மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்
புதன்கிழமை கருங்கடல் தீபகற்பமான கிரிமியா அருகே ரஷ்யா உரிமைகோரும் கடல்பகுதியில் ஒரு பிரிட்டிஷ் போர்க்கப்பல் நுழைந்தது. ரஷ்ய எல்லை ரோந்து படகு பல அபாய எச்சரிக்கை குண்டுகளை வீசியதுடன், ஒரு ரஷ்ய போர் ஜெட் விமானம் பிரிட்டனின் நடுத்தர போர்க்கப்பல் HMS Defender இன் பாதையில் குண்டுவீசியதாக மாஸ்கோ தெரிவித்தது. அதற்குப் பின்னர் கிரெம்ளின் அந்த சம்பவத்தின் காட்சிகளையும் வெளியிட்டுள்ளது. ரஷ்யத் தரப்பு சுட்டதையும் மற்றும் ஒரு குண்டு வீசியதையும் பிரிட்டிஷ் அரசாங்கம் மறுத்துள்ளதுடன், அந்த சம்பவம் பற்றி குறிப்பிட பெரிதாக ஒன்றுமில்லை என்று வலியுறுத்துகிறது.
ஆனால், பிரிட்டிஷ் தூதர் Deborah Bronnert ஐ வெளியுறவு அமைச்சகத்திற்கு வர உத்தரவிட்டு, பிரிட்டிஷ் இராணுவ அதிகாரிகளுக்கு ஓர் எதிர்ப்பு அறிவிப்பை கிரெம்ளின் வெளியிட்டது. மீண்டும் அத்தகைய நிகழ்வு நடந்தால், “நாங்கள் … இலக்கின் மீது குண்டுவீசுவோம்,” என்று ரஷ்ய துணை வெளியுறவு மந்திரி செர்ஜி ரியப்கோவ் எச்சரித்தார்.
கருங்கடலில் புதனன்று நடந்த மோதல் மிகப்பெரும் போர் அபாயத்தை உயர்த்திக் காட்டுவதுடன், அதுவொரு தீவிர எச்சரிக்கையாகும். கடந்த காலங்களில் இதுபோன்ற சம்பவங்கள் தான் போர்கள் வெடிப்பதற்கு வழிவகுத்துள்ளன.
கருங்கடலில் இந்த நெருக்கடியானது, 1991 இல் சோவியத் ஒன்றியம் ஸ்ராலினிசத்தால் கலைக்கப்பட்டதை தொடர்ந்து தசாப்த காலமாக அமெரிக்கா தலைமையில் ரஷ்யா மீதான சுற்றி வளைப்பின் விளைவாகும். 2014 இல் கியேவில் ரஷ்ய ஆதரவிலான விக்டொர் யானுகோவிச்சைப் பதவியிலிருந்து கவிழ்த்த ஓர் அதிவலது ஆட்சிக்கவிழ்ப்பு சதியை அமெரிக்காவும் ஐரோப்பிய ஒன்றியமும் ஆதரித்தபோது, அப்போதிருந்து ரஷ்ய எல்லைகளில் ஏகாதிபத்திய தலையீடுகளும் இராணுவக் கட்டமைப்பும் வேகமாக தீவிரப்படுத்தப்பட்டன. அந்த ஆட்சிக்கவிழ்ப்பு சதி கிழக்கு உக்ரேன் டோன்பாஸ் பகுதியில் தொடர்ச்சியான உள்நாட்டு போரையும், கிரிமியாவை ரஷ்யா இணைத்துக் கொள்வதையும் தூண்டியது.
பெப்ரவரியில், உக்ரேனிய அரசாங்கம் டோன்பாஸ் மற்றும் "கிரிமியாவை மீட்பதற்கான" திட்டங்களை அறிவித்தது, அது அப்பிராந்தியத்தில் ஒரு பெரிய இராணுவ நெருக்கடியைத் தூண்டியது. மே மாதம், பால்கன்கள் பகுதிகளிலும் மற்றும் கருங்கடல் பிராந்தியத்திலும் நேட்டோ Defender 2021 என்ற மிகப்பெரும் இராணுவ ஒத்திகை நடத்தியது, இதில் நேட்டோவில் உறுப்பு நாடுகளாக அல்லாத உக்ரேனும் ஜோர்ஜியாவும் உள்ளடங்கி இருந்தன.
இத்தகைய நிலைமைகளின் கீழ், பிரிட்டிஷ் கப்பலான HMS Defender இன் நடவடிக்கைகள் ஓர் ஆத்திரமூட்டும் இயல்பைக் கொண்டிருந்தது. இந்த கப்பல், ஜூன் 28 முதல் ஜூலை 10 வரை நடக்கவுள்ள Sea Breeze கடற்படை ஒத்திகைக்காக கருங்கடலில் நிறுத்தப்பட்டிருந்தது. அமெரிக்க மற்றும் உக்ரேனிய கடற்படை இணைந்து நடத்தும் இதில், பிரமாண்டமாக 32 நாடுகளைச் சேர்ந்த, 5,000 துருப்புக்கள், 32 கப்பல்கள், 40 போர் விமானங்கள் மற்றும் 18 சிறப்பு நடவடிக்கைகள் உள்ளடங்கும். கவனக்குறைவால் ஓர் இராணுவ மோதல் ஏற்படலாம் என எச்சரித்து, இந்த ஒத்திகையை இரத்து செய்யுமாறு கிரெம்ளின் அமெரிக்காவுக்கு அழைப்புவிடுத்துள்ளது.
புதன்கிழமை HMS Defender கப்பலில் உக்ரேனின் துணை பாதுகாப்பு அமைச்சர் மற்றும் பிரிட்டிஷ் பாதுகாப்பு தளவாடங்கள் கொள்முதல் துறை அமைச்சர் உட்பட மூத்த உக்ரேனிய மற்றும் பிரிட்டிஷ் அரசு அதிகாரிகள் இருந்தனர். அவர்கள் அன்றைய தினம் ஒரு மிகப்பெரிய இருதரப்பு கடற்படை ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர், இது உக்ரேனிய கடற்படைக்கும் மற்றும் கருங்கடலில் புதிய கடற்படை தளங்களை உருவாக்கவும் பிரிட்டனின் கணிசமான இராணுவ உதவியை வழங்குகிறது.
நெருக்கடியின் தீவிரத்தை உயர்த்திக் காட்டிய பழமைவாத கட்சியின் பிரிட்டிஷ் நாடாளுமன்ற உறுப்பினர் Tobias Ellwood பிரிட்டிஷ் வானொலியில் கூறுகையில், “இதுவொரு ஆபத்தான விளையாட்டு என்பதை நாம் அங்கீகரிக்க வேண்டும். Su-24 ரஷ்ய போர்விமானங்கள் கப்பல்களைச் சுற்றி வலம் வந்து கொண்டிருக்கின்றன, அங்கே தற்செயலான விபத்து ஏற்பட நிறைய வாய்ப்புள்ளது, தவறான புரிதல் உண்மையில் இயக்கத்தைத் தூண்டிவிட இட்டுச் செல்லும், அதற்கு முன்னர் இருக்கும் சிறிய அவகாசத்தில் யாராவது எச்சரிக்கை அழைப்பை எடுத்து விஷயங்களை அமைதிப்படுத்தலாம்,” என்றார். "ரஷ்ய துணை வெளியுறவுத்துறை அமைச்சர் அலெக்சாண்டர் க்ருஷ்கோ கூறினார், "எல்லா தரப்பும் ஜாக்கிரதையாக இருந்தாலும் கூட, இது வெடிப்பார்ந்த நிலைமையாகும், தற்செயலான சம்பவங்கள், ஒரு நிஜமான மோதலில் போய் முடியக்கூடிய சாத்தியக்கூறை, நிராகரித்து விட முடியாது,” என்றார்.
கோவிட்-19 தொற்றுநோய் தொடங்கியதில் இருந்து, புவிசார் அரசியல் பதட்டங்கள் கணிசமாக வளர்ந்துள்ளன. தொழிலாளர்களின் மிக அடிப்படை தேவைகளுக்கு "பணம் இல்லை" என்று கூறியும், தொற்றுநோயைத் தடுக்க எந்தவொரு தீவிரமான நடவடிக்கைகளையும் எடுக்க மறுத்தும் வந்துள்ள, முதலாளித்துவ அரசாங்கங்கள் 2020 இல் உலகளவிலான இராணுவச் செலவுகளை அதிர்ச்சியூட்டும் அளவுக்கு 2 ட்ரில்லியன் டாலருக்கு அதிகரித்துள்ளன.
குறிப்பாக அமெரிக்க ஏகாதிபத்தியம், வளர்ந்து வரும் வர்க்க பதட்டங்களை வெளிப்புறமாக திசை திருப்ப முயல்வதன் மூலம் இந்த பெருந்தொற்றுக்கு விடையிறுத்துள்ளது. பைடென் நிர்வாகம், அணுஆயுத போர்தளவாடங்களின் நவீனமயமாக்கலுக்கு 24.7 பில்லியன் டாலர் உட்பட, இந்தாண்டு முன்பில்லாதளவாக 753 பில்லியன் டாலர் இராணுவ வரவுசெலவுத் திட்டத்தை முன்மொழிந்துள்ளது. பிரிட்டன் அதன் அணு ஆயுத போர்தளவாடங்களை 40 சதவீதம் அதிகரித்து வருகிறது.
பைடென் நிர்வாகம் சீனாவுக்கு எதிரான போர் தயாரிப்புகளில் கவனம் செலுத்துவதற்காக மாஸ்கோவுடனான பதட்டங்களைத் தணிக்க முயற்சிக்கிறது என்பதற்கான அறிகுறிகள் இருந்தாலும், வெளியுறவுக் கொள்கை தொடர்பாக அமெரிக்க ஆளும் வர்க்கத்திற்குள் கடுமையான மோதல்கள் உள்ளன. ஏகாதிபத்திய சக்திகளுக்கு இடையிலும் மற்றும் நேட்டோவுக்குள்ளும் பதட்டங்கள் அதிகரித்து வருகின்றன. ஜேர்மனியின் அங்கேலா மேர்க்கெலும் மற்றும் பிரான்சின் இமானுவல் மக்ரோனும் ரஷ்யாவுடன் ஓர் ஐரோப்பிய ஒன்றிய கூட்டத்திற்கு முன்மொழிந்தமை ஐரோப்பிய ஒன்றியத்திற்குள் பெரும் மோதல்களைத் தூண்டியுள்ளது.
தனிநபர்களின் நோக்கங்களும், கூட்டணி மாற்றங்களும் மற்றும் தந்திரோபாய உத்திகளும் என்னவாக இருந்தாலும், போர் அபாயம் என்பது புறநிலைரீதியாக உலக முதலாளித்துவ அமைப்புமுறையில் வேரூன்றி உள்ளது. இரண்டாம் உலகப் போரின் தோற்றுவாய்களை விளக்கும் ஓர் உரையில், உலக சோசலிச வலைத்தள ஆசிரியர் குழு தலைவரும் அமெரிக்க சோசலிச சமத்துவக் கட்சியின் தலைவருமான டேவிட் நோர்த் பின்வருமாறு வலியுறுத்தினார்:
ஆளும் வர்க்கங்கள் போரை விரும்புவார்கள் என்பது அவசியமில்லை. ஆனால் அவர்களால் அதைத் தடுக்க முடியாது. இரண்டாம் உலகப் போருக்கு முன்னதாக ட்ரொட்ஸ்கி எழுதியது போல, முதலாளித்துவ ஆட்சிகள் கண்களை மூடிக்கொண்டு பேரழிவுக்குத் தள்ளப்படும். சந்தைகள், மூலப்பொருட்கள் மற்றும் மலிவு உழைப்பைப் பெறுவதற்கும், இடைவிடாத இலாபம் மற்றும் தனிநபர் செல்வ வளத்தைப் பின்தொடர்வதற்குமான முனைவும், ஏகாதிபத்தியம் மற்றும் முதலாளித்துவ தேசிய-அரசு அமைப்பின் பைத்தியக்காரத்தனமான தர்க்கமும், தவிர்க்கவியலாமல் போரின் திசையில் இட்டுச் செல்கிறது.
இந்த புதன்கிழமை சம்பவம், ஜூன் 22, 1941 இல் சோவியத் ஒன்றியம் மீதான நாஜி படையெடுப்பின் 80 ஆம் நிறைவாண்டுக்கு தினத்திற்கு ஒரு நாளுக்குப் பின்னர் நடந்தது. நாஜிக்களின் ஏகாதிபத்திய நிர்மூலமாக்கும் போர் குறைந்தது 27 மில்லியன் சோவியத் மக்களின் உயிர்களைப் பறித்தது, அவர்களில் 2 மில்லியன் சோவியத் யூதர்களும் மற்றும் 3 மில்லியனுக்கும் அதிகமான சோவியத் போர்க் கைதிகளும் உள்ளடங்கி இருந்ததாக மதிப்பிடப்பட்டது. ஆயினும், ஜேர்மனிய அரசியல்வாதிகளின் ஒரு சில சம்பிரதாயமான கருத்துக்களுக்கு அப்பாற்பட்டு, அந்த ஏகாதிபத்திய சக்திகள் மனித வரலாற்றின் அந்த இரத்தந்தோய்ந்த போர் தொடங்கியதன் நினைவுதினத்தைக் காதடைக்கும் மவுனத்துடன் எதிர்கொண்டன.
அந்த நினைவுதினத்தைக் குறித்து ஜேர்மனிய வாரயிதழ் Die Zeit இல்எழுதிய ஜனாதிபதி விளாடிமீர் புட்டின், முதலில் உக்ரேனில் 2014 ஏகாதிபத்திய ஆக்கிரமிப்பைக் கண்டனம் செய்த பின்னர், ஐரோப்பிய ஏகாதிபத்திய சக்திகளிடம் கூட்டுறவுக்கு முறையீடு செய்வதில் ஒருமுனைப்பட்டார். புட்டின் ஆட்சி, இரண்டாம் உலகப் போரில் ஜேர்மனிய ஏகாதிபத்தியம் சாதிக்கத் தவறியதை நிறைவு செய்து, 1991 இல் சோவியத் ஒன்றியத்தை அழித்து முதலாளித்துவத்தை மீட்டமைத்த ஸ்ராலினிச அதிகாரத்துவத்தின் வழிவந்ததாகும். தொழிலாள வர்க்கத்திற்குக் கடும் விரோதப் போக்கைக் கொண்ட அது, ஏகாதிபத்தியத்திற்கு அழைப்புவிடுப்பதையும் மற்றும் உள்நாட்டில் தேசியவாதத்தை ஊக்குவிப்பதையும் ஒருசேர சார்ந்துள்ளது.
ஏகாதிபத்திய போருக்கு எதிராக போரிடும் ஆற்றல் கொண்ட ஒரே சமூக சக்தி சர்வதேச தொழிலாள வர்க்கம் மட்டுமே ஆகும். ஏகாதிபத்தியத்தைப் போரை நோக்கி உந்தும் அதே புறநிலை முரண்பாடுகளால் அது புரட்சிகரப் போராட்டங்களுக்குள் உந்தப்படுகிறது. உலகெங்கிலும் பல தசாப்த கால சிக்கன நடவடிக்கைகள், போர் மற்றும் இந்த பெருந்தொற்றின் அனுபவம் ஆகியவற்றால் தீவிரப்படுத்தப்பட்டுள்ள தொழிலாளர்கள், திருப்பித் தாக்கத் தொடங்கி உள்ளார்கள். நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவைக் கட்டியெழுப்புவதன் மூலம் தொழிலாள வர்க்கத்தில் இந்தப் போராட்டங்களுக்கு ட்ரொட்ஸ்கிச அரசியல் தலைமையை ஸ்தாபிப்பதற்கு போராடுவதே இப்போதைய முக்கியமான பணியாகும்.