மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்
கடந்த வியாழக்கிழமை, ஏப்ரல் 15 அன்று பிரெஞ்சு தேசிய சட்டமன்றமானது மக்ரோன் அரசாங்கத்தின் "பொதுப் பாதுகாப்பு" (“global security”) மசோதாவிற்கு ஒப்புதல் அளிக்க வாக்களித்தது, இது பொலிஸ் அதிகாரங்களை கணிசமாக விரிவுபடுத்துகிறது. இந்த சட்டத்திற்கு ஏற்கனவே பிப்ரவரியில் செனட் ஒப்புதல் அளித்தது; வியாழனன்று வாக்கெடுப்புடன், அது இப்போது சட்டமாக வருகிறது.
கடந்த ஆண்டு நவம்பரில் தேசிய சட்டமன்றத்தில் முதலில் கொண்டுவரப்பட்டிருந்த இந்தச் சட்டமானது வெகுஜன எதிர்ப்புக்களை தூண்டியிருந்தது. அதன் மையப் பகுதியான ஷரத்து 24 ஆனது காவல்துறையை படம் பிடிக்கும் மக்களின் உரிமையை கட்டுப்படுத்துகிறது. இலக்கு வைக்கப்பட்ட தாக்குதல்களிலிருந்து பொலிஸ் அதிகாரிகளை பாதுகாத்தல் என்ற பெயரில் முன்வைக்கப்பட்டாலும், அதன் தெளிவான நோக்கமானது எதிர்ப்பாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் மீது வன்முறைத் தாக்குதல்களில் தொடர்ந்து ஈடுபடும் பொலிசாருக்கு, மக்கள் படம்பிடிப்பதை தடுப்பதன் மூலம், மக்களை வன்முறையில் தாக்குவதற்கு தண்டனையின்றி பாதுகாப்பு வழங்குவதாகும்.
பல்லாயிரக்கணக்கான மக்கள் எதிர்ப்புக்களை எதிர்கொண்ட நிலையில், மக்ரோன் அரசாங்கமானது ஷரத்து 24 ஐ "மீண்டும் எழுத" உறுதியளித்திருந்தது. புதிய பதிப்பானது இனி வெளிப்படையாக போலீஸ்காரர்களின் "படங்களை பகிர்வு" செய்வதை குறிப்பிடவில்லை. மாறாக, "அவர்களின் உடல் மற்றும் மன பாதுகாப்பு தாக்குதலுக்கு உட்படுத்தப்படும் என்ற வெளிப்படையான நோக்கத்துடன், அவர்கள் ஒரு போலீஸ் நடவடிக்கையின் ஒரு பகுதியாக செயல்படும் போது தேசிய போலீஸ், இராணுவம் அல்லது போலீஸ்காரரை அடையாளம் காணும் தூண்டுதல் [தூண்டுதல்கள்]" ஆகிய எந்தவொரு செயலையும் அது குற்றமாக்குகிறது. இதற்கு அதிகபட்சம் ஐந்து ஆண்டுகள் சிறைத் தண்டனையும் 75,000 யூரோக்கள் அபராதமும் விதிக்கப்படும்.
நடைமுறையில், ஒரு பொலிஸ்காரரை அடையாளம் காணும் வீடியோவை வெளியிடும் எவரும் குற்றவியல் ரீதியாக வழக்குத் தொடரப்படும் அபாயத்தை எதிர்கொள்கின்றனர், மேலும் ஒரு அதிகாரி மீது தாக்குதலைக் கொண்டுவருவதற்கான “வெளிப்படையான நோக்கம்” அவர்களிடம் இல்லை என்பதை நிரூபிக்க அவர்கள் மீது பொறுப்பு வைக்கப்படும்.
பிரான்சிலும் சர்வதேச ரீதியாகவும் தொழிலாளர்களும் இளைஞர்களும் அமைதியான எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் மீது பிரெஞ்சு அரசின் வன்முறை மற்றும் மிருகத்தனத்தின் வீடியோக்களால் சீற்றம் அடைந்துள்ளனர். 2018 இல், கலகப் பிரிவு போலீசார் எதிர்ப்பாளர்களை சாலையின் குறுக்கே இழுத்துச் செல்வது, இரப்பர் தோட்டாக்கள் மற்றும் கண்ணீர்ப்புகை குண்டுகளை சுடுவது, மற்றும் சமூக சமத்துவமின்மையை எதிர்க்கும் "மஞ்சள் சீருடை" எதிர்ப்பாளர்களுக்கு எதிராக தாக்குதல் நாய்களை ஏவிவிடுவது மற்றும் தடியடியைப் பயன்படுத்துவது போன்ற வீடியோக்களை மில்லியன் கணக்கானவர்கள் பார்த்துள்ளனர்.
கடந்த நவம்பரில், வீடியோவில் பிடிபட்ட பொலிஸ் மிருகத்தனமான சம்பவங்களுக்கு விடையிறுக்கும் வகையில் நாடு முழுவதும் நூறாயிரக்கணக்கானவர்கள் ஆர்ப்பாட்டங்களில் கலந்து கொண்டனர். நவம்பர் 26 அன்று, லூப்சைடர் இணையவழி ஊடகமானது இசை தயாரிப்பாளர் மைக்கேல் ஜெக்லர் தனது பாரிஸ் ரெக்கார்டிங் ஸ்டுடியோவில் அவர் மீது ஒரு கொடூரமான போலீஸ் தாக்குதலின் வீடியோவை வெளியிட்டது. ஜெக்லர் இருபது நிமிடங்களுக்கு மேல் தாக்கப்பட்டார். பின்னர் அவர் 48 மணி நேரம் சிறையில் போடப்பட்டு, பொய்யாக தாக்குதல் நடத்தியதாக குற்றம் சாட்டப்பட்டார், உண்மையில் என்ன நடந்தது என்பதை நிரூபிக்கும் சிசிடிவி காட்சிகளை போலீசார் வழங்கிய பின்னரே விடுவிக்கப்பட்டார்.
அடுத்த வாரம், நகரத்தின் மையத்திலுள்ள குடியரசு சதுக்கத்தில் நடந்த வன்முறையில் போலீசார் படமாக்கப்பட்டனர், அதில் வீடுகள் மற்றும் அரசாங்க ஆதரவு இல்லாததால் அங்கு முகாமிட்டிருந்த அகதிகளை போலீசார் அடித்து துவைத்தனர்.
மக்ரோன் அரசாங்கம் பொலிசாரின் வீடியோக்கள் பரவுவதை எதிர்க்க முற்படுகிறது, ஏனெனில் உழைக்கும் மக்களுக்கு எதிரான அவரது அரசாங்கத்தின் ஒடுக்குமுறைக்கு வெடிப்புத்தன்மையான எதிர்ப்பை அது அறிந்துள்ளது.
"பொதுப் பாதுகாப்பு" சட்டமானது காவல்துறையை மேலும் வலுப்படுத்தும் பிற நடவடிக்கைகளையும் உள்ளடக்கியுள்ளது. முதல் முறையாக, அது ஏற்கனவே நடைமுறையில் இருந்த போலீஸ் கண்காணிப்புக்கு ட்ரோன்களை பயன்படுத்துவதை சட்டத்தில் அங்கீகரிக்கிறது. அனைத்து எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களையும் கண்காணிக்க ட்ரோன்கள் பயன்படுத்த அனுமதிக்கப்படுகின்றன. நேரடி வீடியோவை நேரடியாக தலைமையகத்திற்கு ஒளிபரப்புச் செய்ய (stream live video) வேண்டிய உடலில் கேமராக்கள் போலீசாரிடம் பொருத்தப்பட உள்ளன.
தானியங்கிமுறை முக அடையாள தொழில்நுட்பம் மூலம் உடல்கமிராக்கள் (bodycam) காட்சிகளைப் பயன்படுத்துவதற்கான எல்லாக் கட்டுப்பாடுகளும் இந்த மசோதாவில் அடங்குகிறது. கடந்த டிசம்பரில், மக்ரோன் அரசாங்கம் தொடர்ச்சியான நிர்வாக ஆணைகளை இயற்றியது, அதில் குடிமக்களின் கருத்துக்கள் மற்றும் அரசியல் நடவடிக்கைகள் உட்பட மக்கள் பற்றிய விரிவான கோப்புகளை போலீசார் சேகரிக்கக்கூடிய நிலைமைகளை விரிவுபடுத்தியது. இது தற்போதுள்ள போலீஸ் விதிகளிலுள்ள ஒரு சட்ட உட்பிரிவை அகற்றியது, இது பெரிய அளவிலான தானியங்கிமுறை முக அடையாள தொழில்நுட்பத்தால் போலீஸ் கோப்புகளை பயன்படுத்துவதை வெளிப்படையாக தடுத்தது.
சட்டரீதியான உரிமைகள் சங்கமான Quadrature du Net அந்த நேரத்தில் குறிப்பிட்டது: அதாவது "பொதுப் பாதுகாப்பு சட்டத்தின் மூலம், அனைத்து எதிர்ப்பாளர்களும் ஒரு ஆர்ப்பாட்டத்தில் படமாக்கப்படலாம் என்றால், மற்றும் ... அவர்களில் பெரும் பகுதியை முக அடையாள தொழில்நுட்பம் மூலம் அடையாளம் காணலாம், [போலீஸ் கோப்பு அமைப்புமுறைகள் - police filing systems] ஏற்கனவே ஒரு நீதிபதியால் அங்கீகரிக்கப்படாமல் அல்லது எடைபோடப்படாமல், அவர்களைப் பற்றிய அனைத்து தகவல்களையும் மையப்படுத்துவதற்கான ஒரு முழுமையான அமைப்பை அவர்களுக்காக தயார் செய்துள்ளன."
"பொதுப் பாதுகாப்பு" சட்டத்தின் கீழ், உணவகங்கள் மற்றும் சினிமாக்கள் போன்ற பொது இடங்களில், அவர்கள் கடமையில் இருக்கும்போது உட்பட, எல்லா நேரங்களிலும் அவர்களுடன் ஒரு ஆயுதத்தை எடுத்துச் செல்ல காவல்துறை அனுமதிக்கப்படுகிறது.
ஞாயிறன்று வலதுசாரி நாளேடான லு ஃபிகாரோவிற்கு அளித்த பேட்டியில், இமானுவல் மக்ரோன் அடுத்த ஆண்டு தனது ஐந்தாண்டு பதவிக்காலம் முடிவடைவதற்குள் காவல்துறையில் 10,000 புதிய பதவிகளை உருவாக்குவதற்கான தனது தேர்தல் உறுதிமொழியை நிறைவேற்றப் போவதாகக் கூறினார். "ஒவ்வொரு பிரெஞ்சு நபரும் 2017 ஐ விட 2022 இல் களத்தில் அதிக நீலநிறத்தைப் பார்ப்பார்கள்," என்று அவர் கூறினார்.
பிரான்சில் கொரோனா வைரஸின் உத்தியோகபூர்வமாக குறைவாக கணக்கிடப்பட்ட இறப்பு எண்ணிக்கையானது 100,000 ஐ விஞ்சியநிலையில், மக்ரோனின் பொலிஸ்-அரசு சட்டத்தை அங்கீகரித்த தேசிய சட்டமன்றத்தின் வாக்கெடுப்பு நடந்தது. அத்தியாவசியமற்ற உற்பத்தியை மூடவேண்டிய எந்த விஞ்ஞானபூர்வ பொதுமுடக்கக் கொள்கையையும் மறுத்து மக்ரோன் பின்பற்றிய கொள்கைகளின் விளைவாக இந்த பாரிய வெகுஜன மரணம் ஏற்பட்டுள்ளது. பள்ளிகள் மற்றும் அத்தியாவசியமற்ற பணியிடங்கள் திறந்தே வைக்கப்பட்டுள்ளன, இதனால் தொழிலாளர்கள் வேலையில் இருக்க முடியும், மற்றும் பிரெஞ்சு பெருநிறுவனங்களுக்கு இலாபங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.
பாரிய அளவில் இந்த மரணங்களுடன் சேர்ந்து, இந்த ஆண்டு ஒரு சிறிய பெருநிறுவன உயரடுக்கு மேலும் செல்வச் செழிப்பைக் கண்டுள்ளது. 42 பில்லியனர்கள் இப்போது 512.2 பில்லியன் டாலர்கள் மொத்த செல்வத்தைக் கொண்டுள்ளனர், இது ஒரே ஆண்டில் 66 சதவீதத்திற்கும் அதிகமான அதிகரிப்பைக் கொண்டுள்ளது. பிரெஞ்சு ஆளும் வர்க்கக் கருத்துக்கள், பாரிய மரணத்தின் மீது இலாபம் ஈட்டும் அதன் கொள்கைகளுக்கு எதிராக சமூக கோபம் வெடித்துவிடுமோ என்ற அச்சத்தில், அதற்கு எதிராக அரசு அடக்குமுறை சக்திகளை கட்டியெழுப்புகிறது.
சோசலிஸ்ட் கட்சி (PS), பசுமைவாதிகள் (Greens) மற்றும் ஜோன்-லூக் மெலோன்சோனின் அடிபணியா பிரான்ஸ் கட்சி (LFI) ஆகிய அனைத்தும் மக்ரோனின் பொலிஸ் சட்டத்தை எதிர்ப்பவர்கள் என்று மோசடியாக காட்டிக் கொண்டுள்ளன. சோசலிஸ்ட் கட்சி முழு மசோதாவிற்கு எதிராகவும் ஒரு சட்ட ரீதியான சவாலைத் தொடங்கப் போவதாக அறிவித்துள்ளது.
பிரான்சுவா ஹாலண்டின் கீழ் அது அதிகாரத்தில் இருந்தபோது, சோசலிஸ்ட் கட்சியானது ஹாலண்டின் கீழ் இரண்டு ஆண்டு கால அவசரகால சட்டத்தை இயற்றி சிவில் உரிமைகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது உட்பட பொலிஸ் அதிகாரங்களை கணிசமாக விரிவுபடுத்தியது. மக்ரோனின் "பொதுப் பாதுகாப்பு" சட்டமானது அடிபணியாத பிரான்ஸ் கட்சியின் (LFI) ஆதரவுடன் ஹாலண்டின் கீழ் பின்பற்றப்பட்ட அதே திசையில் பொலிஸ் அதிகாரங்களை விரிவுபடுத்துகிறது.