“மிருகங்களை விட எங்களுக்கு மிகக் குறைவான உரிமைகள்தான் உள்ளன”: கிரேக்க காரா டெப்பே அகதிகள் முகாமில் தாங்கிக்கொள்ள முடியாத வாழ்க்கை நிலைமைகள்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

2020 முகமூடி கழன்று விழுந்த ஆண்டு. கொரோனா வைரஸ் தொற்று, முதலாளித்துவத்தின் கொடூரமான உள்ளர்த்தத்தை அம்பலப்படுத்தியுள்ளது: உயிர்களின் மேல் இலாபம். மில்லியன் கணக்கான அகதிகள் பல தசாப்தங்களாக இந்தக் கொள்கையால் நேரடியாக பாதிக்கப்பட்டவர்களாக உள்ளனர், ஆனால் கடந்த ஆண்டு மீண்டும் அவர்களின் அவநம்பிக்கையான அவல நிலையை ஒரு உச்சக்கட்டத்திற்கு கொண்டு வந்துள்ளது.

ஐரோப்பிய அரசாங்கங்கள் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் (EU) குற்றவியல் தன்மையை அளவிட விரும்பும் எவரும் கிரேக்க தீவான லெஸ்போஸிலுள்ள (Lesbos) தற்காலிக முகாமான காரா டெப்பேவை பார்வையிட வேண்டும். இங்கே, சுமார் 7,200 மக்கள் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டுகளை குளிரிலும் ஈரலிப்பான இடத்திலும், நோயிலும் மற்றும் பயத்திலும் கழித்தனர். 19,000 க்கும் மேற்பட்ட அகதிகள் ஏஜியன் தீவுகளில் கடுஞ்சோதனையுடன் இருக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.

கிரேக்கத்தின் வடகிழக்கு ஏஜியன் தீவான லெஸ்போஸ் பகுதியிலுள்ள காரா டெப்பே அகதிகள் முகாமில் ஏற்பட்ட மழைப் புயலுக்குப் பின்னர் புலம்பெயர்ந்தோர் நடந்து செல்கின்றனர். (AP Photo/Panagiotis Balaskas, File)

காரா டெப்பே கூடார முகாம் கடலுக்கு நேரடியாக அருகிலுள்ள ஒரு முன்னாள் இராணுவ பயிற்சி பகுதியில் அமைந்துள்ளது; இது ஒரு கட்டுமான தளமாகும், அங்கு காது செவிடாக்கும் சத்தமானது இரவு பகலாக கேட்டுக்கொண்டேயிருக்கிறது. செப்டம்பர் மாதத்தில் மோசமான மோரியா சேரி முகாம் தீப்பிழம்புகளுக்கு இரையாகிய பின்னர், அகதிகள் இலையுதிர்காலத்தில் இங்கு செல்ல வேண்டியிருந்தது.

புதிய முகாமில் நிலைமைகள் மோரியாவை விட மோசமாக இருப்பதாக அகதிகள் மற்றும் உதவி நிறுவனங்கள் திகிலுடன் தெரிவிக்கின்றன. "நாங்கள் அனைவரும் அச்சத்திலும் கஷ்டத்திலும் வாழ்கிறோம்" என்று காரா டெப்பே அகதிகள், ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் அதன் ஆணையத் தலைவர் ஊர்சுலா வொன் டெர் லெயெனுக்கும் (கிறிஸ்தவ ஜனநாயக ஒன்றியம், CDU) ஒரு கிறிஸ்துமஸ் கடிதத்தில் எழுதினார்கள்:

மூன்று மாதங்களிற்குப் பின்னர், அரசு சாரா நிறுவனங்கள் (NGO) மூலம் பல கோடி ரூபாய் நன்கொடைகள், பணம் திரட்டப்பட்ட பின்னரும், தண்ணீர் ஓடாமலும், குளிக்க சுடுநீர் இல்லாமலும், கழிவுநீர் அமைப்பு இல்லாமலும் நாம் இன்னும் ஒரு இடத்தில் உட்கார்ந்து கொண்டு இருப்பது எப்படி? ... மனிதர்கள் மற்றும் அகதிகள் என்ற முறையில் அனைவருக்கும் அடிப்படை சேவைகளை உள்ளடக்கிய உரிமைகள் நமக்கு ஐரோப்பாவில் இல்லையா? இந்த முகாம்களில் மிருகங்களைப் போல நாம் வாழ வேண்டும் என்று அடிக்கடி நாம் படித்தும், கேள்வியும்படுகிறோம், ஆனால் அது உண்மையல்ல என்று நாங்கள் நினைக்கிறோம். ஐரோப்பாவில் மிருகங்களைப் பாதுகாக்கும் சட்டங்களை நாங்கள் ஆராய்ந்தோம், மேலும் அவைகள் கூட நமக்கும் அதிகமான உரிமைகளைக் கொண்டுள்ளன என்பதை நாங்கள் கண்டறிந்துள்ளோம்.

தீவுகளிலுள்ள மூன்று அகதிகளில் ஒருவர் தற்கொலை பற்றி சிந்திக்கிறார் என்று அந்தக் கடிதம் கூறுகிறது. "நன்கொடைகள் மற்றும் வாக்குறுதிகளுக்கான ஏராளமான முறையீடுகளை நாங்கள் பார்க்கிறோம், எங்கள் யதார்த்தத்தை நாங்கள் பார்க்கிறோம், அது நமக்கு விரக்தியையும் கோபத்தையும் ஏற்படுத்துகிறது." மற்றவற்றுடன், அவர்கள் போதுமான தண்ணீர் மற்றும் குளிப்பதற்கு நீர், முறையான சுகாதாரம், மின்சாரம், வெளிச்சம், வெப்பம் மற்றும் குளிர்காலத்திற்கான கூடாரங்கள், மேலும் சிறந்த மருத்துவ மற்றும் உளவியல் பராமரிப்பு ஆகியவற்றை அவர்கள் கோருகின்றனர்.

ஆனால் ஐரோப்பிய ஒன்றியம், அடிப்படை மனித தேவைகளுக்கான இந்த குறைந்தபட்ச கோரிக்கைகளை கூட காற்றில் வீசுகின்றது, ஏனெனில் காரா டெப்பேயில் உள்ள கஷ்டங்கள் ஒரு விபத்து அல்ல, ஆனால் வேண்டுமென்றே மற்றும் நனவான தடுப்பு கொள்கையாக இருக்கிறது. பொஸ்னிய-குரோஷிய எல்லையிலுள்ள பிஹாக்கில் (Bihac) எரிந்த லிபா அகதிகள் முகாமில், ஐரோப்பிய ஒன்றியத்தின் பார்வைகளிற்கு முன்னால் அகதிகள் வெறும் உயிர்வாழ்வதற்காக போராடுகிறார்கள். பல நாட்களாக, நூற்றுக்கணக்கான அகதிகள் பனிக் குளிரில் திறந்த வெளியில் முகாமிட்டுள்ளனர், பனிப் பொழிவிலிருந்து கிட்டத்தட்ட எந்த உதவியும் இல்லாமல் மரணத்தை எதிர்கொள்கின்றனர்.

ஆஸ்திரியாவின் எல்லைகளற்ற மருத்துவர்கள் (Doctors Without Borders) உதவி அமைப்பின் மார்குஸ் பாஹ்மான், கிரேக்க அகதிகள் முகாம்களில் ஏற்பட்ட பேரழிவின் அளவை டிசம்பர் இறுதியில் வியன்னா வார இதழான ஃபால்ட்டருக்கு (Falter) அளித்த பேட்டியில் உறுதிப்படுத்தினார். ஆப்கானிஸ்தான், சியரா லியோன் மற்றும் தெற்கு சூடான் போன்ற நெருக்கடி பகுதிகளில் நடவடிக்கைகளின் தலைவராக அவர் இருந்தார். "ஆனால் கிரேக்க தீவுகளிலுள்ள அகதிகளின் அவலத்தின் பரிமாணம் என்னை திகைக்க வைக்கிறது," என்று அவர் கூறுகிறார்.

போர்ப் பகுதிகளில் அவர் பெற்ற அனுபவங்களுடன் ஒப்பிடுகையில், கிரேக்க முகாம்கள் குறைந்தபட்ச தரத்தைக் கூட எட்டவில்லை. "எல்லைகளற்ற மருத்துவர்கள் என்ற முறையில், சுகாதார அமைப்பு முற்றிலும் சிதைந்துவிட்ட நாடுகளில் மட்டுமே தேவைப்படக்கூடிய விஷயங்களை நாம் கிரேக்கத்திலும் செய்ய வேண்டும்" என்று பாஹ்மான் கூறினார்.

தாங்க முடியாத துர்நாற்றம் முழு காரா டெப்பே முகாமிலும் பரவியுள்ளது. சமீப காலம் வரை, குளிக்கும் வசதிகள் மற்றும் சலவை வசதிகள் இல்லை, மக்கள் குளிக்கவும், துணிகளை கடலில் கழுவவும் வேண்டியிருந்தது. இன்னும் சுடு நீர் இல்லை. குப்பைகள் மற்றும் கழிவுநீரை அகற்றுவதில்லை. முகாம் வழியாக அழுக்கு நீர் மற்றும் மழைநீர் பாய்கிறது. பெரும்பாலும் பாக்கெட் செய்யப்பட்ட உணவு சாப்பிடமுடியாதது மற்றும் அவைகளை கொடுக்கும்போது ஏற்கனவே கெட்டுப்போயிருக்கிறது.

உணவுக் கழிவு, மலம், சேறு - இந்த சுகாதாரமற்ற நிலைமைகள் எலிகளையும் பிற உயிரினங்களையும் ஈர்க்கின்றன. இரவில் கூடாரங்களில் ஊர்ந்து சென்று, சில நேரங்களில் பகலிலும் ஓடுகின்றன என்கிறார் பாஹ்மான். "குறிப்பாக குழந்தைகள், எலி போன்ற இந்தக் கொறிவிலங்குகளால் மோசமாக காயப்படுத்தப்படுகிறார்கள்" என்று அவர் விளக்குகிறார். "பல எலி கடித்த குழந்தைகள் எங்கள் மருத்துவ நிலையத்திற்கு வந்துள்ளனர்."

"வெப்பமான மாதங்களில், பாம்புகளும் வருகின்றன." அவர் பல பாம்பு கடித்தவர்களுக்கு சமோஸில் சிகிச்சை அளித்துள்ளார். "நாங்கள் வழக்கமாக தென் சூடான் அல்லது மத்திய ஆபிரிக்க குடியரசில் தான் அதை வழக்கமாகச் செய்திருக்கிறோம். ஆனால் ஐரோப்பாவில் இல்லை.”

இருப்பினும், எல்லைகளற்ற மருத்துவர்களின் அமைப்பின் எச்சரிக்கைகள் மற்றும் கோரிக்கைகள் பல ஆண்டுகளாக ஐரோப்பிய ஒன்றியத்திலும் கிரேக்கத்திலும் கேட்கப்படவில்லை என்று பாஹ்மான் கூறினார். "மாறாக, நிலைமை மோசமடைந்துள்ளதை நாங்கள் காண்கிறோம்."

கொரோனா வைரஸைத் தவிர, வயிற்றுப்போக்கு, சுவாசம் மற்றும் தோல் நோய்கள் போன்றவற்றால் ஏராளமாக பாதிக்கப்பட்டவர்கள் பரவலாக உள்ளனர், அதே போல் டைபாய்டு காய்ச்சலும் உள்ளது. வெப்பமான கோடையில் கூட, ஒரு நபர் ஒரு நாளைக்கு 1.5 லீட்டர் குடிநீரை மட்டுமே மக்கள் பெறுகிறார், இருப்பினும் பாஹ்மானின் கூற்றுப்படி, “அகதிகள் நெருக்கடியின் தொடக்கத்தில் குறைந்தபட்ச தரநிலை” 7.5 லீட்டர்கள் ஆகும், இது உதாரணத்திற்கு, எத்தியோப்பியா மற்றும் சூடானிலுள்ள முகாம்களில் கிடைக்கப்பெறுகிறது. அவர் சுருக்கமாகக் கூறுகிறார், "இது மிகத் தெளிவாகக் கூறப்பட வேண்டும்: அங்குள்ள மக்கள் வெளியேற்றப்படாவிட்டால், அவர்களின் உயிர்களுக்கு ஆபத்து உள்ளது."

போர், தப்பியோடல் மற்றும் முகாம்களில் எண்ணற்ற தீவிபத்துக்களின் குறிப்பான தீவிரமாக இருப்பதன் காரணமாக கடுமையான அதிர்ச்சிகளால் அகதிகள் பாதிக்கப்படுகின்றனர். முகாம்களிலுள்ள 10 பேரில் எட்டு பேர், போர் மற்றும் நெருக்கடி பகுதிகளிலிருந்து வந்தவர்கள் என்று எல்லைகளற்ற மருத்துவர்கள் அமைப்பினர் தெரிவிக்கின்றனர். மன நோய் மற்றும் தற்கொலை ஆபத்து பாரிய அளவில் அதிகரிக்கிறது. மிகப் பெரிய மோரியா தீயினால் பலர் கொல்லப்பட்டனர் மற்றும் காயமடைந்தனர், ஆயிரக்கணக்கான குடும்பங்களை தப்பி ஓடச் செய்தது.

காரா டெப்பே முகாமிலுள்ள அகதிகளில் மூன்றில் ஒரு பங்கிற்கும் அதிகமான குழந்தைகள் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். லெஸ்போஸில் மட்டும், 49 குழந்தைகள் மற்றும் தற்கொலை எண்ணங்கள் அல்லது முயற்சிகள் மேற்கொண்ட இளைஞர்கள் கடந்த ஆண்டு சிகிச்சை பெற்றனர். காரா டெப்பேயிலுள்ள சர்வதேச மருத்துவ தொண்டர்கள் (Medical Volunteers International) அமைப்பினால் நடத்தப்படும் ஒரு குழந்தைகள் சிகிச்சை திட்டத்தில் ஆலோசகராக பணியாற்றிய ஜோசப் ஓர்டெல் என்பவர் “புதிய முகாமில் நம்பிக்கையின்மையின் ஒரு புதிய வடிவம்” பற்றி Der Spiegel உடன் பேசினார்.

குறைந்தது 300 பொலிஸ் அதிகாரிகள் காரா டெபேயில் செயற்பட்டு வருகின்றனர். பழமைவாத செய்தித்தாளான Kthamierini க்கு அளித்த பேட்டியில் கிரேக்க குடிபெயர்வு மந்திரியான Notis Mitarakis, "மோரியாவில் உங்களுக்கு பாதுகாப்பு உணர்வு இல்லை, அது ஒரு காடு" என்று கூறினார். "பாதுகாப்பு" என்பதன் மூலம் அவர் அகதிகளை மிருகத்தனமாக ஒடுக்குவது என்று பொருளாகும். 24 மணி நேரமும் முகாம் மீது போலீசார் கண்காணிப்பதோடு, அகதிகளுக்கு எதிராக தடியடி நடத்தி வருகின்றனர். ட்ரோன்கள், முள்வேலிகள் மற்றும் வெளியேறும் கட்டுப்பாடுகளானது முகாம் இன்னும் ஒரு சிறையின் தன்மையைத்தான் கொடுக்கிறது, குழந்தை உளவியலாளர் Thanos Chirvatidis என்பவர் Der Spiegel க்கு இவ்வாறுவிளக்கினார். குழந்தைகள் பொலிசாரைக் கண்டு பயப்படுகிறார்கள். உதவி அமைப்புக்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் அணுகல் மிகவும் கடினமாக இருக்கிறது.

ஆனால் காரா டெபே என்பது என்ன வரப்போகிறது என்பதற்கான முன்னறிவிப்பு மட்டுமேயாகும். கிரேக்க அரசாங்கமும் ஐரோப்பிய ஒன்றியமும் 2021 ஆண்டு கோடையில் ஒரு மூடிய முகாமை உருவாக்க விரும்புகின்றன, இது ஒரு குப்பைக் கூழங்களிற்கு அருகில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஐரோப்பிய ஆணையத்தின் “இடம்பெயர்வு மேலாண்மை தொடர்பான பணிக் குழுவின்” (“Task Force on Migration Management”) தலைவரும், புதிய முகாமை நிர்மாணிப்பதற்கான பொறுப்பாளருமான ஜேர்மன் ஐரோப்பிய ஒன்றிய அதிகாரத்துவ அதிகாரியான பீயட் கிமிண்டர், இதில் எந்த பிரச்சனையும் இல்லை எனக் காண்கிறார். சிறந்த தளங்கள் கிடைக்கவில்லை, ஆனால் கிரேக்க மண் மற்றும் நீரின் "ஏராளமான மாதிரிகளை" எடுத்துள்ளது, என்று Der Spiegel உடனான ஒரு நேர்காணலில் அப்பெண்மணி கூறுகிறார்.

டிசம்பர் 31 ம் திகதி, கிரேக்க பிரதமர் கிரியாக்கோஸ் மிட்சோடாகிஸ் காரா டெப்பேவுக்கு விஜயம் செய்தார், மேலும் இது மோரியா மீதான முன்னேற்றத்தை பிரதிநிதித்துவப்படுத்துவதாக பாராட்டினார். இதேபோன்ற காழ்ப்பின் மூலம், கிமிண்டரும் நிலைமைகளை பளபளப்பாகி நியாயப்படுத்துகிறார். இந்த முகாமுக்கு பல நன்மைகள் இருந்தன, எடுத்துக்காட்டாக, இது நேரடியாக கடலுடன் அமைந்துள்ளது - “மக்கள் நீந்தலாம்” மற்றும் குளிர்காலத்திலும்? சரி, “பெரிய, சூடான கூடாரங்கள் அமைக்கப்பட்டுள்ளன” மற்றும் “சூடான போர்வைகள் மற்றும் உறக்குவதற்கான பைகள் விநியோகிக்கப்பட்டுள்ளன.” சுடு நீர் மற்றும் மின்சாரம் இல்லாதபோது, எல்லா பிரச்சினைகளுக்கும் கிரேக்க அதிகாரிகள் தான் காரணம் என்று கிமிண்டர் கூறுகிறார்.

இந்த வார்த்தைகளிலிருந்து வெளிப்படும் தார்மீக சிதைவு மற்றும் குற்றவியல் தன்மை ஜேர்மன் தலைமையின் கீழ் ஒரு ஐரோப்பிய ஒன்றிய கொள்கையின் வெளிப்பாடாகும், இது ஒரே ஒரு குறிக்கோளைக் கொண்டுள்ளது: என்னவிலை கொடுத்தாவது அகதிகளை அகற்றுவதும், அவர்களின் அணிகளுக்குள் உள்ள எதிர்ப்பை இரக்கமின்றி நசுக்குவதுமாகும்.

துருக்கிய கடல் பகுதியில் இரப்பர் சிறு படகுகள் (dinghies) என்று அழைக்கப்படும் "புஷ்பேக்ஸ்" (pushbacks) என்பது எதிரி போன்றவர்களை அடிமையாக விரட்டும் செயலானது மட்டுமல்ல, ஐரோப்பிய எல்லை பாதுகாப்பு அமைப்பான Frontex இன் தலையீட்டிலும் இது நடைபெறுகிறது. Frontex இன் தலைவரான Fabrige Leggeri ஐரோப்பிய ஒன்றிய ஆணையத்திற்கு எழுதிய ஒரு உள்சுற்று கடிதத்தின்படி, நவம்பர் இறுதியில் Der Spiegel ஆல் அறிக்கையிடப்பட்டதில், ஜேர்மனிய அதிகாரிகளும் புஷ்பேக்ஸ்களில் சம்மந்தப்பட்டிருந்தனர் என்று தெரிவித்தது. ஜேர்மனிய உள்துறை அமைச்சகம் இந்தக் குற்றங்களையும் மனித உரிமை மீறல்களையும் மூடி மறைக்க முயற்சிக்கிறது.

டிசம்பர் தொடக்கத்தில் Der Spiegel இன் நிருபர்கள், இந்த கொடூரமான நாடுகடத்தல்களில் ஒன்றின் கதையை விவரித்தனர், அவைகள் அடிக்கடி நடந்து கொண்டிருக்கின்றன. இரண்டு ஆபிரிக்க பெண் அகதிகள், லெஸ்போஸை வந்தடைந்த பின்னர், முகமூடி அணிந்த கிரேக்க பொலிஸ் அதிகாரிகளால் பிடிக்கப்பட்டு, சோதனையிடப்பட்டு, அடிக்கப்பட்டு, துப்பப்பட்டு மற்றும் கட்டாயப்படுத்தி ஆடைகளைக் அவிழ்க்கவும் தள்ளப்பட்டனர். "அகதிகளின் கூற்றுப்படி, இளவயதினர்கள் மற்றும் பல கர்ப்பிணி பெண்கள் உட்பட பாதுகாப்பு கோரிய பதினாறு பேர்களுடன், இருவரும் இரண்டு சிறிய ஊதப்பட்ட மிதவைத் தெப்பத்தில் விடப்பட்டனர். நள்ளிரவில், கடலின் நடுவில், தங்கள் சொந்த சக்தியால் கடற்கரை அடைய வாய்ப்பு இல்லை." பல மணி நேரத்தின் பின்னர் அவர்கள் துருக்கி கடலோர காவல் படைகளால் மீட்கப்பட்டு இஜ்மீருக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

2020 ஆண்டு முழுவதும் கிரேக்கத்தில் அகதிகளுக்கு எதிரான போரினால் குறிக்கப்பட்டது. பிப்ரவரியில், கிரேக்க பொலிசார் லெஸ்போஸில் எதிர்ப்பு தெரிவித்த அகதிகளுக்கு எதிராக கண்ணீர்ப்புகைக் குண்டுகளைப் பயன்படுத்தினர். மார்ச் மாதத்தில், துருக்கியுடனான நில எல்லை மூடப்பட்டு, புகலிடம் கோருவதற்கான உரிமை நிறுத்தப்பட்டது. திடீரென்று, அகதிகள் கிரேக்க-துருக்கிய எல்லையில் எவ்ரோஸ் நதிக் கரையிலுள்ள ஆள் நடமாடமற்ற நிலத்திலும் சிக்கிக்கொண்டனர். படையினரும் காவல்துறையினரும் பாதுகாப்பற்ற மக்கள் மீது நேரடியாக துப்பாக்கி பிரயோகங்களையும் கண்ணீர்ப்புகைக் குண்டுகளையும் வீசினர்; எல்லையைத் தாண்டி குறைந்தது மூன்று அகதிகள் கொல்லப்பட்டனர். அதனுடைய மிருகத்தனமான நடவடிக்கையில், கிரேக்க அரசாங்கம் ஊர்சுலா வொன் டெர் லெயெனின் கீழ் ஐரோப்பிய ஒன்றியத் தலைமையுடன் நெருக்கமாகப் பணியாற்றியதுடன், சிரிசா கட்சித் தலைவர் அலெக்சிஸ் சிப்ராஸிடமிருந்தும் ஆதரவைப் பெற்றது.

அதே நேரத்தில், கொரோனா வைரஸ் கிரீஸ் முழுவதும் பரவியது, இதனால் அகதிகள் தங்குமிடங்கள் மற்றும் முகாம்களிலும் பரவியது. பரிசோதனைகள் பற்றாக்குறை மற்றும் போதிய சுகாதாரப் பாதுகாப்பு இல்லாததால், அகதிகளிடையே பல தொற்றுகள் மற்றும் இறப்புக்கள் பதவிசெய்யப்படவில்லை. ஒரு தொற்றுநோயின் சாக்குப்போக்கில், ஐரோப்பாவும் கடலில் மீட்பு நடவடிக்கைகளை நிறுத்தியுள்ளது, இது மத்தியதரைக் கடலில் பாரிய மரணங்களை மேலும் துரிதப்படுத்தியுள்ளது. இதைத் தொடர்ந்து ஒரு கொலைகார "தஞ்சம் மற்றும் இடம்பெயர்வு ஒப்பந்தம்" (“Asylum and Migration Pact”) வெளியிடப்பட்டது, அது அடிப்படை உரிமைகள் பறிப்பு, நாடுகடத்தல் மற்றும் இறுதியில் அகதிகளைக் கொல்லுதல் ஆகியவற்றை மேலும் வலுப்படுத்தும். 2020 ஆண்டு ஜனவரி முதல் நவம்பர் வரை ஐரோப்பாவிற்கு தப்பிச்செல்லும் வழியில் 1,200 க்கும் மேற்பட்ட அகதிகள் உயிர் இழந்துள்ளனர்.

Loading