இலங்கையில் 38 ஓல்டன் தோட்டத் தொழிலாளர்களை நிர்வாகம் இடைநீக்கம் செய்கிறது

இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.

இலங்கையின் மத்திய பெருந்தோட்ட மாவட்டத்தின் மஸ்கெலியாவில் உள்ள ஓல்டன் தோட்ட நிர்வாகம், தோட்ட முகாமையாளர் மீது சரீரத் தாக்குதலில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டி, 38 தொழிலாளர்களை இடைநீக்கம் செய்துள்ளது. 47 நாட்கள் வேலை நிறுத்தத்திற்குப் பின்னர், புதன்கிழமை வேலைக்குத் திரும்பிய போதே, இந்த கடுமையான தண்டனை நடவடிக்கை குறித்து தொழிலாளர்களுக்கு அறிவிக்கப்பட்டது.

2018 அக்டோபரில் 1,000 ரூபாய் தினசரி ஊதியம் கோரி மஸ்கெலியாவில் சாமிமலையில் உள்ள மொக்கா தோட்டத்தைச் சேர்ந்த தோட்டத் தொழிலாளர்கள் நடத்திய போராட்டம் (Photo: WSWS media)

ஓல்டன் தொழிலாளர்கள் உடனடியாக கம்பனியின் ஆத்திரமூட்டும் நடவடிக்கைகளை எதிர்த்து வேலையை நிறுத்தம் செய்ததுடன், பாதிக்கப்பட்ட சக தொழிலாளர்களை உடனடியாக மீண்டும் பணியில் அமர்த்துமாறு கோரினர். இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் (இ.தொ.கா.) தலைவர் ஜீவன் தொண்டமான், வெள்ளிக்கிழமை வேலையை மீண்டும் தொடங்கும்படி அவர்களை வற்புறுத்தினார். தொண்டமான், ஜனாதிபதி இராஜபக்ஷ அரசாங்கத்தில் தோட்ட உள்கட்டமைப்பு அமைச்சராக உள்ளார்.

நிர்வாகம் அதன் ஜனநாயக விரோத தாக்குதல்களை அதிகரிப்பதானது, ஓல்டன் தோட்டத் தொழிலாளர்களைப் பாதுகாப்பதற்காக சோசலிச சமத்துவக் கட்சி (சோ.ச.க) முன்னெடுக்கும் பிரச்சாரத்தை தொழிலாளர்கள், மாணவர்கள் மற்றும் இளைஞர்களும் ஆதரிக்க வேண்டியதன் அவசியத்தை எடுத்துக் காட்டுகிறது. இ.தொ.கா. மற்றும் ஏனைய தோட்டத் தொழிற்சங்கங்களின் உடந்தையுடன் கம்பனியும் பொலிசும் கூட்டாக தீட்டிய சதித்திட்டத்தின் விளைவாக இடை நீக்கம் செய்யப்பட்டுள்ள அனைத்து தொழிலாளர்களையும் நிபந்தனையின்றி மீண்டும் வேலையில் அமர்த்துவதோடு அவர்கள் மீது சுமத்தப்பட்டுள்ள போலி குற்றச்சாட்டுகளை விலக்கிக்கொள்ள வேண்டும் என்று கோருகிறது.

பெப்ரவரி 18 அன்று, தோட்ட முகாமையாளர் சுபாஷ் நாராயணனை தாக்கியதாக குற்றம்சாட்டி எட்டு தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டதுடன் மார்ச் 1, அதே குற்றச்சாட்டுக்காக மேலும் இரண்டு இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்கள் அனைவரும் ஹட்டன் நீதவானால் கண்டி சிறையில் விளக்கமறியலில் அடைக்கப்பட்டனர். பின்னர் இ.தொ.கா. மேலும் 12 தொழிலாளர்களை பொலிசில் சரணடைய வைத்தது. கைது செய்யப்பட்ட அனைவரும் மார்ச் 10 அன்று விடுவிக்கப்பட்ட போதிலும், கடுமையான பிணை நிபந்தனைகளின் பேரிலேயே விடுவிக்கப்பட்டனர்.

எபோட்சிலி தோட்டத் தொழிலாளர்கள் 2018 டிசம்பரில் 1,000 ரூபாய் தினசரி ஊதியத்திற்கான பிரச்சாரத்தின் போது ஹட்டன் நகரத்திற்கு பேரணியாகச் சென்றனர் (Photo: WSWS media)

கம்பனி மேலும் 18 தொழிலாளர்களின் பட்டியலைத் தயாரித்து, அவர்களும் குறித்த தாக்குதலில் சம்பந்தப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டியுள்ளது. அவர்களில் 4 பேர் இன்று மாஸ்கெலியா பொலிஸ் நிலையத்திற்குச் சென்று, இரண்டாவது முறையாக இந்த சம்பவம் குறித்து வாக்குமூலம் கொடுக்குமாறு கட்டளையிடப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட மற்றும் இடைநீக்கம் செய்யப்பட்ட தொழிலாளர்களின் முழு பட்டியலையும் இ.தொ.கா.வின் ஒத்துழைப்புடன் பொலிசும் தோட்ட நிர்வாகமும் உருவாக்கின. ஓல்டன் தோட்டத்தில் செயல்பட்டு வரும் மேலும் இரண்டு தொழிற்சங்கங்களான தொழிலாளர் தேசிய சங்கம் மற்றும் மலையக மக்கள் முன்னணியும், இந்த ஜனநாயக விரோத தாக்குதலில் இ.தொ.கா.வின் ஒத்துழைப்பை மௌனமாக ஆதரித்தன.

நீதிமன்றத்தை எதிர்கொள்ளும் தொழிலாளர்களை, வழக்குகள் விசாரித்து முடிக்கப்படும் வரை இடைநீக்கம் செய்வதற்கான கம்பனியின் தீர்மானத்திற்கு தோட்டத் தொழிற்சங்கங்கள் ஒப்புக்கொண்டுள்ளன. ஏனைய 18 தொழிலாளர்களுக்கும் இடைநீக்க கடிதங்கள் வழங்கப்படும் என்று நிர்வாகம் அறிவித்துள்ளது.

22 தொழிலாளர்கள் மீதான வழக்கின் அடுத்த விசாரணை ஏப்ரல் 28 இடம்பெறும். அவர்கள் சட்டவிரோத ஒன்றுகூடல் மற்றும் தோட்ட முகாமையாளருக்கு கடுமையான காயத்தை ஏற்படுத்தியமை போன்ற குற்றச்சாட்டின் பேரில் விசாரிக்கப்பட உள்ளனர். குற்றம் நிரூபிக்கப்பட்டால், இந்த குற்றச்சாட்டுகளுக்கு முறையே ஆறு மாதங்கள் மற்றும் ஏழு ஆண்டுகள் வரை அவர்கள் சிறையில் அடைக்கப்படலாம்.

தோட்ட முகாமையாளருக்கு எதிராக எந்தவொரு வன்முறையிலும் தாம் ஈடுபடவில்லை என தொழிலாளர்கள் மறுத்துள்ளனர். சம்பள உயர்வு மற்றும் சிறந்த வேலை நிலைமைகளை கோரியும் தோட்ட நிர்வாகத்தின் ஆத்திரமூட்டும் நடவடிக்கைகளுக்கு எதிராகவும் போராடியதே அவர்கள் செய்த ஒரே 'குற்றம்' ஆகும்.

சுமார் 500 ஓல்டன் தோட்டத் தொழிலாளர்கள் ஆரம்பத்தில் பிப்ரவரி 2 அன்று சம்பள உயர்வு கோரி வேலை நிறுத்தம் செய்தனர், பின்னர் இ.தொ.கா. நீண்டகாலமாக காலங்கடத்தப்பட்டு வரும் 1,000 ரூபாய் தினசரி ஊதியத்திற்காக பெப்ரவரி 5 அன்று அழைப்பு விட்ட ஒரு நாள் தேசிய வேலைநிறுத்தத்திலும் இணைந்துகொண்டனர்.

எபோட்சிலி தோட்டத் தொழிலாளர்கள் 2018 டிசம்பரில் 1,000 ரூபாய் நாள் சம்பளம் கோரி போராடிய போது தொழிற்சாலையின் வாயிலில் மறியல் போராட்டம் நடத்தினர் (Photo: WSWS media)

தோட்டக் கம்பனிகள் சம்பள அதிகரிப்பை மறுத்து வருவதால் தோட்டத் தொழிலாளர்கள் மத்தியில் அதிகரித்து வரும் கோபத்தைத் திசைதிருப்ப இந்த ஒரு நாள் வேலை நிறுத்தத்துக்கு இ.தொ.கா. அழைப்பு விடுத்தது.

ஊதிய உயர்வைப் பெறுவதில் உறுதியாக இருந்த ஓல்டன் தோட்டத் தொழிலாளர்கள் தேசிய வேலை நிறுத்தத்துக்குப் பின்னரும் வேலை நிறுத்தத்தை தொடரத் தீர்மானித்தனர். தோட்ட முகாமையாளரின் தொடர்ச்சியான ஆத்திரமூட்டல்களைத் தொடர்ந்து, பெப்ரவரி 17 அன்று அவரது வீட்டுக்கு வெளியே ஒரு ஆர்ப்பாட்டத்தை நடத்த தொழிலாளர்கள் முடிவு செய்தனர். தொழிலாளர்கள் முகாமையாளரை தாக்கியதாகக் குற்றம்சாட்ட நிர்வாகம் பின்னர் இந்தப் போராட்டத்தைப் பற்றிக்கொண்டது.

தோட்டத் தொழிலாளர்களுக்கு எதிரான இந்த வேட்டையாடலை அனைத்து தேயிலை மற்றும் ரப்பர் தோட்டங்களை இயக்கும் எல்லா பிராந்திய பெருந்தோட்ட நிறுவனங்களும் ஆதரிக்கின்றன. அடுத்தடுத்து ஆட்சிக்கு வந்த அரசாங்கங்களின் ஆதரவுடன், இந்த நிறுவனங்கள் தோட்டத் தொழிலாளர்களின் வறிய மட்ட தினசரி ஊதியத்தை அதிகரிக்க தொடர்ந்தும் மறுத்துவருகின்றன. தோட்டத் தொழிலாளர்களின் தற்போதை ஊதியம் வெறும் 700 ரூபா (3.5 அமெரிக்க டொலர்) ஆகும்.

தோட்டக் கம்பனிகள் வருமான பகிர்வு என்று அழைக்கப்படும் திட்டத்தின் மூலம் தொழிலாளர் செலவுகளை குறைக்க முயல்கின்றன. இந்த முறைமையின் கீழ், ஒரு தொழிலாளிக்கு ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான தேயிலை செடிகள் அல்லது ரப்பர் மரங்கள் ஒதுக்கப்படுகின்றன, அவற்றை தொழிலாளர்களும் அவர்களது குடும்பமும் பராமரிக்க வேண்டும். அறுவடையை கொள்வனவு செய்துகொள்ளும் கம்பனி, உரம், இரசாயனங்கள் மற்றும் உபகரணங்களை வழங்கியதற்கான செலவையும் தனது இலாபத்தையும் கழித்துக்கொண்டு, மீதமுள்ள வருமானத்தை தொழிலாளிக்கு கொடுக்கின்றது.

தொழிற்சங்கங்கள் முழுமையாக ஆதரிக்கும் அதே வேளை, தங்களை குத்தகை விவசாயிகளாக கீழிறக்குகின்ற மற்றும் தொழிலாளர்களின் ஓய்வூதியம் மற்றும் கடும் போராட்டத்தில் வென்ற மட்டுப்படுத்தப்பட்ட நலன்களையும் அழிப்பதற்கு கம்பனிகளை அனுமதிக்கின்ற இந்த திட்டத்தை தோட்டத் தொழிலாளர்கள் எதிர்த்தனர்.

கொரோனா வைரஸ் தொற்றுநோயால் மோசமடைந்துள்ள கடுமையான பொருளாதார நிலைமைகளை இப்போது எதிர்கொண்டுள்ள தோட்ட நிறுவனங்கள், உற்பத்தித் திறனை அதிகரிப்பதற்கும் செலவுகளைக் குறைப்பதற்கும் சபதமெடுத்துள்ளன. ஓல்டன் தோட்டத் தொழிலாளர்களின் இடைநீக்கங்கள் மற்றும் சிறைவைப்பு உட்படட தொடர்ச்சியான அடக்குமுறைகள், அரசாங்கத்தினதும் தொழிற்சங்கங்களதும் ஆசீர்வாதத்துடன் பெரும் வணிகர்கள் தங்களது நோக்கங்களை அடைய எதையும் செய்யத் தயாராக உள்ளனர் என்பதை தெளிவுபடுத்துகிறது.

இந்த மாத தொடக்கத்தில், தொழிலாளர்கள் 'வன்முறை' செய்ததாக தோட்ட உரிமையாளர்கள் சுமத்திய போலி குற்றச்சாட்டுகளுக்கு பிரதிபலித்த அரசாங்கத்தின் தேசிய பாதுகாப்பு சபை, தோட்டங்களில் பாதுகாப்பு பிரச்சினைகள் என்று அழைக்கப்பட்டது குறித்து கலந்துரையாடியது.

எவ்வாறாயினும், இராஜபக்ஷ அரசாங்கம், தோட்டத் தொழிலாளர்களின் பெருகிவரும் கோபத்தை மட்டுமன்றி ஊதியங்கள், தொழில்கள் மற்றும் வேலை நிலைமைகள் சம்பந்தமாக தொழிலாள வர்க்க கோரிக்கைகளின் அதிகரித்து வரும் அலைகளையும் எதிர்கொள்கிறது. கடந்த வாரம் ஆசிரியர்கள் மற்றும் சுகாதாரம், மின்சாரம், நீர் வழங்கல், புகையிரதம் மற்றும் ஆடைத் தொழிலாளர்களின் வேலைநிறுத்தங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றன.

ஓல்டன் தோட்டத் தொழிலாளர்களைப் பாதுகாக்க முன்வருமாறு தொழிலாளர்கள், இளைஞர்கள் மற்றும் அடிப்படை ஜனநாயக உரிமைகள் மீதான அதிகரித்துவரும் அரசாங்கத்தினதும் முதலாளிமார்களதும் தாக்குதல்கள் குறித்து அக்கறை கொண்ட அனைவரையும் நாங்கள் கேட்டுக்கொள்கிறோம். இந்த முகவரிக்கு உங்களது ஆதரவு அறிக்கைகளை அனுப்பி வையுங்கள் wswscmb@sltnet.lk

கடந்த வாரம் எங்களுக்கு கிடைத்த சில கருத்துகளை இங்கு பிரசுரிக்கின்றோம்.

ஜா-எல எஸ்குவல் ஆடை தொழிற்சாலை தொழிலாளர்கள், புத்தாண்டு முற்கொடுப்பனவு கோரி வருகின்றனர். தொற்றுநோய் காரணமாக முற்கொடுப்பனவை வழங்க முடியாது என்று நிறுவனம் மறுத்துவிட்டது.

'இது நம் அனைவருக்கும் எதிரான முதலாளிகளின் தாக்குதலின் ஒரு பகுதியா இருப்பதால், இந்த தொழிலாளர்கள் வேட்டையாடப்படுவதற்கு எதிராக நாங்கள் பிரச்சாரம் செய்ய வேண்டும், கைது செய்யப்பட்ட தொழிலாளர்கள் மீதான கடுமையான குற்றச்சாட்டுகள் கைவிடப்பட வேண்டும்,' என்று ஒரு பெண் தொழிலாளி கூறினார்.

ஆடைத் தொழில்துறை தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் குறைந்த ஊதியத்தைப் பற்றி அவர் மேலும் கூறுகையில், “தோட்டத் தொழிலாளர்களும் வறிய மட்ட ஊதியத்தையே பெறுகிறார்கள், அவர்களின் ஊதியம் குறைந்தது 1,000 ரூபாயாக உயர்த்தப்பட வேண்டும் என்று நான் நினைக்கிறேன், அவர்களின் ஊதியம் அதிகரிக்கப்பட வேண்டும் என்றும் நாங்கள் பிரச்சாரம் செய்ய வேண்டும்,” என அவர் தெரிவித்தார்.

மத்துகமவைச் சேர்ந்த ஆசிரியர் பி. சதுருங்கா கூறியதாவது: “தொழிலாளர்களின் ஊதியக் கோரிக்கையை வழங்காத அரசாங்கமும் கம்பனிகளும் அவர்களை மிரட்டவும் அடக்கவும் முயற்சிக்கின்றன. முதலாளிமார், அரசாங்கம் மற்றும் தொழிற்சங்கங்களின் கூட்டில் முன்னெடுக்கப்படும் அந்த வேட்டையாடலை நான் எதிர்க்கிறேன்.

'ஆசிரியர்களான எங்களுக்கு இதே போன்ற அனுபவங்கள் உள்ளன. முதலாளித்துவ அரசாங்கங்கள் பல தசாப்தங்களாக ஆசிரியர்கள் எதிர்கொள்ளும் ஊதியப் பிரச்சினைகளைத் தீர்க்கவில்லை, இதை எதிர்த்துப் போராடுவதற்கான ஆசிரியர்களின் முயற்சிகளை கடுமையாக நசுக்கியுள்ளன. தோட்டத் தொழிலாளர்களின் அடக்குமுறையைத் தடுக்கும் போராட்டத்தில் ஒட்டுமொத்த தொழிலாள வர்க்கமும் இணைய வேண்டும் என்று நான் நினைக்கிறேன்.”

வடக்கில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த கட்டுமானத் தொழிலாளியான W.S. முரளி தெரிவித்ததாவது: “பெருந்தோட்ட தொழிற்சங்கங்களின் தலைவர்கள் அனைவரும் அமைச்சர்களாக இருந்து அரசாங்கத்திற்காக சேவையாற்றியுள்ளனர், அதனால் ஓல்டன் தோட்டத் தொழிலாளர்கள் கைது செய்யப்படுவதை அவர்கள் ஆதரிப்பதில் ஆச்சரியமில்லை. தோட்டத் தொழிலாளர்களின் விடுதலைக்காக போராட முன்வருமாறு அனைத்து தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களை நான் கேட்டுக்கொள்கிறேன்.” பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான கொழும்பின் 30 ஆண்டுகால இனவாதப் போர், தமிழர்கள் மீதான இரத்தக்களரி இராணுவ அடக்குமுறை மற்றும் இளைஞர்கள் தொடர்ந்து கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுகின்றமை பற்றியும் அவர் கருத்து தெரிவத்தார்.

ஒரு செய்தித்தாள் கார்ட்டூனிஸ்ட் பின்வரும் அறிக்கையை அனுப்பியிருந்தார்:

“இந்த அடக்குமுறையை நான் கடுமையாக எதிர்க்கிறேன். இது, கம்பனிகளும் பொலிசும் நீண்ட காலமாக மேற்கொண்டு வந்த அடக்குமுறையை தீவிரப்படுத்துவதாகும். கிடைக்கின்ற அனைத்து தகவல்களும், இது தொழிலாளர்களுக்கு எதிரான ஒரு கட்டமைப்பாகும் என்பதைக் காட்டுகிறது.

'இந்த வேட்டையாடலில் கம்பனிகள், பொலிஸ் மற்றும் அரசாங்கமும் கூட்டாக ஈடுபட்டுள்ளன என்பதை நான் புரிந்துகொண்டுள்ளேன். தோட்ட முகாமையாளர்கள் தொழிலாளர்கள் மீது பயன்படுத்த ஆயுதங்களை கோருவது ஒரு பாரதூரமான விஷயம் ஆகும்.”

ஒவ்வொரு நாட்டிலும் உள்ள தொழிலாளர்கள் முதலாளித்துவ வர்க்கத்தின் அதிகரித்து வரும் தாக்குதல்களை எதிர்க்கத் தொடங்கியுள்ளனர் என்றும், இலங்கையிலும் ஏனைய நாடுகளிலும் கருத்துச் சுதந்திரம் தாக்குதலுக்கு உள்ளாகி வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். 'தொழிலாளர்கள் மீதான அடக்குமுறைக்கு தொழிலாளர்களின் எதிரிகள் ஒன்றுபட்டுள்ளதால், இந்த தாக்குதலுக்கு எதிராக எங்கள் தரப்பிலிருந்து ஒரு ஐக்கியப்பட்ட போராட்டத்தை நாங்கள் திட்டமிட வேண்டும்.'

மேலும் படிக்க

Loading