துருக்கிய ஜனாதிபதி எர்டோகன் நேட்டோ உச்சி மாநாட்டில் பைடெனை சந்திக்கிறார்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

துருக்கிய ஜனாதிபதி ரெசெப் தயிப் எர்டோகன் தனது அமெரிக்க சமதரப்பு ஜோ பைடெனை திங்களன்று பிரஸ்ஸல்ஸில் நடந்த நேட்டோ உச்சிமாநாட்டின் போது ஒரு மூடிய கதவுக்குள் சந்தித்தார். பைடென் பதவியேற்றதிலிருந்து இரு தலைவர்களும் இந்த முதல் நேருக்கு நேர் சந்திப்பில் ஒரு சாதகமான முகத்தை காட்டினர். எவ்வாறாயினும் பல குறிப்பிடத்தக்க மோதல்கள் தீர்க்கப்படாமல் உள்ளன.

பாலஸ்தீனியர்களுக்கு எதிரான இஸ்ரேலிய தாக்குதலுக்கு ஆதரவளித்ததற்காக எர்டோகன் பைடெனைத் தாக்கிய பின்னர், "ஜனாதிபதி எர்டோகனின் சமீபத்திய யூத-விரோத கருத்துக்களை" அமெரிக்க வெளியுறவுத்துறை கண்டனம் செய்த சில வாரங்களிலேயே இந்த சந்திப்பு நடந்தது. இஸ்ரேலை ஒரு "பயங்கரவாத நாடு" என்று அழைத்த எர்டோகன் "உங்கள் கைகளில் இரத்தத்துடன் வரலாற்றை எழுதுகிறீர்கள்" என்று பைடெனை குற்றம் சாட்டினார்.

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடென், துருக்கியின் ஜனாதிபதி ரெசெப் தயிப் எர்டோகனுடன் 2021 ஜூன் 14 திங்கட்கிழமை பிரஸ்ஸல்ஸில் நடந்த நேட்டோ உச்சி மாநாட்டில் ஒரு அமர்வின் போது பேசுகிறார். (AP Photo /Olivier Matthys, Pool)

கடந்த வாரம், அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் அந்தோனி பிளிங்கன், துருக்கி நேட்டோ நட்பு நாடு போல் செயல்படவில்லை மற்றும் ஆர்மீனியா-அஜர்பைஜான் போர், கிழக்கு மத்தியதரைக் கடல் மற்றும் லிபியா உள்ளிட்ட பிரச்சினைகள் குறித்து “சர்வதேச சட்டத்தை” மீறுவதாகக் கூறினார்.

வாஷிங்டன் போஸ்ட் பின்வருமாறு எழுதியது: “2016 ஆம் ஆண்டில் துணை ஜனாதிபதியாக இருந்தபோது அங்காராவுக்கு செய்த விஜயத்தின் போது, பைடென் துருக்கிய தலைவரை சந்தித்தபோது, அவருக்கு எதிராக ஆட்சி கவிழ்ப்பு முயற்சியை திட்டமிட அமெரிக்கா உதவியது என்ற எர்டோகனின் குற்றச்சாட்டுகளை மறுப்பதாக இருந்தது”.

எர்டோகனுடனான தனது முன்னைய சந்திப்பைப் பற்றி சுருக்கமாக மறுபரிசீலனை செய்த பைடென், “நாங்கள் ஒரு நேர்மறையான மற்றும் பயனுள்ள முறையில் சந்தித்தோம். அதில் பெரும்பகுதி இரண்டுபேருக்கும் இடையில் இடம்பெற்றது. பல சிக்கல்களை எவ்வாறு முன்னெடுப்பது என்பது குறித்து விரிவான விவாதங்களை நாங்கள் மேற்கொண்டோம்.” அவர் மேலும் கூறுகையில், “எங்கள் இரு நாடுகளுக்கும் பெரிய நிகழ்ச்சி நிரல்கள் உள்ளன. எங்கள் குழுக்கள் எங்கள் விவாதங்களைத் தொடரப் போகின்றன. துருக்கியும் அமெரிக்காவும் உண்மையான முன்னேற்றத்தை அடைவோம் என்று நான் நம்புகிறேன்” என்றார்.

ஆழ்ந்த பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்வது மற்றும் தொற்றுநோய்க்கு கொலைகார பிரதிபலிப்பை காட்டியதன் மூலம் அதிகரித்து வரும் சமூக கோபம், அத்துடன் தனது அரசாங்கத்திறகு குழிபறிப்பதற்கு முயலும் ஒரு தீவிர வலதுசாரி கும்பல் தொடர்பான குற்றச்சாட்டுகள் பற்றி எர்டோகன் கூட்டத்தில் ஒரு விரிவான அறிக்கையை வெளியிட்டார். அமெரிக்காவிற்கு எதிரான முந்தைய தேசியவாத தூற்றுதல்கள் இருந்தபோதிலும், அவர் நேட்டோ ஏகாதிபத்திய கூட்டணிக்கு தனது உறுதிப்பாட்டை அறிவித்தார். அவர் கூறினார், “நாங்கள் அமெரிக்காவுடனான எங்கள் ஒத்துழைப்பை அதிகரிக்கப் போகிறோம். எங்களிடையே தீர்க்கப்பட முடியாத எந்தவொரு பிரச்சினையும் இல்லை” என்றார்.

"அமெரிக்காவிற்கும் துருக்கிக்கும் இடையிலான ஒத்துழைப்பு பிராந்திய பாதுகாப்பிற்கு பங்களிக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்," என்று அவர் தொடர்ந்தார். உண்மையில், கடந்த 30 ஆண்டுகளில் மத்திய கிழக்கு மற்றும் வட ஆபிரிக்காவில் அமெரிக்கா தலைமையிலான ஏகாதிபத்திய போர்களால் உருவாக்கப்பட்ட “பிராந்திய பாதுகாப்பு” ஆப்கானிஸ்தான், ஈராக், சிரியா, லிபியா மற்றும் அதற்கு அப்பால் பேரழிவை ஏற்படுத்தியுள்ளது. இது மில்லியன் கணக்கானவர்களைக் கொன்று மற்றும் மில்லியன் கணக்கானவர்களை அழுக்குமிக்க முகாம்களில் அகதிகளாக சிக்கவைத்துள்ளது.

உச்சிமாநாட்டின் அறிக்கையில், நேட்டோ சக்திகள் "மில்லியன் கணக்கான சிரிய அகதிகளுக்கு இடமளித்ததற்காக எங்கள் கூட்டான துருக்கிக்கு எங்கள் பாராட்டுகளை மீண்டும் வலியுறுத்தும்" வாய்ப்பாக பயன்படுத்திக்கொண்டன. அமெரிக்கா மற்றும் நேட்டோவுடன் நெருக்கமான இராணுவ-மூலோபாய உறவுகளைப் பேணுகின்ற துருக்கிய ஆளும் வர்க்கம் ஏகாதிபத்திய கொள்ளைக்கு விருப்பத்துடன் உதவுகிறது.

அமெரிக்க-துருக்கிய ஒத்துழைப்புக்கு "ஒவ்வொரு துறையிலும் பரஸ்பர மரியாதை மற்றும் நலன்களின் அடிப்படையில்" வலுவான விருப்பம் உள்ளது" என்று எர்டோகன் கூறினார். இருப்பினும், வாஷிங்டனுக்கும் அங்காராவுக்கும் இடையிலான பெரிய இராஜதந்திர மோதல்களில் உறுதியான முன்னேற்றம் எதுவும் அறிவிக்கப்படவில்லை.

அதன் முதல்வரிசையில், சிரியாவில் குர்திஷ் தேசியவாத ஆயுதக்குழுக்களுக்கு அமெரிக்காவின் முக்கிய ஆதரவு அடங்கும். சிரியாவில் அமெரிக்க ஆதரவுடைய குர்திஷ் அரசை அதன் தேசிய நலன்களுக்கு பெரும் அச்சுறுத்தலாக அங்காரா பார்க்கின்றது. இது குறித்து எர்டோகன் சிரியாவில் உள்ள குர்திஷ் மக்கள் பாதுகாப்பு பிரிவின் (YPG) படைகளைக் குறிப்பிட்டு “எங்கள் கூட்டாளிகள் அந்த பயங்கரவாதிகளுக்கு தங்கள் ஆதரவைக் குறைப்பார்கள் என்பதே எங்கள் எதிர்பார்ப்பு” என்று கூறினார். துருக்கியில் ஒரு பயங்கரவாத அமைப்பாக தடைசெய்யப்பட்ட குர்திஸ்தான் தொழிலாளர் கட்சி (PKK) போலவே YPG யையும் அங்காரா கருதுகிறது.

Al-Monitor இன் கூற்றுப்படி, பைடென் நிர்வாகம் “ஏப்ரல் 2020 இல் டிரம்ப் நிர்வாகத்தால் வழங்கப்பட்ட பொருளாதாரத் தடை விலக்கலை Delta Crescent Energy என்ற அமெரிக்க எண்ணெய் நிறுவனத்திற்கு நீட்டிக்க வேண்டாம்” என்று முடிவு செய்தது. “வடகிழக்கு சிரியாவில் செயல்படுவதற்கான” அதன் தடை விலக்கல் ஏப்ரல் 30 அன்று காலாவதியானது.

இருப்பினும், சிரியா மீதான அமெரிக்க கொள்கையில் இது ஒரு பெரிய மாற்றத்தைக் குறிக்கவில்லை. குர்திஷ் படைகளின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதியில் நூற்றுக்கணக்கான அமெரிக்க படையினர்கள் உள்ளனர். கடந்த மாதம் தான், அமெரிக்க பதில் உதவி செயலாளர் ஜோயி ஹூட் வடகிழக்கு சிரியாவுக்கு சென்று YPG தலைமையிலான சிரிய ஜனநாயக படைகளின் (SDF) ஆயுதக்குழுக்களின் மூத்த அதிகாரிகளை சந்தித்தார்.

கடந்த வாரம், துருக்கிய பாதுகாப்பு மந்திரி ஹுலுசி அகர் இஸ்தான்புல்லில் நேட்டோ கடல்சார் பாதுகாப்பு மையத்தின் திறப்பு விழாவில் நேட்டோவுக்கு இதேபோன்ற YPG எதிர்ப்பு அழைப்புகளை விடுத்தார். இந்த முயற்சி குறிப்பாக அருகிலுள்ள கருங்கடலில் ரஷ்யாவை குறிவைக்கிறது. நமது தேசிய பாதுகாப்பு மற்றும் பிராந்திய ஸ்திரத்தன்மைக்கு அச்சுறுத்தலாக இருக்கும் வடக்கு சிரியாவில் உள்ள YPG/PKK மற்றும் டேஷ் [ISIS] பயங்கரவாத அமைப்புகளுக்கு எதிராக போராட துருக்கி தனது நட்பு நாடுகளுக்கு பலமுறை அழைப்பு விடுத்துள்ளது”என்று அவர் கூறினார்.

"மொத்த உள்நாட்டு உற்பத்தியில் கிட்டத்தட்ட 2 சதவிகித விகிதத்துடன் இராணுவ வரவு செலவுத் திட்டத்தில் அதிக பங்களிப்பு செய்யும் முதல் எட்டு நாடுகளில் துருக்கி உள்ளது" என்று பெருமையாகக் கூறும் அகர், வடக்கு சிரியாவில் "பாதுகாப்பான மண்டலம்" என்று அழைக்கப்படுவதைக் கட்டியெழுப்ப தனது அரசாங்கத்தின் வாய்ப்பை மீண்டும் கூறினார். அவர் "சிரியாவில் ஒரு பாதுகாப்பான மண்டலத்தை உருவாக்க வேண்டியதன் அவசியம் குறித்து எங்கள் நேட்டோ நட்பு நாடுகளுக்கு நாங்கள் மீண்டும் மீண்டும் கூறினோம்" என்றார்.

நேட்டோ அறிக்கை சிரியா தொடர்பாக 12 முறை குறிப்பிட்டு, “சிரியாவிலிருந்து ஏவுகணை அச்சுறுத்தலை கண்காணிக்கவும், மதிப்பீடு செய்யவும் திட்டங்களை அறிவித்தது. எந்தவொரு அச்சுறுத்தல்களுக்கும் எதிராக நேட்டோ பிரதேசத்தையும் எல்லைகளையும் பாதுகாப்பதற்கும் சிரியாவிலிருந்து வெளிப்படும் சவால்களை எதிர்கொள்வதற்கும் நாங்கள் உறுதியாக உள்ளோம்." என்றது.

அங்காரா அதன் தெற்கு எல்லையில் ஒரு குர்திஷ் பிரதேசம் கட்டப்படுவதைத் தடுப்பதில் கவனம் செலுத்துகின்ற அதே வேளையில், சிரிய ஜனாதிபதி பஷார் அல்-அசாத்துக்கு எதிரான ஆட்சி மாற்றத்திற்கான நேட்டோ போருக்கும் அது தொடர்ந்து ஆதரவளிக்கிறது. இந்த போரில் முக்கிய அமெரிக்க பினாமி சக்தியான அல்கொய்தாவை புத்துயிர்ப்பு கொடுப்பதற்கான ஒரு பிரச்சாரத்தை அமெரிக்க ஊடகங்கள் தொடங்கியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

பைடென்-எர்டோகன் சந்திப்பில் முன்னேற்றம் காணப்படாத மற்றைய முக்கிய விடயம், ரஷ்ய தயாரித்த S-400 மேம்பட்ட வான் பாதுகாப்பு அமைப்பை துருக்கி வாங்குவதாகும்." S-400பற்றிய விடயத்தில், நான் கடந்த காலத்தில் கூறியதைப் போலவே பைடெனிடம் கூறினேன்" என்று எர்டோகன் கூறினார்.

F-35 கூட்டு தாக்குதல் விமானத் திட்டத்தில் துருக்கியின் பங்களிப்பை வாஷிங்டன் இரத்து செய்து மற்றும் S-400களைப் பயன்படுத்துவது அமெரிக்க பாதுகாப்பினை பாதிப்பிற்குள்ளாக்கும் என்ற அடிப்படையில் துருக்கி பாதுகாப்பு தொழிற்துறை மீது கட்டுப்பாடுகளை விதித்தது. நேட்டோ உச்சிமாநாட்டிற்கு முன்னர், வெள்ளை மாளிகையின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சுல்லிவன், “S-400 திட்டம் குறித்து எங்கள் கொள்கை மாறவில்லை” என்றார்.

அமெரிக்கா மற்றும் பிற நேட்டோ படைகள் வெளியேறிய பின்னர் காபூல் சர்வதேச விமான நிலையத்தை பராமரிப்பது உட்பட ஆப்கானிஸ்தானில் துருக்கியின் இராணுவ இருப்பு மட்டுமே உடன்பாடு காணப்பட்ட ஒரேயொரு விடயமாகும். எர்டோகன், "ஆப்கானிஸ்தானில் ஒரு தொடர்ச்சியான துருக்கியின் இருப்புக்கு அமெரிக்க இராஜதந்திர, தளவாட மற்றும் நிதி உதவி முக்கியமானது" என்று கூறினார்.

திங்களன்று, நேட்டோ பொதுச்செயலாளர் ஜென்ஸ் ஸ்ரொல்டென்பேர்க் கூறுகையில், “அமெரிக்கா மற்றும் துருக்கி போன்ற சில நேட்டோ நாடுகளும் காபூலில் ஒரு சர்வதேச விமான நிலையத்தை எவ்வாறு நிலையாக வைத்திருப்பது என்பது குறித்து நேரடி உரையாடலில் ஈடுபட்டுள்ளன. நேட்டோ நட்பு நாடுகளுக்கும் முழு சர்வதேச சமூகத்திற்கும் இராஜதந்திர பிரசன்னம் மற்றும் உதவியைத் தொடர இது முக்கியமானது” என்றார்.

எவ்வாறாயினும், ஏகாதிபத்தியத்திற்கு சேவைசெய்யும் இந்த முயற்சியை தலிபான்கள் கண்டித்துள்ளனர். அதன் செய்தித் தொடர்பாளர்கள் ராய்ட்டர்ஸிடம் கூறியதாவது: "கடந்த 20 ஆண்டுகளில் துருக்கி நேட்டோ படைகளின் ஒரு பகுதியாக இருந்தது. எனவே, பிப்ரவரி 29, 2020 அன்று அமெரிக்காவுடன் நாங்கள் கையெழுத்திட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் அவர்கள் ஆப்கானிஸ்தானிலிருந்து விலக வேண்டும்."

உலக சோசலிச வலைத் தளம் விளக்கியது போல்: “ஆப்கானிஸ்தானில் இருந்து படைகளை திரும்பப் பெறுவது தொடர்பான பிளவுகளுக்கு அடிப்படையாக இருப்பது பயங்கரவாதம் குறித்த கவலைகளோ அல்லது பெண்களின் உரிமைகளோ அல்ல. அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு எரிசக்தி நிறைந்த மத்திய ஆசியாவில் ஒரு இறங்குமுனை மற்றும் சீனா, ஈரான் அல்லது ரஷ்யாவிற்கு எதிரான போர்களுக்கான ஒரு உந்துதளத்தை துவக்க வழங்க கூடிய ஒரு நாட்டில் புவிசார் மூலோபாய நலன்கள் ஆபத்தில் உள்ளன.”

துருக்கியினுள் அது எதிர்கொள்ளும் ஆழ்ந்த அரசியல் நெருக்கடியின் காரணமாக மட்டுமே அதன் நேட்டோ நட்பு நாடுகளுடன் சமரசம் செய்யும் எர்டோகனின் விருப்பத்தை அமெரிக்க பத்திரிகைகள் முன்வைத்தன.

"கொரோனா வைரஸ் தொற்று மற்றும் பொருளாதாரத்தை தவறாக நிர்வகித்தமை ஆகியவற்றிற்காகவும் உயரும் பணவீக்கம் மற்றும் வேலையின்மை மற்றும் கடன் நெருக்கடியை ஏற்படுத்தக்கூடிய ஆபத்தான பலவீனமான லிரா ஆகியவற்றால் அவர் இப்போது கடுமையான உள்நாட்டு நெருக்கடிகளை எதிர்கொள்கிறார்" என்று நியூ யோர்க் டைம்ஸ் ஞாயிற்றுக்கிழமை எழுதியது. "எனவே அவர் தனது அணுகுமுறையை பின்னோக்கி திருப்பியுள்ளார். மேலும், ரஷ்யாவால் வழங்க முடியாத, மேற்கு நாடுகளிடமிருந்து தனக்கு அவசியமாக தேவையான முதலீட்டைப் பெறலாம் என்ற நம்பிக்கையில் ஏற்கனவே பல விஷயங்களில் தனது நிலைப்பாடுகளை மென்மையாக்கியுள்ளார்".

எர்டோகனின் உள்நாட்டில் வளர்ந்து வரும் சிக்கல்கள் மற்றும் அதன் ஏகாதிபத்திய நட்பு நாடுகளுடன் மீண்டும் நெருங்கி வருவது உண்மையில் தொற்றுநோய் பற்றிய “சமூக நோய் எதிர்ப்பு சக்தி” கொள்கைகள் மற்றும் அமெரிக்கா, துருக்கி மற்றும் சர்வதேச அளவில் தொழிலாளர்கள் மத்தியில் வளர்ந்து வரும் பல தசாப்த கால யுத்தங்களில் மீதான தொழிலாள வர்க்க கோபத்திற்கான அவரின் பிரதிபலிப்பாகும்.

Loading