மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்
சீனாவுடன் தீவிரமடைந்து வரும் அமெரிக்க மோதலுக்கு முன்னணியாக, நடைமுறையளவில், செயல்படும் விதத்தில், திங்கட்கிழமை ஆஸ்திரேலிய அரசாங்கம், தவறுக்கிடமின்றி பெய்ஜிங்கிற்கு எதிராக இலக்கு வைக்கப்பட்ட இராணுவ பங்காண்மைகளின் ஆத்திரமூட்டும் மூன்று தீவிரப்படுத்தல்களை அறிவித்தது.
முதலாவதாக, அமெரிக்கா மற்றும் ஜப்பானுடன் இணைந்து இந்தியாவின் கிழக்கு கடற்கரை அருகாமையில் நவம்பர் மாத வருடாந்தர மலபார் கடற்படை ஒத்திகையில் பங்கெடுப்பதற்கான இந்திய அரசின் அழைப்பை ஏற்பதாக இருந்தது. இது அந்த நான்கு நாடுகளுக்கு இடையிலான "நாற்கர" கூட்டணியை முன்னெடுப்பதற்கு சமிக்ஞை காட்டுகிறது.
டோக்கியோவில் இருந்து வெளியான இரண்டாவது அறிவிப்பு, "ஆஸ்திரேலிய பாதுகாப்பு படை சொத்திருப்புகளுக்கு" அச்சுறுத்தல் வந்தால் அவற்றை "பாதுகாக்க" ஜப்பானின் இராணுவத்தை அனுமதிக்கும் விதத்தில் அந்நாட்டுடன் ஒரு புதிய உடன்படிக்கையைப் பேசுவதற்கு அது ஒப்புக் கொண்டதாக இருந்தது.
மூன்றாவதாக, ஆஸ்திரேலிய பாதுகாப்பு அமைச்சர் லிண்டா ரெனால்டும் அவரின் ஜப்பானிய சமதரப்பினரான Kishi Nobuo உம், அவ்விரு நாடுகளது இராணுவ வாகனங்களும் சீனா வசமிருக்கும் தீவுக்குன்றுகளுக்குச் சாத்தியமானளவுக்கு நெருக்கமாக தென் சீனக் கடலில் பயணிப்பதில் அமெரிக்க போர்க்கப்பல்களுடன் இணைய உள்ளன என்பதையும் டோக்கியோவில் இருந்து வெளியிட்டனர்.
மொத்தமாக எடுத்துப்பார்த்தால், இந்த நகர்வுகள் சீனாவுக்கு எதிராக அமெரிக்கா தூண்டிவிடும் போருக்கான கூடுதல் தயாரிப்புகளைக் குறிக்கின்றன.
இதில் எந்த அறிவிப்புகளும் வெளிப்படையாக சீனாவை இலக்காக பெயரிடவில்லை என்றாலும், அவை அக்டோபர் 6 இல் டோக்யோவில் நடத்தப்பட்ட அமெரிக்கா, இந்தியா, ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு இடையிலான நான்கர பாதுகாப்பு பேச்சுவார்த்தை கூட்டத்திலிருந்து பெருக்கெடுத்தது. அங்கே அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் மைக் பொம்பியோ மீண்டும் பெய்ஜிங்கைப் பூதாகரமாக காட்டியதுடன், உலகளாவிய இந்த கோவிட்-19 தொற்றுநோய்க்காக அதன் மீது பொய்யாக பழிச்சுமத்தினார்.
பெய்ஜிங்கின் "சுரண்டல், ஊழல் மற்றும் அச்சுறுத்தலுக்கு" எதிரான தற்காப்புக்கு இந்த "நாற்கர" கூட்டுறவு முன்னெப்போதையும் விட மிகவும் முக்கியமானதென பொம்பியோ அறிவித்தார். “கிழக்குச் சீனக் கடல், மெகாங்க், ஹிமாலயா, தாய்வான் ஜலசந்திகள்" ஆகியவற்றுடன், சீனாவின் ஆக்கிரமிப்பு என்று குற்றஞ்சாட்டப்படும் "வெகுசில உதாரணங்களில்" தென்சீனக் கடலையும் அவர் பெயரிட்டார்.
உண்மை என்னவென்றால் சீனாவுடனான அதன் ஓயாத எல்லை மோதல்களில் ஓர் ஆக்ரோஷமான நிலைப்பாட்டை எடுக்க வலதுசாரி இந்திய அரசாங்கத்தைச் சமீபத்தில் அது ஊக்குவித்தமை உட்பட ட்ரம்ப் நிர்வாகம் தான் இத்தகைய வெடிப்புப்புள்ளிகளை வேண்டுமென்றே தூண்டிவிடுகிறது. இது ஒபாமா வெள்ளை மாளிகையால் நடத்தப்பட்ட சீன-விரோத "ஆசியாவை நோக்கிய முன்னெடுப்பை" ஒரு புதிய மட்டத்திற்கு எடுத்துச் சென்றுள்ளது.
டோக்கியோவில் பொம்பியோவின் நகர்வு "நாற்கர" கூட்டுறவை ஓர் உத்தியோகப்பூர்வ இராணுவ கூட்டணியாக மாற்றுவதற்கான அமெரிக்க முனைவின் பாகமாக இருந்தது. திங்கட்கிழமை அறிவிப்புகள் அந்த திசையில் எடுக்கப்பட்ட ஓர் உடனடி படியாக உள்ளன.
மலபார் அழைப்பை அறிவித்து ஆஸ்திரேலியாவின் ரெனால்ட் அறிவிக்கையில், “மலபார் போன்ற உயர்மட்ட இராணுவப் பயிற்சிகள் ஆஸ்திரேலியாவின் கடற்போக்குவரத்து தகைமைகளை விரிவாக்கவும், நமது நெருக்கமான பங்காளிகளுடன் ஒன்றிணைந்தியங்குதலைக் கட்டமைக்கவும், ஒரு வெளிப்படையான செழிப்பான இந்தோ-பசிப்பிக்கை ஆதரிக்க நமது கூட்டு தீர்மானத்தை எடுத்துக்காட்டவும் முக்கியமானது,” என்றார்.
பொம்பியோவை எதிரொலித்து, ரெனால்ட்ஸ் கூறுகையில் இந்த மலபார் ஒத்திகை "நமது பிரதான இந்தோ-பசிபிக் ஜனநாயகங்களுக்கு இடையிலான ஆழ்ந்த நம்பிக்கையையும், பொதுவான பாதுகாப்பு நலன்களின் மீது செயல்பட அவற்றின் பகிர்ந்துகொள்ளப்படும் விருப்பத்தையும் எடுத்துக்காட்டுகிறது,” என்றார்.
இந்த வளர்ச்சிகள் போர் தயாரிப்புகளுடன் எந்தளவுக்கு நெருக்கமாக சம்பந்தப்படுகின்றன என்பதை டோக்கியோ அறிவிப்புகள் எடுத்துக்காட்டுகின்றன.
“ஜப்பானின் இராணுவ தற்காப்பு படைகளை [“Self-Defence Forces” - SDF] கொண்டு ஆஸ்திரேலிய பாதுகாப்பு படை சொத்திருப்புகளைப் பாதுகாப்பதற்கான ஒரு கட்டமைப்பை உருவாக்க அவசியமான ஒருங்கிணைப்பை நடத்த" தங்கள் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தி இருப்பதாக கிஷி மற்றும் ரொனால்ட் கூறினர்.
இது சீனாவிடமிருந்து அச்சுறுத்தல்கள் வருவதாக கூறப்படுவதற்கு முன்னால் ஆஸ்திரேலிய இராணுவத்தை ஜப்பானிய படைகள் ஆதரிக்கும் சூழலை அதிகரிக்கிறது.
கிஷியும் ரொனால்டும் கூறுகையில் இந்த ஏற்பாடு "SDF சட்டத்தின் சாசனம் 95-2 (அமெரிக்க ஆயுதப் படைகள் மற்றும் ஏனைய வெளிநாடுகளின் ஆயுதப் படைப்பிரிவுகளின் ஆயுதங்கள் மற்றும் ஏனைய தளவாடங்களைப் பாதுகாப்பதற்கான வழிவகை)” இல் உள்ளடங்கி இருக்கும் என்றனர்.
பரந்த மக்கள் எதிர்ப்புக்கு முன்னால் 2015 இல் ஜப்பானிய அரசாங்கத்தால் நிறைவேற்றப்பட்ட இந்த SDF சட்டம், இரண்டாம் உலக போருக்குப் பின்னர் முதல்முறையாக, சண்டையில் ஈடுபட்டிருக்கும் கூட்டாளிகளுக்கு ஆதரவு வழங்குவதற்காக சர்வதேச அளவில் ஆயுத போர்முறைகளை நடத்த ஜப்பானிய இராணுவத்தை அனுமதிக்கிறது.
கிஷியும் ரொனால்டும் மேற்கொண்டு தெரிவிக்கையில், “இந்த உள்ளடக்கத்தில், ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலாவின் இராணுவப் படை வாகனங்கள், அமெரிக்காவுடன் சேர்ந்து ஜப்பானிய நேரப்படி இன்று மாலையிலிருந்து தொடங்கி நாளை காலை வரையில் முத்தரப்பு பயிற்சியை நடத்த தென் சீனக் கடலில் பயணிக்க உள்ளன என்பதை நாங்கள் அறிவிக்க விரும்புகிறோம்,” என்றனர்.
அமெரிக்க போர்க்கப்பல்கள் ஏற்கனவே அதிகரித்தளவில் செய்துள்ளதைப் போல, சீனா உரிமைக் கோரும் கடல் எல்லைப்பகுதியில் நுழைவதும் இந்த நடவடிக்கையில் உள்ளடங்கி இருக்குமா என்பது இதுவரையில் இன்னும் தெரியவில்லை.
சீனாவைப் பெயரிட்டுக் குறிப்பிடவில்லை என்றாலும், அவ்விரு பாதுகாப்பு அமைச்சர்களும் பெய்ஜிங்கிற்கு எதிராக மோதலைத் தூண்டும் விதத்தில் பல குற்றச்சாட்டுக்களைக் கூறினர், அவற்றில் ஏதேனும் ஒன்று அமெரிக்க தலைமையிலான இராணுவ நடவடிக்கைக்கு சாக்குபோக்கை வழங்கிவிடக்கூடும். இப்பிராந்தியத்தில் "எந்தவொரு நிலைகுலைக்கும் விதமான அல்லது நிர்பந்திக்கும் விதமான ஒருதலைபட்ச நடவடிக்கைகளுக்கும் பலமான எதிர்ப்பை" அறிவித்த அவர்கள், அத்துடன் சேர்ந்து "சர்ச்சைக்குரிய அம்சங்களை இராணுமயப்படுத்துதல்" மற்றும் "ஏனைய நாடுகளின் ஆதாரவள சுரண்டல் நடவடிக்கைகளைத் தொந்தரவூட்டும் முயற்சிகளுக்கும்" எதிர்ப்பை அறிவித்தனர்.
“தென் சீனக் கடலில் கடற்போக்குவரத்து நடவடிக்கைகளை" எடுத்துக்காட்டியும் "வானிலிருந்து வானிலேயே எரிபொருள் நிரப்பும் பரிசோதனை உட்பட இருதரப்பு பயிற்சிகள் மற்றும் நடவடிக்கைகளை எளிமைப்படுத்தல் மற்றும் சௌகரியங்களை அதிகரித்தல்" ஆகியவற்றைக் கூறி, அவர்களின் இராணுவ கூட்டுறவைத் தீவிரப்படுத்த அவர்களின் அரசுகள் சார்பாக கிஷியும் ரெனால்டும் பொறுப்பேற்றனர்.
அமெரிக்க தரப்பில் அணிசேர்ந்த ஆஸ்திரேலியாவில் உள்ள கருத்துரையாளர்கள் இந்த நகர்வுகளை வரவேற்றனர். முர்டோச் ஊடகத்தில், Australian இன் வெளியுறவுத்துறை பிரிவு ஆசிரியர் கிரெக் ஷெரிடன் பின்வருமாறு குறிப்பிட்டார்: “மலபார் போன்ற கூட்டு கடற்படை ஒத்திகைகள் ஓர் இராணுவ உடன்படிக்கைக்குச் சமமாகாது. ஆனால் அவை பெரிதும் பயனுள்ளவை. அப்பிராந்தியம் ஆழமான இராணுவக் கூட்டுறவுக்கு தகுதியுடையது என்பதை அவை பெய்ஜிங்கிற்கு சமிக்ஞை செய்யும்.”
Australian பத்திரிகை அதன் தலையங்கத்தில் மேற்கொண்டும் சீன-விரோத சூனியவேட்டையைத் தூண்டியது: “13 ஆண்டுகள் இல்லாமல், இதற்குப் பின்னர், ஆஸ்திரேலியா இந்த வருடாந்தர மலபார் கடற்படை ஒத்திகையில் திரும்பி வந்திருப்பது முக்கியமானதும் வரவேற்கத்தக்கதும் ஆகும். இந்த பயிற்சி இடைவிடாத சீன யுத்த தயாரிப்பின் இந்த தருணத்தில் இந்தோ பசிபிக் பிர்ராந்தியத்தின் பாதுகாப்புக்கு மிகவும் முக்கியமாக கருதப்படுகிறது,” என்று குறிப்பிட்டது.
2008 இல், ஆஸ்திரேலாயவின் ரூட் தொழிற்கட்சி அரசாங்கம் இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் ஆஸ்திரேலியாவின் இராணுவக் கூட்டாளியான அமெரிக்காவுக்கும் ஆஸ்திரேலியாவின் மிகப்பெரும் ஏற்றுமதி சந்தையான சீனாவுக்கும் இடையே ஓரளவுக்கு சமபங்கை வகிக்கும் முயற்சியில், இந்த நாற்கர கூட்டுறவில் இருந்து பின்வாங்கியது. ரூட் முழுமையாக அமெரிக்க கூட்டணிக்கு பொறுப்பேற்றிருந்தார் என்றாலும் அந்த சமபங்கு வகிக்கும் நடவடிக்கை, தொழிற்கட்சிக்குள் அமெரிக்காவினால் "பாதுகாக்கப்பட்ட ஆதாரநபர்களால்" முடுக்கிவிடப்பட்டு 2010 இல் பிரதம மந்திரி பதவியிலிருந்து அவரை நீக்க செய்தது.
கடந்த தசாப்தத்தில், அமெரிக்க அரசாங்கங்கள் சீனாவுடனான மோதலில் இந்தியாவையும் ஒரு முன்னணி அரசாக ஆவதற்கு அதற்கு அழுத்தமளித்துள்ளன. இந்தியா நடைமுறையளவில் 2010 இல் வாஷிங்டனுடன் ஒரு மூலோபாய பங்காண்மையாளராக நுழைந்து, தளவாட பரிவர்த்தனை உதவிகளை வழங்குவது மற்றும் இராணுவத் தளங்கள் மீதான உடன்படிக்கை உள்ளடங்கலாக அதை விரிவுபடுத்தி உள்ளது.
இந்தியாவின் ஆளும் ஸ்தாபக பிரமுகர்கள் சீனாவுக்கு எதிராக அணிதிரள்வதில் அதிகரித்தளவிலான உள்நோக்கங்கள் மீது கவனத்தைக் காட்டினர். இந்தியாவின் தேசிய பாதுகாப்பு கவுன்சில் செயலரின் முன்னாள் துணை இயக்குனர் பங்கஜ் ஷா Nikkei Asia க்குக் கூறுகையில், மலபார் கடற்படை ஒத்திகைகளில் எடுத்துக்காட்டப்பட்ட நான்கர அமைப்பின் முழுமையான ஈடுபாடு "ஒரு படி உயர்ந்துள்ளது,” என்றார்.
“கடந்த முறைகளில், நாம் மிகவும் நவீன நீர்மூழ்கிக்கப்பல் தகர்ப்பு போர்முறைகளையும், கண்காணிப்பு விமானங்கள் மற்றும் உளவுபார்ப்பு போர்விமானங்கள் பயன்படுத்தப்பட்டதைப் பார்த்துள்ளோம்,” என்று கூறிய ஷா, “இப்போது ஆஸ்திரேலியாவும் உள்ளே வந்துள்ளது, அங்கே தளவாட பரிவர்த்தனை உதவிகளை வழங்கும் உடன்படிக்கைகளும் உள்ளன, இது நாற்கர அமைப்பின் விரிவாக்கம் இந்திய பெருங்கடலிலும் பசிபிக் பெருங்கடலிலும் என இரண்டு பிராந்தியங்களிலும் கூடுதலாக விரிவாக்கப்பட்டிருப்பதையே துல்லியமாக அர்த்தப்படுத்துகிறது,” என்றார்.
மலபார் அறிவிப்புக்கு பெய்ஜிங்கின் ஆரம்ப விடையிறுப்பு மௌனமாக இருந்தது, அது அமெரிக்காவுடன் ஒரு நேரடிய மோதலைத் தவிர்ப்பதற்கான அந்த ஆட்சியின் முயற்சியைப் பிரதிபலிக்கிறது. “இந்த அபிவிருத்தியைக் குறித்து நாங்கள் குறிப்பெடுத்துள்ளோம்,” என்று செவ்வாய்கிழமை பெய்ஜிங்கின் வழமையான பத்திரிகையாளர் சந்திப்பில் சீன வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் Zhao Lijan தெரிவித்தார். “நாடுகளுக்கு இடையிலான இராணுவக் கூட்டுறவானது பிராந்திய அமைதி மற்றும் ஸ்திரப்பாட்டுக்கு உகந்ததாக இருக்க வேண்டுமென நாங்கள் எப்போதும் நம்புகிறோம்,” என்றார்.
இதுபோன்ற நுணுக்கமான இராஜாங்க நடவடிக்கைகள் என்னவாக இருந்தாலும், சீனா மீதான சுற்றி வளைப்பு இறுக்கப்படுவது மற்றொரு உலக போர் ஆபத்தையே உயர்த்துகிறது. அமெரிக்க ஆளும் வர்க்கம், அமெரிக்க உலகளாவிய மேலாதிக்கத்திற்குச் சீனா முன்பினும் அதிகமாக ஒரு சவாலாக உருவெடுத்து வருவதைத் தடுக்க உத்தேசிக்கிறது. என்ன வரவிருக்கிறதோ அதற்கு ஓர் எச்சரிக்கையாக, ஜனநாயகக் கட்சியினரும் குடியரசுக் கட்சியினரும் இரு கட்சியினருமே அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரத்தில் அவர்களின் சீன-விரோத பிரச்சாரத்தை அதிகரித்தளவில் முடுக்கி விட்டுள்ளனர்.