மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்
ஜோர்ஜ் ஃப்ளோய்டைப் படுகொலை செய்த மின்னெசோட்டாவின் மினெயாபொலிஸ் முன்னாள் அதிகாரி டெரிக் சோவான் மீதான வழக்கில் வழங்கப்பட்ட குற்றத்தீர்ப்புக்கு விடையிறுத்து, பைடென் நிர்வாகமும் ஊடகங்களும் பொலிஸ் வன்முறையானது "அமைப்புரீதியான இனவாதம்" மற்றும் "வெள்ளையின மேலாதிக்கத்தின்" விளைவு என்ற சொல்லாடல்களை முன்நகர்த்துகின்றன.
தீர்ப்பு அறிவிக்கப்பட்ட சிறிது நேரத்திலேயே செவ்வாய்க்கிழமை இரவு உரையாற்றிய பைடென், ஃப்ளோய்டின் மரணம் "அமைப்புரீதியான இனவாதத்தை" அம்பலப்படுத்தி இருப்பதாகவும், "அது நம் தேச ஆன்மா மீது விழுந்த கறை" என்றும் அறிவித்தார். “அது கறுப்பின அமெரிக்கர்களுக்கான நீதியின் கழுத்தை கால் முட்டியால் நெரித்த நடவடிக்கை… அந்த வலியை, அந்த மனச்சோர்வை கறுப்பினத்தவர்களும் பழுப்புநிற அமெரிக்கர்களும் ஒவ்வொரு நாளும் அனுபவிக்கின்றனர்,” என்றார். பொலிஸ் படுகொலைகளை அடக்குவதற்குப் பொலிஸ் துறையிலும் நீதித்துறையிலும் "தலைதூக்கி உள்ள இன வேற்றுமைகள் மற்றும் அமைப்புரீதியிலான இனவாதத்தை ஒப்புக் கொண்டு எதிர்த்து போராடுவது" அவசியமாகிறது என்றவர் வலியுறுத்தினார்.
விதிவிலக்கின்றி, அமெரிக்காவில் பொலிஸ் வன்முறை என்பது ஊடகங்களிலும் அரசியல் ஸ்தாபகத்திலும் ஒரு இன மோதலாக சித்தரிக்கப்படுகிறது. இந்த விவரிப்புக்கும் பொலிஸ் வன்முறையின் யதார்த்தத்திற்கும் இடையிலான தொடர்பின்மை மலைப்பூட்டுகிறது.
வாஷிங்டன் போஸ்ட் சேகரித்த தரவுகளின்படி, 2015 ஆரம்பத்திலிருந்து அமெரிக்காவில் 6,222 பேர் பொலிஸாரால் கொல்லப்பட்டுள்ளனர். கடந்த இரண்டு தசாப்தங்களில் ஆப்கானிஸ்தானில் கொல்லப்பட்ட அமெரிக்க சிப்பாய்களை விட அண்மித்து மூன்று மடங்கிற்கும் அதிகமானவர்கள் வெறும் ஆறு ஆண்டுகளில் பொலிஸ் உடனான மோதலில் கொல்லப்பட்டுள்ளனர்.
பலியானவர்களை இனத்தின் அடிப்படையில் அடையாளப்படுத்தி பிரித்து பார்த்தால், அதில் 2,885 பேர் வெள்ளை இனத்தவர், 1,499 கறுப்பினத்தவர்கள், 1,052 பேர் ஹிஸ்பானிக், 104 பேர் ஆசியர்கள், 87 பேர் பூர்வீக அமெரிக்கர்கள், 47 பேர் ஏனையவர்களாக வகைப்படுத்தப்படுகிறார்கள். சதவீதத்தின் அடிப்படையில் பார்த்தால், 46.4 சதவீதம் பேர் வெள்ளை இனத்தவர், 24 சதவீதம் பேர் கறுப்பினத்தவர்கள், 17 சதவீதம் ஹிஸ்பானிக், 1.7 சதவீதம் பேர் ஆசியர்கள், 1.4 சதவீதம் பேர் பூர்வீக அமெரிக்கர், 0.75 சதவீதம் பேர் ஏனைய வகைப்பாட்டில் உள்ளனர் மற்றும் 8.8 சதவீதம் பேர் அடையாளம் காணப்படாதவர்களாக உள்ளனர்.
ஒட்டுமொத்த மக்கள்தொகையில் ஒப்பிட்டால், பொலிஸால் கொல்லப்பட்ட ஆபிரிக்க அமெரிக்கர்கள் மற்றும் பூர்வீக அமெரிக்கர்களின் எண்ணிக்கை பொருத்தமற்ற விகிதாசாரத்தில் உள்ளது, அதேவேளையில் வெள்ளை இனத்தவர்களும், ஹிஸ்பானியர்கள் மற்றும் ஆசியர்கள் மக்கள்தொகையில் அவர்களின் பங்கை விட குறைவான விகிதத்தில் கொல்லப்பட்டுள்ளனர். பூர்வீக அமெரிக்கர்களோ மக்கள்தொகையில் அவர்களின் பங்கை விட ஏழு மடங்கு அதிகமான விகிதத்தில் கொல்லப்பட்டுள்ளனர், அதேவேளையில் கருப்பினத்தவர்களோ சுமார் இரண்டு மடங்கு அதிகமாக உள்ளனர்.
பல பொலிஸ் படுகொலைகளில் இனவெறியே ஒரு காரணியாக இருந்துள்ளது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை, ஆனால் அது ஒட்டுமொத்த சமூகத்தின் இனவெறி கிடையாது. அது சமூகத்தின் ஒரு குறிப்பிட்ட பிரிவிலும், பொலிஸ் மற்றும் இராணுவ படைகளிலும் உள்ள இனவெறியாகும். ஆளும் வர்க்கம் அதன் ஒடுக்குமுறை எந்திரத்திற்குள் அனைத்து விதமான பாசிசவாத மற்றும் பிற்போக்குத்தனமான கருத்துருக்களையும் வளர்க்கிறது.
ஆனால் கொல்லப்பட்டவர்கள் பலியான இடத்தின் சமூக பொருளாதார பின்னணி—பொதுவாக குறைந்த நடுத்தர குடும்ப வருமானம் மற்றும் உயர் விகித வறுமை கொண்ட பகுதிகள்— காரணியாக உள்ளது, பெரும்பாலான ஏற்றத்தாழ்வுகள் பொருளாதார காரணிகளின் கணக்கில் வருகின்றன.
பொலிஸ் படுகொலைகள் பற்றிய புள்ளிவிபரங்களைப் பார்க்கையில், பலியான கறுப்பினத்தவர்கள் மீது பிரத்யேகமாக ஒருங்குவிவது யதார்த்தத்தை சிதறடிப்பதற்காக மட்டுமல்ல, மாறாக அது அமெரிக்காவில் பொலிஸ் காட்டுமிராண்டித்தனத்தின் அளவைப் பரந்தளவில் குறைத்துக் காட்டவும் செய்கிறது. இந்த சமூக நிகழ்வுபோக்கை, இனவாதம் என்ற ஒரேயொரு காரணியைக் கொண்டு விவரிப்பது, பலியானவர்களில் பெரும்பாலானவர்களைக் கண்டு கொள்ளாமல் ஒதுக்கிவிடுகிறது. ஊடகங்களின் சித்தரிப்புகள், வெள்ளை இனத்தவர்கள் மற்றும் ஏனையவர்கள் மீதான பொலிஸ் படுகொலைகள் நியாயமானவை என்பதைப் போல உள்அர்த்தப்படுத்துகின்றன.
நியூ யோர்க் டைம்ஸ் இன் 1619 திட்டத்தில் மிகவும் தெளிவாக வெளிப்பட்டவாறு, மாநில மற்றும் பிரதான ஊடகங்கள், அமெரிக்க சமூகத்தின் இனவாத சொல்லாடலை ஊக்குவிப்பதில், அதாவது அமெரிக்கா என்பது "வெள்ளையின அமெரிக்கா" மற்றும் "கறுப்பின அமெரிக்கா" என்று பிரிந்து கிடக்கிறது என்பதை ஊக்குவிப்பதில் மிகப்பெரும் தொகைகள் முதலீடு செய்யப்பட்டுள்ளன. ஒட்டுமொத்த அமெரிக்க வரலாறையும் மற்றும் சமகால அரசியலையும் இனம் என்ற முப்பரிமாண பட்டகத்தின் மூலமாக பொருள்விளங்கப்படுத்தவும் மற்றும் எல்லா சமூக பிரச்சினைகளையும் இனவாத பிரச்சினைகளாக மாற்றி கூறுவதற்குமான முயற்சிக்கு எதை கணக்கில் கொண்டு வருவது?
அமெரிக்க சமூகத்தின் இன பகுப்பாய்வுக்கு வர்க்க பகுப்பாய்வு தான் ஒரு மாற்றீடாகும். “அமைப்புரீதியிலான இனவாதம்" மற்றும் "வெள்ளையின மேலாதிக்கம்" என்று பழிசுமத்தும் போது, முதலாளித்துவம் மற்றும் வர்க்க ஒடுக்குமுறையின் யதார்த்தம் மறைக்கப்படுகிறது. அப்போது சமூக சமத்துவமின்மை பிரச்சினை பணக்காரர்களுக்கும் ஏழைகளுக்கும் இடையே இருப்பதில்லை, மாறாக வெள்ளை இனத்தவர்களுக்கும் கறுப்பினத்தவர்களுக்கும் இடையே ஏற்படுத்தப்படுகிறது.
இந்தளவிலான பொலிஸ் வன்முறைக்கு இந்த முதலாளித்துவ அமைப்புமுறையின் பொறுப்பு —அதாவது, உலகெங்கிலும் பில்லியன் கணக்கானவர்களின் வாழ்க்கை விளைவுகளுக்குக் கட்டளையிடும் ஒரு குறிப்பிட்ட அரசியல் மற்றும் சமூகபொருளாதார அமைப்புமுறை— வகிக்கும் பொறுப்பு கரைத்து விடப்படுகிறது. அதன் இடத்தில், மக்கள்தொகையின் ஒட்டுமொத்த பிரிவுகளிலும் ஓர் உளவியல் குணாம்சமாக, இன வெறுப்பு, இணைக்கப்படுகிறது. சோவான் என்பவர் குறிப்பாக கறுப்பின மக்கள் மீது வெள்ளையின மக்கள் அனைவரது வெறுப்பின் ஓர் அப்பட்டமான வெளிப்பாடு என்பதைத் தவிர வேறொன்றுமில்லை என்று சித்தரிக்கப்படுகிறார். இத்தகைய ஒரு முன்னோக்கு தொழிலாள வர்க்கத்திற்கு இடையே பாரியளவில் பிளவை ஏற்படுத்தி, வர்க்க விரோதங்களை இன வெறுப்புக்குள் கரைத்து விட, கறுப்பினத்தவர்கள் மற்றும் வெள்ளை இனத்தவர்களுக்கு இடையிலான எந்த வடிவிலான கூட்டு நடவடிக்கையையும் தடுக்கிறது.
பைடெனின் கருத்துக்கள், சோவானின் குற்றத்தைத் தேசத்தின் "ஆன்மாவிலேயே" தங்கியிருக்கும் ஒரு குற்றமாக மாற்றி, பொலிஸைக் காப்பாற்றுவதற்காக அதைப் பூசிமொழுகுகிறது. ஆனால் ஃப்ளோய்டின் கழுத்தில் முழங்கால் வைத்து நெரித்தது தேசம் இல்லை; அவரைக் கொன்ற சோவான் தான் அதை செய்தார். மேலும் அவருடன் இன்னும் சிலர் உடன் இருந்தனர். ஃப்ளோய்டைக் கொல்ல அவருக்கு உதவிய ஏனைய மூன்று பொலிஸ் அதிகாரிகள், வெள்ளை இனத்தவர், ஆபிரிக்க அமெரிக்கர் மற்றும் ஆசிய அமெரிக்கர் ஆவார்கள். இவர்கள் மூவரும் அவர்களது தோல் நிறத்திற்கு இணங்க அல்ல, மாறாக அரசு மற்றும் தனிச்சொத்துடையைப் பாதுகாக்கும் சீருடை அணிந்த ஆயுதமேந்திய பாதுகாவர்களாக அவர்களின் ஆற்றலைச் செயல்படுத்தி இருந்தனர்.
பொலிஸ் காட்டுமிராண்டித்தனத்திற்கான காரணத்தை "அமைப்புரீதியிலான இனவாதம்" என்று முறையிடுபவர்களால், ஒவ்வொரு ஆண்டும் பொலிஸால் கொல்லப்படுபவர்களில் பெரும்பான்மை பங்கினர் ஏன் வெள்ளை இனத்தவர்களாகவே இருக்கிறார்கள் என்பதை விளங்கப்படுத்த முடியாது. அனைத்து போராட்டங்கள் மற்றும் சீர்திருத்தத்திற்கான வாக்குறுதிகளுக்கு மத்தியிலும், ஏன் தொடர்ந்து நாளொன்றுக்கு சராசரியாக மூன்று பேராவது பொலிஸால் கொல்லப்படுகிறார்கள் என்பதையும் அவர்களால் விளக்க முடியாது.
மார்ச் 29 இல் தொடங்கிய சோவான் மீதான வழக்கு நடந்து கொண்டிருந்த போதே, அமெரிக்கா எங்கிலும் குறைந்தது 56 பேராவது பொலிஸால் படுகொலை செய்யப்பட்டிருந்தனர். பலியானவர்களை இனரீதியில் அடையாளப்படுத்தினால், அதில் ஒன்பது பேர் வெள்ளை இனத்தவர்கள், ஒன்பது பேர் கறுப்பினத்தவர்கள், ஏழு பேர் ஹிஸ்பானியர் மற்றும் ஒருவர் பசிபிக் தீவுவாசி ஆவர். அந்த தீர்ப்பு வழங்கப்பட்டதற்கு அடுத்த நாள், ஓஹியோவின் கொலம்பஸில் 15 வயதான Ma’Kiah Bryant ஒரு பொலிஸ் அதிகாரியால் சுட்டுக் கொல்லப்பட்டார். டெட்ராய்ட், மிச்சிகன், லேக்வுட், கொலராடோ மற்றும் மாசசூசெட்ஸின் வொர்செஸ்டர் ஆகிய இடங்களிலும் பயங்கர பொலிஸ் துப்பாக்கிச் சூடு நடந்தன.
தொற்றுநோயால் தீவிரப்படுத்தப்பட்ட அளப்பரிய சமூக சமத்துவமின்மை நிலைமைகளின் கீழ், முதலாளித்துவ அமைப்புமுறைக்கு எதிராக ஓர் ஒருங்கிணைந்த வர்க்க போராட்ட இயக்கம் எழுவதைத் தடுப்பதே ஜனநாயகக் கட்சியின் பிரதான கவலையாக உள்ளது. பொலிஸ் வன்முறைக்கு எதிராக வெவ்வேறு இனத்தவர்களும் கலந்து கொண்ட பாரிய வெகுஜன போராட்டங்களுக்குப் பாசிசவாத ட்ரம்ப் கொடூரமான சட்ட-ஒழுங்கு நடவடிக்கைகளைக் கொண்டும், போராட்டங்களை ஒடுக்க மத்திய எல்லை ரோந்துப்படையினரை நிலைநிறுத்தியும் விடையிறுத்தார், அதேவேளையில் ஜனநாயகக் கட்சியினரோ அவர்களின் சொந்த அணுகுமுறையைக் கையாள்கிறார்கள்.
ஈவிரக்கமற்று இருப்பதில் குடியரசுக் கட்சியினருக்குக் குறைந்திராத ஜனநாயகக் கட்சியினர் வீதிகளில் ரோந்து செல்லவும் மற்றும் பொலிஸ் ஒடுக்குமுறைகளுக்குப் பின்புலத்தில் உதவவும் தேசிய பாதுகாப்புப்படைகளை அணித்திரட்டுகின்றனர், அதேவேளையில் தொழிலாளர்களை ஒருவருக்கு எதிராக ஒருவரை பிளவுபடுத்துவதற்காக இன அரசியலைப் பயன்படுத்துகிறார்கள். அவர்கள் பொலிஸ் வன்முறைக்கு எதிரான எதிர்ப்பின் வர்க்க தன்மையை மறைக்க முயல்வதுடன், பொலிஸ் வன்முறைக்கு எதிரான ஒரு வர்க்க இயக்கத்திற்குக் குழிபறிக்க முயல்கிறார்கள். பொலிஸ் நடவடிக்கைகள் கறுப்பினத்தவர்களுக்கு எதிரான வெள்ளை இனத்தவர்களின் பிரச்சினை என்ற கருத்தை ஊக்குவிக்க, இதுவரையில், Black Lives Matter அமைப்பான கறுப்பின மக்களின் உயிரும் மதிப்புடையே இயக்கத்திற்குள்ளும் மற்றும் அதனுடன் இணைந்த அமைப்புகளுக்குள்ளும் பத்து மில்லியன் கணக்கான டாலர்கள் பாய்ச்சப்பட்டுள்ளது.
சோவான் மீதான வழக்கு இந்த இனவாத சொல்லாடலை மறுத்தளிக்கிறது. வெவ்வேறு இனத்தைச் சேர்ந்தவர்கள் பங்குபெற்றிருந்த நீதி விசாரணை குழு வெகு விரைவிலேயே அந்த படுகொலைக்கு சோவான் குற்றவாளி என்ற முடிவுக்கு வந்தது. இரத்தம் உறைய வைக்கும் அந்த கொடூர கொலைக்குச் சாட்சியளித்தவர்கள், கறுப்பினத்தவர்களும் சரி வெள்ளை இனத்தவர்களும் சரி, மிரட்சியோடு சாட்சி அளித்தனர். தீர்ப்பு வாசிக்கப்பட்ட போது, நீதிமன்றத்திற்கு வெளியே பல இனத்தவர்கள் நிறைந்த ஒரு கூட்டம் அதை கொண்டாடியது.
ஒரு சமூக நிகழ்வாக, பொலிஸ் வன்முறை என்பது “வெள்ளையின மேலாதிக்கம்" அல்லது "அமைப்புரீதியிலான இனவாதத்தில்" இருந்து எழுவதில்லை; அது, அடிப்படையில், பொலிஸ் துறைகள் எதை பாதுகாக்க உருவாக்கப்பட்டதோ அந்த முதலாளித்துவ ஒழுங்கமைப்பிலேயே வேரூன்றி உள்ளது. இனம், வம்சாவழி, தேசம் என இவற்றையெல்லாம் கடந்து ஒருங்கிணைந்து, முதலாளித்துவத்தைத் தூக்கியெறிந்து, தொழிலாளர்கள் கட்டுப்பாட்டிலான ஒரு சமூகத்தை நிறுவுவதற்காக போராடும் ஒரு தொழிலாள வர்க்க இயக்கத்தால் மட்டுமே, பொலிஸின் கொடூர ஆட்சிமுறையை முடிவுக்குக் கொண்டு வர முடியும்.