மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்
அடுத்த ஆண்டு ஏப்ரல் முதல் இராணுவத்தினால் (Bundeswehr) “உள்நாட்டுப் பாதுகாப்பு பிரிவுக்கு தன்னார்வ இராணுவ சேவையை” அறிமுகப்படுத்துவது என்பது, நவ நாஜிக்கள் மற்றும் பிற வலதுசாரி தீவிரவாதிகளுக்கு ஜேர்மனிய அரசாங்கத்தால் பணம் கொடுக்கப்படுவதற்குப் பதிலாக அவர்களை இராணுவப் பயிற்சியை பெற அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இது உள்நாட்டுப் பாதுகாப்பு பிரிவு என்ற அதன் பெயரிலிருந்தும் வரலாற்று, அரசியல் மற்றும் சர்வதேச உள்ளடக்கத்திலிருந்தும் தெளிவாகிறது.
பாதுகாப்பு அமைச்சின் வலைத் தளத்தின் குறுகிய விளம்பர உரையில் பதினொரு தடவைகள் தோன்றும் “உள்நாட்டுப் பாதுகாப்புபிரிவு” (“Heimatschutz”) என்பது இது பயன்படுத்தும் வழியிலையே மிகவும் மதிப்பிழந்த தீவிரமான வலதுசாரிகளின் போர்க்குரலாகும். இது தற்போதைய மற்றும் அதன் வரலாற்று உள்ளடக்கத்தில் முன்தாக்கங்களை கொண்டதாகும்.
பயங்கரவாத தாக்குதல்கள் மற்றும் கொலைகளில் ஈடுபட்டுள்ள நவ-நாஜி அமைப்புகள் தங்களை 'உள்நாட்டுப் பாதுகாப்பு பிரிவு' என்று அழைக்க விரும்புகின்றன. எடுத்துக்காட்டாக, இரகசிய சேவையின் நம்பிக்கையான தகவல் வழங்குபவரான (Confidential Informant - CI) திலோ பிராண்டால் Uwe Mundlos, Uwe Böhnhardt, Beate Zschäpe ஆகியோர் அணிதிரட்டப்பட்டு அரச நிதியுடன் “துரிங்கியா உள்நாட்டுப் பாதுகாப்பு பிரிவு” அமைக்கப்பட்டது. அம் மூவராலும் பின்னர் உருவாக்கப்பட்ட நவ-நாஜி NSU (Nationalsozialistischer Untergrund) குறைந்தது பத்து இனவெறி கொலைகள் மற்றும் பல தாக்குதல்களை நடத்தியது.
ஆனால் “ஃபிராங்கோனியன் உள்நாட்டுப் பாதுகாப்பு பிரிவு” (Fränkischer Heimatschutz), “மேர்க்கிஷ உள்நாட்டுப் பாதுகாப்பு பிரிவு” (Märkischer Heimatschutz) போன்றவையும் இருந்தன அல்லது இருக்கின்றன. 2014 இல் ஸ்ரெபான் ஆஸ்ட் மற்றும் டிர்க் லாப்ஸ் ஆகியோரால் வெளியிடப்பட்ட ஒரு புத்தகத்திற்கு, உள்நாட்டுப் பாதுகாப்பு பிரிவு: அரசும் NSU இன் தொடர்கொலைகளும் (Der Staat und die Mordserie des NSU) என தலையங்கமிடப்பட்டிருந்தது.
இரண்டு உலகப் போர்களுக்கிடையில், ஏராளமான வலதுசாரி துணை இராணுவப் பிரிவினர் தங்களை “உள்நாட்டுப் பாதுகாப்பு பிரிவு” என்று அழைத்தனர். உதாரணமாக, முசோலினியின் பாசிஸ்டுகளை மாதிரியாகக் கொண்ட இந்த பெயரில் ஆஸ்திரியாவில் உள்நாட்டு பாதுகாப்பு சங்கங்கள் உருவாக்கப்பட்டன. 1928 ஆம் ஆண்டில், அவர்கள் 'வியன்னாவிற்கான பயணம்' என்பதன் போது சமூக ஜனநாயக தொழிலாள வர்க்க மாவட்டமான வியன்னாவின் Neustadt மீது தாக்குதல் நடத்தினர்.
இரத்தமும் மற்றும் மண்ணும் (Blut-und-Boden) என்ற நாஜி சித்தாந்தத்தின் அடிப்படையில், உள்நாட்டு பாதுகாப்பு சங்கம் (Heimatschutzverbände), இயற்கை பாதுகாப்பு மற்றும் வரலாற்று நினைவுச்சின்னங்களின் பாதுகாப்பை, தேசியவாத மற்றும் யூத-விரோத கருத்துக்களுடன் கலத்தது. உதாரணமாக, பவேரிய உள்நாட்டுப் பாதுகாப்பு பிரிவிற்கு 1927 முதல் மாவட்ட கௌரவத் தலைவராக இருந்த Gustav von Kahr வலதுசாரி தீவிரவாத நடவடிக்கைகளில் முக்கிய நபராக இருந்தார்.
இரண்டாம் உலகப் போரின்போது, ஜேர்மன் நாஜிகளின் அதிரடிப்படைப்பிரிவான Waffen-SS இற்குள் ஸ்லோவாக்கியாவில் ஒரு உள்ளூர் துணைப் பிரிவு தன்னை “ஸ்லோவேக்கிய உள்நாட்டுப் பாதுகாப்பு பிரிவு” (Heimatschutz Slowakei - HS) என்று அழைத்தது. மற்றவற்றுடன் சேர்ந்து, ஸ்லோவாக்கிய உள்நாட்டுப் பாதுகாப்பு பிரிவு சித்திரவதை முகாம்களுக்கு பாதுகாப்பு வழங்கி, ஏராளமான யூதர்களின் கைது, சித்திரவதை மற்றும் கொலை ஆகியவற்றில் ஈடுபட்டது.
'உள்நாட்டு பாதுகாப்பு பிரிவிற்கு சேவையை' வழங்குவதற்கான அழைப்பையும், ஆயுதங்களை பயன்படுத்துவதில் பயிற்சியையும் பெறுவதற்கான அழைப்போடு, எதிர்வரவிருக்கும் உள்நாட்டு யுத்தம் ஒன்றிற்குத் தயாராவதற்கு அவர்கள் தம்மை இனியும் மறைக்க வேண்டியதில்லை என வலதுசாரி தீவிரவாத இளைஞர்களுக்கு ஜேர்மன் இராணுவம் ஒரு தெளிவான சமிக்ஞையை அனுப்புகின்றது.
மூனிச் நகரில் NSU வழக்கு விசாரணைக்கு பின்னர், காஸல் மாவட்டத் தலைவர் வால்டர் லுப்க படுகொலை, ஹால நகரில் யூத வழிபாட்டுத் தலங்கள் மீதான தாக்குதல், ஹனாவெ நகரில் நடந்த இனவெறி வெகுஜனக் கொலைகள் மற்றும் இராணுவத்தின் விஷேட படைப்பிரிவான KSK (Kommando Spezialkräfte) இனுள் வலதுசாரி வலைப்பின்னல்கள் பொதுமக்களின் பார்வைக்கு வந்துள்ளன. இவற்றிகான மக்களின் பிரதிபலிப்பு திகில், கோபம் மற்றும் சீற்றம் என்பதாக உள்ளது.
கிறிஸ்தவ ஜனநாயகவாதிகள் மற்றும் சமூக ஜனநாயகவாதிகளின் பெரும் கூட்டணி அரசியல் எதிரிகளுக்கு எதிராகப் பயன்படுத்துவதற்காக, ஜேர்மன் இராணுவத்தின் அனுசரணையில் இரட்டிப்பாக்கப்பட்ட இராணுவப் பிரிவுகளை அமைப்பதன் மூலம் இதற்கு விடையிறுக்கிறது. அரசியலமைப்பு சட்டத்தின் கீழ் தடைசெய்யப்பட்ட, ஜேர்மனிக்குள் ஆயுதமேந்திய இராணுவ நடவடிக்கைகளில் இது ஈடுபடுவதற்கான தனது விருப்புகளை, ஜேர்மன் இராணுவம் தனது பொது அறிவிப்புகளில் குறிப்பிடத்தக்க வெளிப்படையான தன்மையுடன் ஒப்புக்கொள்கின்றது.
'வழமையான தன்னார்வ இராணுவ சேவைக்கும் இதற்கும் உள்ள மிகப் பெரிய வேறுபாடு, வெளிநாடுகளில் ஈடுபடுவதற்குப் பதிலாக அடிப்படை மற்றும் நிபுணத்துவ பயிற்சி மற்றும் உள்நாட்டுப் பாதுகாப்பு பிரிவிற்கு சேவை செய்த பின்னர் ஒரு சேமப்படை சேவையை நாட்டினுள்ளே நெருக்கமாக திட்டமிடுவது' என்று இராணுவ வலைத் தளம் கூறுகிறது.
இது சீருடையில் ஒரு வகையான பொது சேவை அல்ல. தன்னார்வ சேவைக்கு வருவோர் இராணுவ ரீதியாக முழுமையாக பயிற்சி பெற வேண்டும். மொத்த ஏழு மாத அடிப்படை மற்றும் சிறப்புப் பயிற்சியின் ஒரு பகுதி “துப்பாக்கி சுடும் பயிற்சியும்” உள்ளடங்கும் என இராணுவம் வலியுறுத்துகிறது. 'தடைகளை தாண்டுவது உட்பட உடல் தகுதி மற்றும் திறமையும் தேவை. 'தாயகத்தின் பாதுகாப்பிற்காக தன்னார்வ இராணுவ சேவையில் ஈடுபடுவோர் 'இந்த இராணுவ சவால்களை' செய்ய வேண்டியிருக்கும்.
அவர்களின் ஓராண்டு சேவையின் கடைசி ஐந்து மாதங்களில், தன்னார்வலர்கள் சேமப்படை போல் சேவையைச் செய்வார்கள். பின்னர், கடந்த எட்டு ஆண்டுகளில் முறையாக கட்டமைக்கப்பட்ட 'பிராந்திய சேமப்படைக்குள் வளர' அவர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும்.
இதற்கான ஒரு பரீட்சார்த் திட்டம் “பவேரி மாநிலத்திற்கான பிரிவு” (“Bavarian State Regiment”) ஆகும். இது இராணுவத்தாலும் மற்றும் சேமப்படை அமைப்பாலும் ஆதரிக்கப்படுகிறது. Bundeswehr இன் கூற்றுப்படி, ஜேர்மனியில் இந்த வகையான முதல் படைப்பிரிவு தேசிய பாதுகாப்பு மற்றும் உள்நாட்டு பாதுகாப்பு ஆகிய இரண்டிற்கும் சேவை செய்கிறது. அதனை ஏனைய செயற்பாடுகளுடன், இது 'அவசர காலங்களில்' காவல்துறைக்கும் உதவுகிறது. இது 'ஒரு நவீன மற்றும் திறமையான சேமப்படையை' 'தற்போதுள்ள செயலில் உள்ள [இராணுவ] கட்டமைப்புகளில்' விரைவாகவும் எளிதாகவும் ஒருங்கிணைக்க பங்களிக்கிறது.
வேறு வார்த்தைகளில் கூறுவதானால், உள்நாட்டு நடவடிக்கைகளுக்கும் போரிடும் படைகளுக்கும் இடையே ஒரு இணக்கமான ஒத்துழைப்பை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இயற்கை பேரழிவுகள் ஏற்பட்டால் உதவி வழங்குவது, அரிக்கும் வண்டுகளை எதிர்த்துப் போராடுவது, கொரோனா வைரஸ் சோதனைகளை நடத்துவது போன்றவை பற்றி அரசாங்கம் சித்தரிக்க விரும்புவதைப் போல இது இல்லை என்பது வெளிப்படையாகின்றது.
மாறாக, இது அமெரிக்காவின் உள்நாட்டுப் பாதுகாப்புத் துறையின் மாதிரியாகும். செப்டம்பர் 11, 2001 தாக்குதல்களுக்குப் பின்னர் நிறுவப்பட்ட இந்த அமைப்பு, 240,000 ஊழியர்களைக் கொண்ட ஒரு பிரம்மாண்டமான எந்திரமாகவும், 62 பில்லியன் டாலர் ஆண்டு வரவு-செலவுத் திட்டத்தை கொண்டதாகவும் வளர்ந்துள்ளது. இது அமெரிக்காவின் ஒட்டுமொத்த மக்களையும் கண்காணிக்கிறது, உளவு பார்க்கிறது மற்றும் அச்சுறுத்துகிறது.
சமீபத்திய நாட்களில், ஜனாதிபதி ட்ரம்ப் ஆர்ப்பாட்டங்களுக்கு எதிராக போராட அமெரிக்க நகரங்களுக்கு அதிக பயிற்சி பெற்ற உள்நாட்டு பாதுகாப்பு போர் பிரிவுகளை (Heimatschutzbehörde) அனுப்பியுள்ளார். தென் அமெரிக்க இராணுவ சர்வாதிகாரத்தை நினைவூட்டும் காட்சிகளில், அடையாளம் தெரியாத படையினர் அமைதியான போராட்டக்காரர்களை கைது செய்து உரிமத் தகடுகள் இல்லாத வாகனங்களில் தெரியாத இடங்களுக்கு கொண்டு செல்கின்றனர். இந்த வழியில், அதிகரித்து வரும் சமூக மற்றும் அரசியல் நெருக்கடியை எதிர்கொண்டு சர்வாதிகாரத்தை நிறுவ ட்ரம்ப் தயாராகி வருகிறார்.
ஜேர்மனியில் இதேபோன்ற ஒன்று நடக்கிறது. ஆளும் வர்க்கம் கடுமையான வர்க்கப் போராட்டங்களுக்கு தயாராகி வருகிறது. கொரோனா வைரஸ் தொற்று முதலாளித்துவ அமைப்பின் உலகளாவிய நெருக்கடியை அதிகளவில் தீவிரப்படுத்தியுள்ளது. மில்லியன் கணக்கானவர்கள் தங்கள் வேலைகளையும் வருமானத்தையும் இழப்பதாக அச்சுறுத்தப்படுகிறார்கள், மற்றவர்கள் தங்கள் உயிருக்கு ஆபத்தில் வேலை செய்யத் தள்ளப்படுகிறார்கள்.
90 ஆண்டுகளுக்கு முன்பு, ஜேர்மனியில் ஆளும் வர்க்கங்கள் இதேபோன்ற நெருக்கடிக்கு நாஜி சர்வாதிகாரம் மற்றும் நிர்மூலமாக்கும் போர் (Vernichtungskrieg) மூலம் பதிலளித்தன. இன்று, அவை அதே திசையில் நகர்கின்றன. அவர்கள் திட்டமிட்டு ஆயுதமயமாக்கப்பட்டு புதிய போர் நடவடிக்கைகளுக்கு தயாராகி வருகின்றனர் மற்றும் சமூக மற்றும் அரசியல் எதிர்ப்பை வன்முறையில் அடக்குகிறார்கள். ஆனால் 1930 களைப் போலல்லாமல், அவர்களுக்கு இன்று ஒரு பாசிச வெகுஜன இயக்கம் இல்லை. மக்கள்தொகையின் சிந்தனை இடது பக்கம் செல்கிறது. வலதுசாரி மற்றும் பாசிச சக்திகளின் வளர்ச்சி முக்கியமாக அரசாங்கத்தால் இயக்கப்படுகிறது.
இரகசிய சேவை என அழைக்கப்படும் அரசியலமைப்பை பாதுகாப்பதற்கான அலுவலகம் (Verfassungsschutz), வலதுசாரி பயங்கரவாதத்தின் கட்டுப்பாட்டு மையமாக செயல்படுகிறது. இராணுவம் மற்றும் காவல்துறையில், வலதுசாரி தீவிரவாத வலைப்பின்னல்கள் உள்ளன. அவை மேல் மட்டத்திலிருந்து மறைக்கப்பட்டு முக்கியத்துவமற்றவையாக காட்டப்படுகின்றன. ஜேர்மனிக்கான தீவிர வலதுசாரி மாற்று கட்சியின் (AfD) ஏராளமான அங்கத்தவர்கள், காவல்துறையில், இராணுவத்தின் மற்றும் இரகசிய சேவைகளில் இணைக்கப்பட்டுள்ளனர். அரசு மற்றும் ஸ்தாபகக் கட்சிகளால் திட்டமிட்டு பாதுகாக்கப்பட்டு ஊக்குவிக்கப்படுகின்றனர்.
பெரும் கூட்டணியின் கட்சிகளான கிறிஸ்தவ ஜனநாயக ஒன்றியம், கிறிஸ்தவ சமூக ஒன்றியம் மற்றும் சமூக ஜனநாயக் கட்சி (CDU, CSU, SPD) ஆகியவை இந்தக் கொள்கைக்கான முக்கிய பொறுப்பைக் கொண்டுள்ளன. ஆனால் எதிர்க்கட்சிகளான இடது கட்சி, பசுமைவாதிகள், தாராளவாத ஜனநாயகக் கட்சி (FDP) மற்றும் நிச்சயமாக AfD ஆகியவை அதை ஆதரிக்கின்றன. பாசிசம் மற்றும் இராணுவவாதத்திற்கு எதிரான போராட்டத்திற்கு முதலாளித்துவத்தை அகற்றுவதற்கும் ஒரு சர்வதேச சோசலிச வேலைத்திட்டத்திற்கும் போராடும் தொழிலாள வர்க்கத்தின் ஒரு சுயாதீன இயக்கத்தை கட்டமைக்க வேண்டும்.
ஆசிரியர் பரிந்துரைக்கும் ஏனைய கட்டுரைகள்:
ஜேர்மனி: பிராங்பேர்ட்டில் “கலவரம்”மும் காவல்துறையில் வலதுசாரி வலையமைப்பும்
[22 July 2020]
German government prepares troops for domestic missions
[18 May 2019]