனர்.
ட்ரம்பின் அதிவலது ஆதரவாளர்களும் இந்த தாக்குதலில் இறங்கி உள்ளனர். #firefauci என்ற அடையாளத்தில் வலதுசாரி சித்தாந்தி ராண்ட் பௌல் "உங்களுக்கு கூறியிருந்தேன்,” என்று ட்வீட் செய்தார். பாசிச அமைப்பான Qanon இயக்கத்தின் ஓர் ஆதரவாளரும் காங்கிரஸ் சபை பெண் உறுப்பினருமான Marjorie Taylor Greene ட்வீட்டரில் பௌசிக்கு எதிராக "அவர் பதவியிலிருந்து நீக்கப்பட்ட வேண்டும்!” என்று சீறினார்.
பெப்ரவரி 2020 இல் அர்கான்சஸின் பாசிச செனட்டர் டோம் காட்டனின் வூஹான் ஆய்வக சொல்லாடலை ஊக்குவித்து எழுதிய வாஷிங்டன் போஸ்ட் அதை உத்தியோகபூர்வமாக "திருத்தம்" செய்யுமளவுக்கு அதிவலதை சட்டபூர்வமாக்கும் நடைமுறைகள் சென்றுள்ளன. “ஏற்கனவே தோண்டி எடுக்கப்பட்ட கொரோனா வைரஸ் சதிக் கோட்பாட்டை காட்டன் திரும்ப கூறுகிறார்,” என்று போஸ்டின் நிஜமான தலைப்பு குறிப்பிட்டது.
அந்த கட்டுரை காட்டனை "துல்லியமற்ற முறையில் வகைப்படுத்தி" இருந்தது என்று ஓர் அறிவிப்பை வெளியிட்டு, போஸ்ட் இன் பதிப்பாசிரியர்கள் கடந்த வாரம் அந்த கட்டுரையை "திருத்தினர்". “அப்போது போலவே இப்போதும், அந்த வைரஸின் தோற்றுவாய்கள் மீது எந்த தீர்மானமும் வரவில்லை என்பதால், ‘தோண்டி எடுக்கப்பட்டது’ என்ற வார்த்தையும் ‘சதிக் கோட்பாடு’ என்ற போஸ்டின் வார்த்தை பிரயோகமும் நீக்கப்படுகின்றன,” என்று அது குறிப்பிட்டது.
போஸ்ட் நேர்மையாக இருந்திருந்தால், பைடென் நிர்வாகம் மற்றும் ஜனநாயகக் கட்சியுடன் சேர்ந்து போஸ்ட் உம் உண்மையில் இப்போது தோண்டி எடுக்கப்பட்டுள்ள அந்த "சதிக் கோட்பாட்டை" ஊக்குவிக்கிறது என்று தான் குறிப்பிட்டிருக்கும்.
அச்சுஅசலான ஓர்வெல்லியன் பாணியில், நிகழ்கால நலன்களுக்குச் சேவையாற்ற கடந்த காலம் மறுதிருத்தத்தைச் செய்யப்பட வேண்டியுள்ளது. இந்த விஷயத்தில், போஸ்ட் மிகத் துல்லியமாக காட்டனிடம் மன்னிப்புக் கோரி, அவருடன் கூட்டணி அமைக்கிறது. பொலிஸ் வன்முறை சம்பந்தமான போராட்டங்களுக்கு எதிராக இராணுவத்தை நிலைநிறுத்த கிளர்ச்சி ஒடுக்கும் சட்டத்தைப் பயன்படுத்த வேண்டுமென ட்ரம்ப் நிர்வாகத்திற்கு அழைப்பு விடுத்து, இந்த ஆர்கன்சாஸ் செனட்டர் 2020 ஜூனில் நியூ யோர்க் டைம்ஸில் ஒரு துணை-தலையங்கம் எழுதியவராவார்.
"வூஹான் ஆய்வக" கோட்பாடு குறித்து எழுதப்பட்ட ஆயிரக்கணக்கான கட்டுரைகளில், கோவிட்-19 க்கும் வூஹான் நுண்கிருமியியல் ஆய்வகத்திற்கும் இடையே எந்த தொடர்பையும் சுட்டிக் காட்டுதவற்கு அங்கே நேரடியான ஒரேயொரு துண்டு ஆதாரமும் இல்லை. அந்த ஆய்வக ஆராய்ச்சியாளர்கள் நவம்பரில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக பெயர் வெளியிடாத அமெரிக்க அதிகாரிகள் கூறியதாக குறிப்பிடும் ஜேர்னலின் கோர்டன் கட்டுரை தான் மிகவும் உறுதியான "ஆதாரமாக" முன்வைக்கப்பட்டது.
ஆனால் இந்தாண்டு தொடக்கத்தில் அரசு வெளியுறவுத்துறை வெளியிட்ட வெளிப்படையான விபர அறிக்கையின்படி, குறிப்பிடப்படும் அந்த நோய்கள் "கோவிட்-19 மற்றும் பொதுவான பருவகால நோய்கள் இரண்டுடனும் ஒத்துப்போகும் அறிகுறிகளை" கொண்டிருந்தன. மேலும், ஜோர்டனின் கட்டுரை குறிப்பிட்டது போல, "அது [அதாவது, ஆதாரம்] ஒரு சர்வதேச பங்காளியால் வழங்கப்பட்டதாகவும், அது குறிப்பிடத்தக்கதாக இருக்கலாம் என்றாலும், இன்னும் கூடுதல் விசாரணையும் கூடுதல் உறுதிப்படுத்தலும் அவசியப்படுவதாகவும் ஒருவர் கூறினார்."
வேறு வார்த்தைகளில் கூறுவதானால், "வூஹான் ஆய்வக" கோட்பாட்டிற்கான ஒட்டுமொத்த ஆதாரமும் ஈராக் போரை ஊக்குவித்தவரின் வலியுறுத்தலின் அடிப்படையில் கொதித்துக் கொண்டிருக்கின்றன, சில பெயர் வெளியிடாத அதிகாரிகள், வூஹான் நுண்கிருமியியல் ஆய்வக பணியாளர்களுக்கு "பொருத்தமான… பொதுவான பருவகால நோய்" அறிகுறிகள் இருந்ததாக கூறும் அதேவேளையில், வேறு சில அதிகாரிகள், இவர்களும் பெயர் வெளியிடாதவர்கள், இந்த கூற்றைக் கேள்விக்குட்படுத்துகின்றனர்.
அமெரிக்க ஊடகங்கள் இந்த ஆதாரமற்ற கோட்பாட்டை ஊக்குவிப்பதை, அதை உந்தித் தள்ளும் சமூக பொருளாதார நலன்களின் அடிப்படையில் மட்டுமே விளக்க முடியும். உலக சோசலிச வலைத் தள சர்வதேச ஆசிரியர் குழு இவ்வார தொடக்கத்தில் அதன் அறிக்கையில் எழுதியது போல, இந்த பிரச்சாரம் ஒன்றோடொன்று தொடர்புடைய இரண்டு நோக்கங்களைக் கொண்டுள்ளது:
முதலாவதாக, பாரியளவில் மரணங்களுக்கு இட்டுச் சென்ற கொள்கைகளை நடைமுறைப்படுத்துவதில் அமெரிக்கா மற்றும் ஏனைய அரசாங்கங்களது நடவடிக்கைகளில் இருந்து கவனத்தைத் திசை திருப்புவதை அது நோக்கமாக கொண்டுள்ளது. இந்த தொற்றுநோயின் பெரும் அதிர்ச்சியில் இருந்து மக்கள் மீண்டு வரத் தொடங்கியுள்ள நிலையில், இவ்வளவு பேர் ஏன் இறந்தார்கள் என்ற விளக்கங்களுக்கான கோரிக்கைகளும், இதற்கு பொறுப்பானவர்களைக் கணக்கில் கொண்டு வரவேண்டும் என்ற கோரிக்கைகளும் முன்வரும்...
இரண்டாவதாக, சீனாவுடன் பொருளாதார மற்றும் சாத்தியமான இராணுவ மோதலுக்குத் தயாரிப்பு செய்யும் பைடென் நிர்வாகத்தின் மத்திய மூலோபாய நோக்கத்தை ஆதரிக்க, வூஹான் ஆய்வக பொய் தேசியவாத வெறுப்பை முடுக்கிவிட முனைகிறது.
இந்த பிரச்சாரத்தில் விஞ்ஞானிகள் நேரடி இலக்காக இருந்தாலும், அது தொற்றுநோயைக் கட்டுப்படுத்த தேவையான எல்லா விஞ்ஞானபூர்வ அடித்தள நடவடிக்கைகளையும் கைவிடுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. "சமூக நோயெதிர்ப்பு சக்தி பெருக்கும்" திட்டத்தை ஆதரிப்பவர்கள் —இந்த பெருந்தொற்றைக் கட்டுபாடின்றி பரவ அனுமதித்தவர்கள்— இந்த சதிக் கோட்பாட்டுக்கு முன்னணியில் வக்காலத்துவாங்குபவர்களாக உள்ளனர்.
உலகம் முழுவதும் கோவிட்-19 வேகமாக பரவி வரும் அதேவேளையில், புதிய வகைகளும் உருவாகி வருகின்றன.
கடந்த வாரம் ஆபிரிக்காவில் கோவிட்-19 நோயாளிகளில் எண்ணிக்கை 20 சதவீதம் உயர்ந்ததுடன், எட்டு நாடுகள் 30 சதவீதத்திற்கும் அதிகமான அதிகரிப்பைக் காட்டுகின்றன. அதிகளவு தடுப்பூசி போடப்பட்ட இங்கிலாந்தில், அதிகரித்து வரும் “டெல்டா வகை" என்றழைக்கப்படுவது நோயாளிகளின் எண்ணிக்கையை எரியூட்டுகிறது.
இந்த பெருந்தொற்று உலகளவில் மீண்டும் எழுச்சியுற்று வரும் நிலையில், ஆளும் வர்க்கங்களோ இலாபத்தை விட்டுக் கொடுத்து உயிர்களைக் காப்பாற்ற எந்த நடவடிக்கைகளும் எடுக்க முடியாதென வலியுறுத்துகின்றன. அவை "போர்க் குற்றத்திற்கு" நிகரான பாரிய உயிரிழப்புகளுக்கான பழியை சீனாவின் காலடியில் வைக்க வலியுறுத்துகிறார்கள். விஞ்ஞானம் மற்றும் விஞ்ஞானிகள் மீதான இந்த தாக்குதலானது, எண்ணற்ற உயிர்களை அச்சுறுத்தும் ஒரு கொள்கைக்கு எதிரான எல்லா எதிர்ப்பையும் அச்சுறுத்தி மவுனமாக்க நோக்கம் கொண்டுள்ளது.
ஆனால் ஆளும் வர்க்கத்தின் மனிதாபிமானமற்ற மற்றும் விஞ்ஞான-விரோத கொள்கைகளுக்கு, அதிகரித்தளவில் தனது சொந்த சமூக நலன்களைப் பாதுகாப்பதற்கான போராட்டத்தில் நுழைந்து வரும் தொழிலாள வர்க்கத்தில் பெரும் எதிர்ப்பை எதிர்கொள்கிறது. இந்த சமூக சக்திதான் விஞ்ஞானத்தை பாதுகாப்பதற்கும் மற்றும் கோவிட்-19 பரவுவதைத் தடுப்பதற்கு அவசியமான மருத்துவ நடவடிக்கைகளுக்கும் அடிப்படையை வழங்குகிறது. இதனால் தான் விஞ்ஞானத்தின் பாதுகாப்பும் கோவிட்-19 பெருந்தொற்றை முடிவு கட்டுவதற்குமான போராட்டமும் தொழிலாள வர்க்கத்தில் ஒரு சோசலிச இயக்கத்தைக் கட்டமைப்பதில் இருந்து பிரிக்க முடியாதவையாக உள்ளன.
மேலும் படிக்க
- பிரிட்டன் அரசாங்கத்தின் கோவிட்-19 விடையிறுப்பு "தவிர்த்திருக்கக்கூடிய பாதிப்பைப் பெருஞ்சுழலாக" உருவாக்கி விட்டதாக பிரிட்டிஷ் மருத்துவ இதழ் கூறுகிறது
- வூஹான் ஆய்வக சதிக் கோட்பாடு: அமெரிக்க முதலாளித்துவத்தின் "மிகப்பெரும் பொய்"
- அமெரிக்க நினைவு தினத்தில்: ஒவ்வொரு நாளும் 500 பேர் இறந்து கொண்டிருக்கையில், அமெரிக்க ஆளும் வர்க்கம் பெருந்தொற்று "முடிந்து விட்டதாக" அறிவிக்கிறது