முன்னோக்கு

ஜி7 உச்சிமாநாடு சீனாவுக்கும் ரஷ்யாவுக்கும் எதிராக அச்சுறுத்தல்கள் விடுக்கிறது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

உலகின் செல்வந்த நாடுகளின் அரசாங்கங்கள் (அமெரிக்கா, பிரிட்டன், ஜேர்மனி, பிரான்ஸ், இத்தாலி, ஜப்பான் மற்றும் கனடா) ஞாயிற்றுக்கிழமை இங்கிலாந்தின் கார்ன்வாலில் நடைபெற்ற ஜி7 உச்சிமாநாட்டில் அவற்றின் மூன்று நாட்கள் விவாதங்களை நிறைவு செய்தன. "பன்முகத்தன்மையை" கையிலெடுத்திருந்த ஜி7 சக்திகள், அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடெனின் முன்னோடியான டொனால்ட் ட்ரம்பின் கீழ் ஜி7 க்குள் எழுந்திருந்த ஆழமான முரண்பாடுகளைக் குறைத்துக் காட்டின. இருப்பினும் உச்சிமாநாட்டு கூட்டறிக்கையில் சீனாவிற்கு எதிராக ஒரு போர் அச்சுறுத்தலுக்கு நிகரான ஒன்றில் அவற்றால் உடன்பட முடிந்தது.

வூஹான் ஆய்வக தத்துவ ஆத்திரமூட்டலை ஆதரித்த அந்த 25 பக்க உச்சிமாநாட்டு கூட்டறிக்கை, சீனா ஓர் ஆய்வகத்தில் கோவிட்-19 வைரஸை உற்பத்தி செய்து பின்னர் அது வெளிப்பட அனுமதித்ததை மறைக்க முயல்வதாக சூசகமாக குறிப்பிட்டது. அந்த ஆவணம் "[பெருந்தொற்று] வெடிப்புக்கான அறியப்படாத தோற்றுவாய் மீது விசாரணை செய்து, அறிக்கை வெளியிட்டு, விடையிறுக்க" அழைப்பு விடுத்தது. “கோவிட்-19 இன் தோற்றுவாய்கள் மீது சரியான நேரத்தில், வெளிப்படையான, வல்லுனர்கள் தலைமையிலான, விஞ்ஞானத்தை அடிப்படையாக கொண்ட, வல்லுனர்களின் அறிக்கை பரிந்துரைப்பது போல, சீனாவை உள்ளடக்கி, உலக சுகாதார அமைப்பு நடத்தும் இரண்டாம் கட்ட ஆய்வுக்கு நாங்கள் அழைப்பு விடுக்கிறோம்,” என்றது குறிப்பிட்டது.

உலக அரசாங்கங்கள் தொகுத்த மிதமான புள்ளிவிவரங்களின் அடிப்படையில், தொடர்ந்து கொண்டிருக்கும் இந்த கோவிட்-19 பெருந்தொற்றில் அண்மித்து 176 மில்லியன் பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், ஜி7 நாடுகளில் ஒரு மில்லியனுக்கும் அதிகமான உயிரிழப்புகளுடன் சேர்ந்து, இந்த பெருந்தொற்றால் கிட்டத்தட்ட 4 மில்லியன் பேர் உயிரிழந்துள்ளனர். ஆகவே சீனா "ஒளிவுமறைவின்றி முன்வர வேண்டும்" என்ற கோரிக்கை மட்டுமே கூட சீனாவுக்கு எதிரான ஆக்ரோஷத்திற்கு ஒரு சாக்குபோக்கை வழங்கி விடலாம். ஆனால் விசயங்கள் அத்துடன் நின்றுவிடவில்லை.

அந்த அறிக்கையின் 49 ஆம் புள்ளி ஏகாதிபத்திய சக்திகளுக்கும் பெய்ஜிங்கிற்கும் இடையே வர்த்தகப் போரைச் சுட்டிக் காட்டுகிறது. "விதிகள் அடிப்படையிலான சர்வதேச முறைகளையும் மற்றும் சர்வதேச சட்டத்தையும் நிலைநிறுத்துவதில் மிகப்பெரிய நாடுகள் மற்றும் பொருளாதாரங்களின் குறிப்பிட்ட பொறுப்பை" வலியுறுத்தும் அது, "சீனாவைப் பொறுத்த வரை... உலகப் பொருளாதாரத்தின் நியாயமான மற்றும் வெளிப்படையான செயல்பாட்டை கீழறுக்கும் சந்தை-சாரா கொள்கைகள் மற்றும் நடைமுறைகளை சவால் விடுக்க நாம் கூட்டு அணுகுமுறைகள் குறித்து தொடர்ந்து ஆலோசிக்க வேண்டும்,” என்று குறிப்பிடுகிறது.

"குறிப்பாக ஜின்ஜியாங் சம்பந்தமாக மனித உரிமைகள் சம்பந்தமாக மற்றும் சீன-பிரிட்டிஷ் கூட்டுப் பிரகடனம் மற்றும் அடிப்படைச் சட்டத்தில் பொதியப்பட்டுள்ள சுதந்திரங்கள் மற்றும் உயர் அளவிலான சுயாட்சியை ஹாங்காங்கிற்கு வழங்குவது சம்பந்தமாக, அவற்றை மதிக்குமாறு சீனாவுக்கு அழைப்பு விடுப்பது உள்ளடங்கலாக, நாம் நம் மதிப்புகளை முன்னெடுப்போம்,” என்ற அச்சுறுத்தலுடன் அது நிறைவடைகிறது.

சீனாவின் வீகர் மக்களது தாயகமாக விளங்கும் ஜின்ஜியாங், மனித உரிமைமீறல் துஷ்பிரயோக குற்றச்சாட்டுக்களைச் சுமத்த வாஷிங்டன் மற்றும் பிற தலைநகரங்களுக்கு முக்கிய குவிமையமாக உள்ளது.

அதன் வீட்டு வாசலிலேயே இராணுவரீதியாக சீனாவை எதிர் கொள்வதற்கான ஏகாதிபத்திய சக்திகளின் அபிலாஷைகளைப் புள்ளி 60 அறிவிக்கிறது: "ஒரு சுதந்திரமான மற்றும் திறந்த இந்தோ பசிபிக்கை பராமரிப்பதன் முக்கியத்துவத்தை நாங்கள் மீண்டும் வலியுறுத்துகிறோம், அது அனைவருக்குமானது மற்றும் சட்டத்தின் விதியை அடிப்படையாக கொண்டது. தைவான் ஜலசந்தி நெடுகிலும் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையின் முக்கியத்துவத்தை நாங்கள் அடிக்கோடிடுகிறோம், அந்த ஜலசந்தி சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் மீது சமாதான தீர்வு காண ஊக்குவிக்கிறோம். நாங்கள் கிழக்கு மற்றும் தென் சீனக் கடல்களின் நிலைமை குறித்தும் தீவிரமாக கவலை கொண்டுள்ளோம், தற்போதைய நிலையை மாற்றுவதற்கும் மற்றும் பதட்டங்களை அதிகரிப்பதற்கும் நடத்தப்படும் எந்தவொரு ஒருதலைப்பட்ச முயற்சிகளையும் கடுமையாக எதிர்க்கிறோம்," என்றது குறிப்பிட்டது.

உலக கடல்வழிகளில் சீனா அதன் மேலாதிக்கத்தை வலுப்படுத்துவதற்கான அதன் "ஒருதலைப்பட்சமான" நகர்வுகள் என்று கூறப்படுவதன் மீது இத்தகைய "கவலை" அறிக்கைகளின் இராணுவவாத உட்குறிப்பு, அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடென் மற்றும் பிரிட்டன் பிரதம மந்திரி போரிஸ் ஜோன்சனால் பிரிட்டனின் 3 பில்லியன் பவுண்டு மதிப்பிலான புதிய விமாந்தாங்கி போர்க்கப்பல்களில் ஒன்று, HMS Prince of Wales, அவற்றுக்குப் பின்னால் பார்க்கும் தொலைவில் ஏனைய போர்க்கப்பல்களும் கார்னிஷ் கடற்கரையில் நிறுத்தப்பட்டிருப்பதன் மூலமாக சிறந்த முறையில் எடுத்துக்காட்டப்பட்டது. பிரிட்டனின் மற்றொரு விமானந்தாங்கி போர்க்கப்பல், HMS Queen Elisabeth, அதிரடி போர்க்கப்பல் குழுவின் முன்னணி கப்பலாகும், இது இராணுவ பயிற்சிகளில் பங்கெடுப்பதற்காக தென் சீனக் கடல் நோக்கி சென்று கொண்டிருக்கிறது.

இவற்றுடன் சேர்ந்து, அமெரிக்க தலைமையிலான மீண்டும் சிறந்த உலகை உருவாக்குவோம் (Build Back Better World – B3W) அபிவிருத்தி திட்டத்தைத் தொடங்குவதன் மூலமாக, வர்த்தகத்திற்கு அனுகூலமாக எண்ணற்ற உலகளாவிய உள்கட்டமைப்பு திட்டங்களை மேற்கொண்டு வரும் சீனாவின் ஒரே பாதை ஒரே இணைப்பு (OBOR) திட்டத்தை எதிர்கொள்ளவும் ஜி7 சூளுரைத்தது. ரஷ்யாவும் விரோதங்களின் இலக்கில் இருந்தது. புள்ளி 51 குறிப்பிடுகிறது: "ஏனைய நாடுகளின் ஜனநாயக அமைப்புகளில் அதன் தலையீடு உட்பட, ஸ்திரமின்மைப்படுத்தும் அதன் நடத்தையையும் தீங்கு விளைவிக்கும் நடவடிக்கைகளையும் நிறுத்துமாறு ரஷ்யாவுக்கான எங்கள் அழைப்பை நாங்கள் மீண்டும் திடமாக வலியுறுத்துகிறோம்.” "உக்ரேனின் கிழக்கு எல்லையிலும் கிரிமிய தீபகற்பத்திலும் இராணுவ துருப்புக்கள் மற்றும் இராணுவத் தளவாடங்களை" திரும்பப் பெற ரஷ்யாவுக்கு அது அழைப்பு விடுக்கிறது. கிழக்கு உக்ரேனிய மோதலில் ரஷ்யா ஒரு மத்தியஸ்தர் அல்ல, மாறாக பங்குதாரராக உள்ளது என்ற கண்ணோட்டத்தில் நாங்கள் உறுதியாக உள்ளோம்."

பைடென் அந்த உச்சிமாநாட்டிற்கு அமெரிக்கா திரும்ப வந்துவிட்டது என்ற அறிவிப்புடன் வந்தார். இது போர் அபாயம் தீவிரமடையும் என்பதையே உலக மக்களுக்கு அர்த்தப்படுத்துகிறது. RAF மில்டென்ஹாலில் நிறுத்தப்பட்டுள்ள அமெரிக்க துருப்புக்களுக்கு பைடென் கூறுகையில், அதன் படைகளைத் "தயார் செய்து ஆயுதங்களுடன் பலப்படுத்துவதே" அமெரிக்காவின் "ஒரே உண்மையான புனிதக் கடமை" என்றார். பைடென் நிர்வாகம் வரவிருக்கும் ஆண்டிற்கான அதன் வரவு-செலவு திட்டக்கணக்கை கடந்த மாதம் வெளியிட்டது, அது 24.7 பில்லியன் டாலர் அணுஆயுத நவீனமயமாக்கல் உட்பட 753 பில்லியன் டாலர் மிக அதிக இராணுவ வரவு-செலவு திட்ட கணக்கை மையத்தில் கொண்டிருந்தது.

ஜேர்மனி, பிரான்ஸ் மற்றும் பிரிட்டன் மூன்றும் இராணுவ செலவினங்களை அதிகரித்துள்ளன, ஜோன்சன் அரசாங்கம் அதன் அணுஆயுத போர்க்கருவிகளின் கிடங்கிற்காக பாரியளவில் 40 சதவிகிதம் அதிகரித்துள்ளது.

தீவிரமடைந்து வரும் இந்த பெருந்தொற்றைத் கடுமையாக எதிர்த்து போராடுவதற்காக எதையும் செய்ய அந்த உச்சிமாநாடு தீர்மானமாக மறுத்ததன் மூலம் பல ட்ரில்லியன் டாலர் போர் முனைவின் துர்நாற்றத்தை அப்பட்டமாக வெளிப்படுத்தியது. அந்த வைரஸ் சீன ஆய்வகத்தில் தோன்றியது என்ற பொய்யைப் பரபரப்பாக பரப்பும் அதேவேளையில், ஜி7 அரசாங்கங்கள், உலகின் ஆதாரவளங்களை தன்னலக்குழுக்கள் மற்றும் பன்னாட்டு பெருநிறுவனங்களின் வங்கி கணக்குகளுக்குள் பாய்ச்சும் நிலையில், கோவிட்-19 இன் இன்னும் அதிக உயிராபத்தான வகைகளைத் தங்குதடையின்றி பரவ தொடர்ந்து அனுமதிக்க உத்தேசித்துள்ளன.

உலக மக்களுக்கு தடுப்பூசி போடுவதற்கான செலவு வெறும் 66 பில்லியன் டாலராக மதிப்பிடப்பட்டுள்ளது, ஆனால் உலகின் இந்த பணக்கார நாடுகள் பங்களிக்காது. இந்த ஜி7 நாடுகள் தேவைப்படும் தடுப்பூசிகளில் மிகச் சிறிதளவே இலவசமாக வழங்க உடன்படும்—ஒரு பில்லியன் தடுப்பூசிகள் வழங்கப்படும், ஆனால் இதில் பெரும்பான்மை 2022 இறுதி வரையில் கிடைக்காது, அதை செய்யவும் மிகக் குறைவான உள்கட்டமைப்பே நடைமுறையில் உள்ளது. இது இந்த பெருந்தொற்றை எதிர்த்துப் போராட உலகளவில் அவசரமாக தேவைப்படும் 11 பில்லியனில் 10 சதவீதத்திற்கும் குறைவாகும். இந்த தலைப்பின் உறுதிமொழியே கூட ஒரு பொய்யாக உள்ளது. உலகளாவிய தடுப்பூசி திட்டமான COVAX க்கு அமெரிக்கா உறுதியளித்திருந்த 2 பில்லியன் தடுப்பூசிகளுக்குப் பதிலாக அது வெறும் 500 மில்லியன் Pfizer மற்றும் BioNTech SE தடுப்பூசிகளை இலவசமாக வழங்குகிறது, மேலும் அமெரிக்காவின் மொத்த நிதியுதவி தொகை வெறும் 5.5 பில்லியன் டாலர் தான்—இது அதன் இராணுவ வரவு-செலவு திட்டத்தில் ஒரு சதவீதத்திற்கும் குறைவாகும்.

பிரதான பெருநிறுவனங்களின் இலாப குவிப்பிற்கு குறுக்கே எதுவும் வந்துவிடக்கூடாது. இந்த பெருந்தொற்றின் போது தங்களைப் பெருந்தீனியாக்கி கொண்ட செல்வந்தர்கள் மீது மக்களிடையே அதிகரித்து வரும் பெரும் வெறுப்பை முகங்கொடுத்திருப்பதால், ஜி7 எந்தவித கால வரம்பும் குறிப்பிடாமல் பெருநிறுவனங்கள் மீது "உலகளாவிய குறைந்தப்பட்ச வரிவிதிப்பு இலக்கை" ஸ்தாபிக்க ஓர் அர்த்தமற்ற உறுதிமொழி வழங்கியது. ஆனால் இது "ஒவ்வொரு நாட்டில் அடிப்படையில் 15 சதவீதத்திற்கும்" குறைவாகவே இருக்கும் என்று அந்த கூட்டறிக்கை சம்பந்தப்பட்ட அனைவருக்கும் மறுஉத்தரவாதம் வழங்கியது.

டொனால்ட் ட்ரம்ப் பதவி காலத்தின் போது பிரதான சக்திகளுக்கு இடையே முரண்பட்டிருந்த உறவுகள் மீண்டும் பழைய வழமைக்குத் திரும்பி இருப்பதாக அந்த உச்சிமாநாடு முன்னறிவிக்கப்பட்டது, ஆனால் பிரெக்ஸிட் க்குப் பிந்தைய வர்த்தக ஏற்பாடுகள் சம்பந்தமாக பிரிட்டனுக்கும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் இடையிலான பதட்டங்கள் உட்பட அசாதாரணமான அளவுக்கு அதிகரித்து வரும் ஏகாதிபத்தியங்களுக்கு இடையிலான பதட்டங்கள் மேலோங்கி இருந்தன.

உச்சிமாநாட்டின் முடிவில், பைடென் சற்று கண்டிப்புடன் அவரது போட்டியாளர்களை வழிக்கு கொண்டு வர முயற்சித்த போதிலும், ட்ரம்ப் வெளியேறியமை அமெரிக்க-ஐரோப்பிய உறவுகளையோ அல்லது அமெரிக்காவில் ஆழமான உள்நாட்டு அரசியல் நெருக்கடியையோ சரி செய்துவிடவில்லை என்று விமர்சகர்கள் வலியுறுத்தினர். அமெரிக்காவின் உள்நாட்டு நெருக்கடியானது, ஜனவரி 6 இல் அமெரிக்க தலைமை செயலகத்தைக் கைப்பற்றவும் மற்றும் பைடெனின் தேர்தல் வெற்றிக்கு அங்கீகாரம் வழங்குவதை முடக்கவும் ட்ரம்பால் முயற்சிக்கப்பட்ட ஓர் ஆட்சிக் கவிழ்ப்பு சதியைக் கண்டது.

பைடென் அடுத்த 2024 தேர்தலில் போட்டியிட்டால் அவருக்கு 82 வயதாகி இருக்கும், அவரின் அரசியல் வாழ்வு வேகமாக முடிவுக்கு வந்து கொண்டிருக்கிறது என்பதை பலர் குறிப்பிட்டனர். வாஷிங்டனுக்கான முன்னாள் ஐரோப்பிய ஒன்றிய தூதர் டேவிட் ஓ'சுல்லிவன் வினவினார், "இது ட்ரம்ப் 1.0 மற்றும் ட்ரம்ப் 2.0 இடையிலான ஓர் இடைப்பட்ட காலமா? யாருக்குத் தெரியும். … [ஜி7] உறவைப் பலப்படுத்த இந்த நிர்வாகத்துடனான சந்தர்ப்பத்தைக் கைப்பற்றிக் கொள்ள வேண்டும் என்று பலர் நினைத்ததுடன், அது இடைக்காலத்திற்கும் மற்றும் 2024 க்குப் பின்னரும் உயிர் வாழும் என்றும் நம்புகின்றனர்,” என்றார்.

வளர்ந்து வரும் போர் ஆபத்தையும், இந்த பெருந்தொற்று அபாயத்தையும் மற்றும் மனிதகுலம் எதிர்கொள்ளும் பெருகிவரும் சமூக பேரழிவையும் எவ்வாறு எதிர்த்து போராடுவது? என்பது தான் G7 உச்சிமாநாடு முன்வைக்கும் அடிப்படை கேள்வியாக உள்ளது.

கடந்த தசாப்தங்களில், ஏகாதிபத்திய அதிகாரங்களை மோதலுக்கும் போருக்கும் உந்தித் தள்ளிய அதே சக்திகள் தான் தொழிலாள வர்க்க எதிர்ப்பு அபிவிருத்தி அடைவதற்கான நிலைமைகளை உருவாக்கி வருகின்றன.

"முதலாளித்துவ பூகோளமயமாக்கலும், தொழிலாள வர்க்கத்தின் புதுப்பிக்கப்பட்ட எழுச்சியும்" என்ற ஜூன் 7 உலக சோசலிச வலைத் தள முன்னோக்கில் பகுப்பாய்வு செய்த டேவிட் நோர்த் குறிப்பிட்டார்: “வரலாற்றில் பாவத்திற்கான தண்டனை என்ற ஒரு விடயம் இருக்கிறது. கடந்த 40 ஆண்டுகளின் காலத்தில் தொழிலாள வர்க்கத்திற்கு எதிராக முதலாளித்துவத்தால் இழைக்கப்பட்ட குற்றங்கள் அத்தனையும் இருந்தாலும், தொழிலாள வர்க்கத்தின் மீது தாக்குதல் நடத்தி பரந்தளவில் தன்னை செழுமைப்படுத்திக் கொள்கின்ற அதே நிகழ்ச்சிப்போக்கின் பகுதியாக, முதலாளித்துவ உற்பத்திமுறையின் ஒரு பரந்த விரிவாக்கம் மற்றும் ஒருங்கிணைப்பை அது மேற்பார்வை செய்திருக்கிறது. இந்த நிகழ்ச்சிப்போக்கின் —விஞ்ஞான மற்றும் தொழில்நுட்பத்திலான மலைப்பூட்டும் முன்னேற்றங்களால் செலுத்தப்பட்டு— மிக முக்கியமானதும் புரட்சிகரமானதுமான விளைவாய் இருப்பது உலகளாவிய தொழிலாள வர்க்கத்திலான பாரிய எண்ணிக்கை வளர்ச்சி ஆகும்”.

இந்த பிரமாண்டமான சமூக சக்தி, இப்போது சமூக பிற்போக்குத்தனம், இராணுவவாதம் மற்றும் போருக்கு எதிராக ஒரு புரட்சிகர சோசலிச முன்னோக்கின் அடிப்படையில் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் மூலமாக அணிதிரட்டப்பட வேண்டும்.

Loading