மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்
டிசம்பர் 26 திததியன்று ஒரு இணையவழி நிகழ்வின் போது, பிலிப்பைன்ஸ் கம்யூனிஸ்ட் கட்சி (CPP) ஸ்தாபிக்கப்பட்ட 52வது ஆண்டு நிறைவைக் கொண்டாடும், கட்சியின் நிறுவனரும் சித்தாந்த தலைவருமான ஜோஸ் மரியா சிஸன், CPP ஆனது மூன்று தசாப்தகால ஸ்பாரோ யூனிட்டுகள் (Sparrow Units – குருவிக் குழுக்கள்) என்று அழைக்கப்படும் ஆயுதமேந்திய நகரப் படையணிகளை நடவடிக்கையில் ஈடுபடுத்தும் அதனுடைய கடந்தகால நடைமுறையை மீண்டும் புத்துயிர் கொடுக்கப் போவதாக அறிவித்தார்.
சிஸன் கட்சி கொள்கையை "மத்தியதர சக்திகளிடமிருந்து" "கோரிக்கைகளுக்கு" விடையிறுக்கும் வகையில் முன்வைத்தார் — இது முதலாளித்துவ வர்க்கத்திலும் மத்தியதர வர்க்கத்திலுமுள்ள அதன் கூட்டாளிகளை குறிக்க ஸ்ராலினிசத்தின் சொற்றொடரிலிருந்து பெரிதும் பயன்படுத்தப்பட்ட வார்த்தையாகும்.
உலகளாவிய பெருந்தொற்று நோயால் முன்னோடியில்லாத அளவிற்கு உயர்த்தப்பட்ட முதலாளித்துவத்தின் நெருக்கடி, ஒவ்வொரு நாட்டிலும் வெடிப்புமிகுந்த சமூகப் பதட்டங்களை உருவாக்கியுள்ளது. உலகெங்கிலுமுள்ள ஆளும் வர்க்கமானது அதிகாரத்தின் மீதான தனது பிடியைத் தக்கவைத்துக் கொள்ள வெறித்தனமாக, எதோச்சாதிகார ஆட்சி முறைகள், சதித் திட்டங்கள் மற்றும் கிளர்ச்சிகள், மற்றும் பாசிச இயக்கங்களின் உருவாக்கம் ஆகியவற்றிற்கு திரும்பியுள்ளது.
பிலிப்பைன்ஸ் இதற்கு விதிவிலக்கல்ல. நாட்டின் உழைக்கும் மக்கள், விண்ணைமுட்டும் வேலையின்மை நிலைமைகள், மோசமான மருத்துவ கவனிப்பு, ஜப்பானிய ஆக்கிரமிப்பிற்குப் பின்னர் மிக மோசமான மக்களின் பட்டினிக் கொடுமை ஆகியவற்றை எதிர்கொள்கின்றனர். கடந்த காலத்தில் போலவே, CPP இன் குருவிக் குழுக்களுக்கு மீண்டும் உயிர்கொடுப்பது, ஆளும் வர்க்கமானது ஒட்டுமொத்தத்திலும் அமைதியின்மையை நசுக்குவதற்கும், அதிகாரத்தின் மீது உறுதியான பிடியை பெறுவதற்குமான வழிவகைகளை செய்வதற்கும் அதே போல் முதலாளித்துவ கூட்டாளிகளை நாடும் அதனுடைய முயற்சிகளுடன் பிணைந்துள்ளது.
ரோட்ரிகோ டுரேற்றவின் ஜனாதிபதி வேட்பாளருக்கான ஆதரவின் ஒரு அங்கமாக 2015 ஆண்டு டிசம்பரில் கட்சியானது அமைதியாக புதிய குருவி குழுக்களை உருவாக்கத் தொடங்கியது. நாட்டின் ஏழைகளை குறிவைத்த பாரிய கொலைகார நடவடிக்கையான அவரது ‘போதைவஸ்த்துக்கள் மீதான போரில்’ அதனுடைய தாக்குதல் குழுக்களை ஒருங்கிணைக்க முயன்றது.
ஜனாதிபதியுடன் முறித்துக் கொண்ட CPP ஆனது இப்போது இராணுவத்தின் ஆட்சி கவிழ்ப்பு பிரிவுகளுடன் கூட்டணியைத் தொடர்கிறது. குருவிக் குழுக்களானது இந்த கூட்டணியின் ஒரு அங்கமாக செயற்பட உத்தேசித்து இருக்கின்றன.
CPP யின் வரலாறும் நகர்ப்புற தாக்குதல் சிறு குழுக்களும் இந்த மதிப்பீட்டை உறுதிப்படுத்துகிறது. குருவிக் குழுக்கள் ஒரு இரத்தம் தோய்ந்த கடந்த காலத்தைக் கொண்டுள்ளன, மேலும் பிலிப்பைன்ஸ் அரசியலின் அசிங்கமான அம்சங்களில் இந்தக் கட்சியின் ஒருங்கிணைப்பை வெளிப்படுத்துகின்றன.
கிராமப் புறங்களிலிருந்து நகரங்களை சுற்றி வளைத்து அதிகாரத்தைக் கைப்பற்றும் ஆயுதப் போராட்டம் என்னும் நீண்டகால மக்கள் போராட்ட மாவோயிச கருத்துருவின் அடிப்படையில் 1968 ஆண்டு டிசம்பரில் CPP ஆனது நிறுவப்பட்டது. ஒரு "தேசிய ஜனநாயகப் புரட்சி" என்ற பெயரில் தொழிலாள வர்க்கத்தை முதலாளித்துவ வர்க்கத்தின் ஒரு பகுதிக்கு அடிபணியச் செய்யும் ஸ்ராலினிச வேலைத்திட்டத்தின் அடிப்படையில் கட்சி ஸ்தாபிக்கப்பட்டது. இந்த அரசியல் இலக்கை அடைவதற்கான ஒரு வழிமுறையாக ஆயுதப் போராட்டம் இருந்தது.
மார்ச் 1969 இல், புதிய மக்கள் இராணுவம் (New People’s Army - NPA) நிறுவப்பட்டது, 1950 களின் முற்பகுதியில் அடக்கப்பட்ட ஹுக் கிளர்ச்சி (Huk rebellion) விவசாயிகளின் எழுச்சியின் பின்னர் மீதமுள்ளவர்களினால் உருவாக்கப்பட்டது. CPP இன் தலைமையானது கிராமப் புறங்களில் தனது படைகளை கட்டியெழுப்புவதாக வழக்கமாக அறிவிக்கையில், கடந்த நாற்பது ஆண்டுகளில் அது தனது இலக்கைக் கூட நெருங்கவில்லை. உண்மையில், இது ஒரு மெதுவான சேதத்தைக் கண்டது.
NPA (புதிய மக்கள் இராணுவம்) இன் பணியானது கிராமப் புறங்களிலிருந்து நகரங்களைச் சுற்றி வளைத்துக் கொள்வது அல்ல. தொழிலாள வர்க்கத்திற்கு அதிகாரத்தைக் கைப்பற்றுவதில் உதவுவதைத் தவிர்த்து, மாறாக, முதலாளித்துவ வர்க்கத்துடனான அதன் பேச்சுவார்த்தைகளில் கட்சித் தலைமைக்கு அரசியல் செல்வாக்கைக் கொடுப்பதுதான். நீண்டகால மக்கள் போராட்டத்தின் சொல்லாட்சி வாதாமானது நாட்டின் இளைஞர்கள் மற்றும் தொழிலாளர்களின் தீவிரமயமாக்கலின் அலைகளின் மீது CPP ஆனது அதனுடைய பிடியை தக்க வைத்துக் கொள்ள உதவியது. பின்னர் அது இந்த அடுக்குகளை கட்சியின் முதலாளித்துவ கூட்டாளிகளுக்கு ஆதரவு கொடுத்து அழுத்தம் கொடுக்குமாறு அறிவுறுத்தியுள்ளது.
1980 களில் பிலிப்பைன்ஸில் ஒரு அரசியல் எழுச்சியின் ஒரு தசாப்தமாக இருந்தது. நீண்டகால சர்வாதிகாரி பெர்டினாண்ட் மார்க்கோஸ் 1986ல் ஒரு இராணுவ ஆட்சி கவிழ்ப்புடன் இணைந்த ஒரு மக்கள் எழுச்சியால் தூக்கியெறியப்பட்டார். ஜனாதிபதி கொராசோன் அக்கினோவால் பிரதிநிதித்துவப்படுத்தப்பட்ட முதலாளித்துவத்தின் ஒரு போட்டிப் பிரிவானது அதிகாரத்தை கைப்பற்றி, இராணுவம் மற்றும் துணை இராணுவ கொலை படைகளைப் பயன்படுத்துவதன் மூலம் வெகுஜன அமைதியின்மையை நசுக்கியது.
1986 ஆண்டில் CPP ஆனது அக்கினோ நிர்வாகத்துடன் நெருக்கமான ஒரு கூட்டணியை உருவாக்கியது. ஆனால் இராணுவமானது ஆட்சி கவிழ்ப்பு அச்சுறுத்தல்கள் மூலம் அக்கினோவிற்கு CPP கட்சியுடனான அனைத்து உறவுகளையும் முறித்துக் கொள்ள அழுத்தம் கொடுத்தன. மூன்று ஆண்டுகளுக்குள் CPP ஆனது இராணுவத்தில் போட்டிப் பிரிவுகளுடன் இணைந்து சதி மூலம் அக்கினோவை பதவியில் இருந்து அகற்றுவதற்கு சதி வேலை செய்து கொண்டிருந்தது.
இந்த சூழலில்தான் கட்சி தனது குருவிக் குழுக்களை உருவாக்கியது. "மக்களின் எதிரிகள்" என்று கருதப்பட்டவர்களை நகர்ப்புற படுகொலைகளை நடத்தியதன் மூலம் இந்த குழுக்களானது கிராமப் புறங்களில் அதன் ஆயுதப் போராட்ட பாணியைப் போலவே, முதலாளித்துவத்தின் பல்வேறு பிரிவுகளுடன் கட்சியின் வளர்ந்து வரும் கூட்டுக்கு கருவியாக இருந்தன.
நகர்ப்புற தாக்குதல் சிறு குழுக்கள் முதலில் தெற்கு நகரமான டாவோவில் தோன்றின, அங்கு அவர்கள் மிக முக்கியமான பாத்திரத்தை வகித்தனர். பெரும்பாலும் சிறுவர்களை உள்ளடக்கியிருக்கும் மூன்று பேரடங்கிய படுகொலை குழுக்கள், பின்னால் இருந்து ஒரு இலக்கை விரைவாக அணுகி, தலையின் பின்புறத்தில் சுட்டுவிடுவார்கள், பின்னர் தப்பிச் செல்வார்கள். இலக்குகள் பெரும்பாலும் போக்குவரத்து போலீசாராக இருந்தனர், அவர்கள் கைத்துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
1980 களில், குருவி குழுக்களானது பாசிச பாதுகாப்பு மரணக் குழுக்களுடன் செல்வாக்கு செலுத்த பிரதேசங்களுக்காக போராடின. இந்த மரணக் குழுக்கள் இறுதியில் அல்சா மாசாவில் (Alsa Masa) ஒழுங்கமைக்கப்பட்டன, கட்சியில் தொடர்ச்சியான கொலைகார அழித்தொழிப்பு உள் களையெடுப்புகளின் பின்னணியில் அதன் முக்கிய உறுப்பினர்கள் NPA இலிருந்து வெளியேறினர். 1980 களின் நடுப்பகுதியில், செல்வாக்கு செலுத்துவதற்கான படுபயங்கர வன்முறையால் ஒவ்வொரு நாளும் சராசரியாக இரண்டு பேர்கள் கொல்லப்பட்ட நிலையில், டாவோவை பிலிப்பைன்ஸின் கொலைகார தலைநகராக மாற்றியது.
அக்கினோவின் கூட்டாளியான ரோட்ரிகோ டுரேற்ற இந்த குழப்பத்திலிருந்து முக்கிய புள்ளியாக உயர்ந்தார். அல்சா மாசா மற்றும் குருவி குழுக்களின் விசுவாசத்தை அவர் பெற்றார். போதைவஸ்துக்கள் மற்றும் குற்றத்திற்கு எதிரான போர் என்று அவர் குறிப்பிட்டதன் ஒரு பகுதியாக, டாவோவில் பயங்கரவாத படுகொலைப் போரில் துணை இராணுவப் படைகளாக அவர்களை மாற்றினார்.
மெட்ரோ மணிலாவின் தலைநகரப் பகுதியில் குருவி குழுக்கள் உருவாக்கப்பட்டன, மேலும் 1980 களின் இறுதியில், இளம் அதிகாரிகள் சங்கத்தினால் (Young Officers’ Union - YOU) ஏற்பாடு செய்யப்பட்ட இராணுவத்தில் வலதுசாரி சதிகளுடன் கட்சியின் தந்திரோபாய கூட்டணியில் அந்தக் குழுக்கள் பயன்படுத்தப்பட்டன. CPP இன் படுகொலைகளுக்கு ஒரு கூட்டு உறுதிகுலைப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக நகரம் முழுவதும் பயன்படுத்தப்பட்ட வெடிமருந்துகளை YOU ஆனது அதற்கு வழங்கியது. கட்சியின் மணிலா குருவிக் குழுவானது அலெக்ஸ் பொன்கயோ பிரிகேட் (Alex Boncayao Brigade - ABB) என்று பெயர் பெற்றது.
1990 களின் முற்பகுதியில், CPP ஆனது துண்டு துண்டாக உடைந்தது. கட்சியின் பெயரைத் தக்க வைத்துக் கொண்ட பகுதியின் மீது கட்டுப்பாட்டை சிஸன் மீண்டும் நிறுவினார். சிஸனுடன் முறித்துக் கொண்டவர்களில் ABB யின் தலைவரான ஃபிலிமோன் ‘போப்போய்’ லாக்மன் (Filemon ‘Popoy’ Lagman) என்பவரும் ஒருவராவார். சிஸன் அவர் முன்பு ஆதரித்த குருவி குழுக்களின் கொள்கையை முடிவுக்கு கொண்டுவந்தார், இது அரசியல் மீறல்கள் என்று அவைகளை குற்றம் சாட்டினார்.
2015 ஆம் ஆண்டின் பிற்பகுதியில், ரோட்ரிகோ டுரேற்றவின் வேட்புமனுக்கான கட்சியின் ஆதரவின் ஒரு அங்கமாக இந்த நீண்ட செயலற்றிருந்த தந்திரத்தை கட்சி மீண்டும் உயிர்ப்பித்தது. "போதைவஸ்துக்களுக்கு எதிரான போர்" என்ற போர்வையில், வெகுஜன கொலைக் கொள்கையை அவர் பின்பற்றப்போவதாக டுரேற்ற தனது பிரச்சாரம் முழுவதும் தெளிவுபடுத்தினார். அவர் தன்னை ஹிட்லருடன் இழிவாக ஒப்பிட்டார், தேர்ந்தெடுக்கப்பட்டால் ஒரு இலட்சம் இறந்த உடல்கள் மணிலா விரிகுடாவில் மிதக்கும் என்று அவர் கூறினார்.
டுரேற்ற பதவியேற்றபோது, போதைவஸ்துக்களுக்கு எதிரான நாடு தழுவிய போர் வேகமாகத் தொடங்கியது, மேலும் மெட்ரோ மணிலாவின் தெருக்களில் நூற்றுக்கணக்கான சடலங்கள் தோன்றத் தொடங்கின, அதில் பாதிக்கப்பட்டவர்கள் போதைவஸ்து பயன்படுத்துபவர்கள் என்று அறிவிப்பு பலகைகளுடன் இணைக்கப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டனர்.
போதைவஸ்துக்கள் மீதான டுரேற்றவின் போரை ஆதரிப்பதாக CPP ஆனது பல வெளியீடுகளில் அறிவித்தது. டுரேற்ற உரைகளை நிகழ்த்தினார், அதில் அவர் போதைவஸ்துக்கள் மீதான போரில் சேர NPA க்கு அழைப்பு விடுத்தார். CNN தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் சிஸன் இந்த வாய்ப்பை வரவேற்றார்.
CPP கட்சியுடனான டுரேற்றவின் நெருக்கமான உறவுகளை பிலிப்பைன்ஸ் இராணுவம் கடுமையாக எதிர்த்தது. 1980 களில் அக்கினோவுடன் செய்ததைப் போலவே, இராணுவம் CPP உடனான உறவுகளை துண்டித்துக் கொள்ள டுரேற்றவை கட்டாயப்படுத்தி, ஒரு ஆட்சி சதி மற்றும் தெற்கு தீவான மிண்டானாவோ மீது இராணுவச் சட்டத்தை திணிப்பது ஆகியவற்றின் அச்சுறுத்தலைப் பயன்படுத்தி, CPP உடன் உறவுகளை துண்டித்துக் கொள்ள வைத்தது. 2018 க்குள், டுரேற்ற நிர்வாகத்திற்கும் CPP க்கும் இடையேயான உறவில் முழுமையாக வீழ்ச்சி ஏற்பட்டது.
பெய்ஜிங்குடன் டுரேற்றவின் நெருக்கமான உறவுகளால் அதிருப்தி கொண்டுள்ள இராணுவ தலைமையின் போட்டிப் பிரிவுகளுக்கு இப்பொழுது பகிரங்கமாக சிஸனும் CPP யும் அழைப்பு விடுக்கின்றனர். அவர்கள் ஜனாதிபதியிடம் இருந்து ஆதரவை விலக்கிக் கொள்ள வேண்டும் என்றும், டுரேற்றவிற்கு முதலாளித்துவ எதிர்ப்பின் தலைவராக இருக்கும் துணை ஜனாதிபதி லெனி ரோபிரெடோவை (Leni Robredo) பதவியில் அமர்த்த உதவவேண்டும் என்றும் அழைப்பு விடுத்துள்ளனர்.
லெனி ரோபிரெடோ மற்றும் லிபரல் கட்சியைச் சுற்றியுள்ள கூறுகள்தான் குருவி குழுக்களுக்கு திரும்புவதற்கான "மத்தியதர சக்திகளின்" அழைப்புகளைப் பற்றி பேசும்போது சிஸன் குறிப்பிடுகிறார்.
CPP யின் மூலோபாயத்திலும் தந்திரோபாயங்களிலும் முற்போக்கானது எதுவும் இல்லை. அவர்கள் பல தசாப்தங்களாக முதலாளித்துவ போட்டிக் கன்னைகளின் கொலைகார இணைப்பாக பணியாற்றி வருகின்றனர், மேலும் அவர்கள் சமூக அமைதியின்மையை தங்கள் உயரடுக்கு கூட்டாளிகளின் நலன்களுக்கு கீழ்படுத்தியிருக்கிறார்கள்.
ரோட்ரிகோ டுரேற்றவின் பாசிசம் மற்றும் அவரது முதலாளித்துவ எதிர்ப்பாளர்களின் சதித் திட்டம் ஆகியவற்றில் பிலிப்பைன்ஸின் உழைக்கும் மக்கள் பெரும் ஆபத்துக்களை எதிர்கொள்கின்றனர். CPP ஆனது முதலில் ஒன்று, இப்போது மற்றதுடன் கூட்டணி அமைத்துள்ளார்கள் மற்றும் உதவியளித்துள்ளார்கள்.
சோசலிசப் புரட்சிக்கான போராட்டத்தில் தமது சொந்த அரசியல் சுயாதீனத்தின் ஊடாகத்தான் பிலிப்பினோ தொழிலாள வர்க்கம் இந்த ஆபத்துக்களை எதிர்க்க முடியும். இதற்கு பிலிப்பைன்ஸ் கம்யூனிஸ்ட் கட்சி (CPP), அதனுடைய ஸ்ராலினிச வேலைத்திட்டம், தேசியவாதம் மற்றும் வர்க்க ஒத்துழைப்பு, மற்றும் அதனுடைய அரசியல் கூட்டணிகள் அனைத்திலும் இருந்து ஒரு முழுமையான உடைவு அவசியப்படுகிறது.