அதிவலது தளபதிகளின் ஆட்சிக் கவிழ்ப்பு சதி அச்சுறுத்தல்களுக்கு பின்னர் மக்ரோன் அரசாங்கம் மேலும் வலது நோக்கி நகர்கிறது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

பிரான்சில் பணியிலிருக்கும் மற்றும் ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரிகளின் ஒரு தொடர்ச்சியான அதிவலது அச்சுறுத்தல்களுக்கு மத்தியில், மக்ரோன் அரசாங்கமானது அதிவலது ஆட்சிக் கவிழ்ப்பு சதிகாரர்களுக்கு எதிராக மெளனத்தையும் மற்றும் சமரசக் கொள்கையையும் ஏற்றுள்ளது.

இந்த இரண்டு கடிதங்களும் ஏப்ரல் 21 மற்றும் மே 9 ஆகிய நாட்களில் வெளியிடப்பட்டன. முதலாவது கடிதத்தில் 23 ஓய்வுபெற்ற தளபதிகள், 200 க்கும் மேற்பட்ட முன்னாள் இராணுவ அதிகாரிகள் மற்றும் 1,500 கீழ் மட்டத்திலுள்ள முன்னாள் இராணுவ அதிகாரிகள் கையெழுத்திட்டனர். குறைந்தபட்சம் 18 செயலூக்கமான பணியிலிருக்கும் இராணுவத்தினர் இந்தக் கடிதத்தில் கையெழுத்திட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மக்ரோன் அரசாங்கத்திற்கு திருப்பிவிடப்பட்ட இது பிரான்சில் "இஸ்லாமியவாதத்தின்" ஆபத்து மற்றும் "புறநகர்க் கூட்டம்" (தொழிலாள வர்க்க புறநகர்ப் பகுதிகள்) குறித்த பாசிசவாத கண்டனங்களைக் கொண்டிருந்தது.

அரசாங்கம் நடவடிக்கை எடுக்காவிட்டால், "நமது நாகரீகத்தின் மதிப்புகளைப் பாதுகாக்கவும், தேசிய பிராந்தியத்தில் நமது சக நாட்டினரைப் பாதுகாக்கவும் ஒரு ஆபத்தான பணியில் நமது செயலூக்கமான கடமையிலிருக்கும் தோழர்களின் தலையீடும் வெடிப்பும் இருக்கும்" என்று அது அச்சுறுத்தியது. அத்தகைய ஒரு "உள்நாட்டுப் போரில், நீங்கள் பொறுப்பேற்க வேண்டி இருக்கும் மரணங்கள், ஆயிரக்கணக்கில் இருக்கும்".

நவ-பாசிச இதழான Valeurs actuelles இல் வெளியிடப்பட்ட மே 9 கடிதத்தில் 2,000 பணியிலிருக்கும் இராணுவத்தினர் கையெழுத்திட்டதாக கூறப்படுகிறது. 100,000 க்கும் அதிகமானவர்கள் "மனுவில்" கையெழுத்திட்டுள்ளதாக வலைத் தளம் கூறுகிறது. அது அனைத்து தளபதிகளின் முந்தைய அச்சுறுத்தல்களையும் ஆதரிக்கிறது, "பொதுப் பகுதிகளில் வளர்ந்து வரும் வகுப்புவாதம்" மற்றும் "பிரான்ஸ் மற்றும் அதன் வரலாறு மீதான வெறுப்பு நெறியாக மாறுவது" ஆகியவற்றின் மீது அது குற்றம் சாட்டும் ஒரு "உள்நாட்டுப் போரை" எதிர்த்துப் போராடுவதற்கு உறுதியளிக்கிறது.

ஜனாதிபதி இமானுவல் மக்ரோன் இராணுவத்தில் அதிவலது வலைப்பின்னல்களால் இராணுவ ஆட்சிக் கவிழ்ப்பு சதி அச்சுறுத்தல்களுக்கு மெளனத்தால் பதிலளித்துள்ளார். ஆரம்ப வெளியீடு வெளியிடப்பட்டு மூன்று வாரங்களுக்கு மேலாக, அவர்களுடைய இருப்பை அவர் பகிரங்கமாக ஒப்புக்கொள்ளவில்லை. ஆயுதப் படை அமைச்சர் புளோரன்ஸ் பார்லி மற்றும் உள்துறை அமைச்சர் ஜெரால்ட் டார்மனன் ஆகியோர் சமீபத்திய கடிதத்திற்கு பதிலளிக்கும் வகையில் சுருக்கமான அறிக்கைகளை மட்டுமே வெளியிட்டுள்ளனர்.

ஒரு இராணுவ ஆட்சிக் கவிழ்ப்பு சதி என்ற வெளிப்படையான அச்சுறுத்தலுக்கு எந்த சட்ட ரீதியான எதிர்விளைவுகளும் இருக்காது என்பதை அரசாங்கம் தெளிவுபடுத்தியுள்ளது. கையெழுத்திட்டவர்களுக்கு எதிராக குற்றச்சாட்டுக்கள் கொண்டுவரப்பட வேண்டும் என்று ஜோன்-லூக் மெலோன்சோன் ஒரு மனுவை தாக்கல் செய்த பின்னர், பாரிஸ் அரசு வழக்கறிஞர் ரெமி ஹெய்ட்ஸ், "குற்றவியல் தவறு எதுவும்" செய்யப்படவில்லை என்பதால் குற்றச்சாட்டுக்கள் எதுவும் கொண்டுவரப்படாது என்று அறிவித்தார்.

மக்ரோனின் மெளனம் இருந்தபோதிலும், இந்தப் பிரச்சினை எலிசே ஜனாதிபதி மாளிகையில் மிகவும் நெருக்கமாக பின்தொடரப்படுகிறது. மே 7 ம் திகதி Parisien பத்திரிகையானது அரசாங்கத்தின் விழிப்பு மற்றும் Valeurs Actuelles ஆல் இரண்டாவது கடிதத்தை வெளியிடுவதற்கான தயாரிப்புக்கள் குறித்த அரசாங்க ஆலோசகர்களின் அநாமதேய அறிக்கைகளுடன் ஒரு அறிக்கையை வெளியிட்டது: "இது முந்தைய கடிதத்தை விட குறைவான குப்பைத் தொட்டியாகும், ஆனால் அது முட்டாள்களின் ஒரு வலி." "இந்த விஷயம் மிகவும் தீவிரமாக எடுத்துக் கொள்ளப்படுகிறது. அது எலிசே மற்றும் இராணுவத்தின் அமைச்சர் வரை சென்றுள்ளது" என்று Parisien குறிப்பிடுகிறது

ஒரு "ஜனாதிபதியின் உள் வட்டத்தின் உறுப்பினர்" கூறுகிறார்: "பாதுகாப்பு என்பது பொது அபிப்பிராயத்தில் மிகவும் வலுவாக உயர்ந்து வரும் ஒரு கருப்பொருள். நாங்கள் ஒரு வருடமாக எச்சரிக்கையின் கீழ் வாழ்ந்து வருகிறோம். பல பதட்டங்கள் கட்டமைக்கப்பட்டுள்ளன." மற்றொரு ஜனாதிபதி ஆலோசகர் கூறுகிறார்: "நாங்கள் எதிர்ப்பிற்கு ஒரு சென்டிமீட்டர் இடம் கொடுத்தால் [2022 ஜனாதிபதி தேர்தல்களில்] நாங்கள் அடிவாங்கப் போகிறோம்," என்றும், மேலும் கூறினார், "எல்லையில் மக்களைத் திருப்பியனுப்புவதில் எங்கள் கொள்கையை தெரியப்படுத்த, [குடியேற்றம்] தடுப்பு மையங்களுக்குள் பயணங்கள் செய்வதன் மூலம் நாங்கள் தொடங்கலாம்."

வேறு வார்த்தைகளில் கூறுவதானால், இராணுவத்திற்குள் இருந்து பாசிச வன்முறை அச்சுறுத்தலுக்கு அரசாங்கத்தின் விடையிறுப்பு அதன் புலம்பெயர்ந்தோர்-விரோத மற்றும் பொலிஸ்-அரசு கொள்கைகளை வலுப்படுத்துவதாகும், அதே நேரத்தில் அதிவலது வலையமைப்பை பாதுகாக்கிறது. இது "பொது அபிப்பிராயம்" கோரிக்கைகளுக்கு ஒரு விடையிறுப்பாக இழிந்த முறையில் முன்வைக்கப்படுகிறது.

அதன்படி, ஏப்ரல் 25 அன்று, உள்துறை மந்திரி ஜெரால்ட் டார்மனன், அதிவலது Action française இன் முன்னாள் ஆதரவாளராக அறியப்பட்டவர், அரசாங்கமானது ஒரு புதிய "உள்துறை பாதுகாப்பு மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு" சட்டத்தை முன்வைக்கும் என்று அறிவித்தார்.

புதிய சட்டத்தில் இணையத்தின் மீதான அரசு கண்காணிப்பை விரிவுபடுத்துதல் மூலம் மக்களின் ஜனநாயக உரிமைகள் மீதான நீண்டகால தாக்குதல்கள் அடங்கும். இது தற்போது உளவுத்துறையானது மக்களை அவர்களின் இணையப் பயன்பாட்டிற்கு தொலைபேசி பயன்பாட்டை கண்காணிக்க அனுமதிக்கும் சட்டங்களை நீட்டிக்கிறது. ஞாயிறன்று Journal de Dimanche பத்திரிகைக்கு டார்மனின் கூறியது போல், அது "அல்கோரிதம் (algorithms) வழிமுறைகளைப் பயன்படுத்த, அதாவது இணையத் தரவின் தானியங்கி செயல்முறையை" அனுமதிக்கிறது.

இது மக்களின் உரிமைகளை அச்சுறுத்துகிறதா என்று கேட்கப்பட்டதற்கு, அவர் பதிலளித்தார்: "அப்பாவிகளுடன் நிறுத்துவோம். அனைத்து பெரிய நிறுவனங்களும் அல்கோரிதம் வழிமுறைகளைப் பயன்படுத்துகின்றன. அவற்றைப் பயன்படுத்த முடியாத ஒரு அரசு மட்டும் இருக்குமா?"

இது ஆட்சிக் கவிழ்ப்பு சதி அச்சுறுத்தல்களுக்கு மக்ரோனின் விடையிறுப்பின் இன்றியமையாத அரசியல் யதார்த்தத்தை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. பிரான்சில் 100,000 க்கும் அதிகமான இறப்புக்களுக்கு வழிவகுத்துள்ள இந்த பெருந்தொற்று நோயை அரசாங்கம் குற்றவியல் மற்றும் பேரழிவுகரமான முறையில் கையாள்வதில் அதிகரித்து வரும் சமூக சமத்துவமின்மை மற்றும் பாரிய சீற்றத்தின் கீழ், தொழிலாள வர்க்கத்தில் வளர்ந்து வரும் எதிர்ப்புக்கு எதிராக பொலிஸ் எந்திரத்தை வலுப்படுத்துவதை அரசாங்கம் அரசியல் ரீதியாக சார்ந்துள்ளது. அரசாங்கமானது அதிவலது அதிகாரிகளை விட அதாவது வெளிப்படையாக ஒரு ஆட்சிக் கவிழ்ப்பு சதிக்கு அச்சுறுத்துபவர்களையும் விட தொழிலாள வர்க்கத்தில் ஒரு இயக்கம் குறித்து மிகவும் அஞ்சுகிறது.

இந்த சூழலில்தான் ஆயுதப் படைகளின் தலைவரான ஜெனரல் சார்லஸ் லுகுவான்ந்ர் இன் அறிக்கைகள் புரிந்து கொள்ளப்பட வேண்டும். இரண்டாவது கடிதம் வெளியிடப்பட்ட பின்னர், லுகுவான்ந்ர் அநாமதேய கையெழுத்திட்டுள்ள பிரதிநிதிகளுக்கு ஒரு சமரச பொதுக் கடிதத்தை எழுதினார். அவர்களுக்கு எதிராக எந்த விசாரணையோ அல்லது சட்ட நடவடிக்கைகளோ திட்டமிடப்படவில்லை என்பதை தெளிவுபடுத்திய அவர், இராணுவத்திலிருந்து இராஜிநாமா செய்து, அவர்களின் அரசியல் கருத்துக்களை பகிரங்கமாக பாதுகாக்குமாறு அவர்களின் "நல்ல உணர்வுக்கு" வேண்டுகோள் விடுத்தார்.

"செய்ய மிகவும் நியாயமான விஷயம் நிச்சயமாக இராணுவத்திலிருந்து வெளியேறுவது, முழுமையான சுதந்திரத்தில், ஒருவரின் கருத்துக்கள் மற்றும் நம்பிக்கைகளை பகிரங்கப்படுத்த முடியும்," என்று அவர் கூறினார்.

இராணுவத்திலுள்ள அதிவலது வலைப்பின்னல்களுக்கு இராஜிநாமா செய்யும் எண்ணம் இல்லை என்று நம்புவதற்கு எந்த காரணமும் இல்லை, ஆனால் லுகுவான்ந்ர் இன் வேண்டுகோளே ஒரு பிற்போக்குத்தனமான மற்றும் ஜனநாயக விரோத தன்மையைக் கொண்டுள்ளது. ஆட்சிக் கவிழ்ப்பு சதிகாரர்கள் அவரது ஆலோசனையை எடுத்துக் கொள்ள விரும்பினால், அவர்கள் பிரெஞ்சு பொது ஊழியர்களுடன் நெருக்கமான உறவுகளைக் கொண்ட முன்னாள் அதிகாரிகளைக் கொண்ட ஒரு பொது, அதிவலது போக்கை திறம்பட உருவாக்குவார்கள்.

மேலும், இந்தக் கடிதங்கள் பெரும்பாலும் மக்ரோன் அரசாங்கம் கடந்த ஐந்து ஆண்டுகளாக நடத்தி வரும் அரசியல் பிரச்சாரத்தை அடிப்படையாகக் கொண்டவையாகும், குறிப்பாக முஸ்லிம்களை இலக்காகக் கொண்ட அதன் "பிரிவினைவாத எதிர்ப்பு" சட்டம் ஆகும்.

மக்ரோன் ஏற்கனவே 2022 ஜனாதிபதித் தேர்தல்களில் மரின் லு பென்னின் அதிவலது தேசிய பேரணியின் (RN) வலதுபுறத்தில் தன்னை நிலைநிறுத்த முயன்று தனது பிரச்சாரத்திற்கு வழிகாட்டியுள்ளார். பெப்ருவரியில், உள்துறை மந்திரி ஜெரால்ட் டார்மனன், லு பென்னுடன் ஒரு தொலைக் காட்சி விவாதத்தை நடத்தினார், அதில் அவர் இஸ்லாம் குறித்து "மென்மையானவர்" என்று குற்றம் சாட்டினார். "திருமதி லு பென், நீங்கள் மென்மையாக செயல்படுகிறீர்கள். இஸ்லாம் ஒரு பிரச்சினை அல்ல என்று கூறும் அளவுக்கு நீங்கள் சென்றுள்ளீர்கள்" என்று அவர் கூறினார். "நீங்கள் வைட்டமின்களை எடுத்துக் கொள்ள வேண்டும். நீங்கள் போதுமான கடினமாக இல்லை என்று நான் காண்கிறேன்!" என்றார்.

தேர்தல் பிரச்சாரத்தின் முழு உத்தியோகபூர்வ கட்டமைப்பானது இன்னும் கூடுதலான வகையில் வலதிற்கு நகர்ந்து கொண்டே இருக்கிறது. இந்த வாரம், குடியரசுக் கட்சியின் வருங்கால வேட்பாளரான மிஷேல் பார்னியே, ஐரோப்பிய ஒன்றியத்திற்கு வெளியே இருந்து அனைத்து புலம்பெயர்வுகளுக்கும் பிரான்ஸ் மூன்று முதல் ஐந்து ஆண்டு கால தடையை விதிக்க வேண்டும் என்று கூறினார்.

வளர்ந்து வரும் பாசிச ஆபத்திற்கு எதிரான போராட்டத்தில், தொழிலாள வர்க்கமானது அரசியல் ஸ்தாபகத்தின் எந்தப் பிரிவையும் சார்ந்திருக்க முடியாது. அரசியல் அதிகாரத்தை எடுத்துக் கொள்வதற்கும் சோசலிசத்தை ஸ்தாபிப்பதற்கும் தொழிலாள வர்க்கத்தின் சுயாதீனமான இயக்கத்தை அபிவிருத்தி செய்வது தான் முன்னோக்கிய ஒரே வழியாகும்.

Loading