வேலைநிறுத்தம் செய்யும் வொல்வோ தொழிலாளர்கள், நிறுவனம் மற்றும் UAW பற்றி அறிந்துகொள்ள வேண்டிய ஒன்பது உண்மைகள்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

வேர்ஜீனியாவின் டப்ளினில் உள்ள நியூ ரிவர் வலி (NRV) ஆலையில் 2,900 வொல்வோ கனரக வாகனத் தொழிலாளர்களின் வேலைநிறுத்தம் பற்றி அறிவிக்கும் ஒரு உத்தியோகபூர்வ கடிதத்தில், UAW செயலாளர் பொருளாளர் ரே கரி (Ray Curry), UAW இன் “குறிக்கோள்” “நிறுவனம் மற்றும் அதன் ஊழியர்கள் இருவருக்குமே பயனுள்ள ஒரு ஒப்பந்தத்தை” பாதுகாப்பதாகும் என்று கூறியுள்ளார்.

ஊழியர்கள் மற்றும் பெருநிறுவனம் என இரண்டிற்குமான ஒரு சிறந்த ஒப்பந்தம் என எதுவும் கிடையாது, ஏனென்றால் வொல்வோவின் இலாபங்கள் வொல்வோ தொழிலாளர்களை சுரண்டுவதிலிருந்தே கிடைக்கின்றன. கரியின் அறிக்கை நிர்வாகத்தின் நலன்களுக்காக வேலைநிறுத்தத்தை நாசப்படுத்த UAW வேலை செய்கிறது என்பதற்கான ஒப்புதலாக உள்ளது, மேலும் வொல்வோவிற்கு “வேலை செய்யும்” ஒரு ஒப்பந்தம் தொழிலாளர்களுக்கும் நல்லது செய்யும் என்று கூறி அவர் தொழிலாளர்களை ஏமாற்ற முயற்சிக்கிறார்.

ஒரு இராணுவம் போருக்குச் செல்கையில் அதன் எதிரிகளின் பலங்களையும் பலவீனங்களையும் அறிந்துகொள்ள வேவு பார்ப்பது போல, வேலைநிறுத்தம் செய்யும் தொழிலாளர்கள் நிறுவனம் மற்றும் அதன் நிதி நிலைமை பற்றிய விபரங்களை தெரிந்துகொள்ள வேண்டும். உலக சோசலிச வலைத் தளத்தின் வாகனத் தொழிலாளர் செய்திமடல் (WSWS Autoworker Newsletter), இந்நிறுவனத்தின் சமீபத்திய இருப்புநிலை அறிக்கைகளையும் பங்குதாரர் அறிக்கைகளையும் மீளாய்வு செய்து தொழிலாளர்களுக்காக பின்வரும் உண்மைகளை முன்வைக்கிறது:

உண்மை 1: வொல்வோ நிறுவனமும் அதன் பங்குதாரர்களும் பெருந்தொற்று கால இலாபமீட்டல் மூலம் பில்லியன்களை வாரிக் கொண்டுள்ளனர்

உலகெங்கிலும் உள்ள வொல்வோ மற்றும் மாக் கனரக வாகனத் தொழிலாளர்கள் வேலையினால் நோய்வாய்பட்ட போது கூட, வொல்வோ நிர்வாகம், தங்கள் உயிரைப் பணயம் வைத்து வேலை செய்யும் அதே தொழிலாளர்களுக்கான செலவுகளைக் குறைப்பதன் மூலம் தனது தொழில்துறை நடவடிக்கைகளின் பணப்புழக்கத்தைத் தக்க வைத்துக் கொண்டுள்ளது.

ஏப்ரல் 22 அன்று வொல்வோ தனது 2021 ஆம் ஆண்டின் முதல் காலாண்டு அறிக்கையை வெளியிட்டது. தலைமை நிறைவேற்று அதிகாரி மார்ட்டின் லண்ட்ஸ்டெட் (Martin Lundstedt) தொற்றுநோய் உண்மையில் நிறுவனத்திற்கான நலன்களைக் கொண்டுள்ளது என்று கூறி, “அதிகரித்தளவில் போக்குவரத்தைக் கொண்ட வலுவான சரக்கு சந்தை, அதிகரித்தளவிலான மின் வணிகத்தினாலும் (e-commerce) குறைந்துபோகாத வியாபாரம், உயர்ந்து வரும் சரக்கு விலைகள் ஆகியவை எங்கள் வாடிக்கையாளர்களின் இலாபத்திற்கு சாதகமானவையே என்பதுடன், இவர்கள் இருவருமே அதிகரித்த தேவையை பூர்த்தி செய்ய தங்கள் வாகனப்படையை புதுப்பித்து விரிவுபடுத்துகிறார்கள் என்பதாகும். இது எங்கள் கனரக வாகன வணிகத்தில் பெரும் கொள்முதல் ஆணைகளை பெறுவதற்கு பங்களித்தது” என்று குறிப்பிட்டார்.

மேலும் இந்த அறிக்கை, “சேவை வணிகத்திலும் எந்தவித குறைவும் இல்லாத, சிறந்த விற்பனை அளவுகளும், மற்றும் செலவுகளைக் குறைப்பதற்கான எங்களது சொந்த நடவடிக்கைகளும், சரிசெய்யப்பட்ட இயக்க வருமானத்திற்கு பங்களித்தமை SEK ஐ 11.8 பில்லயனாக அதிகரித்துள்ளது [அதாவது 2020 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் 860 மில்லியன் டாலராக இருந்தது, தற்போது 1.4 பில்லியன் அமெரிக்கா டாலராக அதிகரித்துள்ளது]. சரிசெய்யப்பட்ட இயக்க வரம்பு வரலாற்று ரீதியாக 12.6 சதவீதமாக (7.8 சதவீதத்திலிருந்து) உயர்ந்தது.” என்று மேலும் குறிப்பிட்டது.

உலகளவில் நூற்றுக்கணக்கான மில்லியன் தொழிலாளர்கள் தங்களது வேலைகளையும் வருமானங்களையும் இழந்து தவித்தாலும், மற்றும் மில்லியன் கணக்கான மக்கள் தொற்றுநோயால் உயிரிழந்துள்ள போதிலும், வொல்வோ பங்குதாரர்கள் பில்லியன்களை வாரிக் கொண்டுள்ளனர், அதாவது நிறுவனம் செலவினங்களைக் குறைத்ததால் ஒரு பங்கிற்கான வருவாய் 0.28 டாலரிலிருந்து 0.53 டாலராக கிட்டத்தட்ட இரட்டிப்பானதால்.

உண்மை 2: வொல்வோ தலைமை நிறைவேற்று அதிகாரி நிறுவனத்தின் நிர்வாகிகள் தொழிற்சங்க நிர்வாகிகளுடன் “இணைந்து ஓரணியாக வேலை செய்ய வேண்டும்” எனக் கூறினார்

“செலவுகளைக் குறைப்பதற்கான நடவடிக்கைகளில்” ஒன்றாக ஜூன் 2020 இல் உலகம் முழுவதுமாக 4,100 நிர்வாகப்பணி ஊழியர்களை வொல்வோ பணிநீக்கம் செய்தது. இந்த தொழிலாளர்கள் இயந்திர தளத்தில் வேலை செய்யவில்லை என்றாலும், நிறுவனத்தால் பலரும் கடுமையாக சுரண்டப்படுவதுடன், குறைந்த ஊதியத்தையே பெறுகின்றனர்.

ஊடகத்தில் வெளியான வெட்டுக்களை அறிவிக்கும் ஒரு அறிக்கையில், வொல்வோ நிறுவன தலைமை நிறைவேற்று அதிகாரி லண்ட்ஸ்டெட் குட்டுக்களை அவிழ்த்தார்: “வொல்வோ கலாச்சாரம் இந்த வேலையிலும் எங்கள் வழிகாட்டும் நட்சத்திரமாக தொடரும், அதாவது இந்த சரிசெய்தலை ஒரு பொறுப்பான வழியில் மேற்கொள்ள தொழிற்சங்கங்களுடன் இணைந்து ஓரணியாக நாங்கள் பணியாற்றுவோம் என்பதாகும். இந்த மாற்றங்களுடன், புதிய சந்தை சூழலுக்கு ஏற்றதாக இருக்கவும், மற்றும் நிலையான போக்குவரத்து மற்றும் உள்கட்டமைப்பு தீர்வுகளை நோக்கிய மாற்றத்தில் தொடர்ந்து முன்னணியில் இருக்கவும் என வொல்வோ குழுமம் ஒரு வலுவான நிலைப்பாட்டை தக்க வைத்துக் கொள்ளும்” (வலியுறுத்தல் சேர்க்கப்பட்டுள்ளது).

நிறுவனத்துடன் “ஓரணியாக இணைந்து” வேலை செய்யும் UAW வுக்கு நன்றி, பெரியளவில் இலாபங்களை ஈட்டுவதன் மூலமும் மற்றும் செலவுகளை குறைப்பதன் மூலமும் வொல்வோ அதன் “வலுவான நிலைப்பாட்டை” பேணியது.

உண்மை 3: வொல்வோவின் சரக்கு குறைவானது என்ற நிலையில், அதற்கான தொழிலாளர்கள் தேவையும் குறைவானதே

வேர்ஜீனியாவிலும் மற்றும் உலகளவில் ஏனைய கனரக வாகன ஆலைகளிலும் உள்ள வொல்வோ தொழிலாளர்கள் நிறுவனத்தின் பணம் கறக்கும் மாடுகளாக உள்ளனர். வொல்வோவின் முதல் காலாண்டு அறிக்கையின்படி, நிறுவனத்தின் மொத்த விற்பனையில் பாதிக்கும் மேலான கனரக வாகன விற்பனை உட்பட, நிகர கனரக வாகன விற்பனை 7 பில்லியன் டாலராக அதிகரித்துள்ளது. கனரக வாகனப் பிரிவின் இயக்க இலாப வரம்பு 12.8 சதவீதமாக உள்ளது, இது வாகனத் தொழிலில் மிகவுயர்ந்த மட்டமாகும்.

வொல்வோவின் காலாண்டு வாரியான கனரக வாகன கொள்முதல் ஆணைகள் (ஆதாரம்: வொல்வோ குழுமம்)

ஆனால், வொல்வோ நிறுவனத்தால் புதிய கனரக வாகன கொள்முதல் ஆணைகளில் ஒப்பீட்டளவில் சிறு பகுதியை மட்டுமே நிறைவேற்ற முடிந்துள்ளது. இந்த ஆணைகளை இது பூர்த்தி செய்யாவிட்டால், சந்தை பங்கிற்கான இரக்கமற்ற போராட்டத்தில் தனது போட்டியாளர்களிடம் வணிகத்தை இழக்கக்கூடும். 2021 ஆம் ஆண்டின் முதல் காலாண்டு அறிக்கை, “பெறப்பட்ட மொத்த நிகர கொள்முதல் ஆணைகள் 123 சதவீதம் அதிகரித்து 85,461 கனரக வாகனங்களின் விற்பனையும், [மற்றும்] வடக்கு அமெரிக்காவில் மட்டும் பெறப்பட்ட கொள்முதல் ஆணைகள் 369 சதவீதம் அதிகரித்து 22,215 கனரக வாகனங்களின் விற்பனையும் செய்யப்பட்டுள்ளது, இது 2021 ஆம் ஆண்டின் முதல் காலாண்டின் மிக வலுவான கொள்முதல் ஆணை அளவுகளாக உள்ளன” என்று குறிப்பிடுகிறது.

ஏப்ரலில் வெளியிட்ட செய்திக்குறிப்பில், தலைமை நிறைவேற்று அதிகாரி லண்ட்ஸ்டெட், “உலகளவில் புதிய மற்றும் பயன்படுத்தப்பட்ட கனரக வாகனங்களின் சரக்கு இருப்பு எங்களிடம் குறைவாக உள்ள நிலையில், எங்களது வாடிக்கையாளர்களின் தேவைகளை பூர்த்தி செய்ய முயற்சி செய்வதில் நாங்கள் முழு கவனம் வைத்திருக்கிறோம்” என்று கூறியுள்ளார்.

முதல் தற்காலிக ஒப்பந்தத்தின் விபரங்களை தொழிலாளர்கள் தெரிந்துகொள்வதற்கு முன்னரே, ஏப்ரல் 30 அன்று தொழிலாளர்களை மீண்டும் வேலைக்குத் திரும்ப நிர்ப்பந்தித்த UAW முடிவின் குற்றத்தன்மையை இது காட்டுகிறது, பின்னர் 90 சதவீதம் தொழிலாளர்கள் இதற்கு வாக்களித்தனர். வொல்வோ கூறுகளை நம்பியுள்ள மாக் ஆலையில் தடையின்றி உற்பத்தி தொடர நிறுவனத்திற்கு UAW தீவிரமாக உதவியது, அத்துடன் நிறுவனம் அதன் சரக்குகளை பெருக்குவதன் மூலம் மற்றொரு வேலைநிறுத்தத்திற்கும் தயார் செய்கிறது. ஆயினும்கூட, இந்த புள்ளிவிபரங்கள், கனரக வாகனத் தொழிலாளர்கள் ஒரு சக்திவாய்ந்த நிலையை வகிக்கின்றனர் என்பதையும், நிறுவனம் 50 சதவீதம் அல்லது அதற்கு மேற்பட்ட ஊதிய உயர்வை இவர்களுக்கு வழங்க முடியும் என்பதையும் காட்டுகின்றன.

உண்மை 4: வொல்வோ “கட்டமைப்பு சார்ந்த செலவுக் குறைப்பை” நியாயப்படுத்த கோவிட்-19 ஐ பயன்படுத்தியது

பங்குதாரர்களுக்காக தயாரிக்கப்பட்ட ஒரு நிறுவன அறிக்கையில், வொல்வோ, 2021 ஆம் ஆண்டின் அதன் குறிக்கோள் “தற்காலிக செலவுக் குறைப்புக்களை கட்டமைப்பு சார்ந்த செலவுக் குறைப்புக்கு மாற்றுவதாகும்” என்று விளக்கமளித்துள்ளது.

வொல்வோ அதன் அறிக்கையில் இவ்வாறு பெருமை பீற்றியது: “எங்கள் உற்பத்தி அளவையும் செலவு நெகிழ்வுத் தன்மையையும் நாங்கள் கணிசமாக அதிகரித்துள்ளதை நாங்கள் நிரூபித்துள்ளோம், இவை 2020 ஆம் ஆண்டில் எங்கள் வருவாய் பின்னடைவுக்கு முக்கிய காரணிகளாக இருந்தன… நிறுவனத்தின் அனைத்து பகுதிகளிலும் செயல்திறனை மேம்படுத்துவதற்கும், எங்கள் செலவுகளைக் குறைப்பதற்கும் நாங்கள் தொடர்ந்து பாடுபடுகிறோம், இது காலாண்டில் மேம்பட்ட இலாபமீட்டலுக்கு பங்களித்தது… இதன் பொருள், எதிர்கால தொழில்நுட்பங்களில் முதலீடு செய்வது மற்றும் எங்களது பங்குதாரர்களுக்கு ஒரு சிறந்த வருமானத்தை வழங்குவது ஆகிய இரண்டும் உட்பட, ஒரு வலுவான நிலைப்பாட்டை எடுத்து நாங்கள் செயல்பட முடியும் என்பதாகும்.”

வேறு வார்த்தைகளில் கூறுவதானால், எதிர்கால செலவுக் குறைப்புக்கு வழி வகுக்கும் அதேவேளை, வொல்வோ பங்குதாரர்களுக்கு பணம் செலுத்தவும், அதன் பங்கு மதிப்பை உயர்த்தவும் தொழிலாளர்களுக்கான செலவினங்களின் ஒவ்வொரு சதவீதத்தையும் சேமிக்க திட்டமிட்டுள்ளது.

உண்மை 5: Standard & Poor’s மதிப்பீட்டு நிறுவனம் எதிர்காலம் பிரகாசமானது என்று கூறுகிறது, இல்லாவிடில்…

Standard & Poor’s நிதி மதிப்பீட்டு நிறுவனம், அதன் ஜூன் 4 அறிக்கையில், 2021 ஆம் ஆண்டில் தொழிலாளர்களை சுரண்டுவதற்கு வொல்வோ வகுத்துள்ள திட்டங்கள் பற்றிய நுண்ணறிவை வழங்கியது. வொல்வோ மீதான தனது கவனத்தை அதிகரிப்பதாக S&P அறிவித்தது, ஏனென்றால் “கடந்த சில ஆண்டுகளாக இலாப வரம்புகளை மேம்படுத்துவதற்கான மற்றும் செலவு கட்டமைப்பு நெகிழ்வுத்தன்மையை அதிகரிப்பதற்கான அதன் மூலோபாயத்தின்படி தொடர்ந்து செயல்படுவதை குழு நிரூபித்துள்ளது, இது கோவிட்-19 தொடர்புபட்ட தொழில் வீழ்ச்சியை ஒப்பீட்டளவில் நன்றாக கணிக்க உதவியது.” மேலும் நிறுவனம் “செலவுக் கட்டுப்பாடுகளில் தெளிவான கவனம் செலுத்துகிறது” என்கிறது.

ஏற்கனவே முன்மொழியப்பட்ட இரண்டு ஒப்பந்தங்களில் உள்ளதைப் போன்ற மேலதிக தாக்குதல்களுக்கு தொழிலாளர்கள் தயாராக வேண்டும். இருந்தாலும், S&P எச்சரித்தது, தொழிலாளர்கள் விடயங்களை பேசுவதற்கு முயற்சிக்க எப்போதும் தொலைதூர வாய்ப்பு தான் உள்ளது. மேலும் இது “பிற காரணங்களுக்காக உற்பத்தியை நிறுத்துவதையும் முழுமையாக விலக்க முடியாது…” என்றும் குறிப்பிட்டது.

உண்மை 6: வேர்ஜீனிய தொழிலாளர்கள் உலகளவில் சக்திவாய்ந்த கூட்டாளிகளைக் கொண்டுள்ளனர்

அதன் உள் ஆவணங்களின்படி, வொல்வோ உலகளவில் 51,131 ஆலைத் தொழிலாளர்களை பணியமர்த்தியுள்ளது, 6,801 தற்காலிக மற்றும் ஒப்பந்தத் தொழிலாளர்கள் உட்பட, 2020 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் 2025 தொழிலாளர்கள் மேலும் சேர்க்கப்பட்டதும் அடங்கும். வொல்வோ உலகளவில் தேவையை பூர்த்தி செய்ய வேண்டும் என்பதால், இது உலகம் முழுவதும் 18 நாடுகளில் ஆலைகளை நடத்துகிறது.

தென்னாபிரிக்காவின் டர்பனில் வேலை செய்யும் ஒரு வொல்வோ தொழிலாளி (ஆதாரம்: வொல்வோ குழுமம்)

இதில், பிரேசிலின் குரிடிபா; பிரான்சின் பிளைன்வில்; சுவீடனின் கோதன்பர்க் மற்றும் உமே; பெல்ஜியத்தின் கென்ட்; ரஷ்யாவின் கலுகா; இந்தியாவின் பெங்களூர்; தாய்லாந்தின் பாங்காக்; ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன்; மற்றும் தென்னாபிரிக்காவின் டர்பன் ஆகிய நகரங்களில் உள்ள வொல்வோ கனரக வாகன ஆலைகள் அடங்கும். மேலும் இவற்றைத் தாண்டி, மேரிலாந்த், பென்சில்வேனியா, வேர்ஜீனியா மற்றும் ஆஸ்திரேலியாவில் உள்ள மாக் கனரக வாகனத் தொழிலாளர்கள்; பென்சில்வேனியா, தென் அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் ஆசியாவில் உள்ள வொல்வோ கட்டுமான உபகரணத் தொழிலாளர்கள்; மற்றும் பலர் உட்பட வொல்வோ குழுமத்தின் பல துணை நிறுவனங்களில் வேலை செய்யும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் உள்ளனர்.

இந்த ஆலைகளின் தொழிலாளர்கள் குறைந்தது 10 வெவ்வேறு மொழிகளைப் பேசுபவர்களாகவும், மற்றும் வெவ்வேறு இனங்கள் மற்றும் இனப் பின்னணியை சேர்ந்தவர்களாவும் இருந்தாலும், தொழிலாளர்களாக இவர்கள் அனைவரும் ஒரேமாதிரியான ஆர்வங்களைப் பகிர்ந்து கொள்வதுடன், இவர்கள் அனைவருமே ஒரே பன்னாட்டு நிறுவனத்தால் சுரண்டப்படுகிறார்கள்.

உண்மை 7: முதலீட்டாளர்களுக்கு வழங்கப்பட்ட 2021 இலாபப்பங்கீடு ஒரு தொழிலாளிக்கு 116,000 டாலர் வழங்குவதற்கு சமம்

வொல்வோ அதன் பங்குதாரர்களுக்கு ஜூன் மாத இறுதியில் 2.3 பில்லியன் டாலர் வழங்குவதற்கு ஒப்புதல் அளிக்க ஒரு சிறப்புக் கூட்டத்திற்கு பங்குதாரர்களை அழைத்துள்ளதாக சமீபத்தில் அறிவித்தது. இந்த தொகை 2021 ஆம் ஆண்டில் மட்டும் ஏற்கனவே நிறுவனம் வழங்கிய 3.68 பில்லியன் டாலருக்கு கூடுதலாக வழங்கப்படும், இது நிறுவனத்தின் வரலாற்றில் முதலீட்டாளர்களுக்கு நிறுவனம் வழங்கும் மிகப்பெரிய பணப் பங்கீடாகும். இத்தொகையை உலகளவில் வொல்வோ நிறுவனத்தின் அனைத்து தொழில்நுட்பத் தொழிலாளர்களுக்கும் பகிர்ந்தளித்தால், ஒரு தொழிலாளிக்கு 116,954.49 டாலர் கிடைக்கும்.

உண்மை 8: வொல்வோ சுவீடன் அரசாங்கத்திடமிருந்து 120 மில்லியன் டாலருக்கு அதிகமான தொற்றுநோய் உதவியைப் பெற்றது, இதை திருப்பிச் செலுத்தவில்லை.

பங்குதாரர்களுக்கு முன்மொழியப்பட்ட கூடுதல் 2.3 பில்லியன் டாலர் இலாபப்பங்கீட்டிற்கான அறிவிப்பைத் தொடர்ந்து, வொல்வோ கடந்த ஆண்டு தொற்றுநோய் நிவாரணத்திற்காக SEK 1 பில்லியன் (தோராயமாக 120 மில்லியன் டாலர்) தொகையை பெற்றுக் கொண்டது என கடந்த வாரம் சுவீடன் ஊடகங்கள் தெரிவித்தன. அரசாங்க நிதியுதவியைப் பெற்று பங்குதாரர்களுக்கு பில்லியன்களை செலுத்தும் நிறுவனத்தின் வெளிப்படையான ஏற்றத்தாழ்வு ஒருபுறமிருக்க, பொருளாதார மற்றும் பிராந்திய வளர்ச்சிக்கான சுவீடன் நிறுவனம் (Swedish Agency for Economic and Regional Growth) பணத்தை திருப்பிச் செலுத்துமாறு கோரவில்லை என்று கூறியுள்ளது.

உண்மை 9: UAW அதன் வேலைநிறுத்த நிதியில் 790 மில்லியன் டாலர்களைக் கொண்டிருந்தாலும், வேலைநிறுத்தக்காரர்களுக்கு வாரத்திற்கு வெறும் 275 டாலர் கொடுத்து பட்டினியில் வீழ்த்துகிறது

வாரத்திற்கு 40 மணி நேர வேலை அடிப்படையில் கணக்கிட்டால், வேலைநிறுத்த ஊதியம் வாரத்திற்கு 275 டாலர் (வரிக்கு முன்) வழங்கப்படுவது என்பது ஒரு மணி நேரத்திற்கு 6.88 டாலர் ஆகும், இது வேர்ஜீனியாவின் வறுமை நிலை குறைந்தபட்ச மணிநேர ஊதியம் 9.50 டாலரை விட 2.62 டாலர் குறைவானதாகும். தொழிலாளர் துறை தாக்கல் செய்த வழக்குகள் 2018 ஆம் ஆண்டில் 100,000 டாலருக்கு அதிகமாக வருமானம் ஈட்டிய 450 க்கு மேற்பட்ட UAW நிர்வாகிகள் இருப்பதாக காட்டுகிறது. வேலைநிறுத்தம் நடந்து கொண்டிருந்தாலும் கூட, UAW இந்த வெட்டிக் கும்பலுக்கு தொடர்ந்து காசோலைகளை வழங்கி வருகிறது. தொழிலாளர்கள் தங்கள் முதல் வேலைநிறுத்த ஊதியத்தைப் பெறும் நேரத்தில், UAW தனது சொந்த ஊழியர்களுக்கு 1.9 மில்லியன் டாலருக்கு அதிகமான தொகையை வழங்கியிருக்கும்.

* * *

UAW – வொல்வோ கூட்டணிக்கு எதிராக, ஆலையில் உள்ள தொழிலாளர்கள் வொல்வோ சாமானிய தொழிலாளர்கள் குழுவை (Volvo Workers Rank-and-File Committee) அமைத்துள்ளனர், இது இரண்டு காட்டிக்கொடுப்பு ஒப்பந்தங்களையும் தோற்கடிப்பதில் ஒரு தீர்க்கமான பங்காற்றியது. சமீபத்திய வாக்கெடுப்புக்கு முன்னர், ஒப்பந்தத்தை நிராகரிக்கக் கோரும் VWRFC இன் அறிக்கையை குழு வினியோகித்தது. இதில் வெற்றி பெற, தொழிலாளர்கள் தங்களது போராட்டத்தை இப்போது விரிவுபடுத்தி, அதனை சர்வதேச அளவில் ஒருங்கிணைந்த எதிர் தாக்குதலாக முன்னெடுக்க வேண்டும். உலக சோசலிச வலைத் தளமும் (WSWS) மற்றும் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவும் (ICFI), இந்த பணியை நிறைவேற்றுவதற்கு தொழிலாளர்களுக்கு உதவ சாமானிய தொழிலாளர் குழுக்களின் சர்வதேச தொழிலாளர் கூட்டணியை (International Workers Alliance of Rank-and-File Committees) தொடங்கியுள்ளன.

 

Loading