சீனாவுக்கு எதிரான அமெரிக்க போர் உந்துதல் பிலிப்பைன்ஸில் அரசியல் பதட்டங்களை கூர்மைப்படுத்துகிறது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

கடந்த மாத காலப்பகுதியில், தென்சீனக் கடலின் சர்ச்சைக்குரிய நீர்பரப்பில் சீனக் கப்பல்கள் நங்கூரமிட்டு இருப்பதால் பிலிப்பைன்ஸ் மற்றும் சீனா இடையே பதட்டங்கள் கடுமையாக அதிகரித்துள்ளன. இந்த பதட்டங்கள் பிலிப்பைன்ஸ் அரசியலில் பகிரங்கமான வெளிப்பாட்டைக் காண்கின்றன. அங்கு ஜனாதிபதி ரோட்ரிகோ டுரேற்றவுக்கு முதலாளித்துவ எதிர்ப்பு 1சம்பாயான் (1Sambayan) என்ற ஒரு கூட்டணி கட்சியை உருவாக்க கூடியது. இதன் அடிப்படை கவனம் பிலிப்பைன்ஸ் வெளிநாட்டு உறவுகளை பெய்ஜிங்கிலிருந்து விலகி மீண்டும் வாஷிங்டன் முகாமுக்குள் திரும்புவதாகும்.

மார்ச் மாத இறுதியில், 1சம்பாயன் நிறுவப்பட்ட அதே வாரத்தில், சீனக் கப்பல்கள் இரு நாடுகளும் உரிமை கோரும் தென்சீனக் கடலின் விட்சுன் கடல்திட்டுகளுக்கு அருகே நங்கூரமிட்டபோது இந்த முரண்பாடுகள் வெளிப்பட்டன. சீன அரசாங்கம் ஆரம்பத்தில் படகுகள் ஒரு புயலின் தாக்கத்திலிருந்து தப்புவதற்காக பூமராங் வடிவ அட்டோலில் தங்குமிடத்தில் பாதுகாப்பிற்காக ஒதுங்கிய மீன்பிடிக் கப்பல்கள் என்று கூறியது. சில கப்பல்கள் புறப்பட்டாலும், மற்றவை ஒரு மாதத்திற்கும் மேலாக விட்சன் கடல்திட்டுப் பகுதியில் நங்கூரமிட்டன.

சீன தூதருடன் பேச விரும்புவதாகக் கூறி, பதட்டங்களை அமைதியாக சமாளிக்க டுரேற்ற முயன்றார். எவ்வாறாயினும், பைடென் நிர்வாகம் ஜனவரி மாதம் பதவியேற்றதிலிருந்து சீனாவுக்கு எதிராக கடுமையாக அழுத்தம் கொடுத்து வருகிறது. 1சம்பயனின் உருவாக்கம் மற்றும் விட்சனில் நடந்த மோதல் ஆகியவை சீனாவிற்கு எதிரான அமெரிக்காவின் புதுப்பிக்கப்பட்ட உந்துதலின் பின்னணியில் மட்டுமே புரிந்து கொள்ள முடியும்.

இந்த பிப்ரவரி 6, 2020 இல், கோப்பு புகைப்படம், பிலிப்பைன்ஸ் வெளியுறவுத்துறை செயலாளர் தியோடோரோ லோக்சின் ஜூனியர் பிலிப்பைன்ஸின் மணிலாவில் ஒரு செனட் விசாரணையின் போது சைகை காட்டி உரையாற்றினார். (AP Photo/Aaron Favila, File)

டுரேற்ற மோதலைக் குறைக்க முயன்றபோது, மணிலாவில் உள்ள அமெரிக்க தூதரகம் உடனடியாக சீனாவை கண்டித்து ஒரு அறிக்கையை வெளியிட்டது, அதில் "பிராந்தியத்தில் அமைதி மற்றும் பாதுகாப்பைக் குறைமதிப்பிற்கு உட்படுத்தும் பிற நாடுகளை ஆத்திரமூட்டுவும், அச்சுறுத்துவதற்கும், தூண்டிவிடுவதற்கும், கடல்சார் படையினரைப் பயன்படுத்துவதை" கண்டனம் செய்தது.

உண்மையில், வாஷிங்டன் தான் தனது இராணுவப் படைகளை பயன்படுத்தி அச்சுறுத்துவதற்கும் தூண்டிவிடுவதற்கும் முக்கிய குற்றவாளியாகும். ஏப்ரல் மாத நெருக்கடியின் போது, அமெரிக்கா இப்பகுதிக்கு பல போர்க்கப்பல்களையும் 65 கண்காணிப்பு விமானங்களையும் அனுப்பியது. பீக்கிங் பல்கலைக்கழகத்துடன் தொடர்புடைய ஒரு சிந்தனைக் குழுவான தென் சீனக் கடல் மூலோபாய ஆய்வு முன்னெடுப்பு (SCSPI) ஒரு அறிக்கையை வெளியிட்டது. இதில் பகிரங்கமாக கிடைக்கக்கூடிய விமானத் தகவல்கள், அமெரிக்க உளவு விமானங்கள் ஜனவரி முதல் தென் சீனக் கடலில் அதிகளவிலான பறத்தலை நடத்தி வருவதாக தெரியவந்துள்ளது. தென் சீனக் கடலில் அமெரிக்காவின் நடவடிக்கை "முன்னோடியில்லாத" தீவிரமானதாக உள்ளது என்று அறிக்கை குறிப்பிட்டது.

சீனாவின் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ஹுவா னிங் மார்ச் 29 அன்று பிரச்சனைக்குரிய பகுதியில் அமெரிக்க கடற்படையை ஈடுபடுத்துவதை பற்றி ஒரு கூர்மையான அறிக்கையை வெளியிட்டார். "இராணுவமயமாக்கல் மற்றும் கடல்வழி சுதந்திரத்தை பாதிப்பதை பற்றி குறிப்பிடுவதற்கு அமெரிக்காவை விட வேறு யாரும் பொருத்தமானவர்கள் அல்ல" என்று அவர் கூறினார்.

ஏப்ரல் 27 அன்று பிலிப்பைன்ஸ் கடலோர காவல்படை ஸ்ப்ராட்லி தீவுகளின் வடகிழக்கு பகுதியில் சபீனா கடற்திட்டிகளுக்கு அருகே ஏழு சீனக் கப்பல்கள் நங்கூரமிட்டதாக அறிவித்தபோது பதட்டங்கள் மேலும் கூர்மைப்படுத்தப்பட்டன. கடலோர காவல்படை கப்பல்களை எதிர்கொண்ட பின்னர், சீனக் கப்பல்கள் அப்பகுதியிலிருந்து புறப்பட்டன.

பிலிப்பைன்ஸ் வெளியுறவு செயலாளர் தியோடோரோ லோக்சின் ஒரு அறிக்கையை வெளியிட்டார். இது பதட்டங்கள் எவ்வளவு தூரம் அதிகரித்துள்ளது என்பதை வெளிப்படுத்தியது. ஒரு பிலிப்பைன்ஸ் கப்பல் மீதான எந்தவொரு தாக்குதலும், "இது எவ்வளவு சிறியதாக இருந்தாலும், அது அரசாங்கக் கப்பலாக இருக்கும் வரை, அது அமெரிக்கா மீதான தாக்குதலாகும். இது MDT [பரஸ்பர பாதுகாப்பு ஒப்பந்தத்தை] இனை இல்லாதொழிக்க தூண்டுகிறது, அந்த பதில் உலகளாவியது" என்று அவர் அறிவித்தார்.

அமெரிக்காவிற்கும் பிலிப்பைன்ஸுக்கும் இடையிலான 1951 பரஸ்பர பாதுகாப்பு உடன்படிக்கையை லோக்சின் குறிப்பிடுகிறார். இது யாராவது ஒருவருக்கும் எதிரான தாக்குதல் இருதரப்பிற்கும் எதிரான தாக்குதல் என்று கூறுகிறது. தென் சீனக் கடலில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டால் அதன் விளைவாக உலகப் போர் ஏற்படும் என்று அவர் குறிப்பிட்டார். எவ்வாறாயினும், எச்சரிக்கையுடன் வலியுறுத்துவதற்குப் பதிலாக, "நாங்கள் திரும்பிச் செல்ல முடியாத இடத்திற்குச் செல்ல எங்களுக்கு தைரியம் இருக்க வேண்டும்" என்று அவர் கூறினார்.

மே 3 அன்று, லோக்சின் மேலும் ஆத்திரமூட்டலை அதிகரித்து, ஒரு மோசமான ட்வீட்டை வெளியிட்டார், “சீனா, என் நண்பரே, இதை நான் எவ்வளவு பணிவுடன் கூற முடியும்? என்னைப் பார்த்து ... ஓ ... இங்கிருந்த வெளியேறிவிடு” அவர் சீனாவை "ஒரு அசிங்கமான முட்டாள்" என்று குறிப்பிட்டார்.

பிலிப்பைன்ஸ் வெளியுறவு செயலாளரின் பகிரங்க முரட்டுத்தனம், சர்ச்சைக்குரிய நீர்நிலைகளில் உருவாகியுள்ள பதற்றத்தின் அளவை வெளிப்படுத்துகிறது. இது மோசமான சூழ்நிலையை உருவாக்கியது, இதில் மோசமான டுரேற்ற அமைதியான மற்றும் நியாயமான வார்த்தைகளுக்கு அழைப்பு விடுத்தார். "சீனா எங்கள் பயனாளியாக உள்ளது," என்று அவர் கூறினார். "சீனாவுடன் எங்களுக்கு மோதல் இருப்பதால், நாங்கள் முரட்டுத்தனமாகவும் அவமரியாதைக்குரியவர்களாகவும் இருக்க வேண்டும் என்று அர்த்தமல்ல. உண்மையில், கடந்த காலங்களில் அது செய்த உதவிக்கும் மற்றும் இன்றைய உதவிக்கும் சீனாவுக்கு நன்றி தெரிவிக்க பல விஷயங்கள் உள்ளன” என்றார்.

சீனாவின் உதவியைப் பற்றி டுரேற்ற பேசியபோது, கோவிட்-19 தொற்றுநோய்க்கான தடுப்பூசிகளின் மிகப்பெரிய ஆதாரமாக சீனாவை பிலிப்பைன்ஸ் நம்பியிருப்பதை அவர் மனதில் வைத்திருந்தார். பலமுறை முயற்சிகள் இருந்தபோதிலும், பிலிப்பைன்ஸால் வாஷிங்டனில் இருந்து அதிக அளவு தடுப்பூசிகளைப் பெற முடியவில்லை. மற்றும் மட்டுப்படுத்தப்பட்ட தடுப்பூசி விநியோகம் இதுவரை சீனாவிலிருந்து பெறப்பட்ட தடுப்பூசிகளை பெரிதும் நம்பியுள்ளது. அவற்றில் பல சீன அரசாங்கத்தால் நன்கொடையாக வழங்கப்பட்டன.

லோக்சின் தாமதமாக, சீனாவுக்கு அல்லாது ஆனால் அவரது சமதரப்பான சீன வெளியுறவு மந்திரி வாங் ஜி இடம் பகிரங்க மன்னிப்பு கோரினார், "இராஜதந்திரத்தில் பொருத்தமான பழக்கவழக்கங்களுடனான மிகவும் நேர்த்தியான சிந்தனையை கொண்டவருடனான எனது நட்பை நான் இழக்க விரும்பவில்லை" என்று அறிவித்தார்.

பைடென் நிர்வாகத்தின் ஆத்திரமூட்டல்களால் எல்லாவற்றிற்கும் மேலாக தென் சீனக் கடலில் பெருகிவரும் பதட்டங்கள் உலகளாவிய பதட்டங்களை கூர்மைப்படுத்தி பல ஏகாதிபத்திய சக்திகளைக் அதனுள் கொண்டு வந்துள்ளன.

பல ஆண்டுகளாக அது பயன்படுத்திய மிகப்பெரிய போர்க்கப்பல்களுடனான தனது விமானந்தாங்கி தாக்குதல் குழுமத்தை தென் சீனக் கடலுக்கு அனுப்புவதாக இங்கிலாந்து அறிவித்தது. "உலகளாவிய பிரிட்டனுக்காக கொடி பறப்பது-எங்கள் செல்வாக்கைப் பாதுகாத்தல், நமது சக்தியைக் குறிக்கிறது" என்று இங்கிலாந்து பாதுகாப்புச் செயலாளர் விவரித்தார். இங்கிலாந்தின் போர்க்கப்பல்கள் போட்டிக்குரிய கடல் வழியாக பயணிக்கும்போது ஒரு அமெரிக்க கடற்படை அழிப்பானுடன் இணைந்துகொள்ளும்.

ஜப்பான், தனது தற்காப்புப் படைகள் (SDF) மூலம், பிலிப்பைன்ஸுக்கு 1 மில்லியன் அமெரிக்க டாலர் பாதுகாப்பு உதவிப் பொதியை வழங்கப்போவதாகவும், பிலிப்பைன்ஸ் இராணுவத்திற்கு மரணம் விளைவிக்காத உதவிகளை வழங்குவதாகவும், ஜப்பானிய துருப்புக்கள் பிலிப்பைன்ஸ் படைகளுக்கு பயிற்சி வழங்குவதாகவும் அறிவித்தது. இந்த ஒப்பந்தம் முதல் முறையாக ஜப்பான் தற்காப்புப் படைகள் இராணுவ உபகரணங்களை உத்தியோகபூர்வ அபிவிருத்தி உதவிகளின் ஒரு வடிவமாக வழங்குவதைக் குறிக்கிறது.

சீனாவிற்கு எதிரான வாஷிங்டன் தனது பிரச்சாரத்தை கூர்மைப்படுத்துவதால், மணிலாவின் புவிசார் அரசியல் நிலைப்பாடு பற்றிய கேள்வி, பிலிப்பைன்ஸில் நடைபெறவிருக்கும் 2022 ஜனாதிபதித் தேர்தல்களின் மைய விடயமாக மாறியுள்ளது.

எதிர்க் கட்சியான லிபரல் கட்சியின் தலைவரான துணை ஜனாதிபதி லெனி ரொபிரெடோ ஞாயிற்றுக்கிழமை தனது வாராந்திர வானொலி உரையில் ஜனாதிபதியை "சீனா சார்பு" என்று கண்டித்தார். தென் சீனக் கடலில் சீனாவின் படகுகளை எதிர்கொள்வது போரின் ஆபத்தை எழுப்புகிறது என்று டுரேற்ற மீண்டும் மீண்டும் கூறுவது "எங்கள் இறையாண்மையை ஜன்னலுக்கு வெளியே எறிந்து விடுவது போலாகின்றது" என்று அவர் கூறினார்.

டுரேற்றவுக்கு எதிரான உயரடுக்கு அரசியல் எதிர்ப்பு 1 சம்பாயான் என்று அழைக்கப்படும் ஒரு குடை அமைப்பில் ஒன்றிணைந்தது. பெய்ஜிங்கிலிருந்து விலகி பிலிப்பைன்ஸ் வெளியுறவுக் கொள்கையை மாற்றியமைக்க தேர்தல்களைப் பயன்படுத்தி வாஷிங்டனின் முகாமுக்கு திரும்புவதற்கான முயற்சியே புதிய குழுவின் முக்கிய கவனமாகும்.

1 சம்பாயானுக்குப் பின்னால் உள்ள இரண்டு முன்னணி அமைப்பாளர்கள் இந்த நிகழ்ச்சி நிரலை எடுத்துக்காட்டுகின்றனர். ஒபாமா நிர்வாகத்தின் "ஆசியாவில் முன்னிலை" என்பதில் அக்கினோ நிர்வாகத்தின் ஒருங்கிணைப்பின் ஒரு பகுதியாக தென் சீனக் கடலில் பதட்டங்களை கூர்மையாக்கும் மணிலாவின் நடவடிக்கைகளின் மத்தியில் ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி அன்டோனியோ கார்பியோ மற்றும் முன்னாள் வெளியுறவு செயலாளர் ஆல்பர்ட் டெல் ரொசாரியோ இருந்தனர். தென் சீனக் கடலின் போட்டிக்குரிய பகுதிகளுக்கு மணிலா சட்டபூர்வ கோரிக்கையை ஹேக்கில் உள்ள கடல் சட்டம் குறித்த சர்வதேச தீர்ப்பாயத்தின் முன் சமர்ப்பித்ததற்கு கார்பியோ மற்றும் டெல் ரொசாரியோ ஆகியோர் நேரடியாக பொறுப்பேற்றனர்.

தீர்ப்பை வழங்குவதற்கு ஒரு மாதத்திற்கு முன்பே டுரேற்ற பதவியேற்றதால், 2016 நடுப்பகுதியில் மணிலாவுக்கு ஆதரவாக நீதிமன்றத்தின் தீர்ப்பு பிராந்தியத்தில் நிலைமைகளை மாற்றியமைக்கவில்லை. சீனாவுடனான மேம்பட்ட வர்த்தக மற்றும் இராஜதந்திர உறவுகளைப் பாதுகாப்பதற்கான ஒரு வழியாக தென் சீனக் கடலில் பதட்டங்களைக் குறைக்க டுரேற்ற முயன்றார். டுரேற்றவுக்கு எதிரான முதலாளித்துவ எதிர்ப்பு இந்த நிலைமையை மாற்றியமைக்கவும், 2016 தீர்ப்பை பயன்படுத்தி மணிலாவின் கோரிக்கையை வலியுறுத்தவும் பிராந்தியத்தில் பதட்டங்களை கடுமையாக அதிகரிக்கவும் முயல்கிறது.

மே 5 அன்று ஒரு உரையில், டுரேற்ற இந்த விடயத்திற்கு திரும்பினார். "அவர்கள் ஒரு வழக்கைத் தாக்கல் செய்தனர், நாங்கள் வென்றோம். நிஜ வாழ்க்கையில் நாடுகளுக்கு இடையே அந்த காகிதத்தில் பெறுமதி ஒன்றுமில்லை. ”கார்பியோ டுரேற்ற இராஜினாமா செய்ய வேண்டும் என்ற பகிரங்கக் கோரிக்கையை வெளியிட்டார். டுரேற்ற கார்பியோவை ஒரு பொது விவாதத்திற்கு வருமாறு சவால் செய்தார். கார்பியோ அதனை ஏற்றுக்கொண்டார், ஆனால் டுரேற்ற பின்னர் பின்வாங்கிவிட்டார்.

சபீனா கடற்திட்டிகளில் சீனக் கப்பல்கள் கண்டுபிடிக்கப்பட்டதற்கு பதிலளிக்கும் விதமாக 1சம்பாயானின் முன்னணி ஆதரவாளரான பிலிப்பைனின் முன்னாள் வெளிவிவகார செயலாளர் ஆல்பர்ட் டெல் ரொசாரியோ ஒரு அறிக்கையை வெளியிட்டார். அதில் “எங்கள் தேசிய இறையாண்மையை, பிராந்திய ஒருமைப்பாட்டை, தேசிய நலன்களை மற்றும் சுயநிர்ணய உரிமையை பாதுகாக்க பிலிப்பைனியர்களான எங்களுக்கு ஒரு கூட்டு அரசியலமைப்பு கடமை உள்ளது” என்றார்.

1சம்பாயானின் ஆதரவிற்கான ஒரு முக்கிய கூறு பிலிப்பைன்ஸின் ஸ்ராலினிச கம்யூனிஸ்ட் கட்சி (CPP) மற்றும் அதன் அரசியல் வழியைப் பின்பற்றும் பல்வேறு தேசிய ஜனநாயக அமைப்புகள் என்று அழைக்கப்படுபவற்றிலிருந்து கிடைக்கின்றது. ஸ்ராலினிச கம்யூனிஸ்ட் கட்சியின் நிறுவனரும் கருத்தியல் தலைவர் ஜோஸ் மா. சிசன் தனது பேஸ்புக்கில் வெளியிடப்பட்ட அறிக்கையில், பிலிப்பைன் இறையாண்மையை கைவிட்டதாகக் கூறி டுரேற்றவை "ஒரு துரோகி" என்று குறிப்பிடுகின்றார்.

ஒரு முன்னணி தேசிய ஜனநாயக அமைப்பான பாயான் முனா, 1சம்பாயானின் ஸ்தாபக உறுப்பினராக உள்ளது. அங்கு அது முதலாளித்துவ எதிர்ப்புடனும் வலதுசாரி மாக்டலோ கட்சியுடனும் இணைந்துள்ளது. மாக்டலோ கட்சி இராணுவ அதிகாரி குழுவின் சதித்திட்டமிடும் பிரிவினரால் நிறுவப்பட்டது.

கோவிட்-19 தொற்றுநோயின் பிடியில் பிலிப்பைன்ஸ் உள்ளது. ஜப்பானிய ஆக்கிரமிப்பிற்கு பின்னரான பாரிய பசியின் மோசமான சூழ்நிலையில் உழைக்கும் மக்களும் ஏழைகளும் பாதிக்கப்பட்டுள்ளனர். சீனாவுடனான பதட்டங்களை அதிகரிப்பதற்கும், அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் போர் உந்துதலில் மீண்டும் சேருவதற்கும் உள்ள நலன்களின் அடிப்படையில் நிறுவப்பட்ட 1சம்பாயானின் தேர்தல் நலன்களுக்குப் பின்னால் நாடு முழுவதும் எழுந்து வரும் வெகுஜன எதிர்ப்பை ஸ்ராலினிச கம்யூனிஸ்ட் கட்சியும் அதன் அதனுடன் இணைந்த அமைப்புகளும் திசைதிருப்ப முயற்சிக்கின்றன.

Loading