நகரசபை தலைவர் மற்றொரு கதவடைப்புக்கு அச்சுறுத்துகின்ற நிலையில் சிகாகோ ஆசிரியர்கள் வேலைநிறுத்தத்திற்குத் தயாராகிறார்கள்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

அமெரிக்காவின் மூன்றாவது மிகப்பெரிய மாவட்டமான சிகாகோவில் பள்ளிகளை மீண்டும் திறப்பதைத் தடுக்க சிகாகோ கல்வியாளர்களின் போராட்டம் முக்கிய திருப்புமுனையை எட்டியது. சாமானிய ஆசிரியர்களின் சமரசத்திற்கிடமற்ற எதிர்ப்பால், தற்போது, நிலைமையின் போக்கு ஒரு வேலைநிறுத்தத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. இது, அமெரிக்கா எங்கிலும் இதேபோன்ற வேலைநிறுத்தங்களுக்கு உத்வேகமூட்டி, மிகப்பெரும் தாக்கங்களை ஏற்படுத்தக்கூடும் என்பதோடு, பள்ளிகளை மீண்டும் திறப்பதற்கு எதிராக உலகளவில் ஒரு டஜன் நாடுகளிலாவது இது கல்வியாளர்களின் வேலைநிறுத்த எழுச்சியுடன் சேரக்கூடும்.

CTU க்கு "முடிவாக, நல்லதொரு, இறுதி முன்மொழிவை" CPS அனுப்பியதோடு, சிகாகோ ஆசிரியர் சங்கம் (CTU), ஜனநாயகக் கட்சி நகரசபை தலைவி லோரி லைட்ஃபூட் மற்றும் சிகாகோ அரசு பள்ளிகள் (CPS) இடையிலான பேச்சுவார்த்தைகள் வெள்ளியன்று ஒரு முட்டுச்சந்தை எட்டியது. பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட வேண்டும் என்பதில் இரண்டு தரப்புமே அடிப்படை உடன்பாட்டைக் கொண்டுள்ளன என்றாலும், இந்த மனிதப்படுகொலை கொள்கையை எதிர்க்கும் சாமானிய கல்வியாளர்களிடம் இருந்து தொழிற்சங்கம் மிகப்பெரியளவில் அழுத்தத்தின் கீழ் உள்ளது.

Mayor Lori Lightfoot, left, and Chicago Public Schools CEO Janice Jackson, visit a preschool classroom at Dawes Elementary School in Chicago, Jan. 11, 2021 [Credit Ashlee Rezin Garcia/Chicago Sun-Times via AP, Pool]

வெள்ளிக்கிழமை மாலை, லைட்ஃபூட்டும் சுகாதாரத்துறை ஆணையர் டாக்டர். அலிசன் அர்வாட்டும், ஆசிரியர்கள், ஏனைய CPS தொழிலாளர்கள் மற்றும் நகர மக்களின் பரந்த பிரிவுகள் இடையே பிளவுகளை விதைப்பதற்காக, தடுப்பூசிக்கான வரிசையில் ஆசிரியர்கள் முன்னிலைக்கு நகர்த்தப்பட விரும்புவதாக பொய்யாக வாதிட்டு, ஒரு வெட்கக்கேடான முயற்சியாக ஒரு காணொளி வெளியிட்டனர்.

அந்த காணொளியில், லைட்ஃபூட் வாதிடுகையில், “நாங்கள் சிக்கிக் கொண்டுள்ள முக்கிய பிரச்சினைகளில் தடுப்பூசி வழங்குவதும் ஒன்றாக உள்ளது. நம் நகரில் வேறெந்த குடியிருப்போரை விட, CTU, ஆசிரியர்களுக்கு முன்னுரிமை வழங்க விரும்புகிறது,” என்றார். “பிரச்சினை என்னவென்றகல் நம்மிடம் போதுமான தடுப்பூசி இல்லை,” என்று கூறி அர்வார்டு லைட்ஃபூட்டைப் பின்தொடர்ந்தார்.

CTU கோரும் 20,000 தடுப்பூசிகளில் CPS தொழிலாளர்கள் அனைவரும் உள்ளடங்கவில்லை என்றும், இது சிகாகோவின் வயதானவர்கள், வீடற்றவர்கள், கறுப்பின மற்றும் பழுப்பின குடியிருப்போர் மற்றும் ஏனைய அத்தியாவசிய தொழிலாளர்களுக்குத் தடுப்பூசி கிடைக்காமல் செய்துவிடம் என்று லைட்ஃபூட்டும் அர்வாட்டும் வாதிட்டனர். லைட்ஃபூட் எரிச்சலூட்டும் விதமாக கூறுகையில், “கடந்த 11 மாதங்களாக தொலைவிலிருந்து பணியாற்றி வரும் ஆசிரியர்களுக்காக நீங்கள் அனைவரும் பின் இருக்கைக்குச் செல்ல வேண்டியிருக்கும்,” என்றார்.

அவர்களின் வரம்பற்ற சுயநலனுக்காக ஆசிரியர்களைக் கண்டிப்பதற்காக, லைட்ஃபூட் நோய் கட்டுப்பாட்டு மற்றும் தடுப்பு மையங்களின் (CDC) புதிய இயக்குனர் திரு. ரோசெல் வாலென்ஸ்கி விடுத்த அரசியல்ரீதியில் உள்நோக்கம் கொண்ட அறிக்கைகளை மேற்கோளிட்டார். பணியாளர்கள் அனைவருக்கும் தடுப்பூசி வழங்குவதற்கு முன்னரே பள்ளிகளை பாதுகாப்பாக மீண்டும் திறக்கலாம் என்றவர் புதன்கிழமை கூறியிருந்தார்.

இந்த தொற்றுநோய் அபாயகரமான ஒரு முக்கிய கட்டத்தில் இருக்கையில் ஆசிரியர்கள் பள்ளி கட்டிடத்திற்குத் திரும்புமாறு கோரியும், அவர்களைச் சுயநலமான சோம்பேறிகள் என்பதாக பொய்யாக சித்தரித்தும் அந்த காணொளி ஆக்ரோஷமான வலியுறுத்தலுடன் நிறைவடைகிறது. லைட்ஃபூட் அவரே இந்த வாரம் பல தேசிய ஊடக நிகழ்ச்சிகளில் தோன்றி, பெருநிறுவன இலாபங்களை உருவாக்குவதற்காக அமெரிக்க தொழிலாளர்களை வேலைக்குத் திரும்ப செய்யும் பொருட்டு, பள்ளிகளை மீண்டும் திறக்கும் பைடென் நிர்வாகத்தினது மத்திய கொள்கையின் பிரபல முகமாக ஆகியிருந்தார்.

வெள்ளிக்கிழமை மாலை ஆசிரியர்களுக்கான மின்னஞ்சலில், லைட்ஃபூட்டும் CPS தலைமை செயலதிகாரி ஜானிஸ் ஜாக்சனும் பள்ளிக்கு ஆசிரியர்கள் நேரடியாக வரவில்லை என்றால் திங்கட்கிழமை அவர்களின் கூகுள் வகுப்பறை கணக்குகளில் இருந்து அவர்களை வெளியேற்றுவதற்கான அச்சுறுத்தல்களை மீண்டும் தொடங்கினர். பெப்ரவரி 8, திங்கட்கிழமையிலிருந்து தொடங்கி படிப்படியாக மீண்டும் பள்ளிகளைத் திறப்பதற்கான அவர்களின் முன்மொழிவை CTU ஏற்க வேண்டும் என்று கோரிய அவர்கள், “மழலையர் வகுப்பு ஆசிரியர்கள் மற்றும் கூடுதல் பாடப்பிரிவு ஆசிரியர்களும் பணியாளர்களும் தங்குமிட ஒப்புதல் இல்லாவிட்டாலும் அல்லது ADA தங்குமிட வசதி நிலுவையில் இருந்தாலும் கூட வகுப்பறைகளுக்கு வர வேண்டியிருக்கும். … [அவ்வாறு] வரத் தவறுபவர்கள் வரத் தவறியவர்களாக கருதப்படுவார்கள் விடுப்பு (AWOL) வழங்கப்படாது, மேலும் திங்கட்கிழமை வேலை நேர முடிவில் CPS அமைப்பை அவர்கள் அணுகுவதில் இருந்து தடுக்கப்படுவார்கள்,” என்று குறிப்பிட்டனர்.

நகரின் சமீபத்திய திட்டத்தின்படி, மழலையர் வகுப்பு மாணவர்களும் கூடுதல் பாடப்பிரிவு மாணவர்களும் பெப்ரவரி 9 இல் பள்ளிக்குத் திரும்ப வேண்டும், K-5 ஆசிரியர்களும் பணியாளர்களும் பெப்ரவரி 16 இல் பள்ளிக்குத் திரும்ப வேண்டும், அதைத் தொடர்ந்து K-5 மாணவர்கள் பெப்ரவரி 22 இல் வகுப்பறைகளுக்குத் திரும்ப வேண்டும், மேலும் 6 இல் இருந்து 8 ஆம் வகுப்பு ஆசிரியர்களும் பணியாளர்களும் பெப்ரவரி 22 இல் திரும்ப வேண்டும், அதைத் தொடர்ந்து அதன் மாணவர்கள் மார்ச் 1 இல் வகுப்பறைகளுக்குத் திரும்ப வேண்டும்.

Super Bowl ஞாயிற்றுக்கிழமை எனப்படும் தேசிய கால்பந்தாட்ட போட்டிக்கு சிகாகோ நகர குடியிருப்போர் 10 பேருக்கு அதிகமாக குழுக்களாக ஒன்று கூடக் கூடாது என்று லைட்ஃபூட் நிர்வாகம் பாசாங்குத்தனமாக எச்சரித்த அதே நாளில் தான், பல ஆயிரக் கணக்கான ஆசிரியர்கள், பணியாளர்கள் மற்றும் மாணவர்களைப் பள்ளிக் கட்டிடங்களுக்குத் திரும்ப செய்வதற்கான இந்த திட்டம் வெளியிடப்பட்டது. உண்மையில் சொல்லப் போனால், எந்த விதத்தில் ஒன்றுகூடுவதும் கோவிட்-19 பரவல் அபாயத்தை அதிகரிக்கிறது என்று அந்நகரம் எச்சரிக்கப்பட்டுள்ளது.

மழலையர் வகுப்பில் இருந்து 8 ஆம் வகுப்பு வரையிலான ஆசிரியர்கள் முதல் கட்ட கோவிட்-19 தடுப்பூசி பெற்ற பின்னர் மார்ச் 8 வாக்கில் திரும்பலாம், அவ்விதத்தில் படிப்படியாக பள்ளிகளுக்குத் திரும்புமாறு CTU தொழிற்சங்கமும் கோருகிறது, இதைத் தான் வெள்ளிக்கிழமை நடந்த CTU கூட்டத்தின் அறிக்கைகள் தெளிவுபடுத்துகின்றன.

ஆசிரியர்களுக்கான தகவல் தொடர்பில் ஷார்கே கூறுகையில், “கடந்த வாரம் மூன்று முறை, நகரசபைத் தலைவர் எல்லைக்கோடு வரைந்திருந்தார், மூன்று முறை, நமது ஒற்றுமையும் நமது பொறுப்புறுதியும் அவரையும் CPS தலைமையையும் அந்த கோட்டை அழிக்க நிர்பந்தித்துள்ளன. நாம் ஓர் உடன்பாட்டை எட்டும் வரையில் நாம் தொலைவிலேயே இருப்போம், ஏனென்றால் நாம் சரியான அவசியமான விசயத்திற்காக போராடுகிறோம்,” என்றார்.

திங்கட்கிழமை கதவடைப்பு எதிர்பார்க்கப்படும் நிலையில், ஏற்றுக்கொள்ளவியலாத மற்றும் அவசியமில்லாத பொது சுகாதார பாதுகாப்பு அபாயங்களை முன்னிறுத்தி, ஆசிரியர்களைப் பள்ளிகளுக்குத் திரும்ப செய்ய CTU இரகசிய பேரம்பேசல்களைத் தொடர்ந்து கொண்டிருக்கிறது. சாமானிய பள்ளிக்கல்வித்துறை பணியாளர்களிடம் இருந்து CTU பெரும் அழுத்தத்தின் கீழ் உள்ளது, இவர்கள் பெருவாரியாக பள்ளிகள் மீண்டும் திறக்கப்படுவதை எதிர்ப்பதுடன், ஏற்கனவே வேலைநிறுத்தத்தை அங்கீகரித்து வாக்களித்துள்ளனர், இதனால் பேரம்பேசல்கள் மீண்டும் தோல்வியடையும் சம்பவத்தில் ஒரு வேலைநிறுத்தத்திற்குத் தயாரிப்பு செய்ய நடவடிக்கைகளை எடுப்பதற்கும் இது தொழிற்சங்கத்தை நிர்பந்திக்கிறது.

பள்ளிக்கல்வித்துறை பணியாளர்கள் அவர்களே ஜனநாயகரீதியில் கட்டுப்படுத்தும் சாமானிய தொழிலாளர் குழுக்களை ஒழுங்கமைப்பது இன்றியமையாததாகும், CTU அதிகாரத்துவம் அல்ல இந்த குழுக்கள் தொழிலாளர்களுக்கு பதிலளிக்கும். ஒரு வேலைநிறுத்தத்தைத் தடுக்கவோ அல்லது அத்தகைய ஒன்றை சாத்தியமானளவுக்கு விரைவாக முடிவுக்குக் கொண்டு வரவோ, CTU தவிர்க்கவியலாமல் CPS உடன் அற்பத்தனமாக எந்தவிதமான சமரசத்திற்கு வந்தாலும் அதை எதிர்ப்பதில் இத்தகைய குழுக்கள் மையத்தில் இருக்க வேண்டும்.

சிகாகோ கல்வியாளர்களின் சாமானிய தொழிலாளர் பாதுகாப்பு குழு அந்நகர் எங்கிலும் ஒவ்வொரு பள்ளியிலும் மற்றும் அண்டை பகுதிகளிலும் சாமானிய தொழிலாளர் குழுக்களை ஸ்தாபிக்க போராடி வருகிறது. வியாழக்கிழமை மதியம், “இந்த தொற்றுநோயின் போது சிகாகோ பள்ளிகளை மூடிவைப்பதில் பேரம்பேசுவதற்கு இடமில்லை!” என்று அந்த குழு அறிக்கை வெளியிட்டது. வியாழக்கிழமை மாலை நடந்த ஒரு பலமான கூட்டத்தில், இந்த தொற்றுநோயின் போது பள்ளிகளை மீண்டும் திறப்பதற்கான எந்தவொரு உடன்பாட்டையும் நிராகரிக்க உறுப்பினர்கள் உறுதிமொழி ஏற்றனர்.

வெள்ளிக்கிழமை அபிவிருத்திகளைப் பொறுத்த வரையில், ஒரு CPS ஆரம்பப்பள்ளி ஆசிரியர் WSWS க்கு கூறுகையில், “தொழிற்சங்கம் அவர்களின் பேரம்பேசலுக்கான அம்சமாக, மீண்டும் பள்ளிகளைத் திறக்க மிகவும் முக்கியமானதாக நாங்கள் கருதுவதை அடையாளம் காட்டுமாறு கேட்பது மிகவும் ஏமாற்றமாக உள்ளது. எங்கள் முன்னால் மோசடியான தர்மசங்கட நிலை முன்வைக்கப்பட்டு வருகிறது. பள்ளிகளை மீண்டும் திறப்பது முற்றிலும் பாதுகாப்பானதில்லை என்று நினைக்கிறேன், இதை நான் கூறி இருக்கிறேன்,” என்றார்.

பள்ளிகளைப் படிப்படியாக மீண்டும் திறப்பதற்காக CPS தொழிலாளர்களைப் பிளவுபடுத்துவதாக CTU தொடர்ந்து கூறி வந்தாலும், உண்மை என்னவென்றால் அந்த தொழிற்சங்கம் அதை நடத்த அனுமதிக்கிறது என்பதோடு, அவரவர் விருப்பத்திற்கேற்ப விடுப்பு எடுத்துக் கொள்ள அது ஊக்குவிப்பதால் ஆசிரியர்களைப் பழிவாங்க இது வழி வகுக்கிறது. இந்த விதத்திலும் ஆசிரியர்கள் எதிர்ப்பைத் தணிக்க முடியவில்லை என்று ஆனபோதுதான் —அதுவும் ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களின் இரண்டு குழுக்கள் பள்ளிகளுக்குத் திரும்பிய பின்னர் தான்— அந்த தொழிற்சங்கம் வேலைநிறுத்தத்திற்கு அங்கீகரிக்கும் வாக்கெடுப்புக்கும் கூட அழைப்பு விடுத்தது.

பள்ளிகளுக்கு மீண்டும் திரும்புவதை எதிர்க்க, CTU மீது ஆசிரியர்கள் செலுத்தும் அழுத்தம் மிகப் பெரியளவில் இருப்பதுடன் அதிகரித்தும் வருகிறது. மாணவர்களைப் பள்ளிகளுக்கு அனுப்புவதைப் பெற்றோர்களும் பெருவாரியாக எதிர்க்கிறார்கள். பாலர் பள்ளி மாணவர்கள், மற்றும் K-8 மாணவர்கள் என பள்ளிக்குத் திரும்ப தகுதியுடைய மொத்த எண்ணிக்கையில் வெறும் 32 சதவீதத்தினர் தான் அதை செய்ய திட்டமிருப்பதாக தெரிவித்துள்ளனர்.

வெள்ளிக்கிழமை காலை, மூத்த ஜனநாயகக் கட்சியினர் மற்றும் மாநில சட்டமன்ற உறுப்பினர்களுடன் தொழிற்சங்கம் ஒரு கலந்துரையாடலை ஏற்பாடு செய்தது, அவர்கள் CTU உடன் தொடர்ந்து பேரம்பேசவும், நகரம் தழுவிய ஆசிரியர் வேலைநிறுத்தத்தை முன்கூட்டியே நிறுத்தவும் கோரிய லைட்ஃபூட்க்கான ஒரு கடிதத்தில் கையெழுத்திட்டுள்ளனர்.

பைடென் நிர்வாகத்தைப் பின்புலத்தில் கொண்டுள்ள லைட்ஃபூட், நிதிய பிரபுத்துவத்தின் மற்றும் மிகப்பெரும் பெருநிறுவனங்களினது நலன்களின் ஓர் ஈவிரக்கமற்ற பாதுகாவலர். ஆசிரியர் எதிர்ப்பை ஒடுக்கவும் பள்ளிகளை மீண்டும் திறப்பதற்கான ஓர் உடன்பாட்டை எட்டவும் இப்போதைக்கு ஜனநாயகக் கட்சியினர் CTU ஐ நம்பி உள்ளனர். ஆனால் ஆசிரியர்கள் வேலைக்குத் திரும்ப வேண்டுமென்ற உத்தரவை மீறும் போது மிகவும் பலமான நடவடிக்கைகளை ஜனநாயகக் கட்சியினர் பின்புலத்தில் வைத்துள்ளனர், அபராதங்கள் மற்றும் பாரிய வேலைநீக்கங்களும் அதில் உள்ளடங்கும், லைட்ஃபூட் அதுபோன்ற கடுமையான நடவடிக்கைகளை எடுக்க தயாராக உள்ளார் என்பதேயே அதிகரித்தளவில் அவரிடம் இருந்து வரும் விசமத்தனமான வாய்வீச்சுக்கள் சுட்டிக்காட்டுகின்றன.

சிகாகோவில் போலவே, ஆசிரியர் எதிர்ப்பானது, பேரம்பேசல் தொடர்ந்தாலும் பள்ளிகளை மீண்டும் திறப்பதற்கு எதிர்ப்பாளர்களாக காட்டுமாறு ஏனைய மாவட்டங்களின் உள்ளூர் தொழிற்சங்கங்களின் மீதும் அளப்பரிய அழுத்தம் கொடுக்கிறது. திங்கட்கிழமை அவர்களின் வகுப்பறைகளுக்கு வர வேண்டுமென 2,000 ஆசிரியர்களுக்கு பிலிடெல்பியா பள்ளி மாவட்டத்தின் உத்தரவுக்கு விடையிறுப்பாக, பிலிடெல்பியா ஆசிரியர் கூட்டமைப்பின் (PFT) தலைவர் ஜெர்ரி ஜோர்டன் தொலைவில் இருந்தே பணியாற்றுமாறு பள்ளி பணியாளர்களை அறிவுறுத்தினார், “திங்கட்கிழமை உறுப்பினர்களைப் பாதுகாப்பற்ற கட்டிடங்களுக்கு வரச் சொல்வது, படுமோசமான குரூரத்தனம் என்பதைத் தவிர, அதற்கு முற்றிலும் வேறெந்த காரணமும் இல்லை,” என்றார்.

சமீபத்திய வாரங்களில், சமரசமற்ற சமூக எதிர்ப்பு அபிவிருத்தி அடைந்துள்ளது. ஒருபுறம் ஆசிரியர்கள், தொழிலாள வர்க்கத்தின் பாகமாக, விஞ்ஞான அடிப்படையிலான கொள்கைக்காகவும், உயிரையும் உடல் ஆரோக்கியத்தையும் காப்பாற்ற போராடி வருகிறார்கள். மறுபுறமோ, முதலாளித்துவ வர்க்கமும் ஜனநாயகக் கட்சி மற்றும் குடியரசுக் கட்சியில் உள்ள அதன் அரசியல் பிரதிநிதிகளும் ஈரவிக்கமின்றி மனித உயிர்களைப் பெருநிறுவன இலாபங்களுக்காக அடிபணிய செய்து வருகிறார்கள், இது அனாவசியமாக அமெரிக்காவில் 470,000 க்கும் அதிகமானவர்களும் உலகெங்கிலும் 2.3 மில்லியனுக்கும் அதிகமானவர்களும் உயிரிழப்பதில் போய் முடிந்துள்ளது.

இந்த தொற்றுநோயைக் கட்டுப்படுத்தவும் உயிர்களைக் காப்பாற்றவும் சிகாகோ கல்வியாளர்களின் போராட்டத்திற்கு, நாடு தழுவிய ஓர் அரசியல் பொது வேலைநிறுத்தத்தில் சாத்தியமானளவுக்கு ஒட்டுமொத்த தொழிலாள வர்க்கத்தையும் பரந்தளவில் அணித்திரட்டுவது அவசியமாகும். வரவிருக்கும் போராட்டங்களுக்குத் தயாரிப்பு செய்ய அமெரிக்காவிலும் உலகெங்கிலும் கட்டமைக்கப்பட்டுள்ள சாமானிய தொழிலாளர் குழுக்களின் வலையமைப்பை விரிவாக்குவதில் ஒரு கணமும் இழப்பதற்கு இல்லை.