பிரெஞ்சு நவபாசிச வேட்பாளர் லு பென் பிராங்கோ-ஜேர்மன் கூட்டணியை கண்டனம் செய்கிறார்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

ஜேர்மனிய சான்ஸ்லர் அங்கேலா மேர்க்கெல் வியாழக்கிழமை அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடெனுடன் பேச்சுவார்த்தைகளுக்காக வாஷிங்டனுக்கு விஜயம் செய்திருந்தார். கடந்த 150 ஆண்டுகளில் மூன்று இரத்தக்களரிப் போர்களை நடத்திய ஐரோப்பிய ஒன்றியத்தின் (EU) பிரதான சக்திகளான பேர்லினுக்கும் பாரிசுக்கும் இடையே குறிப்பாக பதட்டங்கள் வேகமாக அதிகரித்து வருகின்றன.

பாரிஸில், வலதுசாரி நாளேடான லு பிகாரோ வியாழக்கிழமை 'ஐரோப்பியர்கள் மத்தியில், வாஷிங்டன் பாரிஸை விட பேர்லினைத் தேர்வுசெய்கிறது' என்ற தலைப்பில் ஒரு கட்டுரையை வெளியிட்டது. 'பல மாதங்களாக, பாரிஸ் மற்றும் பேர்லினிலுள்ள இராஜதந்திர வட்டாரங்களில் முதல் இடத்தைப் பெறுவதற்காக ஒரு கண்ணுக்குத் தெரியாத செல்வாக்குப் போர் நடந்து கொண்டிருந்தது. ஒரு சவாலாகப் போகிறது என்பதை அறிந்த பிரான்ஸ், ஜோ பைடென் தனது முதல் இருதரப்பு ஐரோப்பிய கூட்டத்திற்கு, பிராங்கோ-ஜேர்மன் இரட்டையரை தேர்ந்தெடுப்பார் என்று சிறிது காலம் நம்பியது' என்று அது எழுதியது.

'ஐரோப்பாவில் அமெரிக்கர்களின் சிறந்த நட்பு நாடாக ஜேர்மனி கருதப்படுகிறது' என்று அந்த பத்திரிகை புலம்பியது. இந்த செப்டம்பரில் ஜேர்மனிய கூட்டாட்சித் தேர்தல்களுக்குப் பின்னர் மேர்க்கெல் வெளியேறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று குறிப்பிட்ட அது மேலும் கூறியது: 'ஜோ பைடென் கூறியது போல், சீனாவிற்கு எதிராக ஐரோப்பியர்களை அணிதிரட்ட விரும்பினால், அவர் முதலில் ஜேர்மனி மீது சாய்வார் என்பது தவிர்க்க முடியாதது, அதன் பொருளாதார எடை ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் பெய்ஜிங்கிற்கும் இடையிலான உறவில் மிக அதிகமாக உள்ளது. அவர் வெளியேறும் வழியில் இருந்தாலும், ஜேர்மனிய சான்ஸ்லர் பொருளாதார ரீதியாக ஐரோப்பாவின் முதலாளியாக இருக்கிறார்.'

கோவிட்-19 பெருந்தொற்று நோயால் உந்தப்பட்டு அதிகரித்துவரும் சர்வதேச நெருக்கடி மற்றும் சீனாவிற்கு எதிரான அமெரிக்க இராணுவ அச்சுறுத்தல் ஆகியவைகள் ஐரோப்பிய ஏகாதிபத்திய சக்திகளுக்கு இடையிலான வரலாற்று ரீதியாக வேரூன்றிய மோதல்களை தீவிரப்படுத்துகின்றன.

மரின் லு பென்

இந்த உண்மையின் அப்பட்டமான வெளிப்பாடு, நவபாசிச ஜனாதிபதி வேட்பாளர் மரின் லு பென் ஜேர்மனிக்கு எதிராக L’Opinion இதழில் வெளியிட்ட கடுமையான கருத்தாகும். மேர்க்கெலுடன் ஜனாதிபதி இமானுவல் மக்ரோனின் உறவுகளை அவர் கண்டனம் செய்தார், ஜேர்மனி ஒரு நாடு என்ற பெரிய அடையாளமே பிரான்சுடன் ஒத்துழைக்க முடியாததாக ஆக்குகிறது என்று முத்திரை குத்தினார். மாறாக, பாரிஸ் லண்டனுடன் ஒரு இராணுவக் கூட்டணியை வகுக்க வேண்டும் என்றும் இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் சீனாவிற்கு எதிராக வாஷிங்டனுடன் இணைந்து செயற்பட வேண்டும் என்றும் லு பென் வலியுறுத்தினார்.

'இறையாண்மை பிரச்சினைகளில் பாரிஸுக்கு பேர்லின் சரியான பங்காளி அல்ல,' என்று லு பென் எழுதினார்: அதாவது '2022 இல் தொடங்கி பிரான்ஸ் மற்றய எல்லைகளை நோக்கித்தான் திரும்ப வேண்டும் —முதலில் பிரிட்டன், இதேபோன்ற இராஜதந்திர மற்றும் அணுசக்தி அந்தஸ்தைக் கொண்டுள்ளது, பின்னர் அமெரிக்காவுடன் இந்தோ-பசிபிக் மற்றும் விண்வெளியில் உள்ள சவால்கள் குறித்து ஒரு ஒப்பந்தத்தை பேச்சுவார்த்தை நடத்துதல், பின்னர் இஸ்லாமிய பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் பொதுவான இலட்சியங்களை பாதுகாக்க உலகின் பல நட்பு நாடுகளை நோக்கி திரும்ப வேண்டும். இறுதியாக, அது தனது அதிகாரத்தை மீண்டும் பெறுவதற்கு தேவையான ஆற்றலைக் கண்டுபிடிக்க அதன் சொந்த வரலாறு மற்றும் தேசிய அடையாளத்தை நோக்கித் திரும்ப வேண்டும்.'

லு பென்னின் கருத்து அவரது 2017 ஜனாதிபதி தேர்தல் முயற்சியில் கருப்பொருள்களை உட்புகுத்தியது —இதில் பிரெக்ஸிட்டுக்கு அவரது ஆதரவு, ஐரோப்பிய ஒன்றியத்திற்கு அவரது எதிர்ப்பு, மற்றும் யூரோவை கைவிடுவதற்கான அவரது அழைப்புகள்— இருப்பினும் அவர் 2017 தேர்தல் பிரச்சாரத்தின் முடிவில் கைவிட்டார். இருப்பினும், இந்த நேரத்தில் அவரது தொனி மிகவும் ஆக்கிரோஷமாகவும் இராணுவ ரீதியாகவும் இருந்தது.

நவ பாசிச இதழான Valeurs actuelles (Current Values) ஆயிரக்கணக்கான பிரெஞ்சு சேமப்படை மற்றும் செயலூக்கமான கடமையிருக்கும் அதிகாரிகளின் ஆட்சிக் கவிழ்ப்பு சதி அச்சுறுத்தல்கள் இந்த வசந்த காலத்தில் வெளியிடப்பட்டதை அவர் பாராட்டிய பின்னர் லு பென்னின் கருத்துக்கள் வெளிவந்தன. அல்ஜீரியா மீது பிரெஞ்சு காலனித்துவ ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள முயன்று தோல்வியுற்ற 1961 அதிவலது அல்ஜியர்ஸ் ஆட்சிக் கவிழ்ப்பு சதி ஆண்டு நிறைவின் போது இத்தகைய முதல் அச்சுறுத்தல்கள் வெளியிடப்பட்டன. இந்த அச்சுறுத்தல்களுக்கு முன்னாள் தலைமை தளபதி ஜெனரல் பியர் டு வில்லியே போன்ற உயர் மட்ட அதிகாரிகளின் மறைமுக ஆதரவு உள்ளது, அவர் இப்போது பாஸ்டன் கன்சல்டிங் குழுவில் (Boston Consulting Group) பணியமர்த்தப்பட்டுள்ளார், அங்கு அவரது நடவடிக்கைகளுக்கு முக்கிய பிரெஞ்சு பெருநிறுவனங்களிடமிருந்து நூறாயிரக்கணக்கான யூரோக்களை பெறுகின்றார்.

மேலும், உண்மையில், 2022 க்குப் பின்னர் ஜேர்மனிக்கு பிரெஞ்சு கொள்கையில் ஒரு பெரிய மாற்றத்தை மேற்கொள்வதற்கான அவரது அச்சுறுத்தலில், லு பென் பிரெஞ்சு அதிகாரிப் படையின் முக்கிய பிரிவுகளின் சார்பாக பேசினார்.

ஜேர்மனியுடன் நெருக்கமான கூட்டணியை உருவாக்கும் மக்ரோனின் முயற்சி, முற்றிலும் மாயைகளை அடிப்படையாகக் கொண்டது என்று லு பென் அறிவித்தார். 'ஐரோப்பாவை ஒரு இராணுவ கூட்டணியாக கட்டமைக்க அமெரிக்காவிலிருந்து ஜேர்மனி தன்னை விடுவித்துக் கொள்ள முடியும் என்று முதலில் நம்புவது' என்று அவர் எழுதினார். இரண்டாவதாக, இராணுவ தளவாடங்கள் மீதான பிராங்கோ-ஜேர்மனிய தொழிற்துறை ஒத்துழைப்பின் சாத்தியக்கூறை நம்புவது, இதை பேர்லின் 'காட்டிக் கொடுத்துள்ளது' என்று லு பென் வலியுறுத்தினார். 'பாரிஸோ அல்லது பேர்லினோ கட்டமைக்கும் தளங்களில் (போர் விமானங்கள், போர் டாங்கிகள், கடல் ரோந்து விமானங்கள்) ஒரே மாதிரியாக விரும்பவில்லை' என்று அவர் வலியுறுத்தினார்.

மூன்றாவது மாயை, 'ஜேர்மனி எப்போதும் மாறமுடியும் என்று நம்புவதாகும்' என்று லு பென் எழுதினார். 'அரசியல் ரீதியாக, ஜேர்மனியின் அடையாளம் எந்த வகையான ஒத்துழைப்பிற்கும் ஒரு தடையாக உள்ளது' என்று அவர் அப்பட்டமாக அறிவித்தார்.

இத்தகைய திகைப்பூட்டும் பிரகடனங்கள் ஐரோப்பிய மற்றும் சர்வதேச தொழிலாள வர்க்கத்திற்கு ஒரு எச்சரிக்கையாகும். அடுத்த ஆண்டு தேர்தல்களில் லு பென்னின் சுதந்திரமான வாய்ப்புகளானது, அவர் இரண்டாவது சுற்றில் பரந்த அளவில் வெறுக்கப்படும் மக்ரோனை எதிர்கொண்டால் மிகவும் நல்லது என்ற அத்தகைய அறிக்கைகள் ஐரோப்பிய ஆளும் உயரடுக்கின் பரந்த பிரிவுகள் ஐரோப்பிய ஒன்றியத்தை ஒன்றாக வைத்திருப்பது கிட்டத்தட்ட சாத்தியமற்றது என்று உறுதியாக நம்புகின்றன என்பதை வெளிப்படுத்துகின்றன. பிரிட்டன் பிரெக்ஸிட்டுக்கு வாக்களித்து ஐந்து ஆண்டுகளுக்குப் பின்னர், முதலாளித்துவ ஐரோப்பாவின் சிதைவு துரிதப்படுத்தப்படுகிறது.

ஜேர்மனியுடன் பிரெஞ்சு ஒத்துழைப்பு சாத்தியமற்றது என்ற அவரது வலியுறுத்தலுக்கு ஆதரவாக லு பென் இரண்டு வாதங்களை முன்வைத்தார். முதலாவது ஐரோப்பிய முதலாளித்துவ சக்திகளுக்கு இடையே தீர்க்க முடியாத, வரலாற்று ரீதியாக வேரூன்றிய மோதல்களின் சுருக்கமான முடிவுகளாகும். இரண்டு உலகப் போர்களும் வெடிப்பதற்கு முன்னர் இருந்த விரோத பாரிஸ்-மாஸ்கோ கூட்டணிகள் குறித்த பேர்லினின் அச்சம் மற்றும் ஆபிரிக்காவில் முன்னாள் பிரெஞ்சு காலனித்துவ சாம்ராஜ்யத்தைச் சுற்றியுள்ள போட்டி ஆகியவை இதில் அடங்கும். இதன் பொருள் பேர்லின் கனரக டாங்கி படைகளை கட்டமைப்பதில் கவனம் செலுத்துகிறது, அதே நேரத்தில் பிரான்ஸ் ஆபிரிக்காவில் போர்களுக்கான சிறப்புப் படைகளுக்கு பயிற்சி அளிப்பதில் அதிக கவனம் செலுத்துகிறது என்று லு பென் குறிப்பிட்டார்.

அவர் எழுதினார், 'பேர்லின் எப்பொழுதுமே அதன் புவியியலின் அரசியலை ஏற்றுக்கொள்ளும்: ரஷ்யாவிற்கு எதிராக ஐரோப்பாவின் மையத்தை ஒன்றுகூட்டுகிறது, இது ஒரு நட்பு நாடு அல்லது ஒரு எதிரி என்ற முறையில், அதன் கணக்கீடுகளில் எப்போதும் உள்ளது. ... இராணுவ ரீதியாக, அதன் அட்லாண்டிக்வாத கருத்தாக்கங்கள், காலாவதியான கருத்துக்களை ஒப்புக் கொள்ள செய்து கிழக்கு நோக்கித் திரும்பின, கனமான கவசத்துடன், தகவமைத்துக் கொள்ளும் திறன் குறைவாக இருந்தது. ஆனால் பிரெஞ்சு இராணுவம், மிகவும் ஆக்கிரோஷமான, மிகவும் எதிர்வினை மற்றும் அதிக வளம் கொண்டது, தன்னாட்சியை அடிப்படையாகக் கொண்டது, இதனால் பல் ஆயுத அமைப்புமுறைகளைப் பயன்படுத்துகிறது.'

பிரெஞ்சு ஏகாதிபத்தியத்தின் அணு ஆயுதங்கள் மற்றும் ஆபிரிக்காவில் அதன் புதிய காலனித்துவ போர்கள் பற்றிய பேர்லினின் தயக்கங்கள் குறித்த புகாராக அவர் இரண்டாவது வாதத்தை வகுத்தார். எவ்வாறாயினும், உண்மையில் இது ஜேர்மன் தொழிலாள வர்க்கத்திற்கு எதிராக இயக்கப்பட்டது. ஜேர்மனியின் ஆளும் உயரடுக்கிற்கு மாறாக, அணு ஆயுதங்கள், நேட்டோ மற்றும் போர் ஆகியவற்றின் வளர்ச்சிக்கு ஜேர்மன் மக்களிடையே வலுவான எதிர்ப்பு இருப்பதாக லு பென் அறிவித்தார். இந்த எதிர்ப்பின் வேர்கள் நாஜி ஆட்சியின் பயங்கரமான அனுபவங்களில் உள்ளன.

அவர் எழுதினார், 'பேர்லின் அடிப்படையில் அணுவாயுத எதிர்ப்பு (அணு ஆயுதங்கள் அமெரிக்க கட்டுப்பாட்டில் இருக்கும்போது அதன் உயரடுக்கினரைத் தவிர), நடுநிலையாளர் (ஆனால் நேட்டோவின் கட்டளையை முரண்பாடாக ஏற்றுக்கொள்கிறது), மற்றும் அமைதிவாதி (இராணுவ நிலைநிறுத்தல்கள் மற்றும் ஆயுத ஏற்றுமதிகளைப் பொறுத்தவரை).'

பிரிட்டனுடன் கூட்டணி மற்றும் சீனாவிற்கு எதிரான அமெரிக்காவுடன் ஒத்துழைப்பு என்று அழைப்பு விடுத்தபோது, லு பென் தனது வாதங்களின் தாக்கங்களை விரிவாகக் குறிப்பிடவில்லை. எவ்வாறெனினும், பிரான்சுக்கும் ஜேர்மனிக்கும் இடையிலான 'எந்த வகையான ஒத்துழைப்பும்' சாத்தியமற்றது என்று அவரும் அவரது ஆதரவாளர்களும் நம்பினால், அவர்கள் போருக்குத் தயாராக வேண்டும் என்பதே தவிர்க்க முடியாத முடிவுவாகும்.

கோவிட்-19 பெருந்தொற்று நோயாலும் சீனாவை இலக்கு வைத்து அமெரிக்க போர் உந்துதலாலும் தூண்டப்பட்ட பொருளாதார, சமூக மற்றும் அரசியல் நெருக்கடிகள் ஒன்றாக சேர்ந்து ஐரோப்பிய முதலாளித்துவத்தின் தீர்க்கப்படாத அனைத்து பிரச்சினைகளையும் 20ம் நூற்றாண்டிலிருந்து புதுப்பித்து பேரழிவு என்ற ஆவியை எழுப்புகின்றன.

லு பென்னின் ஜேர்மனிய-விரோத சீற்றங்கள், சீனா, ரஷ்யா அல்லது அமெரிக்காவுடன் போரிடக்கூடிய ஒரு ஐரோப்பிய ஒன்றிய இராணுவத்தை கட்டமைக்க மக்ரோன் விடுத்த அழைப்பை விட பிரெஞ்சு தொழிலாளர்களுக்காக பேசவில்லை. எவ்வாறெனினும், நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு வலியுறுத்தியுள்ளபடி, தொழிலாள வர்க்கத்தில் ஒரு சர்வதேச சோசலிச போர் எதிர்ப்பு இயக்கத்தை கட்டியெழுப்ப வேண்டியதன் அவசியத்தை அவை அடிக்கோடிட்டுக் காட்டுகின்றன. 20ம் நூற்றாண்டின் இரண்டு உலகப் போர்களின் கசப்பான படிப்பினை என்னவென்றால், ஐரோப்பிய தொழிலாளர்களின் தன்னியல்பான ஒற்றுமை, முதலாளித்துவ போர் உந்துதலை நிறுத்த போதுமானதாக இல்லை.

ஐரோப்பிய ஒன்றியத்தை தூக்கியெறிந்து அதன் இடத்தில் ஐரோப்பிய ஐக்கிய சோசலிச அரசுகளை ஸ்தாபிக்கும் ஒரு நனவான புரட்சிகர போராட்டத்தின் மூலம் மட்டுமே ஐரோப்பிய தொழிலாள வர்க்கத்தை ஐக்கியப்படுத்த முடியும்.

Loading