மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்,
இந்த அறிக்கை, “உள்நாட்டுப் போர் தேர்தலின் முன்வேளையில்” என்ற தலைப்பில் நவம்பர் 1 ம் தேதி சோசலிச சமத்துவக் கட்சியின் 2020 தேர்தல் பிரச்சாரத்தின் இறுதிக் கூட்டத்தில் வழங்கப்பட்டது.
2020 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் ஒரு தொற்றுநோயால் தூண்டப்பட்ட உலகளாவிய நெருக்கடியின் மத்தியில் நடைபெறுகிறது. இந்த நெருக்கடியை 1914 இல் முதலாம் உலகப் போர் மற்றும் 1939 இல் இரண்டாம் உலகப் போர் வெடித்ததுடன் மட்டுமே ஒப்பிட முடியும்.
நாங்கள் சந்திக்கும்போது, கிடைக்ககூடிய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, உலகளாவிய இறப்பு எண்ணிக்கை 1,196,000 ஆக உள்ளது. அமெரிக்காவில் அதிக எண்ணிக்கையிலான இறப்புகள் உள்ளன. அங்கு நேற்றைய நிலவரப்படி 236,072 உயிர்கள் இழக்கப்பட்டுள்ளன. பிரேசிலில் 159,884 பேர் இறந்துள்ளனர். இந்தியாவில் 122,111, மெக்சிகோவில் 91,743, பிரிட்டனில் 46,791, இத்தாலியில் 38,618, பிரான்சில் 36,826, ஜேர்மனியில் 10,494 இறந்துள்ளனர். இந்த உத்தியோகபூர்வ புள்ளிவிவரங்கள் மொத்த இறப்புகளின் எண்ணிக்கையை குறைத்துக்காட்டுகின்றன.
கோவிட்-19 வைரஸ் இப்போது கட்டுப்பாடில்லாமல் பரவி வருகிறது. கடந்த இரண்டு வாரங்களில் இது இன்னும் அதிகரித்துள்ளது. முந்தைய இரண்டு வார காலப்பகுதியில் இறப்புகள் ஸ்பெயினில் 24.5 சதவீதமும், போலந்தில் 129 சதவீதமும், பிரிட்டனில் 135 சதவீதமும், பிரான்சில் 200 சதவீதமும், இத்தாலியில் 323.7 சதவீதமும், ஜேர்மனியில் 2,286 சதவீதமுமாக அதிகரித்துள்ளன.
அமெரிக்காவில், வைரஸின் பரவல் ஒருபோதும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்படாத நிலையில், ஒவ்வொரு மாநிலத்திலும் தொற்றுநோய் அதிகரித்து வருகிறது. வைரஸ் பரவுவதற்கான ட்ரம்ப் நிர்வாகத்தின் வேண்டுமென்றே செய்யப்பட்ட முயற்சிகளான, பள்ளிகளை மீண்டும் திறக்கும் பரந்த கொள்கை, பாதுகாப்பற்ற நிலைமைகள் இருந்தபோதிலும் தொழிலாளர்கள் பணியில் இருக்கும்படி கட்டாயப்படுத்துதல், உயிர்களை விட இலாபத்திற்கு முன்னுரிமை அளித்தல் மற்றும் மக்கள் தொகையின் கலாச்சார மட்டத்தில் அதிர்ச்சியூட்டும் வீழ்ச்சி 40 ஆண்டுகால பிற்போக்குத்தனமான சமூகக் கொள்கைகளால் விளைந்தன.
செவ்வாய்க்கிழமை தேர்தலின் முடிவு என்னவாக இருந்தாலும், எதிர்வரும் வாரங்கள் மற்றும் மாதங்களில் இறப்பு எண்ணிக்கை தொடர்ந்து ஒரு பயங்கரமான விகிதத்தில் உயரும். தனது மிக சமீபத்திய அறிக்கையில் அந்தோனி பௌசி, அமெரிக்கா பேரழிவை நோக்கி வருவதாக அப்பட்டமாக கூறினார்: “நாங்கள் நிறைய காயங்களுக்கு ஆளாகிறோம். இது ஒரு நல்ல சூழ்நிலை அல்ல. இலையுதிர்காலம் மற்றும் குளிர்காலத்திற்கு நீங்கள் செல்லும்போது மக்கள் வீட்டிற்குள் கூடியிருக்கையில் பல விடயங்களும் தவறான இடத்தில் ஒன்றமைந்துவிடும். நீங்கள் இதைவிட இன்னும் மோசமாக நிலையில் இருத்தப்பட முடியாது."
கடந்த எட்டு முதல் ஒன்பது மாதங்களில் எது தெளிவாகிவிட்டது என்றால், அது தொற்றுநோயை வெறுமனே மருத்துவ அடிப்படையில் மட்டும் கருத்தில் கொள்வது முற்றிலும் போதுமானதல்ல என்பதாகும். இது எல்லாவற்றிற்கும் மேலாக ஒரு அரசியல் நெருக்கடியாகும். நிச்சயமாக, மக்களைக் கொல்லும் ஒரு வைரஸ் உள்ளது. ஆனால் தொற்றுநோய்க்கான பதிலான தோல்வி அல்லது இன்னும் துல்லியமாக கூறினால், உயிர்களைக் காப்பாற்றும் கொள்கைகளை செயல்படுத்த மறுப்பது முதலாளித்துவ வர்க்கத்தின் நிதி நலன்களால் தீர்மானிக்கப்படுகிறது. தொற்றுநோய்க்கு ஒரு பயனுள்ள பதிலைத் தடுக்கும் சமூக பொருளாதார நலன்களை ஆராய்வதை தவிர்த்து, வைரஸை எதிர்த்து போராடத் தேவையான கொள்கைகள் பற்றிய எந்தவொரு விவாதமும் பயனற்றது.
மேலும், தொற்றுநோயைக் கட்டுப்படுத்தத் தவறியது ஒரு சில அறிவற்ற அல்லது குற்றவியல் அரசியல் தலைவர்களின் மோசமான கொள்கைகளின் விளைவு மட்டுமல்ல. உலகெங்கிலும் தொற்றுநோய் கிளர்ந்து வருகிறது. மேற்கு ஐரோப்பாவின் முன்னேறிய முதலாளித்துவ நாடுகளில் இறப்பு எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது. மேலும் பணக்கார மற்றும் மிக சக்திவாய்ந்த முதலாளித்துவ-ஏகாதிபத்திய நாடான அமெரிக்காவில் அதிக எண்ணிக்கையிலான இறப்புகள் பதிவு செய்யப்படுகின்றன. இது முழு உலக முதலாளித்துவ அமைப்பின் மீதான ஒரு குற்றச்சாட்டாகும்.
தொற்றுநோயின் தாக்கத்தை முன்னறிவிக்க முடியாது என்ற கூற்றுக்கள் வெளிப்படையான பொய்களாகும். விஞ்ஞானிகள் பல ஆண்டுகளாக விரிவான எச்சரிக்கைகளை விடுத்து வருகின்றனர். ஆனால் ஏனைய ஒவ்வொரு பெரிய சமூக மற்றும் சமுதாய பழக்க வழக்கங்கள் சார்ந்த பிரச்சினைகளைப் போலவே, அரசாங்கங்களின் பதிலானது ஆளும் உயரடுக்கின் நிதி நலன்களால் தீர்மானிக்கப்படுகிறது.
ஒரு பெரிய வரலாற்று நெருக்கடி, -இந்த நோய்தொற்றும் அந்த அளவிலானதே-அனைத்து கட்சிகளினதும் முன்னோக்குகளையும் வேலைத்திட்டங்களையும் வெளிப்படுத்துகிறது மற்றும் பரிசோதிக்கிறது. நான் ஏற்கனவே மேற்கோள் காட்டிய மனித வாழ்வின் எண்ணிக்கை அனைத்து முதலாளித்துவ அரசாங்கங்கள் மற்றும் ஆளும் வர்க்கக் கட்சிகளின் வேலைத்திட்டங்கள் மற்றும் கொள்கைகளின் பேரழிவு வெளிப்பாடாகும்.
ஆனால் இது சோசலிச சமத்துவக் கட்சியின் தேர்தல் பிரச்சாரத்தின் கடைசி பொது நிகழ்வு என்பதால், இந்த வரலாற்று நெருக்கடிக்கு எங்கள் கட்சியின் பதிலை மறுபரிசீலனை செய்ய இது ஒரு பொருத்தமான நேரமாகும். சோசலிச சமத்துவக் கட்சி எவ்வாறு மதிப்பிடப்பட்டுள்ளது?
சோசலிச சமத்துவக் கட்சியின் ஜனாதிபதித் தேர்தல் பிரச்சாரத்தின் முதல் பொது நிகழ்வு பிப்ரவரி 24 அன்று மிச்சிகனில் உள்ள ஆன் ஆர்பரில் நடைபெற்றது. எட்டு மாதங்களுக்கு முன்பு, அந்த தேதியில், உலகளாவிய மொத்த இறப்பு எண்ணிக்கை 2,699 ஆகும். அந்த தேதியில், அமெரிக்காவில் பதிவு செய்யப்பட்ட மரணங்கள் எதுவும் இல்லை. ஆனால் சோசலிச சமத்துவக் கட்சி தொற்றுநோய் வெடித்ததால் ஏற்படும் ஆபத்து குறித்து ஏற்கனவே எச்சரித்திருந்தது. சோசலிச சமத்துவக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக தோழர் ஜோசப் கிஷோரை அறிமுகப்படுத்தி, கட்சி சார்பாக பேசுகையில் நான் கூறியதாவது:
தேசிய பிரச்சினைகள், சாராம்சத்தில் உலகப் பிரச்சினைகளாகும், அதற்கு ஒருங்கிணைந்த உலகளாவிய தீர்வுகள் தேவைப்படுகிறது. ஏகாதிபத்திய சக்திகள் தங்கள் குற்றவியல் புவிசார் அரசியல் நோக்கங்களைத் தேடுவதில் வெறித்தனமான இராணுவ கட்டமைப்பில் ஈடுபட்டுள்ளன. சீனாவும் ரஷ்யாவும் தங்கள் இராணுவ சக்திகளை கட்டமைத்து வருகின்றன.
ஆனால் தேசிய அரசுகள், சந்தைகள் மற்றும் நிலப் பகுதிகள் மீது போராடத் தயாராகி வருகையில், கொரோனா வைரஸ் எல்லைகளையும் தாண்டி உலகம் முழுவதும் பரவுகிறது. கடவுச்சீட்டு இல்லாமல் மற்றும் நுழைவு அனுமதிக்கு விண்ணப்பிக்க கவலைப்படாமல் பயணிக்கும் இந்த வைரஸ், அதனால் பாதிக்கப்பட்டவர்களின் தேசியம், இனம், இன பின்னணி அல்லது மதம் குறித்து முற்றிலும் அலட்சியமாக உள்ளது.
மார்ச் 6 அன்று, சோசலிச சமத்துவக் கட்சி "கொரோனா வைரஸ் தொற்றுநோயை எதிர்த்துப் போராட என்ன செய்ய வேண்டும்." என்ற தலைப்பில் ஒரு அறிக்கையை வெளியிட்டது. அந்த தேதியில், உலகளவில் மொத்த COVID-19 இறப்புகளின் எண்ணிக்கை 3,493 ஆகும். அமெரிக்காவில் 15 இறப்புகள் பதிவாகியுள்ளன. உலக சோசலிச வலைத் தளம் பின்வருமாறு கூறியது:
மில்லியன் கணக்கான மக்களின் உயிருக்கே அச்சுறுத்தலாக, ஒரு நூற்றாண்டில் மிக மோசமான தொற்றுநோய் வெடிப்புகளில் ஒன்றாக விளங்கும் கொரோனா வைரஸ் தொற்றுநோய் உலகெங்கிலும் பல நாடுகளுக்கும் தொடர்ந்து பரவி வருகிறது.
அந்நோயின் தீவிரத்தன்மையை வெள்ளை மாளிகை குற்றகரமாக நேர்மையின்றி உதறித் தள்ளியதற்கு நேரெதிராக, அமெரிக்காவில் நோயாளிகளின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து கொண்டிருக்கிறது. ஒவ்வொரு மட்டத்திலும் அரசாங்கத்தின் விடையிறுப்பு அலட்சியமாகவும் திறமையின்றியும் உள்ளது. இது உலகின் மிகச் செல்வவளம் மிக்க இந்த முதலாளித்துவ நாட்டில் முற்றிலும் திட்டமிடலும் தயாரிப்பும் இல்லாதிருப்பதை வெளிப்படுத்திக்காட்டுகின்றது. …
மக்களின் உடல்நலம் தொடர்பாக ட்ரம்ப் நிர்வாகத்தின் அலட்சியம் மோசமாக இருப்பதுடன், அடிமைகள் தொடர்பான பண்டைய எகிப்து மன்னர்களான பரோவாக்களின் (pharaohs – பண்டைய எகிப்திய மன்னர்கள்) மனோபாவத்தை விடவும் சிலவேளை மோசமாக உள்ளது. ஊடகங்களோ மனித உயிரிழப்புகளை விட வோல் ஸ்ட்ரீட் பங்கு மதிப்புகளின் வீழ்ச்சியைக் குறித்து வருந்தி புலம்புவதற்கே அதிக நேரம் செலவிடுகின்றன. …
இந்த சமூக பேரழிவு தடுக்கப்பட வேண்டும். தொழிலாள வர்க்கம், இளைஞர்கள் மற்றும் மாணவர்களின் அனைத்து பிரிவுகளும் இந்த வைரஸ் பரவுவதைத் தடுக்கவும் இந்நோயால் பாதிக்கப்பட்டுள்ள அனைவருக்கும் அவசியமான கவனிப்பை வழங்கவும் அரசாங்கங்கள் அவசரகால நடவடிக்கை எடுக்குமாறு கோர வேண்டும். இதற்கு சமூக ஆதார வளங்களைப் பாரியளவில் மறுஒதுக்கீடு செய்வது அவசியமாகும்.
இந்த விடையிறுப்பானது, சமூகத்தின் தேவைகள் இலாப நலன்களுக்கு அப்பாற்பட்டு இருக்க வேண்டும் என்ற கோட்பாட்டால் வழிநடத்தப்பட வேண்டும். பங்கு மதிப்புகள் மற்றும் இலாபங்கள் மீதான முதலாளித்துவ கணக்கீடுகள் இந்நோயை எதிர்த்துப் போராடுவதை மட்டுப்படுத்தவோ, பலவீனப்படுத்தவோ, அல்லது தடுக்கவோ அனுமதிக்க கூடாது.
மார்ச் 13 அன்று, உலகளாவிய COVID-19 இறப்பு எண்ணிக்கை 5,493 ஆக இருந்தது. அமெரிக்காவில், 48 இறப்புகள் பதிவாகியுள்ளன. WSWS "முதலாளித்துவம் சமூகத்துடன் போரில் உள்ளது" என்ற தலைப்பில் ஒரு கட்டுரையை வெளியிட்டது. அது கூறியது:
கடந்த நான்கு தசாப்தகால உலகளாவிய முதலாளித்துவ அபிவிருத்தியின் உள்ளடக்கத்தில் மட்டுமே இந்த தொற்றுநோயின் வெடிப்பு மற்றும் அதன் விளைவுகளைப் புரிந்து கொள்ள முடியும். இந்த நான்கு தசாப்தங்கள் உற்பத்தி கருவிகளின் தனியார் சொத்துடைமையை அடிப்படையாக கொண்ட ஓர் அமைப்புமுறையின் சமூகரீதியில் பிற்போக்குத்தனமான குணாம்சங்கள் அனைத்தையும் வெளிப்படுத்தி காட்டியுள்ளன, இதில் சமூகத்தின் அனைத்து தேவைகளும் இலாப முனைவுக்கும் பரந்தளவில் தனிநபர் செல்வவளத்திற்கும் அடிபணிய செய்யப்பட்டிருந்தன. “நாம் பில்லியன் கணக்கில் குவித்துக் கொள்ள மில்லியன் கணக்கானவர்கள் இறக்க வேண்டுமானால், அவ்வாறே நடக்கட்டும்,” என்பதே முதலாளித்துவ செல்வந்த தட்டுக்களின் குறிக்கோளாக உள்ளது.
மார்ச் 17 அன்று, உலகளாவிய COVID-19 இறப்பு எண்ணிக்கை 8,046 ஆக உயர்ந்திருந்தது. அமெரிக்காவில் 121 பேர் இறந்துள்ளனர். சோசலிச சமத்துவக் கட்சியின் தேசியக் குழு "தொழிலாள வர்க்கத்திற்கான ஒரு செயல் திட்டம்" ஒன்றை வெளியிட்டது. அந்த அறிக்கை வைரஸ் பரவுவதைத் தடுக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க முதலாளித்துவ அரசாங்கங்களின் உலகளாவிய மறுப்பு பற்றிய விரிவான பகுப்பாய்வை வழங்கியது. கட்சியின் தேசிய குழு பின்வருமாறு அறிவித்தது:
தனியார் சொத்துக்கள் அவசரகால நடவடிக்கைகளுக்கு வழிவகுக்கும் அளவிற்கு, அதை திருப்பிவிட வேண்டும். அரசாங்கத்தால் பிணை எடுக்கப்படும் அனைத்து தொழில்களும் அதற்கு பதிலாக தொழிலாள வர்க்கத்தின் ஜனநாயக கட்டுப்பாட்டின் கீழ் பொது பயன்பாடுகளாக மாற்றப்பட வேண்டும், அத்தியாவசியமான தேவைகளின் உற்பத்தியை நோக்கி திருப்பி விடப்பட வேண்டும்.
ஒரு போர் வெடித்திருந்தால், கொலைக் கருவிகளை உருவாக்க ஆளும் உயரடுக்கினரால் பொருளாதார வாழ்க்கை மறுசீரமைக்கப்படும். இப்போது அது உயிர் வாழ்க்கை கருவிகளை தயாரிக்கும் விடயமாக உள்ளது.
இணக்கம் காணமுடியாத இரண்டு வர்க்கங்களின் நலன்கள் ஒன்றையொன்று எதிர்த்து நிற்கின்றன. முதலாளிகளைப் பொறுத்தவரை, இது அவர்களின் இலாப நலன்களைப் பாதுகாப்பது மற்றும் அவர்களின் சொத்து மற்றும் செல்வம் தீண்டத்தகாததாக இருப்பதை உறுதி செய்வது பற்றிய கேள்வி. அவர்களின் நலன்களுக்கு இடையூறு விளைவிக்கும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. தொழிலாள வர்க்கம் மனிதகுலத்தின் பரந்த நலன்களில் அக்கறை கொண்டுள்ளது, இது தனியார் இலாபத்திலிருந்து அல்ல, சமூகத் தேவையிலிருந்து செயல்படுகிறது.
தொழிலாளர்களை அணிதிரட்டுவதற்கும், அவர்களின் வர்க்க நனவை உயர்த்துவதற்கும், சர்வதேச வர்க்க ஒற்றுமையின் அவசியத்தைப் பற்றிய அவர்களின் புரிதலை வளர்ப்பதற்கும், அவர்களின் அரசியல் தன்னம்பிக்கையை அதிகரிப்பதற்கும் இந்த கோரிக்கைகளை நாங்கள் எழுப்புகிறோம். தொற்றுநோயை எதிர்த்துப் போராடுவதற்கு எந்தவொரு முதலாளித்துவ அரசாங்கத்திலும் நாங்கள் நம்பிக்கை வைக்கவில்லை, இந்த கோரிக்கைகளை அவர்கள் எதிர்ப்பார்கள் என்று நாங்கள் முழுமையாக எதிர்பார்க்கிறோம். எதை அடைய முடியும் அல்லது அடைய முடியாது என்பது போராட்டத்திலேயே தீர்மானிக்கப்படும்.
மார்ச் இறுதி வாரத்தில், வோல் ஸ்ட்ரீட்டில் டிரில்லியன் கணக்கான டாலர்களை இறைக்கவும், 2008-09 ஆம் ஆண்டின் பிணை எடுப்பை விட அதிகமாக இருந்த ஒரு மீட்பு நடவடிக்கையில் பங்கு மதிப்புகளை உயர்த்தவும் காங்கிரஸ் கிட்டத்தட்ட ஒருமனதாக வாக்களித்தது. பிணை எடுப்புக்கான விதிமுறைகள் ஒப்புக் கொள்ளப்பட்டு, CARES சட்டம் நிறைவேற்றப்பட்டதும், அரசாங்கமும் இரு முதலாளித்துவ கட்சிகளும் வைரஸ் பரவுவதைத் தடுக்கும் முயற்சிகளை கைவிட்டன. அவர் "சமூக நோய் எதிர்ப்பு சக்தி" கொள்கையான மக்கள் தொகையில் பெரும் பகுதியினரின் தொற்றுநோயை ஊக்குவித்தல் நடைமுறைக்கு வந்தது. இந்த படுகொலைக்கான சமிக்ஞையை நியூயோர்க் டைம்ஸின் முன்னணி கட்டுரையாளர் தோமஸ் ப்ரீட்மன் வழங்கினார். அவர் சுவீடன் அரசாங்கத்தால் நிறுவப்பட்ட மனிதாபிமானமற்ற கொள்கைகளை பற்றி உற்சாகமாகப் பேசினார்.
மார்ச் மாத இறுதியில் இருந்து, 230,000 அமெரிக்க உயிர்கள் கோவிட்-19 க்கு பலியாகி உள்ளன. மார்ச் மாத இறுதியில் இருந்து மொத்த உலகளாவிய உயிர் இழப்பு ஒரு மில்லியனுக்கும் அதிகமாகும்.
தேர்தல் பிரச்சாரம் முழுவதும், சோசலிச சமத்துவக் கட்சியின் கொள்கைகள் உலகளாவிய முதலாளித்துவ நெருக்கடி, முக்கிய சமூக வர்க்கங்களின் முரண்பாடான நலன்கள் மற்றும் சர்வதேச நெருக்கடியின் தர்க்கம் பற்றிய மார்க்சிச பகுப்பாய்வு அடிப்படையில் அமைந்திருக்கின்றன. எங்கள் தேர்தல் வேலைத்திட்டம் தொழிலாள வர்க்கத்தின் அரசியல் சுயாதீனத்திற்கானதும், தொழிலாளர்களின் அதிகாரத்திற்கான போராட்டமும் மற்றும் அமெரிக்காவிலும் சர்வதேச அளவிலும் ஒரு சோசலிச சமுதாயத்தை கட்டியெழுப்புவதற்கான வழிகாட்டுதல்களுடன் ஒத்துப்போகிறது. சோசலிச சமத்துவக் கட்சியிடம் தேர்தல் யதார்த்தம் என்று அழைக்கப்படும் குறுகியகால நடைமுறைவாத மற்றும் பெருமளவில் உணர்ச்சிவசப்பட்ட கணக்கீடுகளால் தீர்மானிக்கப்படும் தேர்தலுக்கான ஒரு சிறப்பு வேலைத்திட்டம் இல்லை. தேர்தல் வருடத்திலும் சோசலிச சமத்துவக் கட்சி ஒரு புரட்சிகர சோசலிச கட்சியாகவே உள்ளது.
ட்ரம்பும் பைடெனும் நல்ல மற்றும் தீய சக்திகள், முற்றிலும் ஒன்றுக்கொன்று எதிரெதிராக நிற்கின்ற தமது இருப்பிற்கான ஒரு பாரிய மோதலில் ஈடுபட்டுள்ளனர் என்று அனைத்து தரப்பிலிருந்தும் பிரகடனப்படுத்தப்படும்போது, இந்த அத்தியாவசிய புள்ளி அவசியம் வலியுறுத்தப்பட வேண்டும். அமெரிக்க தன்னலக்குழுவின் இரு பிரிவுகளுக்கிடையேயான மோதல், இதுபோன்ற பாரிய வார்த்தைகளால் ஒருபோதும் சித்தரிக்கப்படவில்லை. அமெரிக்காவிலும் வெளிநாட்டிலும் உள்ள எண்ணற்ற வங்கிகள் ஏறக்குறைய அரை நூற்றாண்டு காலமாக அவர் வெள்ளை மாளிகைக்கு ஏறுவதற்கு நீண்ட காலத்திற்கு முன்பே ட்ரம்பின் அரை குற்றவியல் வணிகத் திட்டங்களுக்கு நிதியளித்து வருகின்றன என்பதையும் ஒருவர் மறந்துவிடலாம். பெரிய பெருநிறுவனங்களின் வரிப் புகலிடமான டெலாவேரின் பல தசாப்தங்களாக செனட்டராக இருந்த ஜோசப் பைடென் எண்ணற்ற சமூக பிற்போக்குத்தனமான மற்றும் அடக்குமுறை சட்டங்களை எழுதியவராவார்.
ட்ரம்ப் பெறத்தகுதியான கோவிட்-19 நோய்தொற்று பற்றியும் பின்னர் விரைவான குணமடைதலுக்கு வலியுறுத்தும் ஒரு தலையங்கத்துடனும் கடந்த மாதத்தில் பதிலளித்த நியூ யோர்க் டைம்ஸ், சோசலிஸ்டுகள் பைடெனை ஏன் "மன்னிப்பு அல்லது சங்கடம் இல்லாமல் ஆதரிக்க வேண்டும் -— சில உற்சாகத்துடனும் கூட" ஆதரிக்க வேண்டும் என விரிவுரை செய்கிறது.
சோசலிச சமத்துவக் கட்சி, தனது சொந்த வர்க்க நிலைப்பாட்டை கைவிடும் வர்க்க ஒத்துழைப்புக்கான ஒரு இழிந்த வேண்டுகோள்களை அவமதிப்புடன் நிராகரிக்கிறது. சோசலிச சமத்துவக் கட்சி ட்ரம்ப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஆபத்தை குறைத்து மதிப்பிடுகிறது என்பதல்ல. இதற்கு நேர்மாறானது: ட்ரம்ப் ஒரு பாசிச இயக்கத்தை உருவாக்க முயல்கிறார் என்று சோசலிச சமத்துவக் கட்சி தொடர்ந்து எச்சரித்துள்ளது. ஆனால், ட்ரம்ப் வெறுமனே ஒரு வெறித்தனமான மற்றும் தீய குண்டர் மட்டுமல்ல, மாறாக முதலாளித்துவத்தின் நெருக்கடி மற்றும் முரண்பாடுகளின் விளைவாகும் என்பதையும் நாங்கள் விளக்கினோம்.
ட்ரம்புக்கும், அமெரிக்காவில் பாசிசத்தின் எழுச்சிக்கும் எதிரான போராட்டத்தை தொழிலாள வர்க்கம் அரசியல் ரீதியாக ஜனநாயகக் கட்சியுடன் பிணைந்திருக்கும் வரை அபிவிருத்தி செய்ய முடியாது.
சோசலிச சமத்துவக் கட்சிக்கு நவம்பர் 3ம் தேதிக்கு மட்டுமல்ல, தேர்தலைத் தொடர்ந்து வரும் அனைத்து நாட்களுக்கும் ஒரு கொள்கை உள்ளது. தோழர்கள் ஜோ கிஷோர் மற்றும் நோரிசா சான்டா குரூஸ் மற்றும் பிற பேச்சாளர்கள் எங்கள் கட்சியின் கொள்கைகளை விரிவாக விளக்குவார்கள். அரசியல் நெருக்கடியின் வெவ்வேறு அம்சங்களை அவர்கள் ஆராய்வார்கள். ஆனால் அவர்கள் அனைவரும் ஒரு பாசிச ஆட்சியை உருவாக்குவதற்கான ட்ரம்ப்பின் முயற்சிகளுக்கு ஒரே ஒரு சிறந்த பதில், தொழிலாள வர்க்கத்தின் சுயாதீனமான சமூக மற்றும் அரசியல் அணிதிரட்டலை அடிப்படையாகக் கொண்டது என்பதையும், ட்ரம்ப்பின் எந்தவொரு முயற்சிக்கும் வெகுஜனங்களின் எதிர்ப்பை தயாரிப்பதன் மூலம் அணிதிரட்டல் தொடங்கப்பட வேண்டும் என்பதையும் அவர்கள் அனைவரும் வலியுறுத்துவார்கள். ட்ரம்ப்பிற்கும் வாக்குகளை அடக்குவதற்கும் தேர்தல் முடிவுகளை திருப்புவதற்கும் அவரால் ஊக்குவித்து செயல்படும் பாசிச கும்பல்களின் எந்தவொரு முயற்சிக்கும் பரந்தளவிலான மக்கள் எதிர்ப்பை தயாரிப்பதன் மூலம் அந்த அணிதிரட்டல் தொடங்கப்பட வேண்டும்.
நவம்பர் 3 க்குப் பின்னர் "இயல்பு நிலை" திரும்பப்போவதில்லை. இந்தத் தேர்தலை சுற்றியுள்ள தீவிர பதட்டம் அமெரிக்க சமூகத்தின் வெடிக்கும் நிலையின் வெளிப்பாடாகும். சமூக சமத்துவமின்மையால் கிழிபட்டு, போரை நோக்கிச் செல்லும் முதலாளித்துவம், ஜனநாயகத்துடன் பொருந்தாது. அமெரிக்காவில் ஜனநாயகம் உயிர்பிழைக்க வேண்டுமென்றால், அது முற்றிலும் புதிய அதாவது சோசலிச அஸ்திவாரங்களில் மீது மறுசீரமைக்கப்பட வேண்டும்.
அதனால்தான் இன்றைய பேச்சாளர்களின் பேச்சுக்களை கேட்டபின், இந்த இணையவழி கூட்டத்தில் பங்கேற்கும் அனைவரும் சோசலிச சமத்துவக் கட்சியில் சேர முடிவெடுப்பார்கள் என்று நம்புகிறோம்.
நாங்கள் அற்புதங்களை செய்பவர்கள் அல்ல. நாங்கள் வாக்குறுதிகளை வழங்கவில்லை. உடனடி தீர்வுகளுக்கு நாங்கள் உறுதியளிக்கவில்லை. மனிதகுலத்தின் தலைவிதியைக் குறிக்கும் ஒரு பரந்த வரலாற்று நெருக்கடியை நாங்கள் எதிர்கொள்கிறோம். இதற்கு இலகுவான தீர்வு எதுவும் கிடையாது.
நாங்கள் தொழிலாள வர்க்கத்திற்கு உண்மையைச் சொல்லும் ஒரு புரட்சிகரக் கட்சி. உலகம் இதுவரை காணாத மிகக் கொடூரமான சர்வாதிகாரத்தை ஸ்தாபிப்பதை தொழிலாள வர்க்கம் தடுக்கவேண்டும் என்றால், அது அதிகாரத்திற்கான போராட்டத்தை மேற்கொள்ள வேண்டும். இதனைக் கேட்கும் மற்றும் இந்த முன்னோக்குடன் உடன்படுவோர், வரலாற்று படிப்பினைகளை அடிப்படையாகக் கொண்டு, முதலாளித்துவத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க போராடும், தொழிலாள வர்க்கத்தின் வலிமையில் நம்பிக்கை வைத்திருக்கும் இந்த இயக்கத்தை கட்டியெழுப்ப முடிவெடுக்க வேண்டும்.
ட்ரொட்ஸ்கி 1938 ஆம் ஆண்டில் அமெரிக்காவிற்கு வரும் பாசிசத்தின் ஆபத்து பற்றி பேசும்போது அதை மிக நன்றாகவும் எளிமையாகவும் கூறினார். தொழிலாளர்கள் சோசலிசத்தை ஏற்க வேண்டும் அல்லது அவர்கள் பாசிசத்தை ஏற்க நிர்பந்திக்கப்படுவார்கள் என்றார். நாம் உண்மையைச் சொல்ல வேண்டும். நாங்கள் எங்களுக்கு மட்டுமே பொறுப்பேற்க முடியும். அதுதான் நமது இயக்கத்திற்கு வழிகாட்டும் கருத்தாகும்.
அரசியல் பிரச்சினைகளை தொழிலாள வர்க்கத்திற்கு விளக்க இந்த பிரச்சாரம் முழுவதும் நாங்கள் போராடினோம். நான் மேற்கோள் காட்டிய மேற்கோள்கள் இந்த ஆண்டு நாங்கள் வெளியிட்ட நூற்றுக்கணக்கான கட்டுரைகள் மற்றும் அறிக்கைகளின் ஒரு சிறிய எண்ணிக்கை மட்டுமேயாகும். நாங்கள் வெளியிட்ட ஒவ்வொரு வார்த்தையும் நிகழ்வுகளால் நிரூபிக்கப்பட்டுள்ளன. எனவே எதிர்காலத்தைப் பற்றி சற்று நம்பிக்கையுடன் பேசமுடியும்.
நாங்கள் நவம்பர் 3 அல்லது நவம்பர் 4 அல்லது நவம்பர் மாதத்திற்காக மட்டும் வேலை செய்யவில்லை. முன்னால் இருக்கும் பெரும் போராட்டங்களுக்கு நாங்கள் தயாராகி வருகிறோம். மேலும் எங்கள் பகுப்பாய்வின் சரியான தன்மையை தொழிலாளர்கள் உணர்ந்து கொள்வார்கள் என்பதால் இன்னும் கூடுதலான ஆதரவைப் பெறுவோம் என நாங்கள் நம்புகிறோம்.