மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்
ஒரு பெரும் தீ விபத்து மொரியா புலம்பெயர்ந்தோர் முகாமை பெரும்பாலும் அழித்துவிட்டது. கிழக்கு ஏஜியன் கடலில் லெஸ்போஸ்/லெஸ்வோஸ் தீவில் அமைந்துள்ள இந்த முகாம் ஐரோப்பிய ஒன்றியத்தில் மிகப்பெரியது. சமூக ஊடக கணக்கீடுகளின்படி, செவ்வாய்க்கிழமை நள்ளிரவிற்கு முன்னரே இந்த தீ விபத்து ஏற்பட்டிருப்பதாகத் தெரிகிறது.
அண்ணளவாக 13,000 ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் தங்குமிடம், உணவு மற்றும் குடிநீர் போன்ற அடிப்படை தேவைகள் கூட கிடைக்காத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இந்த முகாமில் பல தீ விபத்துக்கள் ஏற்பட்டுள்ளதால், இங்கு தடுத்து வைக்கப்பட்டுள்ள அகதிகள் தங்களது உயிரை காப்பாற்றிக்கொள்ள அங்கிருந்து வெளியேறும் நிர்ப்பந்தத்திற்கு ஆளாகியுள்ளனர். இதில் எந்தவித உயிரிழப்பும் ஏற்படவில்லை, என்றாலும் புகை வெளியேற்றத்தில் சிக்கி பலர் காயமடைந்தனர்.
“மொரியா வரவேற்பு மற்றும் அடையாள மையம்” (“Moria Reception & Identification Centre”) 2015-2019 போலி இடது சிரிசா அரசாங்கத்தால் ஸ்தாபிக்கப்பட்டது. அகதிகளும் தஞ்சம் கோருபவர்களும் அங்கிருந்து நாடுகடத்தப்படுவதற்கு முன்னர் சகித்துக்கொள்ள முடியாத நிலைமைகளின் கீழ் தடுத்து வைக்கப்படுகின்றனர்.
தீ விபத்துக்கு சற்று நேரத்திற்குப் பின்னர் 10 தீயணைப்பு இயந்திரங்களுடன் இருபத்தைந்து தீயணைப்புப் படையினர் அங்கு வந்து சேர்ந்து, தீயை அணைக்க பல மணித்தியாலங்கள் முயற்சித்தனர். Stand By Me Lesvos என்ற அகதிகள் உதவி அமைப்பு, முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்தவர்களிடமிருந்து தங்களது கூட்டாளர் குழுக்களுக்கு வந்த அழைப்புக்களில் ஒன்று, பயந்துபோன ஒருவரை உள்ளடக்கியது, “காவல்துறை எங்கே, தீயணைப்பு படை எங்கே, எவரும் வரவில்லையே? நாங்கள் எரிந்து கொண்டிருக்கிறோம், எங்களது கூடாரங்களும் எரிந்து கொண்டிருக்கின்றன. அனைத்தும் எரிந்து கொண்டிருக்கிறது. நாங்கள் தீயில் எரிந்து போவதற்காகவா இங்கு வந்தோம். அனைத்தும் தீயால் சூழப்பட்டுள்ளன” என்று கேட்பதும் அடங்கும்.
லெஸ்போஸ் துருக்கி கடற்கரையிலிருந்து சற்று தொலைவில் அமைந்துள்ளது. 2015-16 இல் ஆப்கானிஸ்தான், சிரியா மற்றும் ஈராக் ஆகிய போர் மண்டலங்களில் இருந்து உயிர் தப்பியதன் பின்னர் ஆயிரக்கணக்கான அகதிகள் இங்கு தஞ்சம் புகுந்தனர். மொரியாவில் உள்ள 70 சதவிகித மக்கள் குறிப்பாக ஆப்கானிஸ்தானைச் சேர்ந்தவர்கள், என்றாலும் 70 க்கும் மேற்பட்ட வெவ்வேறு நாடுகளிலிருந்து வந்துள்ள புலம்பெயர்ந்தோர் அங்கு வாழ்கின்றனர்.
இந்த முகாம் பெரியளவில் நெரிசலானது. 2,800 பேருக்காக கட்டப்பட்ட முகாமில் 13,000 பேரை மொரியா தடுத்து வைத்துள்ளது. அதேபோல, முதலில் பெற விரும்பிய மொத்த எண்ணிக்கையை விட மிக அதிகமாக 4,000 குழந்தைகள் வரை தற்போது இங்கு தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
காணொளிப் பதிவு உயிருக்கு பயந்து கைதிகள் தப்பியோடுவதைக் காட்டியது. பலர் தங்களது உடைமைகளை தூக்கு பைகளில் எடுத்துச் சென்றனர், மேலும் மற்றவர்கள் பல்பொருள் அங்காடி தள்ளுவண்டிகளில் வைத்தும் எடுத்துச் சென்றனர். நூற்றுக்கணக்கான அகதிகளும் புலம்பெயர்ந்தோரும் சாலைகளிலும் அருகிலுள்ள வயல்வெளிகளிலும் உறங்குவதற்கு முயன்றனர்.
தீ எப்படி பற்றிக் கொண்டது என்பது தெளிவாகத் தெரியவில்லை. கடந்த வாரம் முகாமில் முதலாவது கோவிட்-19 நோய்தொற்று கண்டறியப்பட்டது. இது ஒரு சில நாட்களில் 15 நோய்தொற்றுக்கள் உருவாகும் அளவிற்கு வேகமாக பரவியதுடன், தீ விபத்து ஏற்பட்ட நேரத்தில் 35 பேருக்கு நோய்தொற்று ஏற்பட்டிருந்தது. Stand By Me Lesvos அமைப்பு, “கொரோனா பரவ ஆரம்பித்த பின்னர் முறையான நடவடிக்கைகள் எதுவும் அங்கு எடுக்கப்படவில்லை, மேலும் இவ்வாறு நோயின் திடீர் எழுச்சி நிகழ்வது பற்றி குடியிருப்பாளர்களுக்கு சரியாக தெரிவிக்கப்படவில்லை…” என்று குறிப்பிட்டது. அடிப்படை சுகாதாரத்தை கூட பராமரிக்க முடியாத, மற்றும் கூட்ட நெரிசல் காரணமாக சமூக இடைவெளியையும் செயல்படுத்த முடியாத நிலைமைகளின் கீழ், குறுகிய காலத்திற்குள்ளாக பேரழிவுகரமாக நோய் வெடித்து பரவுவதற்கு மட்டுமே இங்கு வாய்ப்புள்ளது.
நோய்தொற்றால் பாதிக்கப்பட்ட 35 குடும்பங்களில் சிலர் தனிமையில் செல்ல மறுத்ததையடுத்து தீ விபத்து ஏற்பட்டதாக கிரேக்க செய்தி நிறுவனம் ANA தெரிவித்துள்ளது. முகாமில் நிலவும் நரகத்தை ஒத்த நிலைமைகளை காண்கையில், வாரங்களுக்கு “சுயமாக தனிமைப்படுத்திக்கொள்வது” என்பது எவ்வளவு கொடூரமாக இருக்கும் என்பதை ஒருவரால் கற்பனை செய்து பார்க்க முடியும். உண்மையில், “பை, பை மொரியா” என்று புலம்பெயர்ந்தோர் பாடுவதைக் காட்டும் காணொளிக் காட்சிகளுடன், மொரியாவில் வாழ வேண்டிய கட்டாயத்தில் இருந்த பலர், அது எரிந்து தரைமட்டமாகி கிடந்ததைக் கண்டு மகிழ்ந்தனர்.
அகதிகள் உட்பட பிற செய்தி ஆதாரங்கள், பாசிச சக்திகளால் தீ விபத்து ஏற்படுத்தப்பட்டிருக்கலாம் என்று கூறின. “மொரியா முகாமில் தீ வைப்பதற்கு ‘வலதுசாரி கிரேக்கர்களால்’ பயன்படுத்தப்பட்டவை என்று அகதிகள் கூறிய குண்டு ரவைப்பெட்டிகளின் இரண்டு படங்களை பிபிசி பத்திரிகையாளர் பர்ஹம் கோபாடி (Parham Ghobadi) ட்வீட் செய்திருந்தார். மேலும் அவரது மற்றொரு ட்வீட்டில், “நெரிசல் மிகுந்த மொரியா அகதிகள் முகாம் முழுவதும் கொரோனா வைரஸ் நோய்தொற்று பரவுவதாக வதந்திகள் பரவியதைத் தொடர்ந்து ‘தீவிர வலதுசாரி கிரேக்கர்கள்’ இம்முகாமிற்கு தீ வைத்துள்ளனர் என்றே தாங்கள் நம்புவதாக பல அகதிகள் என்னிடம் தெரிவித்தனர்” என்று குறிப்பிட்டிருந்தார். மேலும், “பாசிஸ்டுகள் தான் மொரியா முகாமிற்கு தீ வைத்துள்ளனர்” என்ற ஒரு கைதியின் சமூக ஊடக கருத்தைப் பற்றி InfoMigrants வலையமைப்பும் தெரிவித்துள்ளது.
மேலும், தீவின் பிற இடங்களில் இரண்டு தனித்தனி காட்டுத்தீயை பலத்த காற்றின் வேகம் மேலும் பரவச் செய்தது மற்றொரு சாத்தியமுள்ள காரணமாக இருந்தது.
துறைமுக நகரமான மைட்டிலினை (Mytilene) நோக்கி முகாமில் தங்கியிருந்தவர்கள் தப்பியோடிய நிலையில், புதிய ஜனநாயகக் கட்சியின் (New Democracy) பழமைவாத அரசாங்கம் தனது முதல் பதிலிறுப்பாக, அவர்களது பயணத்தைத் தடுக்க முற்றுகை அமைக்க கலகப் பிரிவு பொலிஸை அனுப்பி நடவடிக்கை எடுத்தது. மேலும் சில புலம்பெயர்ந்தோர் சுற்றியுள்ள மலைப்பாதையில் தப்பியோடினர்.
புகை சூழ்ந்திருந்த முகாமைச் சுற்றிலும் 3.5 மைல் தொலைவிலான சுற்றுவட்ட அளவிற்கு பொலிஸ் காவலை அரசாங்கம் ஏற்படுத்தியது. இந்த கொடூரமான நடவடிக்கை உதவி அமைப்புக்கள் அந்த முகாமை அணுகுவதை தடுத்தது. Beck’s Bathhouse தொண்டு நிறுவனத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளரான அன்னி பெட்ரோஸ் (Annie Petros), “தீயிலிருந்து காப்பாற்றி அகதிகளை தான் அழைத்து வந்தபோது தீக்காயமடைந்தவர்களை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல விடாமல் பொலிசார் தன்னை தடுத்தாக” கார்டியனுக்கு தெரிவித்தார்.
“முகாமில் தீ பற்றிக் கொண்டதை கண்டதும் நோய்வாய்ப்பட்டவர்களை காப்பாற்றி மருத்துவனைக்கு கொண்டு செல்ல எண்ணி, தண்ணீருடன் எங்களால் முடிந்த வரை வேகமாக முகாமை நோக்கி ஓடினோம். அங்கு கண்ட காட்சியை எங்களால் சரியாக விவரிக்க முடியாது. முகாமிலிருந்து ஆயிரக்கணக்கானோர் நடந்து வெள்ளம் போல வெளியேறிக் கொண்டிருந்தனர். அவர்கள் முற்றிலும் அமைதியாகவும், பயந்தும், அதிர்ச்சியடைந்தும் காணப்பட்டதுடன், அடர்த்தியான புகை மண்டலத்திற்கும், பிளாஸ்டிக் எரியும் மோசமான நாற்றத்திற்கும் ஊடாக நடந்து வெளியேறிக் கொண்டிருந்தனர்” என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும், “அவசர உதவி தேவைப்படும் சில கர்ப்பிணிப் பெண்களையும் கால் உடைந்துபோன ஒரு பதின்மவயது பையனையும் அங்கிருந்து நாங்கள் அழைத்து வந்தோம். நாங்கள் மைட்டிலீன் நகரை நெருங்கியபோது, நகரை எவரும் அணுக முடியாத வகையில் கலகப் பிரிவு பொலிசார் தடுத்தனர். நான் பொலிஸாரிடம் கெஞ்சினேன், என்றாலும் அவர்களது தளபதி எங்களை அனுமதிக்க மறுத்தார். இந்நிலையில் நாங்கள் நோயாளி ஊர்தியை அழைத்தோம், அதுவும் சாலைத் தடைக்கு அருகே வர மறுத்துவிட்டது” என்றும் கூறினார்.
Refugees4Refugees தொண்டு நிறுவனம், காணாமல் போன 30 குழந்தைகளை கண்டுபிடிக்க முடியவில்லை என்று கார்டியனுக்கு தெரிவித்தது.
மொரியா நரகமாக மாறும் ஒரு பேரழிவிற்கு காத்திருந்தது. இந்த முகாம் வழமையாகவே “பூமியின் நரகம்” என்று விவரிக்கப்படுகிறது. 2019 ஆம் ஆண்டில், ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சிலுக்கு ஆலோசனை வழங்கும் நிபுணர்களின் குழுவின் உறுப்பினரான ஜோன் ஜீஜ்லர் (Jean Ziegler), “ஐரோப்பிய மண்ணிலுள்ள பொழுதுபோக்கிற்கான ஒரு சித்தரவதை முகாம்” என்று இதை விவரித்தார்.
கடந்த ஆண்டு மே மாதம் முகாமிற்கு விஜயம் செய்தபோது தான் எதிர்கொண்ட நிலைமைகளை Teller Report செய்தி வலைத் தளத்திற்கு ஜீஜ்லர் விவரிக்கையில் “மக்கள் இங்கு விலங்குகளைப் போல வாழ்கிறார்கள்… இங்கு ஒரு குளியலறையையும், கழிப்பறையையும் 100 பேர் பகிர்ந்து கொள்ள வேண்டியுள்ளது. இதில் பெரும்பாலும் அடைப்பு ஏற்படும், அசுத்தமாக இருக்கும், மலக்கழிவுகள் சுற்றி தேங்கியிருக்கும். இங்கே சுடு தண்ணீர் கிடைப்பதில்லை, பள்ளிகளும் இல்லை, மேலும் 5,000 பேருக்கு இரண்டு மருத்துவர்கள் மட்டுமே இருக்கின்றனர்” என்று கூறினார்.
இந்த ஆண்டு ஜனவரியில் முகாமில் 20,000 க்கும் மேற்பட்ட மக்கள் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர், என்றாலும் தீ விபத்து ஏற்பட்டபோது 13,000 பேர் இருந்ததாக மதிப்பிடப்பட்டுள்ளது, அதாவது இந்த முகாமில் நிர்ணயிக்கப்பட்ட கொள்திறனுக்கு நான்கு மடங்கு அதிகமாக மக்கள் அடைத்து வைக்கப்பட்டிருந்தனர். இங்கிலாந்தின் தேசிய சுகாதார சேவையின் இளைய மருத்துவர் ஹென்றி டி பெர்கர் (Henry de Berker), அந்த நேரத்தில் முகாமில் “1,000 க்கும் மேற்பட்ட ஆதரவற்ற சிறுவர்கள் இருந்தனர்… இத்தகைய பரிதாபகரமான நிலையில் நோய்கள் வேகமாக பரவுகின்றன. சரீர ரீதியாக பலவீனமானவர்களுக்கு வயிற்றுப்போக்கு மற்றும் வாந்தியெடுத்தல் போன்ற ஆபத்தான விளைவுகள் ஏற்படக்கூடும்” என்று பைனான்சியல் டைம்ஸூக்கு தெரிவித்தார்.
புலம்பெயர்ந்தோர், அகதிகள் மற்றும் தஞ்சம் கோருபவர்களை தடுத்து வைக்க ஐரோப்பிய ஒன்றியம் இயற்றிய “கோட்டை ஐரோப்பா” கொள்கைகளின் மிருகத்தனமான அடையாளமாக மொரியா உள்ளது. கடந்த தசாப்தத்தில் மத்தியதரைக் கடலை கடக்க முயன்ற பல்லாயிரக்கணக்கானவர்கள் இறந்துள்ளனர். சிரிசா அரசாங்கம் ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் துருக்கியுடன் 2015 இல் கையெழுத்திட்ட ஒரு மோசமான ஒப்பந்தத்தின் விளைவாக, கிரேக்கத்திற்குச் செல்ல முடிந்த ஆயிரக்கணக்கானோரை நாடுகடத்த அதிகாரிகள் தயாராகி வருவதால், மோசமான தடுப்பு முகாம்களுக்குள் அவர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.
2016 இல், மொரியா தீக்கிரையாக்கப்பட்டது. இது பற்றி உலக சோசலிச வலைத் தளம் (WSWS), “50 பெரியளவிலான உறங்கும் கூடாரங்கள், மூன்று கொள்கலன்கள் மற்றும் ஆடைகள் உட்பட, அநேகமாக 60 சதவிகித அளவிற்கு முகாம் அழிக்கப்பட்டுவிட்டது. முகாமுக்கு அருகே ஆலிவ் மரங்கள் அடங்கிய அண்ணளவாக நான்கு ஏக்கர் நிலத்தில் கழிவுப்பொருட்கள் குவிந்து சுற்றியுள்ள பகுதியில் இரண்டு தனித்தனி தீ விபத்து ஏற்பட்டது” என்று தெரிவித்தது.
கடந்த ஆண்டு செப்டம்பரில், WSWS, “பல மாத கால ஆர்ப்பாட்டங்களுக்கும் கலகப் பிரிவு பொலிசாரின் அடக்குமுறைக்கும் பின்னர், இரண்டு தீ விபத்துக்கள் ஏற்பட்டுள்ளன. அதில் ஒன்று கட்டுப்படுத்தப்பட்டது, ஆனால் மற்றொரு தீ விபத்து விரைந்து பரவியதால் முகாமின் பெரும்பாலான பிரிவுகள் நெருப்பு சுவாலைக்குள் மூழ்கிப் போயின” என்று தெரிவித்தது. இந்த தீ விபத்தில் ஒரு பெண்ணும் ஒரு குழந்தையும் உயிரிழந்தனர். முந்தைய மாதம், மொரியாவில் அண்ணளவாக 50 குழந்தை புகலிடம் கோருவோர் நடத்திய போராட்டத்தை கலகப் பிரிவு பொலீசார் கொண்டு கொடூரமாக தாக்குதல் நடத்தி, புலம்பெயர்ந்தோர் மீதான தாக்குதலை அரசாங்கம் தீவிரப்படுத்தியது.
இந்த ஆண்டு மார்ச் மாதத்தில் நிகழ்ந்த மற்றொரு தீ விபத்து ஒரு ஆறு வயது சிறுமியை பலி கொண்டது. வாழ்வதற்கான குடியிருப்புக்களாக பயன்படுத்தப்படும் கொள்கலன்களின் நெருக்கம் காரணமாக ஒரு மணித்தியாலத்திற்கு தீ தொடர்ந்து எரிந்து கொண்டிருந்தது. லெஸ்போஸ், சியோஸ், சமோஸ் மற்றும் கோஸ் ஆகிய தீவு முகாம்களில் கொரோனா வைரஸ் நோய்தொற்று பரவி வருவதானது மொரியா மற்றும் பிற முகாம்களும் விரைந்து “மரண முகாம்களாக மாற்றப்படுவதை” குறிப்பதாக WSWS எச்சரித்தது.
தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்கள் மேலும் துயரங்களையே எதிர்கொள்கின்றனர். பாதுகாப்பான, ஏற்புடைய தங்குமிடம் அவர்களுக்கு வழங்கப்படுவதற்கும், மற்றும் மனிதாபிமானத்துடன் அவர்கள் நடத்தப்படுவதற்கும் மாறாக, அவர்கள் “படகுகள், இரண்டு கடற்படைக் கப்பல்கள் மற்றும் கூடாரங்களில் தற்காலிகமாக தங்க வைக்கப்படுவார்கள் என்று புலம்பெயர்வு விவகார அமைச்சர் நோட்ரிஸ் மிதராகிஸ் ஒரு செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்” என்று கிரேக்க நாளிதழான Kathemerini தெரிவித்தது.