மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்
அலபாமாவின் அமசன் பெஸ்ஸெமர் கிடங்கில் தொழிலாளர்களைத் தொழிற்சங்கமயப்படுத்துவதற்கான RWDSU தொழிற்சங்கத்தின், அதாவது சில்லரை மற்றும் மொத்த விற்பனை, பல்பொருள் அங்காடி தொழிற்சங்கத்தின் முயற்சிகளை முழுமையாக ஆதரித்து ஞாயிற்றுக்கிழமை இரவு ஜனாதிபதி ஜோ பைடென் ஒரு காணொளி வெளியிட்டார். பேர்மின்ஹாமிற்குச் சற்று வெளியே அமைந்துள்ள அந்த சரக்கு கையாளும் இடத்திலுள்ள அண்மித்து 6,000 தொழிலாளர்கள் இப்போது RWDSU இல் இணைவதா வேண்டாமா என்று வாக்களித்து வருகிறார்கள்.
அந்த தொழிற்சங்க முனைவில் "ஆம்" என்று வாக்களிக்குமாறு பைடென் அலபாமா தொழிலாளர்களுக்குத் தெளிவாக அழைப்புவிடுத்தார், இந்த வாக்கெடுப்பு மார்ச் 29 இல் முடிவடைகிறது. “தேசிய தொழிலாளர் உறவுகள் சட்டம், தொழிற்சங்கங்கள் இருக்க அனுமதிப்பதை மட்டும் குறிப்பிடவில்லை,” என்று கூறிய அவர், “நாம் தொழிற்சங்கங்களை ஊக்குவிக்க வேண்டுமென அது குறிப்பிடுகிறது,” என்றார்.
அவர் தொடர்ந்து கூறுகையில், “அலபாமாவிலும் மற்றும் அமெரிக்கா எங்கிலுமான தொழிலாளர்கள், இன்றும் அடுத்த சில நாட்கள் மற்றும் வாரங்களில் அவர்களின் வேலையிடங்களில் தொழிற்சங்கத்தை ஒழுங்கமைக்க வேண்டுமா வேண்டாமா என்பதன் மீது வாக்களிக்கிறார்கள். இது மிகவும் முக்கியமானது —மிக முக்கியமான தேர்வாகும்— ஏனெனில் கொடிய தொற்றுநோய், பொருளாதார நெருக்கடி மற்றும் இனத் துவேஷத்திற்கிடையே அமெரிக்கா போராடிக் கொண்டிருக்கிறது —இன்னமும் நம் நாட்டில் நிலவும் ஆழமான ஏற்றத்தாழ்வுகளை இவை வெளிப்படுத்துகின்றன,” என்றார்.
பைடெனின் தலையீடு வரலாற்று ரீதியில் முன்னோடியில்லாதது. ஜனாதிபதி பிராங்க்ளின் டி. ரூஸ்வெல்ட் 1935 இல் தேசிய தொழிலாளர் உறவுகள் சட்டத்தில் கையெழுத்திட்ட பின்னர், அப்போது புதிதாக ஒழுங்கமைக்கப்பட்ட தொழில்துறை சங்கங்களின் தலைவர்கள் அறிவிக்கையில், "நீங்கள் ஒரு தொழிற்சங்கத்தில் இணைந்திருக்க வேண்டுமென ஜனாதிபதி விரும்புகிறார்" என்றார்கள். ஆனால் உண்மையில் ரூஸ்வெல்ட் ஒருபோதும் அவ்வாறு குறிப்பிடவில்லை.
இப்போதைய விசயத்தில், பைடென் நடுநிலையாக இருப்பதற்கான எந்த அறிகுறியும் காட்டவில்லை, அமசன் மிரட்டல்களைக் குற்றஞ்சாட்டி தொழிற்சங்கத்திற்கு வாக்களிக்குமாறு தொழிலாளர்களுக்கு அவர் அழைப்பு விடுத்துள்ளார். வெள்ளை மாளிகையின் ஒட்டுமொத்த கௌரவத்தையும் பைடென் இந்த வாக்களிப்புக்குப் பின்னால் நிறுத்தி உள்ளார். பெஸ்ஸெமரில் "ஆம்" வாக்குகளை உறுதிப்படுத்தவும் மூலோபாய முக்கியத்துவத்திற்கும் இரண்டு விதத்திலும் அவர் நிர்வாகத்தின் நேரடி ஆதரவு அவசியம் என்று அவர் உணர்ந்ததால் அன்றி இதை அவர் செய்திருக்க மாட்டார்.
பைடென் இந்தளவுக்கு பலமாக தலையிட்டுள்ளார் என்ற உண்மையே, அமசனில் தொழிற்சங்கமயப்படுத்தும் பிரச்சாரத்தில் சம்பந்தப்பட்டுள்ளது எதுவோ அதற்கும் அமசன் தொழிலாளர்களின் நலன்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்ற வாதங்களை அம்பலப்படுத்துகிறது. 1973 இல் இருந்து 2009 வரையில், செனட் சபையில் பைடெனின் முழு தொழில் வாழ்வும், எந்தவொரு சமூக சீர்திருத்த திட்டத்தையும் ஜனநாயகக் கட்சி கைவிட்டு, “ரீகனோமிக்ஸ்" க்கு இடமளித்ததுடன் ஒத்துப் போகிறது.
டெலாவேரின் “டுபோனில் இருந்து வந்த செனட்டர்" என்று நீண்டகாலமாக அறியப்பட்ட பைடென், நீதித்துறை குழு மற்றும் வெளியுறவுத்துறை குழு உட்பட ஆளும் வர்க்க நலன்களுக்கு மிக முக்கியமான குழுக்களில் சேவையாற்றியவர். வங்கி நெறிமுறைகளைத் தளர்த்துவதிலும் ஏனைய வலதுசாரி நடவடிக்கைகளுக்கும் ஒரு மைல்கல்லாக இருந்த Glass-Steagall சட்டத்தை 1999 இல் இரத்து செய்ததை அவர் ஆதரித்தார். செனட்டில் கிட்டத்தட்ட நான்கு தசாப்தங்களாக இருந்த பின்னர், பைடென் ஒபாமாவின் துணை ஜனாதிபதி ஆகி, 2008 நிதி நெருக்கடியைத் தொடர்ந்து வோல் ஸ்ட்ரீட்டிற்கு வழங்கப்பட்ட பாரிய பிணையெடுப்பையும் அதையடுத்து செல்வந்தர்களுக்குப் பயனளிக்கும் விதத்தில் வர்க்க உறவுகளை மறுசீரமைப்பதையும் மேற்பார்வையிட உதவினார். புதிதாக பணியமர்த்தப்படும் வாகனத்துறை தொழிலாளர்கள் அனைவருக்கும் 50 சதவீத கூலி வெட்டு என்ற அடிப்படையில், ஜெனரல் மோட்டார்ஸ் மற்றும் கிறைஸ்லரின் பிணையெடுப்பும் அதில் உள்ளடங்கும்.
2020 தேர்தல்களில், எந்தவொரு சமூக சீர்திருத்த திட்டத்தையும் வெளிப்படையாக நிராகரிக்கும் அடிப்படையில் கட்சி தலைமையில் தலையீடு செய்து பைடென் ஜனநாயகக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் ஆனார். பைடென் பேர்ணி சாண்டர்ஸிற்கு வலதுசாரி மாற்றீடாக முன் உயர்த்தப்பட்டார்.
அமசனில் தொழிற்சங்கமயப்படுத்தும் பிரச்சாரத்திற்கு சார்பாக பைடெனின் பலமான தலையீட்டை, ஆளும் வர்க்கத்தின் முக்கிய பிரிவுகளின் வெறும் தந்திரோபாய முடிவாக அல்ல, ஒரு மூலோபாயமாக மட்டுமே பொருள்படுத்த முடியும். என்ன பரிசீலனைகள் இந்த கொள்கையை முன்னுக்கு கொண்டு வருகின்றன?
முதலாவதாக, இந்த பெருந்தொற்றால் மிகப் பெரியளவில் தீவிரப்படுத்தப்பட்டுள்ள ஒரு முன்னோடியில்லா நெருக்கடியை ஆளும் வர்க்கம் எதிர்கொண்டுள்ளது. ஆளும் வர்க்கம் உயிர்களைக் காப்பாற்றுவதற்கு அவசியமான நடவடிக்கைகளை எடுக்க தவறியதன் விளைவாக, கடந்தாண்டு கோவிட்-19 ஆல் அண்மித்து 530,000 பேர் உயிரிழந்துள்ளனர். நாசகரமான சமூக மற்றும் பொருளாதார நிலைமைகளுடன் சேர்ந்து, பாரிய உயிரிழப்புகளின் தாக்கம், தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களின் நனவை ஆழமாக தீவிரமயப்படுத்தி வருகிறது.
ட்ரம்ப் இந்த நிலைமைக்கு விடையிறுக்க, பாசிசவாத அமைப்புகளைத் தொழிலாள வர்க்க அமைதியின்மைக்கு எதிரான ஒரு தாக்குமுகப்பாக பயன்படுத்தும் விதத்தில் அவற்றை ஊக்குவித்தார். ஜனநாயகக் கட்சியினரோ தொழிற்சங்கங்களைப் பயன்படுத்துவதன் மூலம் சமூக எதிர்ப்பை மூச்சடைக்க வைக்க முயன்று வருகிறார்கள். இது, இன மற்றும் பாலின அடையாளத்தின் அரசியலை ஊக்குவிப்பதன் மூலம் தொழிலாளர்களை ஒருவருக்கு எதிராக ஒருவரைப் பிளவுபடுத்தும் இடைவிடாத முயற்சிகளுடன் இணைக்கப்பட்டுள்ளது. முக்கியமாக, பைடென் அமசனில் அவரின் தலையீட்டை இனவாத வார்த்தைகளில் வடிவமைத்தார், தொழிற்சங்கங்களை “குறிப்பாக கறுப்பின மற்றும் பழுப்பின தொழிலாளர்களை" பாதுகாப்பதற்கான கருவிகளாக அவர் சித்தரித்தார்.
இரண்டாவதாக, சர்வதேச நிலைமையும் ஆளும் வர்க்கத்தின் கவலைக்குரியதில் குறைவானதல்ல, அது அதன் உலகளாவிய மேலாதிக்க நிலையைத் தக்கவைத்துக் கொள்வதில் இராணுவ பலத்தைப் பயன்படுத்த உறுதியாக உள்ளது. பைடென் நிர்வாகம் ரஷ்யாவை நோக்கி அதுவும் குறிப்பாக சீனாவை நோக்கி அதிகரித்தளவில் ஒரு மோதல் கொள்கையை முன்னெடுத்து வருகிறது. இந்தக் கொள்கையின் தர்க்கம் போருக்கு வழி வகுக்கிறது. ஒரு மிகப் பெரிய "வல்லரசு மோதல்" சம்பவத்தில், இந்த முதலாளித்துவ-சார்பு தொழிற்சங்கங்கள் தேசிய பேரினவாதத்தை ஊக்குவிப்பதிலும் வர்க்கப் போராட்டத்தை அடக்குவதிலும் முக்கியமானவையாக இருக்கும். வெளிநாடுகள் மீதான போருக்கு உள்நாட்டில் ஓர் ஒழுக்கமான “தொழிலாளர் இயக்கம்” தேவைப்படுகிறது.
அமசனில் பைடெனின் தலையீடானது, தொழிற்சங்கங்களை இன்னும் நேரடியாக அரசு எந்திரம் மற்றும் பெருநிறுவன நிர்வாகத்துடன் ஒருங்கிணைத்து அவற்றை ஊக்குவிக்கும் ஒரு பரந்த மூலோபாயத்தின் ஒரு பகுதியாகும். ஜனவரியில் அவர் பதவியேற்பதற்கு முன்னரே, எப்போதும் விரும்பத்தக்க "தொழிற்சங்க சார்பு" ஜனாதிபதியாக இருப்பேன் என்றவர் உறுதியளித்தார்.
பைடென், நவம்பர் மாத மத்தியில், 2020 தேர்தல்களுக்குப் பின்னர், AFL-CIO தலைவர் ரிச்சர்ட் ட்ரூம்கா உட்பட ஜெனரல் மோட்டார்ஸ், மைக்ரோசாப்ட், டார்கெட் மற்றும் பிற நிறுவனங்களின் நிறுவன நிர்வாகிகளுடன் ஒரு சந்திப்பை நடத்தினார். கூட்டத்தில் தன்னை “ஒரு தொழிற்சங்கக்காரராக”, ஆனால் “அது வணிக எதிர்ப்பாக இருக்காது” என்று பைடென் கூறியதாக செய்திகள் குறிப்பிட்டன. அவர் தொடர்ந்து கூறுகையில், "நாம் இப்போது மிகவும் இருண்ட துளையில் இருக்கிறோம்,” ஆனால் "நாம் [அதாவது, தொழிற்சங்க நிர்வாகிகள், பெருநிறுவன தலைமை செயலதிகாரிகள் மற்றும் வரவிருந்த பைடென் நிர்வாகம்] அனைவரும் பொதுவான குறிக்கோள்களில் உடன்படுகிறோம்,” என்பதையும் அவர் சேர்த்துக் கொண்டார்.
பைடென் பின்பற்றும் மூலோபாயம் பெருநிறுவனவாதம் (corporatism) என்று அழைக்கப்படுகிறது—அதாவது, முதலாளித்துவ அமைப்பைப் பாதுகாப்பதன் அடிப்படையில் பெருநிறுவனங்கள் மற்றும் தொழிற்சங்கங்களுடன் அரசை ஒருங்கிணைப்பதாகும். 1938 இல், ட்ரொட்ஸ்கி நான்காம் அகிலத்தின் ஸ்தாபக ஆவணத்தில் எழுதுகையில், இந்த போக்கின் மீது கவனத்தைக் கொண்டு வந்தார், “நீடித்த வர்க்க போராட்ட காலங்களில், முன்னணி தொழிற்சங்க அமைப்புகள் பாரிய இயக்கத்தைப் பாதிப்பில்லாதவையாக செய்ய அதன் எஜமானர்களாக ஆக முயல்கின்றன… போர் அல்லது புரட்சியின் போது, முதலாளித்துவ வர்க்கம் அசாதாரண சிக்கல்களில் மூழ்கும் போது, தொழிற்சங்க தலைவர்கள் பொதுவாக முதலாளித்துவ அமைச்சர்களாக ஆகிவிடுகிறார்கள்.”
அமெரிக்காவில் வாகனத்துறை தொழிலாளர்களின் பாரிய மறியல் வேலைநிறுத்தங்கள் உட்பட, புதிதாக நிறுவப்பட்ட தொழில்துறை சங்கங்களுடன் தொழிலாளர்கள் ஆளும் வர்க்கத்திற்கு எதிரான கிளர்ச்சிப் போராட்டங்களில் ஈடுபட்டிருந்த போது ட்ரொட்ஸ்கி இதை எழுதியிருந்தார்.
பெருநிறுவனங்கள் மற்றும் ஆளும் வர்க்கத்திற்கு எதிராக தொழிலாளர்களின் நலன்களைப் பாதுகாப்பதில் AFL-CIO எந்த வகையிலும் தொடர்புப்பட்டு பல தசாப்தங்களாகின்றன. 1981 இல் PATCO விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளர்கள் வேலைநிறுத்தம் தனிமைப்படுத்தப்பட்டு தோற்கடிக்கப்பட்டதிலிருந்து, தொழிற்சங்க இயக்கம் முழுமையாக கார்ப்பரேட் நிர்வாக கட்டமைப்புகளுக்குள் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. 1980 களில் போது, ரீகன் நிர்வாகத்தால் முன்னெடுக்கப்பட்ட ஆளும் வர்க்க எதிர்-தாக்குதலுக்கு எதிரான எதிர்ப்பை தனிமைப்படுத்தி ஒடுக்குவதில் இந்த தொழிற்சங்கங்கள் ஒரு முக்கிய பாத்திரம் வகித்தன.
1920 களில் இருந்து காணப்படாத அளவிற்கு சமூக சமத்துவமின்மையை அதிகரிக்க உதவியாக, தொழிற்சங்கங்களின் உதவியுடன், வேலைநிறுத்த நடவடிக்கைகள் 1990 களிலும் மற்றும் 21 ஆம் நூற்றாண்டின் முதல் தசாப்தங்களிலும் கிட்டத்தட்ட முழுமையாக நசுக்கப்பட்டன.
2018 இல், ஜானஸ் எதிர் AFSCME (மாநில, உள்ளாட்சி மற்றும் நகராட்சி பணியாளர்களின் அமெரிக்க கூட்டமைப்பு) வழக்கில் உச்சநீதிமன்றத்தில் வாய்வழி வாதங்களின் போது, AFSCME இன் ஒரு வழக்குரைஞர் கூறுகையில், "ஏஜென்சி கட்டணம்" என்பது —அதாவது பொதுச்சேவை பணியாளர்கள் தொழிற்சங்கத்தில் இணைவதை தவிர்த்துக் கொண்டாலும் கூட சில மாநிலங்களில் அவர்கள் சந்தாவுக்கு இணையான தொகையைச் செலுத்துவதற்கான அவசியம்— "வேலைநிறுத்தங்கள் செய்யாமல் வைத்திருப்பதற்கான பரிமாற்றமாகும்,” என்று கூறி தொழிற்சங்கங்கள் வகிக்கும் பாத்திரத்தைத் தொகுத்தளித்தார். தொழிற்சங்கங்களின் நிதிப் பாதுகாப்பை பேணாமல், "நீங்கள் நாடு முழுவதும் தொழிலாளர் அமைதியின்மையின் சொல்லமுடியாத ஒரு பேராபத்தை எழுப்பி விட முடியும்" என்றவர் எச்சரித்தார்.
AFL-CIO போன்ற பெருநிறுவன அமைப்புகள் இன்னமும் "தொழிற்சங்கங்கள்" என்று அழைக்கப்படுகின்றன என்றாலும், அவற்றின் உண்மையான நடைமுறை மற்றும் அவை வகிக்கும் பாத்திரத்திற்கும் பாரம்பரியமாக "தொழிற்சங்கம்" என்ற வார்த்தையுடன் தொடர்புடைய செயல்பாடுகளுக்கும் எந்த உறவுயும் கொண்டிருக்கவில்லை. அவை தொழிலாளர் அமைப்புகளே அல்ல, மாறாக நிர்வாகம் மற்றும் அரசின் கருவிகளாக உள்ளன.
எவ்வாறாயினும், தொழிலாள வர்க்கத்தின் எதிர்ப்பு அதிகரிப்பது குறித்து ஆளும் வர்க்கம் உணர்வுபூர்வமாக மிகுந்த கவலை கொண்டுள்ளது, இந்த எதிர்ப்பானது அமசன் தொழிலாளர்களின் தொழிலாளர் குழு உள்ளடங்கலாக, சோசலிச சமத்துவக் கட்சி மற்றும் உலக சோசலிச வலைத் தளம் முன்னெடுத்துள்ள சாமானிய தொழிலாளர் குழுவின் இயக்கமாக உறுதிப்பட்டுள்ளது. அனைத்திற்கும் மேலாக பெருநிறுவன தொழிற்சங்கங்களின் கட்டுப்பாட்டுக்கு வெளியே தகவல்களைப் பகிர்ந்து கொள்ளவும் ஒழுங்கமைக்கவும், அமெரிக்காவிலும் சர்வதேச அளவிலும் தொழிலாளர்கள், சமூக ஊடகங்களையும் மற்றும் தொலைத்தொடர்பின் ஏனைய வடிவங்களையும் பயன்படுத்தும் திறமை கொண்டிருப்பதை ஆளும் வர்க்கம் நன்கறிந்துள்ளது.
இந்த தொற்றுநோய் தொடங்கியதிலிருந்தே முதலாளித்துவச் சுரண்டலின் ஒட்டுமொத்த செயல்முறையை இன்னும் அதிகமாக கண்டிக்கின்ற அமசன் தொழிலாளர்கள் அரசியல்ரீதியில் தீவிரமயப்பட்டு வருவதன் மீது குறிப்பாக அங்கே கவலைகள் உள்ளன. உலகின் ஐந்தாவது மிகப் பெரிய நிறுவனமான இது 2020 இல் 427,000 பேரைப் பணியமர்த்தி, அமெரிக்காவில் அரை மில்லியன் உள்ளடங்கலாக, உலகெங்கிலும் மொத்தம் 1.3 மில்லியன் பணியாளர்களைக் கொண்டுள்ளது.
சாமானிய தொழிலாளர் குழுக்களின் இயக்கம் விரிவடைந்து வருவதை எதிர்ப்பதே தொழிற்சங்கங்களை ஊக்குவிப்பதன் நோக்கமாகும். தொழிற்சங்கங்களே தொழிலாளர்களின் "ஒரே சட்டபூர்வ" பிரதிநிதியாக நிறுவப்படும் போது, நடைமுறைக்கு வரும் பல சட்டங்களுக்கு தொழிலாளர்களை அடிபணியச் செய்வதை இது நோக்கமாக கொண்டுள்ளது. இதற்கு கைமாறாக, பல்வேறு தொழில்துறை பிரிவுகளில் இத்தகைய அமைப்புகளை அமைப்புமயப்படுத்துவதிலிருந்து கிடைக்கும் சங்க சந்தாவை அணுகுவதற்கு தொழிற்சங்க நிர்வாகிகளுக்கு அனுமதி வழங்கப்படும்.
அரசாங்கத்தின் பலமான ஆதரவும் அமசன் தொழிலாளர்களிடையே நிலவும் கோபமும் எதிர்ப்பும் என இவற்றின் சேர்க்கையால், பெஸ்ஸெமரில் தொழிற்சங்க முனைவு வெற்றி அடையக் கூடும். அந்த வாக்கெடுப்பின் முடிவு என்னவாக இருந்தாலும், சாமானிய தொழிலாளர் குழுக்களை நிறுவி கட்டமைப்பதற்கான போராட்டம் அபிவிருத்தி செய்யப்பட்டு விரிவாக்கப்பட வேண்டும். பெருநிறுவன-சார்பு மற்றும் ஏகாதிபத்திய-சார்பு தொழிற்சங்க எந்திரத்தால் தொழிலாளர்கள் ஒழுங்குபடுத்தப்படுவதை அனுமதிக்க முடியாது.
இது, அமசன் உரிமையாளர் ஜெஃப் பெசோஸ் போன்று இந்த தொற்றுநோயிலிருந்து இலாபமீட்டுபவர்களின் சொத்துக்களைப் பறிமுதல் செய்வது, அமசன் மற்றும் சரக்கு கையாளும் பிற நிறுவனங்களை ஒட்டுமொத்தமாக தொழிலாள வர்க்கத்திற்குச் சொந்தமான ஜனநாயக ரீதியில் கட்டுப்படுத்தப்படும் பொது நிறுவனங்களாக மாற்றுதல் உட்பட, சோசலிச கொள்கைகளுக்கான போராட்டத்தில் அமெரிக்காவிலும் சர்வதேச அளவிலும் தொழிலாள வர்க்கத்தை அணிதிரட்டுவதற்கான ஒரு புதிய அரசியல் மூலோபாயத்துடன் இணைக்கப்பட வேண்டும்.
ஆளும் வர்க்கம் தொழிற்சங்கங்களை ஊக்குவிப்பதானது, அதன் மிகவும் அடிப்படை மட்டத்தில், சோசலிசத்திலிருந்து தொழிலாளர்களைத் தனிமைப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த தொற்றுநோயால் தீவிரப்படுத்தப்பட்டு, தொழிலாள வர்க்கம் புறநிலையாக தீவிரப்படுவது ஒரு சோசலிச தலைமையை மற்றும் அரசியல் வேலைத்திட்டத்தை ஏற்கும் என்பதே ஆளும் வர்க்கத்தின் மேலோங்கிய அச்சமாகும். இந்த அச்சம் தான் அமசனில் பைடென் அசாதாரணமாக தலையிடுவதற்குப் பின்னால் உள்ளது.