கொரொனா வைரஸ் தொற்றுநோய் நெருக்கடி தீவிரமடைகிறது

முதலாளித்துவம் சமூகத்தின் மீது போர் புரிந்து கொண்டிருக்கிறது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

கொரொனா வைரஸ் தொற்றுநோய் பாரியளவில் உலக பொருளாதாரத்தைப் பாதித்து தற்போதுள்ள சமூக ஒழுங்கை ஆழமாக குழப்பும் என்று உணரப்படுவதால், உலக சந்தைகளில், குறிப்பாக அமெரிக்காவில் வோல் ஸ்ட்ரீட் 1987 க்குப் பின்னர் அதன் மிகப்பெரிய ஒரு நாள் இழப்பைப் பதிவு செய்துள்ள நிலையில், முன்னொருபோதும் இல்லாத நேற்றைய கடுமையான சரிவின் அளவினால் இந்த தொற்றுநோய் ஒரு சமூக, பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடியை உண்டாக்கி வருகிறது.

நோயால் ஏற்படுக்கூடிய உயிரிழப்புகளின் அளவைக் குறித்த மதிப்பீடுகள் அதிகரித்த பதட்டத்தை உண்டாக்கி வருகின்றது. உலகெங்கிலும் உறுதி செய்யப்பட்ட நோயாளிகளின் மொத்த எண்ணிக்கை 150,000 ஐ நெருங்கி வருவதுடன், வேகமாக அதிகரித்தும் வருகிறது, ஆனால் இது பரந்தளவில் யதார்த்தத்தைக் குறைத்துக்காட்டுகிறது. போதிய பரிசோதனை இல்லாததாலும் அறிகுறிகள் வெளிப்படுவதற்கே நீண்ட காலமெடுப்பதாலும், நிஜமான எண்ணிக்கை இன்னும் அதிகமாக இருக்கும். இப்போது உத்தியோகபூர்வ உயிரிழப்பு எண்ணிக்கை 5,000 க்கு அதிகமாக உள்ளது, உலகெங்கிலும் எண்ணக்கணக்கற்ற மில்லியன் கணக்கானவர்கள் அபாயத்தில் உள்ளனர்.

இத்தாலியில் நடைமுறையில் அனைத்து கடைகளும் மூடப்பட்டு, வீதிகள் வெறிச்சோடி உள்ள நிலையில், அது அதன் தேசியளவிலான முடக்கத்தை ஆழப்படுத்தி வருகிறது. ஜேர்மன் சான்சிலர் அங்கேலா மேர்க்கெல் கூறுகையில் மக்களில் 60 இல் இருந்து 70 சதவீதத்தினருக்கு இத்தொற்றுநோய் ஏற்படலாம் என்கிறார், அதாவது மில்லியன் கணக்கானவர்களுக்குத் தீவிர சிகிச்சை அவசியப்படலாம் அல்லது இறந்து போகலாம். ஈரானில் இந்த தொற்றுநோய் வளர்ச்சி கட்டுப்பாட்டை மீறிவிட்டதால் அது பாரிய புதைகுழிகளைத் தோண்டி வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன. பிரான்ஸ் அனைத்து பள்ளிகள் மற்றும் பல்கலைக்கழகங்களை மூடி வருகிறது. அமெரிக்காவில், முக்கிய பொதுமக்கள் விளையாட்டு மற்றும் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் இரத்து செய்யப்பட்டுள்ளதுடன், மளிகை கடைகளில் அடிப்படை அத்தியாவசிய பொருட்கள் வேகமாக தீர்ந்து போயுள்ளன.

Servpro cleaning workers are sprayed as they exit the Life Care Center in Kirkland, Wash., Thursday, March 12, 2020, at the end of a day spent cleaning inside the facility near Seattle. (AP Photo/Ted S. Warren)

இதுபோன்றவொரு நெருக்கடியைக் கையாள முதலாளித்துவ அமைப்புமுறையின் தகைமையின்மையை இந்த கொரொனா வைரஸ் தொற்றுநோய் அம்பலப்படுத்தி உள்ளது. உலகெங்கிலுமான அரசாங்கங்கள் அதிர்ச்சியூட்டும் மட்டத்திலான திறமையின்மை மற்றும் குழப்பத்துடன் விடையிறுத்துள்ளன. முற்றிலும் எதிர்நோக்கி இருக்க வேண்டிய ஒரு பேரிடருக்கு எந்த தயாரிப்புகளும் செய்யப்படவில்லை. ஆதாரவளங்கள் இல்லாமல் சுகாதாரநலத்துறை மூழ்கிக் கிடக்கிறது.

இந்த அவசரநிலைக்கு விடையிறுக்க உலகின் மிகச் செல்வந்த முதலாளித்துவ நாடான அமெரிக்காவின் முழு தகைமையின்மை ஓர் அரசாங்கத்தின் மீதான மற்றும் ஒட்டுமொத்த பொருளாதார அமைப்புமுறை மீதான ஒரு குற்றப்பத்திரிகையாக உள்ளது.

புதன்கிழமை இரவு ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அவரின் தேசிய உரையில், மில்லியன் கணக்கான மக்களின் உயிர்கள் மீது முதலாளித்துவ செல்வந்த தட்டுக்களின் அலட்சியத்தை எடுத்துக்காட்டினார்.

ட்ரம்பின் உரை, வாரக்கணக்கில் பங்குச் சந்தை நெருக்கடியின் பாதிப்புகள் மீது முற்றிலுமான ஒருமுனைப்பட்டிருந்த சில வாரங்களுக்குப் பின்னர் வந்தது, அதில் அவர் அனைத்தும் சிறப்பாக இருப்பதாகவும், கொரொனா வைரஸ் ஒரு தீவிர அச்சுறுத்தல் இல்லை என்று பிரகடனப்படுத்தினார். அமெரிக்காவிலும் சர்வதேச அளவிலும் தங்கள் வாழ்வையே தலைகீழாக்கி வருவதை கண்டுவரும் பெருந்திரளான மக்களுக்கு ஒரு துளி அனுதாபத்தைக் வெளிப்படுத்த கூட அவரால் முடியவில்லை. பரிசோதனை வசதிகள் இல்லாதிருப்பது அல்லது மருத்துவக் கவனிப்பு வசதிகளில் நிலவும் அதிதீவிர பற்றாக்குறையைச் சரி செய்ய அவர் எந்த நடவடிக்கைகளும் அறிவிக்கவில்லை.

ஆனால் இது வெறுமனே தற்போது வெள்ளை மாளிகையில் உட்கார்ந்திருப்பவரின் சமூகவியல் தனிமனிதபண்பு சார்ந்த விடயமில்லை. ட்ரம்ப், முன்னொருபோதும் இல்லாத சமத்துவமின்மை மட்டங்களால் மேலாளுமை செலுத்தப்படும் ஒரு சமூகத்தின், அமெரிக்க முதலாளித்துவத்தின் விளைபொருளாவார், இதில் பரந்த செல்வந்த வளம் ஏனைய ஒவ்வொன்றையும் விலையாக கொடுத்து நிதியியல் உயரடுக்கால் குவித்துக் கொள்ளப்படுகிறது.

அரசாங்க விடையிறுப்பின் வர்க்க தன்மை வியாழக்கிழமை அப்பட்டமாக வெளிப்பட்டது. வோல் ஸ்ட்ரீட்டில் நடக்கும் விற்றுத்தள்ளலுக்கு எப்பாடுபட்டாவது எதிர் நடவடிக்கை எடுப்பதற்கான ஒரு பயனற்ற முயற்சியில், பெடரல் ரிசர்வ், பங்குகளையும் ஏனைய சொத்துக்களையும் வாங்குவதற்காக 1.5 ட்ரில்லியன் டாலரை அது ஒதுக்குவதாக அறிவித்தது. மறுபுறம் அமெரிக்க காங்கிரஸ், வேலையிலிருந்து தூக்கி வீசப்பட்டவர்களுக்கு அல்லது இதர பிறவற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்கு —அவசரமாக எவ்வளவு அவசியப்படுகிறதோ அதனுடன் ஒப்பிடுகையில் ஒரு வாளியில் ஒரு துளி நீர் அளவுக்கு— ஒரு சில பில்லியன்களை ஒதுக்குவதற்கும் கூட தயங்கி கொண்டிருக்கிறது.

கடந்த நான்கு தசாப்தகால உலகளாவிய முதலாளித்துவ அபிவிருத்தியின் உள்ளடக்கத்தில் மட்டுமே இந்த தொற்றுநோயின் வெடிப்பு மற்றும் அதன் விளைவுகளைப் புரிந்து கொள்ள முடியும். இந்த நான்கு தசாப்தங்கள் உற்பத்தி கருவிகளின் தனியார் சொத்துடைமையை அடிப்படையாக கொண்ட ஓர் அமைப்புமுறையின் சமூகரீதியில் பிற்போக்குத்தனமான குணாம்சங்கள் அனைத்தையும் வெளிப்படுத்தி காட்டியுள்ளன, இதில் சமூகத்தின் அனைத்து தேவைகளும் இலாப முனைவுக்கும் பரந்தளவில் தனிநபர் செல்வவளத்திற்கும் அடிபணிய செய்யப்பட்டிருந்தன. “நாம் பில்லியன் கணக்கில் குவித்துக் கொள்ள மில்லியன் கணக்கானவர்கள் சாக வேண்டுமானால், அவ்வாறே நடக்கட்டும்,” என்பதே முதலாளித்துவ செல்வந்த தட்டுக்களின் குறிக்கோளாக உள்ளது.

1987 இல், பிரிட்டன் பிரதம மந்திரி மார்கரெட் தாட்சர் இழிவார்ந்த முறையில் அறிவிக்கையில், “சமூகம் என்பது போன்ற எதுவும் இல்லை,” என்றார். சமூக திட்டங்கள் மற்றும் உள்கட்டமைப்பு மீது ஓர் ஒட்டுமொத்த தாக்குதலையும் செல்வ வளத்தைத் தொழிலாள வர்க்கத்திடமிருந்து செல்வந்தர்களுக்குப் பாரியளவில் கைமாற்றுவதையும் நியாயப்படுத்துவதே தாட்சரினது அபிப்ராயமாக இருந்தது. நான்கு தசாப்தங்களாக, ஆளும் உயரடுக்குகள், அனைத்திற்கும் மேலாக அமெரிக்காவில், சமூக சூறையாடலில் ஈடுபட்டு வந்துள்ளன. சமூகத்தை விலையாக கொடுத்து செல்வந்த தட்டுக்களைத் தனிப்பட்டரீதியில் செல்வ செழிப்பாக்குவதே எல்லா கொள்கைகளுக்கும் அடித்தளத்தில் இருந்துள்ளது.

அமெரிக்காவில் ஜனநாயகக் கட்சி மற்றும் குடியரசு கட்சி இரண்டு அரசியல் கட்சிகளுமே இந்த சமூக அழிப்பிற்குத் தலைமை தாங்கி உள்ளன. கடந்த மூன்றாண்டுகளில், ட்ரம்ப் தொழிலாளர்கள் மற்றும் புலம்பெயர்ந்தோர்கள் மீது அவர் தொடுத்துள்ள தாக்குதல்களைப் போலவே, ஜனநாயகக் கட்சியினரோ அமெரிக்க மக்களுக்கு மேலோங்கிய அச்சுறுத்தல் ரஷ்யாவிலிருந்து வருவதாக பிரகடனப்படுத்தினர். ட்ரம்ப் ஆட்சிக்கு எதிரான அனைத்து சமூக எதிர்ப்பும் இராணுவ மற்றும் உளவுத்துறை முகமைகளின் பிற்போக்குத்தனமான திட்டநிரலுக்கு அடிபணிய செய்யப்பட்டது.

இப்போது நாம் விளைவுகளைக் காண்கிறோம். வேறெந்த நாட்டையும் விட அதிகமாக, அமெரிக்கா தான் இந்நோய்க்கான தயாரிப்பின்மை மட்டத்தை வெளிப்படுத்தி உள்ளது. இது குற்றகரமானது என்பதை தவிர வேறொன்றுமில்லை. வியாழக்கிழமை, ஓஹியோ சுகாதாரத்துறை இயக்குனர் அறிவிக்கையில், சமூக பரவலின் ஆதாரம் மாநிலத்தில் ஒரு சதவீதத்தினர் அல்லது 117,000 நபர்கள் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்பதை சுட்டிக் காட்டுவதாக அறிவித்தது. ஆனால் உண்மையில் வெறும் ஐந்து நபர்கள் மட்டுமே பரிசோதிக்கப்பட்டுள்ளனர்.

நோய் தடுப்பு மையம் நாளொன்றுக்கு 300 இல் இருந்து 350 பரிசோதனைகள் மட்டுமே செய்யக் கூடிய தகைமை கொண்டுள்ளது. நடைமுறையில் அது இன்னும் குறைவாகவே செய்கிறது. இந்த வாரத்தில், அந்த நோய்தொற்று நாடெங்கிலும் பரவிய நிலையிலும் கூட, செவ்வாயன்று வெறும் எட்டு பரிசோதனைகளே செய்யப்பட்டன, புதன்கிழமை ஒன்றுமே செய்யப்படவில்லை. ஒவ்வாமை மற்றும் தொற்று நோய்களுக்கான தேசிய பயிலகத்தின் இயக்குனர் Anthony Fauci வியாழக்கிழமை காங்கிரஸிற்கு வழங்கிய விளக்கவுரையில், “நமக்கு இப்போது என்ன தேவையோ உண்மையில் இந்த அமைப்புமுறை அதற்குரிய தயாரான நிலையில் இல்லை... அது தோல்வி அடைந்து வருகிறது,” என்பதை ஒப்புக் கொண்டார்.

நோய் பரவி வருகின்ற நிலையில், அமெரிக்க மருத்துவத்துறையில் விரைவிலேயே நோயாளிகளின் கூட்டம் நிரம்பிவிடும். மருத்துவமனை படுக்கைகள் மற்றும் தீவிர கவனிப்பு பிரிவுகளின் எண்ணிக்கையோ எதிர்பார்க்கப்படும் தேவையைப் பூர்த்தி செய்ய முற்றிலும் போதுமானளவுக்கு இல்லை, அதன் அர்த்தம் பத்தாயிரக் கணக்கானவர்களுக்கு கவனிப்பு கிடைக்காது என்பதுடன் மரண எண்ணிக்கை அதிகரிக்கும் என்பதாகும். முகக் கவசங்கள் மற்றும் ஏனைய இன்றியமையா துணைக்கருவிகள் உட்பட முக்கிய பொருட்களின் பற்றாக்குறையை மருத்துவத்துறை தொழிலாளர்கள் முகங்கொடுக்கிறார்கள், இது அவர்களையும் அவர்களின் நோயாளிகளையும் அதிக அபாயத்திற்கு உட்படுத்துகிறது.

பல தொழிலாளர்கள் சுகாதாரமற்ற நிலைமைகள் குறித்தும், சவர்க்காரம் மற்றும் சுடுதண்ணீர் கூட இல்லை என்று தெரிவித்து வருகின்ற நிலையில், வேலையிடங்கள் போதுமான பாதுகாப்புக்குத் தயாராக இல்லை. வியாழக்கிழமை, இண்டியானாவில் பியட் கிறைஸ்லர் ஆலையில் ஒரு வாகனத்துறை தொழிலாளிக்கு இந்நோய் தொற்றியிருப்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டது, ஆனால் FCA உற்பத்திக்கு ஒரு முக்கிய இடமாக விளங்கும் அந்த ஆலை திறந்தே வைக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான சேவைத்துறை தொழிலாளர்களுக்குச் சம்பளத்துடன் கூடிய மருத்துவ விடுப்பு இல்லை என்ற நிலையில், அவர்கள் அபாயகரமாக பாதுகாப்பின்றி இருக்கிறார்கள்.

பள்ளிகளும் கல்லூரிகளும் மூடப்பட்டு வருகின்ற நிலையில், நூறாயிரக் கணக்கான மாணவர்கள் எந்தவித மாற்று இடவசதி திட்டங்களும் இல்லாமல் தங்கும் விடுதிகளில் இருந்து வெளியேற்றப்படுவதை முகங்கொடுக்கிறார்கள். பெற்றோர்களுக்கோ சம்பளமின்றி விடுமுறையை ஏற்றுக் கொள்ள அல்லது அவர்களுக்கு எந்த விதத்திலும் அரசிடமிருந்து உதவியும் கிடைக்காத நிலையில் குழந்தைகள் பரமாரிப்பு மையங்களைத் தேட நிர்பந்திக்கப்படுகிறார்கள்.

இதே விடயம் தான் ஒவ்வொரு நாட்டிலும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. மில்லியன் கணக்கானவர்கள் எந்தவித உதவியும் இன்றி விளைவுகளை முகங்கொடுத்திருக்கையில் அரசாங்கங்களோ பெருநிறுவனங்களின் இலாபங்களைப் பாதுகாக்க அல்லாடிக் கொண்டிருக்கிறது. இந்த தொற்றுநோயைக் குணமாக்குவதற்கு எந்தவித திட்டமோ அல்லது ஒருங்கிணைப்போ இல்லை. மருத்துவ அவசரநிலைகளுக்கான விடையிறுப்புகளை ஒருங்கிணைக்கவே இருக்கிறது என்று கூறப்படும் உலக சுகாதார அமைப்பு சக்தியற்றுள்ளது, அதன் வழிகாட்டுதல்களும் நெறிமுறைகளும் உலகளவில் புறக்கப்பட்டுள்ளன.

இந்த உலகளாவிய தொற்றுநோய் மரணகதியிலான வேகத்தை எட்டிய போதே விலைமதிப்பில்லா நேரம் வீணடிக்கப்பட்டது. இந்த தொற்றுநோய் முதன்முதலில் வூஹானில் தன்னை வெளிப்படுத்திய போது, வாஷிங்டன் சீனாவின் இந்த நெருக்கடியை எவ்வாறு அமெரிக்காவின் புவிசார் அரசியல் ஆதாயத்திற்குச் சாதகமாக்கிக் கொள்வது என்ற நிலைப்பாட்டில் இருந்து மட்டுமே அந்த வளர்ச்சியின் மீது ஆர்வமாக இருந்தது. அந்த அச்சுறுத்தல் மீது மட்டுப்பட்ட ஒருமுனைப்பைச் செலுத்திய ஊடகங்களோ, அவசரகதியில் உலகளவில் ஒருங்கிணைந்த நடவடிக்கைக்கு அழைப்பு விடுக்கவில்லை.

இதற்கு முரண்பட்ட விதத்தில், தொழிலாள வர்க்கத்தின் பொதுவான உலகளாவிய நலன்களை முன்னுரிமைப்படுத்தும் ஒரு சர்வதேச சோசலிச முன்னோக்கில் தன்னை நிலைநிறுத்தியவாறு, நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவும் அதனுடன் இணைந்த சோசலிச சமத்துவக் கட்சிகளும் அபாயத்தை உணர்ந்து எச்சரிகை மணி ஒலித்தன. இந்த ஜனவரி 28 இல் உலகசோசலிசவலைத்தளம் பின்வருமாறு எச்சரித்தது: “புதிய தொற்றுநோயின் பலத்திற்கு முன்னால் இந்த சமகால சமூகத்தின் மிகப்பெரும் பலவீனத்தை இந்த வெடிப்பு அம்பலப்படுத்துகிறது, இதிலிருந்து எழும் அபாயங்களுக்கு எந்த முதலாளித்துவ அரசாங்கமும் போதுமானளவுக்கு தயாராக இல்லை.” இந்த தொற்றுநோயை எதிர்த்து போராடுவதற்கு சர்வதேச அளவில் ஒருங்கிணைந்த நடவடிக்கைக்கான அவசர தேவை தேசிய மோதல்களால் புதைக்கப்பட்டுள்ளன என்று WSWS எழுதியது:

ஒரு வீரியம் மிக்க நோய் உலகெங்கிலும் பரவுவதை எதிர்த்து போராட தேசிய எல்லைகளைக் கடந்து பகுத்தறிவார்ந்த திட்டமிடல் முக்கியமாக இருக்கும் ஒரு தருணத்தில், அமெரிக்காவும் சீனாவும் ஒரு புதிய "பனிப்போர்" என்றழைக்கப்படுகின்ற அதிகரித்து வரும் ஒரு வர்த்தக மோதலில் சிக்கி உள்ளன. புதிய நுண்கிருமிகள் அவற்றை எதிர்த்து போராட ஒவ்வொரு கண்டத்தின் விஞ்ஞான ஆதாரவளங்களைக் கோருகின்ற வேளையிலும் கூட, உலக நாடுகள் உண்மையான தடுப்புச் சுவர்களையோ அல்லது அதுபோன்றவற்றையோ கட்டமைத்து கொண்டிருக்கின்றன.

காலநிலை மாற்றம் மற்றும் அதிகரித்து வரும் சுற்றுச்சூழல் பேரிடர்களின் அச்சுறுத்தல்களைப் போலவே, உலகளாவிய தொற்றுநோய் அச்சுறுத்தலுக்கு எதிராக மனித நாகரீகத்தைப் பாதுகாப்பதற்கு, உலகளாவிய கூட்டு ஒத்துழைப்பு மற்றும் திட்டமிடல் மட்டம் அவசியப்படுகிறது, இதற்கு முதலாளித்துவம் தகைமையற்றது. சமூகம் முதலாளித்துவ அமைப்புமுறையையும் மற்றும் உலகின் மீது அது திணிக்கும் எதேச்சதிகார பிளவுகளையும் கடந்து வளர்ந்துள்ளது. உயிர்வாழ்விற்கான மிகவும் அவசியமான சமூக தேவைகளை வழங்குவதற்கு பகுத்தறிவார்ந்த திட்டமிடல் அவசியமாகிறது. அதாவது, அதற்கு சோசலிசம் அவசியமாகிறது.

ஆளும் செல்வந்த தட்டுக்களால் முக்கிய தறுவாயில் ஆறு வாரங்கள் வீணடிக்கப்பட்டுள்ளன மற்றும் உலகளாவிய அச்சுறுத்தல் அதிவேகமாக வளர்ந்துள்ளது. நடவடிக்கை எடுத்தாக வேண்டும்.

பெருநிறுவன இலாபங்கள் மற்றும் தனியார் முதலாளித்துவ சொத்துவளங்களைக் குறித்த அனைத்து பரிசீலனைகளை விட உலக உழைக்கும் மக்களின் தேவைகளுக்கே முற்றிலுமாக நிபந்தனையின்றி முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என்பதே இந்த நெருக்கடிக்கான விடையிறுப்பை வழிநடத்த வேண்டும் என்பது இன்றியமையாத கோட்பாடாக உள்ளது.

சோசலிச சமத்துவக் கட்சியும் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவும் இந்நோயால் பாதிக்கப்பட்ட அனைவரும் பரிசோதனையை அணுகுவது மற்றும் உயர்தரமான மருத்துவச் சிகிச்சை பெறுவதை உறுதிப்படுத்த ட்ரில்லியன் கணக்கிலான டாலர்களை ஒதுக்க வேண்டும் என்பது உட்பட இந்த கொரொனா வைரஸை எதிர்த்து போராட சமூக ஆதாரவளங்களைச் சர்வதேச அளவில் ஒருங்கிணைந்து பாரியளவில் அணித்திரட்டுமாறு கோருகின்றன. வர்க்க அடிப்படையிலான மற்றும் இலாபத்தினால் உந்தப்பட்ட இந்த மருத்துவச் சிகிச்சை முறை ஒழிக்கப்பட்டு, சமத்துவமான அனைவருக்குமான சிகிச்சை முறையைக் கொண்டு பிரதியீடு செய்யப்பட வேண்டும். மிகவும் அத்தியாவசியமாக தேவைப்படும் மருத்துவச் சாதனங்களை உருவாக்க பாரியளவில் ஒரு பொது வேலைத் திட்டம் தொடங்கப்பட வேண்டும்.

மருத்துவத்துறை தொழிலாளர்களைப் பாதுகாக்க உடனடியான நடவடிக்கைகள் எடுத்தாகப்பட வேண்டும். இந்த வைரஸ் பரவுவதற்கான அபாயம் உள்ள வேலையிடங்கள் மூடப்பட்டு, அதனால் பாதிகப்படுபவர்களுக்கு முழு வருமானம் வழங்கப்பட வேண்டும். பள்ளிகள் மூடப்படும் இடங்களில், பெற்றோர்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுப்பு வழங்கப்பட வேண்டும். தங்கும் விடுதிகளில் இருந்து பலவந்தமாக வெளியேற்றப்படும் கல்லூரி மாணவர்களுக்குப் பாதுகாப்பான தங்குமிடங்கள் வழங்கப்பட வேண்டும். வாடகை செலுத்தாத நிலுவைத் தொகைகள் இரத்து செய்யப்படுதல் மற்றும் அவசர உதவிக்கான ஏனைய வடிவங்களுடன் சேர்ந்து, பயன்பாடு சேவைகள் மற்றும் கடன் நிலுவைகள் இரத்து செய்யப்பட வேண்டும்.

முதலாளித்துவ அமைப்புமுறை மீது ஒரு நேரடித் தாக்குதல் இல்லாமல் எதையும் செய்ய முடியும் என்று வாதிடும் பேர்னி சாண்டர்ஸ் போன்றவர்கள் அனைவரும் பொய்களைப் பரப்பி கொண்டிருக்கிறார்கள். வியாழக்கிழமை உரையில் சாண்டர்ஸ் பேசுகையில், ஏறத்தாழ 400,000 பேர் கொரொனா வைரஸால் உயிரிழக்கக்கூடும் என்றும், இந்த நெருக்கடி "ஒரு மிகப்பெரிய போரின் அளவில் உள்ளது" என்றும் அறிவித்தார். ஆனாலும் சாண்டர்ஸ், இந்த நெருக்கடியைச் சமாளிப்பதற்கான நடவடிக்கைகளை ஜனநாயகக் கட்சி மற்றும் குடியரசுக் கட்சிகள் இரண்டினது நடவடிக்கைகள் மூலமாக மட்டுமே எட்ட முடியும் என்ற வாதத்தையே மீண்டும் கூறினார்.

உண்மையில், முதலாளித்துவத்திற்கு எதிராக உலக பொருளாதாரத்தின் சோசலிச மறுஒழுங்கமைப்புக்காக அமெரிக்காவிலும் சர்வதேச அளவிலும் தொழிலாள வர்க்கதின் ஒரு பாரிய அரசியல் இயக்கத்தின் அவசர அவசியத்தை இந்த நெருக்கடி ஊர்ஜிதப்படுத்துகிறது. இலாபத்தின் அடிப்படையில் ஒழுங்கமைக்கப்பட்ட ஒரு சமூகத்தின் விளைவை நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம். மக்கள்தொகையில் பாதிக்கும் அதிகமானவர்கள் கொண்டிருக்கும் செல்வ வளத்தை விட அதிகமான செல்வ வளத்தை மூன்று தனிநபர்கள் வைத்திருக்கும் ஒரு சமூகம் மனிதகுலம் எதிர்கொண்டிருக்கும் மாபெரும் பிரச்சினைகள் எதனையும் தீர்க்க தகைமையற்று உள்ளது.

மிகப்பெரும் வங்கிகளும் பெருநிறுவனங்களும் பொதுவுடைமை மற்றும் ஜனநாயக கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட வேண்டும். அனைவருக்கும் மருத்துவச் சிகிச்சை, பயன்பாட்டு சேவைகள் மற்றும் இதர சமூக தேவைகள் கிடைப்பதை உறுதிப்படுத்துவதற்கான நிதி கிடைக்குமாறு செய்ய செல்வந்தர்களின் மாபெரும் செல்வ வளம் பறிமுதல் செய்யப்பட வேண்டும். தனியார் சொத்துடைமை மற்றும் இலாபகர முனைவின் தடைகளை நீக்கி, ஓர் உலகளாவிய திட்டமிட்ட பொருளாதாரத்தின் அடிப்படையில் பொருளாதார வாழ்வின் அனைத்து அம்சங்களும் மறுஒழுங்கமைப்பு செய்யப்பட வேண்டும். பெருநிறுவன இலாபங்கள் மற்றும் வோல் ஸ்ட்ரீட் பங்கு மதிப்புகள் மீதான பாதிப்புகள் என்பது ஒருவரின் மனதில் கடைசி பரிசீலனையாக மட்டுமே இருக்க வேண்டும்.

தப்பிக்க முடியாத வகையில் சமூகத்தை அடிப்படையிலேயே மறுகட்டமைப்பு செய்ய வேண்டிய அவசியத்தை இந்த தொற்றுநோய் பட்டவர்த்தனமாக எடுத்துக் காட்டியுள்ளது. மனிதகுல முன்னேற்றம் என்பது சமத்துவமின்மைக்கு எதிரான போராட்டத்தில் இருந்து பிரிக்க முடியாதது என்பதை ஒரு மாபெரும் நெருக்கடி எடுத்துக்காட்டுவது வரலாற்றில் இதுவொன்றும் முதல்முறை இல்லை. மாபெரும்சமப்படுத்தல்: கற்காலத்திலிருந்து இருபத்தோராம் நூற்றாண்டு வரையில் வன்முறையும் சமத்துவமின்மையின் வரலாறும் என்ற ஒரு முக்கியமான புதிய புத்தகத்தில், வரலாற்றாளர் Walter Schiedel பின்வருமாறு எழுதுகிறார்: “பதிவு செய்யப்பட்ட வரலாறு நெடுகிலும், ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் மிகவும் சக்தி வாய்ந்த அதிர்வுகளில் இருந்துதான் மிகவும் சக்தி வாய்ந்த சமப்படுத்தல் விளைந்தது. நான்கு வெவ்வேறு விதமான வன்முறையான உடைவுகள் சமத்துவமின்மையை தரைமட்டமாக்கி உள்ளன, அவை: பெருந்திரளான மக்கள் அணித்திரண்ட போர்க்களம், மாற்றியமைத்த புரட்சி, அரசு தோல்வி மற்றும் உயிராபத்தான தொற்றுநோய்கள். இதை சமப்படுத்தலின் நான்கு குதிரையோட்டிகள் என்று நான் குறிப்பிடுவேன்,” என்றார். இந்த குதிரையோட்டிகள் ஒவ்வொன்றும் இப்போது கண்கூடாக காணக்கூடியதாக உள்ளன.

மனிதகுலத்தின் எதிர்காலமே பணயத்தில் உள்ளது. முதலாளித்துவம் சமூகத்துடன் போரில் உள்ளது. தொழிலாள வர்க்கம், சர்வதேச சோசலிச பதாகையின் கீழ், முதலாளித்துவத்திற்கு எதிராக போர் தொடுக்க வேண்டும்.

Loading